வஞ்சிக்கொடியின் வசீகரனே – 24

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 24

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்!

அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்!

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே!

ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்…

அடை மழை வரும் அதில் நனைவோமே…
குளிர் காய்ச்சலோடு சிநேகம்!

ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்!

குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்…

-என்று மெல்லிசையாக அந்த அறையில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, தன் கொடியிடையாலான வஞ்சிக்கொடியின் இடுப்பில் ஒரு கையும், முதுகில் ஒரு கையும் போட்டு வளைத்திருந்தான் அவளின் வசீகரன்!

கணவனின் தோளில் ஒரு கையும், அவனின் இடுப்பில் ஒரு கையும் போட்டு தன் வசீகரனின் அசைவுகளுக்கு ஏற்ப தன் உடலை நளினமாக அசைத்துக் கொண்டிருந்தாள் அவனை மயக்கிய மாயக்காரியான வஞ்சிக்கொடி!

“நான் அப்படி எத்தனை பொய்டி சொன்னேன்?” என்று அவளின் காதோரமாகக் கேட்டுக் கொண்டே அவனுக்குப் பிரியமான ஓட்டை விழும் கன்னத்தில் செல்லமாக ஒரு கடி கடித்து வைத்தான்.

“யோவ்…!” என்று அலறியவள், கணவனை முறைத்துக் கொண்டே “பொய் சொல்லலை. உண்மையை மறைச்சீங்க…” என்று சொல்லி இப்போது அவனின் மீசையைப் பிடித்து இழுத்து “வலிக்குதுடி…” என்று கணவனை அலற வைத்தாள்.

“இன்னைக்கு உனக்குக் கம்பளிப் பூச்சியை விடப் பெரிய ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்னு நினைச்சுருந்தேன். ஆனா சரக்கை தூக்கி டபக்குன்னு அடிச்சு என் பிளான் மொத்தத்தையும் கவுத்திட்டியேடி…”

“சரக்காய்யா அது?” என்று முறைத்துக் கொண்டு கேட்டவளுக்கு நேற்று இரவு நடந்தது ஞாபகத்தில் வந்தது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

டம்ளரை தூக்கி வேகமாகக் குடித்து விட்டு கணவனை முறைத்துப் பார்த்தாள் சம்பூர்ணா.

“என்னடி முறைப்பு?”

“பொண்டாட்டி குடிக்கிறா பார்த்துட்டு சும்மா உட்கார்ந்திருக்க?” என்று அதட்டலாகக் கேட்டாள்.

“நானெல்லாம் உன்னை மாதிரி இல்லடி பொண்டாட்டி… தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுப்பவன். நீ இன்னும் கூட அடி, இந்தா…” தன் கையில் இருந்த இன்னொரு டம்ளரையும் தூக்கிக் கொடுத்தான்.

“எது? இந்த ஜூஸை குடிச்சுட்டு என் உச்சந்தலைக்குப் போதை ஏறுவதற்கா? ஜூஸை பாட்டில் ஊத்தி வச்சுக்கிட்டுச் சரக்காம் சரக்கு…”

“ஒரு வழியா இதை ஜூஸ்னு கண்டு பிடிச்சுட்டியா? சரிதான்! ஜூஸ்னு தெரிஞ்சு தானே டபால்னு தொண்டையில் கவுத்திக்கிட்ட? இல்லன்னா குடிச்சிருப்பியா? நான் குடிகாரன்னு சொல்லியே என்னை விட்டு தள்ளி இருந்தவ நீ. அப்படி இருக்கும் போது நீயாவது சாராயத்தைக் குடிக்கிறதாவது? அதில் ட்ரிங்ஸ் இருந்திருந்தால் இந்நேரம் பாட்டிலை சுக்கு நூறா உடைச்சுருக்க மாட்ட?”

“அது எல்லாம் சரியாத்தான் சொல்றீங்க. எனக்கு இப்போ இதுக்குப் பதில் சொல்லுங்க. இந்த ஜூஸை வச்சு நாளைக்கு என்ன பிளான் போட்டீங்க? அதைச் சொல்லுங்க முதலில்…” அதிகாரமாகக் கேட்டாள்.

“ஜூஸை குடிச்சதுக்கே இந்த அதிகாரமா? நான் ஜூஸை பாட்டிலில் ஊத்தி வச்சதை எப்போ பார்த்த? நான் உனக்குத் தெரியாம தானே செய்தேன்…” என்று அவளைச் சந்தேகத்துடன் பார்த்துக் கேட்டான்.

“யார் பார்த்தா? சும்மா ஒரு கெஸ் தான்! அப்படியே பேச்சை மாத்தாம நாளைக்கு என்ன செய்றதா இருந்தீங்கனு சொல்லுங்க…” இப்போது மிரட்டவே ஆரம்பித்திருந்தாள்.

“இவ்வளவு கண்டு பிடிச்சவ நான் என்ன செய்ய இருந்தேன்னு அதையும் தான் சொல்லிறேன்…”

“வேற என்ன? உங்க கூட்டாளிங்க கூடச் சேர்ந்து குடிச்சுட்டு கூத்தடிக்கிற மாதிரி ஒரு நாடகம் போட்டுருப்பீங்க. உங்களுக்கு நாடகம் போடுவதெல்லம் புதுசா என்ன?” உன்னைப் பற்றி எல்லாம் நானறிவேன் என்பது போல் சொல்லி வைத்தாள்.

“நாடகத்தையும் கண்டு‌ பிடிச்சிட்டியா சம்மூ? அது சரி யாரது எங்க கூட இருந்துட்டே எட்டப்பன் வேலை பார்த்து உன்கிட்ட போட்டு கொடுத்தது?” என்று கேட்டான்.

“உங்க நாடகமும் தெரியும்! அந்த நாடகத்தை வச்சு நீங்க செய்ற நல்லதும் தெரியும்! அதோட எட்டப்பன் இல்ல எட்டப்பி! உங்க ஃபிரண்ட்ஸ் பத்தி நான் தெரிஞ்சுக்கணும்னு ஒரு கூட்டத்தையே எனக்கு அறிமுகப்படுத்தி விட்டீங்களே? அந்தக் கூட்டத்தில் ஒருத்திக்கிட்ட தான் போட்டு வாங்கினேன்…”

“அவ்வளவுக்கு உன் புத்தி சுறுசுறுப்பா வேலை செய்தா?”

“என்ன கொழுப்பா?”

“பின்ன கம்பளிப் பூச்சிக்கே அலறி ஓடினவளாச்சே நீ! சரி சொல்லு எப்படி நான் குடிகாரன் இல்லைனு கண்டு பிடிச்ச?”

“இத்தனை நாளும் உங்க கூட இருக்கேனே. உங்க குணம் எப்படினு நல்லாவே புரிந்தது. இவ்வளவு நல்லவர் எப்படிக் குடிகாரரா மட்டும் இருப்பார்னு யோசிச்சேன். உங்க கையில் இருந்த சிகரெட் பாக்கெட்டையும், உங்க பேக்கில் தெரிஞ்ச பாட்டிலையும் பார்த்து நான் தான் ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டேன்னு புரிஞ்சது. அதோட அன்னைக்கு உங்க நாலு பிரண்ட்ஸ் கூடவும் சேர்ந்து என் முன்னாடியே வீக் எண்ட் புரோகிராம்னு பேசினீங்க. முதலில் அதைத் தப்பா புரிஞ்சிகிட்டுக் கோபம் தான் வந்தது.

ஆனா அப்புறம் உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தேன். கோபமா இருக்கிற பொண்டாட்டி முன்னாடியே வீக் எண்ட் புரோகிராம் பத்தி பேச வேண்டிய அவசியம் என்னனு தோணுச்சு. அதிலும் உங்க குணம் ஞாபகம் வந்துச்சு. ஒரு பக்கம் விளையாட்டா பேசிட்டு சீரியஸாவும் சிந்திப்பீங்க. அதான் தேவிகாகிட்ட கொஞ்சம் போட்டு வாங்கினேன்.

அவங்க தான் சொன்னாங்க. உங்க வீக் எண்ட் ப்ரோகிராம் பத்தி. ஐடி பீப்பிள்ஸ் மைண்ட் ப்ரீயா வச்சுக்க அவங்களுக்காக வீக் எண்ட்ல நாடகம், நடனம்னு குட்டியா குட்டியா நீங்க உங்க பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து புரோகிராம் பண்ணுவீங்கன்னு. அதில் நாடகத்தில் விழிப்புணர்வும் இருக்குற மாதிரி இருக்கும்னு சொன்னாங்க.

என்ன மாதிரியான விழிப்புணர்வுனு கேட்டதுக்குக் கம்ப்யூட்டர்ல வேலை பார்த்து மைண்ட் சூடாகுதுனு ரிலாக்ஸ் பண்ணிக்க அவங்க சுலபமா நாடுவது ட்ரிங்ஸ் தான். ஆனா அது கொஞ்ச நேரத்துக்கு வேணும்னா நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்கிற மாதிரி பீல் பண்ண வைக்கும். ஆனா அதுவே தொடர்ந்தா உடம்புக்கு தான் வியாதி வரும்னு சொல்வது போல் நீங்களும் உங்க பிரண்ட்ஸும் நடிச்சு காட்டி, டான்ஸ் ஆடுவீங்கனு சொன்னாங்க. இது மாதிரி வேற வேற கான்செப்ட்டும் பண்ணுவீங்கனும் சொன்னாங்க.

இதை உங்க கம்பெனில மட்டும் இல்லாம மத்த கம்பெனிகளிலும் பர்மிஷன் வாங்கிச் செய்வீங்கனு சொன்ன பிறகுதான் நான் உங்களைத் தப்பா புரிஞ்சுக்கிட்டது உறைச்சது…” என்று தான் அறிந்து கொண்டதை சொல்லி முடித்தாள்.

“நீ ரொம்ப ஸ்பீட் தான்டி பொண்டாட்டி! நான் நாளைக்கு ட்ராமா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி தனியா உனக்கு ஒரு காட்டு காட்டுவோம். அப்புறமா என் நாடகத்தைப் பார்க்க வைப்போம். எங்க நாடகத்தைப் பார்த்து உன் முகம் எப்படி ஆகுதுன்னு பார்க்கணும்னு ஒரு பெரிய ஸ்கெட்ச்சே போட்டு வச்சுருந்தேன். ஆனா இப்படி என்னை எதுவுமே செய்ய விடாமல் இந்த முறை நீ முந்திக்கிட்டியே…” என்று வருத்தமாக முடித்தான்.

அவனின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவள் “எத்தனை நாளைக்குத் தான் இந்த வசீகரனோட ஆட்டமே நடக்கும். ஒரு தடவையாவது உங்க வஞ்சிக்கொடியும் ஒரு காட்டு காட்டட்டுமே? அதுவும் இல்லாம இந்த வசீகரன் கூடச் சேர்ந்து உங்க வஞ்சிக்கொடியும் ஸ்மார்ட் ஆகிட்டா…” என்றவள் கணவனை இடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

“என் வஞ்சிக்கொடி ரொம்பவே ஸ்மார்ட் ஆகிட்டா தான்…” என்று நக்கலாகச் சொன்னவனை முறைத்துப் பார்த்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“என்ன முறைப்பு?”

“உங்களை எல்லாம் முறைக்கக் கூடாது… அப்படியே மொத்தணும்…” என்று சொன்னதோடு இல்லாது அவனின் தோளிலும், முதுகிலும் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள்.

“ஹேய்… விடு சம்மூ…” அவளின் கையைப் பிடித்து அடக்கியவன் “இப்போ எதுக்கு இத்தனை அடி அடிக்கிற?” என்று கேட்டான்.

“பின்ன? அடிக்காம கொஞ்சுவாங்களா?”

“நீ கொஞ்சுறதா இருந்தா நான் வாங்கிக்கவும் தயார்…” என்று கண்ணைச் சிமிட்டினான்.

“ஹக்கும்… இந்தக் கண்ணடிக்கிறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…”

“என்னதிது? ஓவரா நொடிச்சுக்கிற… வேற எதில்மா குறைச்சல்…?” மனைவியின் கோபத்தைக் கண்டு சிரித்துக் கொண்டே கேட்டான்.

“அப்போ இருந்து உங்களைக் குடிகாரன்னு சொல்றேன். ஆனா பதிலுக்கு ஒரு முறையாவது நான் குடிக்க மாட்டேன்னு சொன்னீங்களா? நானும் என் மேல கோபப்பட்டாவது எனக்குக் குடிக்கிற பழக்கம் இல்லனு சொல்லுவீங்கனு எதிர்பார்த்தேன். ஆனா ஒரு முறை கூடச் சொல்லாம எப்படிக் கமுக்கமா இருக்கீங்க…” என்று சொல்லி மீண்டும் அவனின் தோளில் ஒரு அடி போட்டாள்.

“ஹேய்… என்னடி? சும்மா சும்மா அடிச்சுட்டு இருக்க? இன்னொரு முறை அடிச்சா மனைவிமார் வன்கொடுமை சட்டத்தில் உன்னை உள்ளே போட சொல்லிடுவேன்…” என்றான் போலியாகக் கண்ணைக் கசக்கிக் கொண்டு.

“ஐய்ய…” என்று பூர்ணா நொடித்துக் கொண்டாள்.

“மெல்ல… மெல்ல…” என்று கிண்டல் செய்த ராகவ், பின்பு மனைவியின் முகத்தைக் கூர்ந்து பார்த்து “நான் ஏன் சொல்லணும் சம்மூ?” என்று கேட்டான்.

“நான் உங்களைத் தப்பா நினைச்சுருக்கேன். அதை இல்லைனு சொல்ல வேண்டியது உங்க பொறுப்பு தானே?”

“ம்கூம்… கண்டிப்பா என் பொறுப்புக் கிடையாது சம்மூ. ஒருத்தரை பற்றித் தீர விசாரிக்காம தவறா நினைச்சது உன் தப்பு. எடுத்ததும் வெளி பார்வைக்குத் தெரிவதை மட்டும் வச்சு யாரோட குணத்தையும், பழக்க வழக்கத்தையும் நிர்ணயம் பண்ணக்கூடாது.

ஒருத்தர் வெளிப்பார்வைக்கு நல்லவங்க போலத் தெரிவாங்க. ஆனா அவங்களுக்குள்ள எத்தனையோ கெட்ட குணங்கள், பழக்க வழக்கங்கள் இருக்கும். அதே மாதிரி வெளியே பார்க்க கெட்டவங்க போலத் தெரிவாங்க. ஆனா அவங்களுக்குள்ள நல்ல குணம், பழக்க வழக்கங்கள் இருக்கும்.

யார் எப்படிப்பட்டவங்கனு நாம தான் ஆராய்ந்து தெரிஞ்சுக்கணுமே தவிர, அவசரப்பட்டு நாம எந்த முடிவுக்கும் வரக்கூடாது. நான் நினைச்சா நம்ம கல்யாணம் நடந்த அன்னைக்கே என்ன காரணம்னு உன்னைப் பேச வச்சு விஷயத்தை வாங்கியிருக்க முடியும்.

ஆனாலும் ஏன் நான் செய்யலை? நீயே தெளிஞ்சு என்கிட்டே சொல்லணும்னு காத்திருந்தேன். அதனால் தான் நான் தள்ளியும் இருந்தேன். இப்பயும் நீயே எல்லாத்தையும் சொல்லணும்னு தான் நீ குடிக்கிறேன்னு ஆர்ப்பாட்டம் பண்ணினப்பயும் பார்த்துட்டு சும்மா இருந்தேன். இப்போ உனக்கே நான் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சுருச்சு இல்ல?” என்று கேட்டான்.

“ம்ம்… தெரிஞ்சுருச்சு… நான் தான் அவசரப்பட்டுத் தப்பா நினைச்சுட்டேன்…” என்றாள் வருத்தத்துடன்.

“என் விஷயத்தில் மட்டுமா? உங்க அப்பா, அம்மா விஷயத்திலுமே நீ அப்படித்தான் இருந்திருக்க…” என்று ராகவ் சொன்னதும் வருத்தத்துடன் பூர்ணாவின் முகம் சுருங்கி போனது.

அதைக் கண்டவன் “சரி… சரி… விடு… அப்படி இருக்குறது உன்னோட மேனுபேக்சரிங் டிபட்! அதாவது இதெல்லாம் தேறாத கேசுனு அர்த்தம்…” என்று கேலியாகச் சொன்னான்.

“என்ன நக்கல் அடிக்கிற மாதிரி இருக்கு?” அவனை முறைத்த படி கேட்டாள்.

“பின்ன நாடகத்துக்காக வாங்கி வச்சிருந்த வெறும் பாட்டிலையும், சீக்ரெட் குடிக்கிற மாதிரி நடிக்க வச்சிருந்த பாக்கெட்டையும் பார்த்து என்னை அக்மார்க் குடிகாரனா முத்திரை குத்தி, என்னை மூன்றரை மாசம் உன் பின்னாடி லோலோல்னு அலைய விட்ட நீ ரொம்ப ஸ்மார்ட் இல்லையா? கல்யாணத்துக்கு முன்னாடி கூடப் பரவாயில்லை. ஆனா கல்யாணத்துக்குப் பின்னாடி என்னைச் சந்நியாசியா காய விட்டியே நீ ரொம்பவே ஸ்மார்ட் தான்…” என்றவன் குரலில் இப்போது நக்கலுடன் வருத்தமும் பிரதிபலிக்க, கணவனை விக்கித்துப் போய்ப் பார்த்தாள் சம்பூர்ணா.

“நான் தான் சொன்னேன்னே என் அப்பா மாதிரி நீங்க இல்லனு கொஞ்சம் தடுமாறிட்டேன்னு…” தயங்கி விளக்கம் சொல்ல முயன்றாள்.

“ம்ப்ச்…!” என்று அவன் சலிப்பை வெளிப்படுத்த, “நான் என்ன இப்படி எல்லாம் நீங்க டிராமா போடுவீங்கன்னு கனவா கண்டேன்? எனக்கு வர போற புருஷன் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாம இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அந்த ஆசை உங்க மூலமா எனக்கு ஏமாற்றம் கிடைச்சாலும் பரவாயில்லைனு நீங்க தான் எனக்கு வேணும்னு கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்.

ஆனா நானா உங்களைச் சந்நியாசியா இருக்கச் சொன்னேன்? ஆரம்பத்தில் கொஞ்சம் உங்களைப் புரிஞ்சுக்க டைம் வேணும்னு தள்ளி இருக்க நான் நினைச்சது உண்மை தான். ஆனா நீங்க நெருங்கி வந்தா தள்ளி போனதில்லையே நான்? உங்க மேல இருந்த கோபத்தை எல்லாம் காதல் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுருச்சுனு தெரியாம நீங்க தான் சந்நியாசியா இருந்தீங்க…”

“ஏய்! அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் நீ என்னையவே குறை சொல்றீயா? பாவம் பொண்டாட்டி குழப்பமா இருக்காளே தெளிஞ்சு வரட்டும்னு உன்னை விட்டு வச்சது தப்பு தாண்டி…”

“அங்கேயும், இங்கேயும் யார் சுத்தினா? நான் உங்க பின்னாடியே தான் சுத்தி வர்றேன். நீங்க தான் அதைப் புரிஞ்சுக்காம ‘என் சம்சாரி என்னை ஆக்கிட்டா சந்நியாசி’ ரேஞ்ச்ல சுத்திட்டு இருக்கீங்க…” என்ற மனைவியை வாயை பிளந்து பார்த்தான் ராகவ்.

“இதோ இப்போ கூட என் வாயை தான் பார்த்துட்டு சும்மா…” என்று சொன்னவளை மேலும் முடிக்க விடாமல் அவளின் வாயிற்குத் தன் உதட்டால் பூட்டுப் போட்டிருந்தான்.

கட்டவிழ்த்து விட்ட காளையாகத் தன் மேல் பாய்ந்த கணவனின் கை பிடியில் சம்பூர்ணா திணறித்தான் போனாள்.

“ஹ்ம்ம்… வசீ மெதுவா…என் உதடு…” என்று மெலிதாக அலறி அவனிடம் இருந்து உதட்டை பிரித்துக் கொண்டு அடக்க முயன்றாள்.

அவளிடம் இருந்து பிரிந்தவன் “இத்தனை நாளும் நீ என்னைக் காய விட்டதுக்கு அப்படியே உனக்குத் தண்டனை கொடுக்கணும் போலத்தான் இருக்கு. ஆனா எனக்குத் தண்டனை கொடுக்க இஷ்டமில்லை…” என்றவன் மனைவியை விட்டு விலகி அமர்ந்தான்.

அவ்வளவு ஆர்வமாகத் தன் மேல் பாய்ந்தவன் அமைதியானதை கண்டு புரியாமல் விழித்து வைத்தாள் பூர்ணா.

தன் முகத்தைப் பார்க்காமல் திரும்பி அமர்ந்திருந்த கணவனின் கையை மெல்ல பற்றியவள் “வசீ?” என்று கேள்வியுடன் அழைத்தாள்.

அவளின் அழைப்பில் திரும்பி இணைந்திருந்த தங்கள் கைகளையும், மனைவியின் முகத்தையும் பார்த்தவன், “என் மேல எந்தத் தப்பும் இல்லனு ஊர்ஜிதம் ஆனால் தான் நீயும் நானும் கணவன், மனைவியா வாழ முடியுமா சம்மூ?” என்று அமைதியாகக் கேட்டான்.

அவன் அமைதியாகக் கேட்டாலும் அந்த முகத்தில் வந்து போன வேதனையின் சுவடுகளைப் பார்த்துத் திகைத்துப் போனாள் பூர்ணா.

அவனின் கேள்வி நியாயமானது தான். இத்தனை நாளும் அவனைத் தான் படுத்திய பாட்டிற்கு இந்தக் கேள்விக்குத் தான் பதில் சொல்லி தான் ஆகவேண்டும் என்று நினைத்தவள் “வசீ…” என்று மென்மையாக அழைத்து அவனின் நாடியில் கைவைத்து அவனின் கண்களை ஊடுருவி பார்த்தாள்.

“நான் செய்தது கண்டிப்பா தப்பு தான். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே உங்க மீதான தப்பான அபிப்பிராயத்தை மனதில் வச்சுக்கிட்டு அதை மறைச்சு சந்தோஷமா இருக்குற மாதிரி நடிச்சு நம்ம வாழ்க்கையைத் துவங்க நான் ஒத்துழைச்சுருந்தா உங்களுக்கு அது சந்தோஷத்தை தந்திருக்குமா?” என்று கேட்டாள்.

“உனக்கு ஒப்பாத உறவு எனக்கு எப்படி ரசிக்கும்?”

“அப்போ நாம விலகி இருந்தது தப்பு இல்லை தானே?” என்று கேட்டாள்.

“ஒருவேளை நான் நிஜமாவே குடிகாரனா இருந்தால் நீ என்ன செய்துருப்ப சம்மூ?”

“என்ன செய்துருப்பேன்? நீங்க அந்தப் பழக்கத்தை விடுற வரை சந்நியாசி வாழ்க்கை தான் வாழணும்னு சொல்லிருப்பேன்…” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டினாள்.

“அடிப்பாவி…! அப்போ நான் திருந்தவே இல்லனா?” என அதிர்வாகக் கேட்டான்.

“காலமெல்லாம் சந்நியாசி தான்…” என்று குறும்பாகச் சொன்னவளை முறைத்துப் பார்த்தான்.

“இப்போ எதுக்கு இந்த முறைப்பு? இப்படியே பார்த்துட்டே இருந்தாலும் காலமெல்லாம் சந்நியாசி தான்…” என்று கேலி செய்தவளின் கையைப் பிடித்துச் சுண்டி இழுத்தான்.

இழுத்த வேகத்தில் தன் மீது வந்து விழுந்த மனைவியை இறுக அணைத்திருந்தான்.

“வர, வர நீயும் என்னைப் போலவே பேச ஆரம்பிச்சுட்ட… நீ செய்யும் கேலிகெல்லாம் தண்டனை கொடுத்தா தான் உன் பேச்சு குறையும்…” என்று அவளின் காதின் ஓரம் முணுமுணுத்தவன் மெல்ல கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

அவனின் தீண்டலில் சிலிர்த்தவள், “அது தான் தப்பு. உங்க கூடச் சேர்ந்த பிறகு இன்னும் தான் வாயடிப்பேன்…” என்றாள் குறும்பு குரலில்.

“வாய் பேசும் வாய்க்கு வலை போட்டுடலாம்…” என்றவன் அவளின் பேச்சை நிறுத்த தன் அதரங்களால் அவளின் இதழ்களுக்கு வலை போட்டிருந்தான்.

நேரம் செல்ல செல்ல இனிமையாக ஆரம்பித்து வன்மைக்குத் தாவ, “வசீ…” என்று சிணுங்கினாள்.

“ம்கூம்… இனி என்னை நான் கட்டுப்படுத்திக்கிறதா இல்லை…” என்று அவளின் செல்ல மறுப்பை முறியடித்தவன் தங்கள் தாம்பத்தியத்தை இன்னிசையாக ஆரம்பித்து வைத்தான் ராகவ்.

பூர்ணாவும் அந்த இன்னிசையில் ராகுவ்வின் ராகமாகி கொண்டிருந்தாள்.

அவர்களுக்குள் பிணக்கம் அலறி அடித்து ஓடி இணக்கம் இன்னிசை பாடிக் கொண்டிருந்தது.

அன்றிரவு தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் மறுநாள் ராகவ்வின் நண்பர்கள் குழு ஏற்பாடு செய்திருந்த நாடகத்திற்குச் சென்றனர்.

கணவனின் தத்ரூபமான நடிப்பை பார்த்து அவனின் மனைவி மயங்கி தான் போனாள்.

“உங்க நடிப்பை பார்த்து இங்க நாடகம் பார்த்த ஒருத்தராவது திருந்துவாங்க வசீ…” என்று உற்சாகமாகப் பாராட்டினாள்.

“யாரும் திருந்துறாங்களோ இல்லையோ… இந்த மாதிரி நாடகம், நடனம் பார்க்கிறது மூலமா அவங்களுக்குக் கொஞ்ச நேரம் மைண்ட் ரிலீப் கிடைக்கும்…” என்றான் ராகவ்.

“ம்ம்… உண்மை தான்…” என்று ஆமோதித்தாள் பூர்ணா

அன்று இருந்த மீதி நேரத்தில் வெளியே சுற்றி விட்டு வீட்டிற்கு வந்தவர்கள் இரவு உணவு முடிந்ததும் மனைவியின் ஆசையை நிறைவேற்ற அவளுக்குப் பிடித்த பாடலை போட்டு நடனம் ஆட ஆரம்பித்தனர்.

மனைவியுடன் ஆடிக் கொண்டே “என்னைப் பத்தி நீ தப்பா நினைச்சதுக்கு ஒரு முறை கூட நீ சாரி கேட்வே இல்லை சம்மூ…” என்று அவளைச் சீண்டினான்.

“என் புருஷன் கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்குப் பாடம் சொல்லி கொடுத்திருக்கார். புருஷன் பொண்டாட்டிக்குள்ள சாரி, தேங்க்ஸ் எல்லாம் தள்ளியே நிக்கணும்னு. அதான் சாரியை என் சாரிக்குள்ளயே முடிஞ்சு வச்சுக்கிட்டேன்…” என்று உரிமையுடன் சொன்னாள்.

மனைவியின் பதிலை கேட்டு, உணர்ச்சி வசத்தில் அவளின் இடுப்பை இறுக்கிப் பிடித்தான்.

அதில் அவளின் உணர்வுகளும் கட்டவிழ்ந்து கொண்டு ஓட, அதைக் கணவனின் மார்பிலேயே சாய்ந்து மறைத்தாள்.

மனைவியின் அடைக்கலம் அவளிடம் அடைக்கலம் தேட சொல்லி கணவனைத் தூண்ட, ‘ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்’ என்னும் பாடல் வரிகளைத் தம்பதிகள் பிரதிபலித்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்துத் தன் தோளில் தலை சாய்த்திருந்த மனைவியில் உச்சியில் முத்தமிட்ட ராகவ், “சம்மூ உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று கேட்டான்.

தலையை நிமிர்த்தி ‘என்ன?’ என விழிகளால் கேட்டாள்.

“உன் பேருக்கும் என் பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?” என்று கேட்டான்.

அவனின் தோளில் இருந்து வேகமாக நிமிர்ந்தவள், “எது ஷாம்பு மாதிரியா?” என்று முறைத்துக் கொண்டே கேட்டாள்.

“ச்சேச்சே…! அதில்லை…. இது வேற…”

“வேறயா? அப்படி என்ன ஒற்றுமை?”

“ராகம் இருக்குல? அந்த ராகத்தில் ‘சம்பூர்ண ராகம்’னு ஒன்னு இருக்கு…”

“என்னது? நிஜமாவா? உங்க பேரையும், என் பேரையும் சேர்ந்து இணைச்சது போல இருக்கே…” உற்சாகமாகக் கூவினாள்.

“இணைச்சது போல மட்டும் இல்லை. இப்போ ஏழு ஸ்வரங்கள் இருக்குனு சொல்வாங்க கேள்விப்பட்டிருக்கியா? அந்த எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுமாம்.

பாட்டுக்கு ஏழு ஸ்வரங்கள் எவ்வளவு முக்கியமானது. அந்த ஏழு ஸ்வரங்களும் சேர்ந்தது தான் சம்பூர்ண ராகங்கள்னா அது நமக்கு ஸ்பெஷல் தானே? அதைத் தான் ஒற்றுமைன்னு சொன்னேன்…”

“ஹேய்! சுப்பர் வசீ…” நம்ம இரண்டு பேருக்கும் இருக்கும் பேர் ஒற்றுமை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்தப் பேர் ஒற்றுமை போலவே நம்ம வாழ்க்கையும் இனி ஒற்றுமையா இருக்கணும்…” என்று சந்தோஷமாகச் சொன்னாள்.

“கண்டிப்பா ஒற்றுமையாத்தான் இருப்போம்…” என்று தானும் அந்தச் சந்தோஷத்தில் இணைந்து கொண்டான் சம்பூர்ணாவின் ராகவேந்திரன்!