வஞ்சிக்கொடியின் வசீகரனே – 22
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 22
தன்னை அதிகமாக நெருங்கி படுத்த மனைவியைக் கேள்வியாகப் பார்த்தான் ராகவ்.
அவளிடம் தயக்கமும், வெட்கமும், தவிப்பும் போட்டி போட்டாலும் தன் ஒப்புக்கொடுத்தலை உணர்த்தி விடும் வேகத்தில் அவனின் மார்பின் மீதே இப்போது தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள் சம்பூர்ணா.
“சம்மூ…?” என்று கேள்வியாக அழைத்தவன், அவளின் தலையைத் தன் மார்பில் இருந்து நிமிர்த்தி மனைவியின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.
கணவனின் பார்வையைச் சந்திக்க முடியாமல் பார்வையை எங்கெங்கோ அலைய விட்டவளிடம் தெரிந்த தவிப்பை கண்டவனுக்கு, அவளின் ஒப்புக் கொடுத்தல் புரிந்தது.
இந்த நாளுக்காக ஏங்கி தவித்தவன் தான். ஆனால் இப்போதோ சம்சார வாழ்க்கையை அறவே வெறுக்கும் அக்மார் சந்நியாசி போலச் சாதாரணமாக மனைவியைப் பார்த்து வைத்தான்.
“என்ன திடீர்னு?” மெல்ல கேட்டான்.
அவனுக்கான பதிலாக என்ன சொல்வதென்று அறியாமல் கணவனைச் சுற்றிப் போட்டிருந்த கையைத் தனக்குச் சம்மதம் என்பது போல் அழுத்தி காட்டினாள்.
தன்னை வளைத்திருந்த அவளின் கையைப் பிடித்தவன் “என் மேல கோபமா இருந்தியே சம்மூ?” என்று கேட்டான்.
‘அவன் மேலே பாதிப் படுத்துருக்கேன். இப்போ போய்க் கோபத்தைப் பத்தி கேட்குறான் பார்’ என்று உள்ளுக்குள் செல்லமாகக் கடிந்து கொண்டாலும், “அதெல்லாம் போயிருச்சு…” என்று முனங்கலாகப் பதில் தந்தாள்.
“போயிருச்சா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.
“ஆமாம்…” என்பது போல் தலையை அசைத்தாள்.
“ஓ…! அப்போ இப்பவாவது என்ன கோபம்னு சொல்லலாம்ல சம்மூ?”
“இப்போ எதுக்கு அது? நான் தான் ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டேன்… அதனால் இப்போ உங்க மேல கோபம் இல்லை…”
“அப்படி என்ன தப்பா புரிஞ்சுக்கிட்ட சம்மூ?”
“வேண்டாமே…” என்று அவள் தயங்க,
“எனக்கு வேணும் சம்மூ… நமக்குக் கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகப் போகுது. இந்த ஒரு மாசமும் என் மேல் கோபம்னு என்கிட்ட இருந்து தள்ளி இருந்திருக்க. அதுக்கு முன்னாடி நான் பொண்ணு பார்க்க வந்ததில் இருந்து கல்யாணம் ஆகுற வரை ஒரு மாசம். நாம பஸ்ஸில் பார்த்ததில் இருந்து உன்னைப் பொண்ணு பார்க்க வரும் வரை ஒன்றரை மாசம்.
ஆக மொத்தம் மூணரை மாதம் என் மேல கோபமா இருந்திருக்க. அவ்வளவு நாள் நீ என் மேல கோபப்படுற அளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்னு எனக்குத் தெரிய வேண்டாமா?” என்று கேட்டவன் அவளை விலக்கி அமர வைத்து தானும் எழுந்து அமர்ந்தான்.
கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் “அது…” என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.
“ஹ்ம்ம்… எது…?” அழுத்தமாகத் திருப்பிக் கேட்டு வைத்தான்.
“உங்களைப் பஸ்ஸில் பார்த்தப்ப உங்க நிறம் தான் என்னைத் திரும்பி பார்க்க வச்சது. பார்த்தேன். ஆனா நீங்க பதிலுக்கு என்ன செய்தீங்க?” என்று திருப்பிக் கேட்டாள்.
“என்ன செய்தேன்? அதையும் நீயே சொல்லிடு…” என்றான்.
“கண்ணடிச்சீங்க…”
“ஆமா… அதுக்கென்ன?”
“புதுசா பார்க்கிற பொண்ணை அப்படித் தான் பார்த்த முதல் நாளே கண்ணடிப்பாங்களா?” என்று கேட்டாள்.
“முதல் நாள்னு யார் சொன்னா? அதுக்கு முன்னாடியே எனக்கு உன்னைத் தெரியும்னு அன்னைக்குப் பூச்சியை வைச்சு பயமுறுத்தினப்ப சொன்னேன்னே…?”
“ஆமா… எனக்கும் அப்போ தானே தெரியும். உங்களுக்கு என்னை முன்னாடியே தெரியும்னு. ஆனா அதுக்கு முன்னாடி முதல் முதலில் பார்த்த அன்னைக்கே கண்ணடிக்கிற உங்க கேரக்டர் எப்படி இருக்குமோனு பயமாகிருச்சு…” என்றாள்.
“பதினைந்து நாளா ஒரு பொண்ணு பின்னாடி பைக்கை எல்லாம் விட்டுட்டு அவளுக்காகவே லோலோனு பஸ்ஸில் அலையுறேன். அவ என்னடானா அப்படி ஒருத்தன் பஸ்ஸில் அவளுக்காக வர்றதை பார்க்காம பதினைந்தாவது நாள் திரும்பி பார்த்து என்னைச் சைட் அடிச்சா எப்படி இருக்கும்? நீயே சொல்லு…” என்று திருப்பிக் கேட்டான் ராகவ்.
“என்னது? பதினைந்து நாளா எனக்காகப் பஸ்ஸில் வந்தீங்களா?” அதிர்ந்தே போனாள் சம்பூர்ணா.
“ஆமா மாலில் டைனோசர் பொம்மையைப் பார்த்து பயந்தீயே அப்போ தான் முதல் தடவையா உன்னைப் பார்த்தேன். என்னடா இவ சின்னக் குழந்தை போலப் பயப்படுறாளேனு முதலில் சிரிப்பு தான் வந்துச்சு. அதுக்குப் பிறகு மாலில் மேல, கீழேனு திரும்பத் திரும்ப உன்னைச் சில இடத்தில் பார்த்தேன்.
அந்த நேரத்தில் ஏனோ ஒரு உள்மனம் உன்னைப் பின் தொடர சொல்லி தூண்டுச்சு. நீ மால்லை விட்டு போற வரை உன் பின்னாடி தான் சுத்தினேன். அப்பயே என் கூட இருந்த பசங்க கண்டுபிடிச்சு கேலி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.
அப்போ உன் கூட வந்த ஃபிரண்ட் ஒருத்தர் கம்பெனி ஐடி கார்ட் போட்டிருந்தை பார்த்து நீ வேலை பார்க்கிற இடம் கண்டு பிடிச்சேன். அதுக்குப் பிறகு உன்னோட மத்த டீடைல்ஸ் கண்டு பிடிக்கிறது எனக்குக் கஷ்டமே இல்லை.
கம்பெனி வச்சு நீ போற பஸ்ஸை கண்டு பிடிச்சு, நீ இறங்கும் இடத்தை வச்சு உன் வீட்டை கண்டு படிச்சேன். அதுக்கு மேலே படிப்படியா உன் விவரம் சேகரித்து உன் அப்பா மாப்பிள்ளைக்குச் சொல்லி வச்சிருந்த தரகர் வரை பிடிச்சேன்.
இதுக்கு இடையில உன் பேரு மேட்ருமனி எதுலயும் இருந்து வேற எதுவும் வரன் ஃபிக்ஸ் ஆகிடுச்சுனா என்ன செய்றதுன்னு அது வேற தனியா தேடினேன். ஆனா உன் பேரு எதுலயும் இல்லை. அப்புறம் தான் தெரிஞ்சது உன் அப்பா தெரிஞ்சவங்ககிட்டயும், தரகர்கிட்டயும் மட்டும் தான் மாப்பிள்ளை பார்க்க சொல்லி வச்சிருந்தார்னு. ம்ம்ம்… உன்னைக் கண்டு பிடிக்க எல்லா வேலையும் பார்த்துக்கிட்டே, உன்னைப் பார்க்க வந்தா நீ திரும்பி கூடப் பார்க்கலை. அப்புறம் ஒரு நாள் பார்த்தாய்.
நீ என்னைப் பார்த்ததும் எப்படி இருந்தது தெரியுமா? என் சந்தோஷத்தை வெளிப்படுத்தக் கண்ணடிச்சேன். அதுவும் அத்தனை நாள் உன் பின்னாடி சுத்தியதில் நீ என் உடமைனு ஒரு உரிமை வந்துருச்சு. அதான் கண்ணடிச்சது எனக்குத் தப்பா தெரியலை…” என்று அனைத்தையும் சொல்லி முடித்துத் தோளை குலுக்கினான்.
‘இத்தனை வேலை பார்த்திருக்கிறானா?’ என்பது போல் மலைத்துப் போய்ப் பார்த்தாள்.
“இத்தனையும் பண்ணிட்டு நீயும் என்னைப் பார்க்கிற. இனி எல்லாம் சரியாகிடும்னு நினைச்சுட்டு இருந்தா ஒரு நாள் பஸ்ஸில் வர்றதை நிறுத்திட்ட. அப்புறம் விசாரிச்சா நீ அந்தக் கம்பெனில லெட்டர் போட்டுட்டனு தெரிஞ்சது.
அதுக்குப் பிறகு என்ன செய்றது? உன்னை எப்படி அணுகுறது யோசிச்சேன். இந்த இடத்தில் எனக்கு அம்மா, அப்பா உதவி தேவைப்பட்டது. உன்னை நான் விரும்புற விஷயத்தைச் சொல்லி நான் விசாரிச்சதையும் சொன்னேன். அப்புறம் என்ன? தரகரை பிடிச்சு பொண்ணு கேட்டு விட்டாங்க. அதுக்குப் பிறகும் எங்களுக்குச் சாதகமா பதில் வருமா? வராதானு அத்தனை தவிப்பு. ஏன்னா அப்பாவும், அம்மாவும் வேற வேற மாநிலம். லவ் மேரேஜ்னு எனக்கு முன்னாடி வரன் பார்த்ததில் தட்டி போயிருக்கு.
அதை வைச்சு தான் அம்மா பயந்து என்னையும் பயமுறுத்தி விட்டுட்டாங்க. உங்க அப்பா பொண்ணு பார்க்க வர சொல்ற வரை உயிரை கையில் பிடிச்சுக்கிட்டு இருந்தது போல் தான் காத்திருந்தேன்.
அத்தனை தவிப்பும் அடங்கிப் பொண்ணு பார்க்க வந்தா மேடம் யார் நீன்னு அசால்ட்டா கேட்குறீங்க? ம்ம்ம்…” என்று இழுத்தான்.
“எனக்கு நீங்க முதலில் கண்ணடிச்சது உறுத்துச்சு. அதுக்குப் பிறகு பஸ்ஸில் பார்த்தப்ப ரொம்ப உரிமையா பார்த்தீங்க. எனக்கும் உங்களைப் பார்க்க பிடிச்சாலும, உங்க பிகேவியர் என்னைத் தள்ளி போகச் சொல்லுச்சு.
எனக்காக இத்தனை வேலை பார்த்தீங்கன்னு தெரியாம, இது என்ன இப்படி நடந்துக்கறீங்கனு நெகட்டிவ் தாட் விழுந்தது.
அப்புறம் ஒரு நாள் லாஸ்ட் படில நின்னுட்டு அசால்ட்டா டிராவல் செய்தீங்க. உயிர் மேல் அப்படி என்ன அசால்ட்னு கோபம் வந்துச்சு.
அதுக்குப் பிறகு ஒரு நாள் ஒரு சிகரெட் பாக்கெட் கையில் வச்சுருந்தீங்க. இந்தப் பழக்கம் வேறயானு மிரண்டு பார்த்தா, நீங்களும் உங்க பிரண்ட்ஸும் குடிக்கிறது பத்தி சர்வ சாதாரணமா பேசிட்டு வர்றீங்க.
ஐயோ! குடிகாரனானு மிரண்டு போய்ட்டேன். உங்க குடிகார பிரண்ட்ஸ் கூடச் சேர்ந்து தான் அப்படிக் கெட்டு போறீங்க போலன்னு நீங்க அவங்க கூட இருந்தாலே கோபமா வந்துச்சு. அதிலும் உங்க ஃபிரண்ட் குடிச்சுட்டு வேற ஒரு மாதிரியா பேசினார். அப்படிப்பட்ட ஃபிரண்ட்ஸ் கூட உங்களைப் பார்த்து எனக்கு எப்படி நல்ல அபிபிராயம் வரும்?
எந்தப் பொண்ணும் நல்ல பழக்க வழக்கம் உள்ள ஆணை கூடத் திரும்பி பார்ப்பாள்? உங்ககிட்டயும் அந்த நல்ல பழக்கத்தை எதிர்பார்த்தேன்.
ஆனாலும் அடுத்தடுத்து உங்களைப் பார்க்கும் போது என் மனசே என் பேச்சை கேட்கலை. நான் எவ்வளவோ மனசை கட்டுப்படுத்த முயற்சி செய்தும், ஒரு பக்கம் என் மனசு உங்க பக்கம் சாய, இன்னொரு பக்கம் எனக்குப் பிடிக்காத உங்க பழக்கம் என்னை உங்க பக்கம் சாய்வே கூடாதுனு நிமிர வச்சது.
என்னோட அப்பா எல்லா விஷயத்திலும் அவ்வளவு கன்ரோலா இருப்பார். பஸ்ஸில் போனா நமக்காக ஒரு குடும்பம் இருக்கு நாம் தான் கவனமா இருக்கணும்னு எவ்வளவு பஸ் கூட்டமா இருந்தாலும் உள்ளே ஏறி வந்து நிற்பார். சிகரெட், மதுனு எந்தப் பழக்கமும் இல்லை.
அவரையே பார்த்து வளர்ந்தவள் நான். அவர் என்கிட்ட கண்டிஷனா இருந்தது கஷ்டமா இருந்தாலும், அவரோட இந்தக் குணம் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு வர போறவனும் அப்படி இருக்கும்னு ரொம்ப எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனா நான் பார்த்த வரை என் அப்பா குணத்துக்கு அவ்வளவு ஆப்போசிட்டா தெரிஞ்சீங்க. இப்படி நான் நினைச்ச மாதிரி எதுவுமே இல்லாத உங்க பக்கம் என் மனசு சாய்றதை என்னால கண்ட்ரோல் பண்ண முடியலைனு தெரிஞ்சதும் என் மனசுகிட்ட இருந்து தப்பிக்க அந்தப் பஸ்ஸில் வந்தா தானே பிரச்சனைனு வேலை விட்டு நின்னுட்டேன்…” என்று அவள் சொல்ல, “அடிப்பாவி…!” என்று வாயை பிளந்தான் ராகவ்.
“அப்போ என்கிட்ட இருந்து தப்பிக்கத் தான் வேலையை விட்டியா?” அதிர்வு மாறாமல் கேட்டான்.
“ஆமாம்…” என்று அப்பாவி போலத் தலையசைத்தாள்.
“அடியேய்! உன்னை எல்லாம் என்ன செய்றது? பிள்ளையார் அம்மா மாதிரி பொண்ணு வேணும்னு நினைச்சுக் காத்திருந்தது மாதிரி நீ உன் அப்பா மாதிரி மாப்பிள்ளை வேணும்னு எதிர்பார்த்தியாக்கும்?
உன் அப்பா மேல உனக்குப் பயம் போல அதான் அப்படிப் பவ்யமா நடந்துக்கிறனு நினைச்சுருக்கேன். ஆனா இப்போதான் தெரியுது. அவர் குணம் பிடிச்சு நீ அவரை ரொம்ப உயர்ந்த இடத்தில் நிறுத்தி வச்சுருக்க. அதனால் தான் அவர் கிட்ட அவ்வளவு மரியாதையா நடந்துகிறனு இப்போ புரியுது.
ஆனாலும் உன் அப்பா மாதிரியே எல்லாரும் எப்படி இருப்பாங்க? உன் அப்பா, அப்பா தான். இந்த ராகவ், ராகவ் தான்…! அவர்கிட்ட உள்ள குணம் அப்படியே என்கிட்டயும் இருக்கணும்னு எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?” என்று கேட்டான்.
“ம்ம்ம்… அது இப்போ எனக்கும் புரியுது. அப்போ அப்பா மாதிரி நீங்க இல்லைனு எனக்கு அவ்வளவு வேதனையா இருக்கும். வேலை விட்ட பிறகு ஒரு நாள் அப்பா ஒரு வரன் வந்திருக்குனு சொன்னார்.
அப்படிச் சொன்னதும் எனக்கு உங்க ஞாபகம் தான் முதலில் வந்தது. உங்க ஞாபகத்தை ஒதுக்கவும் முடியலை. அப்பா சொன்ன மாப்பிள்ளையைப் பத்தி விவரம் கூடக் கேட்க பிடிக்கலை. ஆனா அப்பாவே மாப்பிள்ளை பற்றிய விவரம் சொன்னார்…” என்று சொல்லி நிறுத்தி கணவனைக் குறும்பாகப் பார்த்தாள்.
“ஏய் சம்மூ! அப்போ நான் தான் மாப்பிள்ளைனு தெரிந்து தான் அலங்காரம் பண்ணிட்டு வந்து நின்னியா?” அதிர்ச்சியும், ஆச்சரியமாகக் கேட்டான்.
“ஆமாம்…” அழுத்தியே சொன்னாள்.
“ஆனா நீ என்னைப் பார்த்து இவனா மாப்பிள்ளைனு ஷாக் ஆனாயே… அது…?”
“ஹான்! அது உங்களுக்கு ஷாக் கொடுக்க…” என்று எப்போதும் அவன் செய்யும் வேலையான கண்ணடிக்கும் வேலையை இப்போது அவள் செய்தாள்.
“அடியேய்! கண்ணடிக்கவும் தெரியுமா உனக்கு? நம்ம நிச்சயம் அப்போ தெரியாதுன்னு முழிச்சியே?”
“அதெல்லாம் தெரியும். நீங்க மாப்பிள்ளை மேடைல கண்ணடிக்கலாம். நான் அடிச்சா அம்மா என்னைய அடிச்சு போடவா?”
“அப்படியே அம்மாவுக்குப் பயந்தவத் தான் நீ… சரி அதை விடு! கண்ணடிக்கிறதை பத்தி அப்புறமா கண்ணடிச்சுட்டே பேசலாம். இப்போ விஷயத்துக்கு வா…! அப்போ நான் தான் வருவேன்னு தெரிஞ்சே வேணும்னே தான் கோபமா முறைச்சுட்டு வேற நின்னியா? கல்யாணத்தை வேற நிறுத்துறனு குதிச்ச?”
“ஆமா இந்த வெள்ளாவியில் வெந்தவனை வேண்டாம்னு ஒரு மனசு சொல்லுது… என் வசீயா இவன் வேணும்னு இன்னொரு மனம் சொல்லுது. வேணுமா? வேண்டாமானு குழம்பி தவித்துப் போய் அப்போ நின்னேன். கடவுள் கிட்ட வேண்டுதல் எல்லாம் வச்சேன். நீங்க என்னைப் பொண்ணு பார்க்க வரும் போது எனக்குப் பிடிச்ச மாதிரி எந்தப் பழக்கமும் இல்லாம சுத்தமா திருந்தி வரணும்னு. அந்த அளவு நீங்க என் வாழ்க்கையில் வேணும்னு என் மனசு எதிர்பார்த்தது.
அதே நேரம் நேருக்கு நேர் பேசும் போது உங்க பிகேவியர் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். அதனால் தான் உங்களைப் பார்த்து ஷாக் ஆனது போலப் பிகேவ் பண்ணினேன்.
இந்தக் குடிகார பயலை வேண்டாம்னு சொன்னா அவன் என்ன தான் சொல்றான்னு தெரிஞ்சுப்போம்னு ஒரு ஆர்வம் வேற… பஸ்ஸில் பார்த்தவன் பொண்ணு கேட்டு வீடு தேடியே வந்துட்டானே… அப்படியெல்லாம் என்னை வேண்டாம்னு விட மாட்டான்னு ஒரு நம்பிக்கை வேற…” என்று அவள் சொல்ல,
“அம்பிகளைக் கூட நம்பிடலாம்டி. உன்னை மாதிரியான அம்மியை மட்டும் நம்பவே கூடாது. அமுக்குனியா இருந்துட்டு நீ எவ்வளவு யோசிச்சுருக்க…” என்று மனைவியின் காதை பிடித்துத் திருகினான்.
“ஆ…!” என்று அவள் அலற, “கத்தாதேடி…!” என்று வேகமாக அவளின் வாயை மூடினான்.
“என்னை எப்படியெல்லாம் நோட்டம் விட்டு என் வாயில் இருந்தே கல்யாணத்தைப் பேசி முடிக்க வச்சுருக்க. நீ என்னை வேண்டாம்னு சொல்லிருவியோன்னு நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா? நீ என்னன்னா என்னையே போட்டு வாங்கிருக்க…”
“ஹா… வேற என்ன செய்றது? உங்க பழக்க வழக்கத்தில் எனக்குப் பிடித்தம் இல்லாமல் இருக்கும் போது என் மனசை வெளிப்படையா காட்ட எனக்குக் கஷ்டமா இருந்தது…”
“சரி தான். உன் மனநிலையும் புரியுது. ஆனாலும் நீ செய்தது எல்லாம் ஓவர் தான்டி… சரி இப்போ ஒவ்வொன்னுக்கா பதில் சொல்லு! அதென்ன வெள்ளாவியில் வெந்தவன்? வசீ? இதுக்கு முதலில் பதில் சொல்லு. அப்புறம் நீ பண்ணின வேற கேடித்தனம் எல்லாம் என்னென்னனு சொல்லு…!” என்றான்.
“வெள்ளாவியில் வெந்தவன் உங்க நிறத்துக்கு நான் வச்ச பேரு…” என்றவள் அவனைப் பார்த்ததும் மனதிற்குள் பாடிய பாடலை சொன்னாள்.
“நான் எவ்வளவு சாக்லேட் பாய் மாதிரி இருக்கேன். எனக்குப் போய் எப்படி ஒரு பேரை பிடிச்சிருக்க? உன்னை எல்லாம்…” என்று பொய்யாக முறைத்துப் பார்த்தான்.
“சாக்லேட் பாய்க்கு நக்கலாகவும் ஒரு பேர் வைப்பேன். ரொமான்ட்டிக்காகவும் ஒரு பேர் வைப்பேனே…” என்று அவனின் முறைப்பை கண்டு கொள்ளாமல் விளையாட்டாகச் சொன்னவள், வசீக்கான காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தாள்.
“வசீயும் முதலில் உங்க தோற்றத்துக்கு வச்ச பேரு தான். உங்க தோற்றத்தைப் பார்த்து உங்க பேரு வசீகரனா தான் இருக்கும்னு நானே நினைச்சுக்கிட்டேன். அதனால் உங்களை மனதில் நினைக்கும் போதெல்லாம் வசீனு தான் நினைச்சுப்பேன். அப்பா மாப்பிள்ளை விவரம் சொல்லி உங்க போட்டோ காட்டினப்ப தான் உங்க பேரு ராகவேந்திரன்னே தெரியும். இது என்னடா உருவத்துக்கும் பேருக்கும் பொறுத்தமாவே இல்லைனு தோணுச்சு.
ஆனா உங்க பேரு என்னவா இருந்தா என்ன? எனக்கு நீங்க வசீயாவே இருக்கட்டும்னு முடிவு பண்ணிக்கிட்டேன். அதுவும் நான் குத்துப்பாட்டு தான் அதிகம் கேட்பேன். மெலடி கேட்டாலும் அதில் எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு ‘வசீகரா, என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்!’ இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும். இந்தப் பாட்டுக்கு உங்க கூட ஒரு ஆட்டம் போடணும்லாம் நினைச்சுருக்கேன்…” என்று சொல்லி கணவனைக் குறும்பாகப் பார்த்தாள்.
“உன் டேஸ்ட்டே தனித் தான்டி பொண்டாட்டி! ஆட்டம் தானே? போட்டுடலாம். ஆனா அன்னைக்கு மாதிரி ஓடி ஒளிய கூடாது…” என்றான்.
“அது அன்னைக்குக் கூச்சமா இருந்தது. அந்தக் கூச்சத்தைப் போக்க வேண்டியது இனி உங்க வேலை…” என்றவள் கண்ணைச் சிமிட்டினாள்.
“கூச்சத்தைத் தானே போக்கிடலாம்…” என்று அவனும் மனைவியை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தான்.
“சரி மீதியையும் சொல்லிடுறேன். குடிகாரன்னு கோபம் இருந்தாலும், நீங்களே பொண்ணு பார்க்க வந்தது. நான் மறுத்து பேசினப்ப கல்யாணத்தைப் பேசி முடிச்சது எல்லாம் பிடிச்சிருந்தது.
கெட்டப் பழக்கம் இருக்குறவரை எப்படிக் கல்யாணம் பண்ணிக்கிறதுனு தயங்கினேன். ஆனா கல்யாணத்துக்குப் பின்னாடி உங்களைக் குடிக்க விடாம செய்துடலாம்னு தான் கல்யாணத்தைத் தடுக்க நினைக்கலை. அதே போல அப்பாவே ஓகே சொல்றார்னா நீங்க நல்லவரா இருப்பீங்கனு ஒரு நம்பிக்கை…”
“அது சரி என்னைக் குடிகாரன்னு சொல்றீயே? உங்க அப்பா எப்படி விசாரிக்காமயா பொண்ணு கொடுக்கச் சம்மதிச்சார்?” என்று குறுக்கிட்டு கேட்டான்.
“அப்பா கண்ணுக்கு வராம இருந்திருக்கும். எத்தனை பேர் அவங்க வீட்டுக்கே தெரியாம குடிக்கிறவங்க இருக்காங்க. அதுவும் இல்லாம நான் தான் பார்த்தேனே… பஸ்ஸில் போகும் போது உங்க பேக்ல லேசா பாட்டில் தெரிஞ்சதே. கையில் சிகரெட் பாக்கெட் வேற. ஆனா நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு சிகரெட் குடிக்கிறது இல்லையா நீங்க? உங்க ரூம்ல உங்க சட்டைல எல்லாம் தேடினேன்னே ஒரு சிகரெட் கூடக் கிடைக்கலை?” என்று அவனைக் கூர்ந்து பார்த்துக் கேட்டாள்.
“தேடுற வேலை வேற செய்தியா? ஆமா இப்போ குடிக்கிறது இல்லை. ஏன்னா நான் பொண்டாட்டிக்கு பயந்தவன் பாரு…” என்றான் கிண்டலுடன்.
அவனை முறைத்துப் பார்த்தவள் “இத்தனை நாளும் அந்தப் பழக்கம் இருந்தாலும், இனி இருக்கக் கூடாது…” என்றாள் அதிகாரமாக.
“சரிதான்…” என்று அவளுக்குத் தலையை ஆட்டி வைத்த ராகவ் மனைவியின் பார்வை தன்னை ஊடுருவியதை கவனிக்காமல் போனான்.