வஞ்சிக்கொடியின் வசீகரனே – 20

அத்தியாயம் – 20

“யார் நீங்க?” என்று கேட்ட கணவனை இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருந்தாள் சம்பூர்ணா.

“ஹலோ! யார்னு கேட்டால் பதில் சொல்லாம முறைச்சுட்டு இருக்கீங்க? எங்கங்க என் பொண்டாட்டி?” இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வராதவன் போலவே கேட்டு வைத்தான்.

“யோவ்! என்ன கொழுப்பா?” முறைத்துக் கொண்டே பதிலுக்குக் கேட்டாள் பூர்ணா.

“ஆமாங்க, என் பொண்டாட்டி தினமும் வாய்க்கு ருசியா சமைச்சு போடுறா… அதான் கொழுப்பு மட்டும் இல்லாம மப்பும் கூடிப் போச்சுங்க. அது சரிங்க, நீங்க யாருங்க? எப்படி எங்க வீட்டுக்குள்ள வந்தீங்க?” என்று மீண்டும் கேட்டவனை அப்படியே முகத்தில் ஒரு குத்து விடலாமா என்பது போல் பதிலுக்குப் பார்த்து வைத்தாள் அவனின் மனைவி.

“போதும் விளையாட்டு முதலில் உள்ளே வாங்க…!” வாசலிலேயே நின்று கேள்வி கேட்ட கணவனின் கையைப் பிடித்து வீட்டிற்குள் விட்டு கதவை பூட்டினாள்.

“ஏங்க என்ன கையை எல்லாம் பிடிச்சு இழுக்குறீங்க? என் பொண்டாட்டிக்கு மட்டும் தெரிஞ்சா என்னைச் சூப் போட்டு குடிச்சுருவா…” என்று பயந்தவன் போல் அலறினான்.

“ஐய்ய…! என்ன ஜோக்கா? ஆனா சிரிப்பு வரலை. போங்க… போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வாங்க சாப்பிடலாம்…” என்றவள் அவனைக் கண்டு கொள்ளாமல் சமையலறைக்குள் நுழைய போனாள்.

“ஹேய் நில்லு சம்மூ…! முகம் என்ன புதுசா இருக்கு. என்ன செய்த? ஒருவேளை பெயிண்ட் டப்பா எதையும் முகத்தில் கொட்டிக்கிட்டியோ?” இப்போது அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கேள்வி கேட்டவன் கூடவே தன்னுடைய நக்கல் கேள்வியையும் கேட்டு வைத்தான்.

“என்னது? பெயிண்ட் டப்பாவா? என்ன நக்கலா? பார்லர் போய்ப் பேசியல் பண்ணி கொஞ்சம் மேக்கப் தான் போட்டு வந்தேன்…” என்று விடைத்துக் கொண்டு பதிலைச் சொன்னாள்.

“என்னது கொஞ்ச மேக்கப்பா? பொய் சொல்லாதே சம்மூ… பார்லர்ல இருக்குற ஒட்டு மொத்த மேக்கப்பும் உன் முகத்தில் தான் இருக்கும் போல. என் பொண்டாட்டியை எனக்கே அடையாளம் தெரியலைனு சொல்லற மாதிரி இது என்ன இப்படி அப்பிட்டு வந்துருக்க? இதைப் போய் மேக்கப்னு சொன்னா நான் நம்பிருவேனா…” என்று கேலியாகக் கேட்டான்.

கணவனின் கேலியை கண்டு கொள்ளாமல் “என்ன? அவ்வளவா வித்தியாசமா இருக்கு?” என்று பதறியவள் கண்ணாடியை பார்க்க உள்ளே ஓடினாள்.

அவளின் பின்னே சென்றவன் “என் பொண்டாட்டிகிட்ட எத்தனை வித்தியாசம் தெரியுதுனு என்கிட்ட கேட்டால் சொல்லிட்டு போறேன். அதுக்கு எதுக்குக் கண்ணாடி?” என்றவன் மனைவியின் முகத்தைத் தன் பக்கம் திருப்பினான்.

‘க்கும்… உன்னைத் தொட்டு பேச ஒரு காரணம் பிடிச்சிட்டான் பூர்ணா…’ மனம் முணுமுணுக்க, அதைப் புறம் தள்ளிய பூர்ணாவோ கணவனின் தொடுகைக்குக் காத்திருப்பவள் போல மனம் படப்படக்க அவனுக்கு முகத்தைக் காட்டிக் கொண்டு நின்றாள்.

‘நீ ஒரு மார்க்கமா தான்டி இருக்க…’ மனம் ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தது எல்லாம் மாயமாகப் போனது.

“புருவத்தை ஒன்னு போல வெட்டி விட்டுட்டு வந்துருக்க…” என்றவன் இரண்டு புருவத்தையும் நீவி விட்டான்.

நீவி விடப்பட்டிருந்த புருவங்கள் அவனின் தொடுகையில் குத்திட்டு நிற்க துடித்துக் கொண்டிருந்தன.

“கண்ணு இரண்டுலயும் மையைத் தீட்டி வச்சுருக்க…” என்றுவிட்டு இமைகளை வருடி விட்டான். வருடலில் அவளின் இமைகள் படப்படத்து மூடிக் கொண்டன.

“கன்னம், முகமெல்லாம் புதுசா ஏதோ கிரீம் அப்பியிருக்க…” என்றவன் முகம் முழுவதும் ஒற்றை விரலால் வட்டம் அடித்தான்.

வட்டம் அடித்த விரலை பிடித்துக் கொள்ள அவளின் விரல்கள் துடித்தாலும் தன்னை அடக்கி கொண்டு அமைதியாக நின்றாள்.

“இந்த மூக்குக்குக் கீழே பூனை மூடி மாதிரி இத்துனூண்டு இருந்த ரோமம் எல்லாம் இப்போ காணாம போயிருச்சு…” என்று அங்கேயும் விரல் வைத்து ஆராய்ந்து விட்டு அடுத்து விரலை உதட்டுக்குக் கொண்டு வந்தான்.

“எப்பவும் பட்டும் படாம, இருக்கா இல்லையாகிறது போல இருக்கும் லிப்டிக் இன்னைக்கு அடிக்கிறது மாதிரி ஓவரா இருந்து பயமுறுத்துது…” என்றவன் விரலால் உதட்டுச் சாயத்தை வழித்தெடுத்து அவளிடம் காட்டினான்.

ரத்த சிவப்பு நிறத்தில் உதட்டுச் சாயம் அப்படியே அவனின் கையில் ஒட்டிக் கொண்டிருந்தது.

அவ்வளவு நேரம் உணர்ச்சி குவியலாய் நின்றிருந்தவள் சாயத்தைக் கண்டு இவ்வளவா என்பது போல் வாயை பிளந்து பார்த்தாள் சம்பூர்ணா.

“ஏன் இவ்வளவு மேக்கப் சம்மூ? மேக்கப் போட ஆசையா இருந்தா லைட்டா போட்டு இருக்கலாம்ல?” தான் எந்த உணர்ச்சியிலும் சிக்கி கொள்ளாதவன் போல அமைதியாகக் கேட்டான்.

அவனின் அமைதியில் தானும் அவனை அமைதியாகப் பார்த்து, “இன்னைக்கு ஜீன்ஸ், டீசர்ட் போட்டுட்டு ஆஃபிஸ் போனேன்ல… அங்க பிரண்ட்ஸ் எல்லாருமே நல்லா இருக்கு. ஆனா ட்ரஸுக்கு ஏத்த மாதிரி ஹேர் ஸ்டைலும், முகமும் இல்லனு சொன்னாங்க.

எனக்கு ஹேர் ஸ்டைல் எல்லாம் அவ்வளவா தெரியாது. அதனால தான் காலையில் சும்மா கிளிப் போட்டு லூஸ் கேர் விட்டுட்டு போனேன். வேற ஹேர் ஸ்டைல் பத்தி தெரிஞ்சுக்க, நம்ம வீட்டுப் பக்கத்தில் இருந்த பார்லர் போய்க் கேட்டேன். அவங்க மாடர்ன் ட்ரஸுக்கு ஏத்த மாதிரி இரண்டு மூணு ஸ்டைல் சொல்லி கொடுத்தாங்க. அதுக்குப் பீஸை கொடுத்துட்டு வெளியே வருவோம்னு இருந்தேன்.

அப்போ அந்தப் பார்லர் பொண்ணு இந்த ஹேர் ஸ்டைலுக்கு லைட்டா மேக்கப் பண்ணி பாருங்கனு போட்டு விட்டு அதுக்கும் சேர்த்து காசு வாங்கிட்டாங்க. நான் எப்பவும் மேக்கப் எல்லாம் போட்டது இல்லியா? அதான் ஒரு முறை போட்டு தான் பார்ப்போமேனு போட்டேன். அது தான் ஓவரா போயிருச்சு போல…” என்று விவரம் சொல்லி உதட்டை பிதுக்கினாள்.

பிதுங்கிய கீழ் உதட்டை பிடித்து இழுத்தவன் அப்படியே அதில் தன் உதட்டை உரசினான்.

நொடியில் பூர்ணாவின் உடல் சிலிர்த்து அடங்கியது.

‘என்ன செய்கிறான் இவன்?’ என்று விழி விரித்துப் பார்த்தாள்.

‘டேய்! என்னடா கிடைச்ச கேப்ல எல்லாம் கிஸ் அடிக்கிற?’ அவ்வளவு நேரம் அடங்கியிருந்த மனம் வேறு துள்ளி குதித்து வெளியே வந்து கத்தியது.

‘முதலில் அடாவடியா இருந்தே உன்னை அதிர வைப்பான். இப்போ அமைதியா இருந்தே ஆட்டி வைக்கிறான் பாரு…’ என்று உள் மனம் கூவினாலும் அதைக் கேட்கும் நிலையை எல்லாம் எப்போதோ கடந்து விட்டிருந்தாள் பூர்ணா.

“அப்படியே உன் உதட்டை இழுத்து சப்பணும் போலத் தான் இருக்கு…” என்றவனை விழி விரித்துப் பார்த்தாள்.

‘ஆமா அவன் கொடுக்கிறதெல்லாம் வாங்கிட்டு ஒன்னும் தெரியாத பச்சபிள்ள போல முழிப்பா…’

“ஆனா… எனக்கு இந்த லிப்டிக் ஸ்மெல் பிடிக்கலை…” என்றவனைப் பார்த்து இப்போது அவளின் விழிகள் சுருங்கி போனது.

‘நீ வர வர ரொம்ப எதிர்பார்க்கிறடி…’ மனம் நங்கென்று அவளின் நடுமண்டையில் கொட்டு வைக்க, அதில் இப்போது விழித்தெழுந்த பூர்ணா அங்கிருந்து நகரப் போனாள்.

“ஹேய்…! நில்லு சம்மூ… முதலில் போய் முகத்தைக் கழுவு. ஓவரா அடிக்கிற மாதிரி இருக்கு. இனி மேக்கப் லைட்டா போட்டுக்கோ…” என்று அவளை நிறுத்தி இதமாகவே சொன்னான்.

அவனின் இதமான அறிவுறுத்தல் அவளுக்கும் ஏற்புடையதாக இருக்க “சரி…” என்றவள், “எனக்கும் பார்லர்லயே வித்தியாசமா தெரிஞ்சது. அந்தப் பொண்ணு மேக்கப் போட்டு விட்டுட்டு அப்படி இருக்கு, இப்படி இருக்குனு பாராட்டினாளா அதில் நல்லா தான் இருக்கு போல. புதுசா போடுறதால் எனக்குத் தான் வித்தியாசமா தெரியுதுனு போலன்னு நினைச்சுட்டேன்…” என்று கணவனிடம் தன் மயக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல் விவரம் சொல்லிக் கொண்டே போய் முகத்தைக் கழுவி விட்டு வந்தாள்.

“இதுக்கு முன்னாடி நீ மேக்கப் போட்டது இல்லையா சம்மூ? அப்போ நம்ம கல்யாணத்துக்கு என்ன செய்த?” என்று மனைவி பரிமாறிய உணவை உண்டு கொண்டே வினவினான்.

“கல்யாணத்துக்கும் போடலை. ஹேர் ஸ்டைல் மட்டும் பண்ணி விட்டாங்க. வழக்கம் போல லைட்டா லிப்டிக் போட்டேன். அப்புறம் வழக்கம் போலப் பவுடர் மட்டும் தான்…” என்றாள்.

“ஓ! ஏன் மேக்கப் போட மாட்டியா?”

“ம்கூம்… போட மாட்டேன். மாடர்ன் ட்ரஸ் போலத்தான். இதுவும் வீட்டில் கட்டுப்பாடு! உதட்டில் எனக்கு வெடிப்பு வரும். அதனால் அதுக்காக லிப்டிக் போடுவதை அப்பா, அம்மா தடுத்தது இல்லை…” என்றாள்.

வீட்டில் கட்டுப்பாடு என்றதும் வழக்கம் போல மனைவியை யோசனையுடன் பார்த்தான் ராகவ்.

அவனின் பார்வை மாற்றத்தை கண்டு, “என்ன?” என்று விழியுர்த்திக் கேட்டாள்.

“ஒன்னுமில்லை… சாப்பிடு…” என்றவன் அமைதியாக உண்டு விட்டு எழுந்தான்.

இரவு உணவு முடிந்து அனைத்தையும் மனைவியுடன் ஒதுங்க வைத்து விட்டு படுக்கைக்கு வந்து அரைமணி நேரம் கடந்த பிறகும் இன்னும் படுக்க வராத மனைவிக்காகக் காத்திருந்தான் ராகவ்.

காலையில் அவளின் இளகலை கண்டு கொண்டதால் இப்போது ஏனோ மனம் பரபரப்பாக இருந்தது.

முன்பு போல் கோபத்தைக் காட்டாமல் அமைதியாக இருப்பதும், தன்னிடம் சாதாரணமாகப் பேசி பழக முயற்சி செய்வதும் புரிய, புது மணமகனுக்கே உரிய ஆசை மனதில் துளிர் விட்டது.

காலையில் தங்களுக்கிடையே ஏற்பட்ட நெருக்கம் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டான்.

அதனால் மனைவியின் வருகையை அவன் ஆவலுடன் எதிர்பார்க்க, அவளோ குளியலறைக்குள் சென்று அடைந்தவள் வெளியே வருவேனா என்று வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தாள்.

“சம்மூ இவ்வளவு நேரமா என்ன பண்ற?” என்று குரல் கொடுத்துப் பார்த்தான்.

“ஒண்ணுமில்லை… இதோ வர்றேன்…” என்று பதிலுக்குக் குரல் கொடுத்தவள் குரலில் ஸ்ருதி குறைந்தாற் போலத் தெரிய,

“என்ன செய்ற சம்மூ? உனக்கு என்ன செய்து?” என்று விடாமல் கேட்டான்.

“ம்ம்… ஒன்னும் செய்யலை… இதோ வந்துட்டேன்…” என்று குரல் மட்டும் தான் வந்ததே தவிர ஆள் வந்த பாடில்லை.

“சம்மூ…” என்று மீண்டும் குரல் கொடுத்ததும் அடுத்த நிமிடம் வெளியே வந்தாள்.

“என்னாச்சு சம்மூ?” என்று கேட்டவனுக்குப் பதில் சொல்லாமல் படுக்கையில் சென்று படுத்தாள்.

“என்ன வயிறு எதுவும் சரியில்லையா?” அவளின் அமைதியை கண்டு யூகித்துக் கேட்டான்.

“இல்லை…” என்றவள் முகத்தில் அசவுகரியம் தெரிந்தது.

அதைப் பார்த்து “என்னத்தை மறைக்கிற சம்மூ? என்ன செய்துன்னு சொன்னாத்தானே தெரியும்…” குழப்பத்துடன் கேட்டான்.

“ஒன்னுமில்லைனு சொல்றேன்ல… பேசாம படுங்க…” என்று விட்டு அவனுக்கு முதுகை காட்டி படுத்தாள்.

அவள் ஒன்றுமில்லை என்று மீண்டும் மீண்டும் சொன்னதே ஏதோ இருப்பதை ஊர்ஜிதப்படுத்த அவளின் இடுப்பில் கையைப் போட்டு தன் பக்கம் வேகமாகத் திருப்பினான்.

அவன் இடுப்பில் கை வைத்த அடுத்த நிமிடம் “ஷ்ஷ்…” என்று வேதனையுடன் சத்தத்தை எழுப்பினாள்.

“ஏய்! என்ன சம்மூ… இடுப்பில் என்ன?” பதட்டத்துடன் கேட்டான்.

“ம்ப்ச்… ஒன்னுமில்லை…” சலிப்புடன் சொன்னாள்.

“பூர்ணா…!” என்று அதட்டியவன், “என்ன விளையாடுறீயா? அப்படி என்ன என்கிட்ட மறைக்கிற? இப்போ சொல்ல போறீயா? இல்லை நானே பார்த்துக்கட்டுமா?” மிரட்டலாகக் கேட்டான்.

“என்னது?” என்று அலறியவள், “நானே சொல்றேன்…” என இறங்கி வந்தாள்.

“ம்ம்… சொல்லு…”

“ஜீன்ஸ் பேண்ட் போட்டேன்ல… அது டைட்டா இருந்ததா? அது இடுப்பில் அழுத்தியதில் ரொம்ப அரிச்சது. அரிச்சதுனு சொறிஞ்சேனா இப்போ இடுப்பை சுத்தி புண்ணானது போல இருக்கு. அதான் வலிக்குது…” என்று ஒரு வழியாகச் சொல்லி முடித்தாள்.

“என்ன புண்ணாகிருச்சா…?” அதிர்ந்தே போனான்.

“மருந்து எதுவும் போட்டியா சம்மூ?”

“என்ன மருந்து போடனு தெரியலை. ரொம்ப அரிச்சதுனு நல்லா சொறிஞ்சுட்டேன். எரியுது…” என்றாள் கலங்கலான குரலில்.

“நீ என்ன சின்னக் குழந்தையா சம்மூ. சொறிஞ்சுட்டேன்னு அசால்ட்டா சொல்ற? காட்டு நான் மருந்து போட்டு விடுறேன்…” என்றவன் எழுந்து சென்று களிம்பை எடுத்து வந்தான்.

அவள் அப்படியே படுத்திருக்க, “காட்டு சம்மூ…” என்றான்.

“எப்படிக் காட்ட? அதை என்கிட்ட கொடுங்க. நானே பாத்ரூம்ல போய்ப் போட்டுக்கிறேன்…” என்று களிம்பிற்காகக் கையை நீட்டினாள்.

“ஏன் மறுபடியும் உள்ளே போய்ச் சொறிஞ்சுக்கவா? பேசாம காட்டு நானே போட்டு விடுறேன்…” என்றவன் களிம்பை கொடுக்க மறுத்து விட்டான்.

“ம்ப்ச்… நீங்க எப்படிப் போட முடியும்?” என்று கேட்டவள் தன் உடையைப் பார்த்தாள்.

நைட்டி அணிந்திருந்தாள். இதில் எப்படிக் காட்ட? என்று அவள் சங்கடமாக முழிக்க, அப்போது தான் ராகவ்வும் அதைக் கவனித்தான்.

“நைட்டியைத் தூக்கு…” அடுத்த நிமிடம் சர்வ சாதாரணமாகச் சொன்னான்.

“என்னது…?” சிறு கூவலாய் கத்தியே விட்டிருந்தாள்.

“இப்போ ஏன் கத்துற? உன் புருஷன் தானே சொல்றேன்? இப்படி வலிக்குதுன்னு படுத்திருக்கும் போது உன் மேல அப்படியே பாஞ்சிற மாட்டேன். அதனால் பயப்படாம நைட்டியைத் தூக்கி இடுப்பை காட்டு…” என்றான்.

‘பயம் உன்னை நினைச்சு இல்லை புருஷா… இப்போ எல்லாம் என்னை நினைச்சே எனக்குப் பயமா இருக்கு…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் “இல்ல… வேண்டாம்…” என்று தயங்கத்துடன் இழுத்தாள்.

மனைவியின் காலடியில் கிடந்த போர்வையை அவளின் இடுப்பு வரை போர்த்தி விட்டவன், “ம்ம்… இப்போ இடுப்பு மட்டும் தெரியுற மாதிரி நைட்டியை இழுத்து விட்டு படு…” என்றான்.

நீ செய்தே ஆக வேண்டும் என்ற உறுதி போலச் சொன்னவனின் பேச்சை தட்ட முடியாமல் போர்வைக்குள் கைவிட்டு நைட்டியை தூக்கி இடுப்பு மட்டும் தெரியும் படி செய்தாள்.

இடுப்பும் நன்றாகத் தெரியாமல் உள்பாவாடை மறைத்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்தவன் இதையும் போட்டுக்கிட்டு தான் இத்தனை ஆர்ப்பாட்டமாக்கும் என்பது போல மனைவியின் முகத்தை ஒரு பார்வை பார்த்தவன், “எங்க அரிக்குதுனு சொல்லு…” என்றான்.

உள்பாவாடையை லேசாகக் கீழே இறக்கி விட்டு காட்டிய நொடியில் மனைவியின் இடுப்பை பார்த்து அதிர்ந்தான்.

காலையில் அவன் ரசித்த இடுப்பு இப்போது ரத்தம் காட்டியது போல் சிவந்திருந்தது. கூடவே அவள் செறிந்ததில் ஆங்காங்கே தோல் வேறு சின்னச் சின்னதாக உரிந்திருந்தது. அதில் இருந்து சிறு ரத்தத்துளிகளும் தெரிய, “என்ன சம்மூ இப்படி இருக்கு? அப்புறம் ஏன் பாவாடையைப் போட்டு வேற இறுக்கி வச்சுருக்க?” என்று பதறி போய்க் கேட்டான்.

“ரொம்ப அரிச்சதா… பாவாடை அதுக்கு மேல இருந்தா அரிக்காத மாதிரி இருந்தது. அதுதான்…” என்று இழுத்தவளின் பேச்சு கணவனின் முறைப்பில் நின்று போனது.

“ஏற்கனவே இவ்வளவு சிவப்பா, புண்ணா இருக்கு. அதுக்கு மேல பாவாடையைப் போட்டு இறுக்கினா இன்னும் தானே புண்ணா போகும்? ஏற்கனவே புண்ணாகுற மாதிரி அரைமணி நேரமா பாத்ரூம்ல இருந்து சொறிஞ்சி வேற வச்சுருக்க… உன்னை எல்லாம் என்ன செய்றது?” என்று அவளைக் கடிந்து கொண்டே சிவந்திருந்த இடத்தில் மெதுவாகக் களிம்பை தடவி விட்டான்.

அவனின் கை பட்டதும் கூசியதில் இடுப்பை சுருக்கினாள்.

“ப்ச்ச்…! நேரா படு…” என்று அதட்டியவன் கடமையே கண்ணாக மருந்தை போட்டுவிட்டுக் கொண்டிருந்தான்.

கணவனின் அதட்டலில் அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். காலையில் இதே இடுப்பை பார்த்து உணர்ச்சி வசப்பட்டவன் இப்போதோ வைத்தியம் பார்க்கும் வைத்தியர் பார்வையாக மட்டுமே பார்த்து வைத்தான்.

அவனின் கண்ணில் சிறிது கூடச் சலனம் இல்லை.

இவனால் இவ்வளவு கட்டுப்பாடாகக் கூட இருக்க முடியுமா? என்பது போல் வியந்து பார்த்தாள்.

‘அவனைத் தள்ளிப்போ, தள்ளிப்போனு சொல்லிட்டு நீ தான்டி பொசுக்கு பொசுக்குனு உணர்ச்சி வசப்படுற…’ மனம் அவளை நங்கென்று இரண்டாவது முறையாக ஒரு கொட்டு வைத்தது.

“ம்ம்… என் புருஷன் நல்லவன் தான் போல…”

‘என்ன இழுக்குற…? இப்பயும் போலத் தானாக்கும்…?’ என்று கேட்ட மனதிற்குப் பதில் சொல்லாமல் அமைதியாகி போனாள்.

கருமமே கண்ணாக இடுப்பின் இரண்டு பக்கமும் மருந்தை போட்டு விட்ட ராகவ், “மூடாம அப்படியே படு… நைட் அரிக்குதுன்னு சொறிஞ்சுடாதே…” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டு அவளின் அருகில் படுத்தான்.

அவனின் முகத்தில் இப்போதும் எந்த மாறுபாடும் இல்லை. அமைதியின் திருவுருவம் போல மனைவியைப் பார்த்தான்.

அவன் படுத்ததும் அவனின் புறம் முகத்தைத் திருப்பித் தானும் கணவன் முகத்தையே பார்த்தாள்.

அவளின் பார்வையைக் கண்டு “என்ன சம்மூ…?” என்றான்.

‘ஒண்ணுமில்லை…’ என்பது போல் தலையசைத்தவள் பார்வையை மட்டும் தளர்த்தவில்லை.

“என்ன இவன் இப்போ நம்ம இடுப்பை பார்த்து மயங்கலையானு யோசிக்கிறயா?” அவளின் மனதை கண்டு கொண்டது போலப் புருவம் உயர்த்திக் கேட்டான்.

அவளுக்கு அந்த எண்ணம் தான் என்றாலும் அதை வாயை திறந்து சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“என்ன பதிலை காணோம்? அப்படித்தான் நினைச்ச போல…?” என்று தானே கேட்டவன், “மயங்குற நேரம் மயங்கவும் தெரியும், மனக்கட்டுபாடா இருக்குற நேரம் கட்டுப்பாடா இருக்கவும் தெரியும் சம்மூ… எனக்கும் எல்லாம் பீலிங்சும் இருக்கு. அதைக் காட்ட வேண்டிய இடத்தில் மட்டும் காட்ட உன் கணவனுக்கு நல்லாவே தெரியும்…” அழுத்தமாகவே சொன்னவனை இப்போது அவள் அமைதியாகப் பார்த்தாள்.

“என்ன பார்வை?”

“இல்ல சீரியஸ் மோட், ஜாலி மோட், ரொமான்ஸ் மோட்னு மாறி மாறி எப்படி ஷிப்ட் ஆகுறீங்கன்னு யோசிக்கிறேன்…” என்று நக்கலாகச் சொன்னாள் பூர்ணா.

“ஹான்… மோடை எல்லாம் என் மூளையில் ஷிப்ட் பண்ணி வச்சுருக்கேன். அதான்… வர வர நக்கல் ஜாஸ்தி ஆகிருச்சுடி பொண்டாட்டி…” என்றவன் அவளின் தலையில் கொட்ட கையைக் கொண்டு வந்தான்.

“வர வர எல்லாம் இல்ல… எப்பவும் எங்கிட்ட இருக்குறது தான். என்ன உங்களைப் போல எனக்கு உடனுக்கு உடனே எடுத்து விடத் தெரியலை…” தன் தலைக்குச் சென்ற அவனின் கையைத் தடுத்து நிறுத்திய படியே சொன்னாள்.

“என் கூடச் சேர்ந்துட்டல்ல… இனி நக்கலை நாக்கு நுனியில் கொண்டு வந்திடலாம்…” என்றான்.

தன் கைப்பிடியில் இருந்த அவனின் கையைத் தன் தலையணையில் வைத்தவள் கையின் மேல் தன் கன்னத்தை வைத்து படுத்துக் கொண்டு அவனையே அமைதியாகப் பார்த்தாள்.

அவளின் செயலை சில கணங்கள் ஆராய்ச்சியாகப் பார்த்தான். அவளிடம் இணக்கம் தெரிந்ததைக் கண்டு கொண்டாலும் ஏனோ அந்நேரத்தில் அவனுக்கு அத்து மீற தோன்றவில்லை.

அதனால் “போதும்… போதும்… பார்த்தது. பேசாமல் தூங்கு…” என்று செல்லமாக அதட்டினான்.

“ம்ம்…” என்றவள் இறுக கண்களை மூடிக் கொண்டாள்.

படுக்கைக்கு வரும் போது இருந்த ஆசையெல்லாம் நிராசையாக ஆனதை நினைத்து பெருமூச்சு வர முயன்றாலும், மனைவியின் உடல்நிலை முக்கியமாகப் பட, வேறு எண்ணத்தில் மனதை செலுத்த விடாமல் தானும் அமைதியாகக் கண்ணை மூடினான் ராகவ்.

அன்று அவர்களின் நாள் அப்படிக் கழிய, அடுத்த நாள் இன்னும் அவர்களைச் சோதிக்கவே விடிந்தது போல் விடிந்தது.

காலை வழக்கம் போல் எழுந்து குளிக்கச் சென்ற பூர்ணா கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தே பயந்து கத்தி கணவனை அதிர வைக்கும் வேலையை ஆரம்பித்து வைத்தாள்.