வஞ்சிக்கொடியின் வசீகரனே – 18

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 18

மனம் முழுவதும் ஒரு வித இதம் பரவியிருந்தது.

கணவனின் அக்கறையும், கனிவான கவனிப்பும் சம்பூர்ணாவின் மனதையும் கனிய வைத்துக் கொண்டிருந்தது.

மாதந்திர பிரச்சனையால் எப்போதும் மிகுதியாகவே அவதிப்படுவாள்.

வயிற்று வலி, முதுகு வலி, சோர்வு மட்டுமில்லாமல் வாந்தி, மயக்கமும் அவளைப் பாடாய் படுத்தும் என்பதால் அன்னையின் மடியை அதிகமாகவே தேடுபவள் அவள்!

மூன்று நாட்களும் சகுந்தலாவும் சளைக்காமல் அவளைத் தாங்குவார்.

சடகோபன் பெண்கள் விஷயம் என்று தள்ளியிருந்தாலும், சுருண்டு படுத்து கிடைக்கும் மகளின் தலைமாட்டில் அமர்ந்து அவளின் தலையை இதமாகச் சிறிது நேரம் தடவி கொடுத்து விட்டே செல்வார்.

அந்த இதத்திற்குப் பழகி போனவளுக்கு வருங்காலத்தைப் பற்றிய பயம் இருந்ததுண்டு.

கணவனாக வருகிறவன் அவளின் வலியை புரிந்து கொள்ள வேண்டுமே என்று கவலைப்பட்டது உண்டு.

இன்றோ கணவன் புரிந்து கொண்டதோடு மட்டுமில்லாமல், அவளின் வலியை தன் வலியாகப் பாவித்து, தானும் வேதனை கொண்டு, கால் வரை இதமாகப் பிடித்து விட்டு அவன் சேவகம் செய்தது அவளின் மனதை காதலாக உருக்கி போட்டுக் கொண்டிருந்தது.

அந்த இதத்தை இன்னும் இன்னும் வேண்டும் என்று மனம் தேடியது.

அடுத்த இரண்டு நாட்கள் மயக்கம் இருக்காது என்றவள் மயக்கத்தில் தான் இருந்தாள்.

இப்போது இருந்ததோ காதல் மயக்கம்!

அந்த மயக்கம் கணவனின் பக்கமே அவளைச் சாய வைத்தது.

மூன்று நாட்களும் இரவில் தானே அவனின் மீது கை போட்டு அணைத்துக் கொண்டு படுத்தாள்.

அதை அவளின் வேதனையில் தேடும் ஆறுதலாக ராகவ் எடுத்துக் கொண்டான்.

திங்கள் அன்று காலை சமையலறையில் பூர்ணா சமைத்துக் கொண்டிருக்க, ராகவ் பாத்திரங்களைக் கழுவி கொண்டிருந்தான்.

இருவருமே வேலைக்குச் செல்வதால் வேலைகளைப் பகிர்ந்தே செய்தனர்.

“இன்னைக்குச் சரியாகிடுச்சு தானே சம்மூ…” அவளின் உடல் நிலையைப் பற்றி வேலை செய்து கொண்டே விசாரித்தான்.

“ம்ம்ம்…” என்று முனங்களாகவே பதிலை தந்தாள்.

“அப்போ இன்னைக்காவது அந்த ட்ரெஸ்ல இருந்து ஒன்னு போடு சம்மூ. ஒரு வாரமா இதோ போடுறேன், அதோ போடுறேன்னு சொல்றீயே தவிரப் போடாம ஏமாத்திக்கிட்டே வர்ற…” அவள் தந்து கொண்டிருந்த ஏமாற்றத்தில் சலித்துக் கொண்டான்.

“இன்னைக்குப் போடுறேன்…” என்று கணவனைப் பார்த்து மென்மையாகச் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

அவளின் கோப, தாபங்கள் ஓடி ஒளிந்து கொண்டிருக்க, கணவனுடன் இணக்கமாகவே நடந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

அதை எல்லாம் ராகவ்வும் உணரவே செய்தான்.

ஆனால் உடல் நிலை சரியில்லாததால் அப்படி நடந்து கொள்கிறாள் என்று நினைத்து அதைச் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டான்.

“அப்போ சமைச்சதை எல்லாம் நான் எடுத்து வைக்கிறேன். நீ போய் ட்ரஸ் மாத்து…” அவளை முதல் வேலையாக அனுப்பி வைத்தான்.

கைகள் வேலை செய்து கொண்டிருந்தாலும் ராகவ்வின் பார்வை நொடிக்கொரு முறை அறையின் வாசலை தொட்டு மீண்டு கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியில் வந்தவளை வாயை பிளந்து பார்த்தான்.

பின்பு அப்படியே உதட்டை குவித்து விசிலடித்துக் கொண்டே மனைவியின் அருகில் சென்றான்.

கணவனின் பார்வையில் தெரிந்த மாற்றத்திலும், விசிலடித்த விதத்திலும், சங்கடமாக உணர்ந்த பூர்ணா தான் அணிந்திருந்த உடையை இன்னும் நன்றாக இழுத்து விட்டாள்.

“ம்கூம்… கையை எடு சம்மூ. உனக்கு மார்டன் ட்ரஸ் இவ்வளவு நல்லா இருக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை…” என்றவன் குரல் ஹஸ்கி வாய்ஸில் வெளியே வந்தது.

“அவ்வளவு நல்லாவா இருக்கு…?” சந்தேகமாக இழுத்துக் கொண்டே கேட்டாள்.

ஜீன்ஸ் பேண்ட்டும், மேலே டீசர்ட்டும் தான் போட்டிருந்தாள். அது மிகச் சிம்பிளான உடை தான். ‘இதுவா அவ்வளவு நல்லா இருக்கு?’ என்பதே அவளின் சந்தேகம்.

“ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு…” ரசனையுடனே சொன்னான் அவளின் கணவன்.

“ம்ம் சரி… வாங்க சாப்பிடலாம்…” என்றவள் உணவை பரிமாற ஆரம்பித்தாள்.

பரிமாறும் போது தான் ஒன்றை உணர்ந்தாள். அதைக் கண்டு கொண்டதும், “அச்சோ…!” என்று அவளுக்கு அலற தோன்றியது.

அலற துடித்த வாயை அடக்கியவள் வேகமாக நிமிர்ந்து கணவனைப் பார்த்தாள்.

அவனின் கண்களோ அவளின் முகத்தில் இல்லாமல் மனைவியின் இடை பிரதேசத்தைக் கவ்வி கொண்டிருந்தது.

சேலையைக் கூட இடுப்புத் தெரியாமல் சட்டை மேல் வரை இழுத்து விட்டுப் பின் குத்தும் வழக்கம் உடையவளுக்கு, லேசாகக் கையை உயர்த்தியதிலேயே இடை தெரிந்ததில் ‘ஐயோ!’ என்றானது.

அதிலும் கணவனின் கண்கள் தன் இடையையே கவ்வி நிற்க, அவளுக்கு ஓடி ஒளிய தோன்றியது.

செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு அடுத்த நொடி அதைச் செயல்படுத்தியும் இருந்தாள்.

அறைக்குள் சென்றவள் தன் கையை உயர்த்திப் பார்த்து எவ்வளவு தூரம் சட்டை மேலே ஏறுகிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கையை மேலே உயர்த்தியதும் இடை தாராளமாகவே தெரிய, “அச்சோ! கடவுளே என்ன இது?” என்று கண்ணாடியை பார்த்து கத்தினாள்.

“உன் புருஷன் வந்ததில் இருந்து என்கிட்ட இப்படிக் கண்ணாடியை பார்த்து பேசுறதையே விட்டுட்ட. இப்போ மட்டும் என்னை ஏன் கூப்பிடுற? போ… போய் உன் புருஷன்கிட்டயே என்ன இதுன்னு கேளு…” கடவுள் சொன்ன பதிலை கேட்கும் நிலையில் அவள் இருக்கவில்லை.

கடவுளின் குரல் என்ன? “எ… என்… என்ன?” என்று திணறிய அவளின் குரலே அவளுக்குக் கேட்கும் நிலையில் அவள் இல்லை.

அவளின் மேல் சட்டையைச் சிறிது மேலே உயர்த்தி விட்டு மனைவியின் இடையை மறைக்கத் தன் கைகளைக் கணவன் பயன்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்த போது, பேச்சு என்ன? அவளின் மூச்சு கூடத் தாறுமாறாய் தடுமாறிக் கொண்டிருந்தது.

“நீ சேலை கட்டினப்ப ஓரம் சாரமா கூட எதுவுமே எனக்குத் தெரிஞ்சது இல்லை. என்னடா இவ சைடா கூட எதுவும் தெரியாமல் இப்படி இழுத்து போத்திக்கிறாளே… நாம எப்படிச் சைட் அடிக்குறதுனு நினைச்சுருக்கேன். ஆனா இப்போ…” என்று பின் பக்கமாக இருந்து அணைத்து அவளின் இடையின் இரண்டு பக்கமும் கையை வைத்து இடையின் நீள, அகலத்தை அளந்து கொண்டே மனைவியின் காதில் உதட்டை உரசி கிசுகிசுத்துக் கொண்டிருந்தான் ராகவ்.

பூர்ணா என்ன மாதிரியான உணர்வை வெளிப்படுத்துவது என்று கூடப் புரியாமல் கண்கள் சொருகி, நாடி நரம்பெல்லாம் உணர்ச்சி பிரவாகம் பொங்க இடையில் இருந்த கணவனின் கையின் மேல் தன் கையையும் வைத்து அவனைத் தடுக்க முயன்று கொண்டே நிற்க கூடப் பெலன் இல்லாமல் தலையைப் பின்னால் அவனின் தோளில் சாய்த்த படி நின்றிருந்தாள்.

மனைவியின் கிறக்க நிலை ராகவ்வை இன்னும் தீண்ட சொல்லி தூண்ட, கையால் இன்னும் அழுத்தமாக அவளின் இடையை இறுக்கி பிடித்தவன், “இப்போ எப்படி இருக்கு தெரியுமா? அப்படியே சுனாமியா மாறி உன்னை முழுசா எனக்குள் சுருட்டிக்கணும் போல… உன் உடலின் ஏற்ற தாழ்வை சரியா எனக்குப் படம் பிடிச்சு காட்டிக்கிட்டு இருக்கு என் வஞ்சிக்கொடியே…” காதல் வசனம் போலப் பேசியவன் தன் உணர்வை அடக்க முடியாமல் அவளின் பின்னங்கழுத்தில் அழுத்தி தன் உதடுகளைப் பதித்தான்.

மீசை ரோமங்கள் உராய அழுந்த முத்தமிட்டவனின் உதடுகள் அப்படியே கழுத்தில் வழியாக ஊர்வலம் சென்று பின்னால் இருந்த படியே அவளின் கன்னத்தில் முத்தமிட்டன.

முத்தமிட்டவனுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து நின்றிருந்தாள் பூர்ணா.

பின்னால் இருந்து முத்தமிட வசதியில்லாதது போல் உணர்ந்தவன் மெல்ல மனைவியைத் தன் புறம் திருப்பி அவளின் முகத்தைச் சில நொடிகள் ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

இமைகளை இறுக மூடி உதடுகள் துடிக்க எதையோ எதிர்பார்ப்பவள் போல் இருந்த மனைவியின் முகம் அவனை மயக்க, கைகளை அவளின் கொடி போன்ற மேனியில் ஆங்காங்கே அலைய விட்டு, “என் வஞ்சிக்கொடியடி நீ…!” என்று கிசுகிசுப்பாக அவளின் மூக்குடன் தன் மூக்கை உரசிக் கொண்டே கொஞ்சியவன், அவளின் இதழ் துடிப்பை அடக்க, தன் உதட்டுடன் பிணைத்துக் கொண்டான்.

இதழ்கள் அடுத்தச் சில நிமிடங்களுக்குத் தீவிரமாக நலம் விசாரித்துக் கொண்டிருந்தன.

நலம் விசாரித்து விட்டு விலகிய உதடுகள் இப்போது ஓய்வில் இருக்க, அதை ஓய்வெடுக்க விடாமல் மனைவியின் காதை தீண்டிக் கொண்டே, “இன்னைக்கு லீவ் போடுவோமா சம்மூ…” என்று குழைவுடன் கேட்டான்.

கணவனின் மார்பில் இளைப்பாறிக் கொண்டிருந்த பூர்ணா மெல்ல தலையை நிமிர்த்தி, ‘லீவா எதுக்கு?’ என்பது போல் மலங்க மலங்க பார்த்து வைத்தாள்.

அவளின் பச்சை பிள்ளை போன்ற முகத்தைப் பார்த்து சிரித்தவன் மனைவியின் நெற்றியில் செல்லமாக முட்டி, “காதலுக்கு இல்லை வரைமுறை…
நீயும் நானும் போடுவோம் விடுமுறை…” என்று பிதற்றினான்.

“என்னதிது கவிதையா…?”

“இதைக் கவிதைனு சொன்னா கவிதையே போய்த் தூக்கில் தொங்கிரும். இது காதல் உளறல்…” என்றான் குறும்பாக.

“ஓ…! ஆனா எதுக்கு லீவ்…?” என்று புரியாதவள் போலவே இன்னும் அவன் முத்தம் கொடுத்த மயக்கத்திலேயே கேட்டாள்.

“என் வஞ்சிக்கொடி நீயடி…!
உன்னைக் கொஞ்சிக்கத்தான் போறேன்டி…!” என்றவன் உதட்டால் அவளின் கன்னத்தைத் தீண்டினான்.

“இன்னைக்கு என்ன தூக்குல தொங்குற கவிதையா கொட்டுது…” மயக்கத்துடன் முணுமுணுத்தாள்.

“தூக்குல தொங்குற கவிதைக்கு உயிர் கொடுக்கத்தான்…” என்றவன் அவளை இன்னும் தனக்கு நெருக்கமாகக் கொண்டு வந்தான்.

கணவனின் பக்கம் ஏற்கனவே மனம் இளகியிருக்க, அவனின் நெருக்கத்தில் உடலையும் இளக விட்டாள் பூர்ணா.

இளகல் எல்லையைத் தாண்டும் முன் அலைபேசி அழைத்து அவர்களின் எல்லைக்கு எல்லை கோடு போட்டது.

“ம்ப்ச்…!” என்று சலித்துக் கொண்டே விருப்பமே இல்லாமல் மனைவியை விட்டு விலகி அலைபேசியை எடுத்தான் ராகவ்.

அவனுக்குத் தான் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்திருந்தது.

பேசிக் கொண்டே அவன் வரவேற்பறைக்குச் செல்ல, பூர்ணா அப்படியே சென்று படுக்கையில் அமர்ந்தாள்.

கணவனின் கைவளைவில் இருந்த வரை உறைக்காதது எல்லாம் இப்போது உறைக்க, அவளின் முகத்தில் கலக்கம் குடி புகுந்தது.

பேசி விட்டு மீண்டும் அறைக்குள் வந்த ராகவ், “இன்னைக்கு முக்கியமான கிளையண்ட் மீட்டிங் இருக்குறதை கொஞ்ச நேரத்தில் மறந்தே போய்ட்டேன் சம்மூ… இப்போ நான் கிளம்பியே ஆகணும். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அங்க இருக்கணும்…” என்று மனைவியிடம் தகவல் சொல்லிக் கொண்டே வந்தவன் கண்ணில் அவளின் கலக்கம் பட, “சம்மூ…” என்று அதிர்ந்து அழைத்தான்.

தான் அவளுடன் இழைந்ததால் அப்படி இருக்கிறாள் போல என்று நினைத்த நொடியில் ராகவ்வின் முகம் இறுகி போனது.

ஏனோ எப்போதும் போல் விளையாட்டுத் தனமாகப் பேசி சூழ்நிலையை இலகுவாக்க அவனுக்கு விருப்பமில்லை.

அவன் நெருங்கும் நேரம் நெருங்குவதும், பின்பு கோபம் என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வதும் எனத் தொடரும் மனைவியின் இரு வேறு மனநிலை அவனைப் பைத்தியமாக்கி கொண்டிருந்தது.

அவன் நினைத்தால் அவளின் இளகலை பயன்படுத்தித் தங்களின் வாழ்க்கையை ஆரம்பித்திருக்க முடியும். அவளின் மனதிற்கு மதிப்பு கொடுத்து, முக்கியமாக அவளின் கோபத்திற்கு மதிப்புக் கொண்டு விலகி நிற்கிறான்.

விலகி நிற்க நினைத்தாலும், அவ்வப்போது தடுமாறும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் அவனே சறுக்குகிறான் என்று அவனுக்கே புரியத்தான் செய்தது.

ஆனாலும் மனைவி அழகாக அவனின் கண் முன்னால் மனம் கவரும் வகையில் நடமாடும் போது உணர்வுகளை இறுக்கி வைத்துக் கொள்ள அவன் ஒன்றும் சுத்தமான சந்நியாசி இல்லையே?

முதல் முறையாக அவளை இந்த மாதிரி மாடர்ன் ட்ரஸில் பார்க்கவும் கொஞ்சம் அதிகமாகவே இளகிட்டான் தான். அதற்காகவா இப்படி அமர்ந்திருக்கிறாள்? என்று நினைத்ததும் என்றும் இல்லாமல் இன்று கோபமாக வந்தது.

அந்தக் கோபத்தை வார்த்தையிலும் வெளியிட்டான் ராகவ்.

“இப்போ என்னாச்சு சம்மூ? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க?” என்று இறுக்கமாகவே கேட்டான்.

“நான் இந்த ட்ரஸை மாத்திடட்டுமா…?” அவனின் இறுக்கத்தைக் கவனிக்காமல் கலக்கத்துடன் கேட்டாள்.

அவளின் கேள்வியில் இன்னும் சுறுசுறுவென ராகவ்விற்குக் கோபம் ஏறியது.

“ஏன்? இந்த ட்ரஸ் போட்டதும், உன்னைக் கொஞ்சிட்டேன்னு மாத்த போறீயா?” என்று கடுமையாகவே கேட்டான்.

அந்தக் கடுமையைக் கண்ட பிறகு தான் கணவனின் முகத்தைக் கவனித்துப் பார்த்தாள் பூர்ணா.

என்றும் இல்லாத அவனின் கடுமை அவளைத் தாக்க, விழிகளை விரித்துப் பார்த்தாள்.