வஞ்சிக்கொடியின் வசீகரனே – 16

அத்தியாயம் – 16

அன்று சம்பூர்ணா வேலையில் சேரும் நாள்!

காலை உணவு முடிந்ததும் அலுவலகம் செல்வதற்காக அறைக்குள் தயாராகிக் கொண்டிருந்த மனைவியை எதிர்பார்த்து வரவேற்பறையில் அமர்ந்திருந்தான் ராகவ்.

இன்று எந்த உடை அணிவாள் என்று பார்க்கும் ஆர்வம் அவனின் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருந்தது.

கடந்த இரண்டு நாட்களில் ஒரு முறை கூட அவனின் முன்னால் அவன் வாங்கிக் கொடுத்த புது உடைகளைப் போட்டுக் காட்டாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தாள் அவனின் மனைவி.

அதனாலேயே அவனின் ஆர்வம் அதிகரித்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு அறை கதவு திறக்கும் சத்தம் கேட்க, ஆர்வமாகத் திரும்பி பார்த்தவனின் கண்ணில் ஏமாற்றம் வேகமாக வந்து அமர்ந்து கொண்டது.

“என்ன சம்மூ சேலையைக் கட்டிக்கிட்டு வந்து நிற்கிற?” ஏமாற்றம் பரவிய குரலில் கேட்டான்.

“பின்ன வேற என்ன போட?” புருவத்தை உயர்த்திச் சாதாரணமாகக் கேட்டாள்.

“இரண்டு நாளா தேடி தேடி எத்தனை ட்ரஸ் எடுத்தோம். அதை வாங்க, ஆல்டர் பண்ணனு இரண்டு நாள் அதுக்குச் செலவு பண்ணிருக்கோம். நீ என்னன்னா அசால்ட்டா வேற என்ன போடனு கேட்குற? புதுசா வாங்கியதில் ஒன்னை போட வேண்டியது தானே?”

“போடுறேன்… ஆனா இப்போ இல்லை. இன்னைக்கு முதல் நாள். அதான் சேலை கட்டியிருக்கேன்…” என்று பேச்சை அத்தோடு முடித்துக் கொள்ளப் பார்த்தவளை முறைத்துப் பார்த்தான்.

“முதல் நாள் அந்த ட்ரஸ் போட கூடாதுனு எதுவும் சட்டம் இருக்கா என்ன? போ… போய்ப் போட்டுகிட்டு வா சம்மூ…” என்று சிறிது கோபமாகவே சொன்னான்.

அவனின் கோபத்தை விழிகள் விரித்துப் பார்த்தவள், “எதுக்கு இவ்வளவு கோபம்? இப்போ கிளம்பிட்டேனே. இன்னொரு நாள் கண்டிப்பா போடுறேன்…” என்று சமாதானமாகவே சொன்னாள்.

“ஏன் சம்மூ…” என ராகவ் மேலும் ஏதோ கேட்க வர, அந்த நேரத்தில் பூர்ணாவின் அலைபேசி அழைத்து இருவரின் பேச்சையும் தடை செய்தது.

கைபேசியைக் கையில் எடுத்துப் பார்த்த மனைவியின் முகம் சட்டென்று இலகுத்தன்மை இழந்ததைக் கண்ட ராகவ் அழைப்பு யாரிடம் இருந்து வந்துள்ளது என்பதனை உடனே புரிந்து கொண்டான்.

“ஹலோ அப்பா… ஆமாப்பா கிளம்பிட்டேன். எல்லாம் எடுத்துக்கிட்டேன். சரிப்பா…” என்று அடக்கத்துடன் பேசிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து இப்போது ஆச்சரியம் தோன்றாமல் ஆராய்ச்சி தோன்றியது.

‘இவ ஏன் அவங்க அப்பாவுக்கு இவ்வளவு பயப்படுறா? இவளோட அப்பா அப்படி ஒன்னும் டெரர் பீஸ் போலவும் தெரியலை. அப்படி இருக்கும் போது இப்படிப் பயப்பட வேண்டிய அவசியம் தான் என்ன?’ என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்குக் குழப்பமே மிஞ்சியது.

‘இவகிட்ட கேட்டாலும் சொல்லமாட்டா. சரியான ரகசிய ராங்கி…!’ என்று மனதிற்குள் செல்லமாகக் கடிந்து கொண்டான்.

அவளுக்கு அவன் வைத்த பெயரை நினைத்து அவனுக்கே சிரிப்பு வர உதட்டை சுழித்துச் சிரித்துக் கொண்டான்.

“ஆமாம்மா… சேலை தான் கட்டியிருக்கேன். சாப்பிட்டோம், கிளம்பி ரெடியா இருக்கோம்… ” என்று இப்போது அன்னையிடம் பேசிக் கொண்டே தற்செயலாகத் திரும்பிய பூர்ணாவின் கண்ணில் கணவனின் சிரிப்பு பட, ‘என்ன?’ என்று புருவத்தை உயர்த்தினாள்.

‘ரகசிய ராங்கி…’ எனச் சத்தம் வராமல் உதட்டை மட்டும் அசைத்துக் காட்டினான்.

அவன் சொன்னது புரியாமல் ‘என்ன சொல்றீங்க?’ எனக் கையசைத்து ஜாடையில் கேட்டாள்.

“நான் இதை இப்போ வாயை திறந்து சொன்னா ராங்கி, ராட்சசியாயில்ல அவதாரம் எடுப்பா…” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், ‘நீ பேசு…’ எனப் பதிலுக்கு ஜாடை காட்டினான்.

பேசி முடித்து விட்டு வந்தவள், “அப்போ என்ன சொன்னீங்க?” என்று கேட்டாள்.

“அதைச் சொல்லும் தைரியம் எனக்கு இருக்கு. ஆனா சொன்னா இன்னைக்கு வேலையில் சந்தோஷமா போய்ச் சேர மாட்ட. அதனால் அந்தப் பேச்சு இப்போ வேண்டாம்…” என்று கேலியாகவே சொன்னான்.

அவன் சொன்ன விதமே ஏதோ இடக்காகச் சொல்லியிருக்கிறான் என்பதைப் பறைசாற்ற அது என்னவென்று தெரியாமலேயே பத்ரகாளியாகக் கண்ணை உருட்டினாள்.

“பார்… பார்…! சொல்லாமலேயே இப்படி என்னை எரிக்கப் போறது போலப் பார்த்து வைக்கிற… சொல்லிட்டா எரிச்சுச் சாம்பலைத்தான் இன்னைக்கு நீ ஆபிஸுக்கு எடுத்துட்டு போவ…” என்று கிண்டல் குரலில் சொன்னவனின் குரல்வளையைப் பிடித்திருந்தாள் பூர்ணா.

“ஏய்…! என்னடி எரிப்பனு பார்த்தா சங்கை பிடிச்சுட்ட?” என்று குரலே எழும்பாமல் கத்த முயன்றான்.

“இப்போ வாயை மூடலைனா நிஜமாவே நெருச்சுருவேன். வாய்… இந்த வாய் என்னவெல்லாம் பேசுது. சாம்பலு, கீம்பலுனு ஏதாவது உளறினா நான் என்ன செய்வேன்னே எனக்கே தெரியாது…” என்றவள் வார்த்தைகள் தான் காட்டமாக வந்ததே தவிர, குரலும், கண்களும் லேசாகக் கலங்கி இருந்தது.

அதைக் கண்டு ஆச்சரியமான ராகவ், தன் கழுத்தில் இருந்த அவளின் கையை மெள்ள விலக்கி அதை எடுத்து தன் தோளில் போட்டவன், தன் கையால் அவளின் இடையை வளைத்தான்.

“விளையாட்டுக்குத் தானே சொன்னேன். அதுக்கு ஏன் இவ்வளவு ஃபீல் ஆகுற? நிஜமாவே என் மேல உனக்கு அவ்வளவு பாசமா?” என்று மனைவியின் கண்ணோடு கண் ஊடுருவி பார்த்த படி கேட்டான்.

“பாசமும் இல்லை… ஒரு மண்ணும் இல்லை… விடுங்க என்னை…” தன் இடுப்பை வளைத்திருந்த அவனின் கையை எடுத்துவிட்டுக் கொண்டே அவனிடம் இருந்து திமிறினாள்.

அவளை விலக விடாமல் இன்னும் இறுக்கி பிடித்தவன், “அப்போ என் மேல உனக்குப் பாசமே இல்லை. அப்படித்தானே…?” என்று கேட்டுக் கொண்டே அவளின் நாடியில் கை வைத்து தன் முகத்தை நோக்கி நெருக்கமாகக் கொண்டு வந்தான்.

இருவரின் மூச்சு காற்றும் ஒன்றோடு ஒன்று கலந்து உஷ்ணத்தை அதிகமாக்கிக் கொண்டிருக்க, உதடும், உதடும் உரசும் தூரத்தில் இருக்க, எங்கே முத்தமிட போகின்றானோ என்று நினைத்தவள், நாடியில் இருந்த அவனின் கையை வேகமாகத் தட்டி விட முயன்றாள்.

ஆனால் அவன் இறுக்கிப் பிடித்திருந்த விதத்தில் சிறிது கூடக் கையை அசைக்க முடியவில்லை.

“இப்போ என்ன உங்க மேல எனக்குப் பாசம் இருக்கா இல்லையானு என்னை லிப்லாக் பண்ணி நிரூபிக்கப் போறீங்களா?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.

“ஹேய்! ஆமாடி‌ பொண்டாட்டி… எப்படிச் சரியா கண்டுபிடிச்ச?” குதூகலமாகக் கேட்டான்.

“ம்ம்… ஜோசியம் பார்த்துட்டு வந்தேன்…” என்று நொடித்தவள் “எனக்கு இருக்குற எரிச்சலுக்கு இப்போ நீங்க கிஸ் பண்ணினா இன்னும் தான் எரிச்சலா வரும். கோபம் வரும்… பாசம் எல்லாம் பாசக்கயிறை தேடி போகும்…” கடுப்புடன் பொரிந்தாள்.

“என்னடி பொய்ப் பொய்யா சொல்ற? நான் பார்த்த படத்தில் எல்லாம் கிஸ் பண்ணியதும் ஹீரோயின் மயங்கி போயிருவா… அதை வச்சு ஹீரோ மேல் ஹீரோயினுக்கு எவ்வளவு லவ் இருக்குனு ஹீரோ பெருமையா சொல்லிக்குவானே… அப்போ அதெல்லாம் என்ன?”

“அதான் நீங்களே சொல்லிட்டீங்களே ஹீரோ, ஹீரோயின்னு… அது எல்லாம் கற்பனையில் ஹீரோ, ஹீரோயினுக்குத் தான் நடக்கும். நிஜத்தில் ஒருத்தர் கோபமா இருக்கும் போது இப்படி உணர்ச்சியைத் தூண்டி விட்டுப் பாசத்தை அளக்க நினைச்சா அது கண்டிப்பா முட்டாள் தனம் தான்.

உணர்ச்சியை வச்சுப் பாசத்தை அளவெடுக்க முடியாது. பாசமெல்லாம் உள்ளத்தில் இருந்து வரணும். உடல் உணர்ச்சியால் வரக் கூடாது. உள்ளத்தில் இருந்து வராம உடல் உணர்ச்சியில் வருவதற்குப் பேர் காதல் இல்லை. அதுக்கு வேற பேர் இருக்கு. அந்தப் பேர் என்னனு நீங்களே யோசிச்சு கண்டு பிடிச்சுக்கோங்க…” என்று உணர்ச்சி பிழம்பாகப் பேசிய மனைவிவை திகைப்பாகப் பார்த்தான் ராகவ்.

ராகவ்வின் செயல்கள் அனைத்திலும் ஒரு வித விளையாட்டுத் தன்மை ஒளிந்திருக்கும். எதையும் சிறிது இலகுவாகவே எடுத்துக் கொண்டு அந்த விஷயத்தைக் கையாள்வான்.

ஆனால் மனைவி அப்படி இல்லை என்பதை இத்தனை நாட்களில் புரிந்து வைத்திருந்தான். அவள் எதையுமே சிறிது ஆழ்ந்து, சீரியசாகத் தான் அணுகுவாள் என்று எண்ண வைத்திருந்தாள்.

அதற்குத் தகுந்தார்போல் இப்போது அவளின் பேச்சு இருக்கவும், அவளின் இடுப்பில் இருந்த கையையும், நாடியில் இருந்த கையையும் எடுத்து விட்டு அவளைப் பிரித்து நிறுத்தி, “ஏன் சம்மூ ஒவ்வொரு விஷயத்தையும் இப்படிச் சீரியஸா அணுகுற? கொஞ்சம் மேலோட்டமா ஜாலியா தான் அணுகி பாரேன்…” என்றான்.

“நான் உங்களைப் போல இல்லை… நான் வளர்ந்த முறை, வளர்க்கப்பட்ட முறை இப்படித்தான். இப்படியே பழகி போனதை உடனே மாத்த நினைச்சா முடியுமா? நீங்க விளையாட்டா பேசுங்க பரவாயில்லை. ஆனா உயிரை துட்சமா பேசி விளையாடாதீங்க. எனக்குப் பிடிக்கலை…” என்றாள் அழுத்தமாக.

தன்னைச் சாம்பல் என்று தான் சொல்லியது அவளைக் காயப்படுத்தி விட்டது என்பது புரிந்தது.

‘இதை விட அவளின் பாசத்தை அறிய தனியாக எதுவும் வேண்டுமா என்ன?’ என்று நினைத்தவன் அவளின் கையைப் பிடித்து “நான் சாதாரணமா பேசியது உன்னை ஹர்ட் பண்ணிருச்சுனு நினைக்கிறேன். இனி நான் இப்படிப் பேசலை… விட்டுடு… ரிலாக்ஸ்… சரி வேலைக்குப் போகலாம்…” என்று இறங்கியே பேசி அவளைச் சமாதானம் செய்தான்.

“ம்ம்… என்று முனங்கியவள் “ஆனா இன்னும் நீங்க அப்போ போன் பேசும் போது என்ன சொன்னீங்கனு சொல்லலையே…” என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்தாள்.

“இப்போ தான் டென்சன் ஆகி மலையிறங்கி இருக்க… திரும்ப அதைப் பத்தி பேசி இரண்டு பேருமே மலை ஏற வேண்டாம். நான் வழக்கம் போல விளையாட்டா தான் ஏதோ சொன்னேன்…” என்று சொன்னவன், அவளை விட்டு சிறிது நகர்ந்து நின்று “நீ எப்படிக் கேட்டாலும் நான் சொல்றதா இல்லைடி பொண்டாட்டி…” என்று கேலியாகச் சொல்லி கண்சிமிட்டினான்.

அவன் சொல்லாமல் விட்டதில் கோபம் வந்தாலும், கேலி பேசியதில் ஏனோ சிரிப்பு வர பார்த்தது. என்ன வழக்கம் போல ஏதாவது விளையாட்டாக நக்கல் அடித்திருப்பான் என்று நினைத்துக் கொண்டவள் அதை அத்தோடு விட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பத் தயாரானாள்.

இருவரும் ஒன்றாகவே அலுவலகம் சென்று சேர்ந்தனர்.

தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியவன், “உன்னோட செக்சன் பிப்த் ப்ளோரில் வரும். நான் சிக்ஸ் ப்ளோரில் இருப்பேன். தனியா போய்ருவியா? இல்லை கூட வரணுமா?” எனக் கேட்டான்.

“ஒரே கம்பெனியா இருந்தாலும், உங்களை அந்த ப்ளோரில் விடுவாங்களா என்ன?” கிண்டலாகக் கேட்டாள்.

“விட மாட்டாங்க தான். நிறையப் புரொசீஜர் ஃபாலோ பண்ண சொல்லுவாங்க…” என்று அவன் இழுக்க,

“அப்புறம் என்ன பெரிய அப்பாடக்கர் போலப் பேச்சு வேண்டி கிடக்கு? எனக்குத் தனியாவே போகத் தெரியும்…” என்றவள் “பை…” என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

“ஹேய் சம்மூ! நில்லு… நில்லு… லிப்ட்ல ஒண்ணாத்தானே போவோம்…” என்று அவளுடன் இணைந்து கொண்டான்.

“ஈவ்னிங் இரண்டு பேரும் ஒன்னாவே கிளம்புவோம் சம்மூ… வேலையில் நல்லபடியா ஜாயின் பண்ணு… ஆல் தி பெஸ்ட்…!” என்று ஐந்தாவது தளம் வந்ததும் மனைவிக்கு வாழ்த்தி விடை கொடுத்தான்.

காலை சந்தோஷமாகவே வழி அனுப்பி வைத்தவன், மாலை அவளை டென்ஷன் செய்து ரத்தக் கொதிப்பை எகிற வைக்கும் வேலையைக் கச்சிதமாகவே தொடங்கி வைத்தான்.

முதல் நாள் என்பதால் பூர்ணாவிற்கு அவ்வளவாக வேலை இல்லாமல் இருக்க, ‘மாலை ஐந்து மணிக்கே தான் வீட்டிற்குச் செல்லட்டுமா?’ என்று கேட்க கணவனுக்கு அழைத்தவளை அவன் உடனே அலுவலக உணவகத்திற்கு வரச் சொன்னான்.

‘இப்போ எதுக்கு அங்கே?’ என்று யோசித்துக் கொண்டே அங்கே சென்றவளின் முகம் வேகமாகக் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.

அலுவலக உணவகத்தில் இருந்த ஒரு பெரிய இருக்கையைச் சுற்றி பத்து பேர் சூழ அமர்ந்திருந்தான் ராகவ். அதில் பேருந்தில் வந்த நான்கு நண்பர்களும் கணவனுடன் இருக்க, அவளின் கோபத்தின் அளவை சொல்லத்தான் வேண்டுமா?

அவளின் கோபம் சுறுசுறுவென ஏறிய வேகத்தில் இறங்கவும் செய்தது.

அந்தப் பத்து பேரின் பார்வையும் இப்போது அவளின் புறம் அல்லவா திரும்பி இருந்தது.

அவர்களின் முன் தன் கோபத்தைக் காட்ட விரும்பாமல் முகப் பாவத்தைச் சட்டென்று மாற்றிக் கொண்டவள், உதட்டில் செயற்கை புன்னகையை நெளிய விட்டு கணவனை நோக்கி சென்றாள்.

அவர்கள் அவளின் கோப முகத்தைப் பார்க்கவில்லை என்றாலும், அவளின் கணவன் பார்த்து விட்டான்.

“வாடி என் பொண்டாட்டி…! எத்தனை நாளைக்குத் தான் இவனுங்க மேல அப்படி என்ன கோபம்னு தெரிஞ்சுக்காம இருக்குறது? சீக்கிரமே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்…” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் மனைவியைப் பார்த்துப் பற்கள் அனைத்தும் தெரியும் படி சிரித்து வைத்தான்.

“பயபுள்ள இளிப்பே சரியில்லை பூர்ணா… கவனமா இருந்துக்கோ…” என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்ட சம்பூர்ணா கணவனின் அருகில் சென்று நின்றாள்.

“வா சம்மூ, உட்கார்…” என்று தானே அவள் அமர இருக்கையை எடுத்துப் போட்டான்.

“ஹேய்…. சம்மூ-வாம் பா… நோட் பண்ணுங்க… நோட் பண்ணுங்க…” பத்துப் பேரில் ஒருவன் கத்தினான்.

“இரண்டு பாய்ண்ட் நோட் பண்ணியாச்சுப்பா…” அவர்களில் இருந்த பெண் தோழி ஒருத்தி வேகமாகப் பதில் குரல் கொடுத்தாள்.

“ஹேய்… இன்னொரு பாயிண்ட் என்னப்பா?” ஆர்வமாகக் கேட்டாள் இன்னொருத்தி.

“மிஸஸ்.ராகவ்விற்கு மிஸ்டர்.ராகவ்வே சேர் எடுத்து போட்டு உட்கார வைக்கிறார்பா. முக்கியமான பாயிண்ட் ஆச்சே. நாளைக்கு நமக்கு வரப் போற வருங்காலம் இதை எல்லாம் செய்யலைனா சும்மா விடலாமா?” என்று இப்போதே சூளுரைத்துக் கொண்டாள் ஒருத்தி.

“டேய் நண்பா… உனக்கு எங்க மேல என்னடா காண்டு? இந்தப் பொண்ணுங்களுக்கு நீயே பாயிண்ட் எடுத்துக் கொடுக்கிற… இதையே எங்க வருங்காலத்துக்கிட்டயும் இந்தப் பொண்ணுங்க இந்தப் பாய்ண்ட் எல்லாம் போட்டு கொடுத்தா எங்க பொழப்பு என்ன ஆகுறதுடா…?” என்று அலறினான் ராகவ்வின் நெருக்கமான தோழன் ஒருவன்.

“இதுக்கே இப்படி அலறினா எப்படிடா? இது ஆரம்பம் தானே… இன்னும் எவ்வளவோ இருக்கு…” அலட்டிக் கொள்ளாமல் கூலாகச் சொன்ன ராகவ்வை ஆண் நண்பர்கள் ‘அடப்பாவி!’என்பது போலப் பார்த்து வைக்க, ‘அட…! அட…!’ எனப் பெண் நண்பர்கள் பாராட்டி வைத்தார்கள்.

அவர்களின் கேலி, கிண்டலை கேட்டு பூர்ணாவின் புன்னகை, செயற்கை புன்னகையில் இருந்து மாறி இயற்கை புன்னகையாக உருவெடுக்க ஆரம்பித்தது.

அதைக் கவனித்த ராகவ் மனைவியை இன்னும் தங்கள் குழுவுடன் ஐக்கியம் ஆக வைக்கும் வேலையில் இறங்கினான்.

“சரி… சரி… நம்ம கலாட்டாவை எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு ஒத்தி வைங்கப்பா… இப்போ உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக்கோங்க. கல்யாணத்தில் பார்த்திருந்தாலும், அப்போ இருந்த கல்யாண கலாட்டாவில் அது மறந்திருக்கும். நான் சம்மூ பிரண்ட்ஸை மறந்த மாதிரி…” என்று சொல்லி விட்டுக் கண் சிமிட்டி கள்ளத்தனமாகச் சிரித்து வைத்தான்.

“இவனைச் சமாளிக்கவே நீங்க எக்ஸ்ரா இன்னும் ஒரு வேளை சாப்பிடணும் சிஸ்டர். சரியான வாலில்லா மங்கி தான். எப்படிச் சந்தடி சாக்குல உங்க பிரண்ட்ஸை எல்லாம் மறந்துட்டேன்னு கூலா சொல்றான் பாருங்க…” என்று ஒருவன் ராகவ்வை போட்டு கொடுக்க முயல,

“ஹேய்! என்னடா நம்ம கலாட்டானு உன்னையும் எங்களோட சேர்த்துக்கிற? நம்ம கலாட்டா இல்லை. இன்னைக்கு எங்க கலாட்டா. நாங்க கலாய்க்க போறதே உன்னைத்தான்…” என்று தங்கள் கலாட்டாவிற்குத் தடம் பதித்தான் இன்னொருவன்.

“சரி தான் போங்கடா… இந்த ராகவ்வையே கலாய்க்க போறீங்களா? அது நடக்கும்னு நினைக்கிறீங்களா? இல்ல நான் நடக்கத் தான் விட்டுருவேனா…?” பதிலுக்கு ராகவ்வும் எகிறினான்.

“ஹேய்! போதும்பா உங்க கலாட்டா… புதுப் பொண்ணைச் சும்மா பார்க்க வைச்சுக்கிட்டு நாம அரட்டை அடிக்கிறது ரொம்பத் தப்பு… அவங்க அப்படித்தான்பா. பசங்க ஏதாவது கலாட்டா பண்ணிட்டே இருப்பாங்க. என் பேரு தேவிகா, இவ ஸ்ருதி…” என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பெண்கள் குழு பூர்ணாவிடம் ஐக்கியமாக ஆரம்பித்தது.

அடுத்து ஆண்களும் தங்கள் பேரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

அனைத்தையும் புன்னகை முகத்துடன் கேட்டுக் கொண்டாள் பூர்ணா.

“நீங்க அழகா சிரிக்கிறீங்க. அதுவும் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுவது பார்க்க இன்னும் அழகா இருக்கு…” ஒருத்தி பாராட்ட, அதற்கும் புன்னகையையே பதிலாகத் தந்தாள் சம்பூர்ணா.

“இவங்க ரொம்ப அமைதியான டைப் போல. நம்ம ராகவ் விட்டா பேசியே காதில் ரத்தம் வர வைப்பான். அவனுக்கு இப்படி ஒரு அமைதியான பொண்ணா?” ஒருத்தி ஆச்சரியமாக வாயை பிளந்தாள்.

“ஹேய் லேடிஸ்! சம்மூவை பற்றித் தப்பா கணக்கு போடாதீங்க… சம்மூ காதில் இருந்து மட்டுமில்லை மூக்கிலிருந்தும் ரத்தம் வர வைப்பாள்…” என்று சொன்னவன் மனைவியைப் பார்த்து ‘உண்மை தானே’ என்பது போல ஜாடை செய்து கேட்டான்.

‘உதை படப் போற படவா!’ என்பது போல் அவனைப் பதிலுக்கு ரகசியமாக உறுத்துப் பார்த்து வைத்தாள் பூர்ணா.

“பொய் சொல்லாதீங்க ராகவ்… அவங்க பார்க்கவே எவ்வளவு இன்னொசண்ட்டா இருக்காங்க. அவங்களைப் போய் அப்படிச் சொல்றீங்க…” என்று ஒருத்தி பூர்ணாவிற்கு ஆதரவாக வர, “ஆமாங்க பாருங்க… என்னைப் பார்த்தால் அப்படியா தெரியுது? நான் ரொம்ப அமைதியான டைப்ங்க…” என்று உடனே அவளுடன் தோழமையாகப் பேசி அப்பாவி போல முகத்தை வைத்துக் காட்டினாள்.

‘அடியே! நீயா அமைதி?’ என்று நினைத்த ராகவ்விற்கு அவளின் முகப் பாவனையைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.

ஆனாலும் தன் நண்பர்களுடன் அவளும் பேச ஆரம்பிக்கவும் திருப்தியாக உணர்ந்தான்.

அடுத்து வந்த சிறிது நேரத்தில் முழுதாக இல்லாவிட்டாலும் ஓரளவு அவனின் நண்பர்களுடன் உரையாட ஆரம்பித்திருந்தாள் பூர்ணா.

ஆனால் அதே நேரம் பேருந்தில் தன்னுடன் வந்த நண்பர்களுடன் அவள் பேசுவதைத் தவிர்ப்பதை உணர்ந்தான் ராகவ்.

சில வார்த்தைகள் மட்டுமே பொதுவாக உரையாடி விட்டு விலக முயல்வதைக் கவனித்தவன், அவர்களைத் தவிர மற்ற நண்பர்களுடன் சகஜமாக உரையாடுவதையும் கவனித்தான்.

‘இவனுங்களைத் தவிர்க்க அப்படி என்ன தான் விஷயம் இருக்கோ…?’ என்று யோசித்து ராகவ் தான் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியது இருந்தது.

நண்பர்களுடன் நேரத்தை போக்கி விட்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.

வீட்டிற்குள் நுழைந்ததும் “அப்புறம் சம்மூ, என் பிரண்ட்ஸ் எல்லாம் எப்படி?” என்று மெள்ள நூல் விட்டுப் பார்த்தான்.

“ம்ம்… பரவாயில்லை… நல்லா கலகலப்பா பழகுறாங்க…”

“யெஸ், எல்லாருமே ஜாலி டைப் தான்…” என்றவன் மனைவியை ஆராய்ந்து கொண்டே, “அப்புறம் ராஜேஷ், மகேஷ், யுவன், நரேன் அந்த நாலு பேரையும் ஞாபகம் இருக்கா சம்மூ? என் கூடப் பஸ்ஸில் வந்திருக்காங்க. நல்ல பசங்க! மத்தவங்களை விட எனக்கு இவங்க நாலு பேரும் பெஸ்ட் பிரண்ட்ஸ்…” என்று அவர்களைச் சுற்றி தன் பேச்சை கொண்டு சென்றான்.

அவன் சொல்லச் சொல்ல அவளின் முகம் இறுக்கமானதை கவனித்த ராகவ், “அவங்க நான் எல்லாம் வீக் எண்ட்…” என்று மேலும் ஏதோ விவரிக்க முயன்றான்.

“வெளியே போயிட்டு வந்தது எனக்கு டயர்டா இருக்கு. நான் போய் ரெப்ரெஸ் பண்ணிட்டு காஃபி போட்டுக் குடிக்கணும்…” என்று அவனின் பேச்சை இடைவெட்டியவள் மேலும் கணவனின் பேச்சிற்கு இடம் கொடாமல் படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டாள்.

‘இன்னும் எத்தனை நாள் தான் ஓடி ஒளியுறனு பார்க்கிறேன்டி பொண்டாட்டி…’ என்று நினைத்த படி மூடிய கதவை தான் ராகவ் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டியதாக இருந்தது.