வஞ்சிக்கொடியின் வசீகரனே – 15
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 15
வழக்கம் போல் அதிகாலை ஐந்து மணிக்குக் கண் விழித்து விட்டாள் சம்பூர்ணா.
எழுந்ததுமே அவள் முதலில் உணர்ந்தது தன்னை அணைத்திருந்த கணவனின் கையைத்தான். அதை விட, அவள் கணவனை அணைத்திருந்தாள் என்பதே கூடுதலாகக் கவனத்தில் பதிந்தது.
அதை உணர்ந்ததுமே வேகமாகத் தன் கையை விலக்கி கொண்டவள் எழுந்து கால் நீட்டி சாய்ந்து அமர்ந்தாள்.
நேற்று நடந்தது அனைத்தும் அவளின் மனதில் ஓடியது.
கணவனின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.
வலிக்க வைக்கும் ஒரு வார்த்தைக்கே அவனின் பிரதிபலிப்பை கண்டு மலைத்துப் போயிருந்தாள்.
அவ்வளவு சீண்டியவன் தன் பயம் கண்டு உடனே அரவணைத்து அவளின் பயத்தைப் போக்கியிருக்கிறான்.
அதே நேரம் கணவனின் குணமும் ஓரளவு பிடிபட்டது.
‘அவன் ஓராயிரம் எக்ஸ்பிரக்ஸன் கொடுத்ததில் உனக்கு ஓரளவு மட்டும் தான் புரிஞ்சுதா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி…’ மனம் அதிர்ச்சியுடன் விழித்து வைத்தது.
மனதின் புலம்பலை புறம் தள்ளியவள், அடுத்து அவன் தன்னை வணிக வளாகத்தில் பார்த்ததாகச் சொன்னதை நினைத்துப் பார்த்தாள்.
அப்போ அவன் தன்னைப் பஸ்ஸில் பார்த்தது முதல் முறை இல்லை. அதற்கு முன்பே தன்னைப் பார்த்திருந்ததால் தான் பஸ்ஸில் பார்க்கும் போது சர்வ சாதாரணமாகத் தன்னைப் பார்த்துக் கண்ணடித்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.
அவன் அப்படி முதல் முறையே கண்ணடித்தது சம்பூர்ணாவை வெகுவாகப் பாதித்திருந்தது. அழகை ரசிக்கும் பார்வை பார்ப்பது வேறு… அதையும் தாண்டி அடுத்த நிலைக்குப் போவது வேறு அல்லவோ?
பார்வையில் ரசனை இருக்கும் வரை தான் அந்தப் பார்வை கண்ணிய பார்வையில் இடம் பெரும். ரசனையைத் தாண்டினால் அந்தப் பார்வையின் அர்த்தமே அனர்த்தம் ஆகிவிடும்.
பார்வைக்கே அந்த நிலை எனும் போது, பார்வையைத் தாண்டிய செயலுக்கு?
முதல் முறை அவளுமே அவனை ரசித்துப் பார்த்தாள் தான். ஆனால் ரசனையைத் தாண்டிய நிலைக்கு அவள் செல்லவில்லை.
அதையே அவனும் செய்திருந்தாலும் அவளுக்கு வித்தியாசமாகத் தெரிந்து இருக்காது.
ஆனால் அவன் கண்ணடித்தது தான் அவனின் மீதான எதிர்மறையான எண்ணத்திற்கு முதல் முறையாக வித்திட்டது.
ஆனால் அவனைப் பொருத்தவரை அன்று முதல் முறையாக அவன் பார்க்காமல் ஏற்கனவே அவளைப் பார்த்திருந்ததாலும், அவனின் விளையாட்டுத்தனமும் கைகொடுத்ததாலும் தான் அன்று கண்ணடித்து இருக்கிறான் என்பது இப்போது அவளுக்குப் புரிந்தது.
அவனைப்பற்றிய ஒரு விஷயத்திற்கு இப்போது தெளிவு கிடைக்கவும் சிறிது நிம்மதியாக உணர்ந்தாள்.
இதேபோல் அவனின் மீது தனக்கு இருக்கும் மற்ற குறைகளுக்கும் விடை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவளுக்குப் பெருமூச்சு கிளம்பியது.
யோசனையில் இருந்தவள் திரும்பி கணவனைப் பார்த்தாள்.
ராகவ் சிறிது கூடச் சலனம் இல்லாமல் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான்.
தங்களுக்குத் திருமணம் நடந்து ஒரு வாரம் தான் ஆகின்றது என்பதை அவளால் நம்பக் கூட முடியவில்லை. பல நாட்கள் கடந்தது போல் அவளுக்கு இருந்தது.
இருவருக்கும் இடையே விலகல் இருந்தாலும், முழு விலகல் இல்லாமலும் அவன் பார்த்துக் கொள்வது புரிந்தது.
கணவனைப் பார்த்துக் கொண்டே யோசனையில் இருந்தவள் மெள்ள தன் கையை நீட்டி அவனின் சிகையை அளந்தாள்.
‘ஏய்! என்ன தலையை எல்லாம் கோதி கொடுக்குற? நேத்து தானே கம்பளிப்பூச்சி, அருவருப்பா இருக்குனு எல்லாம் டைலாக் விட்ட. அதுக்குள்ள அவன் மேல இருந்த கோபம் எல்லாம் உனக்குப் போயிருச்சா?’ என்று மனம் கேள்வி எழுப்பியது.
“கோபம் போயிருச்சுனு யார் சொன்னா?”
‘கோபமா இருக்குறவ செய்ற வேலையா இது?’
“ம்ப்ச்… அது வேற… இது வேற…” மனதிடம் சலித்துக் கொண்டாள்.
‘கோபம்னா அதை எப்பவும் காட்டணும். அதை விட்டு அது என்னமா அவன் கொஞ்சுற நேரம் கொஞ்சிக்கிற… மத்த நேரம் கடுகடுனு இருக்க. உன்னை எல்லாம் எந்தக் கணக்கில் சேர்க்கிறது?’
“எந்த நேரமும் கோபத்தைக் காட்டணும்னு எதுவும் சட்டம் இருக்கா என்ன? புருஷன், பொண்டாட்டினா சண்டை வரத்தான் செய்யும். அதுக்காக எந்த நேரமும் விடைச்சுக்கிட்டு இருக்கணும்னு அர்த்தம் இல்லை…”
‘உன் புருஷன்கிட்ட மயங்கி தலை குப்புற விழுந்துட்டனு எவ்வளவு சிம்பாலிக்கா சொல்ற…’ என்று மனம் கேலி செய்து சிரித்தது.
கேலியை கிடப்பில் போட்டவள் தன் வேலையை மட்டும் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
‘பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு இவளை ஏன் கட்டிக்கிறோம்னு அவனை நினைக்க வைக்கப் போறதா கண்ணாலேயே சவால் எல்லாம் விட்ட. இப்போ என்னன்னா எதுவுமே செய்யாம அமைதியா அவனோட இஷ்டத்துக்கு வளைஞ்சு போய்க்கிட்டு இருக்க. உன் சவால் எல்லாம் அவ்வளவு தானா பூர்ணா?’ மனம் கேள்வி எழுப்ப,
அசைந்து கொண்டிருந்த கை நொடி பொழுது நின்றது.
“க்கும்… நான் ஏதாவது ஒன்னு செய்தா அதுக்குப் பத்தா திருப்பிக் கொடுக்கிறான். பதிலுக்குப் பதில் ஏதாவது செய்து என்னையே அசர வச்சுடுறான். இதில் நான் என்ன செய்ய? ஆனா நான் ஒன்னும் செய்யலைனு என்னால வருத்தப்பட முடியலை. ஏதோ ஒரு விதத்தில் அவன் செய்றது எல்லாம் எனக்கும் பிடிக்கவே செய்கிறது. அதனால் இப்படியே இருந்துட்டு போறேன். போ…” என்றாள்.
‘அதானே… அவன் தொட்டதும் உருகி கரையிற… இதில் எங்கிருந்து நீ எல்லாம் அவனைப் பழி வாங்குறது? அதோட நீ பழிவாங்க புதுசா எதுவும் செய்யணுமா என்ன? கல்யாணமாகியும் பிரம்மச்சாரியா அவனை ஏங்க வச்சு அலைய விட்டுகிட்டு இருக்க. அப்பப்போ உன்னை ஏக்கமா வேற பார்த்து வைக்கிறான். அதையும் கண்டும் காணாதது போல இருக்க. புது மாப்பிள்ளைக்கு இதைத் தவிரப் பெருசா வேற எதுவும் தண்டனை கொடுக்க முடியாது…’ என்று மனம் இடிந்துரைத்தது.
மனம் சொன்னதில் இருந்த உண்மை பூர்ணாவை சுட்டது. சுட்ட மனதிற்குப் பதில் சொல்ல முடியாமல் அமைதியாகிப் போனாள்.
மனதோடு உரையாடி கொண்டிருந்தாலும் தலை கோதலை விடாமல் தொடர்ந்தாள்.
மனைவியின் தலை கோதலை கூட உணராது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ராகவ்விற்குச் சிறிது நேரத்திற்குப் பிறகு தான் தன் தலையில் ஊர்ந்த கையசைவை உணர முடிந்தது.
உணர்ந்த மறு நிமிடம் உறக்கம் கலைந்து இமைகளை லேசாகப் பிரித்துப் பார்த்தான்.
கையைக் கணவனின் சிகைக்குள் அலைய விட்டு இமைகளை மூடிய வண்ணம் சாய்ந்து அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து, ஆச்சரியமாக விழிகளை விரித்தான்.
அவளின் உரிமையான செய்கையில் ராகவ்வின் உடல் சிலிர்த்தது.
தான் அசைந்தால் அவளின் செய்கை நின்று விடும் என்று உணர்ந்தவன், மீண்டும் இமைகளை மூடி கொண்டான்.
தலை கோதல் இன்ப மயக்கத்தைத் தந்து கொண்டிருக்க, அப்படியே அவளின் மடியில் தலை வைத்துப் படுக்கச் சொல்லி மனது பரபரத்தது.
ஆனால் அப்படிச் செய்தால் எங்கே வருடுவதை நிறுத்தி விடுவாளோ என்று சில நொடிகள் தயங்கினான். ஆனாலும் மனைவியின் மடி தரும் சுகத்தை அனுபவித்தே ஆகவேண்டும் என்ற ஆசை உந்தி தள்ள, நீட்டியிருந்த அவளின் காலில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டான்.
அவன் அப்படிப் படுத்ததும் மூடியிருந்த இமைகளைப் பட்டெனத் திறந்த பூர்ணா, மடியில் இருந்த கணவனின் தலையை வேகமாக விலக்க முயன்றாள்.
“ம்கூம்… எனக்கு வேணும் சம்மூ…” என்று முனங்கியவன் இன்னும் அழுத்தமாகத் தன் தலையை அவளின் மடியில் புதைத்துக் கொண்டு, அவளின் இடுப்பை சுற்றி கையைப் போட்டு வளைத்துக் கொண்டான்.
அவன் தூங்கும் போது உரிமையுடன் தலையை வருடி விட்டவள், இப்போது சங்கடத்தில் நெளிந்தாள்.
“விடிஞ்சிருச்சு… நான் எழுந்திருக்கப் போறேன். தள்ளிக்கோங்க…” தன் இடுப்பை வளைத்திருந்த கையை விலக்க முயன்று கொண்டே, அவனின் தலையையும் இன்னொரு கையால் விலக்கினாள்.
“சீக்கிரம் எழுந்து என்ன செய்யப் போற? இன்னும் இரண்டு நாளைக்குத் தான் இப்படிக் காலையில் ரிலாக்ஸா இருக்க முடியும். அப்புறம் வேலைக்கு ஓடணும். சோ… பிளீஸ் கொஞ்ச நேரம்…” என்றான்.
பேச்சு தான் கெஞ்சலாக வந்ததே தவிர, நான் எழுந்து கொள்ள முடியாது என்று அவனின் செய்கை அழுத்தமாக உரைத்தது.
அழுத்தமாக மடியில் முகம் புதைத்துக் கொண்டவன் அவளின் கையை எடுத்துத் தலையில் வைத்து, விட்ட வருடலை மீண்டும் தொடர சொன்னான்.
தலையில் கையை வைத்திருந்தாலும் வருடி விடத் தயங்கினாள் பூர்ணா.
“செய் சம்மூ… நீ செய்தது எவ்வளவு சுகமா இருந்தது தெரியுமா? அப்படியே மயிலிறகால் வருடுவது போலச் சுகமா இருந்தது. அந்தச் சுகம் எனக்கு வேணும்…” என்றான் எதிர்பார்ப்புடன்.
அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை இளக வைக்க மெள்ள வருட ஆரம்பித்தாள்.
“ம்ம்ம்…” என்று சுகமாய் முனங்கியவனுக்குச் சொர்க்க லோகத்தில் மிதப்பது போல் இருந்தது.
வருடலில் சிறிது நேரம் லயித்திருந்தவன், அவளின் மடியிலேயே நிமிர்ந்து மனைவியின் முகம் காணும் வகையில் படுத்து “வசீ யாரு சம்மூ?” எனக் கேட்டான்.
“என்… என்ன…? என்ன கேட்டீங்க?” இதையும் உளறி தொலைத்தேனா என்ன? என்று உள்ளுக்குள் கேட்டுக் கொண்டே வெளியே வார்த்தையில் தந்தியடித்தாள்.
“வசீ யாருனு கேட்டேன்…” அவனைத் தான் சொன்னாள் என்று தெரிந்திருந்தும் அதை அவளின் மூலமாகவே உறுதி படுத்திக் கொள்ளக் கேட்டான்.
“அது… அது…” என்ன சொல்லி அவனைச் சமாளிக்கலாம் என்பது போல் தயங்கி இழுத்தாள்.
“என்ன இழுக்கிற? நேத்து நீ என்னை எத்தனை ‘டா’ போட்டு பேசின. ஏன் அப்படிப் பேசினாய்னா கேட்டேன்? ஏதோ பயத்தில் அப்படிக் கூப்பிட்டனு கண்டுக்காம விட்டேன் தானே? அதனால் இப்போ நான் கேட்டதுக்கு உண்மையை மட்டும் தான் சொல்லணும் சம்மூ…” அழுத்தமாகவே உரைத்தான்.
“நேத்து டா போட்டு திட்டினதுக்கு ஸாரி…”
“என்னதிது இப்போ எல்லாம் எதுக்கெடுத்தாலும் ஸாரி சொல்ற? இப்படி உடனுக்குடன் சரண்டர் ஆகுற சம்மூவை விட, சொல்றதெல்லாம் சொல்லிட்டு அப்படித் தான் சொல்வேன்னு கெத்து காட்டுற என் ஷாம்புவை தான் எனக்குப் பிடிக்கும்…” என்றான் கண் சிமிட்டலுடன்.
“ம்க்கும்…! சரண்டர் ஆகலைனா பூச்சியை என் மேலேயே விட்டுருப்பீங்களே…” முகத்தைச் சுளித்து அருவருப்புடன் சொன்னாள்.
‘என்னடா இது நேத்து ஒன்னுமே நடக்காதது மாதிரி இதுங்க இரண்டும் தலை கோதிக்கிறதும், மடியில் படுத்துக்கிறதுமா ஒரே கொஞ்சலா இருக்கேனு இப்பத்தான் நினைச்சேன். உங்களுக்கே அது ஞாபகம் வந்ததில் சந்தோஷம்…’ என்று நொடித்த மனதின் குரலை கண்டுகொள்ளாமல் இருவரின் பேச்சும் தொடர்ந்தது.
“நான் செய்தது தப்பு தான்…” என்று உடனே ஒத்துக்கொண்டான் ராகவ்.
‘அவ்வளவு நல்லவனா நீ?’ என்பது போல் பூர்ணா பார்த்து வைக்க,
“ஆனா…” என்று இழுத்தான்.
‘சரி தான்! பயபுள்ள உன்னை ஏதோ சொல்லி கவுக்கப் போறான்’ மனம் இப்போது கவுன்டர் கொடுத்தது.
“நீ அப்படிச் சொன்னதும் தப்பு! நான் செய்ததும் தப்பு! தப்பு + தப்பு = சரி. எப்படிக் கணக்கு சரியாப் போயிருச்சு தானே?” என்று இதழோரம் துளிர்த்த சிரிப்புடன் கேட்டான்.
அவன் சொன்ன காரணத்தைக் கேட்டு முறைத்துப் பார்த்தாள் பூர்ணா.
“சரியா போனதால் நான் சாரி எல்லாம் கேட்க மாட்டேன்…” என்றான்.
‘யார் செய்தாலும் தப்புத் தப்பு தான்! உன் கணக்கு மட்டும் எப்படிடா சரியாப் போகும்?’ என்று நினைத்துக்கொண்டே அவனின் முகத்தைக் கூர்ந்து பார்த்து வைத்தாள்.
அவளின் பார்வையை உணர்ந்தது போல் “இது ராகவ் கணக்குமா. அதனால் சரியாத்தான் போகும்…!” என்றவனின், கண்களும், உதடுகளும் குறும்பில் முத்துக்குளித்துக் கொண்டிருந்தது.
‘உனக்கெல்லாம் வேற சப்டூட்டே இல்லைடா புருஷா…’ என்று தனக்குத் தானே சொல்லி கொண்டவள் அவனின் தலை முடியை லேசாக வலிக்கும்படி இழுத்தாள்.
“ஏய்! என்ன இது? கஷ்டப்பட்டுக் கணக்கு பண்ணிக்கிட்டு… சேச்சே… கணக்கு சொல்லி கொடுத்துக்கிட்டு இருக்கேன். அதை ஒழுங்காகப் படிக்காமல் தலையைப் பிடிச்சா ஆட்டுற?” என்று போலியாக மிரட்டினான்.
“ஓவரா வாய் பேசினா இப்படித்தான் பிடித்து ஆட்டுவேன்…” என்று சொல்லியவள் தலைமுடியைப் பிடித்து ஆட்டிக் காட்டினாள்.
“ஹேய் சம்மூ! நோ வன்முறை… ஒன்லி மென்முறை…” என்று அலறினான்.
“வன்முறை தெரியும். அது என்ன மென்முறை?”
“ரைமிங்மா டைமிங்! தலையைப் பிடிச்சு ஆட்டுறதா இருந்தாலும் மென்மையா பிடிச்சு ஆட்டுன்னு சொன்னேன்…”
“இது என்னே தமிழுக்கு வந்த சோதனை…” அவனின் மென்முறையைக் கேலி செய்தாள்.
“தமிழுக்குச் சோதனையும் கொடுப்போம். சாதனையும் கொடுப்போம்!” என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டான்.
“நிஜமாவே மென்முறைனு ஒரு வார்த்தை இருக்கு. ஒரு தமிழ் பொண்ணான உனக்குத்தான் அது தெரியாமல் போனதில் ஷேம் ஷேம் பப்பி ஷேம்…” என்று கேலி செய்தான்.
“ஹான்! அது பேச்சு வழக்குல அதிகமா யூஸ் பண்ண மாட்டோம்ல. அதனால தான் எனக்குத் தெரியல…” என்று சமாளித்தாள்.
“ஹி…ஹி… எனக்கும் இன்டர்நெட்டில் பார்த்து தான் தெரியும்…” என்றவன் “ஓய்! என்ன அப்படியே பேச்சை மாத்திடலாம்னு ஐடியாவா? வசீ யாருன்னு சொல்லு…” என்று மிரட்டினான்.
“வசீ என் புருஷன்! போதுமா? சொல்லிட்டேன்…” விடமாட்டேங்கிறானே என்ற சலிப்புடன் சொன்னாள்.
“ஓ! அப்படியா? உன் புருஷனுக்கு ராகவேந்திரன்னு ஒரு பேரு மட்டும் தான் இருக்கிறதா கேள்வி பட்டேன். எப்போ அவனுக்கு வசீனு மாத்தினாங்க? பாரேன் பேர் மாத்தினது அந்த ராகவேந்திரன் பயலுக்குக் கூடத் தெரியாதாம்…” என்றான் நக்கலுடன்.
“போயா… போயா… புருஷனுக்கு வைக்கிற பேரெல்லாம் அப்படித்தான் ரகசியமா வைப்போம்…” என்றவள் தன் மடியிலிருந்த அவன் தலையை விலக்கி விட்டு வேகமாகக் கட்டிலில் இருந்து இறங்கினாள்.
“ஏய்! எங்க ஓடுற? வசீனு எதுக்காக எப்படிப் பேரு வச்சனு சொல்லிட்டு போ…!” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி கேட்டான்.
“அதைச் சொல்லணும்னா நீங்க எப்போ என்னை முதல் முதலில் பார்த்தீங்க? மாலில் வச்சா? இல்லை அதுக்கு முன்னாடியேவா? இதை எல்லாம் சொன்னாத்தான் நானும் சொல்லுவேன்…” என்று அவனைக் கூர்மையாகப் பார்த்து சொன்னாள்.
அவளின் கண்களைத் தானும் கூர்மையாகச் சந்தித்தவன், “என்ன டீலா நோ டீலா போடுறீயா? அப்படிப் பார்த்தா நான் தான் உன்கிட்ட ஏற்கனவே டீலா? நோ டீலா போட்டேன். எதுக்கு என் மேல கோபமா இருக்கனு கேட்டேன். அதுக்கு இன்னும் நீ பதில் சொல்லலை. அதுக்கு முதலில் பதில் சொல்லு. அப்புறமா நான் உன் டீலுக்குப் பதில் சொல்றேன்…” என்றான்.
அவன் தான் கோபமாக இருக்கும் காரணம் கேட்டதும் வெடுக்கெனத் தன் கையை உதறி விடுவித்துக் கொண்டவள், “சொல்ல முடியாது போடா…” என்று கத்தி விட்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
“நானும் சொல்ல முடியாது போடி…” என்று கதவை பார்த்துக் கத்தினான்.
அடுத்து சிறிது நேரத்திற்கு இருவரும் முறைத்துக் கொண்டிருந்தனர்.
இருவருக்குமே மனம் விட்டு பேசிக் கொள்ளாததில் வருத்தம் இருந்தாலும், கண் விழிக்கும் போது இருவருக்கும் இடையே இருந்த இதம் அவர்களை அமைதிப் படுத்திக் கொண்டிருந்தது.
காலை உணவின் போது தன் முறைப்பை அப்படியே விட்டுவிட்டு காதலுடன் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தான் ராகவ்.
கணவனுக்குப் பரிமாறிக் கொண்டே தானும் உண்டு கொண்டிருந்தவள் அவனின் பார்வையை உணர்ந்து, ‘என்ன?’ என்பது போல் நெற்றியை சுருக்கி பார்த்தாள்.
“இன்னும் உனக்குள்ள எத்தனை திறமையை ஒளிச்சு வச்சுருக்கச் சம்மூ?” என மென்மையாகக் கேட்டான்.
“என்ன? என்ன திறமை?” புரியாமல் கேட்டாள்.
“இப்போ உன்கிட்ட கண்டு பிடிச்சது சமையல் திறமை! நீ இவ்வளவு நல்லா சமைப்பனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை…” என்றான் பாராட்டுதலாக.
“இதில் என்ன திறமை இருக்கு? ரொம்ப நாளா பழகின பழக்கம் கை கொடுத்திருக்கு. அவ்வளவு தான்…! என்றாள் சாதாரணமாக.
“என்ன இவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட? இப்போ எல்லாம் உன் வயதில் இருக்கும் பொண்ணுங்களுக்குச் சமைக்கத் தெரியும்னு சொல்றதே பெரிய விஷயம். நீ சமைச்சது மட்டும் இல்லாம அதை இவ்வளவு ருசியா வேற சமைச்சுருக்க. இதுவே பெரிய திறமை தான்…” என்றவன் காலை உணவை ரசித்து உண்டான்.
அவள் சமைத்த உணவு அவனின் வயிற்றை நிறைக்க, அவனின் பாராட்டு பூர்ணாவின் மனதை நிறைத்தது.
“சரி கிளம்பு சம்மூ, வெளியே போயிட்டு வரலாம். இன்னும் இரண்டு நாளில் நீ வேலையில் ஜாயின் பண்ணனும்ல… அதுக்குத் தேவையான சில திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரலாம்…” என்றான்.
“என்கிட்ட தான் எல்லாம் இருக்கே. இன்னும் என்ன வாங்க போறீங்க?”
“அதைக் கடையில் வந்து பார்த்து தெரிஞ்சுக்கோ. இப்போ கிளம்பு…” என்று அவளைக் கிளப்பி விட்டான்.
ஒரு பெரிய ஆடையகத்திற்கு அழைத்துச் சென்றான். கடையைப் பார்த்ததுமே அங்கே வந்திருக்கும் காரணம் பூர்ணாவிற்குப் பிடிபட்டது.
“இல்லை வேண்டாம்…” என்று வேகமாக மறுத்தாள்.
“இப்போ நீ உன் அப்பாவோட பொண்ணு மட்டுமில்லை. என்னோட பொண்டாட்டியும் தான். அதனால் பேசாம வா…!” என்று தயங்கி நின்றவளின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
ஆரம்பத்தில் தயங்கினாலும் அடுத்தச் சில மணி நேரம் சம்பூர்ணாவிற்குச் சுவாரஸ்யமாகவே கடந்து சென்றது.
அவள் வரைந்து வைத்த மாடல் உடைகளில் சிலது கிடைக்க அதை ஆர்வமுடன் தேர்ந்தெடுத்துக் கொடுத்தான் ராகவ்.
அப்போது ஆசையில், ஆர்வத்தில் மனைவியின் கண்கள் மின்னுவதைப் பார்த்து அவனுக்கும் நிறைவாக இருந்தது.
இருவரும் ஆசையும், ஆர்வமுமாக வாங்கிய உடைகளே அவர்களுக்குச் சில பிரச்சனைகளை இழுத்து விடப் போகிறது என்பதை அறியாமல் அன்றைய நாளை மகிழ்வுடனே கழித்தனர் புதுமணத் தம்பதியர்.