வஞ்சிக்கொடியின் வசீகரனே – 14
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 14
“என்னைத் தொட்டு பேசாதே! எனக்குக் கம்பளிப்பூச்சி ஊர்வது போல அருவருப்பா இருக்கு…” என்று கோபத்துடன் சொன்ன மனைவியைச் சில நொடிகள் மட்டுமே அயர்ந்து போய்ப் பார்த்தான் ராகவ்.
பின்பு ‘ஏன் திடீரென இவளுக்கு இவ்வளவு கோபம்?’ என்ற யோசனையுடன் பார்த்தான்.
யோசனையின் முடிவில் தான் தன் நண்பர்களுடன் உரையாடியது ஞாபகத்தில் வர ‘நான் அவனுங்க கிட்ட நிறைய விஷயம் பேசினேன். அதில் எந்த விஷயத்துக்கு இவ கோபப்படுறா? ஒரு வேளை விஷயமே இல்லாம அவனுங்க கூடப் பேசினதுக்கே கோபப்பட்டு உட்கார்ந்து இருக்காளா?’ என்று குழம்பி போனான்.
ஆனால் ஒன்றும் பிடிபடாமல் போக, இப்போது மனைவியின் கோபமே பிரதானமாகத் தெரிய அவளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினான்.
“அட! மௌனராகம் டைலாக்கு…” என்று நக்கலாகச் சிரித்தவன், “டைலாக் விடுறதுதான் விடுற புது டைலாக்கா விடுமா. அதர பழசான டைலாக் விடாதே…” என்று கிண்டலடித்தவன் அதற்கு மேல் அவளிடம் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான்.
“ஆமா, இவனுக்குப் புது டைலாக் வேற யோசிச்சு சொல்லுவாங்க. உனக்கு இந்த டைலாக்கே போதும் போடா…” வெளியே சென்றவனைப் பார்த்துக் கத்தினாள்.
அவள் கத்தியது காதில் விழுந்தும் திரும்பி பார்க்காமல் நடந்தவன் ‘உனக்கு எல்லாம் நோ பேச்சு ஷாம்பு. இன்னைக்கு நான் கொடுக்கப் போற ஷாக் ட்ரீட்மென்ட்ல இனி கம்பளிப்பூச்சி என்ற வார்த்தையே உன் வாயில் இருந்து வரக் கூடாது’ என்று நினைத்துக் கொண்டே வீட்டின் கதவை திறந்து வெளியே சென்றான்.
மீண்டும் அவன் அறைக்குள் வந்த போது அவன் கையில் ஒரு சிறிய டப்பா இருந்தது. அவன் வரும் வரையில் கோபமாக இருந்தவள் சுருண்டு படுக்கையில் படுத்திருந்தாள்.
அவள் முகம் திரும்பி இருந்த பக்கம் சென்று நின்றவன் “ஹேய் ஷாம்பு! எழுந்திரு..!” என்று அதட்டி அழைத்தான்.
அவளிடம் ஷாம்புவின் பெயர் காரணம் சொல்லிவிட்டதால் அவளை அதன் பிறகு கேலியாக ஷாம்பு என்று அழைத்தே வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்.
தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தவள் அவன் குரல் காதில் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. அவனின் ஷாம்பு என்ற அழைப்பில் உள்ளுக்குள் பல்லைக் கடித்த படி படுத்திருந்தாள்.
அவனும் சிறிது நேரம் நின்று அவளின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.
அவளிடம் சிறிதும் மாற்றம் இல்லாமல் போக, “சரிதான்! தூங்குறவங்க மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியுமா என்ன? நீ எழுந்துக்கலைனா பரவாயில்லை. நான் செய்யப் போற டெஸ்டுக்கு நீ படுத்து இருப்பது தான் இன்னும் வசதி…” என்று கேலி குரலில் சொன்னான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அதற்கு மேலும் படுத்திருப்பாளா என்ன?
‘அப்படி என்ன செய்யப் போகின்றான்?’ என்று பதறி, அலறி அடித்துக் கொண்டு பட்டெனக் கண்களைத் திறந்தாள்.
அவள் கண்களைத் திறந்த வேகத்தைப் பார்த்து அவனுக்குச் சத்தம் போட்டுச் சிரிக்கத் தோன்றியது. ஆனால் அடக்கிக்கொண்டவன் கோபத்துடன் “ம்ம்… எழுந்துரு…” என்றான் உறுமலாக.
“என்ன செய்யப் போறீங்க?” என்று அவனைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.
‘அட…! மிரட்டின மிரட்டலுக்கு ஒருமை போய்ப் பன்மையே வந்துருச்சா? சூப்பர் ராகவ்! இப்படியே மெயின்டெயின் பண்ணு…’ என்று தனக்குத் தானே தோள் தட்டிக் கொண்டவன், மனைவியின் கேள்விக்குப் பதிலாக,
“அதுவா…?” என்று இழுத்தவன் தன் கையிலிருந்த சின்ன டப்பாவை அவளின் முன் நீட்டினான்.
டப்பா மூடியிருந்ததால் ஒன்றும் தெரியாமல் போக, “என்ன இருக்கு அதுல?” என்று சந்தேகத்துடன் கேட்டாள்
“நீயே திறந்து பார்…” என்று அந்த டப்பாவை கொடுக்க… ‘பயபுள்ள நமக்குக் கிப்ட்டு எதுவும் வாங்கிட்டு வந்திருச்சோ? இவன் அப்படி வாங்கிக் கொடுக்கிற ஆள் இல்லையே…’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாலும் ‘அப்படி என்னத்தைத் தரப் போகிறான்?’ என்ற ஆர்வம் மிகுதியாக இருக்க, அந்த டப்பாவை மெல்ல கையில் வாங்கினாள்.
“திறந்து பார்…!” என்று அதிகாரமாகச் சொன்னான்.
‘இவனோட அதிகாரத்தில் தீயை வைக்க’ என்று கருவியவள் கருப்பு நிறத்தில் இருந்த அந்தச் சிறிய டப்பாவை திறந்தாள்.
திறந்து பார்த்த அடுத்த நிமிடம் “ஐய்ய… ச்சீ…ச்சீ…” என்று அருவருப்புடன் தூக்கி எறிந்தாள்.
“கருமம்… கருமம்… எதுக்குடா இந்தக் கருமத்தை எடுத்துட்டு வந்த?” என்று அருவருப்புடன் கேட்டாள்.
‘என்னடா ராகவ் இது? பன்மை போய் இப்போ ‘டா’க்கு தாவிருச்சு… ம்ம்… இதைச் சும்மா விடக் கூடாதே…’ என்று நினைத்துக் கொண்டவன்,
“ஹேய்! என்ன இப்படி டக்குனு தூக்கிப் போட்டுட்ட? இதை எடுத்துட்டு வர நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டே அங்கே மேஜையின் மீதிருந்த ஒரு செய்தித்தாளை எடுத்து அவள் தூக்கி போட்டதால் தரையில் ஊர்ந்து போய்க்கொண்டிருந்த கம்பளிப் புழுவை அந்தத் தாளில் ஏற வைத்தான்.
அவன் மீண்டும் கையில் எடுக்கவும் “ஏய்! அதை ஒழுங்கா வெளியே தூக்கி போடுங்க…” என்று பதறி கட்டிலில் ஏறி கால்களைக் கட்டிக் கொண்டு பயந்து அமர்ந்து விட்டாள்.
“வெளில தூக்கி போடவா இதை எடுத்துட்டு வந்தேன்?” என்று கேட்டவன் அதை எடுத்துக்கொண்டு மீண்டும் அவளின் அருகில் வந்தான் .
“அய்யோ! பக்கத்துல கொண்டு வராதேடா… தூக்கிப் போடு அந்தப் பக்கம்…” என்று கத்தினாள்.
அவளுக்கு இருந்த பயத்தில் ஒருமை, பன்மை, டா எல்லாம் கலந்து கட்டி அவளின் நாவில் நாட்டியம் ஆடியது.
அவளின் கத்தலை கொஞ்சமும் சட்டை செய்யாமல் “நீ கம்பளி பூச்சி ஊர்வது போல இருக்குனு சொன்னதும் கம்முனு கேட்டுகிட்டு போறதுக்கு நான் என்ன மௌனராகம் மோகன்னு நினைச்சியா? ராகவ்மா ராகவ்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு டைலாக் விட்டாயே, எங்க அதைத் திருப்பிச் சொல்லு…” என்று நிதானமாகக் கேட்டான்.
“என்ன டைலாக்?” தன் முகத்திற்கு நேரே அவன் காட்டிய கம்பளிப் புழுவைப் பார்த்ததில் அவள் என்ன சொன்னாள் என்பதையே மறந்து போயிருந்தாள்.
“என்னம்மா, அதுக்குள்ள மறந்துட்டியா? உன் கண்ணு முன்னாடி காட்டிக்கிட்டு இருக்கேனே, இந்தப் பூச்சியைப் பற்றித் தானே என்னமோ சொன்ன?” என்று கேட்டவன் அவளின் முகத்திற்கு நேரே செய்தித்தாளில் இருந்த கம்பளிப் புழுவை இப்படியும், அப்படியுமாக அசைத்துக் காட்டினான்.
அந்தப் புழு எங்கே கீழே விழுந்து விடுமோ என்று பதறியவளுக்கு ‘அவன் தொடுவது கம்பளிப்பூச்சி ஊர்வது போல இருப்பதாகச் சொன்னது’ ஞாபகத்தில் வந்தது.
ஞாபகம் வந்ததும் ‘அடப்பாவி…!’ என்று அதிர்ந்து வாயில் கையை வைத்தாள்.
அவளின் முகப் பாவனையைப் பார்த்து “என்ன ஞாபகம் வந்திருச்சு போல இருக்கு? எங்க அந்த டைலாக்கை திருப்பிச் சொல்லு…” என்று கேட்டான்.
“ஏன் சொன்னா என்ன செய்வீங்க?” என்று கண்ணில் பயத்துடன் கேட்டாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“நீ சொல்லு… அப்புறமா நான் ப்ராட்டிகலா செய்து காட்டுறேன்…” என்றான்.
‘கம்பளிப்பூச்சி ஊர்வது போல் செய்து காட்டப் போகின்றானா?’ என்று பயந்து அலறியவள் கட்டிலை விட்டு இறங்கி துள்ளிக் குதித்து அந்தப் பக்கம் சென்று நின்று கொண்டாள்.
அவள் துள்ளிக்கொண்டு ஓடியதைப் பார்த்து அவனுக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வரப் பார்த்தது. ஆனால் உள்ளுக்குள் அதை அப்படியே போட்டு அமுக்கியவன் வெளியே முகத்தை விறைப்பாக வைத்திருந்தான்.
முகத்தைக் கடுமையாக்கி கொண்டு “நீ ஓடினால் நான் விட்டு விடுவேனா? ஒழுங்கா பக்கத்தில் வந்து அப்போ சொன்ன டைலாக்கை சொல்லிக் காட்டு…” என்று அதட்டினான்.
“அடப்பாவி! தெரியாம ஒரு டைலாக் பேசினதுக்கு நீ நிஜமாவே கம்பளிப்பூச்சி கொண்டு வந்து மேல விடுவியா?” என்று கத்தினாள்.
“பின்ன, புருஷன்காரன் தொட்டா கம்பளிப்பூச்சி ஊர்வது போல் இருக்குன்னு நீதானே சொன்ன? அதான் ஒரு டெஸ்ட் செய்து பார்த்துருவோம். இப்போ நான் இந்தக் கம்பளிப்பூச்சியை உன் மேல விடுவேனாம். அது உன் மேல ஊர்ந்து போகும் போது உனக்கு எப்படி இருக்குன்னு சரியா உணர்ந்து சொல்லணும். அப்புறம் நான் உன்னைத் தொட்டுக் காட்டுவேனாம். நான் தொடும் போது உனக்கு எப்படியிருந்தது? எப்படிப் ஃபீல் பண்ணினனு உணர்ந்து சொல்லணும். எங்க டெஸ்ட்டை ஆரம்பிப்போமா?” என்று கேட்டுக் கொண்டே அவளின் அருகில் செல்ல கட்டிலை சுற்றி நடக்க ஆரம்பித்தான்.
அவனின் பரிசோதனை முறையைக் கேட்டு அவள் அரண்டே போனாள்.
ஆனாலும் இவனிடம் தான் இறங்கிப் போவதா என்று நினைத்தவள் “கம்பளிப் பூச்சினு சொன்னா இப்படிப் பூச்சியைக் கொண்டு வந்துருக்க… உன்னை எருமைனு திட்டினா எருமையை விட்டு உரச விடுவியா? கழுதைன்னு சொன்னா கழுதை கூட்டிட்டு வருவியா?” என்று அவனின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்றே கேட்டுப் பேச்சை வளர்த்தாள்.
“கண்டிப்பா செய்துருப்பேன் ஷாம்பு. அதையும் கொண்டு வந்து உன் மேல உரசவிட்டு அது உன்னை உரசும் போது நீ எப்படி உணர்ந்த? நான் உரசும் போது எப்படி உணர்ந்தனு ஒரு பிராட்டிகல் நடத்தியிருப்பேன்…” என்று கண்களைச் சிமிட்டினான்.
‘அடப்பாவி! எப்படிச் சொன்னாலும் நம்மளை தலைகீழாகக் கவுத்தி விடுறானே’ என்று உள்ளுக்குள் கடுகடுத்தவள் “அப்போ உன்னை டைனோசர்னு திட்டியிருந்தா என்னடா பண்ணிருப்ப?” இதற்கு அவனால் பதில் சொல்ல முடியாதே என்ற மிதப்புடன் கேட்டாள்.
அவளைப் பார்த்துக் கண்களால் சிரித்தவன் உதட்டில் கோணல் சிரிப்பை உதிரவிட்டு “உன் புருஷனை என்னனு நினைச்ச? டைனோசரையும் கொண்டு வந்து டெஸ்ட் பண்ணி பார்ப்பேன்…” என்றான்.
“வாட்! என்ன சொல்றீங்க? அது எப்படி முடியும்?” டைனோசரே இல்லாத நிலையில் எங்கிருந்து இவன் அதைக் கொண்டு வருவான் என்பது போல அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
“ஏன் முடியாது? அதெல்லாம் தாராளமா முடியும்…!” என்று அழுத்தமாகச் சொன்னான்.
“சும்மா உளறாதே! உலகத்தில் இல்லாத ஒன்னை கொண்டு வர முடியும்னு நீ சொன்னா நம்புறதுக்கு நான் என்ன முட்டாளா?”
“நீ முட்டாளே தான்டி பொண்டாட்டி. உன்னைப் பயமுறுத்த இத்துனூண்டு இந்தக் கம்பளிப் பூச்சியாலயே முடியும் போது, உன்னைப் பயமுறுத்த ஒரு பொம்மை டைனோசர் பத்தாது. பொம்மையா இருந்தாலும் அதோட உருவத்தைப் பார்த்தே பயந்து அலற மாட்ட?” என்று கேலியுடன் கேட்டான்.
“ஹா! சரிதான் போடா! பொம்மைக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்…” என்று அலட்சியத்துடன் சொன்னாள்.
“ஓகோ! அப்படியா?” என்று நம்பாமல் சிரித்தான்.
“ஆமா…” இன்னும் அவள் அலட்சியமாகத் தலையைச் சிலுப்பினாள்.
“அப்போ அன்னைக்கு உன் பிரண்ட்ஸ் கூட அந்த மால் எண்டரன்ஸ்ல கண்காட்சிக்காக நிறுத்தி வைத்திருந்த டைனோசர் மாடலை பார்த்து நீ பயப்படவே இல்லை. அப்படித்தானே?” நக்கல் அதிகமாகவே வழிந்தோடியது அவனின் குரலில்.
‘அடப்பாவி! அதை எப்போ இவன் பார்த்தான்?’ என்பது போல நினைத்தவளுக்கு அன்றைய நிகழ்வு மனதில் ஓடியது.
மக்களைக் கவர அந்தப் புகழ் பெற்ற வணிக வளாகத்தில் ஐந்து விதமான டைனோசர் பொம்மைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதில் ஒரு குட்டி டைனோசர் பொம்மையும் இருந்தது. மக்கள் தொட முடியாத அளவில் தடுப்புப் போடப்பட்டிருக்க, குட்டி டைனோசர் பொம்மை அருகில் தடுப்புக்கு இந்தப்பக்கம் நின்று புகைப்படம் எடுக்க வசதி செய்யப்பட்டிருந்தது.
சம்பூர்ணா தோழிகளுடன் சென்றவள் ஆவலுடன் டைனோசர்களின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.
குட்டி டைனோசரின் அருகில் புகைப்படம் எடுத்துவிட்டு சுற்றும், முற்றும் காவலாளி இருக்கிறாரா என்று பார்த்தவள் யாரும் கண்ணில் படவில்லை என்றதும் மெதுவாக அதைத் தொட்டுப் பார்த்தாள்.
அவள் தொடாத வரை ஆடாமல் அசையாமல் இருந்த டைனோசர் அவள் தொட்டவுடன் தலையையும், உடலையும் வேகமாக அசைக்க ஆரம்பித்தது.
அதில் பயந்து அலற போனவள் கடைசி நிமிடத்தில் கையைக் கொண்டு வாயை பொத்தி கத்தலை வாய்க்குள்ளயே அடக்கி கொண்டாள்.
கண்ணில் நிறைந்த பயத்துடன் அசைந்து கொண்டிருந்த டைனோசரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது பின்னால் இருந்து அவளின் தோழி அவளை அழைக்க, அதைக் கூடக் காதில் வாங்காமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் அப்படி நிற்பதை பார்த்து அருகில் வந்த அவளின் தோழி “பூர்ணா வா போகலாம். ஏன் இப்படி நிற்கிற?” என்று தோளை பிடித்து அசைத்து அழைத்தாள்.
“டைனோசர் அசையுதுடி…” அவள் போட்டு உலுக்கியதில் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்து சொன்னாள்.
“ஆமா அசையுது. அதுக்கென்ன?” என்று சாதாரணமாகக் கேட்ட தோழியை வியந்து பார்த்தாள்.
“உயிரோட வர போகுதுடி…” என்று பூர்ணா சொல்ல அவளின் தோழி தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
“மக்கு, அது கரண்ட் மூலமா அசையுற செட்டிங் வச்சுருக்காங்க. அதான் அசையுது. நாம வரும் போது கரண்ட் ஆன் பண்ணலை. இப்போ தான் போட்டு விட்டுருக்காங்க. இது தெரியாம பயந்துக்கிட்டு இருக்க…” என்று கேலியாகச் சொன்னவள் மற்ற தோழிகளிடமும் சொல்ல போனாள்.
‘அவ்வளவு தானா?’ என்று ஆசுவாச பெருமூச்சு விட்டவள் தோழிகளுடன் நடந்தவள் திரும்பி ஒரு முறை அந்த டைனோசரை பார்த்து விட்டே சென்றாள்.
இது ராகவ்வை அவள் பேருந்தில் வைத்து சந்திப்பதற்கு முன் நடந்தது.
‘அப்போ அதுக்கு முன்னாடியே இவன் என்னைப் பார்த்து இருக்கானா?’ என்று யோசனையுடன் அவனைப் பார்க்க, அவளின் யோசனையை நீள விடாமல் அருகில் வந்த ராகவ் “ஹ்ம்ம்… உன் கையை நீட்டு டெஸ்ட் பண்ணனும்…” என்றான் மிரட்டலாக.
அந்த யோசனையை அப்படியே விட்டவள் “ஹேய்! விளையாடாதீங்க வசீ…” என்று கத்தினாள்.
‘வசீயா? என்னடா இது யாரை சொல்றா? என்னையவா? என் பேரில் எங்கிருந்து வசீ வந்தது? பயத்தில் எதுவும் உளர்றாளா?’ என்று புரியாமல் பார்த்தான்.
ஆனால் அதை மேலும் யோசிக்க முடியாமல் செய்தித்தாளில் இருந்த புழு நழுவ பார்க்க அதை நேராகப் பிடித்தவன் “யார் விளையாடுறா? சீரியஸா சொல்றேன். கையை நீட்டு…” முகத்தில் செய்தே தீருவேன் என்ற பிடிவாதத்துடன் சொன்னான்.
அவனின் பிடிவாதத்தைப் பார்த்து சரண்டர் ஆகாமல் இவனிடமிருந்து தப்பிக்க முடியாது போலயே என்று நினைத்தவள் “எப்பா சாமி, புருஷா! தெரியாம சொல்லிட்டேன். என்னை விட்டுருங்க. சாரி…” என்று மன்னிப்பு கேட்டாள்.
“ம்கூம்… உன் சாரியை நீயே உன் இடுப்பில் சொருகிக்கோ…” என்று அசால்ட்டாகச் சொல்லிவிட்டு, “அப்படியெல்லாம் விட முடியாது. இன்னைக்கு நான் இந்த டெஸ்ட் செய்தே தீரணும்…” என்று பிடிவாதமாகச் சொன்னவன் இன்னும் நெருங்கி அவளின் கையைத் தானே பிடிக்கப் போனான்.
அதில் மிரண்டவள் சுவற்றோடு ஒன்றிய படி இருந்தவள், தாளில் நெளிந்து கொண்டிருந்த புழுவை பார்த்தவளுக்கு அருவருப்பு வர, அவனின் முயற்சியில் இருந்து தப்பும் மார்க்கம் அறியாது விழித்தவள்,
“ப்ளீஸ்… ப்ளீஸ்… வேண்டாம்… நான் தான் தெரியாம சொல்லிட்டேன்னு சொல்றேன் இல்லை…” என்று மன்னிப்பு கேட்டவளுக்கு எங்கே அவன் தன் மேல் விட்டுவிடுவானோ என்ற பயத்தில் கண்கள் கலங்கவே ஆரம்பித்து விட்டது.
அவ்வளவு நேரம் அவளை மிரட்டிக் கொண்டிருந்தவன் அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்கவும் அப்படியே நின்று விட்டான். அவள் ‘ப்ளீஸ்’ என்றாலே விட்டுக் கொடுப்பவன், கண்ணீரை பார்த்த பிறகு இறங்காமல் இருப்பானா என்ன?
மிரட்சியுடன் அவளின் முகம் இருக்க, கண்களில் கண்ணீர் தேங்க அவள் இருந்த நிலையைப் பார்த்து இறங்கி வந்தவன்,
“இந்த ஒரு தடவை மன்னிச்சு விடுறேன். இனி நீ இப்படிச் சொன்னா இப்படிப் பொய்யா காட்டி மிரட்ட மாட்டேன். நிஜமாவே மேல போட்டுருவேன்…” என்று எச்சரித்து விட்டு கம்பளிப் புழுவை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
‘ஹப்பா! போய்ட்டான்டா சாமி…” என்று நிம்மதி மூச்சு விட்டுக் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள்.
சிறிது நேரத்தில் அவன் வரும் அரவம் கேட்க, கட்டிலில் நன்றாக ஏறி அமர்ந்தவள் கால்களைக் கட்டிக் கொண்டு முகத்தைக் காலில் கவிழ்த்துக் கொண்டாள்.
உள்ளே வந்தவன் படுக்க ஆயத்தம் ஆகிக்கொண்டே அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்து “என்ன படுக்கலையா சம்மூ?” என்று ஒன்றுமே நடவாதது போல நல்ல பிள்ளையாகச் சாந்தமாகக் கேட்டான்.
அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, அவள் அமர்ந்திருக்கும் காரணத்தை ஊகித்தவன் “கம்பளிப் பூச்சிவை உன் மேல விட மாட்டேன். பயப்படாம படு…” என்றான் மென்மையான குரலில்.
அவனின் குரலே அவன் செய்ய மாட்டான் என்ற உறுதியை தர வேகமாகப் படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
அவளின் வேகத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே தானும் படுக்கையில் விழுந்தான்.
சிறிது நேரத்திலேயே இருவரும் அயர்ந்து உறங்கி விட, நல்ல உறக்கத்திலிருந்த சம்பூர்ணா திடீரென அலறி எழுந்து அமர்ந்தாள்.
அவளின் அலறல் கேட்டு திடுக்கிட்டு எழுந்த ராகவ் விளக்கை போட்டுவிட்டு என்னவென்று பார்க்க, “ச்சீ…ச்சீ…” என்று சொல்லிக்கொண்டே தன் கையிலேயும், உடம்பிலேயும் தூசியைத் தட்டுவது போல் தட்டி விட்டுக் கொண்டிருந்தாள்.
அவளின் செய்கையைக் கண்டு “சம்மூ, என்ன? என்னாச்சு? என்னத்தைத் தட்டி விடுற?” என்று பதட்டத்துடன் கேட்டு அவளின் தோளை தொட்டு தன் பக்கம் திருப்பினான்.
அவளோ அவனின் கையையும் வேகமாகத் தட்டி விட்டு மீண்டும் தன் உடலை தட்டி விட்டுக் கொண்டாள்.
“ஹேய்! என்னமா? என்ன?” என்று மனைவியின் செயல் புரியாமல் முழித்தவன் அவளின் முகத்தைப் பார்க்க அவளோ இன்னும் தூக்கத்தில் இருப்பவள் போலக் கண்களை இறுக மூடியிருந்தாள்.
அவள் தட்டி விட்டுக் கொள்வதும், கண்களல இறுக மூடியிருந்ததும் ஏதோ புரிய வைக்க, ‘அட! பயந்தாக்கொள்ளி ஷாம்பு! வாய் தான் கோலி உருண்டையை டப்பாக்குள்ள போட்டு குலுக்கின மாதிரி லொட லொடன்னு பேசுது. இம்புட்டுப் பயத்தை வைச்சுக்கிட்டு இவ எல்லாம் வெத்து சவடால் விடாட்டி என்ன?’ என்று நினைத்துக்கொண்டே அவளின் கன்னத்தில் லேசாகத் தட்டினான்.
அவன் தட்டவும் கண்ணைத் திறந்து மலங்க மலங்க விழித்தவள் அவனைப் பயத்துடன் பார்த்து “கம்பளிப் பூச்சியை என் மேல விடாதீங்க வசீ…” என்று கெஞ்சலாகச் சொன்னாள்.
‘வசீயா…? அப்போ எனக்குத் தான் புதுப் பேரு வச்சுருக்காளா? இத்தனை நாளில் அவனின் பெயரை சொல்லி ஒரு நாளும் அவள் அழைத்தது இல்லை. ஒருவேளை தன் மீதான கோபத்தில் அப்படியோ என்று நினைத்திருக்கின்றான். ஆனால் அவள் புதிதாக ஒரு பெயரை தனக்கு வைத்திருப்பாள் என்பது கொஞ்சம் கூட அவன் எதிர்பாராதது.
ஆனால் அதைப் பற்றிய விளக்கம் மனைவியிடம் கேட்பதை விட இப்போது அவளின் பயத்தைப் போக்குவதே முக்கியமாகப் பட, “சரி விடலை… ஏதோ கனவு தான் கண்டுருக்க. உன் மேல பூச்சி எதுவும் இல்லை. படுத்துக்கோ…” என்றான் இதமாக.
“நிஜமாவே விட மாட்டீங்களா?” என்று குழந்தை போலக் கேட்க, அதை ரசித்துப் பார்த்தவன் ‘என் சம்மூ… அழகு பேபி நீ…’ என்று மனதில் கொஞ்சிக் கொண்டே அவளை மெல்ல தன் பக்கம் இழுத்து இதமாக அணைத்துக்கொண்டான்.
அவளும் வேறு எதைப் பற்றியும் நினைக்காமல் அவனின் அணைப்பில் அடங்கினாள்.
அவளின் முதுகில் இதமாக வருடியவன் “சம்மூ, இப்போ நான் உன்னைத் தொடுவது கம்பளிப் பூச்சி ஊர்வது மாதிரி இருக்கா?” என்று அவளின் காதின் ஓரம் கிசுகிசுப்பாகக் கேட்டான்.
அவனின் இதமான அணைப்பும், மென்மையான வருடலும், கிசுகிசுப்பான பேச்சும் அவளுக்குப் புரியாத உணர்வை தந்ததே தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.
அந்த மயக்கத்தில் அவள் பதில் சொல்லாமல் இருக்க “ஹ்ம்ம்… சொல்லு சம்மூ…” அவளின் காதில் உதட்டை உரசிக் கொண்டே கேட்டான்.
அதில் காது மட்டுமில்லாமல் மேனியே கூசி சிலிர்த்தவள், இல்லை என்பதாகத் தலையசைத்து அவனின் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
“அப்புறம் ஏன் அப்படிச் சொன்ன சம்மூ? அந்தப் பூச்சியை நீ பார்த்து எவ்வளவு அருவருப்புப் பட்ட. அது பார்க்கவே முள்ளு முள்ளா ஒரு அருவருப்பைக் கொடுத்தது தானே? அப்படி ஒரு பூச்சி கூட என் தொடுகையை நீ கம்பேர் பண்ணியது எனக்கு எவ்வளவு வலிச்சுருக்கும்?” என்று மெல்லிய குரலிலேயே கேட்டான்.
கணவனின் கேள்வி அவளைத் தாக்க அவனின் மார்பில் இருந்து முகத்தைத் தூக்கி அவனைப் பார்த்தாள்.
மனைவியின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து அவளின் கன்னங்கள் இரண்டிலும் கை கொடுத்து தாங்கியவன் “எனக்கு வலிச்சது சம்மூ. நீ என்னை மன்மதனா பார்க்க வேண்டாம்… ஒரு மனுஷனா பாருன்னு தான் சொல்றேன்…” என்று அவளின் கண்களைப் பார்த்துச் சொன்னான்.
அவன் சொன்னது போல் அவனின் வலியை கண்களிலும், குரலிலும் கண்டவளுக்குத் தான் சொன்ன வார்த்தையின் வீரியம் புரிய “ஸாரி…” என்று முணுமுணுத்தவள் அமைதியாக நகர்ந்து சென்று படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
அவனும் எதுவும் சொல்லாமல் படுத்தவன், தன் பக்கமாகத் திரும்பியிருந்த அவளின் முகத்தைப் பார்த்தான்.
மூடிய விழிகளுக்குள் அவளின் கருவிழிகள் அலைபாய்ந்து கொண்டிருப்பது தெரிய, மனைவியின் அருகில் இன்னும் நெருங்கி படுத்துப் படுக்கையில் இருந்த அவளின் கையை எடுத்து தன் மேல் சுற்றிப் போட்டுக்கொண்டான்.
அவள் கையை உருவி கொள்ளப் பார்க்க, “ஷ்ஷ்… சம்மூ இருக்கட்டும். எதைப் பற்றியும் யோசிச்சு மனசைப் போட்டு குழப்பிக்காம அமைதியா தூங்கு…” என்றவன் தானும் அவளின் மீது கையைப் போட்டு அவளின் முதுகில் இதமாகத் தட்டி கொடுத்தான்.
அதில் அலைப்புறுதல் குறைந்து கண்ணயர்ந்தாள் சம்பூர்ணா.