வஞ்சிக்கொடியின் வசீகரனே – 11

அத்தியாயம் – 11

கொடி போன்ற இடுப்பை வளைத்து நின்றது நின்றபடி இருந்த சம்பூர்ணா கணவன் தன் பக்கம் நெருங்கி வரவும் நேராக நிமிர்ந்து நின்றாள்.

‘ஐயோ பார்த்துட்டான்! பார்த்துட்டான்!’ என்று வழக்கம் போல மனது அலற ஆரம்பித்தது.

‘ப்ச்ச்! நீ என்ன அந்த டைலாக்கை குத்தகைக்கா எடுத்துருக்க? சும்மா அதையே சொல்லிக்கிட்டு’ மனதோடு சலித்துக் கொண்டாள் சம்பூர்ணா.

‘நீ செய்ற இந்தக் கூத்துக்கெல்லாம் அந்த டைலாக் தான் பொருத்தமா இருக்கு. நான் என்ன செய்ய? நீயும் மாற மாட்ட. அவனும் உன்னைக் கையும், களவுமா பிடிக்கிறதை விடவும் மாட்டான். இரண்டு பேரும் மாத்தி, மாத்தி ஒரே வேலையைச் செய்துட்டு இருந்தா நானும் என்ன தான் செய்ய முடியும்?’ மனது சல்லடை இல்லாமலேயே சலித்துக் கொண்டது.

‘ஏய்! சும்மா கிட! புருஷன் பக்கத்தில் வந்துட்டான்…’ என்று மனதை அடக்கினாள் சம்பூர்ணா.

அவனின் கூர்ந்த பார்வையில் அவளின் முகம் பதட்டத்தைத் தத்தெடுக்க ஆரம்பித்தது.

அவளை நெருங்கி வந்தவன் “ஏன் பொய் சொன்ன?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

கணவன் தன்னைக் கேலி செய்வானோ என்று நினைத்து அவள் நின்று கொண்டிருக்க, அவனோ தீவிரமாகக் கேள்வி கேட்கவும் குழம்பிப் போய் அவனைப் பார்த்தாள்.

“நான் என்ன பொய் சொன்னேன்…? நான் எதுவும் சொல்லலை…”

“இல்ல நீ பொய் சொன்ன. அதுவும் எங்க அம்மாகிட்ட நீ பொய் சொல்லியிருக்க. உனக்கு என்ன தண்டனை தரலாம்…?” என்றவன் இன்னும் அவளை நெருங்கினான்.

“அத்தை கிட்டயா? அத்தைகிட்ட நான் ஒன்னும் பொய் சொல்லலை. சும்மா ஏதாவது உளறாதீங்க…” என்று கடுப்புடன் சொன்னாள்.

அவன் பொய் சொன்னாய் என்று குற்றம் சொல்லவும் அவன் இன்னும் நெருங்கி வந்ததைக் கணக்கில் எடுக்காமல் விட்டாள்.

பதட்டத்துடன் இருந்தவளை சுவரின் ஓரம் லேசாகத் தள்ளி அவளின் இருபக்கமும் கைகளை ஊன்றி நின்றான்.

அவன் அப்படி நிற்கவும் மூச்சடைத்தது பூர்ணாவிற்கு.

“இப்ப ஏன் இவ்வளவு பக்கத்தில் வந்து நிக்கிறீங்க? தள்ளிப் போங்க…!” என்று சத்தமாகக் கூடச் சொல்ல முடியாமல் பதட்டத்தில் மெதுவாக முனங்கினாள்.

“நீ ஏன் பொய் சொன்னனு சொல்லு. அப்புறமா நான் போறேன்…”

“நான்தான் பொய் சொல்லலைன்னு சொல்றேன்ல…”

“நீ பொய் சொன்ன. என்ன பொய் தெரியுமா? ஒல்லியாக அம்மா டிப்ஸ் கேட்டதுக்குத் தெரியாதுனு சொல்லியிருக்க…” என்று சொன்னவன் பக்கென்று சிரித்து விட்டான்.

“நீ இதைச் சொல்லாம விட்டதே நல்லது. உன்ன மாதிரி அம்மா ஆடுறதை நினைச்சு கூடப் பார்க்க முடியலை…” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.

“அத்தையைக் கேலியா செய்றீங்க? இருங்க அத்தை கிட்ட உங்கள பத்தி போட்டு கொடுக்கிறேன்…”

“நீ என்ன போட்டுக் கொடுக்கிறது? நானே அம்மாகிட்ட சொல்லுவேன். உங்க மருமக மாதிரி எல்லாம் உங்களால ஆட முடியாது மாம். அதனால அவகிட்ட டிப்ஸ் கேட்டு மாட்டிக்காதீங்கனு சொல்லுவேன்…” என்று சொல்லி வாய்விட்டு மீண்டும் சிரித்தான்.

“போதும் என்னைக் கேலி செய்தது. தள்ளிப் போங்க…” என்று அவனின் நெஞ்சில் கையை வைத்து தள்ளினாள்.

ஆனால் சிறிதும் அசையாதவன் சுவரில் இருந்த ஒரு கையை எடுத்து மெல்ல அவளின் இடுப்பில் வைத்தான்.

இன்னொரு கையால் அவளின் காதில் மாட்டியிருந்த இயர் ஃபோனை எடுத்து தன் காதில் மாட்டினான்.

காதில் ஒலித்த பாடலில் அவனின் புருவங்கள் மேலேறியது.

டாடி மம்மி வீட்டில் இல்லை…
தடை போட யாருமில்லை…
விளையாடுவோமா உள்ளே வில்லாளா…

என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

“உன் டாடி, மம்மி வீட்டில் இருக்கும்போதே இப்படி ஒரு பாட்டுக்கு ஆட்டமா? அதுவும் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக. ம்ம்ம்…” என்றவன், “உனக்குள்ள இப்படி ஒரு டான்ஸ் திறமை இருக்குனு எனக்குத் தெரியாம போயிருச்சே. உன்னோட நடை, உடை, பாவனை எல்லாம் வச்சு உன்னை ரொம்ப அடக்க ஒடுக்கமான பொண்ணுன்னு தப்பு கணக்குப் போட்டுட்டேன்.

ஆனா உனக்குள்ள ஒரு ஆட்டக்காரி அடம் பிடிச்சு உட்கார்ந்து இருக்காள்னு என்னால இத்தனை நாளில் கண்டு பிடிக்க முடியாமல் போயிருச்சே. இன்னும் என்னென்ன திறமையெல்லாம் எனக்குத் தெரியாம மறைச்சு வச்சுருக்க?” என்று கேட்டான்.

அவன் பேசும் போது அவனின் மூச்சுக் காற்றின் உஷ்ணம் அவளைத் தகிக்க வைக்க, இடையை அவன் பிடித்து அழுத்தியதில் மனம் அலற துடிக்க, இருவரின் உடலும் உரசாமலேயே உன்மத்தம் கொள்ளும் நிலையில் அவள் இருக்க, எங்கிருந்து அவனின் கேள்விக்கான பதிலை சொல்வது?

தள்ளி நின்று பேசும் போதே சொக்கி போகின்றவள், அவன் இவ்வளவு அருகில் எதிரே நின்று பேசும் போது அவளின் பெண்மனம் படும் பாட்டைச் சொல்ல வார்த்தைகளும் வேண்டுமோ?

கண்கள் சொருகி காதல் மயக்கம் வருவது போல் இருந்தாலும், நான் கல்லாகி நிற்கிறேன் என்பது போலக் கள்ளியவள் அவனின் கண்ணிற்குக் காட்சி கொடுக்கவே விரும்பினாள்.

அதனால் தன் மயக்கத்தைக் காட்டி கொள்ளாமல் வெளி பார்வைக்கு அலட்சிய பாவனையைக் காட்டி, “வேறென்ன? வேற எல்லாம் ஒண்ணுமில்லை…” என்றாள்.

“நீ இல்லைனு சொல்றதே இருக்குனு காட்டிக் கொடுக்குது. நீ சொல்லாட்டி என்ன? இனி என் கூடத் தானே இருக்கப் போற? உனக்குள் மறைஞ்சு கிடைக்கிறதை கூடத் தேடி கண்டு பிடிக்கிறேன்…” என்றவன் அவளின் கையைப் பிடித்துச் சுழற்றி “சிங்கிளா ஆடுவதை விட மிங்கிளா ஆடினால் தான் கிக்கா இருக்கும். சோ! இப்போ என் கூட ஒரு ஆட்டம் போடு வா…” என்று அழைத்தான்.

தன்னைச் சுழற்றிய நேரத்தில் அவனின் பிடி தளர்ந்ததை உணர்ந்தவள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வேகமாக அவனை விட்டு விலகி “இல்லை என்னால இப்போ ஆட முடியாது…” எனச் சொல்லிவிட்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று மீண்டும் கணவனின் கையில் சிக்காமல் குளியலறை நோக்கி ஓடினாள்.

அவளின் ஓட்டத்தைப் பார்த்து ராகவ்வின் அதரங்களில் புன்னகை அரும்பியது.

குளியலறைக்குள் நுழைந்த பூர்ணா மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கினாள்.

‘புருஷன் கூட ஆடணும்னு நீ தானே ஆசைப்பட்ட? இப்போ அவனே ஆட கூப்பிடும் போது இப்படி ஓடி வந்து ஒளிஞ்சுகிட்ட? அதுவும் நீ கல்யாணத்துக்கு முன்னாடி நினைச்சதை, உன் மனசில் புகுந்து பார்த்த மாதிரி சிங்கிள், மிங்கிள்னு டைலாக் வேற விடுறான்.’ என்று மனம் கேலி செய்து சிரித்தது.

“ஆடவா? அசைய கூட முடியல. அவன் இடுப்பை இறுக்கினதும் அப்படியே கட்டி போட்ட மாதிரி இருந்தது. அவனோட மூச்சு காத்து என் மேல வந்த போது என் மூச்சே நின்னது போல ஆகிருச்சு. அப்படியிருந்தும் எனக்கு எதுவும் பாதிப்பே இல்லைங்கிற மாதிரி காட்டிக்கிறது அதை விடக் கொடுமையா இருந்துச்சு. இந்த லட்சணத்தில் எங்க இருந்து ஆடுறது?” என்று நினைத்தவளுக்கு அவள் ஆடியதற்கான காரணம் நினைவு வர, வேகமாக வெளியே வந்தாள்.

அந்த அறையை நோட்டம் விட்டுக்கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ராகவ்வின் எதிரே வந்து நின்று “உங்களுக்கு எப்படி என்னோட வேலை விஷயம் தெரியும்?” எனக் கேட்டாள்.

அவள் கேள்வி கேட்ட சில நிமிடங்களுக்குப் பிறகும் ராகவ் எந்தப் பதிலும் சொல்லாமல் அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.

அவனின் பார்வையின் வீரியம் அவளை ஏதோ செய்ய, “ஏன் அப்படிப் பார்க்கிறீங்க?” எனத் தயக்கத்துடன் கேட்டாள்.

“உன் வேலை விஷயம் நீயே என்கிட்ட சொல்லியிருக்கணும்…” என்றான் அழுத்தமாக.

எப்போதும் அவனிடம் இருக்கும் விளையாட்டுத்தனம் மறைந்து அவனின் முகத்தில் இறுக்கம் குடிபுகுந்திருந்தது.

“நான் தான் சொல்லியிருக்கணும். ஆனா அதுக்குச் சரியான சந்தர்ப்பம் அமையலை…” கணவனின் முக மாற்றம் புரிந்தாலும் சாதாரணமாகவே சொன்னாள்.

“சந்தர்ப்பம் அமையலையா? இல்ல நீ சந்தர்ப்பத்தை அமைச்சுக்கலையா…?” என்று அழுத்தமாகக் கேட்டவனை இப்பொழுது அவள் ஒரு தினுசாகப் பார்த்தாள்.

ஆனாலும்…

“நம்ம கல்யாணம் அன்னைக்குத் தான் கம்பெனி மெயில் வந்தது. அன்னைக்குக் கல்யாண டென்ஷன். அதுக்குப் பிறகு காஞ்சிபுரம், அங்கே உங்க வீடு, உங்க அம்மா, அப்பா எல்லாமே எனக்குப் புதுசு. எப்படிச் சமாளிக்கப் போறோம்னு ஒரு மலைப்பு. இது எல்லாத்தையும் விட நீங்க…” என்று அவள் விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள்.

“நான் உனக்குப் புது ஆளா?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டான்.

“கண்டிப்பா! ஒரு மாசம் தினமும் போனில் பேசினாலும் நீங்க எனக்கு இன்னும் புதுசா தான் தெரியுறீங்க. போனில் பேசும் போது உள்ளதுக்கும், பக்கத்தில் நீங்க பேசும் போது உள்ளதுக்கும் உங்க கிட்ட பல வித்தியாசத்தை என்னால உணர முடியுது. அப்படியிருக்கும் போது உங்ககிட்ட சகஜமா இருக்க முடியலை. அதனால் தானே தவிர வேணும்னே சொல்ல கூடாதுன்னு நினைக்கலை…” என்றாள்.

“அப்படியா? ஆனா இந்த இரண்டு நாளில் நான் பேசியதற்கு எல்லாம் பதிலுக்குப் பதில் பேசின. அத்தனை பேச்சில் வேலை கிடைச்சுருச்சுன்னு ஒரு சின்னத் தகவல் சொல்ல மட்டும் பேச தயக்கமா இருந்ததுனு நீ சொல்றது நம்புற மாதிரி இல்லையே…” என்று சந்தேகமாக இழுத்தான்.

அவனின் பேச்சு அவளின் மீதான நம்பகமில்லாத்தன்மையை எடுத்துக் காட்ட மேலும் என்ன சொல்லி அவனைச் சமாளிக்க என்று புரியாமல் தடமாறி நின்றாள்.

ஆனாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தவள், “இதான் உண்மை. நீங்க என்னை நம்பலைனா நான் ஒன்னும் செய்ய முடியாது…” என்று வரவழைத்துக் கொண்ட அலட்சியத்துடன் சொன்னாள்.

அவள் அலட்சியத்துடன் சொல்ல, அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான் ராகவ்.

அந்தப் பார்வை அவளின் மனதையே ஊடுருவுவது போல இருக்க, “இன்னைக்குக் காலையில் காரில் வரும் போது அதைத் தான் சொல்ல நினைச்சேன். ஆனா நீங்க தான் என்னைப் பேசவே விடலை…” என்று மேலும் தன் பக்கத்தை விளக்க முயன்றாள்.

“நீ என்ன சொல்ல வர்றனு தெரிஞ்சு தான் நான் சொல்ல விடலை…” என்று ராகவ் அலட்சியமாகச் சொன்னான்.

“என்ன…?” அதிர்ந்து பார்த்தாள் சம்பூர்ணா.

இவ்வளவு நேரமாகத் தான் சொல்லாமல் விட்டதைப் பெரிய குற்றம் போல நினைத்துக் கேள்வி மேல் கேள்வி கேட்டவன், தான் சொல்ல வந்ததை வேண்டும் என்றே தடுத்திருக்கிறான் என்று தெரிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானாள்.

அது அவளிடம் கோபத்தை உண்டு பண்ண “நீங்களே சொல்ல விடாம செய்துட்டு அதென்ன எல்லாமே என் தப்பு போலச் சொல்றீங்க?” என்று கேட்டாள்.

“எனக்கு ஒரு உண்மையைச் சொல்லு சம்மூ… நீ காரில் வரும் போது என்கிட்டே வேலை கிடைச்ச விஷயத்தைச் சந்தோஷமா சொல்லணும்னு ஆர்வத்தில் சொல்ல வந்தியா? இல்லை வீட்டுக்குப் போனதும் உன் அப்பா கேள்வி கேட்டா என்ன செய்றதுன்னு பயந்து என்கிட்டே விஷயத்தைச் சொல்ல நினைச்சியா…?” என்று கூர்மையாகக் கேட்டான்.

அவனின் கேள்வியில் வாயடைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.

அவள் எங்கே சந்தோஷமாகச் சொல்ல நினைத்தாள்? தந்தைக்குப் பயந்து தானே உடனே சொல்லி விடத் துடித்தாள்.

“உன் அமைதியே சொல்லுது இரண்டாவது தான் காரணம்னு…” என்றான் கிண்டல் குரலில்.

பேச்சு தான் கிண்டலாக வந்ததே தவிர, அவனின் முகம் இறுக்கத்தையே வெளிப்படுத்தியது.

“நமக்குக் கல்யாணம் ஆகி இரண்டு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள இவ்வளவு அதிகாரமா?” என ஒரு மாதிரியான மரத்துப் போன குரலில் கேட்டாள்.

தான் சொல்லாத விஷயத்தைப் பெரிய விஷயமாக மாற்றித் தன்னைக் குற்றவாளி ஆக்குகின்றானே என்று நினைத்தவளுக்கு அவனின் கிண்டல் குரலும் தன்னைச் சீண்டுவதாகத் தோன்ற வைக்க அப்படிக் கேட்டு வைத்தாள்.

“அதிகாரமா? ஹா… ஹா…ஹா…! அன்புமா அன்பு! என் மனைவி என் மேல் அன்பு வச்சு, ஆர்வமா விஷயத்தைச் சொல்லாம விட்டதினால் வந்த ஆதங்கம்!

“நீ கம்பெனியில் வேற டீமா இருந்தாலும், உன் டீம் லீடர் எனக்குத் தெரிஞ்ச பிரண்ட். அவரும் நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்தார். உனக்கு அவரைத் தெரியாது. நீ கம்பெனியில் சேர்ந்த பிறகு தான் அவரைப் பார்ப்ப. ஆனா அவருக்கு உன்னோட டீடைல்ஸ் போயிருக்கு. என் பிரண்ட்கிறதால் உன் வேலை பற்றிய விவரம் சொன்னார். அப்ப இனி நீயும், நானும் ஒரே ஆபிஸ்னு எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா?

“ஆனா அந்தச் சந்தோசமான நேரத்திலேயும் எனக்கு இன்னொரு விஷயம் நினைவு வந்துச்சு. இரண்டு நாள் முன்னாடி தான் ஆர்டர் வந்ததுனா அப்போ நான் பொண்ணு பார்க்க வந்த பிறகு தான் நீ இன்டர்வ்யூ அட்டன் பண்ணிருப்ப. அதுக்குப் பிறகு உன்கிட்ட தினமும் பேசினேன். ஒரு நாள் கூட நீ சொல்லலை.

“சரி, அது கூட எனக்குச் சஸ்பென்ஸ் தர நினைச்சுருப்ப போலனு நினைச்சு அதைச் சாதாரணமா எடுத்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் இருந்தப்ப நீ சொல்லுவனு எதிர்பார்த்தேன். ஆனா அப்பவும் சொல்லலை. அது நீ சொன்ன மாதிரி புதுப் பெண்ணுக்குரிய தயக்கமாகவே இருக்கட்டும். ஆனா இன்னைக்குக் காரில் வரும் போது உங்க அப்பா திட்டுவார்னு பயந்து சொல்ல நினைச்ச பார் அதில் எனக்கு நானே சொல்லி வச்சுருந்த சமாதானம் எல்லாமே அடிபட்டுப் போனது போல உணர்ந்தேன்…” என்று சொன்னவனின் குரலில் இப்போது அவனின் மன வலி அப்பட்டமாகத் தெரிந்தது.

அவனின் வலியை கண்டு கொண்டவள் திகைத்துப் போனாள்.

“கல்யாணம் நடந்த இரண்டே நாளில் நான் இப்படி எதிர்பார்ப்பது உனக்கு அதிகப்படியா தெரியலாம். ஆனா என்னைப் பொறுத்தவரை நமக்கு எப்போ கல்யாணம்னு தேதி குறிக்கப்பட்டதோ அப்பயே நாம இரண்டு பேரும் ஒண்ணுனு தான் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். உனக்கு அப்படி எதுவும் இல்லை போல.

அதான் நான் நியாயமா எதிர்பார்க்கும் விஷயம் கூட உனக்கு அதிகாரமா தெரியுது. இதே இடத்தில் நான் உன்னைப் போல நடந்திருந்தா உன் மனநிலை எப்படி இருக்கும்னு நீயே நினைச்சுக்கோ. அதுவே சொல்லும் நான் உன்கிட்ட காட்ட நினைப்பது அதிகாரமா? அன்பானு…?” என்றவன் அவளைப் பார்க்காமல் அந்த அறையில் இருந்த கண்ணாடி ஜன்னலைப் பார்த்தான்.

கணவன் பேச பேச திகைத்து விழித்த சம்பூர்ணாவிற்கு என்ன செய்வது என்று கூடச் சில நிமிடங்கள் பிடிபடாமல் போனது.

அவன் கடைசியாகச் சொன்னதை யோசித்துப் பார்த்தாள்.

இதே அவன் தன்னிடம் இப்படிச் செய்திருந்தால் அவனை விட அதிகம் வருந்தியிருப்பேன். இவ்வளவு பொறுமையாகவும் அவன் பேசியது போல் பேசியிருக்க மாட்டேன். கோபத்தில் குதித்திருப்பேன்… என்று நினைத்தவளுக்குத் தன் தவறு புரிய தலை குனிந்து சில நொடிகள் நின்றிருந்தாள்.

பின்பு மெல்ல நிமிர்ந்து கணவனைப் பார்த்தாள். அவன் இன்னும் கண்ணாடி வழியாக வெளியே வெறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, ‘எவ்வளவுக்கு எவ்வளவு விளையாட்டுத்தனமாக இருக்கின்றேனோ அதே அளவு நான் அழுத்தமானவன்’ என்றும் அவளுக்குப் புரிய வைப்பவன் போல அமர்ந்திருந்தான்.

அவன் அப்படி அமர்ந்திருப்பதைப் பார்த்து மனம் பிசைவது போல் இருக்க, அவனின் அருகில் சென்று திரும்பியிருந்தவனின் தோளின் மீது கையை வைத்து “ஸாரி…” என்றாள் மெதுவாக.

மனைவியின் அருகாமையில் மெல்ல திரும்பி தன் தோளின் மீதிருந்த அவளின் கையையும், அவளின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

பின்பு அந்தக் கையைப் பற்றிக் கொண்டே இருக்கையில் இருந்து எழுந்து “கணவன், மனைவிக்குள்ள அன்னியோன்யம் இல்லைனா அன்பு கூட அதிகாரமா தான் தோணுமாம். அதனால்…” என்றவன் அவளின் கையைச் சுண்டியிழுத்து, தன் மேல் வந்து மோதியவளை இறுக அணைத்திருந்தான்.