வஞ்சிக்கொடியின் வசீகரனே – 10
அத்தியாயம் – 10
மூன்றாவது நாள் காலை உணவை ராகவ்வின் வீட்டிலேயே முடித்துக் கொண்டு இருவரும் சென்னைக்குக் கிளம்பினார்கள்.
பெரியவர்கள் மறுநாள் வருவதாக இருந்ததால் புதுமணத் தம்பதிகள் மட்டும் பயணத்தைத் தொடங்கினார்கள்.
பயணம் ஒன்றாகவே இருந்தாலும் இருவருக்கும் இடையே இம்முறை எந்த ஒட்டுதலும், உரசலும் இல்லாமல் பயணம் அமைதியாகவே நடந்தது.
ராகவ்வின் வீட்டில் இருந்த இரண்டு நாட்களும் மனைவியைச் சீண்டுவதும், அதற்கு அவள் ப்ளீஸ் சொல்லியே அடக்குவதும்.அவர்களுக்குள் எழுத படாத விதியாக மாறி விட்டிருந்தது.
இப்போது ராகவ் வீட்டை விட்டுக் கிளம்பியதில் இருந்து தாய் வீட்டை பிரிந்து செல்லும் மணப்பெண் போல் அமைதியாகவும், யோசனையுடனுமே வந்தான்.
அவனின் முகத்தைப் பார்த்த பூர்ணா ‘என்னடா இவன் புகுந்த வீட்டில் போய் எப்படி வாழ போறோம்னு பயந்து போன புதுப்பொண்ணு போலவே வர்றான். இவன் வீட்டுக்கு நான் போனப்ப கூட நான் இப்படி இருக்கலையே?’ என்று நினைத்துக் கொண்டே கணவனின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டே வந்தாள்.
‘அவன் எங்கே உன்னை யோசிக்கவும், பிரிவு சோகத்தை உணரவும் விட்டான்? உன்னை உரசியே உருக வச்சிட்டுல வந்தான். அவன் உரசிய உரசலிலும், இடுப்பை உடும்பு பிடியாய் பிடிச்ச பிடியிலும் உனக்கு உன் ஞாபகமே இல்லாம பண்ணி வச்சுருந்தான்…’ மனது எடுத்து கொடுக்க, ‘அப்போ நான் கவலையா வரக்கூடாதுனு தான் என்னைச் சீண்டி கொண்டே வந்தானோ?’ என்று பூர்ணாவிடம் கேள்வி எழுந்தது.
அவளின் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவனோ தீவிரமான யோசனையுடன் வந்தான்.
அவனிடம் இதுவரை பார்த்திராத தீவிரமான முகத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டவளுக்கு இப்படி இருப்பவனிடம் எப்படித் தன் விஷயம் சொல்வது என்று தயக்கம் உண்டானது.
அவளுக்கு வேலை கிடைத்த விஷயத்தை உடனடியாக அவனிடம் சொல்ல வேண்டிய அவசியம் இருந்தது.
இந்த இரண்டு நாட்களில் சந்தர்ப்பம் இருந்தும் சொல்ல மறந்திருந்தவள், இப்போது சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தாள்.
தன் வீட்டில் இருக்கப் போகும் இரண்டு நாட்களில் தந்தை கண்டிப்பாக அவளின் வேலையைப் பற்றி அவனிடம் பேசுவார்.
அப்படிப் பேசும் போது அவன் தனக்கு அந்த விஷயமே தெரியாது என்று சொல்லிவிட்டால் தந்தையின் கடுமையான கோபத்திற்குத் தான் ஆளாக வேண்டும் என்று பயந்தாள்.
அதுவும் அவர் உடனே சொல்லி விட வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்ட பிறகும் தான் சொல்லாமல் விட்டதைக் கண்டிப்பாக மன்னிக்க மாட்டார்.
அவர் சொன்னதைச் செய்யவில்லை என்றால் அதற்கு அவர் கொடுக்கும் தண்டனை வேறு அவளைப் பயமுறுத்தியது.
‘இவன்கிட்டே மல்லுக்கட்டிகிட்டே இப்படியா விஷயத்தைச் சொல்லாமல் விடுவேன்? இப்போ என்ன பண்றது?’ பதட்டத்துடன் கணவனின் முகம் பார்த்தாள்.
அவனோ இப்போது புருவங்கள் சுருங்க மீசையை ஒரு பக்கம் நீவி விட்டுக் கொண்டே பலத்த யோசனையில் இருந்தான்.
‘அப்படி என்னத்தை யோசிக்கிறான்? ஒருவேளை காஞ்சிபுரத்துக்கும், சென்னைக்கும் போக அவன் வாங்கி விட்ட கப்பல் கவுந்துருச்சோ? அதை எப்படி நிமிர வைச்சு திரும்ப ஓட்டலாம்னு பிளான் போடுறானோ?’ என்று நக்கலுடன் நினைத்துக் கொண்டவள் கணவனின் கவனத்தைக் கலைக்கச் செருமினாள்.
மனைவியின் சத்தத்தில் மெல்ல அவளின் புறம் திரும்பியவன் “என்ன மீன் முள்ளு தொண்டையில் மாட்டிக்கிச்சா?” என்று உதட்டை சுழித்துக் கேலியுடன் கேட்டான்.
“என்ன மீன் முள்ளா?” அவன் கேட்க வருவது புரியாமல் கேட்டாள்.
“தொண்டையைச் செருமுறாயே… காலையில் இட்லியுடன் சாப்பிட்ட மீனோட முள்ளு உன் தொண்டையில் மாட்டிக்கிச்சானு கேட்டேன்…”
“ப்ச்ச்… அதெல்லாம் ஒன்னுமில்லை உங்களைக் கூப்பிடத்தான் செரும்பினேன்…”
“என் பேரு செருமல்னு எப்ப மாத்தின? அது எப்படி என்னைக் கேட்காமல் என் பெயரை நீ மாற்றலாம். அப்படியே மாத்தி இருந்தாலும் என் பெயரை மாற்றியதையே என்கிட்ட நீ எப்படிச் சொல்லாமல் இருக்கலாம்?” என்று கோபத்துடன் கேட்டான்.
அவனின் கோபத்தை வியப்பாகப் பார்த்தாள்.
‘இப்போ ஏன் இவ்வளவு கோபம்? வழக்கம்போல விளையாடுகின்றானோ?’ என்பது போல் கணவனின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.
ஆனால் அவனின் முகத்தில் உண்மையாகவே கோபம் தெரிய, ‘யோசனையில் இருந்தவனைக் கலைத்ததால் கோபம் வந்து விட்டதோ?’ என்று நினைத்தவளுக்கு இப்போது பயம் வந்தது.
அவனின் கோபத்தை நிஜமென்று நம்பியவள் ‘ஒரு செருமலுக்கு இத்தனை அக்கப்போரா? இதுக்கு நான் உன்னைப் பேர் சொல்லியே கூப்பிட்டு இருக்கலாம் போலயே…’ என்று உள்ளுக்குள் அலுத்துக் கொண்டவள், “ஐயா சாமி! உங்க பேரை நான் ஒன்னும் செருமலுன்னு மாத்தலை. உங்களைக் கூப்பிட தெரியாத்தனமா தொண்டையைச் செருமி காட்டிட்டேன். மன்னிச்சிடுங்க…” என்று வேகமாகச் சரணடைந்தாள்.
அவனிடம் பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தானே இறங்கி வந்தாள்.
அவள் மன்னிப்பு கேட்ட வேகத்தில் உள்ளுக்குள் சிரித்த ராகவ் “இனிமேல் என்னைக் கூப்பிடணும்னா தொண்டை கட்டியது போல் சவுண்டு விட்டுக் கூப்பிடக்கூடாது. என்ன சரியா?” என்று மிரட்டலாகக் கேட்டான்.
‘என்ன இன்னைக்கு அய்யாவுக்கு அதிகாரம் தூள் பறக்குது?’ என்று கணவனை ஏற இறங்க பார்த்தாள்.
ஆனாலும் வெளியே அடக்கமாக “சரிங்க…” என்று வேகமாகத் தலையை ஆட்டினாள்.
அவள் தலையை ஆட்டிய வேகத்தில் மனைவியைச் சந்தேகமாகப் பார்த்தான் ராகவ்.
‘இன்னைக்கு என்ன என் பொண்டாட்டி சட்டு சட்டுன்னு நம்மகிட்ட சரண்டர் ஆகுறா?’ என்ற யோசனையுடன் அவளைப் பார்த்தான்.
அவளின் முகத்தில் பவ்யமும், ஏதோ சொல்லத் துடிக்கும் ஆர்வமும் தெரிய ‘அப்படி என்னத்தை என்கிட்ட சொல்ல தவிக்கிறாள்?’ என்று யோசித்தவனுக்கு அவளின் பவ்யமான முகம் தங்களின் திருமண நாளை ஞாபகப்படுத்த அவள் தன் தந்தையின் முன் அப்படி நின்றிருந்தது நினைவில் வந்தது.
‘ஓஹோ! வேலையைப் பற்றிச் சொல்ல நினைக்கிறாள் போல. அவளோட அப்பா உடனே சொல்ல சொல்லியும் என்னிடம் சொல்லாமல் விட்டவள், இப்ப திரும்ப அவங்க வீட்டுக்கு போறோம் என்றதும் சொல்ல நினைக்கிறாள்’ என்று கண்டு கொண்டவன் அவளைச் சொல்ல விடக்கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
அதனால் “உங்ககிட்ட நான் ஒரு விஷயம்…” என்று அவள் ஆரம்பிக்க, அவள் சொன்னது தன் காதிலேயே விழாதது போல் “எனக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கு சம்மூ. நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன்…” என்று சொல்லி விட்டுக் காரில் இருக்கையின் மீது தன் தலையைச் சாய்த்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டான்.
அவனின் செய்கையை வாயைப் பிளந்து பார்த்தாள் பூர்ணா.
‘அவன் வீட்டுக்கு போன அன்னைக்கு நான் சொன்னதை அப்படியே எனக்கு ரிப்பீட்டு அடிக்கிறானே?’ என்று முதலில் திகைத்து பார்த்தவள் பின்பு அப்படியே முகபாவத்தை மாற்றிக் கடுப்புடன் பார்க்க ஆரம்பித்தாள்.
‘வேண்டுமென்றே செய்கின்றான். காலையில் எழுந்ததே எட்டு மணிக்கு. அதுக்குப் பிறகு குளிச்சு சாப்பிட்டு கிளம்பி வீட்டை விட்டு வெளியில் வந்து அரைமணி நேரம் தான் ஆகுது. அதுக்குள்ள அப்படி என்ன வேலை செஞ்சான்னு டயர்டா இருக்குன்னு சொல்றான்’ என்று நினைத்துக் கொண்டே கணவனைப் பார்த்தவளுக்கு எரிச்சல் வந்தது.
இப்படி அழிச்சாட்டியம் செய்பவனிடம் எப்படிப் பேச என்று அவள் முழித்துக் கொண்டு தன் கை நகங்களைக் கடிக்க ஆரம்பித்தாள்.
அவள் என்ன செய்கிறாள் என்பதை அரைக் கண் மட்டும் திறந்து பார்த்த ராகவ்வின் கண்ணில் அவள் நகத்தைக் கடிப்பது பட்டதும், “நீயும் என் கூடக் கொஞ்ச நேரம் தூங்கு…” என்று சொல்லிக் கொண்டே அவளின் கையைப் பிடித்து இழுத்தான்.
அவன் இழுத்த வேகத்தில் அவனின் தோளிலேயே சாய்ந்தாள். மனைவியின் கையை இறுக பற்றிக் கொண்ட ராகவ் தூங்குவது போல் கண்ணை இறுக மூடிக்கொண்டான்.
“ப்ச்ச்… எனக்குத் தூக்கம் வரல விடுங்க. நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் எழுந்திருங்க…” என்று தான் விலகிக்கொண்டே அவனையும் எழுப்பினாள்.
“வீட்டில் போய்ப் பேசலாம் சம்மூ. ப்ளீஸ் என்னைக் கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாதே…” என்று எப்போதும் அவள் சொல்லும் ப்ளீஸை இப்போது அவன் சொல்லி அவளை ஆஃப் செய்தான்.
வீட்டிற்குச் செல்லும் வரை அப்படியே வந்த கணவன் மீது அவளின் கடுப்புக் கூடிக்கொண்டே போயிருந்தது.
சரி தன் அறைக்குச் சென்றதும் சொல்லி விடலாம் என்று அவள் நினைக்க, அதற்கு அவன் சிறிதும் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.
வீட்டிற்குள் நுழைந்ததும் என்னவோ அவன் தான் அந்த அந்த வீட்டின் மகன் போலவும் தாய் தந்தையைப் பிரிந்து மீண்டும் சந்தித்தது போலவும் சடகோபன், சகுந்தலா இருவரிடமும் பாச மழையைப் பொழிந்து நலம் விசாரிக்க ஆரம்பித்தான்.
அவன் பொழிந்த பாச மழையில் நனைந்த இருவரும் தங்கள் மருமகனை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டனர்.
அவன் நனைத்தது போக மீதி இருந்த தூரலை தான் பூர்ணாவால் தூவ முடிந்தது.
அதன் பிறகும் அவன் தன் அறைக்கு வரும் நேரத்திற்காகக் காத்திருந்தாள்.
ஆனால் அவனோ கீழே இருந்த அறையிலேயே உடையை மாற்றிக் கொண்டு வந்தவன் அவளின் தந்தையிடம் பேச ஆரம்பித்து விட்டான்.
அவளைச் சகுந்தலா சமையல் அறைக்கு அழைத்து மாமியார் வீட்டை பற்றி விசாரித்துப் பேச ஆரம்பித்து விடப் பூர்ணா தான் தவித்துப் போனாள்.
அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தாலும் வெளியே தந்தையும், கணவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதில் தான் அவளின் கவனம் முழுவதும் இருந்தது.
எந்த நேரத்தில் தந்தை தன்னுடைய வேலையைப் பற்றிப் பேசுவாரோ என்று நினைத்து திணறிப் போனாள்.
அவளின் நல்ல நேரமாகச் சாப்பிட செல்லும் வரை அவர்கள் பொதுவான விஷயத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதில் ஆசுவாசமாக மூச்சு விட்டவள் நிம்மதியாகச் சாப்பிட்டாள். சாப்பிட்டு முடிந்ததும் கணவன் தன் அறைக்கு எப்படியும் வருவான் அப்பொழுது பேசிக்கொள்ளலாம் என்று அவள் நினைக்க அவனோ மீண்டும் வரவேற்பறையில் அமர்ந்து சடகோபனிடம் பேச ஆரம்பித்து விட்டான்.
‘அடேய் புருஷா! நீ ஓவரா போற. அப்படி என்னத்தை எங்க அப்பாகிட்ட விடாம பேசறே? என்னை வேணும்னே பழி வாங்குறாயா?’ என்று மனதிற்குள் கறுவிக் கொண்டிருந்தாள்.
மகளோ தவித்துக் கொண்டிருக்கத் தந்தையோ சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தார். மருமகன் தலைக்கனம் எதுவும் இல்லாமல் இயல்பாகப் பேசி பழகுவது அவருக்கு மிகவும் பிடித்துப் போக அவரும் உற்சாகமாக அவனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
‘ரூமுக்கு வந்து கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க’ என்று கணவனை அழைக்கலாமா என்று கூடப் பூர்ணாவின் யோசனை போனது.
ஆனால் அப்படித் தான் போய்க் கேட்பது பெற்றவர்களுக்குத் தவறாகத் தெரியுமோ என்று நினைத்தவாறு அமைதியாக அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்தபடி சாப்பாட்டு மேசையின் அருகில் அமர்ந்திருந்தாள்.
வந்ததிலிருந்து அவளின் தவிப்பை கவனித்துக் கொண்டுதானிருந்தான் ராகவ்.
அவளின் தவிப்பை பார்க்க பாவமாக இருந்தாலும் சிறிதும் மனம் இளகாமல் மாமனாரிடம் நாட்டுநடப்பு என்று அவனின் பேச்சு நீண்டு கொண்டே போனது.
ஒரு கட்டத்தில் நாட்டு நடப்பை விட்டு வீட்டு நடப்பிற்கு வந்து சேர்ந்தார் சடகோபன்.
“கார் விலையெல்லாம் பத்தி பேசவும் தான் ஞாபகம் வருது மாப்பிள்ளை. உங்க ஃப்ளாட்ல ஏற்கனவே வீட்டுச் சாமான்கள் எல்லாம் ரெடியா இருக்கிறதனால் நான் வீட்டுப் பொருட்களுக்குப் பதிலாக என் பொண்ணுக்குச் சீதனமா கார் வாங்கித் தரலாம்னு இருக்கிறேன். உங்களுக்கு எந்த மாதிரி கார் புடிக்கும் மாப்பிள்ளை?” என்று கேட்டார்.
“என்ன மாமா சொல்றீங்க? கார் நீங்க வாங்க போறீங்களா? கார் எல்லாம் நான் பார்த்துக்குறேன் மாமா. ஏற்கனவே கல்யாண செலவு, நகை, நட்டுன்னு நிறையச் செலவு செய்துட்டீங்க. அதுவே அதிகம்தான். இதுக்கு மேலயும் செலவு செய்து என்னைக் கில்டியா ஃபீல் பண்ண வச்சிடாதீங்க…” என்று வேகமாக ராகவ் மறுத்தான்.
“இல்ல மாப்பிள்ள வீட்டு சாமான் வாங்குவது வழக்கமான முறை தான். அந்த முறையை நான் செய்ய முடியலை. அதுக்குப் பதிலா தான் கார்னு சொல்றேன். நீங்க தவறா நினைக்காமல் வாங்கிக்கணும்…”
“இல்ல மாமா வேணாம் விடுங்க. அத பத்தி இனிமேல் பேச வேண்டாம்…” என்று கண்டிப்புடன் சொன்ன ராகவ் அதோடு அந்தப் பேச்சை முடித்துக் கொள்ளப் பார்த்தான்.
“என்ன மாப்பிள்ளை நீங்க இப்படிச் சொல்றீங்க? நீங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை பார்க்க போறீங்க. அப்போ ரெண்டு பேரும் காரில் போக வசதியா இருக்கும்னு தான் வாங்குவோம்னு நினைச்சேன். நீங்க இப்படிச் சொல்றீங்களே…” என்றார்.
அதுவரை அவர்களின் காரைப் பற்றிய பேச்சை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்த பூர்ணா வேலை பற்றிய பேச்சு வரவும் விழுக்கென்று தலையை உயர்த்தித் தந்தையையும், கணவனையும் பதட்டத்துடன் பார்த்தாள்.
வேறு பேச்சு பேசும் போது அவ்வப்போது திரும்பி மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்த ராகவ், வேலை பற்றிய பேச்சு வரவும் சிறிதும் மனைவியின் புறம் கண்களைக் கூடத் திருப்பவில்லை.
“ஒரே இடத்தில் வேலை பார்த்தால் என்ன மாமா? இப்போதைக்கு என்னோட பைக்கில் இரண்டு பேரும் வேலைக்குப் போகிறோம். இன்னும் கொஞ்ச நாளில் நான் எப்படியும் கார் வாங்குவதாகத் தான் இருக்கேன். அப்போ எனக்கும் சம்மூவுக்கும் பிடிச்ச மாதிரியான காரை பார்த்து வாங்கிக்கிறோம். அதைப் பத்தி கவலை வேண்டாம்…” என்றான்.
தந்தை ஒரே இடத்தில் வேலை என்று சொன்னதை வைத்து கணவன் தன்னை அதிர்ச்சியுடன் பார்ப்பானோ என்று பூர்ணா பார்த்துக்கொண்டிருக்க அவனோ ஏற்கனவே விஷயம் தெரிந்தது போல் பேசவும் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.
அவன் வேண்டாம் என்று ஒரேயடியாக மறுத்து விடவும் அதற்கு மேல் பேச முடியாமல் தயங்கி அப்பேச்சை விட்டார் சடகோபன்.
“சரிங்க மாப்பிள்ளை உங்க விருப்பம்…” என்றவர் “சம்பூர்ணாவுக்கு எப்படி வேலை வரும் மாப்பிள்ளை? உங்க பிரிவா? இல்ல வேற பிரிவில் வருமா?” என்று கேட்டார்.
தந்தை கேட்ட கேள்வியில் திக்கென்று திகைத்துப் போனாள் சம்பூர்ணா.
‘அச்சோ! நான் இன்னும் அவரிடம் வேலையைப் பற்றிச் சொல்லவில்லையே. அதுக்குள்ள அப்பா இப்படிக் கேட்டுக்கிட்டு இருக்காரே. போச்சு, இன்னைக்கு நான் மாட்டினேன். சரியான தண்டனை எனக்கு உண்டு…’ என்று பதட்டமடைந்தாள்.
ஆனால் அவளின் பதட்டத்தைப் பதறவைக்கும் வகையில் ராகவ்வின் பதிலை கேட்டு, உணர்வுகள் அற்ற நிலைக்குச் சென்றது போல் சிலையாய் போனாள்.
“என் டீம் வேற. பூர்ணாவோட டீம் வேற மாமா. ஆனா ரெண்டு பேரும் ஒரே பில்டிங்கில் தான் வேலை பார்ப்போம்…” என்று சர்வசாதாரணமாக அவருக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தான் ராகவ்.
அதைக் கேட்டு சிலையாகிப் போனவளை உயிர்ப்பிப்பது போல மெல்ல மனைவியின் புறம் திரும்பிய ராகவ், மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
‘இவன் பெரிய தில்லாலங்கடினு தெரியும். ஆனா அதுக்கும் மேல ஜெக ஜால தில்லாலங்கடியா இருப்பான் போலயே. நீ சொல்லாமயே உன்ன பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சு வச்சிருக்கான். என்ன பூர்ணா இது?’ அவளின் மனசாட்சியும் கேள்வி கேட்டு அவளை அந்த நேரத்தில் கலைத்தது.
அதானே எனக்கும் தெரியலை. ஒரே கம்பெனினாலும் அவனோட பிரிவுக்கும், என்னோட பிரிவுக்கும் சம்பந்தமே இல்லை. அதுவும் அவ்வளவு பெரிய கம்பெனியில் புதிதாக வேலைக்குச் சேரப்போவோரின் விபரம், வேறு பிரிவில் உள்ளவர்களுக்குத் தெரிய சான்ஸ் இல்லை. அப்படி இருக்கும் போது இவருக்கு எப்படித் தெரிந்திருக்கும்? என்று யோசனையுடன் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனோ மீண்டும் சடகோபனுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
‘அவனுக்கு எப்படியோ தெரிந்ததில் உனக்கு நன்மையில் தான் முடிஞ்சுருக்கு பூர்ணா. அதனால் தான் உன்னோட அப்பாவின் தண்டனையில் இருந்து தப்பியிருக்க. அதுக்குச் சந்தோசப்பட்டுக்கோ’ என்ற எண்ணம் தோன்ற அதில் மகிழ்ச்சியுடன் எழுந்து தன் அறைக்குச் சென்றாள்.
அவள் எழுந்து சென்றதை கவனித்தவன் மாமனாரிடம் பேச்சை குறைத்துக் கொண்டு “நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன் மாமா…” என்று சொல்லிவிட்டு மெல்ல நழுவினான்.
மகள் செல்லவும், மருமகனும் நழுவி செல்வதைப் புரிந்து கொண்ட சடகோபன் அங்கே வந்த மனைவியை அர்த்தத்துடன் பார்த்துப் புன்னகை புரிந்தார். சகுந்தலாவிடமும் அந்தப் புன்னகை தொற்றிக் கொண்டது.
மனைவியைச் சீண்டி மகிழ்ந்த உற்சாகத்துடன் மாடியேறிய ராகவ் லேசாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த கதவின் வழியே அறைக்குள் நுழைந்தவன் அதிர்ந்து விழித்தான்.
இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று அவ்வப்போது விழித்து வைக்கும் மனைவியிடம் இருந்து இப்படி ஒரு நடனத்தை நிச்சயம் அவன் எதிர் பார்த்திருக்கவில்லை.
கொடி போன்ற இடையை வளைத்து நெளித்துத் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தாள்.
அவளின் ஒவ்வொரு அசைவிலும் நளினம் இருந்தது.
அவள் காதில் மாட்டிய இயர் ஃபோனுடன் ஆடிக் கொண்டிருந்ததால் அவள் என்ன பாட்டுக்கு ஆடிக்கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை என்றாலும் அவளின் உடல் அசைவுகள் ஏதோ குத்து பாட்டிற்கு ஆடிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் காட்டி கொடுத்தது.
விழிகளைச் சிமிட்ட கூட மறந்து பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான்.
ஆடிக் கொண்டே திரும்பியவள் அப்போது தான் கணவன் அங்கே நிற்பதையே கண்டு வளைந்த இடுப்புடன் அதிர்ந்து நின்றவள் அதே நிலையிலேயே நின்றாள்.
அவளின் இடையையும் முகத்தையும் சில நொடிகள் மாறி மாறி பார்த்தவன், “சோ! வஞ்சிக்கொடியின் கொடியிடைக்கான ரகசியம் இது தானோ?” என்று மயக்க குரலில் கேட்ட படியே மனைவியை நெருங்கினான் ராகவேந்திரன்.