முன்பே காணாதது ஏனடா(டி) – 9

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

            மகாலட்சுமி பொன்னம்மா பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தார்.

“ஏய் கிழவி இதுல எம்பேரனுக்கு பலகாரம் செஞ்சு எடுத்துட்டு வந்துருக்கேன் அவன் வந்ததும் குடு.  நான் உள்ளார இருக்கேன். அந்த வீட்டாலுங்க புறப்பட்டதும் சத்தம் குடு சரியா..” என்று சொல்லிக்கொண்டே உள் அறைக்குள் சென்றுவிட்டார்.

“ஏன்டி இம்புட்டு பாசம் வச்சுருக்கவ என்னத்துக்குடி முறுக்கிகிட்டு திரியுவ” என்று வெத்தலையை வாயில் அதக்கி கொண்டே கேட்டார். மகாவோ அதற்கு பதில் சொல்வதாக இல்லை.

பொன்னம்மா பாட்டியின் வீட்டு வாசலில் வண்டியை நிப்பாட்டிய செழியன் ஹரியை இறக்கிவிட்டு “பெரிய மனுசா பத்திரம்டா…  பாட்டிய தொந்தரவு பண்ணகூடாது சரியா…” என்று கூற அந்த சிறு மொட்டோ அழகாக தலை ஆட்டினான்.

பொன்னம்மா, “எய்யா செழியா பெரியய்யாவ பாக்கமுடியலயே”

செழியன், “அவுக ஒரு விசேஷத்துக்கு வெளியூர் போயிருக்காக….. எனக்கு சோலி இருக்கு கிளம்புறேன் பாட்டி… “

“சேரியா….  பாத்துபோ ராசா…”

செழியன் கிளம்பியதும் வெளியே வந்த மகாமாவோ பேரனை கொஞ்சி விளையாட ஆரம்பித்தார்.

………….

குமரனும் நர்மதாவும் தங்களுக்கென்ற தனி உலகத்தில் இருந்தனர். காதலை உரைக்கவில்லை கை கோர்க்கவில்லை கட்டி அணைக்கவில்லை தோள் சாய்ந்து கொள்ளவில்லை. ஆனால் ஒருவரது அருகாமையில் மற்றவர் அக மகிழ்ந்து இருந்தனர். அவர்களுக்கு இடையே ஒரு நல்ல நட்பு உருவாகி இருந்தது.

“என்ன நர்மதா மேடம் ரொம்ப பொறுப்பா இருக்கிங்க லன்ச் டைம்கூட தெரியாத அளவுக்கு.”

“அது வொர்க் இருந்துச்சுல குமரன் சார் அதுல கவனம் இருந்ததால நேரத்துல கவனம் செலுத்த முடியல.”

“சரி வாங்க சாப்பிட போலாம்.”

நர்மதாவிற்கு குமரன் முன் தான் அனைத்திலும் சிறந்தவள் என்று காண்பித்து கொள்ள வேண்டும். அவனை எதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்ய வேண்டும் அதற்காகதான் இப்படி மாங்குமாங்கென உழைத்துக் கொண்டாருக்கிறாள்.

குமரனுக்கோ அவளிடம் அதிகம் பேச வேண்டும் பழக வேண்டும் என்ற ஆசை.

இருவரும் ஏதேதோ பேசியபடி உணவு முடித்துக்கொண்டனர்.

நாளைக்கு பிரதோசம் எப்படியாவது நாளைக்கு கோவில்ல வச்சு நம்ம மனசுல இருக்குறத சொல்லிரனும் என்று இருவரும் ஒரே போல் நினைத்துக்கொண்டனர்.

…….

“அக்கா… அக்கா… ” என்று பக்கத்துவீட்டு பெண்ணிடம் கத்திகொண்டிருந்தார் சுந்தரி.

பக்கத்துவீட்டு பெண்மணியோ அவர் அருகில் வந்து என்னவென்று விசாரிக்க

“அக்கா…  என் வீட்டுகாரருக்கு மதிய சாப்பாடு எடுத்துட்டு போறேன்… தண்ணி தீர்ந்து போச்சுக்கா. தண்ணி வண்டி வந்தா ஒரு குடம் மட்டும் புடுச்சு வைங்க அக்கா சுஜி இப்போ வந்துடுவா அவ உள்ள தூக்கிவச்சுப்பா.”

“சரி வச்சுட்டுபோ சுந்தரி புடுச்சுவைக்குறேன்.”

“சேரி அக்கா…. வரேன்” என்று மாரிமுத்துவிற்கு உணவு எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

“என்னையா அந்த புள்ள இன்னும் வரல”

“வரும்டி பொறு..  அந்த புள்ளைக்கிட்ட எதையும் கேட்டு சங்கடபடுத்தாத சரியா”

“அய்யடா….  எங்களுக்கு தெரியாதா.. எப்படி பேசனும்னு”

“பாருடா என் பொண்டாட்டிக்கு அறிவ”

“ம்…  ரொம்பத்தான்…” என்று சிலுப்பிக்கொண்டார் சுந்தரி.

“ஏன்டி உனக்கும் எனக்கும் வயசாயிருச்சுடி இன்னும் வயசுல இருந்த மாதிரி சிலுப்புற”

“ம்…  நான் என்ற புருசங்கிட்ட சிலுப்புறேன்  நீ வேணும்னா கண்ண மூடிக்க.”

“அப்படி கண்ண மூடுனதுனால தான உன்ன கட்டிக்கிட்டேன். இல்லனா தெரிஞ்சே உன்ன கட்டிருப்பேனா..”

“ஆமாயா என்ன கட்டிட்டுதா நீ கஷ்டபடுற பாரு…” என்று மூக்கை உறிஞ்சி அழுக முயற்சித்தார்.

அதில் பதறியவரோ “லூசு பொம்பள சும்மா சொன்னேன்டி. நீ இல்லாம நான் எப்படி சந்தோசம இருப்பேன் சொல்லு. நான் சம்பாதிக்குற பணத்துக்கு வேற பொம்பளைய இருந்தா இன்னேரம் என்னோட நிலமை எப்படி இருக்கும் யோசி.  என்னோட வேலைய பத்தி யோசிக்கமா என்ன மட்டுமே நேசிக்கிற உன்னவிட்டா புள்ளைங்க இருந்தும் நான் அநாதைதான்டி”

“யோவ் லூசு மாதிரி பேசதா ஊருக்கே உபதேசம் பண்ணு அதோட நீயும் அதுபடி நடந்துக்க. அநாதையாம் பேச்ச பாரு” என்று நொடித்துக் கொண்டார். மாரி அவரது செயலை பார்த்து கலகலவென சிரித்தார்.

வழக்கம் போல் அவருடன் உணவு உண்ண வந்த மைத்ரி கண்டதோ இந்த முதிர் பறவைகளின் செல்ல காதலைதான்.

வெளியில் இருந்து பார்த்தால் சண்டை போடுவது போல் தோன்றும் அவர்களது உரையாடலில் கொட்டிகிடக்கும் காதலை கண்ட மைத்ரி மலைத்து ரசித்து நின்றாள்.

………..

அருமையான இரவு மொட்டை மாடியின் நிலவு வெளிச்சத்தில் அந்த கயிற்றுகட்டில் படுத்து இருந்த செழியனின் கண்களில் கண்ணீர் வலிந்து கொண்டிருந்தது.

நிலவை வெரித்து இருந்த செழியனின் மனம் கதறி அழுதது.

“அம்மு….”  அப்படிதான் அழைப்பான் அவனின் காதலி நர்மதாவை.

“சத்தியமா முடியலடி நாளாக நாளாக உன்னோட நினப்பு கொள்ளுது.  உன்ன பாக்கணும் போல இருக்கு. உன்ன இறுக்க கட்டிக்கனும் போல இருக்கு.”

ஆகாயத்தை பார்த்து விரக்தியாக சிரித்தவன் “உனக்கு நான் யாருனு கூட தெரியாதுல” என நினைத்தவன் நர்மதாவின் தந்தை ராஜாராம் மீது கோபமாக வந்தது.

அவர் தன் மகள்களுக்கு எந்த சொந்தங்களையும் அறிமுகபடுத்தி வைத்ததில்லை. உறவுகளோடு அதிகம் பழகவிடமாட்டார். அதிலும் முறை பையன்கள் உள்ளவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்லமாட்டார். ஒரு வகையில் சந்தேகபேர்வழி என்றுகூட சொல்லலாம். அவ்வாறு அழைத்து சென்றால் தன் மகள்கள் காதல் வயபட்டுவிடுவார்களோ என்று ஒரு அச்சம்.

“இப்போ எப்படி இருப்ப அம்மு வளர்ந்து இருப்பல. பிளீஸ்டி பொண்டாட்டி…  நான் உங்கிட்ட வந்து சேருரவரைக்கும் உம்மனசுல யாருக்கும் இடம் கொடுத்துறாதடி. நான் சீக்கிரம் உன்கிட்ட வந்துருவேன். வெயிட் பண்ணுடி பிளீஸ்.. ” என்று அங்கு இல்லாத அவளிடம் மன்றாடிக்கொண்டிருந்தான்.

செழியன் தாய் மகாவின் ஒன்றுவிட்ட தம்பிதான் ராஜாராம். மகாவிற்கு தம்பியின் மகள் நர்மதா என்றால் கொள்ளை பிரியம்.  நர்மதாவிற்கும் எப்போதாவது வீட்டிற்கு வந்துசெல்லும் மகா அத்தை என்றால் பிரியம்தான். ஆசை அத்தைக்கு மகன் இருக்கிறான் என்று தெரியும்.  எப்போதோ விசேஷ நாட்களில் பார்த்த நியாபகம் எவ்வளவு யோசித்தாலும் முகம் அவளுக்கு நியாபகம் வராது.

ஆனால் செழியனுக்கோ அவள் முகத்தை தவிர வேறு எதுவும் நினைவில் இருக்காது.  கனவிலேயே வாழ ஆரம்பித்துவிட்டான்.

எல்லா மனிதர்களிடமும் சில எதிர்மறைகள் இருக்கும் அது போல செழியனுக்கும் ஒரு பழக்கம் உண்டு தனக்கு என்று நினைத்துவிட்ட எதுவாகினும் அதை மற்றவர் நெருங்கவிடமாட்டான்.

அவனது நண்பன் சுதாகரன், அவர்களது சோட்டுபசங்கள் யாரிடமாவது நெருக்கம் காட்டினாலும் அவனால் தாங்க இயலாது.

அப்போது யாரோ மாடிபடிகளில் ஏறிவரும் சத்தம் கேட்க அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டு இயல்பாக இருப்பது போல் நிமிர்ந்து பார்த்தான்.

அவனது பெரியம்மா, கதிரின் தாய் வள்ளி தான் நின்றுகொண்டிருந்தார்.

அவரை கண்டதும் “ஊர்ல இருந்து எப்போ வந்திங்க பெரியம்மா விசேஷம் நல்ல படியா முடுஞ்சதா”.

அவரோ அவன் கேள்விக்கு பதில் கூறாமல் “அழுதியா செழியா” என்று கேட்டு கொண்ட கட்டிலில் அவன் அருகில் வந்து அமர்ந்தார். அவ்வளவு தான் மடை திறந்த வெள்ளமாக அவர் மடியில்படுத்து குழுங்கி குழுங்கி அழுக ஆரம்பித்துவிட்டான்.

“ஐயா செழியா ஏன்டா தங்கம் அழுகுற”

“அவ நெனப்பாவே இருக்கு பெரியம்மா”

“நான் வேண மகாகிட்டயும் ராஜன்கிட்டையும் பேசவாடாமா”

அவரிடம் இருந்து அவசரமாக பிரிந்தவனோ “வேண்டாம் பெரியம்மா ஏற்கனவே என்னால நீங்கபட்ட வலியும் வேதனையும் அவமானமும் போதும். என்னோட ஆசைக்காக நீங்க தலகுனிஞ்சு நிக்க வேணா பெரியம்மா.”

“அவ எதுக்குடா தல குனிய போறா உனக்கு ஒரு நல்லது நடந்த சந்தோச தாண்டா படுவோம் நாங்க” என்றார் படிகளின் ஓரத்தில் நின்றிருந்த வள்ளியின் கணவர் ரத்தினம்.

“எம்மேல சத்தியம் பண்ணி இருக்கிங்க பெரியப்பா மறந்துடாதிங்க.”

“இத சொல்லியே எங்க வாய அடச்சுரு.”

“நீ இன்னும் சாப்பிடலனு மஞ்சு சொல்லுச்சு. நீ சாப்பிடலனு உன்னோட பெரியம்மாவும் சாப்பிடாம வந்துட்டா. சாப்பாடு கொண்டுவந்து இருக்கேன் சாப்பிடுவோம் வாங்க” என்று கீழே அமர்ந்து பதார்த்தங்களை மனைவிக்கும் மகனுக்கும் பரிமாற அவர்களும் அவர் பரிமாறிய உணவை உண்ண ஆரம்பித்தனர்.

இவன் இங்கு அவனவளை நினைத்து ஏங்கி தவிக்க அவளோ நாளை எப்படியாவது குமரனிடம் தன் மனதை சொல்லிவிட வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டு உறங்க ஆரம்பித்துவிட்டாள்.

தொடரும்…