முன்பே காணாதது ஏனடா(டி) – 50 (இறுதி அத்தியாயம்)

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

குமரன் தங்கியிருக்கும் அறை வாசலில் நின்ற மைத்ரி பெருமூச்சை இழுத்துவிட்டபடி கதவை தட்டினாள்.

கதவை திறந்த குமரன் அவளை பார்த்துவிட்டு படுக்கையில் சென்று அமர்ந்தான்.

உள்ளே நுழைந்தவள் கதவை தாழிட்டுவிட்டு அவன் அருகில் தன் கைபையை தூக்கி எறிந்தாள்.

அந்த சத்தத்தில் நிமிர்ந்த குமரன் மைத்ரியை முறைத்து பார்த்தான்

“இப்போ எதுக்காக இவ்வளவு கோபப்படுற? நியாயமா நான் தான் கோபப்படனும். வேலையவிட்டு நின்னபிறகும் வேலை இருக்குனு பொய் சொல்லி வந்துருக்க! எப்போ இருந்து பொய் சொல்ல ஆரம்பிச்ச மைத்ரி”

“நான் சொன்ன பொய் உங்களுக்கு தப்பா தெரியுது. அப்போ நீங்க சொன்ன பொய்?”

“மைத்ரி டிரை டு அன்டஸ்டேண்ட். நான் சொன்னது தப்பு தான். இன்னும் எவ்வளவு முறை நான் சாரி கேட்கனும். எதுக்கு சின்ன விஷயத்தை இவ்வளவு காம்ப்ளிகேட் பண்ற”

“வாவ் உங்க வாயாலையே சொல்லிட்டீங்களே! சின்ன விஷயம்னு அப்புறம் எதுக்காக என் காதலை புதைச்சுட்டுவானு சொன்னீங்க. அப்புறம் என்ன சொன்னீங்க? எக்ஸ் லவ்வா! ஸ்டில் நான் அவரை தான் காதலிக்குறேன்.”

குமரனின் மனது சில்லு சில்லாக உடைந்தது. கண்களில் கண்ணீர் கூடத் திரண்டுவிட்டது.

“நீ பொய் சொல்ற மைத்ரி. என்னை தான் உனக்கு புடிக்கும். உன் கண்ல நான் எனக்கான காதலை ஒவ்வொரு நொடியும் பார்த்து இருக்கேன். வந்துரு என்னோட, நாம ஊருக்கு போகலாம்”

“சரி நீங்க சொல்றபடி நான் கேட்குறேன். நான் பொய் தான் சொன்னேன் உங்கள தான் காதலிக்குறேன் இதெல்லாம் ஒகே. ஆனால் எனக்கு ஒரு எக்ஸ் லவ் இருக்கே அதை என்ன செய்யட்டும்”

“அதான் நீயே சொல்லிட்டையே எக்ஸ்னு முடிஞ்சு போனதை பத்தி பேச வேண்டாம் நான் எப்பவும் உன்னை தப்பா நினைக்கமாட்டேன். எனக்கு உம்மேல முழு நம்பிக்கை இருக்கு”

“அதே நம்பிக்கை உங்க விஷயத்துல ஏன் இல்லனு நான் கேட்குறேன்”

“புரியல மைத்ரி”

“உங்களுக்கு பாஸ்ட்ல ஒரு லவ் இருந்ததால பிரசண்ட்ல நான் உங்களை தப்பா நினைச்சுருவேனு எப்படி நீங்க நினைக்கலாம்?”

குமரன் பேச வார்த்தைகள் ஏதும் இன்றி அவளையே பார்த்தான்.

“சொல்லுங்க குமரன் எம்மேலயையும், நான் உங்க மேல வச்ச காதல் மேலையும் அவ்வளவு தான் உங்களுக்கு நம்பிக்கையா? உங்களுக்கு எப்படி என்னோட பாஸ்ட் லவ் பிரச்சனை இல்லையோ அது போல எனக்கும் உங்களோட பாஸ்ட் லவ் பிரச்சனை கிடையாது. ஏன்னா நான் உங்கள அந்த அளவுக்கு காதலிக்குறேன் குமரன்” என்றவள் வெடித்து அழுக ஆரம்பித்தாள்.

குமரனுக்கு அவள் கூற வருவது அனைத்தும் புரிந்து கொள்ள முழுதாக ஒரு நிமிடம் தேவைபட்டது.

புரிந்த அடுத்த நொடி மைத்து என்ற விழிப்புடன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“மைத்து நானும் உன்னை ரொம்ப லவ் பண்றேன். ஐ ஆம் சாரி எல்லாத்தையும் மறந்துடலாம் பிளீஸ். நான் செஞ்சது தப்புதான் எனக்கு ஒரு வாய்ப்பு கொடு பிளீஸ் அழுவாத”

அவள் அத்துடன் அழுகையை நிறுத்தவில்லை. அழுகை மெல்ல மெல்ல விசும்பலாக மாறியது. இருவரது அணைப்பும் நீண்டு கொண்டே இருந்தது. உண்மை தெரிந்த பிறகு நன்றாக யோசித்துவிட்டாள் மைத்ரி. தன் மீதான குமரனின் காதலில் அவளுக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கை இருந்தது.

ஆரம்பத்தில் மாரியின் வற்புறுத்தலினால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாலும் அதன் பிறகு குமரன் தன் மீது காதல் கொண்டுள்ளான் என்பதை புரிந்து கொண்டாள்.

வெகுநேரமாக அணைப்பில் இருந்தவன் சில நிமிடங்களுக்கு பிறகு அவளிடம் இருந்து பிரிந்தான் குமரன். அவளை அழைத்துச் சென்று படுக்கையில் அமர்ந்தான்.

மைத்ரி அவனின் தோள் சாய்ந்து அமர்ந்தாள். அதன்பிறகு ஏதேதோ பேசினார்கள். அனைத்தும் அர்த்தமற்ற பேச்சுக்களாகவே இருந்தது. சில விஷயங்கள் கிறுக்கு தனமாக இருந்தது.

மனைவியை அழைத்துக் கொண்டு அன்றைய  நாள் முழுவதும் சென்னையை சுற்றி திரிந்தான். பீச் மணலில் கால் புதைந்து போகும் அளவு சுற்றி திரிந்தனர்.

இரவானதும் வெளியே உணவை முடித்துக் கொண்டு மீண்டும் ஹோட்டல் வந்து சேர்ந்தனர்.

நாள் முழுவதும் ஊர் சுத்திய கலைப்பில் இருவரும் சேர்ந்தார் போல் பெட்டின் மேல் விழுந்தனர்.

இணைந்திருந்த கைகள் இறுக்கத்தை கூட்ட புதுவிதா உணர்வில் இருவரும் திளைத்தனர். அவர்களது காதல் அடுத்த பரிணாமத்தை அடைந்து ஓர் உயிர் ஆயினர்.

விடிந்ததும் கண் விழித்த குமரன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியை கண்டு இதழ் பிரியாமல் சிரித்தான்.

“என்ன மைத்து அப்படி பார்க்குற?”

ஒன்னும் இல்லை என்பது போல் இடம் வலமாக தலை அசைத்தவள் மெல்ல அவனது இதழில் தன் இதழ் பதித்தாள்.

சிறிது நேரத்தில் மனைவியின் செயலை தன் செயலாக மாற்றினான் குமரன். மூச்சுவாங்க பிரிந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.

“சந்தோஷமா மைத்ரி”

“ம் ரொம்ப, சொல்ல வார்த்தையே இல்ல என் அழகா” என அவனது தலை கோதினாள்.

அவளது கையை தட்டிவிட்ட குமரன் “அந்த பேர் சொல்லாத” என்றான்.

“ஏன்?”

“அந்த ராஸ்கல்லை அப்படி தானா சொன்ன அன்னைக்கு”

கலகலவென சிரித்தவள் கைகளை தன் அருகில் இருந்த மேசையின் புறம் நீட்டி அங்கே இருந்த தன் கைபையை எடுத்தாள்.

அதன் உள் இருந்த டைரியை வெளியே எடுத்ததும் குமரனுக்கு கோபம் வந்துவிட்டது.

“இதை அங்கையே தூக்கி எறிய சொன்னேன்ல. எதுவும் வேண்டாம் எல்லாத்தையும் மறந்துடலாம்னு சொன்னேன். இப்போ ஏன் மறுபடியும் ஆரம்பிக்குற?”

“யோவ் லூசு புருசா இந்த டைரிய முதலை படியா”

“என்னால முடியாது” என அவன் முகம் திருப்பிக் கொள்ள அவனது தாடையை பற்றி தன் புறம் திரும்பியவள் கண்களால் அழுத்தம் காட்டி படிக்க சொன்னாள்.

சில நிமிடத்திற்கு வீம்பு பிடித்தவன் பிறகு வெறுப்போடு அவளது கையில் இருந்த டைரியை வாங்கி முதல் பக்கத்தை படிக்க ஆரம்பித்தான்.

முதல் பக்கத்திலேயே அழகன் மைத்ரி என பெரிதாக எழுதி இருந்தாள். பட்டென டைரியை மூடிவிட்டான்.

மைத்ரி மீண்டும் பார்வையில் கண்டிப்பை காட்ட மனதை கல்லாக்கி கொண்டு அடுத்த பக்கத்தை திருப்பினான்.

சென்னையில் இருந்து மதுரை வந்தது குமரனை சந்தித்தது அவனுக்கு அழகன் என பெயரிட்டது அதனை தொடர்ந்து அவர்களது திருமணம் வரை அனைத்தையும் வரிசையாக எழுதி இருந்தாள்.

அனைத்தையும் படிக்க படிக்க அவனது முகத்தில் கலவையான உணர்வுகள் வந்து போயின. அனைத்தையும் படித்து முடித்தவனின் மனம் இறுதியில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.

மனைவியவளை விழியால் தேட குளியலறையில் இருந்து வெளியே வந்தாள் மைத்ரி.

போர்வையை உடலில் சுற்றிக் கொண்டு அவளை நோக்கி எழுந்து ஓடினான்.

கண் கலங்க அவளை அணைத்துக் கொண்டான்.

“ஏன் எங்கிட்ட எதுவும் சொல்லல?”

“ம்…  கல்யாணம் முடிஞ்சதும் சர்ப்ரைஸ்ஸா சொல்லனும்னு இருந்தேன். அதுக்குள்ள ஏதேதோ நடந்துருச்சு” என்றவளின் குரலில் சிறிதாக சுணக்கம் ஏற்பட்டது

“சரி நீ வருத்தபடாத புது வாழ்க்கை ஆரம்பிப்போம் புதுசா காதலிப்போம் சரியா?”

“ம்… “

“சரி நீ கிளம்பு நானும் போய் ரெடியாகி வரேன். முக்கியமான இடத்துக்கு போகனும்”

“எங்க?”

“சொல்றேன்” என்றவன் குளியலரையில் புகுந்து கொண்டான்.

சிலமணி நேரத்தில் மனைவியை அழைத்துக் கோண்டு ஏர்போட் செல்ல மைத்ரியும் குழப்பமாக அவனுடன் சென்றாள்.

அங்கே சிவாவின் பெற்றோர் அவனை வழி அனுப்ப காத்திருக்க இவர்களும் சென்று இணைந்து கொண்டனர்.

சிவா மைத்ரியை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டான்.

மைத்ரி, “சிவா அமெரிக்கா போறியா! சொல்லவே இல்ல”

“சொல்லனும்னா அதுக்கு முதலை நீங்க எங்கூட பேச்சு வார்த்தை வச்சு இருந்து இருக்கனும்”

“டேய் சாரி நான் ஒரு குழப்பத்துல இருந்தேன் யார்கிட்டையும் பேச முடியாம போச்சு வெரி சாரிடா” என்றாள் பாவமாக

“சரி சரி போன போகுது மன்னிச்சுவிடுறேன்” என்றவன் தோழியிடமும் மச்சானிடமும் விடைபெற்று அமெரிக்கா சென்றுவிட்டான்.

அதன்பிறகு மேலும் ஒருவாரம் மனைவியுடன் சென்னையிலேயே இருந்த குமரன் மீண்டும் திருச்சி நோக்கி பயணமானான்.

இரவு நேரம் சரியாக பன்னிரண்டு ஆக இருக்கும் பொழுது மெல்ல நர்மதாவை எழுப்பினான் சொழியன்.

“என்னங்க? இந்த நேரத்துல எழுப்புறீங்க எனக்கு தூக்கம் வருது”

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மு”

எழுந்து அமர்ந்தவள் கணவனை அணைத்து தாங்க்ஸ் என்றவள் “என்ன மாமா வாழ்த்து மட்டும் தானா பரிசு எதுவும் கிடையாதா?”

“ஓ…  இருக்கே”

எங்க என அறை முழுவதும் பாரர்வையை சுழலவிட்டாள்.

“கண்ணை மூடுடி” என்றவன் தன் கால்சட்டையின் பாக்கெட்டில் இருந்து சாவி ஒன்றை எடுத்தான்.

அவளை அழைத்துக் கொண்டே அவள் எப்பொழுதும் குறிப்பிடும் குட்டி ரூமிற்கு அழைத்து சென்றான்.

“இப்போ கண்ணை தொற”

அவள் திறந்ததும் அவள் கையில் சாவியை கொடுக்க விரிந்த கண்களுடன் அதை பெற்று கொண்டவள் ஆவலாக கதவை திறந்தாள்.

அதீத ஆர்வத்துடன் கதவை திறந்து உள்ளே கண்டவள் இன்ப அதிர்ச்சி அடைந்தாள். அறையின் உள் பெரிய அலமாரி இருந்தது. அதனுள் பல பாகங்களாக பிரிக்கபட்ட தடுப்புகளின் உள் ஏராளமான புத்தகங்கள், உள்ளே இருவர் மட்டும் அமரும் படியான டேபிள், ஒரு மூலையில் சின்ன மெத்தை மீதமிருந்த சுவர்களில் எல்லாம் அவளின் சிறு வயது முதல் தற்போதைய வயது வரையான புகைப்படங்கள் என இருந்தன. அவளுக்கு ஆச்சரியத்தில் பேச்சே வரவில்லை.

அவளுக்கு சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் என்றால் கொள்ளை ஆசை. தன் வீட்டில் ஒரு குட்டி லைப்ரேரி அமைக்க வேட்டும் என அடிக்கொரு முறை தங்கைகளிடம் கூறி இருக்கிறாள். அவை இன்று நிஜமானதும் தான் கண்ட சந்தோஷத்திற்கு அளவில்லாமல் போனதாக உணர்ந்தாள்.

அவள் முகத்தில் வந்து செல்லும்  கலவையான உணர்வுகளை பார்த்த வண்ணம் நின்று இருந்தான் செழியன்.

ஒவ்வொரு புத்தகமாக கையில் எடுத்து தொட்டு பார்த்து சந்தோஷம் அடைந்தாள் நர்மதா.

அவளை பின்னிருந்து அணைத்த சொழியன் “என்னோட கிப்ட் புடிச்சு இருக்கா” என்றான்.

“ரொம்ப” என்றவள் வேகமாக திரும்பி அவனது உதட்டில் முத்தமிட்டாள்.

“ஏய் நீ இந்த கதவை திறந்த முத்தம் கொடுப்போனு தெருஞ்சு இருந்தா முன்னாடியே திறந்து இருப்பேன்”

நர்மதா வெக்கத்துடன் தலை குனிய அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன் “அம்மு இங்க இருக்குற புத்தகத்துல நிறைய காதல் நிறைஞ்சு இருக்கு. அந்த காதல் எல்லாத்தையும் நான் உன்னோட ரூபத்துல பார்க்குறேன். ஒவ்வொரு நொடியும் காதல் நிறைஞ்சு என்னோட வாழ உனக்கு சம்மதமா”

“சம்மதம்”

பின் இருவரும் சிறிது நேரம் அந்த அறையிலே இருந்தனர்.

நர்மதாவின் கையின் மீதிருந்த செழியனின் கைகள் அவளுக்கு வேறு செய்தி சொன்னது.

கண்களால் துணையாளிடம் சம்மதம் வேண்டினான். அதற்கான பதிலை அவள் வாய் மொழியாகவே உதிர்த்துவிட்டாள்.

“நான் எப்பவோ ரெடி நீங்க தான் பா ரொம்ப லேட்”

“அடிப்பாவி!” என வாயில் விரல் வைத்தவனின் கைகளை விலக்கி அதனை தன் இடையில் வைத்துக் கொண்டு கூடலின் முதல் படியை தொடங்கினாள் நர்மதா.

பல வருட செழியனின் ஏக்கம் அன்று  முழுமை அடைந்தது.

இவை அனைத்தையும் எண்ணியபடி கல்யாண மண்டபத்தில் இருந்து  தன் கணவன் இருக்கும் திசை பக்கம் சொன்றாள் நர்மதா.

இங்கோ குமரனுக்கும் கடந்த காலம் அனைத்தும் இந்த ஐந்து நிமிடத்தில் திரும்பி பார்த்துவிட்டான்.

நர்மதாவின் முகத்தில் தெரிந்த பூரிப்பே அவளது நல் வாழ்வை எடுத்து சொல்லிவிட இத்தனை நாள் மனதில் ஏதோ மூளையில் அழுத்திக் கொண்டிருந்த வினாக்கு விடை கிடைத்த சந்தோஷத்துடன் மண்டபத்தின் உள் நுழைந்தான்.

மண்டபத்தின் உள்ளே ஒரு சேரில் அமர்ந்து தன் மகனை மடியில் வைத்தபடி போனில் பேசிக் கொண்டிருந்தாள் மைத்ரி.

“டேய் கார்த்தி உன் மகன் உங்கிட்ட தான் ஏதோ பேசனுமாம். என்னனு கேளு”

“ஹலோ சித்தப்பா அத்தைய பார்க்க என்ன எப்போ அமெரிக்கா கூட்டிட்டு போவ”

“போலாம்டா கல்யாணமே வோண்டாம்னு சொன்ன உங்க அத்தை, இப்போ கல்யாணம் முடிஞ்சதும் நீயும் நானும் வேண்டாம்னு வர மாட்டேங்குற! நாம அங்க போய் அவள ஒரு வழி பண்ணனும்டா!’

“ஆமா சித்தபபா ஒரு வழி பண்ணனும்”

“டேய் போன கொடுடா”என மகனிடம் இருந்து போனை வாங்கிய குமரன் தம்பியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்துவிட்டான்.

அண்ணனுடன் பேசிவிட்டு திரும்பிய கார்த்தி தன் முன் சிரித்தபடி நின்று கொண்டிருந்தவளை கண்டு எரிச்சல் அடைந்தான்

“ஷாலினி பிளீஸ். ஏன் இப்படி போற இடமெல்லாம் டிஸ்டர்ப் பண்ற?”

“டிஸ்டர்ப்பா! லவ் பண்றேன்டா!”

“போடி லூசு” என்றவன் வகுப்பறை நோக்கி சென்றுவிட்டான்.

சென்றவனின் முதுகை வெறித்தபடி நின்ற ஷாலினியின் நிலையை கலைத்தது அவளது கைபேசி.

அழைப்பை ஏற்றவுடன் “ஹலோ அப்பா நான் தான் சொன்னேன்ல. இந்த வாரம் ஊருக்கு வரேன் சும்மா போன் பண்ணி தொல்லை பண்ணாதபா பாய்”

தன்னை பேசவிடமால் தான் மட்டும் பேசி முடித்த மகளை எண்ணி தலையில் அடித்துக் கொண்டார் பாபு.

வண்டியில் அமர்ந்து இருந்த செழியன் நர்மதாவை கண்டதும் முறைத்து பார்த்தான்.

“எவ்வளவு நேரம்டி?”

“போயா லூசு மாமா. மொய் கட்டுற இடத்துல ஒரே கூட்டம்”

“சரி சரி வா அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்க புள்ளைங்க அழுக ஆரம்பிச்சுடாங்களாம். சீக்ககரம் வீடு போய் சேரனும்”

சரி என்றவள் ஏறி அமர்ந்ததும் வண்டி அன்னபுறத்தை நோக்கி சென்றது.

மண்டபததில் இருந்து வெளியே வந்த குமரனும் மகனை முன்னிருக்கையில் அமர்த்தி காரை கிளப்ப இருவரையும் முறைத்தபடி பின்னிருக்கையில் ஏறிய மனைவியை பார்த்து சிரித்தான்.

அவர்களது வாகனம் திருச்சியை நோக்கி பயணித்தது.

முற்றும்.