முன்பே காணாதது ஏனடா(டி) – 47

தாயின் கேள்வியில் உறைந்திருந்தவன் தந்தையின் அழைப்பில் நிகழ் உலகம் மீண்டான்.

“குமரா என்னப்பா ஆச்சு மைத்ரி உங்கிட்ட வெளியூர் போறது பத்தி எதுவும் சொல்லலையா?”

“இல்ல அப்பா அப்படி எதுவும் இல்ல சொன்னாள். காலையில எழுப்புனா அசதியில நான் தான் எழுந்துக்கல. நான் போய் ரெப்பிரஷ் ஆகிட்டு வரேன் மா” என்றவன் தன் அறைக்கு விரைந்தான்.

கதவை தாழிட்டவன் கோபத்திலும் வருத்தத்திலும் அறையிலே குறுக்கும் நெறுக்குமாக நடந்தான்.

பின் ஒரு முடிவு எடுத்தவனாக குளித்து முடித்து அலுவலகத்திற்கு புறப்பட தயாரானான்.

சுந்தரி மகனுக்கு காலை உணவை டைனிங் டேபிலில் எடுத்து வைத்தார். மகனின் அறை கதவு திறக்கப்படவும் அதன்புறம் திரும்பினார்.

“குமரா ஆபிஸ் போறியா”

“ஆமா மா போகனும் “

“சரி வா வந்து சாப்பிடு”

“இல்லமா நேரம் இல்ல ஏற்கனவே ரொம்ப லேட் சாப்பாடு வேண்டாம்” என்றவர் அவர் பதில் பேசும் முன் வெளியே சென்றுவிட்டான்.

அலுவலகம் வங்தவனால் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.

எந்தபுறம் திரும்பினாலும் மனைவியின் முகமே கண்முன் வந்துசென்றது. வெறுப்போடு டேபிலின் மீது உள்ள பைல்களை கீழே தள்ள முயன்றான். ஆனால் அதை செய்தால் சத்தம் கேட்டு ஆட்கள் வந்துவிட்டால் என்னவாயிற்று சார் என அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில்வேறு சொல்ல வேண்டும் என்பதால் அமைதி காத்தான். 

எழுந்தவன் வேகமாக வீடு நோக்கி சென்றான் வீடு பூட்டி இருந்தது. தன்னிடம் உள்ள மாற்று சாவியால் கதவை திறந்தான்.

சுந்தரி மாரியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றிருந்தார். மாரியின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டி இருந்தது.

கார்த்தியும் சுஜியும் காலையே மைத்ரியை சென்னை டிரெயின் ஏற்றிவிட்டு மதுரை சென்றிருந்தனர். அவர்களது படிப்பு சம்மந்தமாக செல்ல வேண்டியது இருந்தது.

அறைக்குள் நுழைந்த குமரன் படுக்கையில் விழுந்து கண்களை முடினான்.

அமைதியாக கண் மூடி கிடந்தவன் கண்களை மெல்ல திறந்து எதிரே உள்ள சுவரை பார்த்தான்.

சுவரில் அவர்களது திருமண புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. மைத்ரியின் முகத்திலும் குமரனின் முகத்திலும் புன்னகை. இருவரையும் அருகருகே பார்க்க குமரனனின் மனதில் அவள் தன் மனைவி என்ற பெருமிதம் உண்டானது.

ஆனால் அடுத்த நிமிடம் அந்த இடத்தில் கோபம் வந்து ஒட்டிக் கொண்டது. எங்கிட்ட சொல்லாம கூட புறப்பட்டுட்டா அவளே என்னை தேடி வரட்டும் நானா போய் பேசமாட்டேன் இந்த நேரம் என்ன செஞ்சுட்டு இருப்பாள் என அவன் யோசித்தான்.

சே…  எங்க சுத்தினாலும் அவளோட நியாபகமாவே இருக்கு என எரிச்சல் உற்றவன் தனது கைபேசியை எடுத்து அவளது எண்களை அழுத்தி காதில் வைத்தான்.

அழைப்பு சென்று கொண்டே இருந்தது ஏற்கபடவில்லை. எவ்வளவு பிடிவாதம் சே….  என கைபேசியை பெட்டில் தூக்கி எறிந்தான்.

இரு கைகளால் தலையை தாங்கி அமர்ந்து இருந்தவன் தன் கைபேசியின் அழைப்பு மணி கேட்கவும் பாய்ந்து சென்று அதை எடுத்து பார்த்தான்.

ஆவல் அடங்கி போனது அழைத்தது மைத்ரி அல்ல சிவா.  ஒரு பெருமூச்சுவிட்டவன் அழைப்பை ஏற்றான்.

“ஹலோ..”

“ஹலோ…  மச்சான் நான் சிவா”

“ம்..  சொல்லுங்க சிவா”

“அது அப்பா அம்மா சுஜிய பார்க்கனும்னு சொல்றாங்க. உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வரலாமா” என கேட்டான்.

குமரனுக்கு தற்பொழுதும் ஆச்சரியமே இவன் மட்டும் எப்படி பட்பட்டென பேசிவிடுகிறான். இன்னமும் நான் இவனது காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை சிறிதும் பயமின்றி மச்சான் என்கிறான் வீட்டுக்கு வரலாமா என்கிறான் என பிரம்மிப்புற்றான்.

குமரன் அமைதியாகவும் மறுமுனையில் இருந்த சிவா ஹலோ… ஹலோ…  என கத்த ஆரம்பித்தான்.

“ஆ…  லைன்ல தான் இருக்கேன். நாளைக்கு வாங்க இன்னைக்கு வீட்டுல யாரும் இல்ல”

“ம்… சரி…  மச்சான் அப்போ நான் வைக்குறேன்”

“ம்..”

அவன் போனை வைத்ததும் மீண்டும் படுக்கையில் சாய பிடிக்காமல் சற்று நேரம் தோட்டத்தில் காலார நடந்தான்.

சிறிது நேரத்தில் தாயும் தந்தையும் வந்துவிட அவர்களை நோக்கி சென்றான்.

“என்னபா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட”

“ஆமா அம்மா கொஞ்ம் தலை வலி அதான் வந்தேன்” என்றவன் அவர்களுடன் சேர்ந்து வீட்டிற்குள் நடந்தான்.

“சாப்பிட்டையா பா” என தந்தை கேட்டபிறகே தான் இன்னும் உணவு அருந்தாமல் இருக்கிறோம் என்பதே அவனுக்கு நினைவு வந்தது.

“இன்னும் இல்லப்பா” என கூற பதறிய தாய் “என்ன புள்ளடா நீ எவ்வளவு நேரம் ஆச்சு சாப்பிடாம இருக்க வா வந்து சாப்பிடு” என கூட்டிச் சென்று உணவு பறிமாரினாள் சுந்தரி.

உணவை உண்டபடி சிவா போனில் பேசியதை தெரிவித்தான்.

“நான் நாளைக்கு வர சொல்லிட்டேன் தப்பு எதுவும் இல்லையே பா”

“இதுல என்னடா இருக்கு எனக்கும் அந்த புள்ளைய புடிச்சு இருக்கு. உங்க அப்பா அந்த புள்ளைய பத்தி சொன்னதும் நானும் மைத்ரிக்கிட்ட விசாரிச்சேன் ரொம்ப நல்ல பையன் எந்த கெட்ட பழக்கமும் இல்லனு சொன்னாள் எனக்கு அந்த வார்த்தைய கேட்டதும் ரொம்ப புடிச்சு போச்சு” என்றாள் சுந்தரி.

“சரிமா அப்போ பாப்பாவ நாளைக்கு வெளியே எங்கையும் அனுப்ப வேண்டாம்” என்றவன் மீண்டும் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.

தங்கையின் திருமண பேச்சில் சில நொடிகள் மைத்ரியை பற்றி மறந்திருந்தவன் தாயின் வாய்மொழியில் மீண்டும் நினைக்க ஆரம்பித்துவிட்டான்.

இரவு உணவு முடித்து அறையில் படுத்தவனால் தூங்க முடியவில்லை. மனைவியை அணைத்து உறங்கி பழகி தற்போது அவளின்றி தூக்கம் வரவில்லை.

கோபத்தையும் ஈகோவையும் தனக்குள்ளே புதைத்துக் கொண்டு மனைவியின் கைபேசிக்கு மீண்டும் அழைத்தான்.

இந்த முறையும் அழைப்பு ஏற்கபடவில்லை. இதனால் அவனுக்கு கோபம் ஏறபடாமல் மாறாக வருத்தம் உண்டானது.

அழுகை வருவது போல் இருந்தது. மனைவியின் புடவை ஒன்றை எடுத்து முகத்தை மூடியவன் மெல்ல கண்ணயர முயன்றான்.

தொடரும்…