முன்பே காணாதது ஏனடா(டி) – 39

புன்னகையுடன் எதிர்பட்ட சிவாவை குழப்பமாக ஏறிட்டான் குமரன்.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் குமரன்”

தலையை அசைத்தவன் சற்று தள்ளி இருந்து தூணின் அருகே சென்று அமர்ந்தான். அவனை தொடர்ந்து சிவாவும் அமர்ந்து கொண்டான்.

“என்ன விஷயம்…”

“நான் சுஜிய லவ் பண்றேன்”

சுல்லேன்று கோபம் ஏறியது குமரனுக்கு ஆனால் பொது இடம் கருதி அதனை அடக்கி கொண்டவன் “தைரியம் ஜாஸ்தியோ?” என கோபத்துடன் நக்கலாக கேட்டான்.

“தப்பு பண்ணினால் தான பயம் வரனும் காதல் ஒன்னும் தப்பு இல்லையே!”

“இப்ப நான் என்ன பதில் சொல்லனும்?”

“உங்களோட முடிவ என்னால எடுக்க முடியாது. அதை நீங்க தான் எடுக்கனும். ஆனால் ஒன்னு நான் சுஜிய விரும்புறது உண்மை. அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டேனு சொல்லி இருக்கேன். அந்த சொல்லை நான் காப்பாத்துவேன். அதேபோல நீங்களும் எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கனும்”

“என்ன?”

“அது….  எனக்கு சுஜி மேல இருநூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு. அவள் யாரையும் காதலிக்க மாட்டாள். கல்யாணம் பண்ணிக்கிட்ட நிச்சயம் நீங்களும் பேரண்ட்ஸ்சும் யாரை கைகாட்டுறீங்களோ அவங்கள தான் கல்யாணம் பண்ணுவாள். அப்படி நீங்க கை காட்டுற பையன் நானா இருக்கனும்னு ஆசைபடுறேன்.”

குமரனுக்கு ஒருநிமிடம் அவனது தைரியம் பிரமிப்பை ஏற்படுத்தியது. காதலை காதலியிடம் சொல்ல தயங்கும் ஆட்களுக்கு மத்தியில் தைரியமாக காதலியின் அண்ணனிடம் காதலை தெரிவிக்கின்றானே அசாத்திய தைரியம் தான் என மெச்சிக் கொண்டான். அதேநேரம் அவனே தைரியம் அற்றவனாக தானே இருந்தாய் என கேலி செய்யவும் மறக்கவில்லை.

இருந்தும் வீம்பாக “என் தங்கச்சிக்கு யார மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கனும்னு எனக்கு தெரியும். இன்னொனு சொல்லிக்கிறேன் அதிக நம்பிக்கைய வளர்த்துக்காத” என்றவன் அவனை தாண்டி வெளியே சென்றுவிட்டான்.

அவன் சென்ற திசையை வெறித்த சிவா கோபமாக விநாயகர் புறம் திரும்பினான்.

“நான் அமெரிக்கா போகனும்னு ஆசைபட்டேன் நடக்கல இப்போ லவ் அதுவும் அந்தரத்துல தொங்குது உனக்கு எம்மேல இரக்கமே இல்லையா!” என விநாயகரை பார்த்து கத்தியவன் அவரிடம் முகத்தை திருப்பிக் கொண்டு கிளம்பினான்.

…….

தூக்கம் கலைந்து எழுந்தான் செழியன். அறையில் அவன் மட்டும் தனித்து இருக்க சுற்றும் முற்றும் பார்த்தான். அப்பொழுது அவன் மாமனார் வீட்டிற்கு வந்திருப்பது நினைவிற்கு வந்தது.

சோம்பல் முறித்தவன் எழுந்து சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தான்.

அறை வாசலில் அவனை எதிர்கொண்டு வந்த நர்மதாவை கவனியாமல் இருவரும் மோதி கொண்டனர்.

“சாரி” என்று கூறியவன் அவளைவிட்டு விலகி கூடத்தை நோக்கி சென்றான்.

அங்கே உணவுகள் அனைத்தும் ஆவி பறக்க எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் கண்மணி.

“வாங்க மாப்பிள்ளை உட்காருங்க”

“ஆ…  அத்தை” என்றவன் சோபாவில் அமர்ந்து இருந்த மாமனின் அருகில் அமர்ந்தார்.

“மாப்பிள்ளை சாப்பிட வாங்க. அம்மாடி நர்மதா வா நீயும் வந்து சாப்பிடு”

இருவரும் வந்து அமர்ந்ததும் உணவை பறிமாரினாள் கண்மணி.

“அத்தை சாப்பாடு பிரமாதமா இருக்கு”

“நன்றி மாப்பிள்ளை”

சாப்பிட்டு கொண்டிருக்கும் போது நர்மதாவிற்கு புரை ஏறியது. அவளது தலையை தட்டிக்கொடுக்க கையை தூக்கியவன் பின் இறக்கி கொண்டான். அவளின் பெற்றோர் முன் தன்னை தவறாக காட்டிக் கொள்ள இது நல்ல வாய்ப்பாக எண்ணினான்.

அவன் எண்ணபடியே நர்மதாவின் பெற்றோர் மனதிலும் அவன் மேல் முதல் மனதாங்கல் ஏற்பட்டது.

ஆனால் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தனர். ஏனோ நர்மதாவிற்கு அதன் பிறகு தொடர்ந்து இருமல் வந்து கொண்டே இருக்க “தண்ணிய குடி நர்மதா சின்ன புள்ளையா நீ” என அதட்டினான் செழியன்.

கவிதா, “சரியா சொன்னிங்க மாமா எதுவுமே தெரியாதது போல அப்படியே நடிப்பா”

துளசி, “அம்மா பலமுறை சொல்லி இருக்காங்க மாமா. மென்னு சாப்பிடுனு இவள் என்னடானா எப்ப பாரு உறிஞ்சி சாப்பிடுவா. அப்புறம் புரை ஏறாமா!”

இவ்வாறு கூறியபடி உள்ளே நுழைந்தனர் கவிதாவும் துளசியும்.

“ஏய் குட்டீஸ் இரண்டு பேரும் இவ்வளவு நேரம் எங்க இருந்தீங்க”

துளசி, “பக்கத்துவீட்டு அக்காவுக்கு குழந்தை பிறந்து இருக்கு. இன்னைக்கு தான் ஆஸ்பத்திரியில இருந்து கூட்டிவந்து இருந்தாங்க. அதான் குழந்தைய பார்க்க போனாம் அப்படியே விளையாடிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல”

கவிதா, “மாமா அவளை நீங்க குட்டினு கூப்பிட்டா ஒரு நியாயம் இருக்கு நான் காலேஜ் முடிக்க போறனாக்கும்”

“உனக்கு கல்யாணம் ஆகி நாளைக்கு உம்பிள்ளைங்க காலேஜ் போனாலும் நான் உன்ன குட்டினு தான் கூப்பிடுவேன். மொழிய குட்டினு கூப்பிட புடிக்கும் ஆனால் அவளுக்கு புடிக்காது அதையும் மீறி நான் அவள அப்படி கூப்பிட்டால் வீட்டுல எதாவது சொல்லி அடிவாங்க வைப்பாள். உங்க இரண்டு பேர பார்த்தால் எனக்கு அப்படி தான் தோணுது நீங்களும் எனக்கு மொழி மாதிரி தான்.”

“ஆ…  கவுத்திடீங்களே மாமா…” என்ற கவிதா துளசியின் காதருகே சென்று “கேட்டேல அவரு நம்ம இரண்டு பேரையும் தங்கச்சி மாதிரி பார்க்குறாரு இனிமே சைட் அடிக்காத”

“போடி… லூசு” என்றவள் முகம் சுருக்கி “போங்க மாமா நான் உங்கள என் கிரஸ் லிஸ்ட்ல வச்சுருந்தேன்” என்றாள்.

செழியன் பட்டென சிரிக்க ராஜாராமோ சின்ன மகளை முறைத்து தள்ளினார்.

‘ஐயையோ அப்பா இருக்குறத மறந்துட்டோமே’ என அதிர்ந்தவள் தலை நிமிராமல் சாப்பிட்டு எழுந்தாள்.

……

சோபாவில் அமர்ந்து இருந்த குமரன் தங்கை வரவுக்காக காத்திருந்தான்.

இரண்டு நிமிடங்கள் முன் தான் வந்திருந்தான் வாசலில் ஸ்கூட்டி இல்லாததை கண்டு அவள் வெளியே சென்று இருப்பாள் என எண்ணி வாசலை பார்த்தபடி அமர்ந்து இருந்தான்.

மாறாக அவள் தங்கை மாடியில் இருந்து கையில் வாலியுடன் இறங்கினாள்.

“எப்போ வீட்டுக்கு வந்த சுஜி.”

“நான் இரண்டு மணி நேரத்துக்கு முன்னமே வந்துட்டேன் அண்ணா”

“உன்னோட ஸ்கூட்டி எங்க காணோம்?”

“அண்ணி ஆபிஸ் போய் குடுத்துட்டு வந்தேன். அவங்களுக்கு இன்னைக்கு வெளிய போக வேண்டிய வேலை இருக்குனு சொன்னாங்க. சரி இரு அண்ணா நான் போய் உனக்கு காபி போட்டு கொண்டு வரேன்.”

“ம்… சரி…”

அவள் அடுக்களைக்குள் சென்று காபி தயாரிக்க ஆரம்பித்தாள்.

“சுஜி அம்மா எங்க?”

“நம்ம இரண்டாவது வீட்டு கமலா அக்கா பொண்ணு பெரிய மனுசி ஆகிட்டா. அவளுக்கு உளுந்தங்கலி செஞ்சு எடுத்துட்டு போய் இருக்காங்க “

“சரி…” என்றவன் தங்கையிடம் எப்படி சிவாவை பற்றி கேட்பது என தயங்கியபடி அமர்ந்து இருந்தான்.

தொடரும்…