முன்பே காணாதது ஏனடா(டி) – 38

சிரித்த முகமாக சுஜியை பார்த்து நின்றான் சிவா

“ஹாய்ங்க…”

அவனது ஹாய் என்ற வார்த்தைக்கு பதில் கொடுக்காமல் முறைப்புடன் அவனை நோக்கினாள் சுஜி.

“உங்களுக்கு ஒருமுறை சொன்ன புரியாதா எதுக்கு என்ன இப்படி தொந்தரவு பண்றீங்க?”

“ஏங்க நான் தொந்தரவு பண்ணலை என்னோட பீலிங்க்ஸ்ச எக்ஸ்பிரஸ் பண்றேன்”

“உங்க பீலிங்க்ஸ் வெளிபடுத்துறத நான் தப்பு சொல்லல ஆனால் அது எங்கிட்ட திணிக்க நினைக்குறீங்க பார்த்திங்களா அது தான் தப்பு”

சிவா முகம் சுருங்கிவிட்டது. எல்லாம் ஒரு நொடி தான் அடுத்த நொடி புன்னகை முகமாக நிமிரிந்தவன்.

அந்த நேரம் இருவரின் வாகனத்தின் பின்புறம் மற்ற வாகனங்கள் வந்து போக இடைஞ்சலாக இருப்பதால் கத்த ஆரம்பித்தனர்.

இருவரும் மற்றவர்களிடம் மன்னிப்பை கேட்டு ஓரம் சென்றனர்.

சுஜி சிவாவின் முகம் நோக்க அவளது பார்வையின் பொருள் அறிந்தவன் “புரிஞ்சதுங்க இனிமே டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என் காதல் உண்மை. டெய்லி பின்னாடி சுத்தி தினமும் போற இடம் எல்லாம் பின்னாடி வந்து  எனக்கு என்ன பதில் என்ன பதில்னு கேட்காதிங்கனு சொல்றீங்க. புரியுது நான் பின்னாடி வர்ரதால உங்களுக்கு நிறைய பிரச்சனை வரலாம். நான் விரும்புற பொண்ணுக்கு பிரச்சனையா நான் என்னைக்கும் இருக்க மாட்டேன் நான் கிளம்புறேன். அதுக்காக என் காதலை மறந்துட்டு போறேனு நினைச்சுடாதீங்க. என் காதல் உண்மை அது நிச்சயம் என்ன உங்களோட சேர்த்து வச்சுரும். இதுவரைக்கும் நான் செஞ்ச விஷயத்துக்கு மன்னிச்சுருங்க”

அவன் சென்ற திசையை வெறித்தவள் ‘இனிமே தொந்தரவு பண்ணாம இருந்த சந்தோஷம். கடவுளே இவன் சொன்ன சொல்ல காப்பாத்தனும்’ என மனதில் இறைவனிடம் வேண்டுதல் வைத்தவள் இல்லம் நோக்கி சென்றாள்.

செழியனும் நர்மதாவும் மதுரை வந்து சேர்ந்தனர். இருவருக்கும் ஆராத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து சென்றார் நர்மதாவின் தாய் கண்மணி.

கவிதாவும் துளசியும் அக்கா மாமாவை மெலிதாக அணைத்து வரவேற்றனர்.

ராஜாராம் இருவரையும் புன்னகையுடன் பார்த்து நின்றார்.

அவர்கள் இங்கே தங்கும் இரண்டு நாட்களும் துளசியும் கவிதாவும் தாய் தந்தையரின் அறையில் தங்கி கொள்வதாக ஏற்பாடு ஆகி இருந்தது.

இரண்டரை மணி நேர பயணத்தில் கலைப்படைந்த செழியன் கட்டிலை கண்டதும் தெப்பென அதில் விழுந்து கண் மூடினான்.

“ஏங்க எழுந்து கை கால் கழுவுங்க வெளிய போய்டு வந்து அப்படியே படுக்காதீங்க”

கண்களை திறந்து அவளை பார்த்தான். முறைத்தானா ரசித்தானா யாருக்கு தெரியும்.

எழுந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டான். சில நிமிடங்களில் உறங்கியும்விட்டான்.

அறை வெளியே இருந்து குரல் கொடுத்தார் கண்மணி.

“நர்மதா…”

வெளியே வந்தவள் “என்னம்மா?” என்றாள்.

“இந்த காஃபி மாப்பிள்ளைக்கு கொடு. கலைப்பா இருப்பாரு கொஞ்ச நேரத்துல சமையல் முடிஞ்சுரும் சாப்பிடலாம்”

“அம்மா அவரு தூங்கிட்டாரு காபி எனக்கு கொடுங்க”

“சரிமா நான் போய் மிச்சம் இருக்குற சமையல கவனிக்குறேன்.” என கூறி சென்றுவிட்டார்.

நர்மதாவும் செழியனும் காலை நேரமே கிளம்பிவிட்டதால் மதிய உணவிற்கு முன்பே வந்துவிட்டனர். அதனால் உணவு தயாராகாமல் இருந்தது.

அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்து இருந்தான் குமரன். கணினியில் பார்வை பதித்து இருந்ததும் கருத்து பதியாமல் மைத்ரியை சுற்றி அலை மோதியது.

அவள் மீது தோன்றிய தன் உணர்வை சுற்றி அலசியது. இதுவரை பலமுறை தனக்குள் பட்டிமன்றம் நடத்திவிட்டான். இருந்தும் தெளிவு இல்லாமல் குழம்பினான்.

தெளிவு இல்லை என்று கூற முடியாது அவள் மீது தனக்கு இருப்பது காதல் என புரிந்துவிட்டது ஆனால் ஏற்கும் நிலை தான் இல்லை.

அதற்கு காரணம் ஈகோவோ இல்லை வீம்போ இல்லை. இதுவரை அவன் வளர்ந்த சூழலும் பெற்றோர் போதித்த நெறிமுறைகள் தான் காரணம்.

தாய் தந்தையர் காதல் திருமணம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து இதுநாள் வரை காதலுடன் வாழ்வதை பார்த்து பிரம்மித்து இருக்கிறான். தானும் அதுபோல் இருக்க ஆசை கொண்டிருக்கிறான்.

அதே போல் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பை சிறு வயதில் இருந்து தன் மனதில் வேரூன்றி வளர்த்தவன் முதல் காதல் மறைந்து சில மாதங்களிலே இரண்டாவது காதல் மலர்ந்ததை ஏற்கமுடியாமல் போராடினான்.

மனதின் உள்  ஒரு உறுத்தல் மைத்ரிக்கு துரோகம் இழைக்கிறோமா என்று. அவளிடம் உண்மையை கூறிவிடுவோமா நர்மதாவின் மேல் தான் கெண்டிருந்த உணர்வை பற்றி சொன்னால் என்ன ஆகும்.

அன்று ஒருநாள் கேட்டாலே இதற்கு முன் யாரையேனும் காதலித்து உள்ளாயா? என நாம் வேறு இல்லை என்று சொல்லிவிட்டோம். இப்பொழுது போய் அன்று சொன்னது பொய் என கூறினால் அவளது எதிர்வினை என்னவாக இருக்கும் என யோசித்து பார்க்கவே பயம் கொண்டான்.

வழக்கம் போல் தேடி ஓடினான் எல்லாவற்றிற்கும் காரண கர்த்தாவாகிய அந்த இறைவன் ஆனை முகனை தேடி.

என்றும் மாறா சிரிப்போடு தன் பக்தர்களை புன்சிரிப்பை தாங்கியபடி வரவேற்தார் விநாயகர்.

அவரை பார்த்து முறைத்து நின்றான் குமரன்.

“விநாயகா எனக்கு ஒரு முடிவு சொல்லு. இப்போ பூசாரி எங்கிட்ட வந்து முதல்ல குங்கமம் கொடுத்தால் நான் மைத்ரிய விரும்புறது தப்பு இல்லனு அர்த்தமா எடுத்துக்கிறேன்.”

“அப்போ திருநீறு வந்தால்?” என கேட்ட மனதிடம் “திருநீறு வரக்கூடாது. குங்குமம் தான் வரனும்” என்றான்.

தீபாராதனையோடு அனைவருக்கும் திருநீறு குங்குமம் கொடுத்துக் கொண்டிருந்த பூசாரியின் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் முறை வரும் போது கண்களை இறுக மூடிக்கொண்டான். கண்கள் மூடி இருந்த அவனது நெற்றியில் திருநீறு இட்டவர் குங்குமத்தை எடுத்து அவன் நீட்டியிருந்த கையில் வைத்துவிட்டு சென்றார்.

கண்களை திறந்து கைகளை பார்த்தான். குங்குமத்தை கண்டதும் இதழ்கள் பெரிதாக விரிய விநாயகரை பார்த்து சிரித்தான்.

அதே சிரிப்போடு வாயிலை நோக்கி திரும்ப புன்னகையுடன் அவன் முன் எதிர்பட்டான் சிவா.

புருவ முடிச்சுடன் அவனை பார்த்தான் குமரன்.

தொடரும்…