முன்பே காணாதது ஏனடா(டி) – 30
மைத்ரியின் கேள்வியில் சகோதரர்கள் இருவரும் அதிர்ந்தனர்.
பின் தன்னை நிலைபடுத்திக் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.
மைத்ரி குமரனின் முகத்தையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க “இல்லைங்க லவ் எதுவும் இல்ல” என்றான்.
“நிஜமாவா இதுவரைக்கும் ஒருத்தர் மேல கூடவா லவ் வரல. ஆச்சரியமா இருக்கே”
கார்த்தி, “இதுல என்ன ஆச்சரியம் சரி நீங்க இதுவரைக்கும் யாரையாச்சும் லவ் பண்ணி இருக்கீங்களா”
இப்பொழுது திடுக்கிடுவது மைத்ரியின் முறையானது.
‘என்னடி மைத்ரி உனக்கு வந்த சோதனை இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்த எல்லாத்தையும் உலறிருவ எஸ்கேப் ஆகிடு’ என்று மனதோடு எண்ணியவள் கார்த்தியின் கேள்விக்கு பதில் அளிக்காமல் கொட்டாவி விட்டபடியே “எனக்கு தூக்கம் வருது காலையில பேசிக்கலாம்” என்று கூறியவள் எழுந்து ஓடிவிட்டாள்.
அவள் சென்றது ஒரு புறம் நிம்மதியாக இருந்தாலும் அவள் பதில் அளிக்காமல் சென்றது கார்த்தியின் சிந்தனையை தூண்டியது.
…….
காலை கடன்களை முடித்து அமர்ந்து இருந்தாள் நர்மதா. அவளுக்கு முன் ஆவி பறக்க இட்லியையும் சம்பாரையும் கொண்டு வந்து வைத்தான் செழியன்.
இதுவே வேறொரு நிலையில் இப்படி நிகழ்ந்து இருந்தால் ஒரு கட்டு கட்டியிருப்பாள். ஆனால் தற்போதைய சூழ்நிலையும் மனநிலையும் உடல்நிலையும் அவளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
“எனக்கு வேண்டாம் பசியில்லை”
“பசி இருக்காது ஆனால் மருந்து சாப்பிடனும். அதுக்கு சரியா ஆகாரம் எடுத்துக்கனுமே” என்றவன் அவளுக்கு முன் தட்டை நகர்த்தி வைத்தான்.
மெல்லிய சிணுங்கலுடன் உட்கொள்ள ஆரம்பித்தாள். உணவு முழுவதையும் உண்டு முடித்தவுடன் அதனை எடுத்துச் சென்று சமையல் அறையில் வைத்துவிட்டு வந்தான்.
கவரில் இருந்த மாத்திரைகளை பிரித்து அவளிடம் கொடுக்க வாங்கி கொண்டாள்.
பின் நிதானமாக அவளை பார்த்து கேட்டான் “யாரு அது… “
“யாரு… “
“உங்க மனக்கவலைக்கும் உங்க காதலுக்கும் சொந்தக்காரன் யாரு… “
அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தவளை நோக்கி கசந்த புன்னகையை சிதறவிட்டான்.
“ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறம் புருசனோட தாம்பத்திய வாழ்க்கைய நினச்சு ஏற்படுற பயமும் மனசுல ஒருத்தன நினைச்சுட்டு இன்னொருத்தன் தொட்டுறுவானோனு தவிக்கும் போது ஏற்படுற அருவருப்பும் வேற வேறங்க.
அதை புரிஞ்சுக்க தெரியாத முட்டாள் இல்ல நான். உங்க பார்வையில இருக்குற பயமே சொல்லுது உங்க மனச. உங்கள கட்டாயப்படுத்தி சம்மதிக்க வச்சு இருப்பாங்கனு நினைக்குறேன் கவலைபடாதிங்க உங்களுக்கு விருப்பம்னா அது யாருனு சொல்லுங்க நான் போய் பேசுறேன்.”
அவள் பதில் கூற முடியாமல் அவனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவனால் தான் அவளின் பார்வை வீச்சை தாங்க முடியவில்லை.
வேகமாக எழுந்தவன் மாடியில் பழையது போட்டு வைக்கும் அறைக்குள் நுழைந்து அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த மொத்த அழுகையையும் கதறலாக கொட்டினான்.
உயிராய் நேசிக்கும் ஒருத்தியிடம் உனக்கு விருப்பம் இருந்தால் என்னை என் உறவை விட்டு செல் என்று கூறும் போது எவ்வளவு உடைந்திருப்பான்.
“அம்மு… அ.. ம்.. மு… என்னவிட்டு போய்டுவியா… உனக்கு என்ன பிடிக்கலையா… நீ இல்லாம நான் எப்படி வாழ்வேன்… உம்மனசுல வேற ஒருத்தன் இருக்கான்ல. அங்க நான் இல்லையா… மனசு வலிக்குதுடி… மூச்சு முட்டுது…”
கேவல் அதிகமாக இரு கை கொண்டு வாயை மூடிக்கொண்டான்.
அப்படியே தரையில் அமர்ந்து சுவரில் தலை சாய்த்தான். அவளோடு கனவில் வாழ்ந்த நாட்கள் எல்லாம் ஒன்றாக நினைவில் வந்து பேயாட்டம் போட்டது.
வலி அதிகரிக்க அதிகரிக்க தரையில் விழுந்தவன் சுருண்டு படுத்துக் கொண்டான்.
மனம் ஜெபம் போல் ‘என்ன விட்டு போகாத அம்மு’ என்று சொல்லிக் கொண்டே இருந்தது. கணணீர் கட்டுபாடு இன்றி கட்டாந்தரையை நனைத்தது.
…….
சமையல் அறையில் மதிய உணவிற்காக சமைத்துக் கொண்டிருந்தனர் மஞ்சுளாவும் மகாவும்.
ரத்தினமும் சந்திரனும் வயலுக்கு சென்றிருந்தனர். வள்ளி ஹரியை தூக்கி கொண்டு வீட்டின் பின் புறம் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார்.
அறையில் இருந்த கதிர் “மஞ்சு… மஞ்சு…” என கத்திக் கொண்டிருந்தான்.
“வேலையா இருக்கேன் என்னனு சொல்லுங்க… “
அவனோ மறுபடியும் “மஞ்சு… மஞ்சு” என ஏலம் விட்டுக் கொண்டே இருந்தான்.
இந்த கூத்தை கவனித்துக் கொண்டிருந்த மகாவிற்கு சிரிப்பு தான் வந்தது. மகனின் அழைப்புக்கான அர்த்தம் புரியாதவரா என்ன அவரும் இவர்கள் வயதை கடந்து தானே வந்து உள்ளார்.
வெட்கம் ஒருபுறமும் இத்தனை வருடங்கள் பின்பும் மனைவியின் மேல் தன் மகன் கொண்ட பிரியத்தை எண்ணி கர்வமும் கொண்டார்.
“மஞ்சு நீ போ நான் மத்த வேலை எல்லாம் பார்த்துக்கிறேன். “
“இல்லை அத்தை நான் இதை முடிச்சுட்டு போறேன்” என கையில் இருந்த குழம்பு கரண்டியை ஆட்டியபடி சொன்னாள்.
“குழம்பு மட்டும் தான நான் பார்த்துக்கிறேன் நீ போ”
“சரி அத்தை” என தலையாட்டியவள் “இன்னைக்கு இவருக்கு இருக்கு சப்பாட்டுக்கு முன்னமே வந்து உயிர வாங்குறாரு” என புலம்பிக் கொண்டே அறைக்குள் வந்தவள் கணவனை தேடினாள்.
அந்த கள்வனோ மெதுவாக அறை கதவை சாத்தினான். அந்த சத்தத்தில் திரும்பியவளின் வாயை பொத்தியவன் அவளோடு கட்டிலில் விழுந்தான்.
“ஐயோ.. விடுங்க என்ன பண்றீங்க”
“ம்… லவ் பண்றேன்…”
“என்னவிட்டுட்டு லவ் பண்ணுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு”
“உனக்கு எப்பதான் வேலை இல்ல இப்போ எல்லாம் என்ன நீ கவனிக்குறதே இல்ல. எம்மேல உள்ள காதல் குறைஞ்சுருச்சா இல்ல அழுத்துருச்சா”
சப்பென்று அவனது கன்னத்தில் அறைந்தவள் அறைந்த இடத்திலேயே முத்தமும் கொடுத்தாள்.
கோபம் கொண்டு திரும்பி அமர்ந்தவனின் மடிமேல் ஏறி அமர்ந்தவள் “மூஞ்ச எதுக்கு தூக்கி வச்சுகிறீங்க நான் தான் இப்போ கோபப்படனும். எவ்ளோ பெரிய வார்த்தை சொல்றீங்க”
“அப்படி நான் சொன்னதால தான இப்போ இப்படி வந்து உட்காந்து இருக்க”என்று கூறிக் கொண்டே அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
அவள் அசைந்து கொண்டே இருக்க “கொஞ்ச நேரம் அசையாம இருடி. வேற எதுவும் வேண்டாம் பிளீஸ் கொஞ்ச நேரம்” என்றவன் இடையோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.
தொடரும்…