முன்பே காணாதது ஏனடா(டி) – 3

              விநாயகரை வணங்குவது போல் பாவனை செய்து கொண்டிருந்த நர்மதா மெல்ல விழிகளை திறந்து அவன் இருக்கிறானா என்று பார்த்தாள். அவனும் அவனது தாயும் அவளுக்கு முன்பு நின்று தான் இறைவனை வணங்கி கொண்டிருந்தார்கள்.

இவளோ கண்களை அகல விரித்து அவனை தான் அப்பட்டமாக சைட் அடித்து கொண்டிருந்தாள்.  பூசாரி அவள் முன்பு வெகு நேரமாக ஆரத்தியை காட்டிக் கொண்டிருந்தார் ஆனால் இவளது பார்வையோ ஆரத்தி தட்டில் இருந்து திருநீறு எடுத்து தன் தாய்க்கு பூசிக் கொண்டிருந்த அவன் மேல் இருந்தது.

“அம்மாடி”என்று பூசாரி அழைக்க அதன் பிறகு தான் நிகழ் உலகிற்கே வந்தாள். ஆரத்தி எடுத்து கண்களில் ஒத்தி கொண்டாள் பின்பு குங்குமத்தை எடுத்து புருவ மத்தியிலிருந்த பொட்டிற்கு கீழேயும் திருநீறை மேலேயும் வைத்துக் கொண்டாள் இத்திருநீறு குங்குமம் அவளது முகத்திற்கு அவ்வளவு அழகாக இருந்தது. பின் நிமிர்ந்து பார்க்க அவனை காணவில்லை.

“சே…  இந்த முறையும் மிஸ் பண்ணிட்டேன்.  கணேஷா….  என்ன பார்த்த பாவமாக இல்லையா… “

……….

சென்னை , மகளீர்  விடுதி

இருவர் மட்டுமே பகிர்ந்து கொள்ள ஏதுவான அவ்வறையின் உள்ளே ஒரு புறம் கபோடும் அதற்கு கீழ் ஒருவர் அமர்ந்து படிக்க ஏதுவான ஒரு மேசையும் அதனை ஒட்டி ஒரு ஜன்னலும் அங்கிருந்து ஒரு ஐந்து அடி தொலைவில் சுவரை ஒட்டிய கட்டிலும் போடப்பட்டிருந்தது.

அக்கட்டிலின் கீழ் கால்களை மடக்கி அமர்ந்து கட்டிலின் மேல் தலை கவிழ்ந்து படுத்திருந்தாள் அவள்.  அவளது முகம் சோகத்தில் நிறைந்திருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தையே வெரித்து பார்த்து கொண்டிருந்தாள் .

அப்பொழுது அவ்வறையின் உள்ளே நுழைந்தாள் மற்றொரு பெண்.  படுத்து இருந்தவளை பார்த்த  அப்பெண் அவளை அழைத்தாள். அவளோ எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்தாள். இரண்டொரு முறை அழைத்தும் திரும்பாததால் கடுப்பான அவள் படுத்து இருந்தவளின் தோளை உழுக்கி

“ஏய்…… மைத்ரி எவ்வளவு நேரமா கூப்பிடுறே திரும்பு டி.”

அவளோ அவளுக்கு தன் முகத்தை காட்டாமல் முரண்டு பிடித்தாள். இவளோ வலுக்கட்டாயமாக அவளை திருப்பினாள்.

மைத்ரியின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

உடனே அவளது கன்னங்களை தன் கைகளில் ஏந்தி

“ஏய்..  மைத்ரி….

என்னாச்சு டி எதுக்கு அழுவுற”

என்று கேட்டாள்.

உடனே தாயை பிரிந்த குழந்தை மீண்டும் தன் தாயிடம் செல்லும் போது எவ்வாறு தாயின் கழுத்தை இறுக்கி கட்டிக்கொள்ளுமோ அதுபோல்

“சுமி……” என்று

அவளை கட்டிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள் .

அவளது அழுகையை கண்ட தோழி அவளுக்கும் அழுகை வந்துவிட அதனை கட்டுபடுத்த முயன்றவாரே அவளிடம் அழுகைக்கான காரணத்தை கேட்டாள் அவளின் ஒரே ஒரு தோழியும் உயிர் தோழியுமான சுமித்ரா.

மைத்ரி தன் மடியில் வைத்திருந்த கவரை எடுத்து சுமித்ராவிடம் கொடுத்தாள். அதை பிரித்து படித்து பார்த்த சுமித்ரா அப்பொழுது தான் ஆசுவாசமானாள். 

“ச்செ.. இவ்வளவு தானா நான் என்னமோ ஏதோனு பயந்தே போய்ட்டேன் இதுக்காகவா டி அழுவ”

சுமியின் வார்த்தையில் கடுப்பான மைத்ரி “எருமை மாடே நல்லா பாரு டி என்ன மதுரை பிராஞ்சுக்கு மாத்தி இருக்காங்க

உனக்கு விளையாட்டா இருக்கா எனக்கு அந்த ஊர் புதுசு யாரையும் தெரியாது அதுவும் இல்லாம எனக்கு உன்ன விட்ட வேற யாரும் இல்ல ஏதோ இந்த ஒரு வருசம் தான் நான் சாப்பிட்டன,  நாள் கொஞ்சம் பலவீனமா இருந்த உடம்புக்கு என்ன பண்ணுது. ஏன் இப்போ நான் அழும் போது கூட ஏன் அழுவுற…. என்ன ஆச்சுனு கேக்க நீ மட்டும் தான் இருந்த. இப்போ நான் மதுரை போய்ட்டா மறுபடியும் யாருமே இல்லாம இருக்குற அந்த தனிமைய  நினச்சாலே என்னால முடியலடி.

இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம் நீ ஏன் மத்தவங்க என்ன அநாதைனு ஏளனமா பாக்கும் போது என்மேல அன்பா உன் கூடப்பிறந்தவ மாதிரி பார்த்துகிட்டே அதான் என்ன ரொம்ப பலவீனப்படுத்துது”. என்று மூக்கை உறிஞ்சி சிறு பிள்ளை போல் அழுது கொண்டிருந்தாள்.

சுமி,  “இங்க பாரு மைத்ரி  நீ தான எப்பவும் சொல்வ நம்ம வாழ்க்கையில எது நடந்தாலும் நாம யார சந்திச்சாலும் அதுக்கு பின்னாடி கண்டிப்பா எதாவது காரணம் இருக்கும். அது நல்ல விசயமாகவே இருக்கும்னு நம்பனும் அப்படினு. இப்போ நீ மதுரை போறதுக்கு பின்னாடி கூட ஏதோ ஒரு நல்ல விசயம் இருக்குனு நம்பு சரியா”

அதன் பிறகே அவள் சற்று இலகுவானாள். 

“சரி சொல்லு எதுக்கு திடிர்னு இந்த பிராஞ்சு சேன்ஞ் எல்லாம்.”

கண்களை அழுந்த துடைத்து கொண்ட மைத்ரி “தெரியலடி” என்று கூறினாள்.

சுமி அவளை அழுத்தமாக பார்த்து “எங்கிட்ட எதாவது மறைக்கிரியா” என்று கேட்டாள்.

அவளது பார்வை வீச்சை தாங்க இயலாதவள் தலையை குனிந்தவாறு மெதுவாக தலையை ஆட்டினாள்.

“என்ன…..”

“அது அந்த மேனேஜர் என்ன பார்க்குற பார்வை சரி இருக்காது. நானும் வேல பாக்குற இடத்துல இதெல்லாம் சகஜம் நாம சரியா இருக்கனும்னு பெருசா கண்டுக்கல.

  ஆனா போனவாரம் என்கிட்ட மிஸ் பிகேவ் பண்ணினான் அவன் அந்த மாதிரி நடந்ததும் அழுக தோனல அறைய தோனுச்சு. அதான் காதோடசேத்து கன்னத்துல ஒன்னு விட்டேன். அடிச்ச அடியில அப்படியே சாக் ஆகி நின்னுட்டான். அப்புறம் என்னையே அடிச்சுட்டல உன்ன என்ன பண்றேன் பாருனு  ஓவரா கத்துனான் உன்னால முடஞ்சத பண்ணிக்கடானு சொல்லிட்டு வந்துட்டேன்.”

“ம்…. அப்புறம்”

“அப்புறம் என்ன அந்த நாய் எம்.டி கிட்ட என்ன சொன்னானோ அவர் என்ன கூப்பிட்டு மதுரைக்கு உங்கள மாத்துரேனு சொன்னாறு” என்றவள் முன் அன்று நடந்தவை காட்சிகளாக விரிந்தது.

மைத்ரி, ” சார்…  திடீர்னு இப்படி சொன்னா என்ன அர்த்தம் நான் என்ன தப்பு பண்ணுனேன் சார் “

எம். டி, ” மைத்ரி நீ வேலையில ஜாயின் பண்ணும் போதே இரண்டு வருசம் கண்டிப்பாக வேலை பாக்கனும் கம்பனியோட நல்லதுக்காக நாங்க எடுக்கிற முடிவுக்கு உடன் படுவேன் அப்படினு நீங்க அக்கிரிமெண்ட்ல கையெழுத்து போட்டதா நியாபகம் நீங்களும் மறந்து இருக்க மாட்டிங்கனு நம்புறேன். “

மைத்ரி,  ” எஸ் சார்”

எம். டி,  ” இந்தாங்க அதுக்கான ஆடர் காப்பி அன்ட் உங்களுக்கு அபிசியலா மெயில் கூட அனுப்பியாச்சு செக் பண்ணிகோங்க”

மைத்ரி,  ” சுயர் சார்.. ” என்று சுரத்தே இல்லாத குரலில் சொல்லிவிட்டு தன்னுடைய இடத்திற்கு வந்துவிட்டாள்.

“இது தான்டி நடந்துச்சு”

” என்ன டி அதா அந்த மேனேஜர் கிட்ட தில்லா பேசிட்டு சார்கிட்டையும்  ஓகேனு சொல்லிட்டு வந்துட்டல எதுக்கு இப்போ அழுதுட்டு உட்காந்து இருந்த.”

“போடி லூசு….  நான் ஒன்னும் வெளியூர் போரமேனுல வருத்தப்படல உன்ன பிரிஞ்சு போறேனு தான் கவலைப்படுறேன்.”

“இங்க இருக்குற மதுரைக்கு தான போற டெய்லி போன் பண்றேன். எனக்கு  லீவ் கிடைக்கும் போது நான் அங்க வரேன் உனக்கு லீவ் கிடைக்கும் போது நீ இங்க வா”

“ம்….”  என்று கூறிய மைத்ரியின் முகம் இன்னமும்   தெளிவு இல்லாமல் இருப்பதை கவனித்த சுமி அவளை சகஜம் ஆக்கும் பொருட்டு

“மைத்ரி……  ஒரு வேளை உனக்கான ராஜகுமாரன் அங்க இருக்கானோ என்னவோ……”

மைத்ரியின்  முகம் நொடியில் வெக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது. ஏனோ அவளுக்கு வரப்போகும் மன்னவன் குறித்து பேசினால் மட்டும் கன்னங்கள் சிவந்து விடும் அதுவும் சுமியிடம் மட்டுமே மற்றவர்களிடம் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டாள். இத்தனைக்கும் அவர்களது நட்பிற்கு வயது என்னமோ ஒரு வருடம் தான்.

என்ன மாயமோ மந்திரமோ ஒரு சிலரிடம் பழகிய சில நாட்களிலே அவர்களுடன் ஒருவித வலுவான பிணைப்பு ஏற்பட்டுவிடுகிறது. அப்படி பட்ட பிணைப்பு தான் மைத்ரி – சுமித்ரா வின் நட்பு.

தோழியின் முகத்தில் செம்மையை கண்ட சுமி மேலும் அவளை சிவக்க வைப்பதற்காக

“சொல்லு சொல்லு…..  உன் ராஜகுமாரன் அங்க தான் இருக்கானா” என்று அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டினாள். சற்று முன் வரை அழுகை சத்தத்தில் நிறைந்து இருந்த அந்த அறை முழுவதும் இப்போது மைத்ரியின் சிரிப்பு சத்தத்தில் நிறைந்தது.

……………………….

குமரன் தனது வண்டியை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி விட்டு அந்த அலுவலகத்தின் உள் நுழைந்தான்.

என்ட்ரென்ஸில் உள்ளவர்களிடம் “மேடம் வந்துட்டாங்களா” என்று கேட்டான் எதிரில் இருந்தவரோ “வந்து அரைமணி நேரம் ஆச்சு” என்றார் 

‘போச்சு குமரா இன்னைக்கு செத்த நீ’ என்று தனக்குள் புலம்பி கொண்டே சென்றான். 

ஆபிஸில் உள்ள அனைவரும் அவனை தான் பாவமாக பார்த்தனர்.

தன்னுடைய இடத்தை அடைந்ததும் கேட்டது அவனது பாஸின் கோபக் குரல்

குமரா….

வாட் டைம் இஸ் இட் நவ் ? ( மணி என்ன இப்போ?  )

தொடரும்…..