முன்பே காணாதது ஏனடா(டி) – 27

மணவறையில் தங்களது இணைக்காக காத்து இருந்தனர் செழியனும் சுதர்சனும்.

மணப்பெண்ணை அழைக்கவும் அழகு பதுமையென நர்மதாவும் அருள்மொழியும் மணவறையை நாடி வந்தனர்.

அருள்மொழியின் கண்கள் காதல் ததும்ப தன் இணையை கண்டது. சுதர்சன் கண்கள் தன் கண்களை சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு அவனை நோக்க அவளின் எண்ண ஓட்டம் அறிந்தானோ என்னவோ அவனும் அவளது கண்களை நேர் கொண்டு நோக்கினான்.

அவனது பார்வையில் முகம் அந்திவானமாக சிவக்க உற்றவனை தவிர மற்றவனுக்கு தன் கன்ன சிவப்பை காட்ட மாட்டேன் என உறுதி பூண்டது போல் தலை குனிந்து கொண்டாள்.

நர்மதா எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செழியன் அருகில் அமர்ந்தாள். அந்நொடி செழியன் மனதில் ஏற்பட்ட ஆனந்தத்தை உரைக்க வார்த்தையே இல்லை.

அவனுக்கு கண்கள் கூட கலங்கிவிட்டது. அதை மற்றவருக்கு தெரியாமல் மறைக்க முயன்றான். அப்பொழுது அவன் அருகில் வந்து மாலையை சரி செய்வது போல் அவன் கண்ணீரை துடைத்துவிட்டார் வள்ளி.

பெரிய அன்னையை பார்த்தவனின் கண்களில் இருப்பது அன்பா? நன்றியா?என்பதை அவரால் கூட உணர முடியவில்லை.

சுற்றத்தார் வாழ்த்த மணமகன்கள் மணமகள்களின் கழுத்தில் பொன் தாலியை பூட்டினார்.

தாலியை சுமக்கும் தருணம் கண்களை அழுந்த மூடிய நர்மதா தன் கடந்த கால வாழ்வை மறக்க முயல இம்முறையும் தோல்வியை தழுவினாள்.

கண்கள் கலங்கிய நர்மதாவை கண்டு செழியன்  குழம்பி போனான். தான் காதல் கை கூடியதில் ஏற்பட்ட ஆனந்தத்தில் அழுதோம் ஆனால் நர்மதாவின் அழுகைக்கு காரணம் என்னவாக இருக்கும் என அவளை பார்த்தான்.

அதை பற்றி ஆழமாக அவன் யோசிக்க விளையும் போது அதை கலைப்பது போல் ஐய்யர் அனைவர் காலிலும் விழுந்து ஆசி வாங்க சொல்லவும் அவனது கவனம் திசை மாறியது.

மனைவியுடன் சென்று முதலில் ரத்தினம் வள்ளி தம்பதியரிடம் ஆசி வாங்கினர்.  அதன் பின் மகாவின் அருகே சென்றனர்.

செழியன் அமைதியாக நிற்கவும் நர்மதாவும் தயங்கி நிற்க “அம்மா காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கு நர்மதா” என கூறிக் கொண்டே தாயின் காலில் விழுந்து எழ அவளும் அதுபடியே செய்தாள்.

மகாவின் மனம் குளிர்ந்து போனது. மகன் தன்னை அம்மா என்று அழைத்து விட்டான் அதுவும் அனைவர் முன்பும் பேசிவிட்டான் இதைவிட என்ன வேண்டும் என்பது போல் அவனை ஆரத் தழுவிக் கொண்டார்.

அதே போல் சுதர்சனும் அருள்மொழியும் தங்கள் வாழ்வின் பொன்னாளை பொக்கிஷங்களாக மனதில் பதிய வைத்துக் கொண்டே அந்நிமிடங்களை ரசித்தனர்.

அனைத்து சம்பிரதாயங்களும் முடிய மணமக்களை இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பால் பழம் என மனமக்களுக்கு கொடுக்கப்பட்டு ஓய்வெடுக்க அனுப்பி வைக்கப்பட்டனர்.

……..

குமரன் அலுவலகத்தில் நுழைந்ததும் பணியாள் ஒருவர் வந்து அவனை தாரா அழைப்பதாக கூற அவள் அறை நோக்கி சென்றான்.

“மே ஐ கம் இன் மேம்.”

“எஸ்…” 

வெளியே அவள் உயிர் தோழி என்றாலும் இங்கே அவள் அவனுக்கு பாஸ்.  அதற்கான மரியாதையை கொடுக்க வேண்டும். அதை எப்பொழுதும் குமரன் கொடுப்பான்.

அவர்கள் இருவரும் நண்பர்கள் என அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தெரியும்.

சிலர் நல்லவிதமாக அவர்களை பார்த்தால் சிலர் சந்தேக கண்ணோடு பார்ப்பார்கள். அதை எல்லாம் அவர்கள் கருத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

பேசுபவர்கள் பேசி கொண்டு தான் இருப்பார்கள். அதை மனதில் ஏற்றி கொண்டால் கவலை தான் மிச்சம். நாம் கவலைபடுவதால் அவர்கள் பேசுவதை நிறுத்த போவதில்லையே பிறகு எதற்கு அதை பற்றி ஆலோசிக்க வேண்டும்.

தன் முன் நின்றவனை அமருமாறு சொன்னாள் தாரா.

தன் அருகில் இருந்த கோப்பு ஒன்றை எடுத்து குமரன் முன் நீட்டினாள்.

அவனும் அதை வாங்கி பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான். அதிர்ச்சியின் அளவு அமர்ந்து இருந்தவனை எழுந்து நிற்க வைத்தது.

பெரும் அதிர்ச்சியுடன் தோழியை பார்த்தவன் சிறிது நேரத்தில் படபடவென பொறிய ஆரம்பித்தான்.

அவன் திட்டி முடித்து அமர்ந்ததும் தன் காதில் இருந்த பஞ்சை எடுத்து கீழே போட்டாள் தாரா. அதைக் கண்டு அவனுக்கு இன்னமும் சினம் துளிர்த்தது.

காதில் பஞ்சை அடைப்பதால் அவன் பேசுவது காதில் கேட்காது என்று அல்ல.  அவனை சற்றேனும் வெறுப்பேற்றும் சக்தி அதனிடம் இருந்தது.

“தாரா நீ எடுத்து இருக்குற முடிவு சரியா? இதுக்கு நான் ஒத்துப்பேனு நீ நினைக்குறையா…  நிச்சயம் ஒத்துக்க மாட்டேன்.”

“நான் ஒன்னும் இத உனக்கு சும்மா கொடுக்கல. கொஞ்ச கொஞ்சமா நீ  இதுக்கு உண்டான பணத்த செட்டில் பண்ணிடு.”

“ஆனாலும்…”

“ஆனா.. ஆவனா..  எதுவும் இல்ல.  அப்புறம் இன்னொரு விஷயம் நான் இத பண்றதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு..”

அவன் என்ன என்பது போல் பார்க்க

“நான் என்னோட ஹப்பியோட சேர்ந்து அவர் வீட்டுக்கு போக போறேன்.  இனிமே அது தான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன்.”

“ஏய் சூப்பர் நீ இந்த விஷயத்தல முதல சொல்லி இருக்கனும்” என்றவன் எழுந்து சென்று அவளை கட்டிக் கொண்டு வாழ்த்து தெரிவித்தான்.

“சரி நான் வீட்டுக்கு போறேன் நீயும் வீட்டுக்கு போய் இந்த நல்ல விஷயத்தை எல்லார்கிட்டையும் சொல்லு.”

அவன் மீண்டும் சிந்தனைக்குள் செல்ல

“டேய்…  ரொம்ப யோசிக்காத….”

“இல்ல தாரா….”  என்று அவன் இழுக்க

“கிளம்பு முதல” என அவனை வெளியே தள்ளிக் கொண்டு சென்றாள்.

வீட்டிற்கு வந்தவன் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் போதே கார்த்தியின் புலம்பல் சத்தம் தான் கேட்டது.

“ஏய்…. எருமை கைய கடிச்சுட்ட” என்று சகோதரியிடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தான்.

“தெரியாம பல்லு பட்டுச்சுடா கத்தாத”

மைத்ரி, “கார்த்தி எனக்கு பசிக்குது”

“வரேன் வரேன்” என்றவன் கையில் இருந்த தட்டோடு சமையல் அறைக்கு சென்றான்.

சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த மைத்ரியின் மடியில் சுஜி தன் காலை வைத்திருந்தாள்.

மைத்ரி தன் கையில் இருந்த தைலத்தால் கால்களில் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தாள்.

இருவருக்கும் சப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தான் கார்த்தி.

அண்ணனின் காதல் விஷயம் தெரிந்ததால் மைத்ரியை விலக்கி வைக்க விரும்பவில்லை.  தாய் தந்தையர் இவர்களது திருமணத்தை பற்றி பேசுவதற்கு முன்பே அவளுக்கு நல்ல தோழன் ஆகிவிட்டான்.

ஊட்டும் போது கார்த்தியின் கைகளை கடித்து வைத்து விட்டாள் சுஜி.  அதற்கு தான் சற்று முன் நடந்த சண்டை.

குமரன் உள்ளே நுழைந்து சுஜியை கேள்வியாய் பார்க்க “பஸ்ல இருந்து இறங்கும் போது கால் ஸ்லிப் ஆகிருச்சான் அதான் தைலம் தேச்சு விடுறேன்” என மைத்ரி பதில் கூறினாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வெளியே மழை சாரல் பொழியும் சத்தம் கேட்க மைத்ரி அவசரமாக எழுந்து ஓடினாள்.

அனைவரின் துணிகளையும் சுந்தரியும் அவளும் சேர்ந்து தான் துவைத்து போட்டிருந்தனர்.

அவள் வெளியே ஓடிய இரண்டி நொடிகளிலே மழை வழுபெற்றது.

தாய் சமையல் அறையில் இருந்தார். கார்த்தியின் கையில் உணவுத் தட்டு. தங்கைக்கு காலில் அடிபட்டுள்ளது. வேறு வழியில்லை என்பதால் அருகில் இருந்த குடையை எடுத்துக் கொண்டு மாடிக்கு ஓடினான் குமரன்.

மழையில் நனைந்தபடியே துணிகளை எடுத்துக் கொண்டிருந்த மைத்ரியின் அருகில் சென்று அவளுக்கு குடை பிடித்தான்.

தொடரும்…