முன்பே காணாதது ஏனடா(டி) – 26

மணமகள் அறை

மொழியை அவளது தோழிகளும் நர்மதாவை சொந்தகார பெண்களும் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள்.

தோழிகளின் கேலி கிண்டலில் மொழி ஒப்பனைகள் ஏதும் இன்றி முகம் சிவந்தாள்.

நர்மதாவோ எதிலும் ஈடுபாடு இன்றி அலங்காரம் செய்யும் கை பொம்மையாக அமர்ந்து இருந்தாள்.

அறைக்குள் ஒரு  நாற்காலியில் அமர்ந்து இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கவிதாவும் துளசியும் தங்களுக்குள் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.

நர்மதாவிற்கு ஒப்பனைகள் முடிந்து அப்பெண்கள் அவ்விடம் விட்டு நகரவும் உடன் பிறந்தவளிடம் நெருங்கினர் இருவரும்.

“அக்கா நீ ஓகே தான” என்று மற்றவர்களுக்கு கேட்க வண்ணம் தனிந்த குரலில் கேட்டாள் கவிதா.

தங்கைகள் கேட்கவும் கண்ணீர் துளிர்த்து விட்டது.  இதுவரை இந்த வார்த்தையை தானே அவளும் எதிர்பார்த்தாள்.

யாரவது நீ ஓகேயா? இந்த திருமணம் உனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா? அதற்கு முன் இத்திருமணத்தில் உனக்கு சம்மதமா? இப்படி தன்னை கேட்க மாட்டார்களா! என்று ஏங்கினாள்.

இன்று தங்கைகள் கேட்கவும் கண்ணீர் சுரந்து விட்டது. ஆனால் அதற்கு பலன் தான் கிடைக்கவில்லை.

காலம் கடந்து விட்டது இனி கேட்டு என்ன பயன் என்று விரக்தியுற்றவள் மனதை ஒரு நிலை படுத்தி தான் சந்தோஷமாக இருப்பது போல் வெளியே காட்டிக் கொள்ள பொய்யான புன்னகையை புரிந்தாள்.

“நான் ஓகே தான் உனக்கு என்னாச்சு… ” என்று தங்கையை எதிர் கேள்வி கேட்க

“இல்ல உன்னோட முகமே சரி இல்ல அக்கா.  அங்க பாரு மொழி அண்ணி முகத்துல எவ்வளவு சந்தோஷம் உன்னோட முகத்துல அப்படி எதுவும் இல்லையே அக்கா அதான்.”

அவர்கள் இருவரும் சிறுமிகள் தானே. அவர்களுக்கு எப்படி தெரியும் தமக்கைக்கு விருப்பமா இல்லையா என்று.  இதற்கு முன் ஏதேனும் திருமண நிகழ்ச்சிக்கோ மண பெண்ணின் முகப் பொலிவையோ நேரில் கண்டிருந்தால் தானே அவர்களுக்கும் தெரியும்.

தாய் தந்தை அக்கா இவர்களை விடுத்தால் பள்ளி கல்லூரி மீண்டும் இல்லம் இவ்வாறு தானே அவர்கள் உலகம் இருந்தது.

ஏன் நண்பர்கள் கூட மூவருக்கும் கிடையாது. தந்தையானவர் நண்பர்கள் அனைவரும் பள்ளி நுழைவு வாயில் வரை தான் இருக்க வேண்டும் எவரும் கடைசி வரை உடன் வரப்போவதில்லை என்ற போதனையை ஊட்டி தான் வளர்த்தார்.

அவருக்கு பயந்தே மூவரூம் மற்றவர்களுடன் பழகினாலும் கடை குட்டி மட்டும் அந்த எல்லையை சற்று விரிவுபடுத்தி பள்ளி நுழைவு வாயிலுக்கு பதிலாக தன் வீட்டின் நுழைவு வாயில் வரை என மாற்றி இருந்தாள்.

அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் திருமண பெண்ணின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள இயலுமா சிறுமி தானே அவளும்.

இதுநாள் வரை திருமண பெண்கள் என்றால் தன் தமக்கையை போல அமைதி ஆகிவிடுவார்கள் போலும் என எண்ணி இருந்தனர்.

ஆனால் நேற்று மண்டபத்திற்கு பெண்ணை அழைத்து வந்ததும் மொழியின் செயல்பாடுகளை கண்டு குழம்பி போனார்கள்.

துளசி, “மொழி அண்ணி எவ்வளவு சந்தோஷமா கிளம்புறாங்க நம்ம அக்கா மட்டும் ஏன் உம்முன்னு இருக்கு…:

கவிதா, “ஒவ்வொருத்தர் ஒவ்வொரு சுபாவம் துளசி அதனால தான்” என்று தங்கைக்கு சமாதானம் சொல்வது போல் தனக்கும் சொல்லிக் கொண்டாள்.

ஆனால் நர்மதாவின் செயல்கள் அனைத்தும் மணவறை ஏறும் சமயம் நெருங்கியும் தெளிவில்லாமல் இருக்க இதற்கு மேல் அமைதி காக்க முடியாமல் கேட்டுவிட்டனர்.

தங்களது எண்ணத்தை பற்றியும் சொல்லிவிட

நர்மதா, “அட லூசுகளா அவங்களுக்கு இது காதல் கல்யாணம் ஆனா எனக்கு…”

“ஓ…  ஆமால அப்போ அதான் நீ அமைதியா இருந்தியா…”

“ஆமா…  போக போக எல்லாம் சரி ஆகிரும்.  நீங்க பெரிய மனுசி போல என்ன கேள்வி கேக்காதிங்கடி” என தங்கைகளை சீண்டி நிலைமையை சகஜமாக்க முயற்சித்தாள்.

“நாங்களாவது பேச்சுல தான் பெரிய மனுசி போல தெரியுறோம். ஆனா உன்ன பாரு இந்த சேலையில பத்து வயசு குழந்தைக்கு அம்மா போல இருக்கு. போடி நர்மதா ஆன்டி” என்று கிண்டல் செய்துவிட்டு ஓடிவிட்டனர்.

நர்மதாவின் மனநிலைக்கு நேர்மாறாக செழியன் அங்கு பயங்கர சந்தோஷமாக தயாராகி கொண்டிருந்தான்.

இத்தனை வருட கனவு கை சேர போவதை எண்ணி அவன் உள்ளம் உவகை கொண்டது. முகம் பொலிவில் தங்கம் போல் ஜொலிக்க பேரழகனாக காட்சி அளித்தான்.

சுதர்சனும் செழியனும் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டிருக்க உடன் இருந்த அவனது வயதை சேர்ந்தோர் சிரித்துக் கொண்டிருந்தார்.

செழியனுக்கு தான் தனக்கு சொந்தம் என்று நினைப்பதை பிறருக்கு விட்டுக் கொடுக்க மாட்டானே. அப்படி இருக்கையில் தன் உயிர் நண்பனின் கல்யாணத்தில் தான் தான் கேலி செய்ய வேண்டும் என்று மற்றவருக்கு வாய்ப்பு அளிக்காமல் கிண்டலடித்தான்.

இருவருக்கும் சிரித்து சிரித்து கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. அறைக்குள் தயங்கி தயங்கி வந்தார் மகா.

அவரை கண்டதும் தாய் என்ற மரியாதையில் செழியனும் மாமியார் என்ற மரியாதையில் சுதர்சனும் எழுந்து நின்றனர்.

மகா, “செழியா அம்மா மேல இன்னும் கோபமா இருக்கியா… “

“அப்படி எதுவும் இல்ல “

“எனக்கு உம்மனசுல இருக்குற ஆசை தெரியாம போச்சு மன்னிச்சுடுடா”

“ஐயோ…”  என்று பதறியவன் “எதுக்கு மன்னிப்புனு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க..  நீங்க கதிர் அண்ணனுக்காக யோசிக்குறதுல எனக்கு எந்த கோபமும் இல்ல. பெரியம்மாவா தப்ப பேசவும் தான்….. அதுவும் வெறும் வருத்தம் தான்”

“அப்போ ஏன் இன்னும் என்ன நீ அம்மானு கூப்பிட மாட்டேங்குற…..”

“அ.. து…”  என்று தயங்கியவனின் தலை கோதியவர் “நான் காத்திருக்கேன் செழியா” என்று கூறி வெளியே சென்று விட்டார்.

நண்பனின் தோள் தொட்ட சுதர்சன் “டேய் செழியா பாவம்டா அத்தை. அம்மானு கூப்பிட்டு பேசிடேன்” என்றான்.

“பேசுறேன்டா” என்றவன் வெளியே இருந்து மணமகனை அழைத்து வர கூறவும் இருவரும் மணமேடை நோக்கி சென்றனர்.

அதே வேளை நர்மதா குமரன் இருவரும் வழக்கமாக சந்தித்துக் கொள்ளும் விநாயகர் கோவில் சந்நிதியில் கண்களில் நீர் நிறைய நின்றிருந்தான் குமரன்.

‘உன்னோட சந்நிதில என்னோட காதல சொல்லனும்னு காத்திருந்தேன் அது நடக்கல. ஆனா இப்போ நர்மதா வேற ஒருத்தருக்கு சொந்தம் ஆக போறா இல்ல ஆக போறங்க. அவங்கள ஒருமை அழைக்க இனி எனக்கு உரிமை இல்ல. இதுக்கு மேல நான் அவங்கள நினச்ச அது பெரிய பாவம்.  என்னால அப்படி ஒரு பாவத்த செய்ய முடியாது.

ஆனா நெஞ்செல்லாம் பாரமா இருக்கு. உள்ள ஏதோ குத்துது. இப்போ நான் என்ன பண்ண’ என்று மனதோடு விநாயகரிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

தொடரும்…