முன்பே காணாதது ஏனடா(டி) – 25

அனைவரும் செழியனின் பதிலை எதிர் நோக்கி காத்திருந்தனர்.

“அது… ” என்று இழுத்தவன் சொல்ல தயங்கினான். கொஞ்சம் சங்கட்டமும் கொஞ்சம் வெட்கமும் கலந்திருந்தது அவனுள்.

முதலில் தன் காதல் விவகாரம் பெரிய தந்தைக்கும் பெரிய தாய்க்கும் மட்டுமே தெரியும் என நம்பியிருந்தான். 

ஆனால் அன்று நடந்த நிகழ்வை கேள்வியுற்ற பிறகு அண்ணன் அண்ணிக்கு தெரிந்து இப்பொழுது அனைவருக்கும் தெரிந்து உள்ளதே என்பது அவனுக்கு மேலும் வெட்கத்தை கொடுத்தது.

செழியனின் அருகில் வந்த அவனது பெரியப்பா ரத்தினம் அவனது தோளில் கை போட்டு “சும்மா சொல்லுடா மகனே நாங்க எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டோம்.”

மஞ்சு, “இல்ல கொழுந்தனாரே நான் கண்டிப்பா தப்பா தான் எடுத்துப்பேன்”

“அண்ணி…. ” என்று சிணுங்கினான் செழியன்.

கதிர், “சரிடா சின்னவனே சொல்லு என்ன எடுத்துட்டு போன”

மகா மகனின் வாயை ஆர்வமாக பார்த்தார். ஏன் அங்கிருந்த அனைவரும் ஆர்வமாக தான் பார்த்தனர்.

அனைவரிடமும் சகஜமாக பேசிவிட்டாலும் பெற்ற மகனிடம் மட்டும் இன்னமும் பழைய ஒட்டுதல் வரவில்லை. அவர் கடுமையாக பேசி தீர்த்த வள்ளியிடம் கூட தயக்கம் இன்றி நன்றாகவே பேசினார். மகனிடம் பேச போகும் நாளுக்காக காத்திருந்தார் அன்னை அவர்.

“அது…  வந்து…  பெரியப்பா துளசி தான் சொன்னா நர்மதாவுக்கு புக்ஸ் படிக்க ரொம்ப புடிக்குமா… அதான் கொஞ்சம் புக்ஸ் வாங்கி வச்சேன்.  அதுமட்டும் இல்லாம நாளைக்கு இங்க வந்ததுக்கு அப்றம் புது இடம் அவளுக்கு பழக்கம் ஆகுற வரைக்கும் புக்ஸ் அவளோட தனிமையே போக்கும் அதான்” என்று ஒரு வழியாக ஏதோ சொல்லி சமாளித்து விட்டான். 

உண்மையில் நர்மதாவிற்கு தனிமை போக்குவதற்காக அல்ல அவளுக்கு சிறு வயதில் இருந்தே தன் அறையில் சிறிய நூலகம் உருவாக்க வேண்டும் என்பது கனவு.

ஆனால் அதனை அவளால் செய்ய தான் முடியவில்லை. நர்மதாவின் ஆசை பற்றி துளசி இவனிடம் சொன்னவுடன் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதி கொண்டான். இன்று அதற்கான பணியையும் துவங்கி விட்டான்

“ஏன் கொழுந்தனாரே நாங்க எல்லாம் தனிமைய போக்க மாட்டோமா. இல்ல நீங்க தான் அவள விட்டு விலகி இருந்துடுவீங்களா…. ” என கேலி செய்ய

பதில் பேச முடியாமல் நெளிந்தவன் வயலில் வேலை இருக்கு என அங்கிருந்து ஓடிவிட்டான்.

அனைவரும் சிரித்து விட்டு உள்ளே சென்று விட அருள்மொழி மட்டும் சற்று பின் வாங்கினாள். இதற்காகவே காத்திருந்தவன் போல அவள் அருகில் நெருங்கிய சுதர்சன் பட்டும் படாமலும் உதட்டில் முத்தமிட்டு விட்டு “ரொம்ப ஏங்க வைக்குறடி கல்யாணத்துக்கு அப்றம் உன்ன கவனிச்சுக்குறேன்” என்று விட்டு ஓடி விட்டான்.

அன்று செழியன் நர்மதா திருமணத்தை பேசி முடித்த போது இவர்களின் திருமணமும் முடிவாகிவிட்டது. அதில் இருந்து பெண்ணவள் வீட்டை விட்டு வெளி வராதிருக்க சுதர்சன் தன் காதலியை பார்க்காமல் பசலை நோய் கண்டுவிட்டான்.

இன்று செழியன் அவனிடம் உதவி கேட்டவுடன் உடனே ஒத்துக் கொண்டது கூட இந்த வாய்ப்பை பயன்படுத்தி மொழியை கண்டுவிடலாம் என்ற நோக்கத்தில் தான்.

……….

எவருக்கும் நிற்காமல் நாட்கள் நகரந்தது. மாரி மெது மெதுவாக குணமடைந்து கொண்டிருந்தார்.  மைத்ரியும் மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.

குமரன் தான் மிகவும் கஷ்டப்பட்டான். தந்தை இப்பொழுது வேலைக்கு போகவில்லை. மைத்ரியும் உடன் இருக்கிறாள் அவளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சேர்த்து இருவரது மருத்துவ செலவும் சேர்ந்து கொண்டது.

எவ்வளவு கஷ்டங்கள் வந்த போதும் அவன் அதை சுமையாக எண்ணவில்லை. அந்த நிலமையில் கூட தன் தந்தையை நினைத்து பெருமிதம் கொண்டான். அவன் வேலைக்கு செல்ல ஆரம்பித்து சில ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் அதற்கு முன் அவனது படிப்பு செலவில் இருந்து தம்பி தங்கைகளுக்கான செலவு வீட்டுச் செலவு என அனைத்தையும் அவர் ஒருவரது வருமானத்தில் நிறைவு செய்து உள்ளாரே என்று வியந்தான்.

நிச்சயம் இந்த நிலைமை மாறும்  என நம்பிக்கை கொண்டான். பணி காலம் முடிந்தவுடன் இரவு நேரங்களில் தெரிந்த கடையில் இரவு நேர பணியாளனாக பணிக்கு சேர்ந்தான்.

தோழி தாராவிடம் உதவி கேட்கலாம் தான் ஆனால் தந்தையின் சிகிச்சைக்கு கடன் கேட்பது வேறு தங்களின் அன்றாட தேவைக்கு கை ஏந்துவது வேறு என்று புரிந்து கொண்டு அமைதி ஆகினான்.

தனது குடும்பத்தை தான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் அதில் இருந்து விலகுவது தனக்கு இழுக்கு.  தாராவிடம் கேட்பது தனது சுயமரியாதைக்கு இழுக்கு என உணர்ந்தவன் இரவு பகலாக உழைத்தான்.

இதனால் உணவு உறக்கம் சரிவர இன்றி சற்று மெலிந்துவிட்டான். இவனது நிலை கண்டு குடும்பத்தார் கவலை உற்றனர். மைத்ரியும் உடல் நலம் சிறிதாக முன்னேரவும் பணிக்கு செல்ல ஆரம்பித்தாள்.

இப்படியாக ஒரு மாத காலம் முடிந்தது. அன்று இரவு வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கு வந்துவிட்டான். சம்பள பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு செல்லலாம் என நினைத்து தலை வலி என கூற அக்கடை முதலாளியோ நாளை வந்து வாங்கி கொள் என்றார்.

அவரிடம் எதிர்த்து பேசிட இயலாதவன் சரி என்று கூறி வந்துவிட்டான். அனைவரும் இரவு உணவிற்காக வந்து அமர கார்த்தி அவனது கையில் இரண்டாயிரம் கொடுத்தான்.

“ஏது டா பணம்.. “

“ஃப்ரீ டைம்ல மெக்கானிக் செட்டுல வேலை பார்த்தேன் அண்ணா”

அவனது கூற்றில் மனம் நெகிழ்ந்தாலும் கோபம் தான் முதலில் வந்தது.

“இந்த கை ஸ்டெதஸ் கோப் புடிக்கனும் ஸ்பானர் இல்ல”

சுஜி, “அவன் பண்ணுனதுல என்ன தப்பு அண்ணா. நீ மட்டும் கஷ்டபடனும் நாங்க மட்டும் சொகுசா இருக்கனுமா இந்தா…” என்று அவளும் அவனது கையில் சில ரூபாய் நோட்டுகளை கொடுக்க

அவளையும் கேள்வியாக நோக்கியவனிடம் “காலேஜ் பக்கத்துல இருக்குற டெய்லர் ஷாப்ல ஆரி வொர்க் பண்ணி கொடுத்தேன். முறைக்காத ஃப்ரீ டைம்ல தான் பண்ணிக் கொடுத்தேன். மார்க்ல எந்த குறையும் வராது” என கூறியவள் அனைவருக்குமான உணவை எடுத்து வைத்தாள்.

தான் சொல்லாமல் தம்பி தங்கை இருவரும் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுகிறார்களே என அவர்களை எண்ணி கர்வம் கொண்டான்.

சுஜியுடன் உணவு பதார்த்தங்களை எடுத்து வைத்த மைத்ரியும் பணத்தை கொடுக்க

“ஐயோ…  வேண்டாங்க” என பதறினான்.

அவனது பதறல் அவளுக்கு வருத்ததை கொடுக்க “எதுக்கு வேண்டாம்னு சொல்றீங்க நானும் இந்த குடும்பம் தான. இல்ல என்ன வெளி ஆளா தான் பாக்குறீங்களா” என கண்ணில் திரண்ட நீருடன் கேட்க இப்பொழுது அதை விட அதிக பதற்றத்துடன் பணத்தை வாங்கி கொண்டான்.

அவனது செயலில் மொத்தக் குடும்பமும் சிரிக்க தானும் அசடு வழிய சிரித்தவன் உணவு உண்ண ஆரம்பித்தான்.

……….

திருமண மண்டபம்

நுழைவு வாயிலில் பெரிதாக வைக்கப்பட்ட பேனரில் “செழியன் வெட்ஸ் நர்மதா” என பெரிய எழுத்துக்களால் அழகாக பொறிக்கப்பட்டு இருந்தது.

அதன் அருகே மற்றொரு பேனரில் “சுதர்சன் வெட்ஸ் அருள்மொழி” என்ற எழுத்துக்கள் மின்னியது.

தொடரும்…