முன்பே காணாதது ஏனடா(டி) – 23

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

எம்டி பாபுவின்  வருகைக்காக காத்திருந்தனர் தாராவும் குமரனும். நல்ல விலாசமான அறை. ஒரு பெரிய டேபிலில் சிஸ்டம், பென் ஸ்டான்ட் ,அதன் அருகில் பேப்பர் வெயிட் என வைக்கப்பட்டிருந்தது. அதற்கு வலது புறம் ஒரு ஷோபாவும் டீபாயும் போடப்பட்டிருந்தது.

டீபாயின் மீது சில வார இதழ்கள் நியூஸ் பேப்பர் பிஸ்னஸ் மேகசீன் வைக்கப்பட்டிருந்தது. அங்கே இருந்த ஷோபாவில் அமர்ந்து தான் காத்திருந்தனர் இருவரும்.

அப்பொழுது எதிரே இருந்த மேசையில் உள்ள மேகசீனை எடுத்து புரட்ட ஆரம்பித்தாள் தாரா.  எம்டி அவசரமாக ஒரு கிளைன்ட் மீட்டிங் சென்றிருக்க இருவரும் அதுவரை அவருக்காக காத்திருக்க தொடங்கினர்.

அறையை சுற்றி பார்த்து சலித்த குமரனும் ஒரு மேகசீனை எடுத்து படிக்கலாம் என டீபாயை பார்த்தவனின் பார்வையில்  அதன் மேலே பளிச்சென தெரிந்த திருமண அழைப்பிதழ் கண்ணில் பட்டது.

சிகப்பு வண்ண விநாயகர் படமும் அதன் கீழே மணமக்கள் தாம்பூலம் வைத்து வழிபடுவது போல் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு மனதை கவரும் வண்ணம் அழகாக இருந்தது.

அதனை ரசித்த படியே திறந்து பார்த்தவன் அதில் குறிப்பிட்டு இருந்த பெயரை பார்த்து அதிர்ந்துவிட்டான்.

அதில் இன்னார் மகன் வழி பேத்தியும் இன்னார் மகள் வழி பேத்தியும் என குறிப்பிட்டு அதன் கீழே செல்வி நர்மதா என குறிக்கப்பட்டிருக்க அவசரமாக கீழ் பகுதியை பார்த்தான் தாய் தந்தையரின் பெயர் இருக்கும் இடத்தில் ராஜாராம் கண்மணி என குறிப்பிட்டு இருக்க அவனால் அதிர்ச்சியில் இருந்து வெளி வர இயலவில்லை.

இத்தனை நாட்களும் நர்மதாவிற்கும் தன் மீது விருப்பம் இருந்திருக்கும் என நினைத்து இருந்தான். ஆனால் அவன் முன் இருந்த அழைப்பிதழ் அவனது எண்ண ஓட்டத்தை மாற்றி இருந்தது.

அவனுக்கு தெரியாதே இந்த திருமண ஏற்பாடு அவளது சம்மதத்தில் நடப்பது இல்லை என்று. அவளிடம் உனக்கு சம்மதமா என்று கூட கேட்கவில்லை அவளது பெற்றோர் என்பதை அவனிடம் யார் சொல்வார்கள்.

தன்னுடைய காதல் ஒரு தலையாகவே முடிந்ததை எண்ணி கண்கள் நீரை உதிர்க்க தயாராகியது. அச்சமயத்தில் அருகில் இருக்கும் தாராவிடம் இருந்து தன் கண்ணீரை மறைப்பது பெரும் பாடாக இருந்தது. எம்டி விரைவில் வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என தோன்றியது.

அவனை வெகுவாக சோதிக்காமல் அவரும் வந்துவிட மனதிலே இறைவனுக்கு நன்றி ஒன்றை கூறி கொண்டான்.

“எக்ஸலண்ட் ஜாப் குமரன். நீங்க பண்ணிக் கொடுத்த பிராஜக்ட் எங்களுக்கு நல்ல ரீச் கொடுத்து இருக்கு. உங்களோட கிரியேட்டிவ் சென்ஸ் பத்தி புகழ வார்த்தை இல்லை” என்று பாபு அவனை புகழ்ந்து தள்ளிவிட தாரா தன் நண்பனை பெருமை பொங்க பார்த்தாள். திடீரென மனதின் உள்  ஒரு எண்ணம் தோன்ற அதனை குறித்துக் கொண்டாள்.

இத்தனை பாராட்டுகளையும் பெற்றவன் எந்த தலைகனமும் திமிருமும் அல்லாமல் தன்னடக்கத்தோடு பதில் உரைத்தது அவரை வியப்பில் ஆழ்த்தியது.

தன்னை நர்மதாவின் எண்ணங்களில் இருந்து நிலைபடுத்திக் கொண்டவன் “இதுல என்னோட பங்கு மட்டும் இல்ல சார்.  டீம் மொத்தமும் இதுக்கு காரணம் அவங்க இல்லனா இத செய்து இருக்க முடியாது.” என்றான்.

“ம்…” என்றவர் ‘சரி லன்ச் சாப்பிட போலாமா” என்றார். பின் அவர்களை அழைத்துக் கொண்டு பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார்.

அங்கே உயர்தர உணவுகள் அவன் முன் வரிசைபடுத்தப்பட தம்பி தங்கை நியாபகமும் தாய் தந்தையரின் நியாபகமும் வந்தது.

அவர்களை ஒரு நாள் இதுபோல் உணவகத்திற்கு அழைத்து வந்து வயிறும் மனதும் நிறையும் அளவிற்கு உணவளிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

உண்டு முடித்தவுடன் பாபு அவனை பார்த்து “குமரா” என அழைக்க

“சார்… “

“குமரா அது… நான் சுத்தி வளைக்க விரும்பல நேரடியாவே கேக்குறேன் எனக்கு உங்களோட குணமும் திறமையும் புடிச்சு இருக்கு என்னோட பொண்ணு ஷாலினி மெடிசன் செகண்ட் இயர் படிக்குறா அவளுக்கு மாப்பிள்ளையா நீங்க இருந்த சந்தோஷப்படுவேன்”

அவர் கூறியதை கேட்டு தாரா சந்தோஷம் அடைந்தாள். ஒன்று இரண்டு முறை அவளும் அவரது மகளை பார்த்திருக்கிறாள். அழகான பணிவான பெண். நண்பனின் பதில் என்னவாக இருக்கும் என அவன் முகம் பார்க்க

“சாரி..  சார் எனக்கு நிச்சயம் ஆகிருச்சு கூடிய சீக்கிரத்துல கல்யாணம் நடக்க போகுது.”

சட்டென்று நண்பனின் முகம் நோக்கினாள் தாரா. அவனது முகத்தையும் குரலையும் ஆராய்ந்ததில் அவன் பொய்யுரைக்கவில்லை என்பது புரிந்தது.

பெரிய ஏமாற்றம் அடைந்த பாபு “ஓ…  கங்கிராட்ஸ் குமரா…” என்று தன் உணர்வை மறைத்த படி வாழ்த்தினார்.

“தாங்க்யூ சார் அன்ட் சாரி…”

“ஹே…  இட்ஸ் ஓகே… “

“உங்க ஃபியான்சி நேம் என்ன” என கேட்டார்.

தொண்டையில் இருந்து ந… என நர்மதாவின் பெயர் வெளி வர பார்க்க கடினப்பட்டு அதற்கு பின் “மை…த்ரி” என்றான்.

“நைஸ் நேம்” என்ற அவர் அவர்களிடம் இருந்து விடைபெற சிரிப்புடன் விடை கொடுத்து அனுப்பினர்.

பாபு செல்லும் திசையை பார்த்து இருந்தவனின் கவனம் தாராவின் செருமல் சத்தத்தில் அவள் புறம் திரும்பியது. அவனை லேசான முறைப்புடன் பார்த்து கொண்டிருந்தாள். அதற்கு பொருள் தன் நண்பன் தன்னிடத்தில் ஒன்றை மறைத்து விட்டானே என்பது தான்

தோழி அவளின் முகத்தில் தெரிந்த கேள்விக்கு பதிலாக அன்று நடந்தவைகளை எடுத்து உரைக்க தாராவிற்கும் அவனது நிலை புரிந்தது. ஆதரவாக அவன் தோளை தட்டியவள் நல்லதே நடக்கும். நடந்ததும் நல்லதுக்குனு நினை கவலைபடாதே என்றாள்.

அவளிடம் இருந்து விடைபெற்ற மனதுக்கும் இப்பொழுது நடந்தது நல்லது என்றே தோன்றியது. நர்மதாவிற்கு தன் மேல் எந்த உணர்வும் இல்லை. தான் மட்டுமே கற்பனை வளர்த்துக் கொண்டுள்ளோம்.

தன் காதல் விவகாரத்தை நர்மதாவிடம் சொல்லி இருந்தால் நண்பனாக பழகியவன் காதல் என வந்து நிற்கிறானே இது எவ்வளவு பெரிய தூரோகம் என அவள் எண்ணி விட்டிருப்பாள்.

ஒரு வித பாதுகாப்பு உணர்வு இருந்தது என்பதால் தானே என்னிடம் நன்றாக பழகினாள். தான் காதல் என்று அவள் முன் நின்றிருந்தால் நிச்சயம் உடைந்து போயிருப்பாள்.  அவளது மனது வேதனை அடையும். அது அவளது நிம்மதியையும் குழைத்து விட்டிருக்குமே என அவள் உண்மை நிலை என்ன என தெரியாமல் தன் போக்கில் எண்ணிக் கொண்டிருந்தான்.

இப்படியாக எண்ண ஓட்டத்துடன் வீடு வந்து சேர்ந்துவிட்டான். வாசலில் காலணியை கலட்டிவிட்டு உள்ளே நுழைந்தவன் அங்கே சரியாக நிற்க முடியாமல் தடுமாறி கொண்டிருந்த மைத்ரியை கவனித்தான்.

தடுமாறிய படி நடந்து கொண்டிருந்தவள் ஷ்லிப்பாகி விழ முற்பட ஓடி வந்து தாங்கினான் குமரன்.

தொடரும்…