முன்பே காணாதது ஏனடா(டி) – 21

மாரி மைத்ரியை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டவுடன் அதிர்ந்து எழுந்து நின்றான் குமரன்.

அனைவரும் அவன் பதிலை எதிர்பார்த்து நிற்க முதலில் கார்த்தி தான் பேசினான்.

“அப்பா இப்போ என்ன அவசரம்….  பொறுமையா இருங்க அப்பா… ” என்றான். 

தமயனின் காதலை பற்றி அறிந்தவன் ஆயிற்றே. முதல் முறையாக தனக்கென்று ஆசை பட்டது அந்த பெண்ணை தான். அவளையே அண்ணன் மண முடிக்க வேண்டும் என்று எண்ணினான்.

சுந்தரி, “சும்மா இரு கார்த்தி எங்களுக்கு மைத்ரிய குமரனுக்கு முடிக்கனும்னு ரொம்ப நாள் ஆசை. உங்க அப்பா தினமும் இத பத்தி தான் பேசிட்டு இருப்பாரு. மைத்ரிய பத்தி உங்க எல்லார்கிட்டையும் சொல்லனும் நினைக்கும் போது இப்படி ஆகி போயிருச்சு.”

“குமரா” என்று அருகில் வந்த சுந்தரி அவன் தலையை வருடி “குமரா நீ சொல்லு அப்பா அம்மா எடுக்குற முடிவு சரியாக இருக்கும்னு நீ நம்புறல ம்…”

அழுகையில் தொண்டை அடைக்க எச்சில் கூட விழுங்க முடியாமல் நெஞ்சில் பாரத்தோடு தந்தையின் முகம் நோக்கினான்.

அவர் முகத்தில் தெரிந்த ஏக்கத்தில் செத்தே விட்டான். தந்தை அவரை வலி நிறைந்த பார்வையுடன் பார்த்தவன் “உங்க இஷ்டம் அப்பா” என்றான்.

அவன் குரலில் இருந்த வலியை அறிந்து கொண்டனர் இருவர். ஒன்று கார்த்தி அவனுக்கு அண்ணனின் காதல் விவகாரம் ஏற்கனவே தெரிந்ததால் கண்டு கொண்டான்.

மற்றொருவர் மாரிமுத்து. தாய் அறியா சூல் இல்லை என்பவர் ஆனால் இங்கு தந்தை அறியா தனையன் இல்லை என்பதை நிறுபித்தார் மாரி.

“குமரா” என்று அவனது கைகளை பற்றிக் கொண்டவர் “என்னாச்சுடா ஏன் உன்னோட குரல் ஒரு மாதிரி இருக்கு ம்…

அப்பா உம்மனசு கஷ்டபடுற முடிவ எடுத்துட்டனா” என்றார்.

தந்தையை தவறு கூற முடியா நிலையில் இருந்தவன் “இல்லை அப்பா நீங்க இந்த நிலைமைல இருக்குறப்போ இது அவசியம் இல்லையோனு தோணுச்சு அதான்.”

“எனக்காக கண்ணு… என அவனை கொஞ்சியவர் “இப்போவே கல்யாணம் பண்ண வேண்டாம் பேசி வச்சுக்கலாம் அப்புறம் கல்யாணம் முடிவு பண்ணிக்கலாம் சரியா.”

தந்தையை தற்சமயம் சமாதானம் செய்ய சரி என்றான்.

அதில் அகம் மகிழ்ந்தவர்  “சுஜி போய் மைத்ரிய கூட்டி வா” “சுந்தரி நீ போய் பூவும் குங்குமமும் வாங்கி வா..”

இருவரும் சரி என சென்று விட கார்த்தி தந்தையின் அருகில் வந்து “பூ பொட்டு எதுக்கு பா…  அதான் அண்ணே சரினு சொல்லிருச்சுல நீங்க நல்லபடியா சரி ஆகி வாங்க பிறகு பாத்துக்கலாம்.”

கார்த்திக்கு எப்படியாவது இதனை தடுத்து நிறுத்த வேண்டும் அவனால் முடிந்ததை செயல்படுத்த எண்ணினான் ஆனால் எல்லாம் தோல்வியில் தான் வந்து முடிந்தது.

குமரன் தலை குனிந்தவாரே அமர்ந்திருக்க அவனை போல் தலை குனிந்த வாரே அந்த அறைக்குள் நுழைந்தாள் மைத்ரி.

மைத்ரியை அழைத்து தன் அருகில் நிறுத்திக் கொண்டார் மாரி.  குமரனும் மைத்ரியும் அருகருகே இருந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

மைத்ரி இன்னமும் கார்த்தி தான் மாப்பிள்ளை என எண்ணிக் கொண்டு இருக்க அதனை ஏற்று கொள்ள சிரமப்பட்டு கொண்டிருந்தாள்.

சுஜி அனைத்தையும் சொல்லி தான் அழைத்து வந்து இருந்தாள். அதனால் படபடப்பாகவே இருந்தது. அதே சமயம் அவளது அழகனின் எண்ணமும் தோன்றி அவளை அலைக்களித்தது.

சிறிது நேரத்தில் அவ்விடம் வந்து சேர்ந்த சுந்தரி தான் வாங்கி வந்திருந்த பூவை குமரனின் கையில் கொடுத்து மைத்ரியின் தலையில் வைக்க சொன்னார். தயங்கிய படியே அதனை பெற்றவர் மனதில் தோன்றிய நர்மதாவை கடினப்பட்டு புறம் தள்ளினான்.

எந்த சிந்தனையும் மூளைக்குள் நுழையும் முன் தாய் கூறிய படி மைத்ரியின் தலையில் பூவை சூட்டி விட்டான். அவன் பூ சூட்டும் சமயம் அவளும் கடினப்பட்டு அவளது அழகனின் நினைவுகளை புறம் தள்ளினாள்.

இருவரின் மனதும் ஊமையாய் கதறியது தங்களது காதலை எண்ணி. அடுத்ததாக குங்குமத்தையும் அவளது நெற்றியில் வைத்தவன் அமைதியாக நின்று கொண்டு கலங்கிய கண்களை அனைவரின் முன்பும் காட்டாமல் இருக்க பெரும் சிரத்தை கொண்டான்.

கார்த்தி அண்ணனின் மனதை அறிந்து கவலை உற்றான்.

“ரொம்ப சந்தோஷம்” என்ற மாரி “கார்த்தி டாக்டர் போய் கூட்டி வா நான் தயார்” என கூற “சரிபா” என்று கூறிய கார்த்தி அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

கார்த்தியின் குரல் எதிரில் இருந்து கேட்க திடுக்கிடலுடன் நிமிர்ந்து எதிரில் பார்த்தாள் மைத்ரி அவன் எதிரில் இருப்பின் தன் அருகில் இருப்பவன் யார் என்ற கேள்வியுடன் தலையை திருப்ப இன்ப அதிர்ச்சி அடைந்தாள்.

தன் அழகானா தன் அருகில் இருப்பது என அவளால் நம்ப முடியவில்லை. அதிக மனசோர்வால் தன் மூளை குழம்பி இவ்வாறு தோன்றுகிறதோ என்று அச்சம் கொண்டாள்.

கண்களை இமைக்காமல் அவனையே பார்த்தாள். இமையை மூடி திறந்தால் மறைந்து விடுவானோ என்ற அச்சம். சிறிது நேரத்திலே நிதர்சனத்தை புரிந்து கொண்டாள்.

அவளுக்கு அவளது வாழ்க்கையையும் காதலையும் எண்ணி ஆச்சரியம் ஏற்பட்டது. முதல் சந்திப்பில் காதலன் ஆனான். இரண்டாம் சந்திப்பில் கணவன் ஆகிவிட்டான்.

மாரியின் குடும்பத்தில் இணைய வேண்டும் என்ற ஆசையும் காதல் கை சேர வேண்டும் என்ற ஆசையும் ஓரே நேரத்தில் கிடைத்துவிட வார்த்தையில் விவரித்து சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திளைத்தாள்.

அவளது முகங்கள் காட்டும் பாவனையை கவனித்து கொண்டிருந்த சுமி அவளிடம் இது பற்றி கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

இதற்கிடையில் மருத்துவ குழு வந்து மாரியை ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்று விட குடும்பம் மொத்தமும் நல்ல முறையில் சிகிச்சை முடிய வேண்டும் என்ற வேண்டுதலோடு அறை வாயிலில் காத்திருந்தனர்.

……

திருமண பத்திரிக்கைக்கான டிசைன் பார்க்க வந்திருந்தனர் நர்மதா – செழியன் குடும்ப உறுப்பினர்கள்.

மணமகள் புறம் இருந்து நர்மதாவும் அவளது தாய் தந்தையும் என வந்திருக்க மணமகன் புறம் இருந்து சந்திரன் மகா வள்ளி மூவரும் அவர்கள் உடன் செழியனும் என வந்திருந்தனர்.

முதலில் முகூர்த்த புடவை  எடுத்து செல்லலாம் என முடிவு எடுத்தனர் அதன் படி முதலில் ஜவுளி கடைக்கு வந்தனர்.

செழியன் பல கனவுகள் கை சேர போகும் பூரிப்பில் மினுமினுத்தான். முகத்தில் பொலிவு கூடி பார்ப்பவர்களை மயக்கும் அழகான வலம் வந்தான்.

கடையில் உள்ள இளம் பெண்கள் பார்வை அடிக்கொரு முறை அவனை தொட்டுச் செல்ல பார்க்க வேண்டியவளோ தலை குனிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.

நர்மதாவிற்கான முகூர்த்த புடவையை செழியனே பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்க ராஜாராம் கண்மணிக்கு மகளின் வாழ்வு எண்ணி சந்தோஷம் அடைந்தனர்.

முதலில் கதிருக்காக பேசிவிட்டு பின் செழியனுக்கு மண முடித்து வைக்க கேட்டதால் அவன் என்ன மனநிலையில் உள்ளான் என்பதை அறியதாவர் தற்போது அவனது செய்கையின் மூலம் இது கட்டாயத்தின் பேரில் நடைபெறவில்லை என நிம்மதி அடைந்தனர்.

தொடரும்…