முன்பே காணாதது ஏனடா(டி) – 15

தங்கள் காலடியை சேர்ந்த குருதியை கண்டவர்கள் ஓர் நொடி பயந்து பின் வாங்கி பின் தங்களை மீட்டு கொண்டு விரைந்து செயல்பட்டனர்.

சிலர் மூட்டைகளை விலக்க சிலர் ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள சில இரக்கமற்ற ஜீவன்கள் வீடியோ எடுக்க என இருந்தனர்.

ஒன்று மட்டும் இப்பொழுதும் புரியவில்லை எப்படி அவர்களால் அதை வீடியோ எடுக்க முடிகிறது. தங்கள் குடும்பத்தில் எவரேனோ அல்லது அவர்களே அந்த விபத்தில் சிக்கி இருப்பீர்களேயானால் அவர்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்.

ஒரு உயிர் துடித்துக் கொண்டிருக்க அவர்களை காக்க முன் வராமல் எப்படி அவர்களால் இப்படி ஒரு இழிவான செயலை செய்ய முடிகிறதோ.

இது போன்ற மனிதம் அற்ற மிருகங்களை விட பல மடங்கு உயர்ந்தவர்களாகிய மனிதம் நிறைந்த சிலர் விரைந்து செயல்பட்டு இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

சுமியும் சுந்தரியும் ஆம்புலன்ஸில் ஏறிக் கொள்ள வாகனம் மருத்துவமனையை நோக்கிச் சென்றது.

……..

நர்மதாவும் குமரனும் உணவை முடித்துவிட்டனர். ஆனால் இன்னும் மனதில் இருப்பதை வெளியே சொல்லாமல் தயங்கி கொண்டே இருக்க அவர்களது இந்த தயக்கமே அவர்களை பிரிப்பதற்கு போதுமானதாக இறைவனுக்கு தோன்றியது.

ஒருவர் மீது நமக்கு ஏற்படும் உணர்வுகளை விரைவில் அவர்களிடம் தெரிவித்து விட வேண்டும். அதற்கு அவர்களது பதில் நேர்மறையோ எதிர் மறையோ அது அடுத்த கட்டம்.

எதிர்மறையாக பதில் வந்தாலும் மனதில் இருந்ததை வெளியில் சொல்லிவிட்ட நிம்மதியாவது கிட்டும். ஆனால் அதுவும் அவர்களுக்கு கிடைப்பதற்கு இல்லை.

தயங்கி கொண்டிருந்த குமரனின் நிலையை மாற்றுவதற்காகவே அவனது கைப்பேசி அழைப்பு வந்தது.

தம்பியின் எண்ணில் இருந்து வந்திருந்தது. அதற்குள் கல்லூரியில் இருந்து வந்துவிட்டானா என்று குழப்பத்துடன் அழைப்பை ஏற்று பேசினான்.

எதிரில் இருந்த அவன் தமயன் அவனை ஒரு மருத்துவமனையின் பெயரைச் சொல்லி வரச் சொல்ல பதறி போனான் அவன்.

“யாருக்கு என்ன ஆச்சுடா….”

“அண்ணா நீ முதல வா அண்ணா…. ” என்று அவன் கூற

நர்மதாவிடம் இருந்து விடைபெற்று மருத்துவமனை நோக்கி பயணமானான்.

தம்பி அவன் கூறிய மருத்துவமனை முன் தனது இருச்சக்கர வாகனத்தை நிறுத்திய குமரன் படபடக்கும் மனதுடன் உள் நுழைந்தான்.

உள்ளே சென்றவன் தமயன் கார்த்திக்கு அழைப்புவிடுத்து தான் வந்து விட்டதை தெரிவிக்க அவன் வந்து அழைத்துச் செல்வதாக கூறியவுடன் அங்கே நின்று அவனுக்காக காத்திருந்தான்.

அழுது வடிந்த முகத்துடன் கார்த்திக் வருவதை பார்த்தவுடன் அவனுக்கு கை கால்கள் நடுக்கம் கொண்டது.

“என்னாச்சு கார்த்தி…..”

“வாண்ணா…”

“என்னாச்சு சொல்டா” என்றவனின் கண்களில் இருந்து இரு சொட்டு கண்ணீர் வெளியேறியது.

தன்னை சேர்ந்தவர்களுக்கு தான் ஏதோ போல என்று எண்ணியதற்கே கண்ணீர் ஊற்றெடுக்கிறது என்றால் தான் உயிராய் என்னும் தன் தந்தையின் நிலை அறிந்தாள் என்ன ஆவானோ.

தம்பியை பின் தொடர்ந்தவன் கண்கள் முன் பிணவறை என்று போட்டிருப்பதை கண்டவன் திடுக்கிட்டான்.

…….

சில நிமிட அமைதிக்கு பின் தன்னுடைய பேச்சை ஆரம்பித்தாள் மஞ்சுளா

“அத்தை நம்ம மொழிக்கு மாப்பிள்ளை பாக்குறதா கேள்விப்பட்டோம்.”

‘அதுக்குள்ள எப்படி இவங்களுக்கு தெரிஞ்சது’ என்று மனதுள் எண்ணினார் மகா.

தனது எண்ணங்களை ஓரம் கட்டியவர் “ஆமா” என்றார்.

“அந்த கல்யாண ஏற்பாட நிப்பாட்டிருங்க அத்தை…”

மஞ்சுளாவின் வாய்மொழி அவருக்கு ஆத்திரத்தை மூட்டியது. முதன் முதலாக மகள் அவளின் திருமணத்தை சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது அதனை நிறுத்த கூறிய அவளது சொல் கோபத்தை உண்டு பண்ணியது.

“இதோ பார் என்னோட பொண்ணுக்கு கல்யாணத்தை முடிவு பண்ண எனக்கு தெரியும் நீ எனக்கு புத்திமதி சொல்லாத”

“நான் உங்களுக்கு புத்திமதி சொல்லல அத்த. கல்யாணத்த நிறுத்த சொல்ல காரணம் இருக்கு எங்கிட்ட அத முதல கேளுங்க” என்று தன்மையாக கூற

“அப்படி என்னடி அம்மா காரணம் இருக்கு சொல்லு தெரிஞ்சுக்குறேன்”

அவரது நக்கல் குரலில் தன்மானம் அடிபட அதை பெரிதுபடுத்தாமல் மொழியின் வாழ்க்கையே தனக்கு பிரதானம் எனக் கொண்டு பேச்சை தொடர்ந்தாள்.

“அத்த இந்த கல்யாணத்துல மொழிக்கு விருப்பமானு கேட்டிங்களா”

“எம்பொண்ணு எம்பேச்ச மீற மாட்டா.” என்று கதிரை நோக்கி எம்பொண்ணு என்பதை அழுத்தி சொன்னார்.

“நிச்சயம் மீற மாட்டா ஆனா மனசுல இருக்குறதையும் வெளிய சொல்லமாட்டா”

“எதுக்கு பொடி வச்சு பேசுற சொல்ல வந்தத நேரடியா சொல்லு”

“இந்த கல்யாண ஏற்பாடு நடந்த மொழி உயிர விட்றுவானு சொல்றோம்” என்று கதிர் கூறினான்.

அதில் திடுக்கிடலுடன் அவர் அவன் புறம் திரும்ப “ஆமாம்…  அவ நிச்சையமா தன்னோட உயிர போக்கிக்குவா.”

“எதுக்கு அப்படி சொல்ற கதிர்.”

மகாமா என்று கூற வந்தவன் அதனை தவிர்த்து “நம்ம பாப்பாவ நாம சின்ன பொண்ணுனு நினச்சுட்டு இருக்கோம் ஆனா அவ ரொம்ப வளர்ந்துட்டா”

“ஐயோ….. எனக்கு எதுவும் புரியல கொஞ்சம் தெளிவா சொல்லு…”

மஞ்சுளா, “நம்ம மொழி சுதாகரன விரும்புறா”

………….

செழியன் தங்களது தோட்டத்தை நோக்கி வந்தான். தொட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே “சுதா…. ” என கத்தி அழைக்க தீவிர விவாதத்தில் இருந்த சுதாகரனும் மொழியும் அதிர்ந்து சுற்று முற்றும் பார்த்தனர்.

கோவிலில் இருந்து நேரே இங்கு வந்து விட்டனர்.

“உங்க அண்ணே என்ன தேடுறான் நான் முன்னாடி போறேன் நீ அப்றம் வா”

“சரி”

சுதாகரன் விரைந்து செழியனிடம் செல்ல அவனோ அவனுக்கு பின்னே பார்வையை செலுத்தினான்

“என்ன மாப்ள”

அவனை கூர்ந்து பார்த்தவன் “அவளையும் வர சொல்லு…”

“மா.. மாப்ள…”

“எல்லாம் எனக்கு தெரியும் விஷயம் கை மீறி போக போகுது சீக்கிரம் அவள வரச் சொல்லு… “

நண்பன் காரணம் இன்றி பரபரக்க மாட்டான் என்பதை உணர்ந்து மொழியை அழைத்தான்.

அவளும் அவன் முன் வந்து தலை குனிந்து நின்றாள். எதுவும் பேசாமல் இருவரையும் அழைத்துக் கொண்டு மகாவின் வீட்டை நோக்கி சென்றான்.

தொடரும்…