மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 28

யுக்தயன் தன் மேலதிகாரிகளிடம் குழந்தை பிறப்பின் காரணமாக தன் தாய் நாட்டிற்கு செல்ல அனுமதி வேண்ட மறுத்து விட்டனர் நிறுவனத்தினர்.

மேலும் டாக்குமண்ட்ரி ரிலீஸ்கான வேலைகள் படுவேகமாக நடந்து கொண்டிருக்க இங்கு நிலாவின் தந்தை சுரேஷ் இடம் யுக்தயன் மேல் இருந்த கோபத்தின் அளவு கூடிக் கொண்டே சென்றது.

“பிள்ளை பெற்ற பச்ச உடம்புகாரியை வந்து பார்த்துச் செல்ல கூட இவனுக்கு நேரம் இல்லையா….  தன் மகளை கூட காண வேண்டாம் அவன் மகனை காண கூட அவனுக்கு விருப்பம் இல்லையா… ” என்று அவன் நிலைமை புரியாமல் அவன் மீது கோபத்தை அதிக படுத்திக் கொண்டார்.

யுக்தயனுக்கு எதுவும் தேவையில்லை என தூக்கி போட்டு விட்டு வந்து விடலாம். ஆனால் அப்படி செய்ய இயலாத கட்டாயத்தில் உள்ளான்.

தினமும் தவறாமல் மனைவிக்கு அழைத்து பேசிவிடுவான். குழந்தை முகத்தை பார்ப்பதற்காக தினமும் இந்திரன் நிலாவின் வீட்டிற்கு வருகை தர தினமும் யுகத்யனுக்கு வீடியோ கால் செய்வது வழக்கமாயிற்று.

மகனிடம் பல கதைகள் பேசுவான்.  அந்த குழந்தைக்கு என்ன புரிந்ததோ பொக்கை வாயை திறந்து சிரிக்க அவனை காண வேண்டும் என்ற தந்தை அவனின் ஏக்கமும் கூடிக் கொண்டே போனது.

லண்டனில் இருந்து இந்தியா வந்துவிட்டான் யுக்தயன். நேற்று தான் அவனது டாக்குமண்ட்ரி ரிலீஸ் ஆனது.  அங்கே அதன் வரவேற்பு எப்படி என்பதையெல்லாம் அறியும் ஆர்வம் அவனுக்கு இல்லை.  அவனது எண்ணம் முழுவதும் தன் மனைவி மகனிடம் மட்டுமே இருந்தது.

நிலாவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். வேகமாக வீட்டிற்குள் வந்தவன் அவள் அறை நோக்கி ஓடினான். அறை வாயிலில் ஏதோ நிழல் ஆட நிமிர்ந்து பார்த்தாள் யாழ்நிலா.

அவள் கணவன் நின்று கொண்டிருப்பதை அவளால் நம்ப முடியவில்லை.  தினமும் தான் காணும் கனவு தான் போல என்று

நிலா “தயா மாமா..
இன்னைக்கு என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க… “

நிலா “தயா மாமா
தம்பி இப்போதா தூங்குனா இவ்ளோ நேரம் உங்கள கேட்டு ஒரே அடம்.”

யுக்தயனால் நம்ப முடியவில்லை தன் மனைவி தன்னிடம் பேசியதை.  அவள் முதல் வார்த்தை பேசியதை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தான் என்றால் அதன் பிறகு அவள் கூறிய வாரத்தையில் அதிர்ச்சியின் அளவு கூடியது.

அப்படி என்றால் அவள் தன்னை கனவு என்று எண்ணுகிறாளா.  ‘இன்னைக்கு என்ன இவ்ளோ சீக்கிரம்’ என்றாளே அதன் அர்த்தம் கனவில் தன்னுடன் வாழ்கிறாளா அதனால் தான் அவள் என்னை தேட வில்லையா என்று எண்ணியவன் கண்கள் பனிந்தது.

நிலாவின் அருகில் சென்றவன் அவள் கன்னங்களை தாங்கி “யாழு… ” என்று அழைத்தவன். பிரசவ தினத்தன்று கொடுக்க எண்ணிய நெற்றி முத்தத்தை தற்பொழுது கொடுத்தான்.

நிலாவிற்கு அப்பொழுது தான் விளங்கியது தான் கனவு என்று நினைத்துக் கொண்டிருந்தது நிஜம் என்று.

நெற்றில் முத்தமிட்டவாறு உரைந்துவிட்டவனின் கண்ணீர் கீழிறங்கி நிலாவின் கண்ணீரோடு இணைந்து அவள் கன்னங்களில் இறங்கியது.

அவளை இறுக்கி அணைத்தவன் சற்று நேரம் அப்படியே நின்றுவிட்டான். சமயலில் வேலையாக இருந்த கனகா தற்போது நிலாவின் அறைக்கு வர அங்கு கணவன் மனைவி இருந்த நிலையை கண்டு நிம்மதி பெருமூச்சை விட்டுவிட்டு மருமகனுக்காக சமைக்க சென்றுவிட்டார்.

நிலாவிடம் இருந்து பிரிந்த யுகி அவளின் கண்களை பார்த்து

“எப்படி இருக்க யாழு.. “

அவளோ பதில் உறைக்காமல் முகத்தை வேறுபக்கம் திருப்பி கொண்டாள்.  தாமதமாக வந்ததற்கு கோபமாக இருக்கிறாளோ என்று எண்ணி அவளை சமாதானம் செய்ய முயற்ச்சிக்க அவளோ பிடி கொடுக்கவில்லை.

புரிந்து கொண்டான் அவளுக்கு தன்னிடத்தில் கோபம் இல்லை ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக தன்னை விலக்கி வைக்கிறாள் சரி காத்திருக்கலாம் என முடிவு செய்தவன் ஒரு சிறு சிரிப்பை வழங்கிவிட்டு மகனின் அருகில் சென்று அமர்ந்துவிட்டான்.

தன் நகலின் கைகள் கால்கள் கண் மூக்கு என ஒவ்வொன்றாக தொட்டு ரசித்தான்.

யுகி, “குட்டி அப்பா வந்து இருக்கேன் டா..”

யாழ்நிலா கழிவறைக்குள் சென்று கதவடைத்து கொண்டு சத்தமின்றி கண்ணீர் வடித்தாள்.  கண்ணீர் வடித்துக் கொண்டே விரைவில் அனைத்தும் சரியாக வேண்டும் என கடவுளிடம் ஒரு கோரிக்கை மனுவை செலுத்திவிட்டு வெளியே வந்து கணவனின் அருகில் அமர்ந்தாள்.

உறங்கி கொண்டிருந்தவனிடம் பேசிக் கொண்டிருந்தான் யுக்தயன். அறையின் உள் நுழைந்த கனகா

“வாங்க தம்பி…”  என்று அழைத்துவிட்டு அவனுக்காக எடுத்து வந்த ஜீஸை கொடுத்தார் அவன் கைகளில்.

“தாங்க்ஸ் அத்தை” என்றவன் அதனை வாங்கி பருகினான். அவன் குடித்து முடித்து கொடுத்ததும் டம்ளரை வாங்கி சென்று கழுவி வைத்துவிட்டு மீண்டும் அறைக்குள் வந்தவர்,  யுக்தயனை நன்றாக படுக்கையில் தள்ளி அமர்ந்து கொள்ளுமாறு கூறிவிட்டு குழந்தையை கைகளில் தூக்கினார்.

அவரது செயலைக் கண்டவன் அதன் அர்த்தம் புரிந்து கொண்டு ஆர்வமாக தள்ளி அமர்ந்துக் கொண்டான்.

கனகா அவன் மடியில் குழந்தையை வைக்கவும் அவனுக்கு சந்தோஷம் தாளவில்லை.

வெளியில் சென்று வந்த சுரேஷ் பேரனை காண அறைக்கு வர அங்கே அவர் கண்ட காட்சியில் கோபம் வந்தாலும் அடுத்த நிமிடம் யுக்தயனின் முகத்தில் தெரிந்த பூரிப்பில் கோபம் தனிந்தார்.

அவரும் அந்த வயதை கடந்து வந்தவர் தானே…. ஒரு தகப்பனின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத என்ன. 

அவனை பார்த்துக் கொண்டே ஆராய்ச்சியில் இறங்கியவர் ஒரு நிமிடம் அன்று நடந்த பிரச்சனையில் மருமகன் மேல் தவறு இருக்காதோ என்று தோன்றி மறைய அவரது பிடிவாதம் அதை ஏற்க மறுத்து அந்த எண்ணத்தை சற்று ஒதுக்கி வைத்தார்.

பின் உள்ளே சென்று பேரனை கொஞ்சிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டார்.  கனகாவும் எத்தனை முறையோ எடுத்து சொல்லிவிட்டார் அவர் தான் கேட்ட பாடில்லை.

அன்று நாள் முழுவதும் அங்கேயே தான் இருந்தான்.  பின் இரவு போல் மனமின்றி வீட்டிற்கு சென்றான்.

காலையிலேயே இந்திரனும் கண்மணியும் பேரனை பார்த்துவிட்டு தான் வந்தனர்.  தான் இந்தியா வரப்போவதை தந்தை இந்திரனிடம் மட்டும் கூறி இருந்தான் யுக்தயன்.

ஆகையால் யுக்தயன் வரும் பொழுது தாங்களும் அங்கேயே இருந்தால் அவனுக்கு சங்கட்டமாக தோன்றும் என்பதால் மனைவியிடம் கனகாவின் மூலம் ஏதோ காரணங்களை கூற சொல்லி அழைத்து வந்துவிட்டார்.

டைனிங் டேபிலில் அமர்ந்து மறுநாள் காலை சமையலுக்கான காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்தார் கண்மணி.

உள்ளே நுழைந்தவன் தாயின் அருகில் சென்று கீழே அமர்ந்து அவரது மடியில் தலை வைக்க முயன்றான்.

அவன் செய்ய போகும் காரியம் புரிந்தவராக எழுந்து கொள்ள முயற்சிக்க அவரின் கால்களை பற்றிக் கொண்டவன்

யுகி, “மா…. பிளீஸ் மா..  கொஞ்ச நேரம்..  பிளீஸ்” என்று உடைந்த குரலில் கெஞ்ச

அந்த தாயுள்ளம் அதற்கு மேல் வீம்பு பிடிக்குமா..

அப்படியே அமர்ந்துவிட்டார்.  யுக்தயனும் அவர் மடியில் தலை வைத்து தரையில் அமர்ந்து கொண்டான்.

யுகி, “அம்மா…  இனிமே நா உங்கள விட்டு எங்கையும் போக மாட்டேன் மா… “

இப்பொழுது எதற்காக இப்படி பேசுகிறான் என்று அவருக்கு புரியவில்லை.

யுகி, “மா…  இப்போதா மா..  எனக்கு புரியுது.  எம்புள்ளைய பாக்க முடியாமா எவ்ளோ கஷ்டபட்டேன். அதுபோல தான நீங்களும் கஷ்டபட்டு இருப்பீங்க சாரி மா…”

“இனிமே நா எங்கையும் போக மாட்டேன் உங்க கூடவே இருக்கேன்.  நீங்க பேசுனாலும் சரி பேசலனாலும் சரி.”

மகனின் கூற்றில் தாயின் கண்கள் கண்ணீரை சொரிந்தது. அவன் தலை கோத உயர்ந்த கையை கடினப்பட்டு பின்னிழுத்துக் கொண்டார்.

தொடரும்…