மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 25

உணர்ச்சிகளின் பெருக்கில் இருந்தவன் அவள் மணி வயிற்றில் கரம் பதித்து தன் உயிரை வரவேற்றான்.

யுகி, “ரொம்ப தாங்க்ஸ் யாழு நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”

அவளை தன் புறம் திருப்பி அவள் முகத்தை கைகளில் தாங்கி மீன் விழிகளில் முத்தமிட்டான்.  அவன் இதழ் பதிந்த தருணம் ஒரு துளி நீர் கண்மணியில் இருந்து கீழ் இறங்கியது.

கணக்கின்றி முகம் முழுவதும் முத்தம் இட்டான். எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அவள்.  சொல்லப்போனால் அவள் மனமும் அவனின் நெருக்கத்தை தான் கேட்டது.

அவளுக்கு அவன் மீது கோபமே.  அதுவும் அவன் மீது தவறு இல்லை என்பது  நிதானமாக யோசித்த இந்த ஒரு மாத காலத்தில் நன்கு புரிந்துவிட்டதால் அவளை விட்டு விலகிவிட்டது. ஆனால் தன் தந்தையே தன் கணவனை வெறுப்பதை தாங்கிக் கொள்ள இயலவில்லை அவளால்.

தன்னை பெற்றவரின் மனதாங்களோடு தங்கள் வாழ்க்கை அமையக்கூடாது. அவர் மனதார எங்களை வாழ்த்த வேண்டுமே அன்றி எங்களை கண்டு அவர் மனது பொருமல் கொள்ள கூடாது என்பது அவள் எண்ணம். 

வெளியிலிருந்து பார்ப்பவர்கள் கூறலாம் நம் வாழ்க்கை நமக்காக வாழ வேண்டுமே அன்றி மற்றவருக்காக அல்ல என்று.  ஆனால் நடுத்தர குடும்பத்தில் சிறு வயதில் இருந்து அனைத்து காரியத்திற்கும் தந்தையின் நிழலை திணிக்கப்பட்டு வாழ்ந்தவர்கள் அதில் இருந்து சுதந்திரம் கிடைத்தாலும் வெளியேற தயங்குவர். கம்போர்ட் ஜோன் என்றும் சொல்லலாம்.

அனைத்திற்கும் அவர்களது திருப்தியை விட தந்தையின் திருப்தியே பிரதானமாகப்படும்.  ஒரு துணி வாங்க வேண்டும் என்றாலும் தந்தை இதை வாங்கினால் என்ன கூறுவார் அவருக்கு பிடிக்குமா திட்டுவாரா என்று ஆயிரம் முறை யோசிப்பர். 

இது சாதரணமாக தெரிந்தாலும் அது மிகப் பெரிய பிரச்சினையாக உருமாறும்.  தனக்கு பிடித்தது தந்தைக்கு பிடிக்கவில்லை எனில் அது அவர்களுக்கு நிராகரிக்கப்படும்.  தனக்கு பிடிக்காதது தந்தைக்கு பிடித்திருக்கிறது எனில் அது அவர்களுக்கு திணிக்கப்படும். அது அவர்களுக்கு பழகியும் விடும்.  இல்லை பழக்கப்படுத்திக் கொள்வர். 

இதனால் அத்தந்தை கெட்டவர் அல்ல.  தன் பிள்ளையின் வாழ்வில் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும். தான் படும் துயரம் அவர்கள் பட்டுவிடக் கூடாது என்ற ஆதங்கம் மேலோங்கி இருப்பதால் தான்.  இதனால் பெரும்பான்மையோர் பிள்ளையின் ஆசை என்ன என்பதை அறிய மறுக்கின்றனர்.

இதில் ஆண் பெண் பேதமில்லை இரு பாலருக்கும் பொருந்தும்.  அத்தனை கட்டுபாடிலும் தங்களை விலக்கி கொண்டு சுதந்திரமாக வாழ்பவரும் உண்டு. அதில் கடைசி வரை சிறைபடுபவர்களும் உண்டு.

இப்படி ஒரு சூழ்நிலை தான் நிலாவிற்கும் அவள் தந்தைக்கும்.

நிலாவை அழைத்து வந்து கட்டில் அமரவைத்து ஆயிரம் கதைகள் பேசினான்.  அதில் பாதி அர்த்தமற்ற ஏதேதோ விஷயங்கள் தான்.  எவ்வளவோ ஆபத்தான காரியங்களையும் அவன் பணியின் காரணமாக சாகஜமாக கடந்து வந்துள்ளான்.  ஆனால் இந்த அதீத சந்தோசத்தை கையாள தெரியாமல் ஏதேதோ பேசினான்.

பேசிக்கொண்டே இருக்கும் பொழுது ஒரு இடத்தில் சற்று நிதானம் அடைந்தான். அப்பொழுது தான்  வெகு நேரமாக தான் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம் அவளிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லையே என்பதை புரிந்துக் கொண்டான் யுக்தயன்.

“எங்கிட்ட பேச மாட்டியா யாழு…”
என்று கேட்டான். கேட்க ஆரம்பிக்கும் போது தொண்டை அழுகையில் அடைத்தது.

யுகி, “நீயும் என்ன தப்பா நினைக்கிறயா….  ம்…  நா உங்க அப்பாவா அடிச்…. “அதற்குள் அவன் வாயில் கைகளை வைத்து இடம் வலமாக தலை அசைத்தாள்.

பின் மீண்டும் மவுனம் சாதித்தாள்.  ஏதோ புரிந்த யுகி அதன் பிறகு அவளிடம் எதுவும் கேட்கமால் தரையில் அமர்ந்து கட்டிலில் அமர்ந்திருந்தவளின் மடியில் தலை வைத்து படுத்துவிட்டான்.

அவளும் இதமாக அவன் தலை கோத ஒரு மாத காலம் அவனை விட்டு விலகியிருந்த நித்ராதேவி இன்று வந்து அவனை கட்டிக்கொண்டாள். சுகமாக உறங்கி போனான்.

சில மணி நேரத்தில் எழுந்தவன் கழிவறை சென்று முகம் கழுவி வந்தவன்

யுகி, “கிளம்பலாமா யாழு… ” என்றான்

அவளோ அவனை ஒருவித தவிப்போடு ஏறிட்டுவிட்டு தலை குனிந்தாள்.

யுகி, “என்னாச்சு யாழு கிளம்பு நம்ம வீட்டுக்கு போகலாம்.”

அவளோ அசையாது இருக்க கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்தான். தன் மகவின் வரவு அனைத்தையும் சரி செய்து விட்டதாக எண்ணினான்.  என்ன  தன் மேல் உள்ள கோபம் குறைய நாள் எடுக்கும் என்றிருந்தான். ஆனால் தன்னோடு வர மறுப்பாள் என அவன் எண்ணவில்லை.

யுகி, “சரி நீ வர வேண்டாம் அப்பப்ப வந்து உன்னையும் குழந்தையும் நா வந்து பாத்துக்கலாமா யாழு “

“அதுக்கு மட்டும் மறுப்பு சொ…ல்லிடாத…  யாழு”

தலை குனிந்து அமர்ந்திருந்தவளின் கண்ணீர் துளிகள் தரையில் விழ அதை பார்த்தவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவ்விடம் விட்டு அகன்றான்.

கண்களை துடைத்துக் கொண்டே வெளியே வந்த யுக்தயனை கண்ட சுரேஷ் ஏளன சிரிப்பு ஒன்றை வழங்கிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.
……..

தன் வீட்டிற்கு வந்தவன் ஹாலில் அமர்ந்து எதையோ யோசித்து கொண்டிருந்த தாயின் அருகில் சென்று அமர்ந்தான்.

அவன் வந்து அமரவும் வேகமாக எழுந்தவரின் கைகளை பற்றி அவரை தடுத்தவன்

யுகி, “மா நீங்க எங்கிட்ட பேச வேண்டா ஆனா நா பேசுறத மட்டும் கேளுங்க”

‘உன்ன நியாயப்படுத்த போறியா’ என்பது போல் பார்த்தார் அவர்.

அவரது பார்வையின் பொருள் புரிந்தவன்

யுகி, “நா என்ன நிய்யப்படுத்த வரலமா… நம்ம வீட்டுக்கு உங்க பேர பசங்க சீக்கிரத்தில வரப்போறங்க அத சொல்லதா வந்தே” என்று கண்ணீரோடு கூறியவன் அவர் முகம் காணாமல் தன் அறை நோக்கி சென்று உள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டான்.

அன்று நடந்த பிரச்சனைக்கு பிறகு கண்மணி தன் மகன் யுக்தயனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.  இன்று பேர பிள்ளை வர இருக்கும் சேதி அறிந்தவர் அதன் பின் அங்கு இருப்பாரா….  உடனே கிளம்பிவிட்டார் நிலா வீட்டிற்கு.

நிலாவின் பெற்றோரும் அவரை அழைத்து உபசரித்தனர். அவர்களுக்கு யுக்தயன் மேல் தான் கோபம் அன்றி அவர் மேல் அல்ல.  ஆனால் என்ன சுரேஷ் மட்டும் முன்போல் இல்லாமல் ஒட்டியும் ஒட்டாமலும் பழகினார். அதை புரிந்து கொண்ட கண்மணியும் அவருடன் அதிகம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளவில்லை.

மாலை போல் வீட்டுக்கு வந்த இந்திரன் யுக்தயனின் அறைக்கு சென்று அவனை கட்டிக் கொண்டு வாழ்த்து சொன்னார்.

இந்திரன், “மதியம் தங்கச்சி போன் பண்ணுச்சுடா.  ஆனா… மீட்டிங் இருந்ததால உடனே வர முடியல இப்பதான் நிலாவ பாத்துட்டு வரேன்.”

“என்னடா நா பேசிட்டே இருக்கேன் நீ தரையவே பாத்துட்டு இருக்க”  என்று அவன் முகம் நிமிர்த்த கண் கலங்கி இருந்தான் அவன்.

இந்திரன் “யுகி எதுக்குடா அழுவுற இதோ பார்…. எல்லாம் சரி ஆகிரும்.  வரப் போற உம்புள்ளைய சந்தோசமா வரவேற்க பாருடா இப்படி அழுமூஞ்சியா இருக்காத” என்று கூறி அவனை சமாதானம் செய்தார்.

தொடரும்…