மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 24

ஒரு மாத காலம் முடிந்து விட்டது இன்றோடு அவளை பிரிந்து. அன்று அவனது தாய் கூறியதை கேட்டவன் தந்தையோடு புறப்படும் முன் நிமிர்ந்து அவளது அறையின் பால்கனியை பார்த்தான். திரை சீலைக்கு பின் அவளது உருவம். கசந்த புன்னகையே தோன்றியது .

அவள் தன்னை சந்திக்க விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டான் அவளது வெறுப்பு அவனை உயிருடன் கொன்றது .  ஆனால் அவன் மீது இருப்பது வெறுப்பு அல்ல வெறும் கோபம் மட்டும் தான் என்பதை கூறுவதற்கும் அவள் அருகில் இல்லையே பாவம் அவனும் என்ன செய்வான். 

அதன் பிறகு எதன் மீதும் கவனம் செலுத்த முடியவில்லை . தனது டாக்குமெண்டரி வேலையை தொடர்ந்தால் இந்த வெறுமையில் இருந்தும் தனிமையில் இருந்தும் தற்காலிக விடுதலை கிட்டும் என தோன்றி அதனை செயல் படுத்த முயன்றான். அதிலும் தோல்வி. அவளது விஷயத்தில் தான் இவ்வளவு பலவீனமானவனா என்று வருந்தினான். 

ஒருவழியாக தன்னை சமன்படுத்தி முயன்று அடுத்த வனப்பகுதியை நோக்கி பயணத்தை தொடர்ந்தான். சரியாக இரண்டு நாள் கழித்து அவனது கைபேசிக்கு புலனத்தில் (whatsapp )இருந்து செய்தி ஒன்று வந்தது.

அனுப்புநர் இடத்தில் நிலாவின் பெயர் விரைந்து அதனை திறந்து பார்த்தான்.  அடுத்த நொடி தனது அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு அவளிடம் செல்ல புறப்பட்டான். 

…………………………………………..

நிலா வீட்டின் முன் நின்றிருந்தான் யுக்தயன். காலிங் பெல்லை அழுத்த கைகளை உயர்த்தியவன் அதனை செய்யாமல் கைகளை கீழ் இறக்கி கொண்டான். அவனுக்கு கடைசியாக அந்த வீட்டின் முன் இருந்து தான் அழுது கொண்டே சென்றது நினைவில் வந்தது . கூடவே நிலாவின் தாய் உரைத்த செய்தியும். தயங்கி நின்றிருந்த வேளையில் கதவு திறந்தது.

இம்முறை அவளது தந்தை நின்றிந்தார். அவர் முகம் காண வெட்கினான். தவறு இளைக்க வில்லை எனினும் ஒரு தயக்கம்.  தன்னால் தான் அன்று அவருக்கு அவமானம் என்று.

அவனை கண்டவர் பதில் ஏதும் கூறாமல் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்பித்தார். ‘உள்ளே வா’ என்றும் அழைக்கவும் இல்லை ‘வெளியே போ’ என்றும் துரத்தவும் இல்லை தயங்கி நின்று இருந்த பொழுது அவன் காதில் கேட்டது அந்த வார்த்தைகள்

கனகா, “நிலா அவளோட ரூம்லதா இருக்க தம்பி”

மவுனமாக தலை அசைத்துவிட்டு அவள் அறை நோக்கி சென்றான்.  முன்பு ‘மாப்பிள்ளை’ என்று இருந்தவன் இன்று ‘தம்பி’ ஆகி போனேனே என்று வருத்தம் கொண்டான்.  இருப்பினும் தம்பி என்று அழைத்தாவது அத்தை தன்னிடம் பேசுகிறாறே அதுவரையில் ஆனந்தமே என்று எண்ணிக் கொண்டான்.

ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் கனகா ஒரு தாய் தன் மகள் நல்வாழ்விற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்பாரே அன்றி நடந்து முடிந்தவைகளை பிடித்து தொங்கி கொண்டு இருக்க மாட்டார். அதனால் யுக்தயனை மன்னித்துவிட்டார் என்று இல்லை. சற்று கோபம் தானே ஒழிய வெறுப்பு அல்ல.

இன்று காலை தன் மகள் சோர்வாக இருப்பதை கண்டு அவளிடம் விசாரித்தார். மாதந்திர பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கும் என்றாள் அவள்.  தாய்க்கு தெரியாத மகளின் மாதாந்திர செயல்பாடுகள்.  ஆரம்பத்திலே கணித்தார் இப்பொழுது அது சற்று வழுப்பெற மருந்தகம் சென்று தேவையானதை வாங்கி வந்து பரிசோதிக்க சொன்னார். 

அதை தன் கையில் வாங்கியப் பின்னரே அவளது புத்திக்கு உரைத்தது நாள் தள்ளிப் போகி இருப்பது. பரிசோதித்து வந்தவள் தாயை கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

கனகா, “நல்ல விஷயம் தானடி அதுக்கு ஏ அழுவுற”

நிலா, “அப்பாவ நினச்ச பயமா இருக்கு மா”

கனகா, “இதோ பார் இது உங்குழந்த அதை முதல நியாபகம் வச்சுக்கோ..
வா ஹாஸ்பிட்டல் போய் ஒரு தடவ செக் பண்ணிட்டு வந்துடலாம் “

இருவரும் ஹாஸ்பிட்டல் சென்று பரிசோதிக்க பிரக்னன்சி கன்பார்ம் ஆகி விட்டது. உடனடியாக கணவனுக்கு தெரிவிக்க அறிவுறுத்தினார் அவள் தாய்.

அவளும் அங்கிருந்த ரிப்போட்டை கணவனுக்கு புலனத்தின் வழி அனுப்பிவிட்டு தாயுடன் வீடு நோக்கி புறப்பட்டாள்.

மறுநாள் சுரேஷின் முன் நின்றிருந்தனர் இருவரும்

சுரேஷ், “என்ன விஷயம் எதுக்கு இரண்டு பேரும் அமைதியா இருக்கிங்க”

கனகா, “அது உங்க பொண்ணு முழுகாம இருக்க”

அந்த வார்த்தையை கேட்டதும் சந்தோஷம் அடைந்தார். ஆனால் மறுகணம் அவரது வரட்டுபிடிவாதம் அவர் முன் நின்று ‘உம்மருமகனை ஏற்றுக் கொள்ள போகிறாயா’ என்று கேள்வி எழுப்பியது.  அதற்கு அவர் பதில் கூறும் முன்பே ‘ஏற்றுக் முடியாது’ என்றது அவரது ஈகோ.

சுரேஷ், “அதுக்கு என்ன பண்ணனும் இப்போ” தந்தையின் பதிலில் மிகுந்த கவலை கொண்டாள் நிலா.

கனகா, “சம்பந்தப்பட்டவருக்கு தெரியப்படுத்த வேண்டாமா”

சுரேஷ்,” எப்போது இருந்து உனக்கு எம்முன்னாடி இந்தளவு பேச தைரியம் வந்துச்சு”

கனகா, “உங்க முன்னாடி நின்னு பேசுறது உங்க பொண்டாட்டி இல்ல எம்பொண்ணோட அம்மா நினவிருக்கட்டும.” என வெட்டும் பதில் அழித்தார்.

சுரேஷ், “என்னமோ பண்ணுங்க ஆனா எம்பொண்ண இந்த வீட்ட விட்டு அனுப்ப முடியாது” என்று அங்கிருந்து நகர்ந்தார்.

கலக்கமாக தாயைப் பார்த்த நிலாவிடம் கனகா “இந்தளவுக்கு உங்க அப்பா இறங்கி வந்ததே பெருசு போக போக எல்லாம் சரி ஆகிரும்.  புள்ளத்தாச்சி பொண்ணு மனச போட்டு குழப்பிக்காத. அது குழந்தைக்கு நல்லது இல்ல.  நல்லதே நடக்கும் நம்பு ” என்று கூறி அவளை அறைக்கு அனுப்பி வைத்தார்.

தாயிடம் இருந்து விடை பெற்றவள் அறைக்குள் வந்து சன்னலின் வழி வேடிக்கை பார்த்தாள்.  அப்பொழுது கணவன் கேட்டின் உள் நுழைவது கண்டாள். அவனை எதிர்கொள்ள தயங்கி சன்னலின் கம்பிகையை இறுக பிடித்து அப்படியே நின்று விட்டாள்.

இங்கு கதவை திறந்த சுரேஷிற்கு அதிர்ச்சியே.  பிறகு இருக்காத தாயும் மகளும் சற்று முன்பு தான் தன்னிடம் அனுமதி கேட்டனர். அதற்குள் தன் முன் நிற்பவரைக் கணடு ஆச்சரியபடாமல் எப்படி இருக்க முடியும். 

மேலும் யுக்தயனின் முகத்தில் தெரிந்த கலவை உணர்வு குவியலை பார்க்கும் போதே புரிந்து கொண்டார் விஷயம் தெரிந்த வந்திருக்கிறான் என்று. அவரும் இந்த அனுபவங்களை கடந்து தானே வந்துள்ளார்.  அதனால் அறிந்துக் கொள்வது ஒன்றும் சிரமமாக இருக்காதே. மேலும் அவன் வெளியூர் சென்றதையும் அறிந்தே வைத்திருந்தார். அது தான் அதிர்ச்சியின் அளவு கூடியதற்கான காரணம்.

மனைவியும் மகளும் தன்னிடம் அனுமதி கேட்கவில்லை, அறிவிப்பு மட்டுமே கொடுத்துள்ளனர் என்பதை எண்ணுகையில் கோபத்திற்கு பதிலாக சிரிப்பே வந்தது.

அறையின் உள் நுழைந்த யுகி ஜன்னலின் அருகே நின்றிருந்தவளை பின்னிருந்து அணைத்தான்.  அவன் கண்ணில் இருந்து வடிந்த கண்ணீர் அவளின் தோளில் பட்டு தெரித்தது.  அதன் ஈரத்தை அவள் உணர்ந்த அதே தருணம் முன்புறமாக அவளது வயிற்றை சுற்றி இருந்த அவனின் கைகளின் மேல் இவளது கண்ணீர்பட்டு அதன் ஈரத்தை அவனுக்கு உணர்த்தியது.

இருவரும் ஆனந்த கடலில் இருந்தனர்.  உணர்ச்சிகள் எனும் ஆழிப்பேரலையில் இருந்து தப்பும் மனநிலை இன்றி அதிலே மூழ்கி போகும் வண்ணம் இருவரும் ஒருவர் அணைப்பில் ஒருவர் வெகு நேரம் நின்றிருந்தனர்.

தொடரும்……