மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 23

இந்திரன் யுகியை அவனது அறைக்கு அழைத்துச் சென்று அவனை படுக்க வைத்து போர்வையை போர்த்திவிட்டார்.

யுகி, “அப்பா…  யாழு  நிஜமாவே என்னவிட்டு போய்ட்டாளா பா… “

இந்திரன், “அவ வந்துருவாடா “

யுகி, “நிஜமாவா… “

இந்திரன், “ம்…  நீ முதல கண்ண மூடி தூங்கு எல்லாம் சரியாகிரும் அப்பா இருக்கேல”

யுகி, “ம்.. “

பின் அவன் உறங்கும் வரை அவனை பார்த்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து கொண்டார்.  அவன் உறங்கவும் தன் அறைக்கு விரைந்தவர் கட்டில் படுத்து உறங்க முயற்சித்தார். தன்னிடம் ஏதோ பேச வந்த மனைவியிடம் முகம் திருப்பி படுத்துவிட்டார். கணவனது செயல் அவரை மிகவும் காயப்படுத்தியது.

திருமணம் ஆன நாளிலிருந்து இந்திரன் மனைவியிடம் இவ்வாறு நடந்து கொண்டதில்லை.  மணிமா…  மணிமா… என்று அவர் பின்னே சுற்றிக் கொண்டிருப்பார்.  இன்று கணவனின் முதல் நிராகரிப்பு அவரை வேதனைக்கு உள்ளாக்கியது.

ஆனால் அவர் இருந்த கோபத்திற்கு இதற்கும் தன் மகன் தான் காரணம் என அவன் மீது அதிக கோபத்தை ஏற்றிக் கொண்டார்.

காலை கண் விழித்ததும் இந்திரன் சமையல் அறை சென்று அவரே காபி கலந்து பிளாஸ்கில் ஊற்றி இரண்டு கப்புகளையும் எடுத்துக் கொண்டு மகனின் அறை நோக்கிச் சென்றார்.

அறைக்குள் சென்றவரை காலி அறை தான் வரவேற்றது.  உள்ளே சென்று கழிவறை பால்கனி என்று எல்லா இடங்களிலும் தேடினார். வீட்டின் உள் இருந்த ஜிம், தோட்டம் எல்லா இடங்களிலும் தேடியும் பிரயோஜனம் இல்லை.  அவனது மொபைல் எண்ணிற்கு அழைத்தார்.  சத்தம் வீட்டின் உள் கேட்டது விரைந்து சென்று பார்க்க அவன் அறையின் டிபாயில் இருந்தது மொபைல்.

கலக்கமுற்றார் மகனை எண்ணி ஆனால் ஒன்று அறிவார் தன் மகன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோலை அல்ல என்று.  இருப்பினும் மூளை தான் நாம் தெளிவாக இருக்கும் விஷயத்திலும் கூட உள் நுழைந்து குழப்பிவிடுமே. அதுபடியே இந்திரன் மூளையும் விபரீதமாக அவருக்கு பல விஷயங்களை காட்சிபடுத்தியது.

ஒருவாறாக தன்னை சமன் படுத்திக் கொண்டவர் தன் காரை எடுத்துக் கொண்டு விரைந்து செலுத்தினார் அதனை.

தனது காரை அந்த வீட்டின் முன் நிறுத்தினார்.  தான் நினைத்தது போலவே தன் மகன் கேட்டின் அருகில் நின்றிருப்பதை பார்த்து வேதனையுற்றார்.

இரவு யுக்தயன் தூங்கியதாக எண்ணி இந்திரன் சென்றவுடன் கீழிறங்கி சென்றான் அவன்.  வாசலைக் கடக்கும் போது காலில் தட்டுப்பட்டது பை ஒன்று.  குனிந்து அதனை எடுத்தான் அது நிலாவின் கைப்பை. அதனை எடுத்துக் கொண்டு மீண்டும் தன் அறைக்குச் சென்றவன் அதனை தன் நெஞ்சோடு அணைத்து கண்ணீர் விட்டு அழுதான்.

பின் அதனுள் இருப்பதை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து கதறினான்.  அப்படி பார்த்துக் கொண்டிருக்கும் போது அவன் கைகளில் சிக்கியது நோட் புக் ஒன்று.

அதனை எடுத்துப் பிரித்துப் பார்த்தான் அதில் தயா மாமா என்று எழுதி இருக்க அடுத்தப் பக்கங்களை திறந்தான்.  அந்த நோட் புக்கின் பக்கங்கள் அனைத்தையும் திருப்பி பார்க்க அதில் முழுவதும் அவனது முகம் ஓவியமாக மின்னியது.

அன்று அவள் முதன் முதலில் ருத்ரனை வரையவும் கோப முற்றான். ஆனால் இன்று இவை அனைத்தையும் பார்க்கையில் கோபம் பனியாக கரைந்துவிட்டது. 

அதில் இருந்த அனைத்து ஓவியமும் அவன் காப்பகத்தில் இருக்கும் போது வரைந்தவை.  அவன் போன் பேசுவது போல் சமயல் செய்வது போல் உடற்பயிற்சி செய்வது போல் கேமராவினால் ஃபோக்கஸ் செய்வது போல் என வரைந்து இருந்தாள்.

அடிக்கடி அவள் தன்னை ஆழ்ந்து நோக்கும் போது சைட் அடிக்கிறாள் போல் என்று குதுகலித்துள்ளான். ஆனால் அவள் அவனை மனக்கண்ணில் படம் பிடித்து இருக்கிறாள் என்பதை அறியாமல் போனான்.

எல்லா ஓவியங்களின் கீழே தயா மாமா என்று எழுதியிருந்தாள்.  அதனை பார்த்தவன் சந்தோசத்தில் துள்ளி குதித்தான்.  ஒரு நம்பிக்கை வந்தது அவனுள்.  தான் சென்று அழைத்தால் நிச்சயம் தன் யாழ் வருவாள் என்று நம்பினான்.

அனைத்தையும் எடுத்து தனது கபோடில் பத்திரப்படுத்தியவன் இப்பொழுதே அழைத்து வரலாம் என்று எண்ணி அவள் வீட்டை நோக்கிச் சென்றான்.

இதோ கேட்டின் அருகே நின்று வீட்டையே ஏக்கமாக பார்த்தான். நேரமும் கடந்தது கதவை போய் தட்டுவதற்கு ஏனோ சிறு தயக்கம்.  இம்முறையும் ஆச்சரியபட்டுக் கொண்டான் தான் இவள் விஷயத்தில் மட்டும் இவ்வளவு தயக்கமும் பயமும் கொள்கிறோமே என்று. விடிந்தும் விட்டது.

கதவு திறக்கப்பட்டது ஆவலாக முன்னோக்கிச் சென்றான். வாசல் தெளிப்பதற்காக கனகா தான் கதவை திறந்தது. வாசலில் தனது மருமகன் நின்றிருந்ததை அவர் துளியும் எதிர்பார்க்கவில்லை.  கூடத்தில் அமர்ந்திருந்த சுரேஷ் மனைவி கதவை திறந்து வெளியே செல்லாமல் புடித்து வைத்த பிள்ளையார் போல் நிற்பதை கண்டு அவர் அருகில் வந்தார்.

வாசலில் நின்றிருந்த யுகியை கண்டு ஆத்திரம் அடைந்தார். “ஏன்டா அறிவில்ல எவ்வளவு தைரியம் என் வீட்டு முன்னாடி வந்து நிக்க” என்று சண்டைக்கு செல்ல

யுகி, “மாமா நா யாழ பாக்கனும் மாமா ஒரே ஒரு தடவ பாத்துக்கிறேன் மாமா பிளீஸ் மாமா” என்று கெஞ்சினான்.

அவன் கெஞ்சல் மொழியை ஏற்காதவர் அவனை பிடித்து வெளியே தள்ள இந்திரன் வந்து தன் மகனை பிடித்துக் கொண்டார்.

இவர்களின் சத்தத்தில் அருகில் இருந்த வீடுகளில் இருந்து அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து வேடிக்கை பார்க்க

கனகா, “தம்பி உங்கள கை எடுத்து கும்பிட்டு கேக்குறேன் தயவு செஞ்சு போய்டுங்க இங்க நின்னு எம்புள்ள மானத்தை வாங்காதிங்க” என்றார்.

அதில் மனம் நொந்தவன் தன் தந்தையுடன் அவ்விடத்தை விட்டு வெளியே சென்றுவிட்டான்.

நிலாவின் குடும்பமோ நடுத்தர குடும்பம் என்பதால் அவர்களது வீடும் நடுத்தர வர்கத்தை சேர்ந்த இடத்திலே இருந்தது.

நடுத்தர வர்க்கத்தினரிடம் இதுதானே வழக்கம் அவர்கள் தங்களை விட தங்கள் சுற்றாதாருக்காவே அதிகம் வாழ்கின்றனர்.  ஒரு வீட்டில் சிறு துரும்பு அசைந்தாலும் அது அடுத்த நிமிடம் அண்டை வீட்டுக்கு செய்தியாக ஒளிபரப்பாகிவிடும். அதனாலே கனகா யுகியை வெளியே போகச் சொன்னது.

நிலா தன் அறையில் முழித்துக் கொண்டு தான் இருந்தாள்.  அவளுக்கு தன் கணவன் மற்றும் தாய் தந்தையின் குரல் தெளிவாகவே கேட்டது. ஆனால் வெளியே வரவில்லை. அறையின் படுக்கையில் விழுந்து கதற மட்டுமே முடிந்தது அவளால்.

இந்திரன் யுகியை தோளோடு அணைத்து அங்கிருந்து அழைத்துச் சென்றார். அவர் அழைத்துச் செல்வதை அந்த வீட்டின் வாசலில் நின்ற காரில் அமர்ந்திருந்த தற்போதைய யுக்தயன் பார்த்துக் கொண்டிருந்தான்.  அனைத்தும் தற்பொழுது நடப்பதை போன்றே ஒரு மாயை.

பெரும் மூச்சொன்றை இழுத்துவிட்டவன் காரில் இருந்து இறங்கி வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான்.

கதவு திறக்கப்பட்டது வீட்டின் உள் புறம் நின்றிருந்த கனகா “வாங்க தம்பி” என்று உள்ளே அழைத்தார்.

கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் யுக்தயன் என்ற ஒருவன் உள்ளே நுழைகிறான் என்பதை கண்டு கொல்லாமல் தொலைகாட்சியில் மூழ்கிவிட்டது போல் நடித்தார். 

அவனும் தனக்குள் சிரித்துக் கொண்டு ஒரு அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.  அவனிடம் இதுநாள் வரை ஒட்டிக் கொண்டிருந்த சிரிப்பிற்கு சொந்தமான ஜீவன் கட்டிலில் படுத்து சுகமாக உறங்கி கொண்டிருந்தது.

சிரிப்புடன் அருகில் சென்றவன் அந்த ஜீவனின் தலை கோதி நெற்றியில் முத்தமிட்டான்.  அவனின் ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்ட அந்த ஜீவன் யுகியை தன் இரு கைகளால் இழுத்து தன் அருகில் படுக்க வைத்து அவன் நெஞ்சில் தலை வைத்து தன் தூக்கத்தை தொடர்ந்தது.  யுகியும் சிரிப்புடன் கட்டிக்கொண்டான்.

தொடரும்…..