மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 22

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அன்று பயணத்திற்கு தயாராகும் போது நிலா தான் பத்திரத்தை தனது கபோடில் துணிகளுக்கு இடையே வைத்துவிட்டு போனாள். தனது கபோடை யார் திறக்க போகிறார்கள் என்ற தைரியத்தில் வைத்துவிட்டாள்.

ஆனால் அவளது தாய் கனகா ஒரு வாரத்திற்கு முன் அவர்கள் வீட்டிற்கு வந்து தங்கள் வீட்டின் பக்கத்து வீட்டு பெண் தன்னுடைய நிச்சயத்திற்கு நிலா அணிந்திருந்த பிளவுஸை போன்றே தைக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறாள் அதனால் தான் அவளது திருமண பிளவுஸை எடுக்க வந்ததாக கூற கண்மணியும் நிலாவின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

திருமண புடவை பிளவுஸை தேடி எடுத்தவரின் கால் அடியில் வந்து விழுந்தது திருமண ஒப்பந்த பத்திரம்.

அதை இங்கேயே வைத்துவிட்டு வந்த தன் மடதனத்தை எண்ணி நொந்து கொண்டாள் நிலா.  அவளும் பாவம் என்ன செய்வாள் இதனை எடுத்துச் சென்றால் போகும் இடத்திலும் நிம்மதி இல்லை என்று கருதியே வைத்துவிட்டு சென்றாள்.

காலுக்கு அடியில் இருந்த
பத்திரத்தை கையில் எடுத்த யுக்தயன்

“அம்மா… நா தெளிவா எக்ஸ்பிளைன் பண்றே என்ன நடந்ததுனா”

அவனை மேற்கொண்டு பேச விடவில்லை அவனது தாயின் செயல்.  அவன் பேச ஆரம்பிக்கும் போதே அவனை நெருங்கியவர் பளாரென அறைந்தார். 

உறைந்து விட்டான் யுக்தயன்.  அவன் தாய் இதுவரையிலும் அவனை அடித்ததில்லை.  அடிக்கும் அளவிற்கு அவன் செயல்களும் இருந்திருக்கவில்லை. ஆனால் தற்போது நிலை அப்படி இல்லையே அவன் செய்த செயல் சரியில்லையே. திருமணம் ஒன்றும் விளையாட்டோ வியாபாரமோ அல்ல அது இருவர் வாழ்வு சம்மந்தப்பட்டது. இரு குடும்பம்  சம்பந்தப்பட்டது. மற்றவர்களுக்கு சாதாரணமாக தோன்றலாம்.  ஆனால் அந்த நிலையில் உள்ளவருக்கு தானே அதன் வலி புரியும். 

சொல்ல போனால் அவர்கள் இருவரும் அந்த ஒப்பந்தத்தை முற்றிலுமாக மறந்துவிட்டனர்.

தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தார்.  தடுக்கவில்லை அவன்.  யாழ்நிலா தான் இடையே வந்து தன் அத்தையை தடுத்தாள். 

அவளுக்கும் விழுந்தது அறை ஒன்று கண்மணியிடம் இருந்து அல்ல அவள் தந்தை சுரேஷிடம் இருந்து.

சுரேஷ், “அவன் பண்ணுன தப்புக்கு அடிக்குறாங்க நீ எதுக்கு குறுக்க போய் தடுக்குற “

நிலா, “அவனா….  அப்பா அவர் உங்க மாப்பிள்ளை மரியாதை இல்லாம பேசாதீங்க. “

சுரேஷ், “மரியாதை….   என்ன மரியாதை…”  என்று நக்கலாக கேட்டவர் “மரியாதை எல்லாம் இருந்துச்சு மலையளவு” இதோ பத்திரத்தை சுட்டிக்காட்டியவர் “இந்த கருமத்தை கண்ணால பாத்ததுல இருந்து எல்லாம் முடிஞ்சு போச்சு”

கனகா, “சும்மா மாப்பிள்ளைய மட்டும் திட்டுனா உங்க பொண்ணும் தான் தப்பு பண்ணி இருக்க அவள எதுவும் கேக்க மாட்டீங்களா” என்று கேட்டார் நிலாவின் தாய்.

சுரேஷ் ,”எம்பொண்ணா பத்திரம் ரெடி பண்ணுனா.. “

கனகா, “அதுக்கு துணை போனது யாரு உங்க பொண்ணுதான ஒப்பந்தம் பத்தி மாப்பிள்ளை சொன்னதும் இவ மொதல நம்மகிட்ட வந்து சொல்லனுமா வேண்டாமா” அவர் தன் கணவரை எதிர்த்து பேசியதில்லை ஆனால் இன்று பேச வேண்டிய கட்டாயம். தன் மகள் மீதும் தவறு உள்ளதை உணரர்ந்தார் அவர்.

சுரேஷ், “என்னடி அண்ண பையனுக்கு சப்போட்டா “

கனகா, “மாப்பிள்ளை எனக்கு அண்ண மகன் மட்டும் இல்ல உங்களுக்கு தங்கச்சி மகனும்தா அது நியாபகத்துல இருகட்டும்.”

அதற்கு பதில் சொல்ல முடியாதவர் “என்னோட நியாபகம் பத்தி பேச வேண்டா இனிமே எம்பொண்ணு இந்தவீட்டுல இருக்க மாட்டா அத முதல எல்லாரும் நியாபகம் வச்சுக்கோங்க”

அதுவரை அமைதியாக அனைத்தையும் கேட்டு கொண்டு நின்றிருந்த யுகி வேகமாக நிலாவின் கைகளை இழுத்து தனக்கு பின் நிற்க வைத்து

யுகி, “யாழுவ நா அனுப்பமாட்டேன். “

சுரேஷ், “அவ எம்பொண்ணு நீ யாருட அனுப்பமாட்டேனு சொல்றதுக்கு”

யுகி, “ம்…  அவ புருசன் “

சுரேஷ், “எத்தனை வருசத்துக்கு..  இரண்டு வருசத்துக்கா. சீ வெக்கமா இல்ல என்ன கருமம் எல்லாம் எழுதி இருக்கடா அதுல எந்த அப்பனுக்கும் இந்த நிலமை வரக்கூடாது.  எம்பொண்ண… ” தலையை இடம் வலமாக ஆட்டி “உன்னோட விடமுடியாது விடு அவள”

யுகி, “மாமா  நா சொல்றத கொஞ்சம் கேளுங்க.”

சுரேஷ், “என்னடா திரும்ப திரும்ப அதையே சொல்ற”என்றவர் ஓங்கி அறைந்தார்.

வாங்கி கொண்டான். பொறுமை காத்தான் யாழுவை இழப்பதற்கு தயாராக இல்லை.

சுரேஷ் அடித்தவுடன் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.  இந்திரனுக்கு ஆத்திரம் பெருகியது.  இதுவரை அவர்கள் இருவருமே அவனை அடித்தது இல்லை.  அப்படி இருக்கையில் இன்று சுரேஷ் அடித்ததும் கோபம் வந்தது.  ஆனால் யுக்தயன் செய்த தவறு கண் முன் காகிதமாக பறந்து கொண்டிருக்க அமைதிகாத்தார்.

இந்திரன்,”கொஞ்சம் அவன் சொல்றதையும் கேளுங்க மச்சான்.”

சுரேஷ், “என்ன சொல்ல போறாரு உங்க மகன் சொல்ல சொல்லுங்க “

யுகி, “மாமா ஆரம்பத்துல எனக்கு கல்யாணத்தில இஷ்டம் இல்ல ஆனா அம்மா என்னோட கல்யாணத்த ரொம்ப எதிர் பார்த்தாங்க என்னால கல்யாணத்த நிறுத்தமுடியலை அதா இந்த மாதிரி ஒரு பத்திரம் ரெடி பண்ணுனேன்”

கண்மணி, “கல்யாணத்த நிறுத்த ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளையாடுவியா சொல்லுடா “

யுகி, “அம்மா நா பண்ணுனது தப்புதா ஆனா நா இப்போ நிஜமாவே யாழ விரும்புறேன் மா” 

கனகா விரைந்து வந்து நிலவை அடித்து “அந்த தம்பிக்கு விருப்பம் இல்லாம இப்படி பண்ணுனாருன்னா நீ என்னடி பண்ணி இருக்கணும்  எங்க கிட்ட சொல்லி இருக்கணும் உம்மேலையும்  தப்பு வச்சுக்கிட்டு அந்த தம்பிய சொல்லி என்ன ஆகப்போகுது” என்றார்.

யுகி, “போதும் அத்த சும்மா அவளை திட்டாதிங்க சொல்லல சொல்லலனு சொல்லறீங்களே எப்படி சொல்லவா உங்க ரெண்டுபேரையும் பார்த்து எந்த அளவுக்கு பயப்படுறானு தெரியுமா உங்களுக்கு கொஞ்சம் ஆச்சும் அவகிட்ட பிரண்ட்லியா இருந்து இருந்த சொல்லி இருப்பா” 

கண்மணி, “ஓ …. அப்படி சரி நாங்க உங்கிட்ட  பிரண்ட்லியா தான இருந்தோம் எங்க கிட்ட எதுக்கு மறச்ச” 

யுகி, “மா என்னோட விஷயம் வேற அவளோடது வேற”

சுரேஷ், “என்னடா வேற வேறன்னு ட்ராமா போடுற உன்ன சொல்லி என்ன ஆகப்போகுது உன்ன வளர்த்த விதம் அப்படி..”

எந்த ஒரு தாயும் தனது வளர்ப்பு பற்றி பேசினால் தாங்கிக்கொள்ள மாட்டார்களே. அதில் ஆண்பிள்ளை என்ன பெண்பிள்ளை என்ன எல்லாம் ஒன்று தான். கண்மணி அந்த வார்த்தையில் உடைந்தது உண்மை.

யுகி, “மாமா வார்த்தைய  பார்த்து பேசுங்க “

சுரேஷ், “இதுக்கு மேல பேச என்ன இருக்கு நிலா வா போலாம்” 

யுகி, “மாமா வேண்டாம் மாமா “

அவர் அவன் பேச்சை கேட்காமல் நிலாவை இழுத்து செல்ல தடுக்க முனையும் பொழுது எதிர்பாராத விதமாக யுகியின் கை சுரேஷின் கன்னத்தில் பதிந்தது. 

யாரும் எதிர்பார்க்கவில்லை ஏன் அவனும் எதிர்பார்க்கவில்லை கூர்ந்து கவனித்தால் தெரிந்து இருக்கும்  எதிர்பாராமல் நிகழ்ந்தது என்று .

நிலா முதலில் தடுத்து பார்த்தவள் முடியாததால் இறுதியில் கைகளால் முகத்தை மூடி கீழே அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.  இதனால் நடந்ததை அவள் சரியாக கவனிக்க முடியவில்லை. 

அறைந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த நிலா தன் தந்தை கன்னத்தில்  கை வைத்து நின்று இருப்பதை பார்த்து அவர் அருகில் ஓடினாள். 

யுகி, “மாமா நா வேணும்னு பண்ணல தெரியாம….  மன்னிச்சுருங்க மாமா”

சுரேஷ், “என்ன அடுச்சு அவமான படுத்திடல”

நிலா, “அப்பாவ அடுச்சிங்களா மாமா” அவளால் நம்ப முடியவில்லை. அவளுக்கு நன்றாக தெரியும் தன் கணவன் அப்படி பட்டவன் இல்லை என்று . ‘ஆமானு சொல்லிறாதீங்க மாமா’ என்று மனதில் ஆயிரம் முறை வேண்டிக்கொண்டே கேட்டாள்  அவனிடம் .

யுகி, “யாழு நா வேணும்னு பண்ணல யாழு “

தன் கணவனின் வாய் மொழியை நம்ப முடியவில்லை அவளால்

அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் தன் தந்தையின் கை பிடித்து வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.

பெண் பிள்ளைகளுக்கு ஒரு குணமுண்டு தன் தந்தையை ஏதேனும் கூறினாள் தாங்கி கொள்ள மாட்டார்கள் அது பிடித்த தந்தையானாலும் பிடிக்காத தந்தையானாலும் கண்டிப்பானவராக இருந்தாலும் தோழமையானவராக இருந்தாலும் எப்படிபட்ட குணமாக இருந்தாலும் தாங்கி கொள்ளமாட்டார்கள்.  அந்த கணம் அவர்கள் மூளை வேலை செய்யாது நிலாவும் அப்படியே.

தந்தையுடன் வெளியே செல்பவளை பின் தொடர்ந்து ஓடினார் இந்திரன்.

இந்திரன், “நிலாமா மாமா சொல்றத கேளுடா…..  வீட்ட விட்டுலா போகாதடா…. எதுனாலும் பேசிக்கலாம்டா”

நிலா அவர் பேச்சை கேட்காமல் சென்றுவிட்டாள்.

யுக்தயன் அந்த இடத்திலையே சிலையாக நின்றுவிட்டான்.  காலையில் தான் சத்தியம் செய்து கொடுத்தாள்.  பிரிந்து செல்ல மாட்டேன் என்று ஆனால் தற்பொழுது…….  என்று சிந்தனைக்குள் உள்ளானவன் நிலை மாறாமல் அவள் சென்ற திசையை வெறித்தான்.

வளர்ப்பு பற்றி பேசிய போதே உடைந்துவிட்ட கண்மணி மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறையின் உள் சென்று கதவை சாத்திக் கொண்டார்.

சோர்வாக உள் நுழைந்த இந்திரன் மகனின் அருகில் சென்று அவன் தோளை தொட்டார்.

யுகி, “நா வேணும்னு பண்ணலப்பா என்ன நம்புங்கபா” என்று கண்ணீர் மல்க கூறினான்.

இந்திரன், “நா நம்புறேன்டா எம்புள்ளைய பத்தி எனக்கு தெரியும்”

“அப்பா” என்று கூறியவன் அவரை பாய்ந்து அணைத்துக் கொண்டான்.

“எனக்கு யாழு வேணும் பா” என்று ஜெபம் போல் அதையே கூறிக் கொண்டிருந்தான்.  இந்திரன் அவன் முதுகை தடவிக் கொடுத்து அவனை ஆறுதல் படுத்தினார்.

தொடரும்…..