மீட்டாத வீணை தருகின்ற ராகம்- 2

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அந்தி சாயும் நேரம் அந்த உயர்தர காபி ஷாப்பின் உள்ளே ஒரு மேசையின் மீதிருந்த காபி கேட்பாரற்று இருந்தது அந்த மேசையின் நேர் எதிர்புறம் இருந்த பெண்கள் கழிப்பறையில் இருந்து வெளியே வந்த யாழ்நிலா தன் துப்பட்டாவால் முகத்தை அழுந்த துடைத்து கொண்டே வந்து அந்த காபி இருந்த மேசையின் அருகில் அமர்ந்தாள்

கலங்கி இருந்த கண்களும் வீங்கி இருந்த கன்னங்களும் அவள் அழுத்திருக்கிறாள் என்பதை உணர்த்தியது .சின்ன வயதில் தன்னுடன் அன்புடனும் அக்கறையுடன் வலம் வந்த தன் அத்தை மகன் யுக்தயன் இப்படி மாறி  போனது ஏனோ என்று கவலை கொண்டாள் .

வெளிநாட்டில் இருந்து வரும் தன் செல்ல அத்தையின் குடும்பத்தையும்  அத்தை மகனையும் எதிர் நோக்கி காத்துக்கொண்டிருந்தவளிடம் அவர்கள் இங்கு வருவதால் நீ வருங்காலத்தில் இன்னல்களை எதிர் கொள்வாய் என எவராவது கூறினால் அவர்களை உண்டு இல்லை என செய்து இருப்பாள் .

ஆனால்  சற்று முன் தன் அத்தை மகன் தன்னிடம் பேசிய வார்த்தைகளை இன்னமும் அவள் மனம் ஏற்க மறுத்தது .

தனது தயா மாமன் மிகவும் நல்லவன் அவன் தன்னிடம் நடந்து கொண்டவை அனைத்தும் பொய் என்று சொல்லி அவளது மனம் மூளையிடம் மல்லுக்கட்டியது.

மூளை கூறுவது தான் உண்மை என்பது போல் மேசையின் மீது பறந்து கொண்டிருந்தது அக்ரிமெண்ட் பத்திரம்.

யுக்தயன் அவளிடம் அக்ரிமெண்ட் பற்றி பேசும் பொது அவளது கண்ணிமைகளில் வந்து நின்றதெல்லாம் அவளது திருமணத்தை ஆவலுடன் எதிர் பார்க்கும் அவர்களது குடும்பமே .

யாழ்நிலா தந்தையின் சொல் தட்டாமல் வளர்ந்தவள் . அவளது தந்தை சுரேஷ் மிகவும் கண்டிப்பானவர் , முற்போக்கு சிந்தனை உடையவர் கவுரவம் அவருக்கு பிரதானம் காதல் என்றால் எதோ கொலை குற்றம் போல் பார்ப்பவர் . அதனாலயே அவள் இதுவரை ஆண்களிடம் பேசுவதற்கே மிகவும் தயங்குவாள் எங்கே தான் சாதரணமாக பேசுவதை கூட தந்தைக்கு தெரிந்தால் தவறாக எண்ணி விடுவாரோ என்று மிகவும் பயம் கொள்வாள் . அவர் சொல்லுக்கு மறுப்பே சொன்னதில்லை அவள் .

அப்படி இருக்கையில் இத்திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று சொன்னால் என்ன ஆகும் என்பதை யோசிப்பதற்கே யாழ்நிலாவிற்கு மிகவும் அச்சமாக இருந்தது .நிலாவின் தாய் தந்தைக்கும் மேல் பழமைவாதி. அதிலும் கணவன் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்காமல் பின்பாட்டு பாடும் ரகம்.

யுக்தயனின் தாய் கண்மணி நிலாவின் பாசமிகு அத்தை நிலாவுக்கு தன் தாய் தந்தையை விட அத்தை கண்மணியின் மீது பாசம் அதிகம். அவரது கணவர் இந்திரன் மனைவியின் மீது அளப்பறிய காதல் கொண்டவர் . அவரது பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது என்பார் எப்போதும். அப்படி பட்ட தன் ஆசை மனைவி கேட்டு ஒரு விஷயத்தை மறுப்பாரா .இதோ சுரேஷிடம் அனைவர் முன்பும் நேரிடையாக கேட்டுவிட்டார் உன் மகளை என் மகனுக்கு கட்டிவைப்பாயா என்று இந்திரனின் மீது அதிக மரியாதையும் நேசமும் கொண்ட சுரேஷ் அதற்கு மறுப்பு தெரிவிப்பாரா உடனே ஒப்புக்கொண்டார் . அதன் விளைவு இரண்டு மாதங்கள் தாமதமாக இந்தியா வந்து சேர்ந்த யுக்தயனிடம் இந்த திருமண விஷயத்தை கூற ஏகத்திற்கும் அதிர்ந்துவிட்டான் .

தான் உடனே மணப்பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூற சுரேஷின் குணம் அறிந்த இந்திரன் சுரேஷிடம் திருமணத்திற்கு முன்பே இருவரையும் சந்திக்க வைக்க  அனுமதி வாங்க நிறைய சிரமம் மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து இரண்டு நாட்கள் பொறுத்து கொள்ளுமாறு தனது மகனிடம் வேண்டினார் .

வெளிநாட்டு வாசம் வாழ்ந்தவனுக்கு இரண்டு நாட்கள் காத்திருப்பு அதுவும் ஒரு சந்திப்பிற்காகவா என்று எடுத்தஎடுப்பிலே அப்பெண்ணின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது .

அவன் அறியவில்லை  அவள் தன் அத்தை மகள். ஒரு காலத்தில் அவளை தன் கைகளில் இருந்து இறக்கி விடமாட்டேன் என்று தான் அடம்பிடித்ததும் அவளை விட்டு எங்கும் வரமாட்டேன் என்று கதறியதும். இன்று அவள் மேல் கோபம் கொண்டான். நிலாவின் நினைவுகள் துளியும் நினைவு இல்லை யுகிக்கு.

18 வருடங்களுக்கு முன் இந்திரனின் பனியின் காரணமாக வெளிநாடு செல்ல நேர்ந்த பொழுது யுக்தயனுக்கு 10 வயது யாழ்நிலாவுக்கு 5 வயது . 5 வயதான  யாழ்நிலாவிற்கு தன் மாமன் மகன் யுக்தயனின் நினைவுகள் ஆங்காங்கே நிழற்படங்களாக நினைவிருந்தது  ஆனால் யுக்தயனுக்கோ யாழில்நிலாவை சிறிதும் நினைவு இல்லை .

யுக்தயனுக்கு தற்போது திருமணம் புரிவதில் சிறிதும் விருப்பம் இல்லை காரணம் அவன் மேற்கொள்ளும் பணி அத்தகையது . யுக்தயனுக்கு documentary  (ஆவணப்படம்) எடுப்பதில் அலாதி பிரியம். அதில் சாதனை படைக்க வேண்டும் என்பது அவனது குறிக்கோள் . உண்மையை உலகுக்கு எடுத்து கூற வேண்டும் என்பது அவன் இலக்கு .

கனவு வாழ்க்கைக்காக வாழ்ந்து கொண்டிருப்பவன் வீட்டில் தங்குவது அபூர்வம் .எப்போதும் எங்கேனும் எதையேனும் தேடி அலைந்து கொண்டிருப்பான் சுவாரஸ்யங்களை அதிகம் விரும்புபவன் .

இதுவரை 2 ஆவணப்படங்கள் எடுத்துள்ளான் அதற்கு அவன் எடுத்து கொண்டது 5 வருடங்கள் இப்பொழுது எடுத்து இருக்கும்  கான்செப்ட்டிற்கு எப்படியும் ஒன்றரை வருடங்கள் ஆகும். அப்படி இருக்கையில் அவனிடம் வந்து நீ திருமணம் செய்துகொள். வீட்டோடு இருந்துவிடு. தந்தையின் தொழிலை கவனித்துக் கொள் இப்படி கூறினால் என்ன ஆகும் வெறுப்பும் கோபமும் உண்டாகும் அல்லவா. அப்படி தான் யுக்தயனின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருந்தது.

தாய் கண்மணிக்கு தன் செல்ல மகனை தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஆசை. அதே சமயம் அவன் லட்சியத்திற்கும் தடையாக இருக்க கூடாது. என்ன செய்வது என்று யோசித்த போது வந்தது தான் இந்த யோசனை. திருமணம் செய்து வைத்தாவது சிறிது காலம் தன்னுடன் மகனையும் மருமகளையும் தங்கவைத்து அவர்களின் நல் வாழ்வை கண் குளிர பார்க்க வேண்டும் என திட்டமிட்டார்.

யுக்தயனோ திருமணத்தை நிறுத்த ஏதேனும் வழி கிடைக்குமா என்று ஆராய்ந்து அவனது மூளைக்கு நல்லவிதமாய் சரிவரும் என்று தோன்றிய ஒரு யோசனையோடு நிலாவை சந்திக்க காபி ஷாப் நோக்கி புறப்பட்டான்.

காபி ஷாப்பின் உள்ளே நுழைய முனையும் போதே அவன் கண்டது பதட்டத்துடன் அமர்ந்து இருக்கும் நிலாவை தான். அவன் அப்பொழுது அறியவில்லை அவள் தான் நிலா என்று.

அடர் பச்சை வண்ண குர்த்தி சந்தன நிற பேண்ட் மற்றும் துப்பட்டா அணிந்து துப்பட்டாவை ஒரு புறம் மடித்து  மறுபுறம் அப்படியே படரவிட்டு பின்குத்தி விட்டிருந்தாள்.

மயில் டிசைன் காதணி,  பட்டர்ஃபிளை டிசைன் செயின், கைகளில் கோல்டன் கலர் மெட்டல் வளையல் என மிகவும் எளிமையாக நேர்த்தியாக தன்னை அலங்கரித்து இருந்தாள்.

யுகியின் குடும்பம் செல்வ செழிப்பை ஒப்பிட்டால் நிலாவின் குடும்பம் சற்று குறைவான நிலையே. எவ்வளவு நகைகள் இருந்தாலும் நிலாவிற்கு எளிமையாக இருப்பதிலே அதிக விருப்பம்.

இவ்வளவு நேரம் திருமணம் வேண்டாம் என அவன் கொண்ட உறுதி ஆட்டம் கண்டது.  அவளது எளிமை அவன் மனதை கவர்ந்தது. நிலாவை விடுத்து இவளை திருமணம் செய்து கொண்டால் என்ன என்று தோன்றியது.

பார்த்ததும் காதல் என்றெல்லாம் சொல்ல முடியாது ஆனால் பார்த்தவுடன் நெஞ்சில் வந்து ஒட்டிக் கொண்டாள்.  இதுவரை தன் வேலையின் காரணமாக எவ்வளவோ பெரிய பெரிய சவால்களை சர்வசாதாரணமாக எதிர்கொண்டவன் இன்று அவள் முன் சென்று நிற்க நடுக்கம் கொண்டான்.

“டேய் யுகி நீ எவ்வளவு பெரிய ஆள் ஒரு பொண்ணுக்கிட்ட பேச பயப்படலாமா” என்றது அவனது மனம்.

“பயம் எல்லாம் இல்ல சும்மா அடி வயிறுக்கும் நெஞ்சுக்கும் நடுவுல ஏதோ பண்ணுது”

“ஹலோ அதுக்கு பேரு தான் பயம் “, மனம்

“ஹோ…  அப்படியா சரி நீ என்ன கேவலப்படுத்தாம உள்ள போ “,யுகி என்று மனதை அடக்கிவிட்டு காபி ஷாப்பின் உள் நுழைந்தான்.

உள்ளே சென்ற யுகி நிலாவின் அருகில் போய் நின்றான்.

தன் அருகில் நிழல் ஆடவும் நிமிர்ந்து பார்த்தாள் நிலா.

இருவரின் கண்களும் மோதிக் கொண்டன.

தொடரும்….