மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 19

இரண்டு நாட்கள் மேலும் அவ்விடத்தில் தங்கி இருந்து யுகியின் வேலை முடியவும் நால்வரும் மீண்டும் குடிலை நோக்கி புறப்பட்டனர்.

நிலா முதலில் அருவிக்கரைக்கு தாகத்தினால் வந்த மிருகங்களை கண்டு பயந்தவள் மற்ற மூவர் கொடுத்த தைரியத்தினாள் சற்று தெளிவடைந்தாள்.

யுகி தான் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தான். நிலா அருவிக்கரையை பார்த்து வியந்து நின்றிருந்ததில் ஒரு முடிவுக்கு வந்தான்.  அந்த அருவிக்கரையின் அருகே அழைத்துச் சென்று தன் காதலை வெளிபடுத்த வேண்டும் என்று நினைத்திருந்தான்.

அப்படி செய்தால் அவள் இன்னாளை என்றும் மறக்கமாட்டாள். மேலும் மிகுந்த ஆனந்தம் கொள்வாள். இவ்வாறாக நினைத்திருந்தான். அருவிக்கரையில் வருகை தந்திருந்த மிருகங்களை காண்கையில் அவளை அவ்விடம் அழைத்துச் செல்வது சரியாகபடவில்லை அதனால் தான் இந்த வருத்தம்.

ஆனால் காதல் தெரிவிக்கும் நாளை பெண்கள் எந்நிலையிலும் மறக்கமாட்டார்கள். உண்மையாக நேசிக்கும் எவரும் தன் இணையர் தன்னிடம் இப்படிதான் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று வரையறுக்கமாட்டார்கள் என்பதை அறியாதிருந்தான்.

நால்வரும் குடில் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.  அவர்கள் பாதி தூரம் வரும் பொழுதே மழை பொழிய ஆரம்பித்துவிட்டது.

மழையில் முழுவதும் நனைந்துவிட்டனர். திடீரென இடி மின்னலுடன் பெரும் மழை வலுக்க ஆரம்பித்தது. இடி மின்னலின் பொழுது மரத்தின் கீழ் நிற்பது ஆபத்து என்பதை அறிந்தவர்கள் தங்கள் நடையை நிறுத்தாது தொடர்ந்தனர்.

மழையின் காரணமாக ஏற்பட்ட சேறினால் குழலியாலும் நிலாவாலும் நடக்க முடியவில்லை.  நடந்து கொண்டிருக்கும் போதே தங்கள் நடையை நிறுத்திவிட்டனர்.

யுகி, “என்னாச்சு யாழு “

நிலா, “சுத்தமா முடியல மாமா. ஈரத்தில கால் ரொம்ப ஊறிப் போய் நடக்கையில ரொம்ப வலிக்குது.”

குழலி, “என்னாலையும் முடியல அண்ணே”

ருத்ரா, “இன்னும் கொஞ்ச தூரத்தில ஒரு குகை இருக்கு அங்க போகலாம்.  ஆனா…”

யுகி, “அப்ப வா ருத்ரா சீக்கிரம் போகலாம்”

ருத்ரா, “இல்ல அந்த குகைக்கு போய் போகனும்னா நாம கிராமத்துக்கு போக ரொம்ப தாமதமாகும். இன்னைக்கு ராத்திரிக்குள்ள போகமுடியாது.”

யுகி, “அதுனால ஒரு பிரச்சனையும் இல்ல”

ருத்ரா, “அதுக்கு சொல்லல யுகி  நாம காலையில சாப்பிட்டது. இப்போ நம்மகிட்ட உணவு எதுவும் இல்லை. ஏற்கனவே இவங்க ரெண்டு பேரும் ரொம்ப பலவீனமா தெரியுராங்க அதா யோசிக்குறேன்.”

குழலி, “நாங்க சமாளிச்சுக்குவோம் மாமா”

“சரி வாங்க” என்று ருத்ரா முன்னாள் நடக்க மற்ற மூவரும் அவன் பின் சென்றனர்.

குகையின் வாயிலை அடைந்ததும் மற்றவர்களை வெளியே நிற்க கூறிவிட்டு  யுகியிடம் இருந்து லைட்டரை வாங்கி கொண்டு குகையின் உள் சென்று பரிசோதித்தான் ருத்ரன்.

உள்ள மிருகங்கள் ஏதும் இல்லை என்பதால் மற்றவர்களை உள்ளே அழைத்தான்.

பெண்கள் இருவரும் குளிரில் நடுங்குவதைப் பார்த்தவன்

ருத்ரா, “நாங்க ரெண்டு பேரும் வெளிய நிக்குறோம் நீங்க துணி மாத்துங்க”

ஆடவர்கள் வெளியே சென்றதும் பெண்கள் வேறு உடைக்கு மாறினர்.

அவர்களையும் மாற்றிக் கொள்ளுமாறு பெண்கள் கூற மறுத்துவிட்டனர் இருவரும்.

ருத்ரன் குகையின் வாயிலில் நின்றிருப்பதாக கூறி வெளியே சென்று நனையாதவாறு ஒரு ஓரத்தில் நின்று கொண்டான். உடன் வருவதாக கூறிய யுகியை வேண்டாம் என்றுவிட்டான்.

குழலிக்கும் களைப்பில் உறக்கம் வர உறங்கி வழிந்தாள்.

நிலா அவளை நிமிர்த்தி முடியை தன்னிடம் இருந்த துண்டினால் துடைத்துவிட்டாள்.  முடி ஓரளவு உலர்ந்ததும் உறங்கச் சொன்னாள்.
அவளும் சிறிது காய்ந்ததும் உறங்கிவிட்டாள்.

குகை கொஞ்சம் இருட்டாகத் தான் இருந்தது.  மழையின் காரணமாக மாலை வேளை கூட இரவுப் போல் காட்சியளித்தது.  தீ பந்தம் பற்ற வைக்கலாம் என்றால் வெளியே அனைத்தும் மழையில் நன்கு நனைந்துவிட்டது.  வேறு வழியில்லை ஒரு நாள் இரவு மட்டும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

“ஊருக்கே உபதேசம் பண்ணு ஆனா நீ எதையும் ஃபாலோ பண்ணாத”  என்று கடிந்து கொண்ட யுக்தயன் நிலாவின் கையில் இருந்த துண்டை வாங்கி அவளுக்கு துடைத்துவிட்டான்.

ஆனால் அவனோ ஈரத்துணியை மாற்றாது குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான்.

நிலா, “இருட்டா தான இருக்கு துணிய மாத்திக்கங்க மாமா “

“இல்ல வேண்டாம்” என்றவன் அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான்.  குகையின் இருட்டின் காரணமாக எதிரில் இருக்கும் குழலி கூட தெரியவில்லை.  அப்படி இருக்கையில் இவர்களும் மற்றவளின் கண்களுக்கு தெரியபோவதில்லை என்ற தைரியம் அவன் அவளை மேலும் நெருங்க தூண்டியது.

நிலாவிற்கு அவன் செயலில் வேக பெருமூச்சு எழுந்தது.  அதனை சமாளிக்கும் பொருட்டு

நிலா, “மா.. மா உங்க தலையும் ஈரமாதா இருக்கு இருங்க நா  துடச்சுவிடுறேன்”

தன் துப்பட்டாவின் முனையால் அவன் தலையை துடைத்தாள்.  குனிய வைத்து அவனுக்கு தலை துவட்டிவிட்டதால் அவனின் சூடான மூச்சுக்காற்று நேரிடையாக அவளின் கழுத்தில் வந்து மோதியது.

சிலிர்த்து அடங்கினாள். கைகால் பயங்கரமாக நடுங்கியது.  அவளின் நடுக்கத்தை அதிகமாக்கும் பொருட்டு மூச்சுக்காற்று மோதிய இடத்திலையே தன் உதடுகளையும் மோத வைத்தான்.

மேலும் சற்று மேலே முன்னேறி அவளின் காது மடலின் அருகில் வந்தவன் அங்கும் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு “யாழு” என்று கிறக்கமாக அழைத்தான்.

“ம்..” என்றாள் அவளின் சத்தம் அவளுக்கே கேட்டதா என்பது அவளுக்கே வெளிச்சம்

யுகி, “யாழு….  எ.. னக்கு…. “

நிலா, “உ..ங்களு….க்கு….”

யுகி, “இப்பவே….. பயங்கரமா தூக்கம் வருது” என்று நக்கலாக கூறி ஓசையின்றி சிரித்தான்.

நிலாதான் எதையோ  எதிர்பார்த்து ஏமாந்துவிட்டாள். குகையின் இருட்டில் அவன் அவளை பார்த்து கிண்டல் செய்து சிரிப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவளை குகையின் சுவரின் புறம் சாய்த்து அமர வைத்தவன் அவளின் நெஞ்சில் படுத்து உறங்க ஆரம்பித்தான். 

இத்தனை நாட்கள் ருத்ரனும் குழலியும் உடன் இருப்பதால் இப்படி உறங்க முடியாமல் தவித்தான். இன்று இருக்கும் நிலமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவள் நெஞ்சில் வாகாக சாய்த்து கொண்டு கைகளால் அவள் இடுப்பை வளைத்து கொண்டு உறங்கி போனான்.

நிலாதான் உறக்கத்தை இழந்தாள். மழையில் நனைந்த உடையை மாற்றாமல் அவள் மேல் சாய்ந்து படுத்திருந்தவனின் உடையின் ஈரம் அவள் மேனியிலும் பரவி நடுங்கச் செய்தது.

மேலும் அவன் தலையின் ஈரமும் சரியாக உலராததால் அவள் சுடிதாரை தாண்டி நெஞ்சில் இறங்கியதில் ஒருவித அவஸ்தையில் நெளிந்தாள். அன்று இரவு அவளுக்கு தூங்கா இரவாக கழிந்தது.

விடியற்காலையில் தான் கண் அயர்ந்தாள் நிலா.

நன்றாக விடிந்ததும் குகையின் உள் நுழைந்த ருத்ரன் யுகி மற்றும் நிலாவின் நிலையை பார்த்து நமட்டு சிரிப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

சத்தம் எழுப்பாமல் மெதுவாக குழலியின் அருகில் நெருங்கி அவளை எழுப்பினான்.  எழும்பியவளின் நேர் எதிரே பட்டனர் யுகியும் நிலாவும். 

ஒருவரையொருவர் அணைத்து உறங்குவதை பார்த்த குழலி கண்களை அகல விரித்தாள்.

அவளது செய்கையை பார்த்து மென்புன்னகை செய்தவன் அவளை இழுத்துக் கொண்டு குகையின் வாயிலை  அடைந்தான்.

இன்னும் நிலை மாறாமல் நின்றிருந்த குழலியின் தலையில் தட்டியவன் என்ன என்பதாய் புருவத்தை உயர்த்தினான்.

அவனை காண வெட்கியவள் தலை குனிந்தாள். 

ருத்ரா, “அவங்கள பாரு எப்படி கிடச்ச நேரத்திலையும் காதலிக்குறாங்க”

அவளோ மெல்லிய குரலில்

“அவங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு மாமா” என்றாள்.

ருத்ரன், “அப்போ நாமலும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்.”

தொடரும்…..