மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 17

ருத்ரனின் கூற்றுக்கு காரணம் உண்டு இருவரும் அருகில் இல்லாமல் நீருக்குள் இருக்கும் சமயம் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அவர்கள் வெளி வரும் வரை தங்களை தாங்களே காத்துக் கொள்ளவே தீ பந்தத்தை கைகளில் எடுத்துக் கொள்ள கூறினான்.

நீரின் ஆழம் வரை சென்றவர்கள் கால்களை ஆழ ஊன்றிக் கொண்டு துணியின் முனைகளை இறுக பற்றிக் கொண்டு துணியுடன் நீரின் உள் சென்று எழுந்தனர்.

ஆனால் துணியில் மீன்கள் எதுவும் சிக்கவில்லை.  இன்னும் சில முயற்சிகளுக்கு பிறகு மீன்கள் சிக்கவும் அதனை எடுத்துக் கொண்டு கரைக்கு வந்தவனர். 

ருத்ரன், “இந்த மீன் போதும் நம்ம நாலு பேருக்கு “

நிலா, “ஆமா அண்ணா போதும் “

யுகி, “யாழு உன்னோட பேக்ல கத்தி இருக்கும் எடு “

நிலா, “இந்தங்க மாமா “

யுகி, “ருத்ரா இந்தா இத வச்சு மீன சுத்தம் பண்ணு “

ருத்ரா, “ம்… “

நிலா, “குழலி உன்னோட பைய குடு” என்று கேட்டு வாங்கியவள் அதில் இருந்த மிளகாய் தூளையும் உப்பையும் வெளியில் எடுத்தாள்.

யுகி, “என்னடி இது உள்ள இருந்து இதை எல்லாம் எடுக்குற எதுக்கு எடுத்து வச்ச நாம என்ன பிக்னிகா வந்து இருக்கோம்.”

நிலா, “சும்மா திட்டாதிங்க மாமா… குழலிதா சொன்ன…  இந்த காட்டுல மாமரம் நிறைய இருக்குமா அதா… உப்பு மிளகா தூள் எடுத்துட்டு வந்தேன்.”

அவன் குழலியை பார்க்கவும்

குழலி, “ஐயோ அண்ணே நா இல்ல ருத்ரா மாமா தா சொல்லுச்சு”

யுக்தயன் ருத்ராவை முறைக்க அவன் உன் முறைப்பெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்பதை போல் மீனை சுத்தம் செய்து கொண்டிருந்தான்.

யுகி, “அதான இவன் எனக்கெல்லாம் பயப்படுவானா என்ன “

பின் குழலி எடுத்து வந்த உப்பு மிளகாய் தூள் சேர்த்து அந்த மீனை நெருப்பில் சுட்டு ருத்ரன் கொடுக்க மற்ற மூவரும் உண்ண ஆரம்பித்தனர். பின் அவனும் உண்டுவிட்டு அமர்ந்து கொண்டான்.

நதியில் நனைந்தால் ஏற்பட்ட நடுகத்தை குறைக்க நெருப்பின் அருகில் சற்று நெருங்கி அமர்ந்து கொண்டாள் குழலி.

குளிருக்கு இதமான அந்த இளஞ்சுடு அவளது கண்களை சொக்க வைத்தது.
கண்கள் சொக்கி கீழே விழ சென்றவளை தன் மாரோடு அணைத்துக் கொண்டான் ருத்ரன்.

அவளை தன் மீது நன்றாக சாய வைத்து அவள் தூக்கத்திற்கு இடைஞ்சல் ஏற்படாமல் தானும் அமர்ந்து கொண்டவன் நிமிர்ந்து எதிரில் பார்க்க நிலா எப்பொழுதோ யுகியின் மடியில் படுத்து உறங்கிவிட்டாள்.

ருத்ரன் நிமிரும் நேரம் யுக்தயனும் நிமிர இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். 

தங்கள் இணையருடன் இப்படி ஒரு அற்புதமான தருணத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 

அமைதியான இரவு, இதமான தென்றல் காற்று, நதியின் சலசலப்பு, இரவுக்கே உரித்தான பூச்சிகளின் ரீங்காரம் என ரம்மியமாக இருந்தது.  வெகுவாக ரசித்தனர் அவ்விரு காதலன்களும். அவர்களின் காதலிகளோ மன்னவன் இருக்க பயமேன் என்பது போல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.

இரு ஆடவர்களும் மெய் மறந்து உறங்கும் தங்கள் இணையரின் முகத்தை எரியும் நெருப்பின் மெல்லிய வெளிச்சத்தில் வெகுவாக ரசித்தனர்.

தன் மனைவியை ரசித்துக் கொண்டிருந்த யுக்தயன் எப்பொழுது உறங்கினானோ காலை புலர்ந்தவுடன் தன் மனையாள் எழுப்பவும் தான் எழுந்தான்.

எதிரில் சுருசுருப்பாக புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்த ருத்ரனை பார்த்து “ருத்ரா நீ ராத்திரி தூங்குனியா ” என்றான் யுகி.

ருத்ரா, “இல்ல யுகி நானும் தூங்கிட்டா பாதுகாப்பு இல்லையே “

யுகி, “மன்னிச்சுரு ருத்ரா எப்போ தூங்குனேனு எனக்கே தெரியல”

ருத்ரா, “ஒன்னும் பிரச்சினை இல்ல யுகி எனக்கு இதெல்லாம் பழக்கம்தா”

யுகிக்கு ஆச்சிரியமாக இருந்தது. எப்படி இரவு முழுவதும் உறங்காமல் இருந்து விட்டு காலை இவ்வளவு சுருசுருப்பாக இருக்க முடியும் என்று வியந்து போய் ருத்ரனை பார்த்தான்.

அப்பொழுது அவன் அறியவில்லை ஒரு இரவு அல்ல பல இரவுகள் தானும் தூக்கமின்றி இருப்பேன் என்பதை.

ஆனால் என்ன ருத்ரன் கடமை மற்றும் காதலினால் உண்டான சந்தோசத்தால் உறக்கத்தை தவிர்த்தான்.  யுக்தயனோ காதலால் உண்டான வலியினாலும் காதல் மனைவியின் அத்தியாயம் தன் வாழ்வில் இல்லை என்பதாலும் உறக்கத்தை தொலைக்க போகிறான் அதுவே இருவருக்கும் இடையேயான வித்தியாசம்.

டிரிங்……………டிரிங்…………………. என்ற அலார சத்தத்தில் கண் விழித்தவன். கடந்த காலத்தை நினைத்தே உறங்கிவிட்டோமே என்று தன்னையே நொந்து கொண்டான்.

“நல்ல வேளை அலாரம் வச்ச யுகி இல்லன முக்கியமான இடத்துக்கு போக முடியாம போயிருக்கும்”  என்று தனக்கு தானே பேசிக் கொண்டான். 

அவனும் வேறு என்ன செய்வான் பாவம் இப்பொழுது  அவனுடன் பேசுவதற்கு தான் யாரும் இல்லையே.

வேகமாக கிளம்பியவன் தான் பத்திரப்படுத்திய பொருளை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டான்.

போர்டிக்கோவிலிருந்து காரை எடுக்க வந்தவனின் எதிரே வந்தார் இந்திரன்.

ஒரு சிறு சிரிப்பை மட்டும் வழங்கிவிட்டு உள்ளே சென்று விட்டார். பதிலுக்கு சிறு தலை அசைவை கொடுத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான்.

காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது காரின் மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து பாடல்களை ஓடவிட்டான்.

தொடர்ச்சியாக காதல் பாடல்கள்.  அதனை தொடர்ந்து அவளது நினைவுகளும்.  வேகமாக அதனை ஆஃப் செய்தான்.  பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவன் தன் முன் எறிந்த சிவப்பு வண்ண குறியால் காரை நிறுத்தினான்.

தன்னை சுற்றி இருப்பவைகளின் மீது பார்வையை செலுத்தினான். சற்று தூரத்தில்  யானை  ஒன்று தன் மேல் இருக்கும் பாகனின் வழிகாட்டுதல் படி சென்று கொண்டிருந்தது.

அதனை பார்த்து ஒரு மென்னகை புரிந்தான். 

“மாமா…  மாமா….  யானை கூட்டம்… ஹா… ஹா…” என்று அவளது சிரிப்பு சத்தம் அவனது காதில் கேட்டது.  அதனை தொடர்ந்து “சத்தம் போடாத நிலாமா” என்ற ருத்ரனின் குரலும்.

இனிமையான அத்தருணங்களை எண்ணி தனது கடந்த காலத்திற்குள் பயணம் ஆனான் யுக்தயன்.

விடியலின் பொழுது நால்வரும் மீண்டும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது நீர் கொட்டும் சத்தம் கேட்டது. குழலியும் நிலாவும் உற்சாகமாகி விட்டனர். 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு வேகமாக முன்னே ஓடினர். 

“யாழு..  நில்லு” என்று யுகியும்

“குழலி ஓடாத” என்று ருத்ராவும் அவர்கள் பின் ஓடினர்.

வேகமாக முன் சென்றவர்களோ வாயை ஆ வென்று பிளந்து கொண்டு பார்த்தனர் நீர்வீழ்ச்சியை.

உச்சியில் இருந்து வெண்மை நிற நீர் ஊற்ற அதன் பக்கவாட்டு திசையெங்கும் பச்சை பசேலென கொடிகளும்  அதன் மேல் இரத்த சிவப்பு மற்றும் ஊதா நிற பூக்களும் பூத்து குழுங்கியது.

அவ்வளவு ஒரு அழகு……..  பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது.  அவர்கள் பின்னே வந்த ஆடவர்களும் அவ்வழகை ரசிக்க தவறவில்லை. யுக்தயன் தன்னிடம் உள்ள கேமராவில் அழகாக அனைத்தையும் பதிவு செய்தான்.  மேலும் சற்றே பின் புறம் சென்று நீர்வீழ்ச்சியோடு சேர்த்து இரு பெண்களையும் படம் ஆக்கினான்.

ருத்ரனோ அருவியை பார்த்து “ஒவ்வொரு முறை வரும்போதும் உன்னோட அழகு கூடிகிட்டே இருக்கேமா”  என்று மானசீகமாக அதனுடன் பேசினான்.

அம்மா அப்படிதான் அழைத்தான் அருவியை பிள்ளைகளின் பசி போக்குபவள் தாய் தானே அப்படி பார்த்தால் இங்கே உள்ள எண்ணற்ற உயிர்களின் தாகத்தையும் பசியையும் போக்கும் அருவியும் தாய் தானே. 

அவள் தன்னுடைய நீரை தரவில்லை எனில் இங்கு பாதி காடு செழித்திருக்காது என்பது உண்மையே.

அதன் அருகில் மேலும் நெருங்கி சென்றனர்.

நிலா, “மாமா…  மாமா….  யானை கூட்டம்… ஹா… ஹா…”

ருத்ரன், “சத்தம் போடாத நிலாமா “

நிலா, “அண்ணா அங்க பாருங்க குட்டி யானையெல்லாம் இருக்கு அது எவ்வளவு குறும்பு பண்ணுது பாருங்களேன்”

அவளை இழுத்துக் கொண்டு அருகில் இருந்த புதரின் பின் மறைந்தான் ருத்ரன்.  அவனை தொடர்ந்து மற்ற இருவரும் அதே போல் நின்று கொண்டனர்.

ருத்ரன், “இத பாரு நிலாமா யானைங்க கூட்டமா இருக்குற வரை தான் நமக்கு பாதுகாப்பு அதனால நீ சத்தம் போடதா “

குழலி, “ஆமா நிலா மாமா சொல்றதுதா சரி நம்ம சத்தத்துல கூட்டத்துல இருந்து எதாவது யானை பிரிஞ்சு வந்துட்ட பிரச்சனை”

தொடரும்…