மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 14

பந்தியில் அமர்ந்திருந்த நிலா ருத்ரனிடம் பேசிவிட்டு தன் மன்னவனை தேடி கண்களை சுழற்றினாள்.  எங்கும் அவன் இல்லாததால் அவ்விடத்தில் இருந்து எழுந்திருக்க முயன்றவளின் கைகளை பற்றிய ருத்ரன் “பாதியில எழுந்துக்க கூடாது ….கடவுளோட பிரசாதம்…. முதல சாப்பிடு …”

நிலா, “இல்ல அண்ணா மாமாவ காணோம் எங்கூடதா இருந்தாரு .. ஆனா..”

ருத்ரன், “எதுக்கு பதட்டபடுற இங்கதா இருப்பாரு கொஞ்சம் இரு” என்று அவளை அமைதிப்படுத்தியவன் ஒரு சிறுவனை அழைத்து யுக்தயனை தேடச் சொன்னான்.

உணவுகள் பரிமாறப்பட அவளுக்குதான் தன் மன்னவன் இல்லாமல் உணவு உள்ளே இறங்க மறுத்தது.  கடினப்பட்டு உண்டுகொண்டிருந்தாள்.

யுக்தயனை தேடிச் சென்ற சிறுவன் திரும்பி வந்து குடிலுக்கு பின்புறம் அமர்ந்திருப்பதாக கூற அவசரமாக உணவை முடித்துக் கொண்டு எழுந்து ஓடினாள்.

ருத்ரனின் கருத்திற்கு இவை எல்லாம் பதியவே இல்லை எப்படி பதியும் அவனின் ராணி குழலி அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறி கொண்டிருந்தாளே. எண்ணம் முழுவதையும் அவளிடத்தில் அல்லவா விட்டிருந்தான்.
…………

நிலா, “மாமா… “

“ம்.. ” என்று கூறியவன் அவள் முகத்தை நோக்கினான் இல்லை அந்த புல் தரையையிலே பார்வையை பதித்திருந்தான்.

அவன் அருகில் வந்து அமர்ந்தவள் “திடீர்னு எங்க போனிங்க மாமா…. நா உங்களுக்கு இடம் எல்லாம் புடிச்சு வச்சுருந்தேன் தெரியுமா …”

அமைதியாக திரும்பி அவள் முகத்தை பார்த்தான்.  அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டுகொள்ள முடியவில்லை.

நிலா, “சரி சரி முதல சாப்பிடுங்க” என்று கைகளில் இருந்த உணவை அவனுக்கு கொடுத்தாள். 

யுகி, “எனக்கு வேண்டாம் “

நிலா, “அப்படி சொல்லக்கூடாது…. கடவுள் பிரசாதம்… சாப்பிடுங்க …” என்று உணவை கையில் எடுத்து அவன் முகத்திற்கு நேராக நீட்டினாள்.

அவள் கண்களை பார்த்துக்கொண்டே வாய் திறந்தான்.  நிலாவும் புன்னகையுடன் அவனுக்கு ஊட்டிவிட்டாள்.  அவள் ஊட்டுவது ஒன்றும் புதிது அல்ல.  இதற்கு முன் ஒப்பந்த திருமணத்தை காரணம் காட்டி ஊட்டிவிட சொல்லி இருக்கிறான்.  அப்பொழுது எல்லாம் அவளை வம்பு இழுப்பதும், கையெழுத்து இட்டதினால் ஏற்பட்ட கோபத்தை தீர்ப்பதும் என இவைகள் மட்டுமே குறிக்கோளாக இருந்ததால் பெரிதாக தெரியவில்லை.

உணவை ஊட்ட ஊட்ட உண்டு கொண்டிருந்தான். ஏதேதோ பேசினால் இடையிடையே. எதுவும் காதில் விலவில்லை. 

அவன் கேட்கிறானா இல்லையா என்பதை பற்றி எல்லாம் யோசிக்காமல் ஏதோ சிறுபிள்ளைக்கு ஏமாற்றி கதை கூறி உணவு ஊட்டுவது போல் ஊட்டிக் கொண்டிருந்தாள் .

குழந்தைக்கு கதை கூறி உணவு ஊட்டும் போது குழந்தை கதையை கேட்கிறதா என்பதெல்லாம் கருத்தில் பதியாதே உணவு உண்கிறதா என்பதில் தானே கவனம் பதியும். அதே நிலை தான் நிலாவிற்கும். 

உணவை ஊட்டி முடித்தவள். கைகளை சுத்தம் செய்து கொண்டு அவனுக்கு வாய் துடைத்துவிட்டு அவன் அருகில் வந்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

யுகி, “யாழு…  “

நிலா, “ம்… “

யுகி, “இனிமே அவனோட பேசாத “

நிலா, “யாரோட …”

யுகி, “அத அந்த ருத்ரன் …”

நிலா, “ஆனா ஏ…  அவரு ரொம்ப நல்லவரு.. “

யுகி, “எனக்கு பிடிக்கலனு சொல்றேல.”

நிலா, “இது என்ன மாமா புதுசா …… இப்படி சொல்றீங்க… “

யுகி, “நா சொல்றத கேப்பியா மாட்டியா.. “

“சரி பேசல.. ” என்று கூறி அமைதியாகி விட்டாள். சற்று நேரத்திற்கு அங்கு அமைதி மட்டுமே நிலைத்திருந்தது.

நிலாவிற்கு இந்த அமைதி சுத்தமாக பிடிக்கவே இல்லை. எப்பொழுதும் தன்னிடம் வம்பு இழுத்து சண்டை பிடிக்கும் தயா மாமன் இன்று தன் குணத்திற்கு மாறாக நடந்து கொள்வது போல் தோன்றியது. 

இவளின் எண்ணத்திற்கு உரியவனோ இருளை  வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனை சகஜம் ஆக்கும் பொருட்டு
“மாமா… “என்று அழைத்தாள்.

“என்ன..”  என்று கேட்டவனிடம் அங்கிருந்த வேலியை சுட்டிக்காட்டி

“எதுக்கு மாமா இந்த கிராமத்த சுத்தி வேலி கட்டி இப்படி இரும்பு பொருளை அது மேல கட்டி வச்சு இருக்காங்க. “

அவள் எண்ணம் போல் அவனும் அமைதி கலைந்து அவளுக்கு விளக்கம் அளிக்க ஆயத்தமானான்.

யுகி, “அது இந்த கிராமம் காட்டுக்கு நடுவுல இருக்குல….”

ம் கொட்டினாள் அவன் பதிலுக்கு. அவனும் தொடர்ந்தான்.

யுகி, “காட்டு மிருகங்கள் உள்ள வராம இருக்கவும், அதுங்க இத தாண்டி உள்ள வர முயற்சி பண்ணுனா இந்த இரும்பு பொருளோட அசைவுனால இங்க இருக்குற மக்கள் நிலைமைய புரிஞ்சுகிட்டு அடுத்து என்ன பண்ணனும்னு  யோசிக்குறதுக்காகவும் இப்படி இரும்பு பொருட்கள் நிறைய இந்த வேலியில கட்டி இருக்காங்க.”

யுக்தயன் இப்படி தான் அவனுக்கு விருப்பான அவன் தொழில் சம்மந்தபட்ட விஷயத்தை பற்றி கேட்டால் அதனுள் சென்றுவிடுவான்.  அப்படி அதன் நினைவில் இருக்கும் போது முன்பிருந்த மனநிலையை பற்றி தற்காலிகமாக மறந்துவிடுவான். இதை அவனோடு இருந்த காலத்தில் புரிந்து கொண்டு அதை இப்பொழுது பயன்படுத்தி கொண்டாள் நிலா.
…..

மறு நாள் காலை

ஊர் தலைவரின் குடிலில் அமர்ந்து தனது டாக்குமண்ட்ரி பற்றி  அக்கிராம முக்கியஸ்தர்களுக்கு புரியும்படி விளக்கி கொண்டிருந்தான்.

ஒரு விஷத்தில் நமக்கு நல்ல புரிதல் இருப்பின் அதனை எதுவும் தெரியாத ஒரு சிறு குழந்தைக்கு கூட புரியும் படி நம்மால் கூற இயலுமாம் அப்படி புரிய வைக்க முடியவில்லை எனில் அதில் நமக்கு இன்னும் தெளிவு தேவை என அர்த்தமாம்  (படித்ததில் பிடித்தது 😁😁)

யுக்தயன் தற்போது அதை தான் செய்து கொண்டிருந்தான் தன்னுடைய வேலையை பற்றி படிப்பறிவு இல்லாத அக்கிராம மக்களுக்கு கூட இதை பற்றி  புரியும் படி  அழகாக எடுத்துச் சொல்ல ஊர் தலைவரும் கிராமத்தை படம் எடுப்பதற்கு ஒப்பு கொண்டார்.

நிலாவிற்கு இச்செய்தியை கூற மகிழ்ச்சியோடு ஓடி வந்தான்.  அவளோ அங்கு ருத்ரனை சிலைபோல் நிற்க வைத்து தனது மடியில் இருந்த அவளது நோட் புக்கில் நிமிர்வதும் பின் குனிவதுமாக அவனை அதில் அழகாக வரைந்து கொண்டிருந்தாள்.

யுக்தயனுக்கு ஏகத்திற்கும் கடுப்பு நேற்று இரவுதான் கூறினேன் இன்று அவனுடன் சேர்ந்து என்ன செய்து கொண்டிருக்கிறாள் என காண அவள் அருகில் நெருங்கினான். கோபத்துடன் திட்ட வாயெடுத்த நேரம் முடுஞ்சது என்று கூறி குதித்து எழுந்தாள் நிலா.

ருத்ரன் ஆர்வமாக அவள் அருகில் வந்து யுக்தயனை விலக்கிவிட்டு நின்று கொண்டான். 

ருத்ரன், “அருமையா இருக்கு நிலாமா … அப்படியே என்ன போலவே இருக்கு “

நிலா, “அப்படியா உங்கள போலவே சரியா இருக்கா “

ருத்ரன், “ம்… “

அவர்கள் அருகில் நின்று இருந்த குழலியின் அருகே சென்றவள்

நிலா, “அப்போ இத நீ வச்சுக்கோ இது உனக்காக தான் “

குழலி, “எனக்கா “

நிலா, “ஆமா இனிமே எங்க அண்ணன் வெளிய கிளம்பி போயிடுற சமயத்துல அவர பாக்கனும்னா  தோனுனா இத பாத்துக்கோ” என்று ருத்ரனின் பக்கம் பார்வையை திருப்பி கூறினாள்

அவளும் வெக்க சிரிப்புடன் அதனை வாங்கி கொண்டாள்.

நேற்று இரவு பூஜைக்கான சமையலின் போதே இருவரும் தோழி ஆகிவிட்டனர். அப்பொழுதே குழலி தன் காதல் கதையை நிலாவிற்கு சொல்ல மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் நிலா.  அதனை தொடர்ந்து தன் மன்னனவன் அடிக்கடி கிராமத்தை விட்டு வெளியே சென்று விடுவார் என்றும் சில நேரம் உடனே அவரை பார்க்க வேண்டும் என்று தோன்றும் என கூறினாள்.

தோழியின் நிலை அறிந்து ஏதாவது செய்ய வேண்டுமே என்று யோசித்தாள் நிலா.

போட்டோ எடுத்து செல்போன இவங்க கிட்ட கொடுத்துட்டு போவோம….. ஆனா சார்ஜ் இறங்கிட்ட ஏத்தறதுக்கு இங்க கரண்ட் இல்லையே
சரி மாமா கேமரால படம் புடிச்சு அத டெவலப் பண்ணி குடுக்கலாம்னா மாமா கேமரா மட்டும் தா எடுத்துட்டு வந்துருக்காரு
என்ன பண்ணலாம்.  பேசாம  அவர படம் வரஞ்சு கொடுத்துருவோமா.

ஆமா அதுதா சரி படம் வரஞ்சு கொடுத்தா அது ஒரு நல்ல நினைவா மனசுல இருக்கும்.  போட்டோ எடுக்குறதுல கூட அவ்ளோ கிக் இருக்காது.  நாளைக்கே வரஞ்சு கொடுத்துரலாம் என்று முடிவெடுத்தாள்.

அதன்படி இதோ வரைந்து கொடுத்துவிட்டாள்.

யுக்தயனோ புரியாத மொழியில் படம் பார்ப்பது போல் நின்று கொண்டிருந்தான்.

தொடரும்…