மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 13

ருத்ரனையும் நிலாவையும் முறைத்து பார்த்துக் கொண்டிருந்த யுக்தயனுக்கு ஆத்திரமாக இருந்தது.  ஏனோ ருத்ரனை சிறிதும் பிடிக்கவில்லை.

அவர்கள் இருக்கும் இடம் நோக்கி சென்றான்.  அவன் வந்து நின்றதும் “மாமா இங்க பாருங்க மருதாணி” என்று கைகளை ஆவலாக அவன் முன் நீட்டினாள்

அவளது கபடமற்ற புன்னகை முகத்தில் தன் சினம் குறைந்தான்.

யுகி, “ம்…  அழகா இருக்கு உன்ன மாதிரியே “

சுற்றி இருந்தவர்கள் நமட்டு சிரிப்பு சிரிக்க நிலாவின் கன்னங்கள் மருதாணியாய் சிவந்தது.

யுக்தயன் நிலாவின் அருகில் அமரவும் மருதாணி இட்டு முடித்து ருத்ரன் எழவும் சரியாக இருந்தது.

அவ்விடம் விட்டு நகர இருந்தவனின் கைகளை மருதாணி இடாத கைகளால் பற்றி கொண்ட நிலா கண்களால் எங்கே செல்கிறாய் என்பதாய் வினவ

ருத்ரன், “கை கழுவிட்டு வரேன் “

சரி என்பதாய் தலையசைத்தாள். அவனும் புன்முறுவல் செய்து அவளது தலையை செல்லமாக ஆட்டிவிட்டு சென்றான்.

அதனை கண்ட யுக்தயனுக்கு அடி வயிற்றில் பற்றிக் கொண்டு எறிந்தது.

 ருத்ரனோ அருகில் கிராம மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தும் நீர் தேக்கத்திற்கு வந்திருந்தான். பொன்னியின் தயவால் அவனது உடையில் ஏறியிருந்த மருதாணி கறையை போக்குவதற்காக.

ஆடையை நீரில் அலசிவிட்டு கைகளையும் முகத்தையும் நீரில் கழுவிக்கொண்டிருந்தவனின் செவியில் விழுந்தது அருகில் இருந்த புதரின் உள் இருந்து வரும் சலசலப்பு. இடுப்பில் சொருகி இருந்த குறுவாளை வலக்கையால் பற்றிக் கொண்டான்.

மேலும் கூர்ந்து கவனிக்க கண்டுகொண்டான் சலசலப்பின் காரணத்தை . குறுவாளில் இருந்து கைகளை எடுத்து கொண்டவன் மீண்டும் நீரில் முகத்தை நன்றாக கழுவ ஆரம்பித்தான்.

முகத்தை நோக்கி மேலெழுந்த அவனது கைகளை பற்றி இழுத்தது ஒரு உருவம்.

அருகில் இருந்த மரத்தின் பின்பக்கம் அவனை சாய்த அந்த உருவம் அவனை இறுக அணைத்துக் கொண்டது.

தன் மாரில் சாய்ந்திருந்த உருவத்தின் காதோரம் “என்னை ஆட்சி செய்ற ராணிக்கு கோபம் குறைஞ்சுருச்சா. “

அவனை நிமிர்ந்து அவன் கண்களை ஆழ நோக்கியவள் “எப்போ என்ன கல்யாணம் கட்டிக்குவீங்க “

அதற்கு மயக்கும் புன்னகை ஒன்றையே பதில் அளித்தான்.

“எல்லாரையும் சிரிச்சு மயக்குற மாதிரி என்னையும் மயக்கிறலாம்னு கனவு காணாதிங்க வருங்கால கணவரே. “

“வருங்காலமா…..  நாமக்குதா திருமணம் நடந்துருச்சே “

“ஆமா…  ஆமா…  கந்தர்வ திருமணம் ஆனா எனக்கு ஊரரிய உங்க பொண்டாட்டியா இருக்குறதுல விருப்பம் அதிகம். “

“இப்போ என்ன அவசரம் “

“அதுலா எனக்கு தெரியாது அடுத்த வருசம் நானும் என்னோட அண்ணன் கையால மருதாணி வச்சுக்கனும்.”

“உண்மை காரணத்தை சொல்லுடி என்னோட குழலி பொண்ணே. “

குழலி, “கரும்புலிக்கிட்ட சண்டை போட்டிங்களா உடம்புல எவ்வளவு காயம்” என்று கண்ணில் வலிந்த கண்ணீருடன் அவனது காயத்தை வருடிக்கொடுத்தாள்.

ருத்ரன் “என்ன குழலி இது சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு இதெல்லாம் எனக்கு வாடிக்கைதான”

குழலி, “வாடிக்கைதா ஆனா இப்படி காயப்படுற நேரத்தில உங்க காயத்துக்கு மருந்து போட்டு உங்க பக்கத்துல இருந்து கவனிச்சுக்க வேண்டாம. “

ருத்ரன், “பாருடா நேத்து நீதான மருந்து போட்டுவிட்ட.”

குழலி, “அது மருத்துவச்சியா உங்களோட மனைவியா இல்லையே எனக்கு அந்த உரிமை கிடைக்காதா ஒவ்வொரு நிமிசமும் ஏதேதோ எண்ணமெல்லாம் வந்து ரொம்பவே பயமா இருக்கு எனக்கு”

ருத்ரன், “ஓ… அத என்னோட ராணிக்கு மூக்கு கோவபழமாக செவந்து இருக்க காரணமா”  என்று ஆழ்ந்து நோக்கினான் அவளை

குழலி, “சந்தேக படல ஆனா..  ஆனா..  எவளோ ஒருத்திய விழுந்து விழுந்து தாங்குறீங்க என்னால தாங்கிக்க முடியல ஏனா உங்கள அந்த அளவு காதலிக்கிறேன் “

ருத்ரன், “அந்த இடத்தில யாரு இருந்தாலும் நா காப்பாத்தி இருப்பேன்” ஒரு பெருமூச்சை விட்டவனோ “மருதாணி வச்சதும் அந்த பொண்ணுமேல கோபம் போயிருச்சா “

குழலி, “ம்… “

ருத்ரன், “சரி அப்போ என்னையும் கவனிக்கலாமே இங்க இருந்து போயி மாதக் கணக்குல ஆச்சுது “

குழலி, “கவனிக்கலாமே ஆனா உரிமை வந்த பிறகு “

“உனக்கு எங்கிட்ட எப்போ உரிமைனு தோணுதோ அப்ப குடு இப்போ உங்கிட்ட எனக்கான உரிமைய காட்டுறேன் “என்று கூறி அவள் இதழில் உரிமையை நிலை நாட்டினான் ருத்ரன்.

அவனை தன்னிடம் இருந்து விலத்தியவள் “என்ன உரிமை ” என்றாள்.

ருத்ரன், “என்னடி இப்படி கேக்குற நீ பெரிய மனுசி ஆனப்போ மலைதேன் கொண்டுவந்து உனக்கு சீர் செஞ்சவன் நான்…. எனக்கு தா முதல் உரிமை …”

இப்படியாக காதல் கிளிகள் செல்ல சண்டை இட்டு கொண்டிருந்தனர்.
…………

குடிலுக்குள் நுழைந்த நிலாவை பிண்ணிருந்து அணைத்தான் யுக்தயன்.

அவனிடம் இருந்து திமிறி விலகியவள் “அது…  வந்து மாமா நானும் இங்க இருக்குறவங்க கூட சேர்ந்து விரதம் இருக்க போறே மாமா இன்னைக்கு ராத்திரிக்கு விரதம் முடுஞ்சுருமா…  அதனால கொஞ்சம் தள்ளியே இருங்க”

யுகி, “ஏற்கனவே நீ ரொம்ப வீக்கா இருக்க இதுல சாப்பிடாம வேற இருக்குனுமா நீ நேத்துல இருந்து சாப்பிட வேற இல்ல. “

நிலா, “அது… மாமா இது பட்டினி இருக்குறது இல்ல அம்மன நினச்சு  இங்க இருக்குற மக்களுக்கும் பூஜைக்கும் ஆன பதார்த்தங்களை செஞ்சு கொடுக்கனும் நா இப்பதா குளிச்சுட்டு வந்தே இன்னும் கொஞ்ச நேரத்தில பௌர்ணமி பூஜை தொடங்கிரும் அதா…  நா போகனும். “

ம்..  என சுரத்தே இல்லாமல் கூறினான்.

அவள் சென்ற பின்பு அந்த குடிலுக்குள்ளே அடைந்து கிடந்தான். முன்பு எப்படியோ தெரியவில்லை ஆனால் தற்போது அவள் மீதான காதலை உணர்ந்த பின் இந்த சிறிய விலகல் கூட கூர் வாள் கொண்டு நெஞ்சில் குத்துவது போல் வலித்தது.

வெகு நேரம் யோசனையிலே விட்டத்தை பார்த்து கொண்டிருந்தான். சின்னரசு வந்து அழைத்துச் சென்றார் பூஜைக்காக. வெளியில் வந்ததும் கூட்டத்தில் தன்னவளை தான்  கண்கள் முதலில் தேடியது.

அவனை சோதிப்பதற்காகவே அங்கே ருத்ரனும் நிலாவும் கண்ணில் பட்டனர். குடிலின் மேல் வைக்கப்பட்டிருந்த பூவை எடுக்க போராடிக்கொண்டிருந்த நிலாவிற்கு உதவியாக அவளை தன் உயரத்திற்கு தூக்கினான்.

அங்கிருப்பவர்கள் மதியத்திற்கு மேல் நிலாவிற்கு ருத்ரன் மருதாணி வைத்துவிட்டதை பார்த்தே அறிந்து கொண்டனர் அவர்கள் உறவின் தன்மையை.

ஆனால் இந்த திருவிழா பற்றியும் மருதாணி சடங்கை பற்றியும்  அறியாத யுக்தயன் உடைந்துபோனான்.  அதற்காக அவன் நிலாவை சந்தேகிற்கிறான் என்று இல்லை.  காதலை உணர்ந்தவனின் மனநிலை காதலியை அருகில் வைத்து பார்ப்பதும் காதல் புரிய வேண்டும் என்பதாகவே தானே இருக்கும். ஆனால் நிலாவின் செயல்கள் அனைத்தும் அவன் பார்வைக்கு தன்னிடம் இருந்து அவள் விலக முயற்சிக்கிறாள் என்பதாகவே தெரிந்தது. அதன் வெளிப்பாடே அவனது தற்போதைய நிலைக்கு காரணம்.

பூவை எடுத்துக் கொண்டு போய் பூஜை இடத்தில் வைத்தவள் பார்வை யுக்தயன் புறம் திரும்பியது.  அவனை பார்த்து புன்னகைத்தவள் அருகில் வருமாறு சைகை செய்தாள்.

இவனும் அவளது அழைப்பில் சிறுபிள்ளையென துள்ளிகுதித்து அவள் அருகில் சென்று நின்று கொண்டான்.  இவ்வளவு நேரம் இதை தானே எதிர்பார்த்தான். அவளது கடைக்கண் பார்வையும் தன் மீது படாதா என்று.

பூஜை சிறப்பாக முடிந்தவுடன் அனைவருக்கும் பிரசாதம் கொடுக்கப்பட்டது.  பிறகு இரவு பௌர்ணமிக்கு நிலவு சோறு உண்பதற்காக அனைவரும் வரிசையாக அமர ருத்ரன் நிலாவை கத்தி அழைத்து தன் அருகே வருமாறு கூற அவளும் விரைந்து ஓடினாள். ருத்ரனின் பக்கத்தில் போடப்பட்டிருந்த இலையின் முன் அமர்ந்துவிட்டாள். 

யுகியோ தன் கைகளை வெறித்துப் பார்த்தான். இவ்வளவு நேரம் தன் கைகளோடு பிணைந்திருந்த அவளது கைகள் தன்னைவிட்டு சென்றுவிட்டதே என வருந்தினான்.

யுக்தயனுக்கு அருகில் இருந்தவர் உணவருந்த அழைக்க பசியில்லை நேரம் ஆகட்டும் என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகன்று குடிலின் பின்புறம் வந்து அங்கே இருந்த பாறையில் அமர்ந்தான்.

ஏனோ கோபத்தைவிடவும் வருத்தத்தைவிடவும் அழுகையே அதிகமாக வந்தது அவனுக்கு. சிறு துளிகளாக வெளிவந்த கண்ணீர் கன்னங்களை தாண்டி பெருக்கெடுத்து ஓடியது.  வெடித்து அழுக ஆரம்பித்துவிட்டான்.  மறுபுறம் இருந்த ஆராவாரத்திற்கும் இரைச்சலுக்கும் இடையே அவன் குரல் எவர் காதுக்கும் எட்டவில்லை.

ஏன்டி என்னவிட்டு விலகிபோற…  என்ன.. பி.. பிடி…க்கலியா யாழு..  என்று வாய்விட்டு கூறி கதறினான்.

தொடரும்…