மீட்டாத வீணை தருகின்ற ராகம் -12

இன்றே கடைசி நாள் என்பது போல் அவள் இதழில் குடியிருந்தான் யுக்தயன்.  அவனது கண்ணீரால் அதிக அளவு உப்பின் சுவையை அவளது உதடுகள் உள்வாங்கியது.

நேரம் ஆக ஆக வன்மை கூடி போய் விரல்களும் எல்லை மீற வலுக்கட்டாயமாக அவனை தன்னிடம் இருந்து பிரித்து அவன் முகம் நோக்கினாள். 

ஏற்கனவே தூக்கமின்மையால் ஏற்பட்ட கண்ணின் சிவப்பு அழுகையினால் மேலும் சிவந்து இரத்த நிறத்தை தத்தெடுத்தது. முகம் முழுவதும் வீங்கி போய் பார்க்கவே பாவமாக தெரிந்தான்.

அவனது கன்னங்களை இரு கைகளால் தாங்கி “எதுக்கு இவ்ளோ அழுகை எனக்கு ஒன்னும் ஆகல… என்னாச்சு உங்களுக்கு “

தலையை இடம்வலமாக ஆட்டியவனின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டே இருந்தது. அவளை மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டான்.

மெதுவாக அவனது தலையை வருடிகொடுத்தாள். அவளது கழுத்து வளைவில் முகத்தை நன்றாக புதைத்து கொண்டான். அவள் கேசம் கோதும் சுகத்தில் மெல்ல கண் அயர்ந்தான்.

அவன் உறங்கிவிட்டதை உறுதி செய்தவள் மெல்ல பின்புறம் நகர்ந்து நன்றாக சுவரில் சாய்ந்து அவனை நெஞ்சோடு அணைத்து கொண்டாள்.

தூக்கத்திலும் அவளது கைகளை இறுக பற்றி இருந்தான் யுக்தயன்.  இவ்வளவு நேரம் இருந்த பயமும் படபடப்பும் நீங்கிய கலைப்பில் நன்றாக உறங்கினான். அவளும் அவளை அணைத்தவாரே உறங்கிவிட்டாள்.

உணவு எடுத்து வந்த அந்த கிராமத்தை சேர்ந்த பெண் அவர்கள் இருக்கும் நிலையை பார்த்து சிரித்துவிட்டு வெளியே சென்றுவிட்டாள். யாரையும் அக்குடிலுக்குள் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டாள்.

மதியத்திற்கு மேல் தான் கண் விழித்தனர். முதலில் கண் விழித்த நிலா தன் நெஞ்சில் முகம் புதைத்து உறங்கி கொண்டிருக்கும் கணவனை பார்த்தவள், 

‘எம்மேல அவ்வளவு பாசமா தயா மாமா அப்போ நீங்களும் என்ன காதலிக்கிறீங்களா.  நீங்க என்ன காதலிக்கலனாலும் பரவா இல்ல மாமா இதே மாதிரி எனக்காக உங்ககிட்ட ஒரு சின்ன துடிப்பு இருந்தாலே போதும் நா வாழ்றதுக்கு. ஏ அழகு தயா மாமா ‘என்று அவனை செல்லம் கொஞ்சியவள் அவனை நன்றாக படுக்க வைத்து விட்டு எழுந்து வெளியே சென்றாள்.

இருள் மங்கிய மாலை வேளை அனைவரும் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். குடுசைகள் அனைத்தும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.  வலது புறம் திரும்பியவள் அங்கிருந்த ஒரு அழகிய பெண் சிலையை பார்த்து மெய் மறந்து நின்றாள். அவ்வளவு அழகு அச்சிலை அதன் இடப்புறம் ஒரு ஆண் சிலையும் வலப்புறம் ஒரு ஆண் சிலையும் இருந்தது. அதில் ஒரு ஆண் சிலை அந்த பெண் சிலையின் கை விரல்களை பற்றி உள்ளங்கையில் ஏதோ செய்வது போன்று அமைந்திருந்தது.

அந்த சிலையை சுற்றி பார்வையை செலுத்தினாள் நிலா. அந்த சிலை உணர்த்திய காட்சியை பிரதிபலித்தனர் அக்கிராம மக்கள்.

ஆங்காங்க சில பெண்களும் அவர்கள் அருகில் இரு ஆண்களும் அதில் ஒருவர் அவர்களின் கைகளில் மருதாணி வைத்துக்கொண்டு இருந்தனர்.

அந்த கூட்டத்தில் ருத்ராவும் ஒரு பெண்ணுக்கு மருதாணி இட்டு கொண்டிருந்தான்.  மெதுவாக அவன் அருகில் சென்று நின்றாள்.

நிமிர்ந்து பார்த்தவர்கள் “இப்போ எப்படி இருக்கு  கண்ணு” என்று பரிவாக கேட்டனர்.

இவளும் தான் நலம் என்பதை உறைத்துவிட்டு அங்கு நடைபெறுவதை புரியாமல் பார்த்து வைத்தாள்.

ருத்ரனிடம்  மருதாணி வைத்துக் கொண்டிருந்த பெண் “என்ன கண்ணு அப்படி பாக்குற….. இங்க இது திருவிழா, எங்க காட்டு அம்மன் திருவிழா அதோ இருக்கே ஒரு பெண் சிலை அவங்கதா எங்க காட்டுஅம்மன் அவங்க பேரு… “

“அம்மா… நா சொல்றே…. நா சொல்றே..” என்றது அருகில் இருந்த ஒரு பொடிவாண்டு.

நிலாவும் புன்னகையுடன் அவள் புறம் திரும்பி “சொல்லுங்க தங்கம்” என்றாள்.

அதற்கு குட்டியாக இருந்த அந்த பெரிய மனுசியோ, ” சொல்றே…  சொல்றே…  ம்…” என்று தன் ஆள்காட்டி விரலால் தாடையை தட்டி

“நா சின்ன புள்ளையா இருக்கும் போது எங்க அம்மா இந்த கதைய நிறைய தடவ சொல்லி இருக்காங்க. “

நிலா, “ஓ …அப்போ இப்பமட்டும் நீங்க யாரா “

“ஆ…  இப்ப நா பெரிய பொண்ணு எனக்கு 12வயசு ஆகிருச்சு “

நிலா, “சரிங்க பெரிய மனுசி சொல்லுங்க.”

“அதோ அந்த பெண் சிலை பேரு பொன்னி  ஏ பேருந்தான். அவங்க பக்கத்துல மருதாணி வச்சுவிடுறாங்கள அவரு அவங்க அண்ணே ருத்ரேந்திரன் எங்க மாமா பேரு கூட அதுதா… அப்புறம் அவங்க பக்கத்துல இருக்குறவங்க பேரு ச… சண்.. அம்மா அவங்க பேரு மட்டும் நீ சொல்லு …”

“ஏன்டி பேச கத்துக்கிட்ட நாளுல இருந்து இந்த கதைய கேக்குற பேரு நியாபகம் இல்லையா “

“அம்மா..  நா சின்ன பொண்ணு தான எனக்கு எப்படி தெரியும்… “

சுற்றி இருந்த அனைவரும் கலகலவென சிரித்தனர்.  அச்சிரிப்பு சத்தத்தை கேட்டு அச்சிறுவண்டு ஓடி சென்று ருத்ரனின் மடியில் அமர்ந்து அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

சிரிப்பு சத்தம் அடங்கியவுடன் அந்த சிறு பெண்ணின் தாய் மீனாட்சி “அவங்க பேரு சண்டிக ஈஸ்வர மூர்த்தி ….
அது என்ன கதைனா கண்ணு ஒவ்வொரு வருஷமும் அறுவடை முடிஞ்சு வர முத பௌர்ணமிக்கு பொறந்த வீட்டுக்கு வர பொன்னிக்கு அவங்க அண்ணே ருத்ரேந்திரன் தேனு, மலைகிழங்கு, அறுவடை செஞ்ச நெல்லுல ஒரு பங்கு இப்படி இன்னும் நிறைய பொருள சீதனமா குடுப்பாரு.  அது மட்டுமில்லாமா இங்க மல உச்சில அருவி தொடக்கத்துல ஒரு சிவன் கோவில் இருக்கு  அந்த இடத்துல விளையிற மருதாணிய பறிச்சுட்டு வந்து தங்கச்சி கைக்கு வச்சுவிட்டு அழகு பாப்பாரா அதுதாண்டா அந்த சிலையோட கதை.. “

நிலா, “ஓ…  அப்போ அததா நீங்க இப்போ பண்டிகையா கொண்டாடுறீங்களா.  அப்படினா இது மல உச்சில இருந்து பறிச்ச மருதாணியா “

ருத்ரன், “ஆமாண்டாமா அத எடுத்துட்டு திரும்பி வர்ர வழியிலதா உன்ன கரும்புலிக்கிட்ட இருந்து காப்பாத்துனே.”

பொன்னி, “ஆமா அக்கா… எங்க மாமா மல உச்சிக்குதா போயி இருந்துச்சு அப்புறம் நா பெரிய மனுசியா ஆகிட்ட அதோ அந்த உச்சில இருக்குற தேன் எடுத்துட்டு வந்து எனக்கு சீர் செய்யுமா
அது ரொம்ப ருசியா இருக்குமா பக்கத்து குடிசல்ல இருக்குற அக்கா கூட சொல்லுச்சு.  ஏ மாமா எனக்காக அத கொண்டுவருவல நீ”

ருத்ரன், “உனக்கு இல்லாதத ஆனா அதுக்கு கூழியா நீ என்ன கட்டிக்கணும் சரியா “

“போ…  மாமா..  “என்று சிணுங்கினாள் பொன்னி.

நிலா, ” இங்க இருக்குறவங்க மட்டும் தா இந்த மருதாணி வச்சுக்கனுமா நானும் வச்சுக்கலாமா “

ருத்ரன் அவளை பார்த்து சிரித்துவிட்டு மருதாணியை கையில் எடுத்து அவள் உள்ளங்கையில் வைத்துவிட்டான்.

ருத்ரன், “நீயும் எங்கூட பிறந்த பொறப்பு மாதிரிதா தாயி “

அவளும் ஆவலாக அவன் வைத்துவிடும் மருதாணியை ரசிக்க ஆரம்பித்தாள்.

தூக்கம் கலைந்து வெளியே வந்த யுக்தயனின் கண்ணில்பட்டனர் நிலாவும் ருத்ரனும் ஆத்திரமாக வந்தது அவனுக்கு.

அதே சமயம் நிலாவுக்கு மருதாணி வைக்கும் ருத்ரனை பார்த்த மற்றொரு உருவத்திற்கு இதுவரை இருந்த ஆத்திரம் அடங்கி மனது நிம்மதி அடைந்தது.

தொடரும்….