மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 3

அத்தியாயம் – 3

சுற்றியும் பசுமையாக இருந்தாலும் கொளுத்தும் வெயிலும், வீசும் காற்றும் போட்டி போட சற்று நேரத்தில் வெயிலே வென்றது.

வயலில் பலரும் நாற்று நட்டுக் கொண்டிருக்க, அதை கவனித்தவாறே தானும் வேலை செய்து கொண்டிருந்தான் வெற்றி.

“ஏன்ப்பா வெற்றி…”

“சொல்லுங்க க்கா.”

“பாட்டி எப்படி இருக்கு? பாத்து நாளாச்சு. வயல் பக்கம்லாம் வராதே இல்ல.”

“அவங்களுக்கு அதிகமா வெளிய வந்தா களப்பா இருக்குங்கிறதல வீட்லயே இருக்காங்க க்கா.”

“ஓ… அதுவும் சரிதான்.ஓய்வா இருக்கட்டும்.” என,

“வயசான காலத்துல உன் கல்யாணத்தை பாத்தா அவங்களுக்கும் மனசுக்கு சந்தோசமா இருக்குமில்ல.” ஒருவர் ஆரம்பித்தார்.

“ஆமாப்பா பேரன் பேத்தினு பாத்துட்டாவே ஒரு தனி தெம்புதான்” என்றார் இன்னொருவர்.

அனைவருக்கும் புன்னகையை பதிலாக கொடுத்தவன், “எப்போயா எங்களுக்கு கல்யாண சாப்பாடு போடுவ?” என்ற அங்கு வேலை செய்யும் வேறொரு பெண்ணின் நேரடி கேள்வியில்,

“போட்றலாம் க்கா… சீக்கிரமா.” என பதில் சொன்னான்.

பலரும் பலவாறு அவனிடம் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விதான்.

மனதில் உள்ளது மனதோடே போய் விடுமோ என்ற பயம் எப்போதுமே அவனுக்கு உண்டு.

தன்னை வேண்டாம் என ஒதுக்கியவர்களை நினைத்து மனம் கலங்கினாலும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டான். அப்படி இருக்க இவளை எப்படி பிடித்தது? அது அவன் கட்டுப்படுத்த நினைத்தும் முடியாமல்… வந்துவிட்ட உணர்வு. காதல் அல்லவா!

வருடமாக பார்வையால் மட்டுமே நடந்து கொண்டிருக்கும் காதல். அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றால் நிறைய பிரச்சனையை சந்திக்க வேண்டி வரும் என நன்றாகவே அறிந்திருந்தான்.

‘அதற்கெல்லாம் என்ன செய்ய முடியும்?’ எனத் தோன்றினாலும், ‘எப்படி முடிந்தளவு இதனை சுமூகமாக முடிக்க முடியும்?’ என்பதிலேயே எண்ணம் சுழன்றது.

நண்பகல் வெயில் சுள்ளென்று கொளுத்திக் கொண்டிருக்க, அதன் விளைவாக உடல் முழுதும் வியர்வையால் நனைந்திருந்தது.

‘அதற்காக குடை பிடித்துக்கொண்டா வேலை செய்ய இயலும்? இதையெல்லாம் பார்த்தால் வேலை தான் ஆகுமா?’

அங்கிருக்கும் அனைவருமே பேசியபடியும், அதேசமயம் வேலையில் மும்முறமாகவும் இருந்தனர்.

தன்னை யாரோ பார்ப்பது போல தோன்ற தோளில் வியர்வையை துடைத்தவாரு நிமிர்ந்து பார்த்தான். யாரும் கண்ணில் படவில்லையெனினும் யாரென அறிவான்!

‘இவ ஒருத்தி முன்னாடியே வர மாட்டா; பேசமாட்டா; ஆனா இந்த பார்வைக்கு ஒன்னும் குறச்சலே இருக்கறதில்ல.’ என மனதுக்குள் சலித்துக் கொண்டான்.

ஆனாலும் அந்த கள்ளத்தனமான பார்வை பிடிக்காமல் இல்லை. சுடும் வெயிலைத் தாண்டி எப்போதும் போல சில்லென்ற ஒரு உணர்வு.

அதேசமயம் சுற்றியும் அவளை எத்தனை தேடியும் புலப்படாமல் போக, பிரம்மையோ எனவும் சந்தேகம்.

மதியம் ஒன்றரை பக்கமாக ஆக, “எல்லாரும் சாப்ட்டு வேலை பாருங்க.” எனக்கூறவும், அனைவரும் வயலைத் தாண்டி ஓரமாக இருந்த பெரிய தொட்டியின் தண்ணீரில் முகம் கழுவியபின் பேசியபடி சோற்றை உண்ண ஆரம்பித்தனர்.

‘உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூட முடியாது.’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பேச்சு அது பாக்கில் நடந்து கொண்டே இருந்தது.

அவனும் கை காலை கழுவிவிட்டு, சற்று நேரத்திற்கு முன் பாட்டி அனுப்பி வீட்டின் அருகே உள்ள அவன் தங்கை முறை பெண் மல்லி கொடுத்த சாப்பாட்டு கப்பை எடுத்தான்.

வேலை அதிகம் என்பதால் சில நாட்களாக சாப்பிட வீடு செல்லவில்லை. பொதுவாக இது போன்ற சமயத்தில் அவள் தம்பி வந்து கொடுத்து விட்டு செல்வான்.

இன்று அவளே வரவும், ‘வயசு புள்ளைய வெயில்ல எனக்கு சோறு கொடுக்க அனுப்பிருக்கு.’ என சங்கடமானவன்,

‘இனி நாமளே போய் மதியம் சாப்டு வந்துரனும். எதுக்கு அடுத்தவங்களுக்கு தேவையில்லாம தொல்ல.’ என நினைத்தவாறே அதை திறக்க, அதன் வாசனையே சொன்னது யார் அதை செய்துள்ளார்களென.

‘எந்த கேப்புல இத மாத்துனா? வெயில்ல வந்து எதுக்கு இத்தனை கஷ்டம்? ஒரு நாளும் பேச வரதில்ல. பக்கத்துல போனாலே தெறிச்சு ஓடுறது. ஆனா இந்த வேலைலாம் பாக்குறது.’ மனதுக்குள் வசை பாடியவாறே உணவினை உண்டான்.

பருப்பும், உருளைக்கிழங்கு பொறியலும் சாதத்துடன் அவனுக்கு அமுதமென இருந்தது.

அவள் பழைய சோற்றில் உப்பு போட்டு கரைத்துக் கொடுத்தாலும் அவனுக்கு அமுதமே!

வயிறாரா சாப்பிட்டவன், சற்று நேரம் ஓய்வுக்குப் பின் வயலுக்குள் சென்றுவிட, இத்தனை நேரம் பதுங்கியிருந்த வைக்கபோருக்கு பின்னாலிருந்து சற்று எட்டி பார்த்தாள்… தேன்மொழி.

ஓடிச்சென்று அந்த கப்பை பார்க்க எப்போதும் போல சாப்பிட்டுவிட்டு கழுவி வைத்திருந்தான்.

இவளும் அவனுக்கு பாட்டி கொடுத்த சாப்பாட்டை அவள் தோழி மல்லியுடன் ஒரு கட்டு கட்டி விட்டுத்தான் வந்தாள்.

அவள் தோழியின் தம்பி பள்ளி மாணவன். இன்று அவனுக்கு காய்ச்சசல் என்பதால் அவள் வர, தோழியுடன் உண்டாள். அவன் வந்திருந்தால் அவனுடன் பங்கு போட்டு உண்டிருப்பாள்.

வினோத்… மல்லியின் தம்பி. ஊருக்குள்ளே பள்ளி என்பதால் மதியம் வீடு வந்து சாப்பிடுவான்.

வெற்றிக்கு இதுபோல என்றேனும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்ற தகவல் பாட்டி மூலம் மல்லியிடம் வரும். அவள் தேன்மொழிக்கு சொல்லிவிடுவாள்.

அவன் தம்பி கொஞ்சம் விவரம் அறியா பள்ளி சிறுவன், எனவே அவனிடம் யாரிடமும் இதை சொல்லக்கூடாது என்றதால், அவள் மாத்தி கொடுப்பதை யாரிடமும் சொன்னதில்லை. அதைவிடவும் அவன் அன்பு அக்காவின் கட்டளையை மீறமாட்டான்.

இந்த கப்பு மாற்றம் அடிக்கடி நடக்காது. எப்போதாவது அரிதாக தான் நிகழும். ஆனாலும் வெற்றிக்கு அவள் செய்யும் உணவின் வாசனை அத்துப்படி.

வேகமாக மற்றொரு பாக்ஸை யார் கண்ணிலும் படாமல் தொட்டி நீரில் கழுவியவள், அதை மாற்றி, அவனை மேலும் சில நிமிடங்கள் கண்களில் நிரப்பிக் கொண்டு கிளம்பினாள்.

“ஏன் தேனு”

“ம்ம்”

“எத்தனை நாளைக்குடி இப்படி?”

“…”

“அவர் பேச வந்தா பேசறதுதான?”

“மல்லி… நீயே இப்படி புரிஞ்சிக்காம கேக்குற பாத்தியா? வீட்ல யாரும் பாத்தாங்க அவருக்குத்தான் பிரச்சனை.” என,

‘ஆமா ஆமா வீட்ல அதுக்கு ஆள் இருக்கே.’ என மனதுக்குள் முனகியவாரு அவள் பேச்சைக் கேட்டாள்.

“எனக்கு… சொல்லவே வேணாம். ஒன்னு கல்யாணம் பண்ணுனு அடிப்பாங்க. அந்த பேச்சு வார்த்தை வேற போய்ட்டு இருக்கோ என்னவோ. அதுக்கு ஒத்துக்கலனா என் சோத்துல எதையும் கலந்துட்டா?” என கேட்க,

அவள் எத்தனை பெரிய வார்த்தையை அசால்ட்டாக சொல்கிறாள் என தோழியை முறைத்தாள்.

அதை கவனித்தவள், “நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடாது.” என சிரித்துவிட்டு,

“விஷயம் என்னனா… இதுல இத்தனை பிரச்சனை இருக்கு. அதனால தான் இப்படி. இப்போவே மாட்டிக்கிட்டா, அப்பறோம் எப்படி நான் என் அத்தான கல்யாணம் கட்டிக்கிட்டு நெறய புள்ள குட்டி பெத்து சந்தோஷமா வாழமுடியும்?” எனக் கூறியவளிடம்,

“இவ்ளோ பிரச்சனை வரும்னு நெனைக்குற விஷயம் எப்படிடி நடக்கும்னு நம்புற?” என்றாள்.

அவளுக்கு தேன்மொழி காதல் பற்றி பலவருடமாகத் தெரியும். ஆனால் அவர்கள் குடும்ப சண்டையும் சேர்த்து தெரியும்.

‘எப்படி இதுக்கு ஒப்புக்கொள்வார்கள்?’ என்ற கவலையே. நடந்து விட்டால் மகிழ்ச்சி. ஆனால் அவள் கூறியது போல மாட்டிக்கொண்டாள்… எதுவும் நடக்கவும் வாய்ப்பு உண்டு! அதனால்தான் இப்படி கேட்டாள்.

“அதுலாம் அத்தான் பாத்துக்குவாரு. நேரம் வரும்போது நானும் அவர்கிட்ட கண்டிப்பா பேசுவேன்.”

அவள் நம்பிக்கையான பேச்சில் கொஞ்சம் தெளிந்தவள், “உன் மனசு படியே அண்ணா கூட சந்தோஷமா இருப்ப.” எனவும் மென்மையான புன்னகைத்தாள்.

நேரமாகி விட்டதால் அதற்கு மேல் தாமதிக்காமல் வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

—–

அந்த ஊரில் உள்ள ஏரியின் அருகே உள்ள ஆலமரத்தை சுற்றியிருந்த திட்டில் வேடிக்கை பார்த்தவாரு உட்கார்ந்திருந்தான் கதிர்.

இந்த இடம் அவனுக்கு கொஞ்சம் ஸ்பெஷல். அதனாலே ஊருக்குள் செல்கிறேன் என்றுவிட்டு, பெரும்பான்மையானா நேரத்தை இங்கேயே கழித்தான்.

நேற்றிரவு அவள் ஊருக்குள் வரும்போது, நின்று பார்த்துக்கொண்டு தான் இருந்தான். அவளும் வெற்றியிடம் பேசிவிட்டு பைக்கில் ஏறியவாரு சுற்றியும் முற்றியும் பார்த்தாள்.

‘நாம் பார்ப்பதை உணர்ந்து நம்மைதான் தேடுகிறாளோ?’ என்ற மனதின் கேள்விக்கு, ‘அப்படியே தேடிட்டாலும்.’ என அவனே பதிலும் கூறிக் கொண்டான்.

‘நாமதான் வேல வேலனு நிக்க நேரமில்லாம் ஓடி கவலைய மறக்க நெனச்சிருக்கோம். அவள பாரு… பொங்கல்… டூருனு சந்தோஷமா இருக்கா. ராட்சசி…’ என திட்டிய மனம் உடனே,

‘ஏன்… இதுலாம் பண்ணா மனசுல வருத்தம் இல்லனு அர்த்தமா? நாம கூட தான் அங்க அப்போதைக்கு எல்லாத்தையும் ஒதுக்கிட்டு ஓயாம வேல பாத்தோம்.’ என எதிராகவும் வாதிட்டது.

காதல்தான் ஒருவரை எத்தனை பாடுபடுத்தி புலம்ப விடுகிறது?

சேது படத்தில் விக்ரம் சொல்வது போல,

‘ஒரு காலத்துல ரொம்ப சந்தோஷமா இருந்தேன்டி… என்னைக்கு உன்ன பாத்து இந்த எழவேடுத்த லவ்வெல்லாம் பண்ண ஆரம்பிச்சனோ… அன்னைக்கு புடிச்சது சனியன்.’ என நினைத்துக்கொண்டான்.

அப்போது பைக் வரும் அரவம் கேட்டது. யாரென்று புரிந்தும் திரும்பவில்லை.

சில நிமிடங்களில் முதுகில் குச்சியால் ஒரு அடி சப்பென விழ வலியில் துள்ளி எழுந்தவன், “வீணாப் போனவனே… ஏன்டா அடிச்ச?” என முதுகை தேய்த்தவாரு திரும்பி முறைத்தான்.

பிரபாகரன் தான் கையில் தடியோடு நின்றிருந்தான். கதிரின் தோஸ்து படா தோஸ்து.

“ம்ம்… ஒரு அடியோட விட்டனேனு சந்தோஷப்படு. நீயெல்லாம் ஒரு பிரண்ட்டாடா? ஊருக்கு வந்தமே ஒரு வார்த்தை சொல்லுவோம்னு இருக்கா… நானும் ஒரு வேலையா வெளிய போய்ட்டு இன்னைக்குத் தான் வந்தேன்.” என தடியை தூக்கிப் போட்டவாரு கோபத்தில் ஆரம்பித்து ஆதங்கத்தில் முடித்தான்.

“…”

“பதில் சொல்லுடா வெண்ண.”

அப்போதும் அவனிடமிருந்து பதிலில்லை. அவனே சோகத்தில் உள்ளானே.

அவன் முகத்தை உற்று பார்த்தவனுக்கு விஷயம் புரிய, “ஏன்டா… இன்னுமா உங்க பஞ்சாயத்து முடியல?”

“இல்ல.”

“ம்ம்… இதுக்கு மட்டும் உடனே பதில் வருது.” என கோபம் போல சொன்னவன் பாவனையில் லேசாக சிரித்தவன், அவனைப் பார்க்க, சண்டையை தூரப் போட்டு அவனை அணைத்துக்கொண்டான் பிரபா.

பதிலுக்கு அணைத்தவன், “சாரிடா… மனசே சரியில்ல. அதான்…” என வருந்த,

“விடு.” என்று விட்டு அதே திட்டில் அமர்ந்து கொண்டனர்.

“மறுபடியும் வெளிய வேலைக்கு வெளிய போவியா மச்சி?”

“இல்லடா. இனிமே இங்கதான்.”

அந்த பதில் அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சிறுவயதிலிருந்து ஒன்றாக சுற்றியவர்கள். திடீரென ஒருநாள், ‘வெளியே வேலை கிடைச்சிருக்கு போய்ட்டுவரேன்டா.’ என்றவன் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துதான் ஊருக்குள் வந்துள்ளான். பிரச்சனை என்ன என முழுமையாக புரியாவிட்டாலும் யாருடன் என புரிந்தது.

“பாத்தியா உன் ஆள?”

“அதெல்லாம்.”

“பாவி… யாருக்கிட்ட சண்டைய போட்டுட்டு வெளிய போனியோ அவங்கள போய் பாத்துருக்க… நாங்க என்னடா பண்ணோம்?” என்ற கேள்விக்கும் புன்னகையே…

“என்ன பண்ணலாம்னு இருக்க?”

“தெரிலடா… வீட்ல தேன் பேச்சை வேற எடுக்கறாங்க.”

அதைக் கேட்டு அவன் புருவம் உயர்ந்தது. அர்த்தமாக பார்வையை பரிமாறிக் கொண்டவர்கள், மேலும் சிறிது நேரம் பேசி அப்படியே ஊர்க்கதையையும் பேசினர்.

அவங்க பேசட்டும்… நாம அப்பறம் வருவோம்…

தொடரும்…