மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 4

அத்தியாயம் – 4

என்றும் போல அழகிய விடியலில் அந்த நாள் இனிமையாக தொடங்கியது.

அனைவருக்கும் இனிமையாக இல்லையோ?

தேன்மொழியின் அப்பா சுந்தரம், நாற்காலியில் தோரணையாக அமர்ந்திருக்க, அவரருகே மாணிக்கம் கொஞ்சம் பவ்வியமாக உட்கார்ந்திருந்தார்.

அதிகாரம் சிலரால் அடங்கி போகும் நபர்களிடம் மட்டுமே காட்டப்படுகிறது போலும்!

சூடாக விவாதம் நடந்து கொண்டிருந்தது. என்ன, பேச்சு ஒருத்தரிடமிருந்து மட்டும் சூடாக வர, அதை மற்றொருவர் அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

“என்ன மாப்ள உங்க பையன் பேச்சு சரியில்ல போல?” என்றார் ஆழ்ந்த குரலில்… அந்த குரலில் இவருக்கு உள்ளக்குள் கொஞ்சம் உதறியது.

‘ச்சே… அவனால நான் பதில் பேச முடியாம நிக்க வேண்டி இருக்கு.’ என உள்ளுக்குள் பொறுமினார்.

அவர் மீனாட்சியின் உடன்பிறந்த சகோதரன். அவர் மனைவிதான் கனகம்.

என்னதான் இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது என்றாலும், அவர் மீது என்றுமே ஒரு பயம் உண்டு மாணிக்கத்திற்கு.

அதுவும் மீனாட்சியுடனான திருமணத்திற்குப் பின் சொல்லவே வேண்டாம்.

இன்றும் அப்போது ஒரு நாள்… வந்து அவர் மிரட்டிவிட்டு சென்றதை நினைத்தால் வேர்க்கும்.

அவரின் அதிகாரத்திற்குக் கீழ் உள்ளது போல ஒரு பிம்பம். உண்மையை சொன்னால் பிம்பமல்ல அதுவே உண்மை.

எனவேதான்… பலத்தடைகளை, நிகழ்வுகளைத் தாண்டி அவர் காதலை அடைந்திருந்த போதும், நாட்கள் போக இவர் மீதுள்ள கோபம், அவர் தங்கை மீது ஏச்சுக்களாக வெளிப்பட்டது.

முதலில் மனைவியை கொண்டாடியவர்… பிறகு வசை பாட ஆரம்பித்துவிட்டார்.

உண்மை காதல் என்பது கஷ்டப்பட்டு வாழ்வில் இணைவது மட்டுமல்ல; நிறைவாக வாழ்ந்து காட்டுவதில் தான் உள்ளது என அவருக்கு புரியவில்லை போல.

தன்னுடைய சுயநலத்தால் தப்பிற்கு மேல் தப்பு செய்து கொண்டு போறோம். சிலவற்றை மாற்றி அமைக்க இயலாதென அறியாமல் போனார்.

தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் கண்டிப்பாக ஒரு நாள் செய்ததுக்கு வருத்தப்பட்டு நிற்பார்.

ஆனால் இன்று,

எப்போதும் போல மனதில் அவரின் அதிகாரப் பேச்சில் எரிச்சலுற்றாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல்,

“சின்ன பையன்… ஏதோ துள்ளுறான். நாம நெனைக்கறது தான் மச்சான் நடக்கும்.” என சமாதானமாக சொன்னார்.

அவரை ஒரு பார்வை பார்த்த சுந்தரம் எதுவும் பேசவில்லை.

ஏனோ… கதிரை அத்தனை எளிதாக அவரால் எடுத்துக்கொள்ள இயலவில்லை. அவன் மனம் அவருக்கு தெரிந்தே இந்த ஆத்திரம்.

‘நம் வீட்டு பையன்… யார் மீது கண் வைக்கிறான்? எதற்கும் ஒரு தராதரம் வேண்டாம்?’ என்ற கோபம் உள்ளுக்குள் எரிமலையாக கொதித்தது.

‘இத்தனை வருடமாக தான் நினைத்தது நடந்தது, இல்லை நடத்தினேன்.’ என்ற அவரது இறுமாப்பிற்கு ஒரு அடி விழுந்தது போல உணர்ந்தார்.

மேலும் இதன்மூலம் அவரால் வெட்டிவிடப்பட்ட உறவு மீண்டும் ஒட்டிகொள்ளுமோ என்ற சந்தேகம் வேறு…

சில விடயங்கள் யாருக்கும் தெரியாது அல்லவா! அது தெரிந்தால் பிரச்சனையாக வாய்ப்பு உள்ளதே என்ற கலக்கம்.

வெட்டிவிடப்பட்டது என்றும் எந்த வகையில் ஒட்டவே கூடாதென நினைத்தார்.

மொத்தத்தில் அவனை மகளுக்கு மணமுடிப்பதை விட, அவளை (புவனா) அவன் திருமணம் செய்து உறவை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதே அவருக்கு பிரதானம்.

மனதுக்குள் ஒரு மூலையில் தன் மகளை அவன் நேரடியாக மறுத்ததும் வர, அவளுக்கு நல்ல வரன் பார்க்கத் தெரியும் என நினைத்துக் கொண்டார்.

இதுபோல நேரடியாக மறுத்தால் அவர் ஈகோ தாக்கப்பட்டு அவளுக்கும் இதனால் பிரச்சனை என்றே, முதல் முறை சும்மா பேச்சிற்கு சொல்லும்போதே கடுப்பான கதிர் பதில் சொல்லாமல் பேச்சை தவிர்த்துவிட்டு சென்றுவிட்டான். பின் வெளியூர் பயணம்.

இப்போது வந்த உடனே ஆரம்பிக்கவும் கோபத்தில் நேரடியாக வேண்டாம் என்றுவிட்டான்.

ஒரு புறம் சரிதான் என் பேச்சு என்று நினைத்தாலும், மறுபுறம் இதனால் அவர்கள் வேறு பிரச்சனையை இழுப்பார்களே என பிற்பாடு தோன்றியது.

தாய்மாமன் எண்ணங்களை கதிர் சரியாகவே கணித்திருந்தான்.

கூடிய விரைவில் இதற்கு ஒரு தீர்வைக் காணவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டார்.

ஆனால் ‘எல்லா முறையும் காற்று ஒரே பக்கம் வீசாதே.’

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வத்திற்கு என்ன வேலை?

தன்னால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு உறவை தன் மகளே, மனதில் அளவில்லா காதலுடன் கைப்பிடிக்க நினைக்கிறாள் என்று அறியாமல் போனார்.

அறிந்தால் என்ன செய்வாரோ?

—–

இன்று புவனா மனம் ஒரு நிலையில் இல்லை.

என்னதான் வெளியே சிரித்துக் கொண்டு வாயடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாலும்…

சோகங்கள் எனக்கும்

நெஞ்சோடு இருக்கு

சிரிக்காத நாளில்லையே

என்ற நிலைதான் அவளுக்கு உள்ளுக்குள்.

அவள் உள்மனம் நிச்சயம் அவன் தன்னை சுற்றி உள்ளானென ஏன் நேற்றிரவு இங்கு வரும்போது நினைத்தது என்று இன்னமும் அவளுக்குப் புரியவில்லை.

அவனைக் காண பலமுறை ஏங்கியிருக்கிறாள். ஆனால் கோவில் சென்ற அன்றும், நேற்றும் மட்டும் இது போல ஒரு உணர்வு தோன்றியது.

மேலும் பல நினைவுகள் வர, ‘எல்லாம் தன்னால்தான்.’ என அவளையே எப்போதும் போலத் திட்டிக்கொண்டாள்.

“புவனா.” என்ற அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவள்,

“சொல்லுடி.” என,

“டூருக்கு கூட்டிட்டு போனாங்கல, ஒரு நாள் லீவு விட்டாதான் என்னவாம் இவங்களுக்கு?” என சலிப்பாக வினவியவளைக் கண்டு சோகம் மறந்து கொஞ்சம் சிரித்தவள்,

“டூர் போனதே ஒரு என்ஜாய்மென்ட்க்கு… அங்க போய் நல்லா சுத்திட்டு இப்போ லீவு வேற கேக்குற?”

“அதுலாம் எனக்குத் தெரியாது. வெளிய போய்ட்டு வந்து ஏன் ரெண்டு நாள் லீவ் கொடுக்கல?”

“லூசு… இன்னைக்கு வேணும்னா லீவ் போட்டு ரெஸ்ட் எடுங்கனு சொன்னாங்களே என்ன?”

“நாமளே லீவு போடறதுல என்ன கிக்கு இருக்கு? அவங்களே விட்டாதான நல்லாருக்கும்.” என்றவளை நன்றாக முறைத்தவள்,

“இப்படி கிறுக்குத்தனமா பேசிட்டு வந்தீனா நான்தான் ஓங்கி ஒன்னு உட போறேன்.” என பல்லைக் கடிக்க, இதற்கு மேல் பேசினால் அடிதான் என புரிந்து ஈ என இளித்து சமாளித்தாள்.

இரண்டு நாள் டூர் முடிந்து இன்று எப்போதும் போல கல்லூரி செல்கின்றனர்.

அவர்கள் ஊரில் உள்ள பஸ் ஸ்டாப்பிற்க்கு நடை போட்டவாறே இந்த உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அப்போது புவனா கையிலிருந்த கர்சீஃப் நழுவி கீழே விழ, வேகமாக வீசிய காற்றில் நடுரோட்டிற்கே போய்விட்டது.

ஏதோ ஒரு நினைப்பில் டக்கென சாலையை கவனிக்காது நடந்து சென்று அதை கையில் எடுத்தாள்.

அப்போது அவளை நெருங்கி வந்த பைக்… ஹாரன் அடித்தவாரு, சர்ரென சடன் பிரேக்கால் ஒலி எழுப்பி, கிட்டதட்ட அவளருகே உரசிக்கொண்டு நின்றது.

ஹாரன் சத்தத்திலும், பைக் கிறீச்சிட்ட சத்தத்திலும் சுற்றம் உணர்ந்தவள், ‘போச்சு.’ என பயந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

சில நொடிகள் கழித்து, ‘என்ன படத்துல வர மாதிரி பறக்காம ஸ்டெடியா நிக்கறோம். ஒருவேள நம்மள இடிச்சு பைக் பறந்துடுச்சா? அப்படியும் இருக்குமோ?’

என்று அறிவாளித்தனமாக யோசித்து கண்களைத் திறக்க, எதிரே பைக்கில் அமர்ந்திருந்த கதிர் இவளைத் தீயாக முறைத்துப் பார்த்தான்.

அவனைக் கண்டு முதலில் வியப்பால் விழி விரிய… பின் என்ன என விவரிக்க முடியாதது போன்ற ஒரு பார்வையை செலுத்தினாள்.

அந்த பார்வையின் அர்த்தம் என்ன?

இத்தனை நாட்கள் கழித்து தன்னவனைக் கண்ட மகிழ்ச்சியா?

இப்போதாவது வந்தானே என்ற ஆசுவாசமா?

என்னை மன்னித்துவிடேன் என்ற கெஞ்சலா?

அவள் அறியாள். ஆனால் அவனைக் கண்டது மனதுக்கு அத்தனை இதமாக இருந்தது.

இருப்பினும் தன்னை இத்தனை நாட்கள் விட்டு சென்றுவிட்டானே என்றதில் அவனை கொஞ்சம் முறைத்தும் வைத்தாள்.

அவனுமே என்ன என விவரிக்க முடியாத நிலையில்தான் இருந்தான்.

பல மாதங்கள் கழித்து இத்தனை நெருக்கத்தில் அவன் தேவதையின் தரிசனம்.

மனதில் பல கோபங்களும், வருத்தங்களும் இருந்த போதும், காதல் அதை விட அதிகமாக இருக்கிறதே!

அவள் பார்வையை முழுதாக புரிந்து கொள்ள முடியவிட்டாலும், தன்னைக் கண்டதும் அவள் கண்களில் வெட்டிய மின்னலைக் கண்டு கொண்டான்.

‘முட்டக்கண்ணி… எப்படி பாக்குறா பாரு…’ என உள்ளே குத்தாட்டம் போட்டாலும்,

‘கவனமில்லாம இப்படி நடுரோட்டுல வந்து நிற்கிறாளே.’ என்ற சினமும், அவள் மேல் ஏற்கனவே உள்ள கோபமும் நினைவு வர, அவளை நன்றாக முறைத்து வைத்தான்.

“ரோட்ல நடக்கும்போது கவனம் இங்கு இருக்கனும்‌. தேவையில்லாததலாம் யோசிச்சிட்டிருக்கக் கூடாது.” என்ற குரலில் அவன் மீதான பார்வையை விலக்கியவள்,

உள்ளுக்குள், ‘அதுலாம் தேவையானததான் யோசிக்குறேன்.’ என கூறிக்கொண்டாள்.

“ஹலோ… காது கேக்கலையா?”

“…”

“ஏய்… பதில் பேசு.” என எகிற,

“நல்லா கேக்குது.” என அழுத்தி சொல்லவும்,

“நல்லா கேக்குதுல… அப்பறோம்… ஹாரன் சத்தம் கேக்கலையோ?”

“…”

“கேட்டுச்சா? இல்லையா?”

விடாக்கண்டன் என பெருமூச்சு விட்டவள், “கேட்டுச்சு.” என்றாள்.

“அப்புறம் எதுக்கு நடுரோட்டுக்கு வந்த?”

“… “

“கேள்வி கேட்டா பதில் வரணும்.” அழுத்தமாக கூறினான்.

அதில் கொஞ்சம் காண்டானவள், “ம்ம்… ரொம்ப நாள் வேண்டுதல் அதான் வந்தேன்.” என,

‘திமிரு புடிச்சவ. எப்படி பேசறா பாரு.’ என முனகியவன்,

“ம்ஹூம்.” என்றான் பதிலுக்கு நக்கலாக.

எப்போதும் போல அந்த ‘ம்ஹூம்’ ஐ ரசித்தாள்.

அதற்கு மேல் கல்லூரிக்கு சென்று கொண்டிருப்பவளைத் தொல்லை செய்ய வேண்டாமென, பைக்கை ஸ்டார்ட் செய்து நகர சொல்லி சைகை செய்தான்.

‘அதுக்குள்ள கிளம்புறாங்களே.’ சுணங்கியவள் நகர்ந்து நிற்க, ஐந்தாறு அடிகள் பைக்கை மெதுவாக ஓட்டியவன் பைக்கை நிறுத்தி விட்டு அவளை சுடக்கிட்டு அழைத்தான்.

திரும்பி அவனை பார்த்ததும், “ரோட்ட பாத்து போ.”, என கூறிவிட்டு வேகமெடுத்து சென்றுவிட்டான்.

இத்தனை நேரம் இருந்த இதம் மறைந்து மீண்டும் ஒரு வெறுமை.

அவன் சென்ற திசையை பார்த்திருந்தவளின் கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர் வர, சட்டென அதை துடைத்து தன்னை மீட்டு கொண்டவள் திரும்ப, தன்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்கும் பவியை இழுத்துக் கொண்டு நடந்தாள்.

தொடரும்….