மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 23 – Final

அத்தியாயம் – 23

சொந்த பந்தங்கள் சூழ்ந்திருக்க, மத்தளங்கள் கொட்ட, மந்திரங்கள் ஓத, அக்னியின் சாட்சியாக, மாங்கல்யத்தை அணிவித்து, வெற்றி… தேனையும், கதிர்… புவனாவையும் தன் சரிபாதியாக்கிக் கொண்டனர்.

இரு ஜோடிகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, ஆடவர்களின் கண்களில் உள்ள காதலில், பெண்களின் கன்னங்கள் சிகப்பு ரோஜாவாக சிவந்து போனது.

அழகான தருணங்கள் படமாக்கபட்டுக் கொண்டிருந்தது.

திருமணத்தை மகிழ்வோடு பார்த்துக்கொண்டிருந்த, பாட்டி, மீனாட்சி கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

கனகம், தர்மா, மல்லி, பிரபா, காவ்யா, பவி, கண்ணன் என அனைவரும் புன்னகையோடு இருந்தனர்.

சுந்தரம், மாணிக்கம் இருவருமே வரவில்லை.

ஆனால் அதை யாரும் பொருட்படுத்தவில்லையெனும் போது அவர்கள் என்ன செய்ய இயலும்?

தங்களை அனைவரும் தள்ளி வைத்தது போல நினைத்தனர். உண்மையும் அதுவே!

ஆனால் அது அவர்களாக தேடிக்கொண்டது. செய்த செயல்களுக்கு காலம் கொடுத்த பரிசு.

திருமணம் முடிந்தபின், பாட்டியிடம் ஆசி வாங்கியவர்கள், அங்கு வைத்திருந்த ராஜரத்தினம், தாமரை, தங்கவேலு, மணிமேகலை புகைப்படத்தை வணங்கினர்.

வெற்றியின் கண்கள் அன்னை படத்தை பார்த்து லேசாக கலங்கியது. கணவன் கரங்களை ஆதரவாக பெண்ணவள் பிடித்துக் கொள்ள, அவனும் புன்னகைத்தவாறு இறுக பற்றிக் கொண்டான்.

புவனாவுமே அழுதாள். கதிர் அவளைத் தோளோடு அணைக்கவும், சாய்ந்து கொண்டாள்.

பிறகு மீனாட்சி, கனகத்திடம் ஆசி வாங்கியவர்கள், அலமேலு பாட்டியிடமும் ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

அதன்பின் செயல்கள் விரைவாக நடக்க, அவரவர்களின் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் நேரமும் வந்தது.

வெற்றியையும், பாட்டியையும் கண்டு புவனா மீண்டும் அழத் தயாராக, அவன் கையில் வாங்கிய குட்டி தேவதைக்கு கல்யாணமாகி புகுந்த வீடு செல்கிறாளென்றே வெற்றியால் நம்ப முடியவில்லை.

இன்றும் அவள் அவனுக்கு சிறுபெண்தான். என்றுமே!

ஆனாலும் எப்போதும் போல அவளை சமாதானம் செய்தவன், கதிரையும் அணைத்துக் கொள்ள, அவனும் பதிலுக்கு அணைத்துக் கொண்டான்.

பாட்டிக்குமே வருத்தம்தானே. ஆனாலும் நிலைமையை சீராக்க கதிருடன் வம்பு பேச, அவனும் சேர்ந்து கொண்டான்.

அதில் புவனா அழுகையை விடுத்து சிரித்துவிட்டாள்.

‘தம்பி பார்த்துக் கொள்வான்.’ உள்ளே சொல்லிக் கொண்டவன், மகிழ்ச்சியாக அவர்களை அனுப்பி வைத்தான்.

‘தேன்மொழியை வழியனுப்பும் போது, அவனிடம் பேச தயங்கிய தர்மாவிடம் தோள்களை தட்டியும், மாமியாரிடம் கவலை வேண்டாம் நான் பார்த்துக் கொள்வேன் என சொன்னதும் நல்லதாய் போயிற்று.’

‘பெண் பிள்ளைகளை வேறு வீட்டிற்கு அனுப்ப எத்தனை கஷ்டமாக உள்ளது.’ என நினைத்தவாறு நகர்ந்தான்.

திருமண விருந்து சாப்பாடு அமர்க்களப்பட்டது. வந்தவர்கள் அனைவரையும் நன்றாக கவனித்தார்கள்.

அதன்பின் நேரம் என்னவோ சம்பிரதாயங்கள் அது இதுவென விரைவாகதான் சென்றது.

ஆடவர்களிருவரும்தான் ஆமைவேகமென சலித்துக் கொண்டனர்.

பொழுது போய், இரவும் வந்து ஏற்பாடுகள் எல்லாம் முறைப்படி செய்யப்பட்டது.

====

பாட்டி மற்றும் சிலர் அறிவுரைகள் சொல்லியபடி வெற்றி அறைக்கு முன் தேன்மொழி தனித்து விடப்பட, பயம், பதட்டம், வெட்கம் என எல்லா உணர்வும் கொண்டு கதவைத் திறந்தவள், அடி மேல் அடி வைத்து உள்ளே நுழைந்தாள்.

அவளுக்காகவே காத்திருந்த வெற்றி, ஜம்மென கட்டிலில் அமர்ந்தவாறே, கண்களால் அவளை களவாட பார்த்தான்.

இதற்குமுன் போன்ற கண்ணியமான காதலன் பார்வையாக இல்லாமல், உரிமையான கணவன் பார்வையாக இருந்தது.

அதில் அவளுக்கு இன்னும் பயம் அதிகரிக்க, “இங்க வா மொழி. வந்து உட்காரு.”  இயல்பான குரலில் அவனருகே சுட்டி அழைத்தான்.

அவளவனின் அழைப்பு அவளுக்கு நிரம்பவே பிடிக்கும். இதுபோல யாரும் அவளை கூப்பிட்டதில்லை.

மெதுவாக வந்தவள், அவனைவிட்டு எந்தளவு முடியுமோ அந்தளவு தூரமாக தள்ளி அமர்ந்தாள்.

கடுப்பானவன், ‘இது வேலைக்கு ஆகாது.’ என அவள் கையிலிருந்ததை வாங்கி மேசையில் வைத்துவிட்டு, அவளை நெருங்கி அமர்ந்து கொண்டான்.

அதிர்ந்து விழித்தவள், நகரப் பார்க்க கரங்களை பற்றிக் கொண்டான்.

அவளுக்கு என்ன எதிர்வினையாற்ற என்றே தெரியவில்லை.

கண்கள் மட்டுமே பேசி, புன்னகை அவ்வப்போது இடம் பேரும் அவர்கள் காதலில், கொஞ்ச நாட்களுக்கு முன்தான் பேசவே ஆரம்பித்தனர். எனவே இதெல்லாம் அவளுக்கு புதிதாக இருந்தது.

பிடித்தாலும்… பெண்ணுக்கே உரிய நாணம் அவளை பதற்றம் கொள்ள செய்தது.

அவனின் அன்றைய ஸ்பரிசம்… பற்றி யோசிக்கும் போதே அவளுக்கு என்னவோ போலாகும்.

அப்படியிருக்க இப்போதைய கணவன் செயல்களில் திண்டாடிப் போனாள்.

‘எனக்கு மட்டும்தான் இப்படி போல, அவர் சாதாரணமா இருக்காரு.’ நினைத்துக் கொண்டாள்.

அவள் முகபாவனையை கவனித்தவன், “என்னாச்சு? எதுக்கு இவ்ளோ பதட்டம்? நார்மல்லா இரு.” சொன்னவன், போன் அடிக்க,

தேன் தேன் தேன்

உன்னைத் தேடி அலைந்தேன்

உயிர் தீயாய் அலைந்தேன்

சிவந்தேன்

தேன் தேன் தேன்

என்னை நானும் மறந்தேன்

உன்னைக் காண பயந்தேன்

கரைந்தேன்

என கேட்ட ரிங் டோனில் அவளுக்கு வெட்கமும் சிரிப்பும் ஒருங்கே வந்தது.

“விளம்பரம். நேரங்காலம் புரியாம இவனுங்க வேற…” என திட்டி, இனி தொல்லை வேண்டாமென போனை சுவிட்ச் ஆப் செய்துவிட, அவன் செய்கையில் இன்னும் கொஞ்சமே சிரிப்பு வந்து சூழ்நிலை இதமானது.

“எப்போலருந்து இதை… இந்த பாட்ட ரிங் டோன்னா வச்சிருக்கீங்க அத்தான்?” கண்களில் ஆச்சர்யம் கொண்டு கேட்ட மனைவியை பார்த்து புன்னகைத்தவன்,

“அப்பாடா பேசிட்டியா? நான் கூட இன்னைக்கு மௌனவிரதம்னு பயந்துட்டேன்.” அவன் கேலியில் அசடு வழிந்தாள்.

இப்போதெல்லாம் அவன் நிறையவே பேசுகிறான். அவளுக்குதான் அதைக் கேட்கவே நேரம் போதவில்லை.

“நமக்கு கல்யாணமானதும் வைக்கணும்னு எப்பவோ நெனச்சது மொழிமா. இன்னைக்குதான் வச்சேன். எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு.

புடிக்காம இருக்குமா என்ன?

அதுக்கு முன்னாடி டிவில இந்த பாட்ட கேட்டாக் கூட வேற எதுமே ஏறாது.” அவன் சொல்ல சொல்ல, வெட்கம் கூடியது அவளிடத்தில்.

சில நொடிகளுக்குப் பின், “நான் ஒன்னு சொல்லவா அத்தான்…” என,

“தாராளமா… சொல்லு. எதும் பேசவேனுதான நானும் பாத்துட்டு இருக்கேன்.” புன்னகையாக சொன்னான்.

தயங்கியவாறே, “நீங்க அன்னைக்கு போல என்ன பாக்காதீங்க…” என,

தலையும் புரியவில்லை… வாலும் புரியவில்லை வெற்றிக்கு.

“என்னைக்கு போல மா?” அவன் யோசித்துக் கொண்டே கேட்டான். 

“அது… என இழுத்தவள்… முதல் டைம் என்ன கோவில்ல வச்சு மொறச்சி பாத்தீங்களே… அதுமாறி… அன்னைக்கு வீட்டுக்கு வரும்போது கூட அதே மாறிதான் பாத்தீங்க. எனக்கு நீங்க அப்படி பாத்தா பயமா இருக்கு. அதனால முறைச்சாலும் வேற மாறி முறைங்க.” என முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு சொல்பவளைக் கண்டு, அவனுக்கு அப்டியே அள்ளிக் கொள்ள தோன்றியது.

வீட்டில் பேசவேண்டுமென முதலில் டென்ஷனில் இருந்தவன், பாட்டியிடம் கூறி அவர் மறுக்க, அதற்கு சண்டையிட்டு என அவன் மனநிலை நன்றாகவே இல்லை.

பெண் கேட்டு வரும்போது அவள் அமைதியாக இருக்கவும், அந்த பார்வை வந்துவிட்டது.

எல்லாம் அத்தனை வருட காதல் கொண்டவளை கைப்பிடிக்க வேண்டி ஏற்பட்டது… அவன் இயல்பையே மாற்றியிருந்தது.

“சரி சரி இனிமே அப்படி முறைச்சு பாக்கவே மாட்டேன். பொண்டாட்டி சொன்ன அப்பறோம் கேக்காம இருக்க முடியுமா?” அவன் பவ்வியமாக சொல்லிட, பால் பற்கள் தெரிய புன்னகைத்தாள்.

எளிய அலங்காரத்திலும் தேவதையாக தெரியும் தன்னவளைக் கண்டு அவன் கண்களில் ரசனை கூடியது.

வருடங்களாக எட்ட நின்று ரசித்தவள்… கண்கள் மட்டுமே கொண்டு காதல் செய்யப்பட்டவள்… இன்று அவனருகே மனைவியாக இருக்கிறாள்… நினைக்கவே அத்தனை இனிமையாக இருந்தது.

அவளுக்குமே அப்படிதான்… கம்பீரமும், மென்மையும் கொண்ட கணவனை அமைதியாக ரசித்திருந்தாள்.

அந்த மௌனங்கள்… அவள் அருகாமை, வாசம், கையின் ஸ்பரிசம் எல்லாம் உணர்வுகளைத் தூண்ட, அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல் மெதுவாக அவள் கன்னம் பற்றி முகத்தை திருப்பியவன், நெற்றியில் முதல் அச்சாரத்தை ஆத்மார்த்தமாக பதித்தான்.

அதில் அவள் கன்னங்கள் இரண்டும் சூடாகிப்போக, நாணத்தில் உடனே தலை குனிந்து கொள்ளவும், தாடை பற்றி நிமிர்த்தியவன், கண்களாலே சம்மதம் கேட்டான்.

அவன் கண்களிலுள்ள ஆசையைக் கண்டவளுக்கு மறுக்கத் தோன்றுமா என்ன?

தயக்கத்தை விடுத்து அவன் நெஞ்சத்தில் உரிமையாக சாய்ந்து கொண்டாள்.

அதில் மகிழ்ந்தவன், அவளை கைகளில் ஏந்திக்கொண்டு கொண்டு மஞ்சத்தில் கிடத்தினான்.

அங்கு அழகிய இல்லறம் ஒன்று ஆரம்பமானது.

====

மீனாட்சி மற்றும் சில உறவு பெண்கள் துணையோடு வந்த புவனாவை கதிர் அறைக்கு முன்னே விட்டு, அறிவுரை கிண்டலென ஆளுக்கு தக்கா போல கூறிவிட்டு செல்ல, பால் சொம்பை கைகளில் ஏந்தியவாரு வெட்கத்தோடும் தயக்கத்தோடும் அறைக்குள் வந்தவள் அவனைத் தேட சிக்கவில்லை.

உள்ளே தேடியவாறே கதைவை அடைத்தவள் இரண்டடி எடுத்து வைக்க,

“பே…” என கதவின் பின் ஒளிந்து கொண்டிருந்தவன் அவள் காதில் கத்த, திட்டுகிட்டவள்… கையிலிருந்ததை நழுவ விட பார்த்தாள்.

நொடியில் தன்னை சமன் படுத்திக் கொண்டு, அதை ஓரிடத்தில் வைத்துவிட்டு, அவனை தீயாக முறைத்தவள்,

“திருந்தவே மாட்டிங்களா?” என,

“ம்ஹூம்…” என்றான் சிரிப்போடு.

ஊருக்குள் கோபக்காரனாக இருப்பவன், அவளிடம் குறும்புக்கரானாகி விடுகிறானே!

தலையை சிலுப்பியவள் கோபமாக திரும்பி கைகளைக் கட்டிகொள்ள, அந்த செய்கை அவனை ரொம்ப கவர்ந்தது.

‘கியூட்’ உள்ளே சொல்லிக்கொண்டவன், மெதுவாக அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.

கணவன் செயலில் திகைத்தாலும், அவள் காதோரம் உரசிய அவன் தாடி மீசை அவளுக்கு கூச்சத்தை உண்டாக்கியது.

அதை உணர்ந்து சிரித்தவன், “புவி…” ரகசிய குரலில் அழைத்தான்.

“ம்ம்…” என்றாள் காற்றாகிப் போன குரலில்…

“புவிகுட்டி” மீண்டும் அதே போல கூப்பிட்டான்.

“சொல்லுங்க அத்தான்…” அவன் எதிர்பார்த்த அழைப்பு… ஒவ்வொரு முறை சொல்லும்போதும் முழுமையாக ரசித்தான்.

சட்டென அவன் குறும்பு தலைதூக்க, “இப்போவாச்சும் சொல்லேன்… உனக்கு அத்தான் முக்கியமா? பொங்கல் முக்கியமா?” என கேட்கவும், மோன உணர்வுகள் அறுபட, அணைப்பிலிருந்து விலகத் திமிறினாள்.

“இப்டியே சொல்லு.”

“மாட்டேன் விடுங்க அப்போதான் சொல்லுவேன்.” என, மனசே இல்லாமல் விட்டான்.

அவனை மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க முறைத்தவள், “என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல?” என,

“உன்ன மட்டும்தான் செல்லம்…” சொன்னவன் கண்ணை சிமிட்டி வசீகரமாக சிரித்தான்.

அதில் மனம் மயங்கினாலும், “ம்ம்க்கு.” என்றவள்,

“என்ன பாத்தா எப்படி தெரிது உங்களுக்கு? எப்போ பாரு இதே கேள்வி கேக்கறீங்க? என்கிட்ட கேட்க சொல்ல வேற எதுமே இல்லையா உங்களுக்கு?” சலிப்பான குரலில் கேட்டாள்.

“ஏன் இல்ல… கேட்க, பேச, செய்யனு ஆயிரம் இருக்கு…” அவன் குரல் ஒரு மார்க்கமாக வந்தது.

அதை கவனிக்காதவள், “அப்பறோம் ஏன் இதே கேள்வி?” என,

“போனா போகுதுனு நீ அன்னைக்கு மன்னிப்பு கேட்டேனு மன்னிச்சிட்டு, உன்கிட்ட சாதாரணமா பேசினேன். ஆனா நீ இன்னும் இதுக்கு பதில் சொல்லவே இல்ல. அதான் கேட்டேன்.” அவன் கூறினான்.

“உங்களுக்கு பதில் தெரியாதா?” என்ற கேள்விக்கு,

“ம்ஹூம்…” அவன் அப்பாவியாக உதட்டை பிதுக்கினான்.

ஒருமுடிவாக, “எனக்கு… இந்த உலகத்துலையே நீங்கதான் ரொம்ப முக்கியம். பொங்கல்லவிட… போதுமா?” கடுப்பாக சொன்னாள்.

சொல்லாமல் அந்த விடாக்கண்டன் விடப் போவதில்லையே!

“நிஜமாலுமா?” என எகிறி குதித்தவன், அவள் பதிலைக் கொண்டாடினான்.

கேலி செய்யதான் இதுபோல செய்கிறானென நன்கு புரிந்தது.

“உங்கள…” பல்லைக் கடித்தவள்,

“எனக்கு தூக்கம் வருது.” என கொட்டாவி விட்டவாரு படுக்க செல்ல,

“என்னது?” இப்போது அதிர்ச்சியானவன், அவள் முன் ஓடிச்சென்று வழிமறித்தான்.

முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவளைப் பார்க்க, விஷயம் புரிந்தது. வேண்டுமென்றேதான் சொன்னாள்.

ஆனாலும், “என்ன அத்தான்?” ஒன்றும் அறியாதவள் போல கேட்டாள்.

“இன்னைக்குதான் நமக்கு கல்யாணம் ஆச்சு புவி.”

“ம்ம் தெரியுமே.”

“இப்போ…” மேலே சொல்ல முடியாமல் முழிக்க, அதற்குமேல் முடியாமல் பக்கென சிரித்துவிட்டாள்.

வேண்டுமென பண்ணியிருக்கிறாளென புரிந்தவனுக்கு, கொஞ்சம் வெட்கமாகிப் போனது.

சில நொடிகள் விட்டவன், “போதும் போதும் சிரிப்பை நிறுத்து.” என, அவள் எங்கு நிறுத்தினாள்.

வகிட்டில் திலகம், கழுத்தில் அவன் அணிவித்த தாலி, அவன் மனைவி என்பதைக் கூறியது.

பாந்தமான புடவையில் விரித்து விடப்பட்ட கூந்தல் என அவளை ரசித்த கண்கள், அவளின் கொழுகொழு கன்னங்களில் வந்து நிற்க, தாமதிக்காமல் அதில் அழுத்தமாக முத்தமிட்டான்.

அச்செயலில் வாயாடி புவி காணமல் போனாள். அவள் ஷாக்கான பாவனையைக் கண்டு இதழ் பிரித்து புன்னகைத்தான்.

அதன்பின் அங்கு பேச்சிற்கும் கிண்டலுக்கும் நேரமிருக்காமல் போக, அவர்கள் வாழ்க்கைப் பயணம் அழகாகத் துவங்கியது.

இரு ஜோடியும் என்றும் குறையாத காதலுடன், நிறைவான மகிழ்ச்சியான வாழ்வு வாழவேண்டுமென வாழ்த்தி விடை பெறுவோம்.

சுபம்