மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 22 – Prefinal

அத்தியாயம் – 22

தேன்மொழியை அன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள்.

பையன் வீடு தூரத்து சொந்தம்தான். செல்வாக்கான குடும்பம். சுந்தரம் அவர்களை விழுந்து விழுந்து கவனிக்க, கனகத்திற்கு இவ்விடம் அத்தனை பிடிக்கவில்லை.

அவர்கள் கொஞ்சம் அலட்டல் பேர்வழி. ‘வேறு யாரும் கிடைக்கலையா இவருக்கு?’ உள்ளே பொருமியபடி வேலை செய்து கொண்டிருந்தார்.

தர்மாவோ தீவிர யோசனையில் இருந்தான்.

நேற்றுதான் கணவன் ஏற்பாடறிந்து அவனிடம், மகள் மனது பற்றி கூறினார்.

தங்கை காதல் கொண்டுள்ளாள் என்றே அவனால் நம்ப முடியவில்லை.

அப்படியிருக்க, ‘வெற்றியை விரும்புகிறாளா?’ அதிர்ந்தாலும், அவன் நல்லவன் என்பதையும் மனம் சொன்னது.

பல விஷயங்களை சிந்தித்தவன், இன்று என்ன நடக்கிறதென பார்ப்போம். பின் அதன்படி செய்வோமென்று நினைத்தான்.

அப்போதுதான் அவர்கள் வீட்டின் முன் கார்கள் வந்து நின்றது.

பாட்டியும், வெற்றியும் வந்து வாசலில் நிற்க, புவனா, கதிர், மீனாட்சி, பிரபா, மல்லி மற்றும் ஊரிலுள்ள சில முக்கியமானவர்களும் உடனிருந்தனர்.

சுந்தரம் யோசனையாக அனைவரையும் பார்த்தார்.

வாசலில் நின்றவரை பார்த்த வள்ளியம்மையோ, “என்னப்பா சுந்தரம் சௌக்கியமா?” கேட்டபடி அவர் பாட்டுக்கு உள்ளே சென்றுவிட, மற்றவர்களும் தொடர்ந்தனர். கதிர் பாட்டியின் செயலில் சிரிப்பை அடக்கிக்கொண்டு நடந்தான்.

வெற்றியிடம் பாட்டிதான் பேசி இப்படி எல்லாரையும் கூட்டி செல்வோம் என்றார். ஏற்கனவே தனியாக பெண் கேட்டு சென்ற அனுபவம் அத்தனை நல்லதாக இல்லையே!

வெற்றியோ என்ன இருந்தாலும் பாட்டியிடம் சத்தம் போட்டோமென வருத்தத்தில் இருந்தவன், தனக்காக மனம்மாறி இதையெல்லாம் யோசிக்கிறாரே என்று வருந்தி மன்னிப்பாகா கேட்க, கடைசியில் அவர்தான் அவனை சமாதானம் செய்ய வேண்டியதாகிப் போனது.

பாட்டி நேரடியாக விஷயத்தை கூறிவிட, முதலில் வந்த பையன் வீட்டாரோ, ‘என்ன இது?’ என கோபமாக சுந்தரத்திடம் சத்தம் போட்டனர்.

அவர்களை சமாதானம் செய்தவர், ‘வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள்.’ என்று நினைத்து அவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

வெற்றி வரவை அன்றிலிருந்து… எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கோ, அவளவனைக் கண்டதும் நிம்மதி. நடப்பதை அறை வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

உடன் வந்தவர்கள் பொறுமையாக சொன்னதை கண்டுக்காத சுந்தரம்,

“என் பொண்ணு அப்படிலாம் எதும் பண்ணிருக்க மாட்டா.” என, மகளாக அதைக் கேட்டு தேனிற்கு கொஞ்சம் வருத்தமாகிப் போனது.

அங்கு வந்திருந்த பெரியவர் ஒருவர், “நீயே சொன்னா எப்படி ப்பா. அந்த பொண்ணு சொல்லணும்ல. ஒரு வார்த்தை கேட்போம்.” என, எல்லார் பார்வையும் தேன்மொழி பக்கம் திரும்பியது.

அதில் திகைத்தவளுக்கு சட்டென பேச்சே வரவில்லை.

அவள் அமைதியை தவறாக புரிந்து கொண்ட மாணிக்கம் இறுமாப்பாக சிரித்து, “அப்பறோம் என்ன கிளம்புங்க வழிய பாத்து. வேற வேலைவெட்டியில்ல உங்களுக்கு? அவங்க கூட வந்து அசிங்கப்பட்டு போறீங்க.” நக்கலாக பேசினார்.

வெற்றியோ அவளை அன்று பார்த்தது போல கூர்மையாக ஒரு பார்வை பார்த்து, “மொழி.” என அழுத்தமான குரலில் அழைத்தான்.

அவ்வளவுதான்… அதில் இதற்குமேல் அமைதி சரியில்லையென புரிந்து கொண்டவள், தயக்கத்தை தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு, மெதுவாக அவனருகே வந்து நின்றுகொள்ள, அவன் இதழ்கள் இப்போது கர்வமாக… காதலாக புன்னகைத்துக் கொண்டது.

அனைவருமே ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாய் பார்த்தனர்.

“உன்ன வெற்றிக்கு பொண்ணு கேட்டுதான் இத்தனை பேர் வந்துருக்கோம் மா. தம்பிய கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?” எனக் கேட்க,

“ம்ம்… அத்தானை கட்டிக்க சம்மதம் ஐயா.” மெல்லிய குரலிலும் உறுதியாக சொல்லிவிட்டாள்.

அந்தநொடி தேன்மொழியை பாட்டிக்கும், புவனாவிற்க்கும் பிடித்துப்போனது.

அதற்குமேல் அங்கிருக்க பிடிக்காமல் முதலில் வந்தவர்கள் திட்டியபடி சென்றுவிட்டனர்.

தேன்மொழியை கோபமாக பார்த்த சுந்தரம், அடிக்கப் போக, பாதுகாப்பாக அவளை தன் பக்கம் இழுத்துக் கொண்ட வெற்றி அவரைக் கண்டு கண்களை சுருக்கினான்.

அந்த கண்களில் தெரிந்த ஆக்ரோஷத்தில் அவருக்கு கொஞ்சம் பயம் வந்ததென்றால் அது மிகையில்லை.

ஆனாலும் நடப்பதை ஏற்க இயலாமல், “இந்த வீட்ல பொம்பள பிள்ளை ஒண்ணுக்கும், பெரியவங்க பாத்து சொல்றவங்களுக்கு கழுத்த நீட்ட நெனப்பு இல்ல. அவங்களா தேடிக்குறாங்க.” குற்றம் சாட்டினார்.

அதில் தேன் தலை குனிந்து கொள்ள, இத்தனை நேரம் அமைதியாக இருந்த தர்மா அவர் முன் வந்தான்.

அவரோ, “பாருடா உன் தங்கச்சி பண்ணிருக்க காரியத்தை?” என ஆரம்பித்தவர், தகப்பனாக தன் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க, அதில் நியாயமிருந்ததால் யாரும் எதுவும் சொல்லவில்லை.

“இது நடக்காது. நான் விடமாட்டேன்.” அவர் ஆத்திரமாக கடைசியில் சொன்னார்.

“அன்னைக்கு தாத்தா பண்ணதையே நீங்களும் பண்றீங்கப்பா.” என்றான் தர்மா நிதானமாக… அத்தனை நேரம் அவர் பேச்சை கேட்டிருந்தவன்.

“என்னடா சொல்ற?” என அவர் அதிர்ச்சியாக கேட்க,

“ஆமாப்பா. காரணம் வேறையா இருக்கலாம். ஆனா அன்னைக்கு இதே மாறிதான அத்தைய திட்டி அவர வேணாம்னு சொல்லி பிரச்சனை வந்துச்சு. அதே மாதிரி மறுபடியும் நடக்கணுமா?” என வினவ,

“அதுக்கு?” என்றவர் மகனை அளவிடும் பார்வை பார்த்தார்.

“நான் சின்ன பையனா இருக்குமோது அத்தை எப்போவும் அழுதுட்டே இருப்பாங்க. அப்போ ஏன்னு எனக்கும் புரில. ஆனா அப்றோமா புரிஞ்சிக்கிட்டேன்.

அதே மாறி என் தங்கச்சியும் அழ வேணாம். சந்தோசமா இருந்துட்டு போகட்டும் ப்பா. வீம்பு பண்ணாதீங்க.” என மீனாட்சியை பார்த்து சொல்ல,

அவரோ தன் வாழ்க்கையை எண்ணி விரக்தி முறுவல் வந்தாலும், மருமகன் நியாயப் பேச்சில் மகிழ்ந்து நின்றிருந்தார்.

நான்கு வருடம் அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் அவன்தானே!

எல்லாருக்குமே தர்மாவின் இந்த பரிமாணம் ஆச்சர்யத்திற்குரியதே.

மல்லி அவன் பேச ஆரம்பித்ததில் இருந்து அவனையேதான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் இப்படி பேசுபவன் அல்ல. ஆனால் இன்று பேசினான்.

அவனுக்கே உள்ளே அப்படித்தான் இருந்தது.

சிறுவயதில் அவனை வீட்டில் ஏற்றிவிட்டதில் வெற்றியிடம் பலமுறை வம்பிலுத்திருக்கிறான்.

அதிலே கதிருக்கும் அவனுக்கும் கொஞ்சம் ஆகாமல் போனது.

இப்போதும் அவனுக்கு வெற்றியை பிடிக்குமா என்றால் தெரியவில்லை.

ஆனால் இத்தனை பேர் தங்கையை பெண் கேட்டு வந்ததிலும், தந்தை தேன்மொழியை அடிக்க வரும்போது வெற்றி அவளை காத்ததிலும், அவன் கண்களில் தெரிந்த கோபத்திலும்… காதலிலும் ஒரு ஆணாக அவன் மனதில் உள்ள உண்மையை புரிந்து கொண்டான்.

அதனாலே சுய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, நியாயத்தின் பக்கம் பேசினான். பொறுப்பான அண்ணனாக தங்கைக்காக பேசினான்.

சுந்தரமோ மகன் பேசுவதற்கு என்ன பதில் சொல்லவென தெரியாமல் நின்றார்.

அவன் கூறுவது உண்மைதான். 

இதேபோலதான் அன்று மீனாட்சி நின்றாள். அவர் தந்தை மறுத்தார்.

இப்போது அவர் மறுக்கிறார்!

ஆனாலும் நடக்கும் எதையும் அவரால் ஏற்கவே இயலவில்லை.

வெற்றி பெண் கேட்டு வருவான், வீட்டில் இருக்குமிடம் தெரியாமல் வளர்ந்த மகள் இத்தனை பேர் கூடியிருக்க அவனை கல்யாணம் செய்வேனென சொல்லுவாள், தன் சொல்லுக்கு மறுபேச்சு பேசாத மகன்… எதிரே நின்று கேள்வி கேட்பான் என்று… எதையுமே அவர் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லையே!

எதையும் ஜீரணிக்கவும் முடியவில்லை.

மகன் பேச்சில் பல விஷயங்களை உணர்ந்த கனகமும் அவனுடன் சேர்ந்து கொண்டார்.

கணவன் மீது கொண்ட பயமே மகள் காதலை மறுக்க காரணம். ஆனால் இப்போது மகனே பேசவும், அவருக்கு கொஞ்சம் தைரியமாக இருந்தது. மேலும் அவருமே மீனாட்சி வாழ்வின் கஷ்டங்களை அருகிலிருந்து பார்த்திருந்தாரே!

இருவரையும் முறைத்த சுந்தரமோ, மீண்டும் மீண்டும் அதையே சொன்னவர் கடைசியில்,

“எனக்கு எதையும் புரிஞ்சிக்க வேணாம் தர்மா. நியாயப்படி இன்னேரம் அவங்ககிட்ட சண்டைக்கு போயி… என் தங்கச்சியை கட்டித் தர முடியாதுனு நீ சொல்லிருக்கணும். ஆனா அம்மாவும், பையனும் சேர்ந்துட்டு அவங்களுக்கு ஒத்து ஊதறீங்க?”

“ஒரு அப்பனா எனக்கு என் புள்ள வாழ்க்கையில முடிவு பண்ண உரிமை இல்லையா?” என,

“இருக்கு. இல்லனு சொல்லல ப்பா. ஆனா…”

“ஆனா என்னடா ஆனா… எனக்கு புடிக்கல…”

“உங்களுக்கு புடிச்சிதான் அத்தைக்கு, மாணிக்கம் மாமாவ கல்யாணம் பண்ணி வச்சீங்களா ப்பா? புடிக்காட்டாலும் பொழச்சா சரினுதான முடிவெடுத்தீங்க?” அடுத்த பாயிண்ட்டை பிடித்தான்.

அவருக்கு இதற்கும் பதில் தெரியவில்லை. காலம் அவரை பதில் சொல்ல முடியாமல் நிற்க வைக்குமென மனிதர் அறிந்திருக்கவில்லை.

ஆனாலும், “நீ என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன். ஒரு அப்பனா நான் இந்த கல்யாணத்தை முன்ன நின்னு நடத்த மாட்டேன். ஏன் கல்யாணத்துக்கே வரமாட்டேன்.” என வேறுபோல அவர்களை பயம்புறுத்த,

இத்தனை சொல்லியும் பிடிவாதம் பிடிப்பவரிடம் கோபம் வந்துவிட்டது அவனுக்கு.

“பரவாலாம் ப்பா. என் தங்கச்சிக்கு நான் முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வச்சுக்கறேன். இன்னைக்கு இல்லனாலும் ஒரு நாள் உங்களுக்கு இது சரினு புரியும்.” என்றுவிட்டான்.

என்ன சொல்லிவிட்டான்? உண்மையில் அவருக்கு வலித்தது. அதற்குமேல் அங்கு நிற்க பிடிக்காமல்…

மகளை பார்த்து, “இன்னையோட என்ன பொறுத்தவர நீ செத்துட்ட.” சொல்லிவிட்டு செல்ல, ரொம்ப அழுதாள்.

என்னதான் அதிகாரம் காட்டினாலும் அவளுக்கு பாசம் உண்டே.

ஆனால் அதற்கு அந்த மனிதன் தகுதி உடையவரா?

தன்னவன் வாழ்வில் பல விஷயங்களுக்கு ஏங்கி நின்றதற்கு அவரும் ஒரு காரணமென அறியாமல் போனாளே!

அங்கு உள்ளோர்தான் அவளை சமாதானம் செய்தனர்.

====

மில்லுக்கு சென்ற சுந்தரத்திற்கு மனம் ஆறவே இல்லை.

ஏனோ தான் அன்று செய்த சதியில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன், இன்று அவர் மகளை பறித்து, அவர் மனைவி மகனையே அவருக்கு எதிராக திருப்பிவிட்டான் போல உணர்ந்தார்.

அது உண்மைதானோ?

விஷயமென்னவென்றால் இதை எதையும் வெற்றி அறிந்து செய்யவில்லை. ஆனால் விதிப்படி சரியாக அவருக்கு பதிலடி கிடைத்துவிட்டது.

தன் வீட்டிலும் கூட யாரும் அதற்கு மறுத்து பேசாது, பரிந்து பேசியது அவருக்கு இன்னுமின்னும் கோபத்தைக் கொடுத்தது.

வெளியூருக்கு ஒரு வேலையாக சென்ற மாணிக்கம் மாலை ஊர் திரும்ப, நடந்ததை அறிந்தவருக்கும் இது பிடிக்கவில்லை.

சுந்தரமோ அவரிடம் ஒரேயடியா குதித்தார்.

“என்ன செய்வியோ எனக்கு தெரியாது. நீ போய் அவன்கிட்ட எப்படியும் பேசி கல்யாணத்தை நிறுத்து. நீ சொன்னா கேக்க வாய்ப்பு இருக்கு.” என வெற்றியின் தந்தை பாசத்தை வைத்து இம்முறை காய் நகர்த்த பார்த்தார்.

அவனிடம் சென்று பேச இப்போதும் விருப்பமே இல்லை மாணிக்கத்திற்கு.

ஆனாலும் அவன் தேனை கல்யாணம் செய்துகொண்டால், அடிக்கடி பார்க்கவேண்டி வருமோ என பல வருடங்கள் கழித்து முதல் முறையாக மகனுடன் பேச சென்றார்.

ஆனால் அப்போதும் சுயநலத்திற்காக!

அவனிடம் பேச வரவும் நின்றான்தான்.

ஆனால் அவர் சொல்ல சொல்ல, எந்த உணர்வும் முகத்தில் காட்டாமல் கேட்டவன்,

“நான் எதுக்கு நீங்க சொன்னா கேக்கணும்? இத்தனை வருஷமா நான் இருக்கறது தெரியாம எப்படி இருந்தீங்களோ… இனிமேலும் அப்டியே இருங்க. என் வாழ்க்கையில முடிவெடுக்க, என்ன பண்ணனும்னு சொல்ல உங்களுக்கு உரிமை இல்ல. அத கேக்கனும்னு எனக்கு அவசியமும் இல்ல.” அந்நியப்பார்வை பார்த்து சொல்லிவிட்டு செல்ல, அவன் அலட்சியம் மாணிக்கத்திற்கு சொல்லோன்னா உணர்வை கொடுத்தது.

சிறுவயதில் கண்களில் பாசத்திற்கு ஏங்கி நிற்கும் வெற்றி இவனில்லை என புரிந்தது.

ஆம் அவனில்லைதான். எப்போதோ அவனுக்கு உண்மையான பாசத்தை கொடுக்க பலர் உள்ளார்களென புரிந்துகொண்டிருந்தானே!

ஆனால் அவர் பேச்சில் வெற்றிக்கு உள்ளே ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச பாசமும் போய்விட்டது.

என்ன வாழ்க்கையை வாழ்ந்தார் என்று கேட்டால் அவருக்கே சொல்ல தெரியுமோ என்னவோ…

கட்டிய மனைவிக்கு நியாயம் செய்யவில்லை. பெற்ற குழந்தை பொறுப்பை விட்டுவிட்டார். குறைந்தபட்சம் காதல் மனைவியை மாற்ற அவர் மனம் புரிந்து நடந்து கொண்டிருக்கலாம். அதையும் செய்யவில்லை.

மனைவியும், மகனுமே அவரை விட்டு விலகி நிற்கின்றனர்.

இதுவெல்லாம் அவருக்கு கோபத்தை கொடுத்ததே தவிர, அதை மாற்ற தெரிந்திருக்கவில்லையே!

தவறு என புரிந்தே பல விஷயங்களை செய்தவருக்கு, அதை ஒத்துக்கொள்ளவும் தைரியம் இருக்கவில்லை. சரி செய்யவும் முயலவில்லை. இனி அதற்கு வாய்ப்பும் குறைவே.

மாணிக்கம் அப்படியே சுந்தரத்திடம் நடந்ததை சொல்ல, அவருக்குத்தான் என்ன செய்ய என்றே தெரியவில்லை.

இம்முறை அவர் கணக்குகள் எதுவும் சரிவரவில்லையே!

நடக்கும் எதையும் தடுக்கவும் முடியவில்லையே!

தன் அதிகாரத்திற்கு கீழ்தான் எல்லாமே என்ற அவரின் இறுமாப்பிற்கு மற்றொரு பெரிய அடி.

சிலர் இயல்புகளை நம்மால் மாற்ற இயலாது. வாழ்க்கையில் என்ன பட்டாலும் அவர்கள் திருந்தவும் மாட்டார்கள்.

அவர்களை ஒதுக்கிவிட்டு நாம் நம் வேலையை பார்க்க வேண்டும். அதுதான் நம்மால் செய்ய முடியும்.

அவர்களிருவர் மட்டும்தான் இப்படி இருந்தனர்.

மற்ற அனைவரும் குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தனர்.

புவனாவிற்கு ஒரு மாதத்தில் இறுதி தேர்வு முடியும் சமயமாக இருக்க, இரு பேரன்கள் கல்யாணத்தையும் ஒட்டுகாக பார்க்க வேண்டும். நிச்சயத்தை இப்போது முடித்துக் கொண்டு, அவள் பரிட்சை முடிந்த பின் வரும் முகூர்தத்ததில் இரு ஜோடிக்கும் கல்யாணம் செய்துவிடலாம் என்ற அவர் ஆசைக்கு யாரும் மறுபேச்சு பேசவில்லை.

கதிருக்குதான், ‘அடிச்சான்டா அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர்.’ என்பது போன்று ஒரே குஷி.

பாட்டியை கொஞ்சோ கொஞ்சு என்று கொஞ்சி தீர்த்துவிட்டான்.

நடந்த பல மகிழ்ச்சியான விஷயங்களில், புவனாவிடமும் இயல்பாக பேசிக்கொண்டான்.

அண்ணனிடம் பேசி அன்பு தொல்லை செய்ய, வெற்றிக்கோ எதற்கு இவனுக்கு தன் மீது இத்தனை பாசம் என்றுதான் தோன்றியது. அவனும் இயல்பாக தம்பியுடன் பேசினான்.

மீனாட்சியிடம்தான் பாட்டி, வெற்றி பேசியிருக்கவில்லை. எளிதில் அவர்களால் பேச இயலவில்லை.

கதிர் சொன்னதிலும், மேலும் வெற்றி… மாணிக்கம் பேசியதை சொன்னதிலும் மீனாட்சி எப்படி வாழ்ந்திருக்கக் கூடுமென புரிந்தது. அன்றைய மருமகளின் கண்ணீரை புரிந்து கொண்டார். 

கொஞ்ச கொஞ்சமாக பேச ஆரம்பித்தார்.

ஆனால் புவனா அத்தையிடம் ஒட்டிக்கொண்டாள்.

அவருக்குமே பலவருடங்கள் கழித்து நாட்கள் சந்தோஷமாக சென்றது.

குறித்த சுப தினத்தில் இரு ஜோடிக்கும் நிச்சயம் சிறப்பாக நடந்துவிட,

கதிர், புவனாவை ஆசீர்வாதம் செய்தவர், தயங்கியவாரு வெற்றியிடம் பேசி கண்ணீருடம் மன்னிப்பு கேட்க, என்ன தோன்றியதோ அவனுக்கு, கண்ணீரை துடைத்துவிட்டு அதற்கு அவசியமில்லை என்றவன் கொஞ்சம் இயல்பாக பேசினான். அதில் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி.

உள்ளுக்குள் மகனை வேண்டுமானால் வளர்க்காமல் போயிருக்கலாம், நிச்சயம் அவன் பிள்ளையை கொஞ்சி மகிழ்வேன் என நினைத்துக் கொண்டார்.

சுற்றி நின்றிருந்த அனைவருமே நடப்பதை மகிழ்ச்சியாக பார்த்தனர்.

வெற்றி, தேன்மொழி இருவரும் இப்போதெல்லாம் நிறைய பேசினார்கள்.

இத்தனை வருட காதலில் பேச நினைத்ததையெல்லாம்.

போனே விட்டு விடுங்களேன் என அலறும் அளவுக்கு.

கதிர், புவனா எப்போதும் போல முட்டிக்கொண்டாலும், காதலுக்கு இப்போது குறைச்சல் இருக்கவில்லை.

நாட்கள் அழகாக திருமண நாளை நோக்கி நகர்ந்தது.

வாங்கப்பா நாமளும் வெற்றி – தேன், கதிர் – புவனா கல்யாணத்துக்கு போய்ட்டு வருவோம்.

தொடரும்…