மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 17.1

அத்தியாயம் – 17

வெகுவாக தயக்கமிருந்தாலும், மகள் வாழ்க்கைக்காக மகனுடன் ரத்தினத்தின் வீட்டிற்கு புறப்பட்டார்.

அன்று நண்பன் எந்த மனநிலையில் பெண் கேட்டு வந்திருப்பானென புரிய, அவரை எவ்வாறு பேசி அனுப்பினோமென்று குற்றவுணர்வாக இருந்தது.

அங்கு எதும் சொல் வந்தாலும், முகம் முழுக்க புன்னகையோடு வழியனுப்ப நிற்கும் மகளிற்காக எதையும் தாங்கிக் கொண்டு எப்படியேனும் இந்த கல்யாணத்தை நடத்த வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டார்.

ஆனால் அதுவே மகளின் கடைசியான சந்தோஷ சிரிப்பு, இனி அவர் வாழ்வில் பல கஷ்டங்களை பார்க்க வேண்டும்மென்று அப்போது அறியவில்லை.

அவர்கள் வீட்டின் முன் கார் நிற்க, சத்தம் கேட்டு வெளியே வந்தார் ரத்தினம்.

வீடு தேடி வந்தவர்களை அவமானப்படுத்த அவர்களுக்குத் தெரியாதே. எனவே மனதில் வருத்தங்கள் இருந்தாலும் இருவரையும் இயல்பாக வரவேற்றார்.

அவர் எதற்கு வந்திருக்ககூடுமென அறிய முடிந்தாலும்… இப்போது சாத்தியப்படாதே!

மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு வீட்டில் அனைவருக்குமே வருத்தமே.

அதுவும் மாணிக்கம் மனநிலை சொல்லவே வேண்டாம். பைத்தியம் பிடிக்காதது ஒன்றுதான் குறை.

ஆனால் இது அர்த்தமற்றதோ! காலம்கடந்த துடிப்போ!

அவர் செய்ததை அவராலே ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அப்படி செய்ய வைத்த அவரின் பெற்றோர் மீது ஆத்திரமாகவும், தன் மீது கோபமாகவும் வந்தது.

இயலாமையில் வாழ்க்கையையே வெறுத்துப் போனார்.

கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவரின் அருகில் ஒரு உருவம் வந்து நிற்க, அதற்க்கு மேலும் அங்கிருக்க முடியாதென்பது போல வெளியே வந்துவிட்டார்.

வெளியே உட்கார்ந்திருந்த இருவரைக் கண்டு ஒரு பக்கம் ஆத்திரமாகவும், மறுபுறம் காலம் கடந்த ஞானோதயமென நினைத்துக் கொண்டார்.

பேச வந்தவர்களுக்கு எப்படி ஆரம்பிக்கவென தெரியாமல் தடுமாற, அதற்கு அவசியமுமில்லை அர்த்தமுமில்லை என்பதை நொடிகளில் புரிய வைத்தார் வள்ளியம்மை.

“அம்மாடி தாமர… இங்க வா.” என அழைக்க, கூடத்தில் இருப்பவர்களை கீழேயிருக்கும் தன் ரூமின் வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கத்தைத் தாண்டி வள்ளியம்மையிடம் வந்தார், காட்டன் புடவையில் கண்களுக்கு லட்சணமாக அழகிய பெண்ணொருத்தி.

நெற்றியில் குங்குமம், கழுத்தில் புதுத்தாலி, காலில் மெட்டி அணிந்திருந்தார்.

பார்க்கும்போதே தெரிந்தது என்ன நடந்திருக்குமென…

இருவரும் அத்தனை அதிர்ச்சியடைந்தனர். இதனை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

விநாயகத்தால் குற்றம் சொல்லவும் முடியவில்லை. ஆனால் சுந்தரம் மாணிக்கத்தை முறைத்துவைத்தார்.

தன் தங்கை, காதலுக்காக போராடியாது போல அவள் காதலன் போராட முனயவில்லையென்ற எண்ணமே எழுந்தது.

ஒருவார்த்தை பேசாமல் அவர்கள் சென்றுவிட, யாரும் தடுக்க முயலவில்லை.

எதை சொல்லித் தடுக்க?

பெற்றோரை குற்றம் சாட்டுவது போல பார்த்த மாணிக்கம், அவர்கள் அழைக்க அழைக்க மதிக்காமல் சென்றுவிட்டார்.

மகனிடம் இரண்டு நாட்களாக தெரிந்த மாற்றம் உள்ளுக்குள் கவலையை கொடுத்த போதும், விரைவில் மாறிவிடுவாரென நம்பியவர்கள் மருமகளைத் தேற்றினர்.

கல்யாணமான பின்னே கணவன் வாழ்வில் என்ன நடந்ததென அறிந்த தாமரை, முன்பே கூறவில்லையேயென ஆற்றமையாக உணர்ந்தாலும், தன் அன்பால் சரி செய்து கொள்ளுவோமென நம்பினார்.

ஆனால் தானே விரைவில் அவரிடமிருந்து உயிரிருக்கும் வரை ஒதுங்கி வாழ்வோமென அறிந்திருக்கவில்லை.

அறிந்திருந்தால் இந்த கல்யாணத்திற்கே ஒத்துக் கொண்டிருக்கமாட்டார்.

மாணிக்கத்தின் நேராக மது அருந்தும் இடத்திற்குதான் சென்றார்.

அத்தனை காலமாக இருந்த ஒழுக்கம் எல்லாம் மறந்தவர் அளவுக்கு மீறி குடித்தார்.

அந்த மயக்கத்தில் தன் மனதின் அத்தனை வலியையும் மறக்க வேண்டுமென்ற ஒரே எண்ணமே!

“மீனா… மீனா…” என்று பிதற்றியவர், சில நாட்கள் முன்பு நடந்ததை வேதனையாக நினைத்தார்.

குலதெய்வ கோவிலுக்கு சென்றுவருவோமென குடும்பமாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

சென்ற பின்னே அவருக்கு தெரியும், திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது 

பெற்றோரிடம் கோபமாக பேசி முடியாதென மறுத்தார்.

மீனாட்சிக்கு பெண் பார்க்கும் படலம் பற்றி அறிந்தமையால் எங்கு மகன் காதல் தோல்வியில் ஒற்றையாகவே நின்றுவிடுவானோ என ரத்தினம் முந்திக்கொண்டார்.

ரத்தினம் பேச்சை அவர் மறுக்க மறுக்க, மகன் பற்றிய கவலையில் அவருக்கு மூச்சுவிடுவது சிரமமாக போக, அவருக்கு ஏதும் ஆகிவிடுமோ என பயந்த வள்ளியம்மையோ மகனை சம்மதிக்க வைக்க, “காலில் கூட விழுறேன் ப்பா அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ.” என கும்பிட, அன்னை செயலில் அளவில்லா அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்.

“அம்மா… என் மனசு முழுக்க அவதான்மா இருக்கா… இப்டிலாம் இன்னொரு பொண்ணோட வாழ்க்கை…சரிவராது.”

“அது வாழ்க்கையும் சேர்த்து சிக்கல். கொஞ்சநாள் போகட்டும்மா என்ன பண்ணலாம்னு யோசிப்போம்.” என கெஞ்ச, அவரிடம் என்னென்னவோ பேசி வற்புறுத்தி கல்யாணத்தை பண்ணி வைத்தனர்.

அவர் சொன்ன வார்த்தை உண்மையாகும்போது?

இதையெல்லாம் எண்ணியவருக்கு தான் ஒரு கோழை, பிரச்சனையை சரி செய்ய முயலாமல் காதலை விட்டுவிட்டேன்.

அவள் போலில்லாமல் காதலை விட்டுகொடுத்துவிட்டேனென புலம்பியபடி தட்டுத்தடுமாறி வீட்டிற்கு வந்து அறைக்குள் அடைந்து கொண்டார்.

மகன் குடித்துவிட்டு வந்ததையெண்ணி தாங்கள் அவசரப்பட்டுவிட்டோமோயென காலம் கடந்து தோன்றினாலும், தங்களை நம்பி வந்த பெண் வாழ்க்கையோடு மகன் வாழ்வை சேர்த்து வைத்துவிட வேண்டும். விரைவில் எல்லாம் சரியாகி விடவேண்டுமென இறைவனை பிரார்த்தித்தனர்.

தாமரையோ… என்ன செய்யவென புரியாமல் இருந்தார்.

அவர் அன்னை மகள் பிறப்பிற்கு பின் சில மாதங்களில் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்துவிட, தந்தையோ பதின்ம வயதில் அளவுக்கதிகமான குடியின் பொருட்டு இறந்துபோனார்.

அவருக்கென இவ்வுலகிலிருப்பது அண்ணன் தங்கவேலு மட்டுமே.

தங்கையை அத்தனை அன்பாக பார்த்துக்கொள்வார்.

ஊரிலுள்ள பெரியோரின் பேச்சைக் கேட்டு மற்றும் ரத்தினம் – வள்ளியம்மையின் கனிவான முகம் கண்டு நம்பியவர், அவர்கள் ஜாதகத்திலுள்ள பிரச்சனையினால் உடனே கல்யாணம் பண்ண வேண்டுமென சொன்னதை உண்மையென்று நம்பி தங்கைக்கு திருமணம் செய்துவைத்தார்.

பார்க்கும்போதே மாணிக்கத்தின் குணம் புலப்பட நிறைவாக இருந்தது. ஆனாலும் அவரின் அதீத அமைதி உறுத்தியது.

பத்திரமாக தங்கள் வீட்டுபெண்ணை புகுந்த வீட்டில் சேர்பித்தவர், புது இடம், புது சூழல் அதுவே தாமரை முகத்தில் கலக்கத்திற்கு காரணமென நினைத்தார்.

இருந்தாலும் என்னவென கேட்க, அவர் நிம்மதியைக் கெடுக்க வேண்டாமென நினைத்தவரோ,

“உங்கள விட்டுட்டு எப்படி ண்ணே இருப்பேன்.” என உண்மையிலே அழ, தங்கை பாசம் கண்டு அவருக்குமே கண்கள் கலங்கின.

சமாதானம் செய்தவர் சில நாட்கள் தங்கிவிட்டு செல்லுங்களென பெரியவர்கள் சொன்னதை அன்பாக மறுத்து கிளம்பிவிட்டார்.

உண்மையில் தாமரைக்கு குடிப்பவர்களைக் கண்டாலே பிடிக்காது.

அப்படியிருக்க, திருமணம் ஆனதிலிருந்து தன்னை கண்டு கொள்ளாமலிருந்த கணவன், குடித்துவிட்டு வர வாழ்கையை எண்ணி முதன்முதலில் பயம் வந்தது.

மாமியாரின் சொல்படி கணவன் அறையின் பக்கத்து அறையில் படுத்துக் கொண்டவர் கண்களில் கண்ணீர்வர வெகுநேரம் கழித்தே உறங்கினார்.

====

தமையன் சொல்வதைக் கேட்டு மீனாட்சி காலுக்கடியிலிருந்த பூமி நழுவியதுபோல இருந்தது. இடிந்து போய் அமர்ந்து விட்டார்.

என்னதான் நிலைமை வந்தாலும் தன்னை விட்டுகொடுத்து விட்டாரென்ற எண்ணம் அளவில்லா வேதனையை கொடுத்தது.

வாழ்க்கையில் அடுத்து என்ன? பிடிபடவில்லை.

ஆனால் இனி யாரும் வேண்டாம் தனிமையே போதுமென முடிவெடுத்தவர் அறையிலேயே அடைந்துகிடந்தார்.

விதி செய்த சாதியால் மூன்று பேரின் வாழ்க்கை சிக்கலானதா?

பெரியவர்களின் அவசரத்தால் இப்படியானதா?

எது எப்படியென்றாலும் தீராத வலியை அவர்களுக்கு கொடுத்தது.

இதில் தாமரை சம்மந்தமே இல்லாமல் மாட்டிக் கொண்டதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல அறையே கதியென இருக்கும் மகளைக் கண்டு, ‘தான் அன்று பேசியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இதுபோல என் மகள் நின்றிருப்பாளா?’ என்ற சிந்தனையே வர, ஒருநாள் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்தார்.

மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும் பயனில்லாமல் அவர் உயிர் பிரிய, அந்த குடும்பமே ஆடிப்போனது.

இறுதி சடங்கிற்கு குற்றவுணர்வில் கண்ணீருடன் வந்த ரத்தினத்தையும், வள்ளியம்மையையும் அனுமதிக்காமல் அனுப்பிவிட்ட சுந்தரத்திற்க்கு அந்த குடும்பத்தின் மீது வன்மம் வந்தது.