மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 16

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 16

ராஜரத்தினம் – வள்ளியம்மை தம்பதியரின் மகன் மாணிக்கம்.

வயல், தோப்பு, காடுகரையென சொத்துக்கள் இருப்பினும் ஒரே அடியாக பணக்காரர்களென கூறிவிட முடியாது.

அதேசமயம் பணமில்லாமலும் இல்லை. ஊரில் அனைவரும் மதிக்கும் குடும்பம்.

அதே ஊரை சேர்ந்த விநாயகம் – அழகம்மாள் தம்பதியருக்கு பிறந்தவர்கள்தான் சுந்தரம் மற்றும் மீனாட்சி.

இவர்களுக்கு ரைஸ் மில், வயல், காடு, வெளியே நிலம் என ஏகப்பட்ட சொத்துக்கள் உண்டு.

இரு குடும்பத்திற்கும் வித்தியாசங்களும் உண்டு.

ஒருவர் பணம், அந்தஸ்து முக்கியம்மென நினைக்க, மற்றவரோ குணம், பண்பு முக்கியமென நினைப்பர்.

இது எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் குடும்பத்திற்கிடையே ஒரு பந்தம் இருந்தது.

ராஜரத்தினம், விநாயம் இருவரின் நட்பே அது. சிறுவயது முதல் இருவரும் உற்ற தோழர்கள்.

இருவருக்கிடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் வந்தாலும், பல வருடமாக அவர்கள் நட்பு தொடர்ந்தது.

வருடங்கள் அதன் போக்கில் செல்ல, அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து கல்லூரி, வேலை, தொழிலென இருந்தனர்.

மாணிக்கம்… அவருக்கு வெளியூரில் தங்கி படிப்புக்கேற்ற வேலை பார்க்க வேண்டுமென்ற எண்ணமே இருந்தது.

என்னதான் கிராமம், விவசாயமென வளர்ந்தாலும் வெளியே தங்கி நகரம், வேலையென  இருக்க ஆசைக் கொண்டார்.

சொத்து இருந்தாலும் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதே அவரின் கனவு.

பெற்றோர் மீது நிரம்பவே மரியாதையும், பற்றும், பாசமும் உண்டு.

அதுவரை அவர்கள்தான் எல்லாமென இருந்தவரின் வாழ்விலும், மனதிலும் இன்ப அவஸ்த்தையாக நுழைந்தவரே மீனாட்சி.

சிறுவயதில் ஒன்றாக விளையாடியிருக்கிறார்கள். குறிப்பிட்ட வயதுக்கு பின் பார்க்கும்போது இயல்பான புன்னகையோடும், விசாரிப்போடும் நின்றுவிடும் அவர்களின் பேச்சு.

ஆனால் அப்போதெல்லாம் தோன்றாத உணர்வுகள், மீனாட்சி வெளியே சென்று படிக்க ஆரம்பித்து, அவ்வப்போது ஊருக்கு வரும்போது தோன்றியது.

என்ன முயன்றும் அவர் பின் செல்லும் கண்களையும், அதில் தோன்றும் ரசனையையும், மனதில் தோன்றும் சிலிர்ப்பையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

பள்ளிப்படிப்பை முடித்த மீனாட்சி, ‘கல்லூரி செல்லுவேன்.’ என கண்ணை கசக்க, அவர் மீது உயிரையே வைத்திருந்த விநாயகம் மகள் ஆசைக்கு செவி சாய்க்காமல் இருப்பாரா என்ன?

வீட்டில் அனைவரையும் சரி கட்டியவர், மகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு வெளியே தங்கி படிக்க ஏற்பாடு செய்தார்.

அங்கிருக்கும் கல்லூரியில் அவர்களின் சொந்தகாரரின் மகளும் படிக்க, இருவரும் துணையாகினர்.

கல்லூரி நாட்கள் அழகாக நகர்ந்தாலும் அவரின் குடும்பத்தையும், ஊரையும் ரொம்ப மிஸ் செய்தார்.

அதன் பொருட்டு ஊருக்கு வருவதென்பது அவர் மிகவும் விரும்பும் விஷயமாகிப் போனது.

முன்பெல்லாம் வீட்டில் அமைதியாகவே இருப்பவர், இப்போது சற்று வாயடித்துக் கொண்டு குறும்பாக சுற்ற,

“புள்ளய கைக்குள்ள வச்சுக்கங்க. என்ன இருந்தாலும் வெளிய படிக்குது.”

“பொம்புள புள்ள இப்படி துள்ளிட்டு திரிய கூடாது. நல்லதுக்கில்ல.”

என்பது போன்ற பேச்சுக்களும், அறிவுரைகளும் வர, விநாயகத்தை தவிர வீட்டில் அனைவரும் அதையே நினைத்தனர்.

ஆனாலும் அவரின் செல்ல மகளை கண்டிக்க அப்போது அத்தனை தைரியம் இல்லையே.

மனிதர் ஆடி தீர்த்துவிடுவார் என்பதால் அப்போதைக்கு விட்டுவிட்டனர்.

மாணிக்கத்தின் பார்வை மாற்றத்தை பாவையவர் விரைவாகவே அறிந்து கொண்டார்.

பொதுவாக கல்லூரியில் யாரும் இதுபோல பார்த்து வைத்தால் வரும் கோபம், ஏனோ அவர் மீது வரவில்லை.

முதலில் கண்டுகொள்ளாமல் இருந்தவருக்கு, நாட்கள் போக மனதில் சலனம்…

பொதுவாக ஊருக்குள் இதுபோல யாரும் அவர் பக்கம் திரும்ப கூட மாட்டனர். அனைவரும் அவர் குடும்பம் பற்றி அறிவரே!

அதனாலே மாணிக்கத்தின் அந்த தைரியம் அவரை கவர்ந்தது. அதன்பின் அவரின் கம்பீரம், வசீகரம், அவரின் புன்னகையென பிடித்தத்தின் பட்டியல் நீண்டது.

வீட்டில் அவரை ரொம்பவெல்லாம் கட்டுப்படுத்தி வைக்கமாட்டார்கள். அவர் வெளியே சென்று படிப்பதே அதற்கு சாட்சி.

தந்தையின் பாசமே மீனாட்சியின்  அந்த சுதந்திரத்திற்கு காரணம்.

அதுநாள் வரை அதற்கேற்றார் போல நடந்து கொண்டவருக்கு ஏனோ மனதில் தோன்றிய நேசம், அனைத்தையும் மறக்க வைத்தது.

அவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவர, முதலில் விநாயகத்தால் நம்பவே முடியவில்லை.

அதேசமயம் மகளின் செயலில் மனம் புண்பட்டு போனது. வீட்டிலும் மனைவி,

“உங்க நண்பன் அப்படி இப்படினு சொல்லுவீங்க. இப்போ பாருங்க. ஒன்னுமே தெரியாதாது போல இருந்துகிட்டு பையன வச்சு நமக்கு சமமா வர நினைக்குறாங்க.” என சாட அமைதியாகதான் இருந்தார்.

அவரின் அன்னை அலமேலுமே இதையேதான் கூறினார்.

என்னதான் நட்பு என பழகினாலும் மகளை பெரிய இடத்தில் கட்டிக்கொடுக்கவே நினைத்தார்.

எனவே மகளின் இந்த ஆசை அவருக்குமே உவப்பானதாக இல்லை.

பேத்தியோடு சேர்த்து மருமகள் வளர்ப்பும் சரியில்லையென வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மாமியாராக வசைபாட, அழகம்மாள் மகளை அடி வெளுத்து விட்டார். 

தந்தையோ நின்று வேடிக்கைதான் பார்த்தார். அப்போதே தந்தை மனதை புரிந்து கொண்ட மீனாட்சிக்கு அழுகையாக வந்தது.

இந்த அழுகை காலமும் நீளுமென அறிந்திருந்தால் கண்டிப்பாக காதல் வயப்பட்டிருக்க மாட்டாரோ என்னவோ.

அடி நீண்டு கொண்டே செல்ல, தங்கைக்காக சுந்தரம் தடுக்க, மகளின் கண்ணீர் பொறுக்காமல் அவருமே, “அடிக்காத பாத்துக்கலாம்.” எனவிட்டு சென்றுவிட்டார்.

சுந்தரம் பயங்கர கோபத்தில்தான் இருந்தார் என்றபோதிலும் தந்தை சொல் கேட்டு எதுவும் செய்யாமலிருந்தார்.

தங்கையின் அழுகை கஷ்டமாக இருந்தது. அந்த வீட்டின் இளவரசி அல்லவா! ஆனாலும் அந்தஸ்து…

அப்பாவை போலவே அண்ணனிடமும் மிகுந்த அன்பு வைத்துள்ளார் மீனாட்சி. அவருக்கும் அப்படித்தான்.

கனகத்திற்கு மீனாட்சியை பார்க்க பாவமாகதான் இருந்தது. ஆனாலும் கணவன், மாமனார், மாமியார் சொல்வது நினைப்பதே நடக்குமென நன்கு அறிந்தமையால் வாயை மூடிக் கொண்டார்.

தேவையின்றி பேசினால் வீட்டை விட்டு துரத்தவும் யோசிக்க மாட்டார்களென அவருக்குத் தெரியும்.

விநாயத்திற்கு நண்பன் மகன் மீது இருந்த கோபம் அவர் மீதில்லை. ஏனோ மனைவி கூறியதை முழுதாக ஏற்கவும் முடியவில்லை.

மாணிக்கம் நல்லவரென்பதில் அவருக்கு மாற்றுகருத்து கிடையாது. ஆனால் அதற்காக பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் எண்ணமும் அப்போது அவருக்கில்லை.

என்ன நடக்கிறதென பாப்போம். அவர்கள் மனமறிந்து கொள்ளும் பொருட்டு அமைதியாக இருந்தார்.

இங்கோ… ராஜரத்தினமும், வள்ளியம்மையும் மகனின் செயலில் அத்தனை அதிருப்தி கொண்டனர்.

ரத்தினத்திற்க்கு ‘நண்பன் மனநிலை என்னவாக இருக்கும்? நம்மை தவறாக நினைத்திருப்பானோ?’ என கலக்கமாக இருந்தது.

வள்ளியம்மையுமே மகனிடம் நிதர்சனத்தை எடுத்துக்கூற, அவரோ அவள் வேண்டும் என மீண்டும் மீண்டும் அதிலேயே நின்றார்.

ஒரு கட்டத்தில் மகன் மனநிலை ஓரளவு பிடிப்பட்டது. ஊருக்குள் விஷயம் பரவியிருக்க, நண்பனின் மகள் வாழ்க்கை மற்றும் மகன் வாழ்க்கையை எண்ணி பார்த்தவர் ஒருமுறை பேசி பார்க்கலாமென முடிவெடுத்தார்.

அந்த முடிவிற்கு வருந்தி கோபத்தில் அவர் எடுக்கபோகும் முடிவு, மகன் வாழ்வோடு சேர்த்து மூன்று பேரை பாதிப்பதோடு ஏற்படும் இழப்புகளை பற்றி அவர் அறியவில்லை.

அறிந்திருந்தால் இரண்டையுமே நிச்சயம் செய்திருக்கமாட்டார்.

வீடு தேடி வந்த ரத்தினத்தை யோசனையாக வரவேற்றார்.

ஆனால் அவர் கல்யாண பேச்சை எடுக்கவும் மௌனமே விநாயகத்திடமிருந்து பதிலாக கிடைத்தது. சுந்தரமும் அமைதியாகதான் இருந்தார்.

ஆனால் அவரின் அன்னையும் மனைவியும்,

“பணத்துக்காக மகன வச்சு எங்க வீட்டு பெண்ண பிடிச்சது மட்டுமில்லாம, இப்போ என்ன தைரியம் இருந்தா பொண்ணு கேட்டு வருவீங்க?”

“எங்க வீட்ல சம்மந்தம் பேச உங்களுக்கு என்ன வக்கிருக்கு?” என்றெல்லாம் கேட்டுவிட, உள்ளே அவமானத்தில் துடித்து போனார்.

அனைத்தையும் தாண்டி நண்பனின் அமைதி அவரை அதிகம் வாட்டியது.

“மன்னிச்சுக்கங்க. புள்ளைங்க மனச பாக்கணுமேனுதான் வந்தேனே ஒழிய… நீங்க சொல்றது போலலாம் இல்லம்மா.” எனவிட்டு சென்றுவிட,

ரத்தினத்திற்கு வருத்தமாக இருந்த போதும் எதுவும் பேசவில்லை.

அவர் மனைவி அதற்கு மேலும் பேசிக்கொண்டே போக, ஓங்கி அறைந்துவிட்டார்.

அதிர்ச்சியோடு அனைவரும் பார்க்க, “போதும்… இவ்ளோ பேசுனது. அவன்தான் மன்னிப்பு கேட்டுட்டு போய்ட்டான்ல. அப்பறோம் என்ன?” என அதட்டியவர்,

மகளுக்கு வெளியூரில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பதாகவும், இனி இந்த பேச்சு வேண்டாமெனவும் எச்சரிக்க, அவரின் முன்பகுதி பேச்சில் நண்பனுக்காக இறங்கி விடுவாரோவென பயந்தவர்கள், பின்பாதி பேச்சில் நிம்மதியாகினர்.

வீட்டிற்கு வாடிய முகத்துடன் வந்த ரத்தினத்தை பார்த்தே விஷயம் பிடிபட்டது அவரின் மனைவிக்கும் மகனுக்கும்.

“இனி இந்த பேச்சே எடுக்கக்கூடாது. உன் மனச மாத்திக்க. நல்ல பிள்ளையா பாத்து நான் கட்டி வைக்குறேன்.” சத்தம் போட, 

நமக்காக பேச போய் வார்த்தைகளை வாங்கி வந்துள்ளாரென அமைதியாக இருந்தார்.

அவர் விஷயத்தை ஆரப்போடவே அமைதியாக இருக்கிறாரென அறியாத ரத்தினமோ மகனுக்கு பெண் தேடினார்.

இங்கோ மீனாட்சிக்கு சொந்தத்தில் மாப்பிள்ளை தேட அவர் காதல் விவகாரம் அறிந்து சிலர் தயங்கி பேச்சை தட்டி கழித்தனர். ஆனாலும் ஒரு இடத்தில் பேசி பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது.

அத்தனை நாட்களாக அடிகளை வாங்கிக் கொண்டு அமைதியாக பெண்ணைக் கண்டவர்கள், அவரின் நேசத்திற்கு எந்த எல்லைக்கும் செல்வாரென அறிந்தனர்.

வீட்டில் அனைவரும் ஏற்பாட்டில் மூழ்கியிருக்க, யாருமே தன் மனதை புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்களே என்று மீனாட்சிக்கு ஆயாசமாக இருந்தது.

அறையில் உட்கார்ந்திருந்தவர் ஒரு முடிவாக கதவை அடைத்துவிட்டு, துணி வைக்கும் அலமாரியில் இருந்து சேலையை எடுத்து சீலிங்கில் இருந்த ஃபேனில் மாட்டினார்.

அவரை தயார் செய்ய வந்தவர்கள் கதவை தட்ட, திறக்கபடாமல் போகவும் பதட்டமாகினர்.

உடனே விரைந்த சுந்திரம் கதவை உடைக்க உள்ளே அவர்கள் கண்டது, சேலையில் இறுக்கியிருந்த கழுத்தினால் மூச்சுவிட சிரமப்பட்டு அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த மீனாட்சியையே.

ஒரு நிமிடம் இதயதுடிப்பு நின்றுவிட, ஓடிச்சென்று அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்ற போதும், சேலை இறுக்கியதில் குரல்வளை அடிபட்டு இருந்தது. பேசவும், சாப்பிடவும் சிரமப்பட்டார்.

அவரிடமிருந்து இத்தகைய செயலை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.

அதற்குமேல் யாருக்கும் பெண்ணின் விருப்பதிற்க்கு எதிராக நிற்க தைரியம் வரவில்லை.

“நாங்க பேசி உனக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சு தரோம். இதுபோல பண்ண யோசிக்க கூட கூடாது.” என கண்கலங்கியவாரு சுந்தரம் சொல்ல, மற்றவர்களும் வேறுவழியின்றி அதை ஆமோதித்தனர்.

அவருக்குமே அனைவரின் கலக்கமான முகம் கண்டு, தான் செய்தது தவறு, கோழைத்தனமென புரிந்தாலும் அதன்மூலம் ஏற்பட்ட நன்மையில் நிம்மதியாகதான் உணர்ந்தார்.

பெண்பார்க்க வந்திருந்த மாப்பிள்ளை வீட்டார் அவர்களை வசைபாடிவிட்டு சென்றுவிட்டனர்.

ஆனால் அப்போது அந்த காதல் நிறைவேறும் நிலையில் இல்லை. ஏற்கனவே எல்லாம் முடிந்துவிட்டதென யாரும் அறியாமல் போனர்.

தொடரும்…