மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 15.2

அத்தியாயம் – 15.2

வெற்றி முன்புதான் புவனா முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அவள் கோபம் என முறைத்து பார்ப்பதைக் கண்டு சிரிப்பு வர பார்க்க, கடினப்பட்டு அடக்கிக் கொண்டான்.

“ஏன் மாமா அத்தானை அடிச்சீங்க?”

இந்த அழைப்பு… கதிர் எத்தனை முறை ஆசைப்பட்டு ‘ஸ்பெஷல்லா கூப்டு.’ என மறைமுகமாக கேட்டிருப்பான். ஆனாலும் அது அவளுக்கு புரிந்ததும் இல்லை. அப்படி கூப்பிட்டதும் இல்லை.

வாங்க போங்க… இது போலதான் அழைப்பாள்.

ஆனால் நன்றாக பேசி பழகிய பின் அவன் ‘புவனா.’ என்றால் கோவித்துக் கொள்வாள்.

அந்த ஈரெழுத்து அழைப்பு மட்டுமே அவனிடம் இருந்து வரவேண்டும்.

இப்போது அவன் அப்படி கூப்பிட்டு எத்தனை நாட்கள் ஆகின்றது?

‘எங்கிருந்து கூப்பிட? என்ன கண்டுக்கவே மாட்றாங்களே.’ மனம் கவலை கொண்டாலும், இன்று நடந்ததை நினைத்து அவள் மாமனிடம், அவனுக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாள்.

“பின்ன அடிக்காம? போலீஸ் வந்து கேக்கும்போதும் கல்லூளிமங்கன் மாறி நிக்குறான். நடந்ததையும் சொல்லமாட்டறான். மன்னிப்பாச்சும் கேளுனா அதுவும் முடியாதுனா…” நடந்தை பேச வெற்றிக்கு கோபம் தானாக வந்தது.

“மாமா அவர் வேணும்னு அடிக்கல.”

“இருக்கட்டும்டா… ஆனா அதுக்கு அப்டியா அடிப்பாங்க?” என்ற கேள்வியில், புவனா உள்ளுக்குள், ‘அத விட இன்னும் நல்லா அடிச்சிருக்கனும்.’ என நினைத்தாள்.

அங்குதான் நின்றிருந்தாள் அவளும். கதிர் தனியே வருவது கண்டு அந்த பெண்ணிடம் பேசுகிறான் என சண்டையிட வந்தாள்.

அவன் ஒரு இடத்தில் நின்றுவிட, அவளுமே பேசும் குரல் கேட்டு நின்றுவிட்டாள்.

ஆனால் அவர்களின் பேச்சு, கேட்கும் படியும் சொல்லும்படியுமா இருந்தது?

##

வெற்றியைக் கண்ட ரஞ்சன், “ஏன்டா… எப்படிடா இவன் சிரிச்சிட்டே இருக்கான்?”

“அந்த குடும்பம் இருந்தும் அவங்க பாட்டி, அப்பறோம் அவள தவர யாருமில்ல. ஏன் அவன் அப்பனே வேணாம்னு உட்டுட்டு போய்ட்டான். இவன் என்னனா அவங்கள நேருக்கு பாத்தா கூட சாதரணமா இருக்கான்.”

“கோவமே வராதா அவங்கள பாத்தா? அந்த அளவு நல்லவனா? அத கேக்க கூட தைரியம் இல்ல. நம்மள கூப்டு மிரட்டுறான்.” என்றவன் மேலும்,

“அவங்க அப்பன் பொண்டாட்டிய புடிக்கலனு, செத்ததும் கொஞ்ச நாள்ள புடிச்சவனு அந்த வீணா போனவன் அம்மாவ ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு கிளம்பிட்டான்.”

“புடிக்காத பொண்டாட்டிக்கு இவன் மட்டும் எப்பிடிடா பொறந்தான்?”

அவன் கேவலமான புத்தியில் தோன்றிய சந்தேகத்தை கேட்டு சிரிக்க, மற்றவர்களும் கொக்கரித்தனர்.

##

அதைக் கேட்டே கதிர் அவர்களை புரட்டி எடுத்தது.

அவன் கோபம் புவனாவிற்கு நியாயமாகவே பட்டது. ஏன் பிடித்தது என்றுகூட சொல்லலாம்.

அன்று அவளுக்கு பிரச்சனையாக தெரிந்த கோபம் இன்று, சரியானதாக தெரிந்தது.

ஆனாலும் அவன் அடித்து அவர்களுக்கு எதும் நேர்ந்தால் கதிருக்கு பாதிப்பு என்றே ஓடிச் சென்று பிரபாவை அழைத்து வந்தாள்.

அதன்பின் சத்தம் கேட்டு பலரும் வந்தனர். அதன்பின் நடந்ததை நாம் அறிவோம்.

இப்போது நினைத்தால் கூட அவளுக்கே அடித்து நொறுக்கும் ஆத்திரம் வரத்தான் செய்தது. அவர்கள் பேசியது யாரைப் பற்றி அவள் அன்பான மாமனையும், அத்தையையும் பற்றி அல்லவா!

அவள் அத்தை அவள் பிறக்கும் முன்பே மரித்து போயிருக்கலாம். ஆனாலும் அவரின் புகைப்படம் பார்த்தே அவர் மீது ஒரு நெருக்கம்.

தந்தையின் தங்கை என்றா? தன் மாமனின் அன்னை என்றா? அவள் அறியாள்.

ஆனாலும் பார்த்தே இராத அவள் அத்தையை அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.

நடந்ததை வெற்றியிடம் கூற அவளுக்கு மனம் வரவில்லை.

இதில் அந்த லுச்சாக்களிடம் கதிரை மன்னிப்பு கேட்க வைக்க, அத்தனை பேர் முன்பும் அவனை அடித்தது கஷ்டமாக இருக்க, அதனாலே வெற்றியிடம் இப்படி வாதம் பண்ணிக் கொண்டிருந்தாள்.

“உங்களுக்கும் தெரிஞ்சிருக்கு. அவர் அப்படி பண்ண எதும் காரணம் இருக்கும்னு அப்பறோம் ஏன் அடிச்சீங்க?” என, அவளை கூர்மையாக பார்த்தவன்,

“பிரச்சனை எதுக்குனுதான்… ஏன் நான் அவன அடிக்க கூடாதா?” என்றான்.

அதில் கோபத்தை மறந்து போனாள்.

அவள் விழிகள் வியப்பால் விரிய, ‘என்ன கேட்டீங்க?’ என்பது போல ஒரு பார்வை.

இதற்குமுன் அவன் கதிர் பற்றி பேசியும் கண்டதில்லை. கதிரிடம் பேசியும் கண்டதில்லை.

இன்று பேசியது வியப்பாக இருந்தாலும், பிரச்சனை பெரிதாகக் கூடாது என பேசியதாகதான் அவளும் நினைத்தாள்.

ஆனால் இப்போது வெற்றி கேட்ட கேள்விக்கு அவளுக்கு அர்த்தம் புரியாத அளவு சிறுமியல்லவே!

‘அவன அடிக்க எனக்கு உரிமையில்லையா?’ இதுதானே அதன் பொருள்.

மாமனை ஆச்சர்யமாக பார்த்து வைத்தாள். 

“நான் அப்படி சொல்லவே இல்லையே மாமா.” என்றவள் நிறுத்தாமல்,

“உங்க தம்பிய நீங்க அடிக்கறீங்க.” என வேண்டுமென்றே சொல்ல, அவன் எதுவும் கூறவில்லை. ஆனால் அழகாக புன்னகைத்தான்.

உள்ளே சில நினைவுகள் அவனை காயப்படுத்ததான் செய்தது.

கதிரிடம் பலவருடங்கள் முன்னய அவன் பேச்சு தவறு என பின்னாட்களில் உணர்ந்தே இருந்தான்.

கடந்த காலத்தில் நடந்ததை அறிந்து கொண்ட போது, ஏனோ அந்த மனிதர் மீது கூட சற்றே வெறுப்பு குறைந்து போயிற்று.

அதற்காக தன்னை வேண்டாம் என ஒதுக்கி சென்றவர்களிடம் நின்று அன்பு பிச்சை கேட்கப் போவதில்லை.

சிறுவயதில் இருந்த சில எண்ணங்கள் வருடங்கள் கூட கூட மாறியிருந்தன அவ்வளவே.

இன்று முதலில் கதிர் அவனுடன் மல்லுக்கு நின்றது, அடி வாங்கி அதிர்ச்சியடைந்தாலும் அவன் கண்ணிலிருந்த சந்தோஷம்,

பின் அவன் கூறிய ஒரு வார்த்தைக்காக உடனே மன்னிப்பு கேட்டது என நடந்தது அனைத்தும் வெற்றி எதிர்பார்க்காததே.

அதன்பின் ஏனோ… அவனுக்கென இருக்கும் இருவரின் பட்டியலில் பாட்டி, புவனாவுடன் அவனும் இருப்பது போன்ற ஒரு எண்ணம்.

தேன் அவனின் சரிபாதி… எனவே அவள் அவனுக்கு முக்கியம் என பிரித்து சொல்ல இயலாது. அவனுக்குள்தானே அவள் இருக்கிறாள்.

“மாமா உங்க தம்பிய உங்களுக்கு புடிக்கும்னு சொல்லவே இல்ல?” குறும்பாக கேட்டாள்.

அவள் கேள்வியில் நிகழ்வுக்கு வந்தவனுக்கு ஏனோ இப்போதே இதைப்பற்றி பேசத்தோன்ற,

“அவன விடு… உன் அக்காவ உனக்கு புடிக்குமா?” எனக் கேட்டு கூர்ந்து அவள் முகபாவனையை ஆராய்ந்தான்.

‘இன்னைக்கு மாமா ஒரு முடிவுலதான் இருக்காரு போல.’ என நினைத்துக் கொண்டாள்.

அவளுக்கு தேன்மொழி பிடிக்காது என்று இல்லை. நடந்ததை இந்த பக்கம் இருந்து பார்த்த போது அவளுக்கு முதலில் கதிரையே பிடிக்கும் என சொல்லமுடியாது.

ஆனால் அவனுடன் பேசி பழக ஆரம்பித்தப் பின் அவன் பார்வையில் இருந்து பார்க்க, அவனிடமும் நியாயங்கள் இருப்பதாக நினைத்தாள்.

ஆனால் தேன்மொழி… அவளிடம் இயல்பாக பேசியதில்லை. வெறுத்ததும் இல்லை.

ஆனால் ஏனோ அவள் அப்பாவை பிடிக்காது.

இன்னும் அவர் செய்தது பற்றி அறிந்தால்?

முதலில் வெற்றி மனம் கதிர் மூலம் அறிந்து பயங்கர அதிர்ச்சிதான். ஆனாலும் மாமன் விருப்பம் நிறைவேறி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே நினைத்தாள்.

அவளிடம் முறைப்பது, அவளை திட்டுவது எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக தோன்றும். ஆனாலும் அதை எளிதாக மாற்றிக் கொள்ள இயலவில்லை. 

எதை பற்றி பேசவருகிறான் என புரிய, மாமன் கேள்விக்கு,

“ஏன் மாமா அந்த பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா?” என பதில் கேள்வி கேட்டு, உன் காதல் விவகாரம் நான் அறிவேன் என உணர்த்தினாள்.

அதில் இப்போது அதிர்ச்சியாவது அவன் முறையானது.

இருப்பினும் அவள் முகத்தில் வெறுப்பு இல்லாமல் கேலியில் இருந்ததில் ஒரு நிம்மதி.

“ஏன் உனக்கும் அந்த ஆங்கிரி பேர்டுதான் வேணுமா?” என அவளை பதிலுக்கு வம்பிலுக்க, தன் மனம் அறிவான் என அவளுக்கு முன்னமே புரிந்துதான் இருந்தது.

ஆனாலும் ஒரு சமாளிப்பு புன்னகை புரிந்தவள், “ஆங்கிரி பேர்ட்டா?” என முகத்தை சுருக்க,

“ஆமா… அந்த படத்துல வர சிகப்பு கலர் ஆங்கிரி பேர்ட்டேதான் அவன்.” என சொல்லிவிட்டு சிரித்தான். அவளுக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

பின் விளையாட்டை விடுத்து அவள் தலையை வருடியவன்,

“பொறுமையா இருக்கனும் புவனாம்மா. தேவயில்லாம அவன்கிட்ட அதிகமா பேசாத. இப்போ உனக்கு சின்ன வயசுதான். உனக்கு புடிச்ச மாதிரிதான்… உன் விருப்பப்படிதான் எல்லாம் நடக்கும். ஒழுங்கா படிச்சு டிகிரிய வாங்கு..” பொறுப்பானவனாக பேச, ஆமோதிப்பாக தலையை ஆட்டினாள்.

அதன் பின் உறங்க அறைக்கு சென்றுவிட்டனர்.

வெற்றி, கதிர், புவனா, தேன்மொழி… நால்வருக்குமே அன்று எதோ ஒரு நிம்மதிதான். அதில் சுகமாக உறங்கிபோயினர்.

ஆனால் மாணிக்கம், சுந்தரம், மீனாட்சி ஆகியோர் தங்கள் தூக்கத்தை தொலைத்தனர்.

வாழ்வில் கடந்து வந்த நினைவுகள், இன்றைய நிகழ்வுகளால் நினைவுக்கு வந்தது.

தொடரும்…

(வெற்றி, கதிர் யாருனு புரிஞ்சுடுச்சுல ப்பா. மாணிக்கம் அவர் 1st wife son வெற்றி. 2nd wife son கதிர். அண்ணன் தம்பி ரெண்டு பேரும்.)