மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 10

அத்தியாயம் – 10

நேற்று தேன்மொழி கடிதம் படித்தப் பின் உடனே நடத்தப்பட வேண்டியவற்றை மனம் பட்டியலிட்டபடியே இருந்தது.

அவன் மனம் பாட்டி, புவனா இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என ஓடியது.

‘பாட்டியிடம் சொன்னால் எவ்வாறு எதிர்வினை வரும்? ரொம்ப கோபப்படுவாங்களோ?’

‘அதுக்காக சொல்லாமலே கட்டிக்க போறியா?’

‘மாட்டேன்.’

‘அப்பறோம்… போய் சொல்லுடா.’

‘ஆனாலும் கதிருக்கே என்னலாம் சொன்னாங்க?’

‘அவன பத்தி… புவனா பத்தி அன்னைக்கு பேசினதுல இருந்தே ஒரு மாதிரி தான் இருந்தாங்க. அதான் இப்படி ஆகிடுச்சோ?

‘நாம இப்போ பேசலாமா? தப்பில்ல?’

அவன் மனம் வருத்தம் கொண்டது.

கடந்தகாலம் பற்றி அறிந்தமையால் அவன் பாட்டியின் எண்ணங்கள், கவலைகள் அவனுக்கு புரிந்தது.

அவருக்கு இன்று காலை கொஞ்சம் பி.பி அதிகமாகி மயக்கம் வந்துவிட்டது. டாக்டரிடம் அழைத்து சென்றுவிட்டு இப்போதுதான் வீடு வந்தனர்.

“கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஸா இருக்காங்க. பாத்துக்கோங்க.” என மருத்துவர் கூறியது அவன் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

பாட்டி கையை பிடித்துக் கொண்டு புவனா அறையின் உள்ளே அவரருகில் கவலையாக உட்கார்ந்துருக்க, வெற்றி ஹாலில் உள்ள நற்காலியில் சாய்ந்தவாறு யோசனையில் இருந்தான்.

இருவருமே சோகமே உருவாக இருந்தனர்.

அவர்கள் இருவருக்கும் அனைத்துமாகிப் போனவர் அல்லவா!

‘அவங்க இப்படி இருக்குமோது சுயநலமா யோசிக்கறமோ?

முதல்ல பாட்டிக்கு சரியாகட்டும். அதுக்கப்புறம் உடனே என்ன பண்ணனுமோ பண்ணலாம்.’

‘திருவிழா நடக்கும் போது எதுவும் செய்ய மாட்டாங்க. அது முடிஞ்சதும் நெறைய பேர் என்ன பத்தி தெரிஞ்சிக்கட்டும். 

யாருக்கு மாப்ள பாக்குறாங்க?’ என நினைத்தவனின் தாடை ஆத்திரத்தில் இறுகிப்போனது.

இவன் எண்ணங்களில் நிறைந்திருப்பவளோ, கண்களில் கண்ணீர் சிந்த வீட்டின் பின் உள்ள தொழுவத்தில் உள்ள ஒரு ஆட்டுக் குட்டியை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

ஏனோ கனகத்தின் பார்வை இப்போதெல்லாம் மகளிடம் அதிகமாக இருந்தது.

கல்யாண பேச்சை எடுக்காதபோது அவளை அதிகம் கண்காணிக்காதவர்,

ஒரு வருடத்திற்கு முன் இந்த பேச்சு வரும்போது அவள் முகத்தில் தெரிந்த மறுப்பையும், கதிர் புவனா பற்றி வந்த தகவலை கேட்கும்போது கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் இயல்பாக இருந்ததையும் கண்டார்.

ஏனோ… இரண்டுமே அவருக்கு சரியானதாக படவில்லை.

கோவில், வீடு என வலம் வரும் பெண் என்ற நினைப்பு தவறோ என தோன்ற அவளுக்கே தெரியாமல் அவள் மேல் ஒரு கண் வைத்திருந்தார்.

ஆனாலும் கூடவே சுற்ற முடியாதல்லவா!

கடவுள் புண்ணியத்தில் அவர் கண்களில் ஒரு வருடமாக தப்பித்திருந்தாள்.

ஆம்… ஒரு வருடம் தப்பித்தாள்.  இப்போதுதான் மாட்டிக்கொண்டாள்.

நேற்று எதேச்சையாக கோவில் வந்தவர், அவள் மறைவாக சிறுவனிடம் கடிதம் கொடுத்ததையும், 

அதை வெற்றி வாங்கியதையும் பார்த்து விட்டார்.

மேலும் அவர்களின் நொடிகளேயான பார்வை பரிமாற்றத்தையும்.

அவருக்கு நெஞ்சு வலி வராதது அதிசயமே!

ஆனாலும் வீட்டில் கணவரிடம் சொல்ல இம்மியும் நினைக்கவில்லை.

அமைதியாகவே அந்த நாள் போனது.

இது போல ஏதோ ஒன்று இருக்குமோ என்ற உள்ளுணர்வு எச்சரிப்பே, கணவன் சொல்லுக்கேற்ப அன்று கதிரோடு சென்று பேசத் தூண்டியது போலும்.

சுந்தரம் அந்த குடும்பத்தையும், முக்கியமாக அவனையும் எத்தனை வெறுக்கிறார் என அவருக்கு நன்றாகத் தெரியும்.

அப்படியிருக்க,  ‘இந்த புத்தி கெட்டவ என்ன வேல பண்ணி வச்சுருக்கா?’ என எல்லையில்லா சினம் கொண்டார்.

இருந்தாலும் கணவன் கிளம்பும் வரை பொறுமையாகவே எதையும் காட்டிக்கொள்ளாது இருந்தார். அவர் கிளம்பியதும் மகனும் சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டான்.

தர்மா வீட்டு விஷயத்தில் அதிகம் தலையிடமாட்டான். தங்கையிடம் ரொம்ப கொஞ்சாவிட்டாலும் பாசமும், கண்டிப்பும் இருக்கும்.

‘இதை அவனிடம் சொல்லலாமா?’ என தோன்றியது. பின்,

‘முதலில் நாம பேசுவோம். அப்பறோம் சொல்லுவோம்.’ என விட்டுவிட்டார்.

தேன்மொழி எப்போதும் போல கோவில் கிளம்பி வெளியே செல்ல எத்தனிக்க, அவள் எதிரே வந்தவர் எதுவும் பேசாமல் அவள் மீது ஊடுருவும் பார்வையை செலுத்தினார்.

அன்னை வழி மறித்து நின்ற போது புரியாமல் பார்த்தவள், அவர் பார்வையில் உள்ளுக்குள் பயந்து போனாள்.

ஆனாலும் சமாளித்துக் கொண்டு, “என்னம்மா?” என கேட்டாள்.

அவள் கையில் உள்ள பையில் சாமிக்கு பூஜை செய்ய தேவையானதும், எப்போதும் அவள் கையாலேயே செய்த பிரசாதமும் இருக்க வேறேதும் இருக்கிறதா என வெடுக்கென வாங்கி ஆராய்ந்தார்.

அவர் பார்வை, செயல் எல்லாம் கண்டு இவளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது. ஆனாலும் எதும் தெரியாமல் பேசக்கூடாது என அமைதியாய் நின்றாள்.

ஆனால் அவர் கேட்ட கேள்வி வரைக்குமே அந்த அமைதி நிலைத்தது.

“இன்னைக்கு எந்த லெட்டரும் கொடுக்க போறதில்லையா?”

அவள் அதிர்ச்சியான பார்வையை பொருட்படுத்தாமல்,

“ஒருவேள துணியில எங்கையும் இருக்கா? சொல்லுடி?” ஆத்திரமாகவே கேள்வி வந்தது.

அவர் முகத்தில் உள்ள ஆத்திரம் கண்டு பயந்தவள்,

“அது… அது… ம்மா…” என திக்க,

பளாரென கன்னத்தில் ஒரு அறை விட்டார். அப்போதும் கோபம் தீராமல் போக, மாறி மாறி அறைந்தார்.

நப்பாசையாக அப்படி எதும் இல்லை தவறாக புரிந்து கொண்டீர்கள் என கூறிவிட மாட்டாளா என்ற எண்ணம் அவள் முகத்தில் தெரிந்த கலவரத்தில் முற்றிலும் உடைந்து போயிற்று.

கண்களில் கண்ணீர் கொட்டினாலும் அனைத்தை அடிகளையும் வாங்கிக் கொண்டு அமைதியாகவே நின்றாள்.

அதற்குமேல் அடிக்க மனம் வராமல் நிறுத்தியவர்,

“என்ன காரியம்டி பண்ணிட்டு இருக்க? உன் அப்பனுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமா?” என கேட்க, பதில் இல்லை.

“உன்ன நம்பி கோவிலுக்கு பொறன வராம அனுப்பனா நல்லா அதுக்கு மரியாதை பண்ணிருக்க.” என்றவருக்கு மனதுக்குள் மகள் செயல் நினைத்து ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும், அதைவிட கணவரை நினைத்து பயமாக இருந்தது.

‘அந்த மனிதன் லேசுபட்டவர் இல்லை.’ என்று இத்தனை வருடம் அவருடன் குப்பைக் கொட்டியதில் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

மனது கேளாமல் மெதுவாக அவள் கன்னம் பற்றி பார்க்க, இரு கன்னமும் கோவைப் பழம் போல சிவந்திருந்தது.

பேசி புரிய வைக்க நினைத்தவர், “வேணாம்… தேனு. உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான். இந்த எண்ணத்தை விட்ரு.” என்றார் கனிவும் கண்டிப்பும் கலந்த குரலில்.

அவளோ எதுவும் கூறாமல் அழ,

“புரிஞ்சுதான் பண்றியா? எங்க இருந்துடி உனக்கு இந்த தைரியம் வந்துச்சு?” இன்னுமே கோவத்தில் கத்தினார்.

அவர் எவ்வளவு கூறியும் அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவள் மனது தாயிக்கு பிடிப்பட்டது. அத்தனை எளிதாக விடமாட்டாளென.

இதேபோன்று ஒரு முறை ஒருத்தி உறுதியாக நின்றதும் ஞாபகம் வந்தது.

அமைதியாக எதிர்த்து பேசாமல், அழுதாலும் அதே பிடியில் நிற்பவளை பார்த்து மேலும் ரெண்டு அடிதான் அடிக்க தோன்றியது கனகத்திற்கு.

“இனிமே நீ வீட்ட விட்டு வெளிய போன கால உடைச்சுபுடுவேன்.” என எச்சரித்தவர், அவளை உள்ளே அனுப்பி விட்டு பையை வாங்கி அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

அதன்பின்னே… தொழுவத்திற்கு வந்தவள் அழுது கொண்டிருந்தாள்.

இத்தனை களேபரத்திலும் அவளுக்கு அன்னைக்கு தெரிந்துவிட்டது ஒரு விதத்தில் நல்லது என்று தோன்றியது.

அவனிடம் லெட்டர் கொடுத்தப் பின் என்ன எதிர்வினை வரும். இன்று கோவிலுக்கு வருவாரோ வந்தாள் பேசிவிடலாம் என்றெல்லாம் உற்சாகமாக கிளம்பியவள் எண்ணம், அன்னை பேச்சிலும் அடியிலும் காணாமல் போயிருந்தது.

ஆனாலும் ‘அத்தான் பாத்துக்குவாரு.’ என தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டாள்.

தொடரும்…