மனம் திறவாயோ மன்னவனே 3

தன்முன் கண்ணீருடன் நின்றிருந்த நிஷாந்தியையும் அவளருகே தலைகவிழ்ந்து நின்றிருந்த தன் தம்பி ஆதவனையும் பார்த்த மித்திரனின் பார்வையில் என்ன இருக்கிறது என்று புரியாது நின்றிருந்தனர் இருவரும் …

அவர்கள் இருவரையும் அழுத்தமாய் பார்த்தவன் ஒரு நொடி மூச்சை உள்ளிழுத்து நிதானமாய் வெளியேற்றியவன் ” சரி நான் பாத்துகிறேன் .. நீங்க ரெண்டுபேரும் வீட்டுக்கு போங்க … ” என்றவனை தயக்கத்துடன் பார்த்த நிஷாந்தி ” அத்தான் … ”  என்று அழைத்தவளின் முகத்தில் இருந்த வருத்தத்தில் தன்னை நிதானித்து புன்னகையுடன் ” ஒன்னும் தப்பா நடக்காது நிஷா .. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் .. ஓகேவா … ” என்று கூற அவனை பார்த்து தலையசைத்தவள் அங்கிருந்து நகர நிஷாவின்  அருகே நின்றிருந்த  ஆதவன் ” சாரிண்ணா .. ” என்று கண்களில் நீர் ததும்ப கூற ” டேய் இதெல்லாம் உனக்கு செட்டே ஆகல  எப்போதும் ஜாலியா இருக்க என் தம்பியாவே இரு நோ கில்டி பீலிங்க்ஸ் ஓகேவா .. போடா நிஷா வெயிட் பண்றா பாரு … ” என்று அவனை அனுப்பியவனின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர சற்றுநேரத்திற்கு  முன் நடந்த நிகழ்வை நினைத்து  பார்த்தான் தேவமித்திரன்…

தனது தாய் மற்றும் பாட்டியின் சண்டையில்  பாட்டிக்கு ஆதரவாக கூறியவன் அங்கிருந்து கிளம்பிய பிறகு அவனுக்கு நிஷாவிடமிருந்து அழைப்பு வர அதை ஏற்றவன் ” ஹலோ … என்ன நிஷா … ” என்று கேட்க நிஷாவோ ” அத்தான் பக்கத்துல இருக்க காஃபி ஷாப்க்கு வர முடியுமா … ” என்றாள்…

” என்ன நிஷா .. இவ்வளவு நேரம் வீட்ல தானே இருந்தேன் அங்கே பேசாம எதுக்கு காஃபி ஷாப்க்கு கூப்டுற … “

” அத்தான் ப்ளீஸ் .. ஏன் … எதுக்குனு கேக்காம கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன் ப்ளீஸ் .. ” என்று கூற அவளின் குரலில் இருந்த பதட்டத்தில் என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் சரி வரேன் என்று கூறியவன் அடுத்த ஐந்து நிமிடங்களில் அங்கே செல்ல அங்கு நிஷாவுடன் தனது தம்பி ஆதவனும் இருக்க அவர்கள் இருவரையும் கேள்வியாக நோக்கியவன் அவர்கள் இருவருக்கும் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்…

“என்ன விஷயம்  நிஷா எதுக்கு இங்கே வர சொன்ன … ஆதவன் வேற இருக்கான் …  என்னாச்சு எதுவும் பிரச்சனையா … “

” அத்தான் ..   அது … வந்து … ” என்று நிஷா பேச முடியாது திணர  மித்திரனுக்கு எதுவோ சரியாக படவில்லை … அவன் நினைவுகள் பல வருடங்கள்முன் செல்ல அதை போன்றதொரு நிகழ்வு தான் தற்போதும் நிகழ போகிறதோ என்று எண்ணி கொண்டிருந்தவன் நிஷாவிடம் ” என்ன நிஷா எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு … ” என்றான் …

” அத்தான்… அதுவந்து …  சாரித்தான் … எனக்கு நம்ம கல்யாணத்துல விருப்பம் இல்லை … ” என்று நிஷா கூற மித்திரனின் முகமோ ஒரு நொடி  கோபமாக மாற அதை உணர்ந்த மித்திரன் தன்  கோபத்தை வெளிகாட்ட பிடிக்காது   தன்னுள் அடக்கியவன் நிஷாவை பார்த்து ” என்ன நிஷா ஆச்சு .. நமக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு  பண்ணதுல இருந்து எல்லா ஏற்பாடும் உங்கிட்ட கேட்டுட்டு தானே பண்ணாங்க … அப்ப எல்லாத்துக்கும் சரினு சொல்லிட்டு  இன்னும் ஒரு வாரமே கல்யாணத்துக்கு இருக்கப்போ வேணாம்னு சொல்றியே … என்ன தான் நினைச்சுட்டு இருக்க உன்  மனசுல … ” என்று மித்திரன் முடிந்தளவு கோபக்குரலில் பேசுவதை தடுக்க நினைத்தாலும் அவனையும் மீறி அது சில இடங்களில் வெளிப்பட்டு தான் இருந்தது..

அவனது கோபக்குரலை கேட்ட நிஷாவிற்கு  தான் செய்த தவறை எண்ணி தலை குனிந்தவளின் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருக்க அவளின் கண்ணீரை கண்ட மித்திரனுக்கு ஆயாசமாக இருக்க  ” இதுல நிஷா மேல மட்டும் தப்பு இல்லைனா என்மேலயும் தான் … ” என்று அதுவரை அமைதியாக இருந்த ஆதவன் வாய்திறக்க அவனை கேள்வியாய் நோக்கினான் மித்திரன்…

“நானும் நிஷாவும் காதலிக்கிறோம்ணா.. ” என்று  கூறிய ஆதவன் மித்திரனின் முகத்தை காண இயலாது தலை கவிழ்ந்தான்…

இதைக்கேட்ட மித்திரனுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளும் அதனால் அவன்இழந்த இரு பாசமான உறவுகளும் மனக்கண்ணில் தோன்ற சோர்ந்து போனான் மித்திரன்…

அவனின் தோற்றம் கண்ட  இருவரும் ஒரே நேரத்தில் சாரி என்க ஆழ மூச்செடுத்து தன்னை நிதானமாக்கியவன் ஒரு முடிவெடுத்தவனாக இருவரையும் நோக்கினான்…

“உங்க காதலை அட்லாஸ்ட் இப்பவாவது சொன்னதுக்கு தைங்ஸ்..  ” என்றவன் வேறெதுவும் பேசாது எழ எதுவும் கூறாது தங்களை திட்டாது கூட எழும் மித்திரனை பார்த்த ஆதவன்  “அண்ணா .. ” என அழைக்க ” உங்களோட கல்யாணம் என் பொறுப்பு  ..” என்றவன்  அங்கிருந்து நகர்ந்தான்…

அந்த காபி ஷாஃபை விட்டு வெளியே வந்தவன் காரை எடுத்துக்கொண்டு அமைதியான சூழலை தேடி சென்றான்… அவனது மனதுக்கு நெருக்கமான இடத்துக்கு  சென்றான் ..  அது அவர்களது தென்னந்தோப்பும் அதனைச் சுற்றியுள்ள அவர்களது வயலும்  தான்… அங்கே தான் அவனது  மகிழ்வான பல  நாட்களை
கழித்திருந்தான்.. அவனது விருப்பமான லட்சுமி அத்தையுடனும் தினகரன் மாமானுடம்.. எந்தளவுக்கு அவனுக்கு இன்பம் தந்தனரோ அதை அப்படியே பறித்துவிட்டு சென்றிருந்தனர் அவர்களிருவரும் அவர்களின் காதலுக்காக.. இவர்கள் இருவரும் ஒருவரையொருவர்  காதலிக்கவில்லை  .. வேறிருவரை காதலித்தனர்.. இந்த விஷயம்  தெரிந்த  ஒருவன் மித்திரனே ஆவான்.. அந்த சிறுவயதில் அவனுக்கு அது காதல் என்று புரியவில்லை .. வளரும் போது தான்  அவனுக்கு அது புரிந்தது..

அவனுக்கு புரிந்தாலும் அந்த விஷயத்தை அவனால் மற்றவர்களுக்கு புரியவைக்க முடியாது போனது .. சிறு பிள்ளையின் வாதம் அங்கே எடுபடவில்லை.. அவனை நம்பாதவர்கள் மேல் இவனுக்கும் நம்பிக்கை இல்லை .. அவர்களை மனதால் சிறிதுசிறிதாக விலகியவன் தன்னுடைய பதினைந்தாவது வயதில் ஹாஸ்டலில் சேர்ந்து மொத்தமாக விலகி கொண்டான்.. அப்போது இருந்தே தன்னுள் இறுகி போனான்.. யாரோடும் இருவார்த்தைக்கு  அதிகமாய்  பேசியது இல்லை .. தேவையற்று பேசிடவும் இல்லை ..  படித்து முடித்தவன் தன்னுடைய சுய முயற்சியாய் தொழில் தொடங்க நினைத்து பேங்க் லோனிற்காக முயற்சி எடுக்க  அதற்கு வீட்டினர்  அனுமதிக்காது போயினர்.. அவனுக்கு தேவைபட்ட பணத்தை அவர்களே தர அதை கடனாக மட்டுமே தான் வாங்குவேன் என்று கூறி வாங்கி கொண்டவன் இரு வருடங்களிலேயே மொத்த பணத்தையும் வட்டியோடு கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அதிர்ச்சி ஆக்கியவன் அங்கிருந்து கிளம்பியவன் சென்னையிலே செட்டிலாகி விட்டான்…

அவசியமற்று அதிகம் ஊருக்கு  வராதவனை  அவனுக்கு திருமண ஏற்பாடு செய்திருப்பதாக கூறி  அழைத்தனர்… முதலில்  திருமணம் எனக்கு இப்போது எதுவும் வேண்டாம் என்று மறுத்தவனின் சொல் அங்கே கேட்பதற்கு ஆளில்லை .. அவனை அழைத்து வர அவனது அப்பாவும் சித்தப்பாவும் சென்றவர்கள் மித்திரனிடம் போராடியே அவனை அழைத்து வந்திருந்தனர்…

எல்லாத்தையும் நினைத்து பார்த்து கொண்டிருந்த மித்திரனுக்கு ஏனோ நிஷா தன்னை திருமணம் செய்ய  மறுத்தது   அந்நேரத்தில் கோவத்தை தந்தாலும் தற்போது ஏனோ கோவம் வரவில்லை …

இப்போது இந்த காதலையாவது அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த மித்திரன் எதையோ முடிவெடுத்தவனாக ஆதவனுக்கு அழைத்தான்…

ஆதவன் அண்ணனது அழைப்பை பார்த்ததும் சிறிது பயத்துடனே எடுத்தான் ..

” ஆதவா .. இப்போ  நீயும் நிஷாவும் எங்கே இருக்கிங்க… “

” இன்னும் காஃபி ஷாப்ல தான்ணா இருக்கோம் .. ” என்று  தயக்கத்துடன்  கூறியவனை கண்டுகொள்ளாத  பாவனையில்  மித்திரன் ” ஓகே இன்னும் டென் மினிட்ஸ்ல அங்கே  வந்துருவேன் .. வீட்டுக்கு மூனுபேரும் சேந்து போகலாம் … ” என்று கூறிய மித்திரன் அழைப்பை துண்டித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் வேகமாக…

வெகுநேரமாக போனை காதிலிருந்து எடுக்காது உக்கார்ந்து இருந்த ஆதவனின் முகத்தை பார்த்த நிஷா ” என்னடா ஆச்சு ஏன் இப்படி முழிக்கிற மித்திரன் அத்தான் என்ன சொன்னாரு ..” என்று படபடப்புடன் கேட்க அதற்கு ஆதவனோ ” ம்ம் நம்ம ரெண்டு பேரையும்  வீட்டுக்கு கூப்டு போறேனு சொன்னாரு ..”

” ங்ஞே … ஆது விளையாடதடா நான் ஏற்கனவே செம டென்ஷன்ல இருக்கேன்.. “
” ஆமா ஆமா நீ மட்டும்  தான் டென்ஷன்ல இருக்க  நான் ரொம்ப ஜாலியா டான்ஸாடிட்டு இருக்கேன் பாரு .. அடியே என் அத்தை மக ரத்தினமே வீட்ல   என்ன நடந்தாலும்   என்னைய தான் கல்யாணம் பண்ணுவேனு தெளிவா சொல்லி என்னைய கல்யாணம் பண்ணி கண்கலங்காம வச்சு பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு .. வா போவோம்  ..  ” என்று நிஷாவின் கரத்தை ஆதவன் பிடிக்க தன்னை பிடித்த அவன் கரங்களில் பட்டென மறுகரம் கொண்டு அடித்தவள் அவனின்  கரத்தை முதுகு புறமாய் திருப்பி முதுகிலே அடித்தாள்..

” ஏன்டா எருமமாடு எம்புட்டு நேக்கா என்னைய கோர்த்துவிட்டு சார் எஸ்ஸாக  பாப்பிங்க கொல பண்ணிடுவேன் பாத்துக்க .. ” என்றவள் அவனை முறைத்து விட்டு முன்னோக்கி செல்ல செல்பவளை பார்த்த ஆதவனின் முகத்திலும்  அவர்களிருவரையும் அழைத்து போக வந்த மித்திரனின் முகத்திலும் மெலிதாய் புன்னகை தோன்றியது ..