மனம் திறவயோ மன்னவனே 2
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
விசாலாட்சி பாட்டி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் .. அவரின் மகிழ்வை கண்ட அவரின் கணவர் மகேந்திரன் தனது மனையாளிடம் “என்ன விசாலம் ரொம்ப சந்தோஷமா இருக்கா இப்போ… “
” இருக்காதா பின்ன இத்தனை வருஷம் நான் கேட்டு நீங்க பண்ணாததை என் பேரன் எனக்காக சம்மதம் சொல்லிட்டான்… அவனுக்கு அவன் அத்தை மேல இருக்க பாசம் கூட உங்களுக்கு பெத்த பொண்ணுமேல இல்லாம போச்சே… ” என்று ஆதங்கமாய் கூறியவரை பார்த்து புன்னகையுடன் மகேந்திரன் பேச ஆரம்பித்தார்..
” நான் இத்தனை வருஷமா சொல்றதை தான் இப்பவும் சொல்றேன் நமக்கு நம்ம பொண்ணு எப்டி முக்கியமோ அதே மாதிரி தானே நாயகிக்கும் பிரபாவுக்கும் இருக்கும் .. நம்ம பொண்ணு பண்ணிட்டு போன தப்புல பாதிக்கப்பட்டது அவுங்க தானே… உயிரா வளத்த அவுங்க தம்பிய பறிகொடுத்துட்டு நிக்கும் போது லட்சுமியோட எப்டி உறவாட முடியும்.. “
” இது நடந்து இருபத்துரெண்டு வருஷமாச்சேங்க.. அன்னைக்கு தினகரன் இறந்தது எப்டினே இன்னும் புரியாத புதிரா இருக்கு … அவன் மலைல இருந்து குதிச்சு இறந்ததா அன்னைக்கு சொன்னவங்கள நீங்க விசாரிக்காம விட்டுட்டு லட்சுமி மேல பழிய போட்டுட்டு இன்னும் அதே பழி உணர்வோட இருக்கிங்க … உங்களுக்கு உங்க தங்கச்சி புள்ளைங்க தானே எப்போதும் முக்கியம் நீங்க பெத்த பிள்ளைங்கள நினைச்சு என்னிக்கு வருத்தப்பட்டுருக்கிங்க … நான் வாங்கி வந்த வரம் அப்படி போல … பெத்த மகள நினைச்சு இந்த வீட்டுல அழக்கூட உரிமையில்லாம கிடந்தேன்… இப்போ அவள கூப்டு வரச்சொல்லி கேட்டா மட்டும் ஒத்துக்காவா போறிங்க … எம்பேரனுக்காவது தூக்கி வளத்தவ மேல கொஞ்சம் பாசம் இருக்க போயி வர சொல்றான்.. அவனுக்கு இருக்க பாசம் கூட உங்களுக்கு இல்லை போல .. உங்க மருமக நடுவீட்ல நிண்டுகிட்டு எங்கூட சண்டை போடுறத ரொம்ப சந்தோஷமா பாத்துட்டு இருக்கிங்க… “
” நான் எப்போ அப்டி பாத்தேன்… ” என்று மகேந்திரன் பதறினார்…
” சந்தோஷமா பாக்காம சோகமாவா பாத்திங்க… அவ அமபுட்டு பேச்சு பேசுறா ஒத்த வார்த்தை எ மக இந்த வீட்டுக்கு வருவானு நீங்க சொல்லிருந்தா பேசுவாளா … நீங்க எப்போதும் அவ பக்கம் தானு அவளுக்கு நல்லாவே தெரியுமே அதுனால தானே என்னைய மதிக்க மாட்டிங்கிறா … ” என்று விசாலாட்சி தன் மனவருத்தத்தை கொட்ட அதை பார்த்த மகேந்திரனுக்கு தங்கை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் பெத்தவர்கள் இல்லாத குறை தெரியக்கூடாது என்று நினைத்து செய்தது தன் மனைவி மக்களை தன்னிடம் இருந்து அவரே விலக்கி வைத்து கொண்டது என்றும் போல் இன்றும் நெஞ்சத்தில் ஊசியாய் குத்தியது… அதை அவரின் மனைவியடம் காட்டிகொள்ளாதவர் என்றும் போல் இன்றும் கோவமுகமூடி அணிந்து கொண்டார்…
” இப்ப என்ன உனக்கு இந்த வீட்ல மரியாதை குறைவா நடந்து போச்சு சும்மா நீயாவே எதையும் உளறாம போயி உன் மகளுக்கு போனை போட்டு குடும்பத்தோட கல்யாணத்துக்கு வரச்சொல்லு… “
என்றவர் தனது சம்மதத்தை இவ்வாறு தெரிவித்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினார்…
தனது கணவர் அவ்வாறு கூறிவிட்டு வெளியேறியதும் ” புள்ளைய பாக்கனும்னு இவருக்கு இருக்க ஆசை எனக்கு தெரியாது பாரு… ஏதோ போனா போகட்டும்ன்ற மாதிரி வரச்சொல்லுனு சொல்லிட்டு போறாரு … இருக்கட்டும் இருக்கட்டும் எம்புட்டு நாளைக்கு இந்த வீம்புனு நானும் பாக்குறேன்… ” என்றவர் தனது மகளுக்கு அழைத்தார்…
தனது தாயின் அழைப்பை பார்த்ததும் மகிழ்ச்சியோடு எடுத்த பவித்ரலட்சுமி ” ம்மா எப்டி இருக்க …வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா … கல்யாண வேலையெல்லாம் எந்தளவுக்கு இருக்கு… ” என்று தனது தாய் பதில் பேசுவதற்கு கூட வாய்ப்பளிக்காது பேசிக்கொண்டே இருந்தவர் சிறிது நேரம் கழித்தே உணர்ந்தார் தான் மட்டுமே உரையாடிக்கொண்டு இருப்பதை தனது தலையில் தானே கொட்டியவர் ” நீ கால் பண்ணதும் ஆர்வத்துல நான் பாட்டுக்கு பேசிட்டு போய்ட்டேன்மா … ” என்று சிறுகுழந்தை போல் மன்னிப்பை வேண்டியவரை எண்ணி அந்த தாய் மனம் மென்னகை பூத்தது…
” அதுனால என்ன இருக்கு லட்சுமி … இம்புட்டு பாசம் வச்சுருக்க உன்னை பக்கத்துல வச்சு பாத்துக்க முடியாதா பாவியாகிட்டேனே நான் தான்… “
” ஏம்மா நான் தானே பாவம் செஞ்சவ … உங்க எல்லாரையும் ஏமாத்திட்டு வந்தவ நான் தானேமா… “
” நீ உனக்கு பிடிச்சவன கட்டிகனும்னு ஆசைப்பட்ட இவுங்க விடல அதாலதானே இப்படி ஒரு முடிவ எடுத்த … விடுத்தா எனக்கு நீ சந்தோஷமா இருக்கில அதுவே போதும்… இவுங்க எல்லாரும் தான் தேவையில்லாம உன்மேல பழி போடுறாங்க.. அத நினைச்சு தான் மனசு சங்கடபடுது … “
” சரி விடுமா முடிஞ்சத பத்தி எத்தனை தடவ தான் பேசுறது … இப்பவும் சொல்றேன் அவுங்க சொல்றது உண்மையில்ல … தினகரன் மாமா முடிவுக்கு நான் காரணமில்ல… “
” இத மட்டும் தான் அப்ப இருந்து இப்பவரை சொல்லிட்டு இருக்கவ … என்னடி ஆச்சுனு கேட்டா வாய தொறக்க மாட்டிங்கிற … நீ எதாவது சொன்னாதானேடி அம்மா உனக்காக எதாவது பேச முடியும்… “
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
” அதை பத்தி மட்டும் கேக்காதமா … என்னால என்னைக்கும் சொல்ல முடியாது… “
” சரித்தா நீ சொல்ல வேணா… எம்பேரன் பேத்தி என்ற பண்றாங்க… “
” ரெண்டு பேரும் அவுங்க அப்பாவோட சேந்து ஷாப்பிங் போயிருக்காங்கமா… “
” சரி லட்சுமி… அவுங்க மூனுபேரும் வந்ததும் நீ கிளம்பி நம்ம வீட்டுக்கு வாங்க… ” தன் செவியை அடைந்த தாயின் சொற்கள் நிஜம் தானா என்னும் அதிர்ச்சியில் பேச்சு மறந்து நின்று விட்டார் லட்சுமி…
தனது மகளின் நிலையை புரிந்து கொண்ட அந்த தாயும் ” உன் காதுல விழுந்த சேதி நிசந்தான்த்தா … நீ உன் குடும்பத்தோட வந்து சேரு உன் மருமகன் கல்யாணத்துக்கு… ” என்றார்…
” அம்மா நான் அங்கே வந்தா எதாச்சும் பிரச்சினையாகிட போகுது… வேணாம்மா என்னால எந்த பிரச்சனையும் ஆகவேண்டாம்… “
” அதெல்லாம் ஒரு பிரச்சனையும் ஆவாது … உன்னை கல்யாணத்துக்கு கூப்ட சொன்னது உங்கப்பனும் மருமவனும் தான் அவுங்க ரெண்டு பேரோட வார்த்தையை இந்த வீட்டுல இருக்க யாரும் மீற மாட்டாங்க … இன்னும் எம்புட்டு நாளு தான் எங்கள பிரிஞ்சி இருக்க வேதனைய உள்ளுக்குள்ளயே வச்சு மருகிட்டு இருக்க போற … கவலப்படாம வா தாயி அம்மா இருக்கேன்ல … இனிமேலாவது உனக்காக அம்மா தைரியமா உன்பக்கம் இருப்பேன் … எனக்காக வா லட்சுமி… ” என்ற தாயின் ஏக்க குரலை கேட்டவருக்கு அப்போதே தாயிடம் சென்றுவிட வேண்டும் என்று தோன்ற ” நாளைக்கு நைட்குள்ள அங்கே கண்டிப்பா வந்துடுவோம்மா … ” என்று கூறிய லட்சுமி தாயின் அழைப்பை துண்டித்துவிட்டு தனது கணவருக்கு அழைத்தார்…
” என்னங்க உடனே பசங்கள கூப்டு வீட்டுக்கு வாங்க… “
” ஏம்மா இப்பதானே இங்கே வந்தோம் … அதுக்குள்ள கிளம்பி வர சொல்ற … இன்னும் எதுவுமே வாங்கல… “
” அதெல்லாம் எதுவும் வாங்கலைனாலும் பரவால
வாங்க மூனு பேரும் வீட்டுக்கு… ” என்ற தன் மனைவியின் குரல் வழக்கத்துக்கு மாறாக மிகவும் உற்சாகமாக இருப்பதை கண்டுகொண்ட வரதராஜன் ” என்ன பவி அத்தைட்ட பேசினியா … ” என்று கேட்டார்…
” ஆமாங்க .. உங்களுக்கு எப்டி தெரிஞ்சது.. ” என்று வியந்தபடி கேட்ட பவித்ரலட்சுமிக்கு ” உன்னை நானறிவேன் கண்ணம்மா … “என்று பதிலளித்தார் வரதராஜன்…
” கல்யாண வயசுல பொண்ண வச்சுகிட்டு இந்த டயலாக்கெல்லாம் இப்ப ரொம்ப அவசியமா … மொக்கை போடாம கிளம்பி வாங்க அம்மா நம்ம எல்லாரையும் ஊருக்கு வர சொல்லிருக்காங்க… “
” என்னம்மா சொல்ற … ” என்று அதிர்ச்சியில் பேச மறந்திருந்த வரதராஜனிடமிருந்து போனை வாங்கிய அவரது மகள் வெண்மதி ” என்னம்மா அப்பாக்கு ஷாக் கொடுத்த ப்ரீஸாகி நின்னுட்டு இருக்காரு … ” என கேட்டாள்…
” உன்னோட பாட்டி நம்மள ஊருக்கு வர சொல்லி கூப்டாங்கடா … அதை தான் சொன்னேன் அதுக்கா அந்த மனுஷன் அப்படி நிக்கிறாரு… “
” ஏம்மா இந்த நியூஸை கேட்டா எனக்கே ஆச்சரியமா இருக்கு… அப்போ அப்பாக்கு இருக்காதா… ஆனால் இதுல அதிசயம் என்னன்னா நீ இப்பவும் இம்புட்டு நார்மலா இருக்க … நீ தர வேண்டிய எமோஷன அப்பா தந்துட்டு இருக்காரு …. “
” நீ என்ன பொறுமையா வீட்ல வந்து கலாய்ச்சுக்கோ இப்ப நீயும் உன் தம்பியும் அப்பாவ வீட்டுக்கு கூப்டு வந்து சேருங்க … நான் போனை வைக்கிறேன்… ” என்ற பவித்ராவின் சொல்லுக்கு சரி என்ற வெண்மதியும் தன் தம்பி தந்தையுடன் வீட்டுக்கு கிளம்பி வந்தவர்கள் கண்டது பம்பரமாக சுழன்று அறைக்கு அறை மாறி ஓடிக்கொண்டிருந்த அவ்வீட்டின் குடும்ப தலைவியை தான்…
தாங்கள் வந்தது கூட உணராது ஓடிக்கொண்டிருந்த தனது தாயின் முன் சென்று நின்ற வெண்மதியை கண்ட லட்சுமியும் தனது ஓட்டத்தை நிறுத்தியவர் கேள்வியாய் தன் நின்று கொண்டிருந்த மகளை நோக்கினார்…
” அடங்கப்பா வாயை தொறந்து பேசமாட்டியாமா… அம்புட்டு பிஸி மேடம்.. “
” ஆமாண்டி பிஸி தான் நகரு நீ முதல்ல உங்க டிரெஸ் எல்லாத்தையும் பேக் பண்ணி வச்சுட்டேன் … இப்ப நீங்க மூனுபேரும் ப்ரெஸாகிட்டு சாப்பிட வாங்க .. சாப்டு முடிச்சதும் பாட்டி வீட்டுக்கு கிளம்பலாம் … ” என்று தன்போக்கில் கூறிக்கொண்டிருந்த லட்சுமியை கண்ட மதி தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டாள்…
மதி திடீரென அமரவும் ஒன்றும் புரியாது நின்றிருந்த லட்சுமி அவளிடம் ” ஏன்டி நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் .. நீ இப்படி உக்காந்துட்டு இருக்க.. எழுந்து கிளம்பு போ ..உங்களுக்கு தனியா சொல்லனுமா போய் ரெண்டு பேரும் ரெடியாகிட்டு வாங்க… ” என்று தனது மகனையும் கணவரையும் விரட்டியவரை கண்டு அங்கிருந்த மற்ற மூவரும் பாவமாய் நின்றிருந்தனர்..
” என்ன பெத்த தெய்வமே கொஞ்ச நேரம் அமைதியா இரும்மா தாயி தாங்க முடில நீ பண்ற அலும்பு … ” என்ற மதியை முறைத்து பார்த்தார் லட்சுமி…
” என்னா என்னா முறைப்பு நீ பாட்டுக்கு உங்கம்மா போன் பண்ணி கிளம்பி வாங்கனு சொன்னதும் எதையும் யோசிக்காம இப்படி அரக்கபறக்க கிளம்புறியே மம்மி என்னோட சீடுமூஞ்சி சின்ராசு பாஸ்ட்ட யார் லீவு கேக்குறது அவ்வ்வ் … அந்த மனுஷன் சும்மா வச்சு செய்வாரு .. இதுல அவரு இல்லாத நேரத்தில லீவ் போட்டா அவரோட கோப பார்வைல சிக்கி நான் சின்னா பின்னமாகனும் அதுதானே உன்னோட ப்ளான்மா… “
” சொப்பா இவளுக்கு வேற வேலையே இல்லை… எப்பப்பாரு அந்த தம்பிய குற சொல்றதிலேயே இருக்கா .. சும்மா வெட்டியா கதையளக்காம கிளம்பு உன் ஆபிஸ்க்கு ஆல்ரெடி நான் மெயில் பண்ணிட்டேன்… உனக்கு லீவு கிடைச்சாச்சு … உன் தம்பி ஆல்ரெடி எக்ஸாம் முடிச்சுட்டு லீவுல தான் இருக்கான் .. சோ அவனுக்கு ப்ராப்ளம் இல்லை உங்கப்பாக்கும் லீவு சொல்லியாச்சு… என்ன இப்ப ஓகேவா .. கிளம்புங்க மூனுபேரும்… “
” பவிமா இவுங்க ரெண்டு பேருக்கும் லீவு கேட்ட ஓகே ஆனால் எனக்கு எதுக்குடா லீவு நான் தானேடா அங்கே பாஸ்… “
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
” பாஸா இருந்தா உங்களுக்கு வேலை இருக்காதா என்ன.. அதான் உங்க பிஏட்ட கால் பண்ணி இன்னும் ஒன்வீக் நீங்க ரொம்ப பிஸி அதுனால இருக்க செட்யூல் எல்லாம் போஸ்ட்பார்ன் பண்ண சொல்லிட்டேன்… “
” ம்மா எனக்கொரு டவுட்டு … ” என்று கேட்ட தன் மகன் ஹர்ஷனை பார்த்து ” அடுத்து நீயாடா .. சொப்பா முடில உங்களோட … கேளு உன் டவுட்டை … ” என்றார் லட்சுமி …
” என்ன சொல்லி அக்காவுக்கு லீவு அப்ளே பண்ண.. எப்போதுமே மேடம் லீவே போடமாட்டாங்களே .. எங்க பாஸ் ரொம்ப ஸ்ட்ரிட்டுனு பந்தா பண்ணுவாளே அக்கா … அதான் தெரிஞ்சுக்காளேமேனு கேட்டேன் … ” என்றவனை வெட்டவா குத்தவா என்று முறைத்துக் கொண்டிருந்தாள் வெண்மதி…
” அது பெருசா ஒன்னுமில்லடா உங்கக்கா கீழே விழுந்து காலை உடைச்சுக்கிட்டானு டாக்டர் சர்டிபிகேட்டோட மெயில் பண்ணிட்டேன் .. ” என்ற தன் தாயை பார்த்த மதி ” தரமா எனக்கு ஆப்பு ரெடி பண்ணிட்டியேமா .. ” என்று பேச ஆரம்பிக்க அவளின் தாயோ ” மதி நீ என்ன டயலாக் பேசுறதா இருந்தாலும் என்னால கேக்க முடியாது அதுனால வெட்டியா அரட்டை அடிக்காம போய் ரெடியாகு … ” என்ற தன் தாயின் குரலுக்கு அடிபணிந்த மதி தயாராக செல்ல ஹர்ஷனும் தனதறையை நோக்கி சென்றான்…
அவர்களிருவரும் சென்றதும் தனது மனையாளை பார்த்த வரதராஜன் ” பவிமா இப்போ நாம அங்கே போய்த்தான் ஆகனுமா … அதுவும் மதியை வேற கூப்டு போகனும்னு சொல்ற … ” என்றவரின் குரல் ஏதோ கலக்கத்தில் இருக்க அதை உணர்ந்த அவரின் மனையாளோ ” எத்தனை நாளைக்கு தான் நாம இப்டியே இருக்கதுங்க சொந்தங்களோட வளருர பாக்கியம் தான் நம்ம பசங்களுக்கு இல்லை .. இப்போதவது அது கிடைக்கட்டுமேங்க .. “
” நீ சொல்றதும் சரிதான்மா ஆனாலும் ஏதோ நெருடலா இருக்கு .. ” என்றவரை லட்சுமி முறைக்க அதில் அசடுவழிந்த ராஜன் ” எனக்கு ஒன்னுமே தோணலமா இதோ போய் ரெடியாகிட்டு வந்துடுறேன்.. ” என்று நிக்காது சென்றவரை பார்த்து சிரித்தார் லட்சுமி…
ராஜனுக்கு தோன்றியது சரிதான் என்பதை போலத்தான் நிகழ்ந்து கொண்டிருந்தது மித்திரனின் இல்லத்தில்…