மனம் கொய்த மாயவனே – 9
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 9
மறுநாள் காலை குளித்து முடித்துக் குடிசைக்குள் சென்று கதவை அடைத்து விட்டு உடையை மாற்ற திரும்பிய வெற்றி, “ஏய்! நீ எங்கே இங்கே?” என்று அதிர்ச்சியுடன் கத்தினான்.
“உங்கிட்ட கொஞ்சம் பேசணும் வெற்றி…” என்று சொல்லிய படி வீட்டிற்குள் நின்றிருந்தாள் அல்லிராணி.
அவள் இப்படித் தன் குடிசைக்குள் வந்து நிற்பாள் என்று அவன் சிறிதும் நினைத்துப் பார்த்தான் இல்லை.
‘என்னைத் தேடி வேலை இடத்திற்கு வந்தது பற்றாது என்று இப்போது வீட்டிற்குள்ளேயே வந்து விட்டாளா?’ என்று தான் அவனின் எண்ணம் போனது.
அவளின் எதிர்பாராத வரவில் அதிர்ந்து நின்றிருந்தவன் சட்டென்று தலையை உலுக்கித் தெளிந்து, “இதென்ன இப்படி வந்து மறைஞ்சு நிற்கிற? முதலில் வெளியே போ! யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று விரட்டினான்.
“என்ன நினைப்பாங்க?” என்று நிதானமாகத் திருப்பிக் கேட்டாள்.
‘ஏன் உனக்கே தெரியாது?’ என்பது போல் அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.
“அன்னைக்கும், நேத்து நைட்டும் உங்க வீட்டுக்கு வந்த பொண்ணுங்களை இங்கே பார்த்து நான் என்ன நினைச்சேனோ, அதே தான் மத்தவங்க என்னைப் பார்த்து நினைப்பாங்க…” என்றாள்.
‘என்ன, நேற்றும் பார்த்து விட்டாளா?’ என்ற யோசனையுடன் அவளைப் பார்த்தாலும் வெற்றி அதற்காக அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் அவள் இப்போது வீட்டிற்குள் வந்தது அவனுக்குக் கோபத்தை மூட்டியிருந்தது.
அதனால் “முதலில் இங்கிருந்து கிளம்புடி…” என்று கடுப்பாகக் கத்தினான்.
தான் சொல்லிக் காட்டியதால் தான் கத்துகிறான் என்று நினைத்தவள், “உண்மையைச் சொன்னால் கசக்கத்தான் செய்யும் வெற்றி…” என்று அவனின் கத்தலைப் பொருட்படுத்தாமல் நிதானமாகச் சொன்னாள்.
அவளின் பேச்சில் வெற்றியின் முகம் கடுகடுவென்றானது.
“எனக்குக் கசக்குதோ இல்ல இனிக்கிதோ… அதை நானே பார்த்துக்கிறேன். நீ இப்ப கிளம்பு…” என்று விரட்டினான்.
“நான் கேட்க வந்ததைக் கேட்காமல் இங்கிருந்து கிளம்புறதா இல்ல வெற்றி…” என்றவள் முகம் கசங்கியது.
“ஏன் வெற்றி, ஏன் இப்படிப் பண்ற? உன் மேல நான் எவ்வளவு மரியாதை வச்சுருக்கேன் தெரியுமா? ஆனா அந்த மரியாதையில் இருந்து ஒரு படி கீழே இறங்கிட்டீயே…” என்று தொண்டை அடைக்கக் கேட்டாள் அல்லிராணி.
“என் மேல மரியாதை வைக்கச் சொல்லி நான் ஒன்னும் உன்கிட்ட வந்து சொல்லலையே…” என்றான் அலட்சியமாக.
“ஏன்யா, ஏன் இப்படிப் பேசுற? நான் உன்னை…” என்று அவள் மேலும் ஏதோ சொல்ல வர,
“கொஞ்சம் நிறுத்துறயா! உன்னைப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கிளம்பு…” என்றான் கண்டிப்புடன்.
“கிளம்பாம இங்கேயே இருந்து உன் கூடக் குடும்பம் நடத்தப் போறேன்னா சொன்னேன். சும்மா போ… போனு துரத்திக்கிட்டு…” என்று கடுப்படித்தாள்.
“ச்சை… பேச்சைப் பாரு… பேச்சை…”
“என் பேச்சே உனக்குச் சகிக்க முடியலையா? அப்போ நீ செய்றது மட்டும் எப்படி உன்னால் சகிக்க முடியுது? பொண்ணுங்க கூட அப்படிப் பழகாதே வெற்றி… ப்ளீஸ்…” என்று கெஞ்சலாகச் சொன்னாள்.
அந்தப் பெண்களைப் பற்றிப் பேசும் போது அவளின் முகம் கசங்கி அவளின் வருத்தத்தைப் பிரதிபலித்தது.
அதைப் பார்த்தும் அவளை அசட்டையாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
“நான் இப்படி வந்து சொல்றது உனக்குப் பிடிக்காது தான். ஆனா நீ எப்படியோ போன்னு என்னால இருக்க முடியாது வெற்றி. இனி இப்படி…” என்று மேலும் அவள் ஏதோ சொல்ல வர,
“போதும் நிறுத்து! ஏதாவது அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடாதே! நான் எப்படி இருக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும். நீ இல்லை.
என்னை ஏன்னு கேள்வி கேட்கும் உரிமையும் உனக்கு இல்லை. முதலில் இப்படி அடுத்த வீட்டு ஆம்பளை மட்டும் இருக்குற வீட்டுக்கு நீ வர்றதே தப்பு. இடத்தைக் காலி பண்ணு…” என்று தயவு தாட்சண்யமின்றிச் சொன்னவன் அவள் வெளியே செல்லக் கதவைத் திறக்கப் போனான்.
அவளோ அவனைத் திறக்கவிடாமல் கதவின் அருகில் வந்து மறைத்த படி நின்றாள்.
அவள் அப்படி நின்றதில் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி குறைய, அவளை விட்டு வேகமாக விலகி நின்றவன் “உன்னைப் போனு சொன்னேன்…” வார்த்தையில் அனல் பறக்க கத்தினான்.
“போறேன்யா போறேன். ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட பேச வேண்டியதைப் பேசிடுறேன்…” என்றவள் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்.
“நீ சொன்ன மாதிரி எனக்கு உரிமை இல்லை தான் வெற்றி ஒத்துக்கிறேன். ஆனா அந்த உரிமையை நான் உன்கிட்ட இருந்து எடுத்துக்க விரும்புறேன்னு சொன்னா நீ என்ன செய்வ வெற்றி?” என்று அழுத்தமாகக் கேட்டவளை அவன் அசந்து தான் பார்த்தான்.
ஆனால் அது ஒரு நொடி தான். அடுத்த நொடி வெற்றியின் முகம் செந்தணலாக மாறியது.
“யாருக்கு எந்த உரிமையைக் கொடுக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். என்கிட்டே இருந்து எந்த உரிமையையும் அவ்வளவு சீக்கிரம் யாராலயும் எடுத்துக்க முடியாது…” என்ற வெற்றியின் வார்த்தைகளில் அல்லியின் முகம் கசங்கிப் போனது.
அதைக் கண்ணுற்றாலும், அவளை உக்கிரமாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனின் உக்கிரப் பார்வையை அலட்சியப்படுத்தியவள், முன்பை விடத் தீர்க்கமாகப் பார்த்து, “பார்ப்போம்யா பார்ப்போம். உரிமையை நீ கொடுக்கிறியா? இல்லை நானா எடுத்துக்கிறனானு பார்ப்போம்…” என்றாள்.
அவளின் தைரியத்தைப் பார்த்துப் புருவங்களை விரித்துச் சுருக்கினான்.
“சும்மா போகும் போதும், வரும் போதும் சைட் அடிச்சுட்டு இருந்தவ, இப்போ என்ன இப்படி எல்லாம் பேசுற? சைட் அடிக்கிறவனை எல்லாம் இப்படித்தான் உரிமையா நினைப்பியா என்ன?” என்று கடுமையாகவே கேட்டான்.
அவனின் அந்தக் கடுமையான பேச்சு அவளை வாயடைத்துப் போக இருந்தது.
‘என்ன வார்த்தை கேட்டு விட்டான்?’ என்று துடித்துப் போய் அவனைப் பார்த்தாள்.
அவளின் கண்கள் சட்டென்று கண்ணீரில் மூழ்க ஆரம்பித்தன.
“என்னை அப்படிப்பட்டவளா நீ நினைக்கிறாயா வெற்றி? இதுவரை நான் எத்தனை ஆம்பளங்களை உன்னைப் பார்த்தது மாதிரி ஆர்வமா பார்த்து இருக்கேன்? அப்படி நான் பார்த்ததை நீ பார்த்திருந்தால் கணக்கு சொல்லேன். நானும் தெரிஞ்சுக்கிறேன்…” என்று வலி நிறைந்த குரலில் கேட்டாள்.
அவளின் வலியைப் பிரதிபலித்த பேச்சையும், கலங்கி நின்ற கண்களையும் சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி.
அவன் அப்படி உணர்ச்சிகள் அற்றுப் பார்த்தது இன்னும் தான் அவளை வலிக்க வைத்துக் கொண்டிருந்தது.
“நீ இப்படி மட்டமா நினைச்சுப் பேசும் போது கூட, என் மனசு ஏனோ உன்னைத்தான் சுத்தணும்னு எடுத்துச் சொல்லிட்டே இருக்கு வெற்றி. அவன் அப்படிக் கேட்கிறானே உனக்குச் சூடு சொரணையே இல்லையானு ஒரு மனசு ஒரு ஓரமாக இருந்து முணுமுணுக்குது.
ஆனாலும் அதை எல்லாம் தள்ளி வச்சுட்டு அவனுக்கு எடுத்துச் சொல்லு. அவன் தான் உனக்கு எல்லாம்னு எனக்குத் தோணிகிட்டே இருக்கு வெற்றி. அதை என்னால் மீற முடியலை…” என்றாள் கரகரப்பான குரலில்.
வெற்றியிடம் எந்த மாற்றமும் இல்லை.
‘அழுகிறாயா, அழுது கொள்! பேசுகிறாயா, பேசிக் கொள்!’ என்ற பாவனையில் உணர்ச்சிகளற்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இதோ… நீ என்னை இப்படிக் கருங்கல்லு மாதிரி பார்க்கும் போதும் உன்கிட்ட என் மனசை சொல்லியே ஆகணும்னு என் மனசு சொல்லுது. உன்னைப் பார்த்த மாதிரி என் மனசறிஞ்சு வேற எந்த ஆம்பளையையும் நான் பார்த்தது இல்லை வெற்றி.
உன்னை மட்டும் நான் ஏன் அப்படிப் பார்த்தேன்னு எனக்கே தெரியாது. உன்னை முதல் முதலா பார்த்த நாளில் இருந்து ஒரு உந்துதல் எனக்குள்ள வந்திருச்சு. உன்னை அப்படிப் பார்க்கக் கூடாதுனு என் கண்ணை நான் கட்டுப்படுத்திக்க நினைச்சாலும் என்னால முடியலை.
உன்னை வேத்து மனுஷனா என்னால நினைக்க முடியலை. அதான் உரிமைப்பட்டவள் போலப் பார்த்திருக்கேன். இனிமேலும் பார்ப்பேன். என் ஆயுசு இருக்குற வரை பார்ப்பேன்.
ஆனா ஒன்னு மட்டும் எனக்கு உறுதியா தெரியும். இனி என் ஜென்மத்துக்கும் உன்னைத் தவிர வேற ஆம்பளையை உரிமையா பார்க்க மாட்டேன். நீ என்னை வேண்டாம்னு வெறுத்து ஒதுக்கினால் கூட…” என்று மடை திறந்த வெள்ளமாகத் தன் மனதைக் கொட்டி விட்டு அவனின் கண்களை ஊடுருவி பார்த்தாள்.
அவனின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை தான். ஆனால் அவனின் கண்கள்? அதில் ஏதோ வித்தியாசத்தைக் கண்டாள்.
ஆனால் அது என்ன விதமான வித்தியாசம் என்று அவளால் இனம் காண இயலவில்லை.
“நான் உன்னை இப்படி உரிமையா நினைக்கிறது போல நீயும் என்னை உரிமையா நினைக்கணும்னு எனக்கு நிறைய ஆசை இருக்கு.
நீ என்னோட வெற்றி! நீ என்னை மட்டும் தான் பார்க்கணும், நேசிக்கணும், ஸ்பரிசிக்கணும்! இப்படி நிறைய உன்கிட்ட நான் எதிர்பார்க்கிறேன்.
ஆனா உன் பேச்சும், செய்கையும் என்னைத் தள்ளி நிறுத்த முயற்சி பண்ணுது. ஆனா என்னால அது முடியலையே… நான் என்ன செய்யட்டும்?” என்று அவனிடமே கேட்டாள்.
“ஒன்னும் செய்ய வேண்டாம். முதலில் இடத்தைக் காலி பண்ணு…” என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி வாசலைக் கை காட்டினான்.
இவ்வளவு சொல்லியும் அவன் தன் மனதைப் புரிந்து கொள்ளவில்லையே? என்று வலியுடன் அவனைப் பார்த்தாள்.
தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.
“போய்டுறேன்…” என்று சொன்னவள் குரல் கரகரத்தது.
போகிறேன் என்றவள் அதற்கு மாறாக இன்னும் நன்றாகக் கதவில் சாய்ந்து நின்றாள். அப்போது தான் குளித்து வந்ததால் இன்னும் ஈரம் படிந்திருந்த அவனின் முகத்தையும், துவாலை மறைத்தும் மறைக்காமலும் இருந்த அவனின் மார்பையும் நிதானமாகப் பார்த்தாள்.
பின் மெதுவாக வெற்றியின் அருகில் வந்தவள் நீர் துளிகளைச் சுமந்திருந்த அவனின் மார்பில் மெல்ல தன் இரு கைகளையும் அழுத்தி ஊன்றி அவனின் உயரத்திற்குத் தன் கால்களை உயர்த்தியவள், அவனின் உதடுகளில் அழுத்தமாகத் தன் இதழ்களைப் பதித்திருந்தாள்.
அவள் தன்னருகில் வருவதை உணர்ந்து “ஏய்… என்ன?” என்று அவன் கேட்டு முடிக்கும் முன் இதழோடு இதழ் கலந்திருந்தாள் அல்லிராணி.
அவன் அதிர்ந்து அவளை விலக்கும் முன் தானே விலகியும் இருந்தாள்.
“என் மனசுக்குப் பிடிச்ச ஆம்பளைக்குக் கொடுக்குற முதல் முத்தம்! என் மனசில் இருக்குற ஒரே ஆம்பிளை நீ தான்னு உறுதிப்படுத்துற முத்தம்!” என்று காதலுடன் வெற்றியின் முகத்தைப் பார்த்துச் சொன்னவள் நிதானமாகக் கதவைத் திறந்து வெளியே சென்றாள்.
அல்லிராணியிடம் இப்படி ஒரு அதிரடி செயலை எதிர்பாராத வெற்றி, அவள் வெளியே சென்ற பிறகும் அசையாமல் அதிர்ந்து போய் நின்றிருந்தான்.
“டேய் வெற்றி, என்னடா அந்தப் புள்ள உன் வீட்டில் இருந்து வெளியே போகுது? டேய்… நீ என்னடா இப்படிச் சிலை மாதிரி நிக்கிற?” என்று முருகன் வந்து உலுக்கிய போது தான் அதிர்வில் இருந்து வெளியே வந்தான் வெற்றி.
“ஹான்… என்னடா?” என்று வெற்றி தலையை உலுக்கிக் கொண்டு கேட்டான்.
“என்ன… என்னடா? என்னன்னு நீ தான் சொல்லணும். அல்லி புள்ள ஏன் உன் வீட்டுக்கு வந்துட்டுப் போகுது? நீ ஏன் இப்படிப் பிரமை பிடிச்ச மாதிரி நின்னுட்டு இருந்த?” என்று கேட்ட முருகன் அவனைச் சந்தேகமாகப் பார்த்தான்.
“அவளா? அவளுக்கு என்ன வேலை? அவளைப் பத்தின பேச்சை விடு!” என்று அவனின் சந்தேகப் பார்வையைக் கவனிக்காதது போல் அசட்டையாகச் சொன்னான்.
பின் அங்கிருந்து நகர்ந்து பெட்டியைத் திறந்து உடையை எடுத்து மாட்ட ஆரம்பித்தான்.
“ஏதோ சம்திங் சம்திங் முருகா… அதான் வெற்றி நம்மகிட்ட இருந்து மறைக்கிறான்…” என்று கண்ணைச் சிமிட்டிக் கேலி செய்தான் காளி.
“சம்திங்கும் இல்லை… சாம்பாரும் இல்லை. ஏதாவது உளறாம பொழப்பைப் பார்க்கக் கிளம்புங்கடா…” என்று கோபமாக அதட்டினான் வெற்றி.
“நம்ப முடியலையே…” என்று காளி ராகமாக இழுக்க,
“டேய்… நீ பேரில் மட்டும் தான் இப்போ காளியா இருக்க. இப்படியே பேசிட்டு இருந்தனு வை, நிஜமாகவே உன்னை நான் காலி(ளி) பண்ணிடுவேன்…” என்று கடுப்புடன் மிரட்டினான் வெற்றி.
“உனக்கு எதுக்குடா இப்போ இவ்வளவு கோபம் வருது? நீ கோபப்பட, படத் தான் எங்களுக்குச் சந்தேகம் அதிகமாகுது…” என்ற முருகனின் சந்தேகப் பார்வை அதிகரித்தது.
“வேண்டாம் முருகா! நீயும் அவன் கூடச் சேர்ந்து ஏதாவது பேசிட்டு இருக்காதே. நம்ம பொழப்பே நிலையில்லாம ஆடிட்டு இருக்கு. இதில் தேவையில்லாம அந்தப் புள்ளயை என்னோட இணைச்சுப் பேசாதீங்க…” என்று அதட்டினான் வெற்றி.
“சரி, விடு! நம்ம பொழப்பைப் பத்தி மட்டுமே பேசுவோம். இன்னைக்கு ஹார்பர்ல சரக்கு வருது. ஞாபகம் இருக்குல்ல?” என்று கேட்டான் முருகன்.
“ம்ம், இருக்கு!” என்றான் வெற்றி.
“இன்னைக்கு யார் யார் ஹார்பர் போகணும் வெற்றி?” என்று கேட்டான் காளி.
“நீயும், முருகனும் தான். உங்க கூட வழக்கம் போலக் கிரியும் தானே வருவான். அது போலத்தான்…” என்றான் வெற்றி.
“நீ?” என்று முருகன் கேட்க,
“வழக்கம் போல எங்கே இருக்கணுமோ அங்கே இருப்பேன்…” என்றான்.
“எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது. கவனமா சரக்கை எடுத்துட்டு வாங்க. அதோட நான் சொன்ன மேட்டரும் முக்கியம்! முருகா, நீ அதில் கவனமா இரு!” என்றவன் பார்வை முருகனுக்கு ஏதோ சேதி சொன்னது.
முருகனும் புரிந்து கொண்ட பாவனையைத் தன் கண்களால் வெளிப்படுத்தினான்.
மேலும் சிறிது நேரம் மூவரும் ஏதோ பேசிக் கொண்டனர்.
பேசி முடித்து விட்டு “சரி போகலாம்…” என்றான் வெற்றி.
வழக்கம் போலக் கையில் துணி மூட்டையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.
அப்போது தானும் வேலைக்குச் செல்ல வெளியே வந்தாள் அல்லிராணி.
அவளின் கண்கள் ஆசையுடன் வெற்றியைத் தழுவ ஆரம்பித்தன.
‘நீ என்னதான் என்னை விரட்டினாலும் அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுவிட மாட்டேன்’ என்று அறிவிப்பது போல் தான் இருந்தது அவளின் பார்வை.
“இவ ஒருத்தி எப்ப பார்த்தாலும் ஆளை முழுங்கப் போறது போலப் பார்த்து வைப்பாள். இங்கே மனுஷனுக்கு எந்த நேரம் சாவு வரும்னு தெரியலை. சாவை நோக்கி ஓடிட்டு இருக்குற என் மேல தான் இவளுக்கு ஆசை வந்து தொலையணுமா?” என்று எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டான்.
அவள் அவனைக் காதலுடன் பார்க்க, அவன் அவளைக் கனலுடன் பார்த்தான்.
அவனின் கனல் பார்வை கூட அவளுக்குக் காதல் பார்வையாகத்தான் தெரிந்தது போலும்.
‘நீ என்னை எப்படிப் பார்த்தாலும் நான் உன்னைப் பார்வையால் முழுங்கத்தான் செய்வேன்’ என்பது போல் அவனை ஆசை தீரப் பார்த்தாள்.
காலையில் அவள் ஆசை தீரப் பருகிய முகம், மாலையளவில் ரத்தம் வடிய இருக்கப் போவதை அறியாமல் வேலைக்குக் கிளம்பிச் சென்றாள் அல்லிராணி.