மனம் கொய்த மாயவனே – 8

அத்தியாயம் – 8

“மாமா… மாமா…” என்று காலையிலேயே கத்திக் கொண்டிருந்தாள் கிருதிலயா.

“இந்தக் கிருதி பொண்ணு அவ மாமாவை ஏலம் போட ஆரம்பிச்சுருச்சுங்கமா. நேத்து முழுசும் மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டே திரிஞ்சது. ஆனா இன்னைக்கு ராசி ஆகிருச்சு…” சிரித்துக் கொண்டே சொன்ன வேலையாள் சுப்புவைப் பார்த்து லேசாகப் புன்னகையைச் சிந்தி விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தார் பவானி.

“பாப்பா படிப்பை முடிச்சதும் பேசாம இரண்டு பேருக்கும் கால்கட்டுப் போட்டுருங்கமா. ஜோடி பொருத்தம் நல்லா இருக்கும். என்ன தான் சண்டை போட்டுக்கிட்டாலும், கொஞ்ச நேரம் கூட அவங்களால பேசாம இருக்க முடியலை…” என்று சுப்பு மேலும் சொல்ல,

“பார்ப்போம்… பார்ப்போம்… நீ இப்போ வேலையைப் பாரு சுப்பு…” என்று அதற்கு மேல் வேலையாளை வீட்டு விஷயம் பேச விடாமல் அதட்டி அடக்கினார் பவானி.

“அத்தை… அத்தை…” என்று இப்போது பவானியை ஏலம் போட்டுக் கொண்டே கீழே இறங்கி வந்தாள் கிருதிலயா.

“என்ன கிருதி?” என்று பவானி விசாரிக்க,

“மாமா எங்கே?” என்று கேட்டாள்.

“என் பிள்ளையா?” என்று திருப்பிக் கேட்டப் பவானியின் உதட்டோரம் கேலி சிரிப்பில் துடித்துக் கொண்டிருந்தது.

நேற்று முழுவதும் “உங்க பிள்ளை அட்வைஸ் பண்ணினார். உங்க பிள்ளை இப்படிச் சொன்னார், அப்படிப் சொன்னார்…” என்று பவானியிடம் புகார் வாசித்துக் கொண்டே இருந்தாள்.

அதை அவளுக்கு ஞாபகப்படுத்தும் விதமாக ‘அவன் என் பிள்ளை’ என்றார்.

“இல்ல என் மாமாவைக் கேட்டேன்…” என்று நாக்கைத் துருத்தி அழகு காட்டினாள் கிருதிலயா.

“நேத்து மட்டும் என் பிள்ளையா இருந்தான்?” என்று போலியாக வியந்தார் பவானி.

“அட்வைஸ் செய்தால் உங்க பிள்ளை தான். செய்யாத போது என் மாமா…” என்றாள் அலட்சியமாக.

“சரிதான்!”

“சரி, சரி… பேசிப் பேசி நேரத்தை வீணாக்காதீங்க அத்தை. மாமா எங்கே ரூமில் காணோம்?”

“காலையிலேயே ஏதோ வேலை இருக்குன்னு வெளியே போனான். இன்னும் வரலை…” என்றார் பவானி.

“ஓ!” என்றாள் சோகமாக.

“ஏன்? எதுக்கு அவனைத் தேடுற?”

“இன்னைக்குக் காலேஜுக்கு என்னை ட்ராப் பண்ணச் சொல்லுவோம்னு நினைச்சேன் அத்தை…”

“உன் ஸ்கூட்டி என்னாச்சுக் கிருதி?”

“அதை இன்னைக்குச் சர்வீஸ் விடணும் அத்தை…”

“அப்போ போகும் வழியில் சர்வீஸ் விட்டுட்டு அப்படியே பஸ் பிடிச்சுக் காலேஜ் போய்டு. அதுக்கு எதுக்குச் செழியன்?” என்று கேட்டார்.

“பஸ்லயா? ம்ப்ச்… போங்க அத்தை. எனக்குக் கூட்டத்தில் இடிபட்டுப் போகப் பிடிக்கலை. மாமா வண்டியில் போனா அப்படியே குதிரையில் போற மாதிரி ஜம்முன்னு இருக்கும்…” என்றாள்.

“அந்தக் குதிரையில் தான் அவன் வெளியில் போயிருக்கான். எப்போ வருவானோ தெரியாது. நீ காலேஜ் கிளம்பு. பஸ் வேண்டாம்னா ஆட்டோ பிடிச்சுக்கோ…” என்றார் பவானி.

“பஸ்ஸுக்கு ஆட்டோ ஓகே…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“ஆட்டோவில் எங்க போற?” என்று கேட்டுக் கொண்டே அங்கே வந்தான் ஆனந்த்.

“வாங்க மிஸ்டர் ஆனந்தமானவனே…” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றாள் கிருதிலயா.

“ஏய்! அப்படிக் கூப்பிடாதே கிருதி…” என்று உடனே கண்டித்தான் ஆனந்த்.

“ஏன் ரத்னா அக்கா மட்டும் தான் அப்படிக் கூப்பிடணும்னு ரூல்ஸ் இருக்கா? நானும் அப்படித்தான் கூப்பிடுவேன்…” என்று வேண்டும் என்றே பிடிவாதமாகச் சொன்னாள்.

“அவள் ஒருத்திக் கூப்பிடுவதையே நாங்க தடுக்க முடியாம, போனால் போகட்டும் என்று விட்டுட்டு இருக்கோம். இதில் நீ வேற ஆரம்பிக்காதே தாயே! உனக்குப் புண்ணியமா போகுது…” என்று கையை உயர்த்திக் கும்பிடுப் போட்டான்.

“பாவம், ரொம்பக் கெஞ்சுறீங்க. அதனால் போனால் போகட்டும்னு விடுறேன் மகனே…” என்றாள் ஆசீர்வதிப்பது போல்.

“அடிப் போடி அங்கிட்டு…” என்று அவளை விரட்டிய பவானி, “என்ன ஆனந்த் அவளைப் போய்க் கும்பிடுப் போட்டுட்டு இருக்க?” என்று அவனைக் கடிந்து கொண்டார்.

“சும்மா விளையாட்டுக்குத் தான்மா…” என்றான் ஆனந்த்.

“என்னைச் செழியன் வரச் சொன்னான். இன்னும் அவன் வீட்டுக்கு வரலையா?” என்று விசாரித்தான்.

“இன்னும் வரலை ஆனந்த். சாப்பிட வந்துடுவேன்னு சொன்னான். வந்துடுவான், நீ உட்கார். சாப்பிட்டியா?” என்று கேட்டார்.

“சாப்பிட்டுத் தான்மா வந்தேன்…”

“ஹேய், அப்போ வாங்க. என்னை ட்ராப் பண்ணுங்க மிஸ்டர் ஆனந்த்…” என்று அவனை உட்கார விடாமல் எழுப்பினாள் கிருதிலயா.

“என்ன கிருதி இது? அவன் இப்போ தான் வந்தான். அதுவும் செழியனைப் பார்க்க வந்திருக்கான். அவனை எதுக்கு இப்போ ட்ராப் பண்ணக் கூப்பிடுற? நீ ஆட்டோவில் போ…” என்றார் பவானி.

“இருக்கட்டும்மா. நானே ட்ராப் பண்ணிடுறேன். செழியன் வந்து கிளம்பிச் சாப்பிட்டு முடிக்கும் முன் வந்துடுறேன்…” என்று கிருதியை அழைத்துக் கொண்டு கிளம்பினான் ஆனந்த்.

வெளியே வந்ததும், இருவரும் அவரவர் வண்டியில் கிளம்பிக் கிருதியின் வண்டியைப் பழுது பார்க்கும் கடையில் விட்டுவிட்டு, பின் இருவரும் ஒரே வாகனத்தில் பயணத்தைத் தொடர்ந்தனர்.

“ஏன் மிஸ்டர் ஆனந்த், உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கலாமா?” என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் கிருதிலயா.

“கேளு கிருதி…”

“ரத்னாவை நான் அக்கானு கூப்பிடுறேன். அப்போ நீங்க எனக்கு மாமா முறையா?” என்று நமட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

அவளின் கேள்வியில் ஆனந்த் ஒரு நொடி வண்டியைத் தடுமாற விட்டான்.

அடுத்த நொடியே சமாளித்துக் கொண்டவன், “என் மாமாவோட ஃபிரண்டை அண்ணான்னு தான் கூப்பிடணுமா? அதெல்லாம் முடியாதுன்னு நீ மிஸ்டர் ஆனந்த்னு கூப்பிடுறதை நான் என்னைக்காவது தடுத்தேனா? அப்புறம் எதுக்கு நீ புதுசா முறை எல்லாம் யோசனை பண்ற?” என்று அசட்டையாகக் கேட்டான்.

“இல்லை… இனி முறை சொல்லித் தான் கூப்பிடணுமோனு எனக்குக் கொஞ்ச நாளாவே டவுட்டுடு…டு…” என்று இழுத்தாள்.

“அம்மா தாயே, உனக்கு எந்த டவுட்டும் வேண்டாம். நீ எப்பயும் போலவே என்னைக் கூப்பிடு…” என்று உடனே சரணடைந்தான் ஆனந்த்.

“இப்போ தான் எனக்கு ரொம்ப டவுட்டு கூடுது மாமா…” என்று வேண்டுமென்றே வம்பிழுத்தாள் கிருதிலயா.

“ம்ப்ச்… மாமான்னு கூப்பிடாதே கிருதி…” என்று கண்டித்தான் ஆனந்த்.

“ஏன், என்னாச்சு?” சுருதி இறங்கிய குரலில் கேட்டாள் கிருதி.

“கூப்பிடாதேனா கூப்பிடாதே! விளக்கம் எல்லாம் கேட்காதே!” என்று இன்னும் கடுமையாகச் சொன்ன ஆனந்தின் முகத்தை இருசக்கர வாகனத்தின் முன்னால் இருந்த கண்ணாடியின் வழியாகப் பார்த்தாள்.

அவனின் குரல் தான் கடுமையாக வந்ததே தவிர, அவனின் முகம் வருத்தத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

கண்ணாடி வழியாகவே அவனின் முகத்தை யோசனையுடன் பார்த்தாள் கிருதிலயா.

ரத்னாவின் பெயரைச் சொன்னாலே அவனின் முகம் எவ்வளவு பிரகாசமாக மாறும் என்று அவள் கவனித்திருக்கின்றாள். அதனால் தான் கேலியில் இறங்கினாள்.

ஆனால் அவனின் முகம் வேறு சேதி சொன்னது.

“என்னாச்சு மிஸ்டர் ஆனந்த்?” என்று சீரியஸாக அக்கறையுடன் கேட்டாள்.

“ஹேய், ஒண்ணுமில்லை. நீ சின்னப் பிள்ளை. நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காதே! உன் காலேஜ் வந்திருச்சு. போயிட்டு வா…” என்று அவளை விரட்டினான்.

“யாரு, நானா சின்னப் பிள்ளை?” என்று மூக்கை சுருக்கிக் கேட்டாள்.

அவள் முகம் போன போக்கைப் பார்த்து, “அசல் சின்னப் பிள்ளையே தான்…” என்று கேலி செய்தான்.

“ஏய், ஆனந்தமானவனே! வேண்டாம்!” என்று எச்சரித்தாள்.

“அப்படிக் கூப்பிடாதே கிறுக்கி…” என்று அவளின் தலையில் லேசாகத் தட்டியவன் “கிளம்பு…” என்றான்.

“ஓய், கிறுக்கிச் சொல்லாதீங்க. அது என் மாமா மட்டும் தான் சொல்லும்…” என்று சண்டைக்கு வந்தாள்.

“ஓகோ, அப்படியா? இப்போ உன் ரூட்டு தான் எங்கயோ போற போல இருக்கே?” என்று கேலியுடன் கேட்டான்.

“ஆமா அப்படியே அந்த ரூல்ஸ் ருத்ரையாகிட்ட நான் ரூட்டுப் போட்டுட்டாலும்… காமெடி பண்ணாம போங்க மிஸ்டர் ஆனந்த்…” என்றாள் கிண்டலாக.

“அதென்ன ரூல்ஸ் ருத்ரையா? யாரைச் சொல்ற, செழியனையா?” அவள் சொன்ன பெயரைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே கேட்டான்.

“வேற யாரு? அந்தச் செழியன்ன்ன் தான்…” என்றாள் அழுத்தமாக.

“ஹாஹா… இந்தப் பேரு அவனுக்குத் தெரியுமா?” கேலியுடன் கேட்டான்.

“எதுக்கு, அதுக்கும் ஒரு ரூல்ஸ் பேசவா?” என்று கண்களை உருட்டிக் கொண்டு கேட்டாள்.

“ஹாஹா… வாலு! என்கிட்ட சொல்லிட்டியே… நான் அவன்கிட்ட சொல்லிட்டா என்ன செய்வ?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

“நீங்க சொல்ல மாட்டீங்க மாமா…” என்று கண்சிமிட்டினாள்.

அவள் மீண்டும் மாமா என்றதில் ஆனந்தின் முகம் விளக்கெண்ணெய்க் குடித்தது போல் ஆனது.

“அப்படிக் கூப்பிடாதே கிருதி…” என்றான் கோபமாக.

“அப்போ உங்க ஃபிரண்டுகிட்ட நான் வச்ச பேரை மூச்சு விடக் கூடாது…” என்று மிரட்டினாள்.

“சரி தாயே… சரி…” என்று வேகமாகத் தலையை ஆட்டினான் ஆனந்த்.

“அது! அந்தப் பயம் இருக்கட்டும்…” என்றாள் மிரட்டலாக.

“உன்னைச் சின்னப் பிள்ளைன்னு நினைச்சா, நீ அப்பப்போ விவகாரமான பிள்ளையா மாறிடுறியே…”

“சின்னப் பிள்ளைன்னு நீங்களா நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் என்ன பண்றது?” என்று அலட்சியமாகக் கேட்டாள்.

“சரிதான்…” என்று ஆனந்த் அலுத்துக் கொள்ள,

“உங்களுக்கு ஒரு வீடியோ அனுப்புறேன். நீங்க சின்னப் பிள்ளைன்னு நினைச்சுட்டு இருக்குற என் திறமை எப்படின்னு பார்த்துச் சொல்லுங்க…” என்று தன் கைப்பேசியை எடுத்து அவனுக்கு ஒரு சுட்டி(லிங்க்)யை அனுப்பி வைத்தாள்.

“என்னது இது?” என்று தன் கைபேசியைத் திறந்து பார்த்தான்.

“அப்புறமா வீட்டுக்குப் போய்ப் பொறுமையா பாருங்க. பை…” என்று சிட்டாகப் பறந்து கல்லூரிக்குச் சென்றாள்.

ஆனந்த் அவள் அனுப்பியதை எடுத்துப் பார்த்தான். பார்த்தவன் முகம் உடனே மாறிப் போனது.

‘இதை இப்படியே விடுவது நல்லது இல்லை’ என்று நினைத்தவன் அதைச் செழியனுக்கு அனுப்பி வைத்தான்.

இதை அவனுக்கு அனுப்பியதற்குக் கிருதி தன்னைத் திட்டுவாள் என்று தெரியும். ‘பரவாயில்லை, திட்டிக் கொள்ளட்டும்’ என்று நினைத்தவன் அங்கிருந்து கிளம்பினான்.

அன்று இரவு கிருதிலயாவின் அறையில் கோபத்துடன் அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் செழியன்.

“நீ செய்து வச்சுருக்கிற தப்பு என்னன்னு உனக்குப் புரியுதா இல்லையா கிருதி? உன்னை இந்த மாதிரியான வேலையெல்லாம் பார்க்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனா, இல்லையா?” என்று குரலை உயர்த்தாமல் அழுத்தமாகக் கேட்டான் செழியன்.

கிருதியோ அவனை அலட்சியமாகப் பார்த்து, “இங்க பாரு மாமா. அதைச் செய்து பார்க்கணும்னு ஆர்வம் இருந்தது செய்தேன். எனக்கு அது ஒன்னும் அவ்வளவு தப்பா தெரியலை…” என்று தோளைக் குலுக்கி விட்டுக் கொண்டவள் மனதிற்குள் ஆனந்தை நினைத்துப் பல்லைக் கடித்தாள்.

“தப்பா தெரியலையா? இந்தா இதைப் பாரு. இதைப் பார்த்துமா தப்பா தெரியலை?” என்று கேட்டுக் கொண்டே அவனின் கைப்பேசியை அவளின் கண் முன்னால் நீட்டினான்.

அவன் காட்டியது சினிமா வசனங்களுக்கு ஏற்ப நடித்துக் காட்டவும், தங்கள் திறமையை வெளிகாட்டவும் பயன்படுத்த உதவும் ஒரு கைபேசி செயலி!

அதில் அவள் முகத்தைக் கோணலாக வைத்துக் கொண்டு ஏதோ சினிமா வசனத்தைப் பேசிக் கொண்டிருந்தாள். அடுத்தக் காணொளியில் நடனம் ஆடிக் கொண்டிருந்தாள்.

அவளின் ஆடல் நளினமாக இருக்க, ரசனையாகத்தான் இருந்தது. ஆனால் அவள் உடுத்தியிருந்த உடை? அன்று வீட்டில் அணிந்திருந்த அதே உடை! ஆனால் மெல்லிதான ஓவர்கோர்ட்க்கு பதிலாகச் சற்றுக் கனமான ஓவர்கோர்ட் அணிந்திருந்தாள்.

ஆனாலும் அவளின் உடலின் அங்க வளைவுகளை அப்பட்டமாக எடுத்துக் காட்டுவதாகவே அந்த உடை இருந்தது. அந்த உடையுடன் அவள் நடனமும் ஆடியிருக்க, அதன் பிறகு செழியனின் மனநிலையைச் சொல்லவும் தான் வேண்டுமோ?

சிலர் ரசனை கண்ணுடன் பார்த்திருந்த அதே காணொளியைப் பலர் வக்கிர கண்ணுடன் பார்த்திருக்க, அந்த வக்கிரத்தை தங்களின் கருத்தின் மூலம் காட்டியிருந்தனர்.

ஒரு சில கருத்துக்கள் படிக்கக் கூடக் கூசும் அளவிற்கு வக்கிரத்தின் உச்சத்தைக் காட்ட, அதைப் பார்த்த செழியன் அருவருத்துப் போயிருந்தான்.

அதுவும் தன் வீட்டுப் பெண்ணைப் பற்றி யாரோ ஒரு முகம் தெரியாதவன் கருத்துப் பதிய, அதைக் கையாலாகாதத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை நினைத்து அவனுக்கு ரத்தம் கொதித்தது.

அக்கொதிப்பை அதற்குக் காரணமானவளிடம் காட்ட, அவளோ அவனின் கோபத்தை அசட்டை செய்தாள்.

“இந்தா பார் மாமா. ஒரு விஷயத்தைப் பொதுவில் வச்சா நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க. அதுக்காக ஒன்னும் செய்யாம மூலையிலேயே ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருக்க முடியாது…”

“உன்னை மூலையிலேயே உட்காருன்னு இங்க யாரும் சொல்லலை கிருதி. இந்த மாதிரியான ஆப் மூலமா ஏதாவது நல்ல விஷயம் செய்து காட்டிப் பாராட்டு வாங்குறவங்களையும் பார்த்துருக்கேன்.

அது போல ஏதாவது செய்து உன் திறமையைக் காட்டலாமே? அதை விட்டுட்டு இந்த டான்ஸ், டஷ்மாஸ் இதெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலை கிருதி. அதுவும் நீ போட்டுருந்த உடை. ம்ப்ச்…” என்று மேலும் சொல்ல முடியாமல் முகத்தைச் சுளித்தான்.

“உனக்குப் பிடிக்கலைனா நான் என்ன செய்ய முடியும் மாமா? எனக்குப் பிடிச்சதை நான் செய்தேன். அதுவும் எனக்கு என்ன வருமோ அதைச் செய்தேன். அதை இப்படி நீ குறை சொல்றது தான் தப்பு மாமா…” என்று அவனையே குறை சொன்னவளைப் பொறுமை இல்லாமல் பார்த்தான்.

“அந்த ட்ரெஸை நான் உன் அறைக்குள் மட்டும் தான் போட சொன்னேன் கிருதி. ஆனா நீ வீடியோ எடுத்து ஊருக்கே காட்டியிருக்க. எனக்கு அதைப் பார்க்கிறதுக்கு எப்படி இருக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

“அதான் திக்கான ஓவர் கோர்ட் போட்டுருக்கேனே மாமா?” என்று அசால்டாகவே கேட்டாள்.

அப்படிக் கேட்டவளை அமைதியாகப் பார்த்தான் செழியன். ஆண்களின் பார்வை எப்படி எல்லாம் செல்லும் என்று அறியாத பெண்ணாக இருக்கிறாளே என்று கவலைப்பட்டான். அதை அவளுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது என்றும் அவனுக்குப் புரியவில்லை.

அவள் இப்படியெல்லாம் நடந்து கொள்ளத் தாங்கள் அவளுக்கு அதிகம் செல்லம் கொடுத்துக் கெடுத்து விட்டது தான் காரணமோ? என்று அவனின் எண்ணம் போனது.

ஒரு விஷயத்தை எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் வாதம், விவாதம் என்று இருந்தால் இவளை என்ன தான் செய்வது?

தன் பொறுமையை இழுத்துப் பிடித்தவன், “எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லு கிருதி. உனக்குப் பிடிச்ச ஒரு விஷயத்தைச் செய்தியே? அதை ஏன் நீ உன் அத்தை, அதான் என் அம்மாகிட்ட நீயே காட்டலை? ஏன் என்கிட்ட கூடத்தான் நீ சொல்லலை.

ஆனந்த் எனக்கு அனுப்ப போய் இது என் கண்ணில் பட்டிருக்கு. இல்லன்னா எனக்கும் கூட இது தெரியாம தானே போயிருக்கும். நீயே ஏன் என்கிட்டே இதைச் சொல்லலை?” என்று கேட்டான்.

அவனின் கேள்வியில் தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள். அதைக் காட்டினால் அவளின் அத்தை கண்டிப்பாக முகத்தைச் சுளிப்பார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

அதுவும் அந்தக் காணொளிக்கு வந்த கருத்துக்களைப் படித்தால், அழுது அவளை ஒரு வழியாக்கி விடுவார். இப்படிச் செய்வது தப்பு என்று இவனை விடப் பலமடங்கு அறிவுரை சொல்வார்.

அதை விட, என் அண்ணன் இருந்திருந்தால் நீ நல்ல பொண்ணா வளர்ந்திருப்ப, என் வளர்ப்புத் தான் சரியில்லையோ என்று தன்னையே குறை சொல்லி அழுது கரைந்திருப்பார்.

அடுத்தவர்களின் பேச்சுக்குத் தான் ஆளாகி இருப்பதை அவரால் நிச்சயம் தாங்க முடியாது. அதனால் அவளால் அதைக் கண்டிப்பாகச் சொல்ல முடியாது.

“சொல்லு கிருதி, அமைதியா இருந்தால் என்ன அர்த்தம்?” அழுத்தமாகக் கேட்டான்.

பேச்சுக்குப் பேச்சு பேசியவள் இப்போதோ அமைதியாக இருந்தாள்.

“சோ, நீ சரியான விஷயம் செய்தால் அதைக் காட்டியிருப்ப. அப்படித்தானே அர்த்தம் வருது. அப்படினா இந்த விஷயம் நான் சொன்ன மாதிரி தப்புத் தானே கிருதி?

வீட்டுக்குத் தெரியாம, பாசம் காட்டி வளர்க்கிறவங்களுக்குத் தெரியாமல் ஒளிச்சு மறைச்சு செய்ற எந்த விஷயமும் என்னைப் பொறுத்த வரை தப்புத் தான் கிருதி…” என்றவனை அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“ஏதாவது பேசு கிறுக்கி…”

“மாமா, கிறுக்கிச் சொல்லாதே!” தன் அமைதியை விட்டு வெளியே வந்து கத்தினாள்.

“அப்போ சொல்லு, இந்தத் தப்பை இனி செய்வீயா?”

“செய்யலை சாமி… செய்யலை…” என்று வெளியே சொன்னவள் ‘அதான் என் ஆசைக்குச் செய்து என் ஆசை நிறைவேறிடுச்சே… இனியும் நான் அதை ஏன் செய்யப் போறேன்?’ என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

அவள் கோபமாகச் சொன்னதைப் பொருட்படுத்தாமல், “குட்! இப்படித்தான் சொன்ன பேச்சைக் கேட்கணும்…” என்று பாராட்டியவன்,

“இனி இப்படிச் செய்தால் உன் போன் முழுசா என் கண்ட்ரோலுக்கு வந்திடும்…” என்று அவளை மிரட்டி விட்டே வெளியே சென்றான்.

சென்றவனின் முதுகையே முறைத்துக் கொண்டிருந்தாள் கிருதிலயா.