மனம் கொய்த மாயவனே – 6
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 6
“என்ன செழிப்பானவனே… சுதா என்ன சொன்னாரு?” என்று கேட்டுக் கொண்டே கையில் வைத்திருந்த பாதாம்பருப்பை வாயில் போட்டுக் கொண்டாள் ரத்னா.
“என்ன, என்ன சொன்னாரு?” என்று திருப்பிக் கேட்டான் செழியன்.
“ஒரு புது ப்ராஜெக்ட் கொடுத்துருக்காரே, அதைப் பத்தி என்ன சொன்னாரு?”
“அவர் புது ப்ராஜெக்ட் கொடுத்திருக்காருன்னு உனக்கு எப்படித் தெரியும்?” என்று அவளைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே கேட்டான் செழியன்.
“பட்சி பறந்து வந்து சொல்லுச்சு…” என்ற ரத்னா கையில் இருந்த பத்துப் பாதாம் பருப்பையும் மொத்தமாக வாயில் போட்டு விட்டுக் கையைப் பறவையாகச் சிறகடிக்க வைத்துக் காட்டினாள்.
“எந்தப் பட்சி அது? அடிக்கடி என்னைப் பத்தி மட்டும் பறந்து வந்து உன்கிட்ட சொல்லுது?”
“அதெல்லாம் ரகசியம் செழிப்பானவனே. ரகசியத்தை வெளியே சொன்னா தின்கிறதுக்குப் புவ்வா கிடைக்காதுன்னு எங்க பாட்டி சொல்லியிருக்கு…”
“உங்க பாட்டியென்ன தின்கிறது தவிர வேற ஒன்னும் உனக்குச் சொல்லித் தரலையா?”
“அதெல்லாம் நிறையச் சொல்லித் தந்திருக்கு…” என்று அலட்சியமாகக் கையை வீசினாள்.
“எப்படி அடுத்தவன் காசுல வாங்கித் தின்கிறது தான் நல்லதுனா உன் பாட்டி சொல்லுச்சு?” என்று ரத்னாவிடம் நக்கலாகக் கேட்டுக் கொண்டே அங்கே வந்தான் ஆனந்த்.
“என்னடா ஆனந்தமானவனே… நக்கலா?” என்று முகத்தைச் சுருக்கி கொண்டு கேட்டாள் ரத்னா.
“நக்கலா… இல்லை. நக்கலே தான்…” என்றவனை முறைத்துப் பார்த்தாள்.
“இந்த முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தோசை வாங்கித் தின்னது செழியன் காசுல. அது முழுசா ஜுரணிக்கும் முன்னாடி இப்போ தின்ன ஒரு பாக்கெட் பாதாம்பருப்பு என்னோட காசு. என் டேபிளில் நான் சாப்பிட வாங்கி வச்சதை எல்லாத்தையும் என் பெர்மிஷன் கூடக் கேட்காம எடுத்துட்டு வந்து தின்னு தீர்த்துட்ட…” என்றான் ஆனந்த்.
“என்ன பெர்மிஷன் கேட்கணுமா? என்னடா ஆனந்தமானவனே விளையாடுறீயா? யார் யார்கிட்ட பெர்மிஷன் கேட்கணும்? அதுவும் உன்கிட்ட? ம்ம்ம்…” என்று அதிகாரமாக ஆனந்திடம் கேட்டவள் செழியனின் புறம் திரும்பி,
“இந்த அநியாயத்தை என்னான்னு கேளு செழிப்பானவனே… உங்ககிட்ட வாங்கிச் சாப்பிட நான் பெர்மிஷன் கேட்கணுமாம். உன் ஃபிரண்ட் எப்படிச் சொல்லிட்டான் பாரு. அவனை என்னன்னு கேளு…” என்று செழியனிடம் நியாயம் கேட்டாள்.
“ஏன் ஆனந்த் அவளைப் பார்த்து அப்படிச் சொன்ன?” என்று செழியனும் ஆனந்திடம் நியாயம் கேட்க,
“இல்லடா செழியா…” என்று ஆனந்த் அதற்கு மறுப்பாக ஏதோ சொல்ல வர,
“நிறுத்துடா! என்ன இருந்தாலும் அவளை நீ அப்படிச் சொன்னது தப்பு…” என்று கண்டித்தான் செழியன்.
நண்பனின் கண்டிப்பில் காண்டான ஆனந்த் ரத்னாவை முறைத்துப் பார்த்தான்.
“அப்படிக் கேளுடா என் செழிப்பான நண்பனே…” என்று ரத்னா உற்சாகமாக அவனுக்கு ஹய்பை கொடுக்கப் போனாள்.
ஆனால் அவளின் கையைக் கண்டு கொள்ளாத செழியன் எழுந்து நண்பனின் தோளில் கையைப் போட்டு, “உங்க வீட்டுல இருக்குற எலி என்னைக்காவது உன்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டுச் சாப்பிட்டு இருக்கா ஆனந்த்?” என்று பொறுமையாக விசாரித்தான்.
“எலி எப்படிடா பெர்மிஷன் கேட்கும்?” என்று பதில் சொல்லும் போதே அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து கொண்ட ஆனந்த், ரத்னா கொடுத்த ஹய்பையை இப்போது தான் செழியனுக்குக் கொடுத்தான்.
அவனின் கையில் இப்போது மறுக்காமல் தட்டிய செழியன் “சாதாரணச் சுண்டெலியே பெர்மிஷன் கேட்காதுடா. அப்படியிருக்கும் போது பெருச்சாளி பெர்மிஷன் கேட்கணும்னு எதிர்பார்த்தால் அது உன்னோட தப்புதான் நண்பா…” என்று சொல்லிச் சிரித்தான்.
அவனின் சிரிப்பில் ஆனந்தும் கலந்து கொள்ள, இருவரையும் உஷ்ண மூச்சை பெரிதாக இழுத்து விட்டபடி முறைத்துக் கொண்டிருந்தாள் ரத்னா.
“போங்கடா…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு இன்னும் ஏதோ வார்த்தையைச் சொல்ல வர,
“ஏய்! நோ பேட் வேர்ட்ஸ்…” என்று இருவரும் ஒன்று போல் கத்தி எச்சரிக்கை செய்தனர்.
இருவரும் கத்தவும் நாவை தாண்டி வெளியே வரத் துடித்த வார்த்தையை அப்படியே நாவை மடக்கி உள்ளே தள்ளினாள் ரத்னா.
“அம்மாடி!” என்று இருவரும் நிம்மதி பெருமூச்சு விட,
“நண்பனுங்க ஆச்சேன்னு போனா போகுதுன்னு விடுறேன். பொழைச்சுப் போங்கடா. அப்புறம் இன்னொரு விஷயம் நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க. என் நண்பனுங்க காசில் நான் அப்படித்தான் வாங்கிச் சாப்பிடுவேன். நான் கேட்கும் போதெல்லாம் வாங்கித் தரணும். வாங்கித் தரலை….” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
“வாங்கித் தரலைனா என்ன பண்ணுவ?” என்று இருவரும் ஒரு சேரக் கேட்டனர்.
“வாங்கித் தரலைனா என் காசில் வாங்கிச் சாப்பிடுவேன். வேற வழி? என்னால சாப்பிடாம எல்லாம் இருக்க முடியாதுடா…” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கொஞ்சலாகச் சொன்ன ரத்னாவைப் பார்த்து இருவரும் சட்டென்று சிரித்து விட்டனர்.
“நல்லா சிரிங்கடா…” என்று கோபமாகச் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள்.
போகும் அவளையே புன்னகையுடன் பார்த்திருந்தனர் ஆனந்தும், செழியனும்.
இருவரும் அவளைக் கேலி செய்து சிரித்தாலும் அடுத்த வேளை உண்ணும் போது அவளுக்குப் பிடித்ததாக வாங்கிக் கொடுத்துவிட்டுத் தான் அவர்கள் உண்ணுவார்கள்.
அதை நன்றாக அறிந்தவள் என்பதால், வேண்டும் என்றே கோபம் கொள்வது போல் காட்டிக் கொண்டு இன்னும் அதிகமாகவே தனக்குப் பிடித்ததாக வாங்கித் தர வைப்பாள்.
அவளின் அந்தத் திட்டம் தெரிந்தாலும் இருவரும் ஒன்றும் அறியாதவர்கள் போல் வாங்கிக் கொடுத்து உண்ண வைப்பர்.
மதிய உணவையும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டே உண்டு முடித்தனர்.
“காலைல அந்த ப்ராஜெக்ட் பத்தி கேட்டேன். நீ ஒன்னும் சொல்லலையே செழிப்பானவனே…” என்று கேட்டாள் ரத்னா.
“என்ன சொல்ல சொல்ற?”
“உன் டீமில் நானும் இருக்கேனா?”
“நீயா? நீ எதுக்கு? சாப்பாடு வாங்கிக் கொடுக்கிற மாதிரி உன் வேலையையும் நாங்களே பார்க்கவா? அதெல்லாம் எங்களால முடியாது. நீ இப்போ போலவே சுரேஷ் டீம்லயே இரு…” என்று உடனே மறுப்பைத் தெரிவித்திருந்தான் செழியன்.
“என்னடா இப்படிப் பண்ற?” என்று ரத்னா கோபமாகக் கேட்க,
“நீ கோபப்பட்டாலும் சரி, கெஞ்சினாலும் சரி இதான் என் முடிவு…” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
அவனின் முதுகையே வெறித்துப் பார்த்த ரத்னா, பின் தன் எதிரே அமர்ந்து இன்னும் உணவை உண்டு கொண்டிருந்த ஆனந்தைப் பார்த்தாள்.
“நீயாவது உங்க டீம்ல என்னைச் சேர்த்துக்கச் சொல்லி அவன்கிட்ட சொல்லலாம்ல ஆனந்தமானவனே…” என்று கேட்டாள்.
“ஹப்பா! உன் கண்ணுக்கு நான் தெரிஞ்சுட்டேன் போல…” என்று விளையாட்டாகக் கேட்பது போல் இருந்தாலும் ஆழ்ந்த குரலில் கேட்ட ஆனந்த் அவளை ஊடுருவது போல் பார்த்தான்.
“என்னடா ஒரு தினுசா கேட்குற?” என்று அவனைச் சந்தேகமாகப் பார்த்த படி கேட்க,
தன் பார்வையைச் சாதாரணமாகத் திருப்புவது போல் மெல்ல விலக்கிக் கொண்டவன், “டீம் எல்லாம் செழியன் தான் முடிவு செய்வான் ரத்னா. அவன் தானே கெட்! அந்த விஷயத்தில் எல்லாம் என்னால் தலையிட முடியாது…” என்றான்.
“டீமை விடு! உன் விஷயத்துக்கு வா! அதென்ன அப்பப்போ ஒரு தினுசா பேசுற, பார்க்கிற?” என்று அவனை ஆராய்ந்து கொண்டே கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் எப்பவும் போல் தான் இருக்கேன்…” என்று சொல்லிக் கொண்டே இருக்கையில் இருந்து எழுந்தவன் “எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. செழியன் எனக்கு ஒரு வேலை கொடுத்தான். அதை நான் பார்க்கணும்…” என்று நிற்காமல் சொல்லி விட்டு தன் இருக்கைக்குச் சென்றான்.
சென்றவனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ரத்னா.
செழியன் வேலை முடிந்து இரவு வீட்டிற்குள் நுழைந்த போது வீடு வெகு அமைதியாக இருந்தது.
அவன் வழக்கமாக வீட்டிற்கு வரும் அந்த நேரத்தில் பவானி படுக்கத் தயாராகியிருப்பார் என்றாலும் கிருதிலயா வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.
தொலைக்காட்சியில் இருந்து வரும் சப்தம் வாசல் கேட் வரை கேட்கும்.
ஆனால் இன்றோ சப்தம் என்பதே சிறிதும் இல்லாமல் அவ்வீடே அமைதியில் ஆழ்ந்திருந்தது.
“என்னமா இந்தக் கிறுக்கி எங்கே போனாள்? வீடே இவ்வளவு அமைதியா இருக்கு?” என்று தனக்கு உணவு எடுத்து வைக்கச் சமையலறைக்குச் சென்ற அன்னையை நிறுத்தி கேட்டான் செழியன்.
“அவள் ரூமில் தான் இருக்காள். காலையில் அவளைத் திட்டினதுக்குக் கோபமாம். இன்னைக்கு முழுவதும் மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தாள். என்ன இருந்தாலும் அவள் அப்படி ட்ரெஸ் போட்டு வந்தது எனக்குப் பிடிக்கலை.
என்னைப் பொறுத்தவரை அது தப்பு. தப்பும் செய்துட்டுக் கோபமாகவும் இருந்தா நான் என்ன செய்ய முடியும்? அவள் செய்தது எனக்குப் பிடிக்கலைனு அவளுக்குப் புரியட்டும்னு நான் அவளைச் சமாதானம் செய்ய முயற்சி செய்யலை…” என்றார் பவானி.
அவரின் குரலில் கவலை கொட்டிக் கிடக்க, தாயின் தோளில் கையைப் போட்டு ஆதரவாக நின்றவன், “கவலைப்படாதீங்கமா. அவள் இன்னும் சின்னப் பொண்ணு தானே? தோன்றதை செய்யணும்னு நினைக்கிற எண்ணம் அவளுக்கு நிறைய இருக்கு.
இத்தனையிலும் வீட்டுக்குள் தான் அவள் அப்படி ட்ரெஸ் போட்டுக்கிட்டாள். அதை நினைத்து நாம சந்தோஷப்பட்டுக்கலாம்…” என்று அன்னையைத் தேற்ற முயன்றான் செழியன்.
“அதென்னவோ உண்மை தான். வீட்டுக்குள்ள போட்டதோட விட்டாளே…” என்று பெருமூச்சு விட்டார்.
“சரிமா, நான் போய்க் குளிச்சுட்டு வர்றேன்…” என்று தன் அறைக்குச் செல்ல திரும்பினான்.
“அவளும் இன்னும் சாப்பிடலை. அவள் சாப்பிடாமல் நானும் சாப்பிடலை. அவளையும் அழைச்சுட்டு வா, சாப்பிடுவோம்…” என்றார் பவானி.
“என்னமா இன்னுமா நீங்க சாப்பிடலை? உங்களுக்கு மாத்திரை போடணும்ல… இந்தக் கிறுக்கிக்கு உங்களைக் கூடக் கவனிக்காம அப்படி என்ன கோபம்?” என்று கடுப்பானவன் படபடவெனப் படிகளில் ஏறி கிருதிலயாவின் அறையின் முன் சென்று தான் நின்றான்.
அறை கதவு திறந்தே கிடக்கக் கட்டிலில் குப்புற படுத்துக் காதில் இயர்ஃபோனை மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள் கிருதிலயா.
அவளின் முன் சென்று நின்றவன் அவள் காதில் இருந்த இயர்ஃபோனை பறித்து விட்டுக் கோபத்துடன் முறைத்தான்.
அவனின் கோபத்தைப் பார்த்துக் கொண்டே நிதானமாகப் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவள், “இப்போ எதுக்கு என்னைப் பாட்டு கேட்க விடாம செய்ற மாமா?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.
“இப்போ பாட்டு தான் உனக்கு அவ்வளவு முக்கியமா கிருதி?”
“ஏன் பாட்டு கூட உங்க வீட்டில் கேட்க கூடாதுன்னு எதுவும் புது ரூல்ஸ் போட்டு இருக்கீங்களா?” என்று கடுப்புடன் கேட்டவளை விநோதமாகப் பார்த்தான் செழியன்.
“உங்கள் வீடா? இது எப்போது இருந்து?” என்று அழுத்தமாகக் கேட்டான்.
“எப்போது இருந்துன்னு நீ தான் சொல்லணும் மாமா…” என்று திருப்பிக் கேட்டாள் கிருதிலயா.
“உன் பேச்சு ஒன்னும் சரியில்லை கிருதி. இப்போ எதுக்கு நீ உங்க வீடுன்னு பிரிச்சுப் பேசுற? உன்னை நாங்க எப்பவாவது பிரிச்சுப் பார்த்து இருக்கோமா?” என்று கேட்டான்.
“அதான் இங்கே எனக்கு விருப்பமானது எதுவும் செய்ய முடியலையே? அப்புறம் எப்படி இது என் வீடு ஆகும்? அதான் உங்க வீடுன்னு சொன்னேன்…” என்று சிறிதும் தயக்கம் இல்லாமல் பதில் சொன்னாள்.
“உனக்கு அப்படி அரையும் குறையுமா ட்ரெஸ் பண்றது தான் விருப்பமா கிருதி?”
“நான் என்ன எப்பயுமா அப்படிப் போடுவேன்னு சொன்னேன்? சினிமா, டிவி ப்ரோகிராம்ல எல்லாம் சர்வசாதாரணமா அப்படி ட்ரெஸ் பண்றாங்க.
நாமளும் செய்து பார்த்தால் என்னன்னு எனக்கு ஆசையா இருந்தது. அதான் போட்டேன். அதுவும் வீட்டுக்குள்ள தானே போட்டேன். அதுக்குப் போய் நீயும், அத்தையும் திட்டுறீங்க…” என்றவள் கண்கள் கலங்கிக் கண்ணீர் தேங்கி நின்றது.
வெடுக் வெடுக்கென்று பேசினாலும் இன்னும் அவளின் மனது குழந்தைதனமாகத் தான் இருப்பதை உணர்ந்த செழியன் அவளின் அருகில் அமர்ந்து அவளின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொள்ள முயல, தன் கையைக் கொடுக்காமல் கோபமாகப் பறித்துக் கொள்ள முயன்றாள்.
ஆனால் அதற்கு இடம் கொடாதவன், அவளின் கையை வலுவாக பற்றிக் கொண்டு, “கோபப்படாதே கிருதிமா. நான் சொல்றதைக் கொஞ்ச நேரம் பொறுமையா கேளு…” என்றான்.
அவளோ எனக்குக் கேட்க பிடிக்கவில்லை என்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாதவன், “நம்ம உடம்பும், உணர்வுகளும் அந்தரங்கமானவை கிருதிமா. அதை யார்க்கிட்ட நாம காட்டணுமோ அவங்ககிட்ட மட்டும் தான் காட்டணும்.
அப்போ டிவியில் அவங்க காட்டுறாங்களேனு கேட்காதே! அதை அவங்க வேலைக்கான ஒரு விஷயமாகப் பார்க்கிறாங்க. அது அவங்க விருப்பம்.
ஆனா நம்ம வீடும், நம்ம பழக்கமும் அப்படி இல்லை. அவங்க செய்றாங்கனு அடுத்தவங்களைப் பார்த்து நாமும் செய்ய ஆரம்பிச்சா அது நம்மளே இல்லை. முதலில் நம்ம நாமளா இருக்கணும்.
அவங்க அது செய்றாங்க இது செய்றாங்க நாமும் செய்தா என்னன்னு யோசிக்காம நீ நீயா இரு. உனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கப் பழகு…” என்று செழியன் சொல்ல, அவளோ அமைதியாக இருந்தாள்.
“அந்த ட்ரெஸ் போடணும்னா நீ உன் ரூமுக்குள்ள மட்டும் போடு. வீட்டுக்குள்ள எல்லாம் சுத்தி வந்து அம்மாவை டென்ஷன் பண்ணாதே…” என்று சிறுபிள்ளைக்கு எடுத்துச் சொல்வது போல் சொன்னான்.
அப்போதும் அவள் அமைதியாக இருக்க, “உன் நல்லதுக்குத் தான் சொல்றேன் கிருதி…” என்று அவன் மேலும் ஏதோ சொல்ல வர,
“இப்போ எதுக்கு இவ்வளவு பெரிய பிளேடு போடுற நீ? அப்படி ட்ரெஸ் இனி பண்ணாதேனு சொல்ல போற, அவ்வளவு தானே? இனி நீயே சொன்னாலும் நான் போட மாட்டேன், போதுமா? அதுக்காகப் பிளேடு போடாதே! காதில் ரத்தம் வருது…” என்று சொல்லிக் கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தவள்,
“எனக்குப் பசிக்குது, நான் சாப்பிட போறேன்…” என்று அறையை விட்டுச் சிட்டாகப் பறந்தாள் கிருதிலயா.
‘இவள் நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டாளா, இல்லையா?’ என்று புரியாமல் செழியன் தான் விழித்துக் கொண்டு நின்றான்.
‘இன்னும் கோபமாக இருக்கிறாளோ? அம்மாவிடமும் போய், ‘உங்கள் வீடு’ என்று அவள் பேசி வைத்தால் தாங்க மாட்டார்களே’ என்று நினைத்து வேகமாகக் கீழே எட்டிப் பார்த்தான்.
அங்கே பவானியின் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சி அவரைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள் கிருதிலயா.
அவரும் “அப்படி ட்ரெஸ் போடாதே!” என்று ஆரம்பிக்க,
“ஏற்கனவே உங்க மகன் பிளேடு போட்டுட்டார் அத்தை. நீங்களும் போடாதீங்க. இனி நல்ல பிள்ளையா இருக்கேன்…” என்று அவரிடம் விளையாட்டாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதைக் கண்ட செழியன் அவள் புரிந்து கொண்டாளோ இல்லையோ இனி அப்படிச் செய்ய மாட்டாள் என்று சொன்னதே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
ஆனால் அவனின் நிம்மதியை விதவிதமாகச் சோதித்துப் பார்க்க காத்திருந்தாள் கிருதிலயா.