மனம் கொய்த மாயவனே – 5
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 5
“அண்ணே… என்னண்ணே?” அல்லியின் மனதின் அதிர்வு வார்த்தையிலும் பிரதிபலித்தது.
“உன்னோட நல்லதுக்காகத் தான்மா சொல்றேன்…” என்றான் முருகன்.
“அந்த ஆளு உன் ப்ரண்டு அண்ணே…”
“என் ப்ரண்டு தான். அதை யாரு இல்லைனு சொன்னா?”
“நீ இப்படிச் சொல்றது, அந்த ஆளைப் பத்திக் குறை சொல்றது போல இருக்குண்ணே…”
“நான் வெற்றியைப் பத்திக் குறையாவும் சொல்லலை, நிறைவாவும் சொல்லலைமா. அவனைப் பத்தி என்கிட்ட கேட்ட. அவனைப் பத்தி தனிப்பட்ட முறையில் சொல்றதுக்கு எதுவும் இல்லை. ஆனா நீ என்னை அண்ணேன்னு கூப்பிட்டுட்ட.
அதுக்காக உன் மனசு பின்னாடி வருத்தப்படக் கூடாதுன்னு இப்பவே உனக்கு எச்சரிக்கை செய்றேன்மா. இவ்வளவு தான் என்னால சொல்ல முடியும். இதுக்கு மேல உன் விருப்பம்…” என்ற முருகன் அதன் பிறகு அவளிடம் ஒன்றும் பேசவில்லை.
“இப்படி என்னை எச்சரிக்கை செய்ற அளவுக்கு அந்த ஆளுக்கிட்ட என்ன ஆபத்து இருக்குண்ணே?” என்று கேட்டாள்.
“எனக்கு வியாபாரம் பார்க்கணும் மா. நீ கிளம்பு!” என்று அவளின் கேள்வியைப் புறக்கணித்தவன், வியாபாரம் பார்க்கும் பாவனையில் திரும்பி நின்று, “நூறுபா… நூறுபா… நைட்டி நூறுபா… சட்டை நூறுபா…” என்று கூவ ஆரம்பித்தான்.
அவன் திரும்புவான் என்று அல்லி சில நிமிடங்கள் அவனையே பார்த்தபடி நிற்க, முருகனோ அவளின் புறம் திரும்பிப் பார்த்தான் இல்லை.
அவன் பார்க்க மாட்டான் என்று உறுதியாகி விட, வந்த போது இருந்த குழப்பத்தை விட அதிகக் குழப்பத்தைச் சுமந்து கொண்டு அங்கிருந்து சென்றாள் அல்லிராணி.
மாலை சென்று இரவு வந்து வெகுநேரம் ஆன பின்னும் வெற்றி அவனின் குடிசைக்கு வரும் நேரம் கடந்து கொண்டே இருந்தது.
முருகனும், காளியும் முன்பே வந்து விட்டதைக் கவனித்திருந்தாள் அல்லிராணி.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அவர்கள் தங்கியிருந்த குடிசையும் அவள் குடிசை வாசலில் இருந்து பார்க்கும் தூரத்தில் தான் இருந்ததால் அவர்களின் வரவைக் கவனித்திருந்தாள்.
வெற்றி மட்டும் இன்னும் வராமலிருக்க, “இந்த ஆளு எங்கே போய்த் தொலைஞ்சாரு…” என்று தனக்குள் முனங்கிக் கொண்டாள்.
தூக்கம் கண்களைச் சுழற்றியது. ஆனாலும் தூங்கச் செல்லாமல் வெற்றியை நினைத்து நகத்தைக் கடித்த படி குடிசையின் கதவைத் திறந்து வைத்து, அக்கதவின் மீதே சாய்ந்து அமர்ந்து தெருவைப் பார்த்த படி அமர்ந்துவிட்டாள்.
“ஏய்! கொசு வருது… உள்ள வந்து படுடி. இப்ப என்னாத்துக்கு நீ கதவைத் திறந்து வச்சு உட்கார்ந்து இருக்க?” என்று படுத்திருந்த சரோஜா மகளைச் சத்தம் போட்டார்.
“ஆமா, கதவை மூடிட்டா மட்டும் அப்படியே கொசு காணாம போய்டும் பாரு. பேசாம தூங்குமா. எனக்குத் தூக்கம் வரலை. நான் இப்படியே கொஞ்ச நேரம் காத்தாட உட்கார்ந்துட்டு வர்றேன்…” என்று திரும்பி அன்னையைக் கூடப் பார்க்காமல் தெருவைப் பார்த்துக் கொண்டே பதிலைச் சொன்னாள் மகள்.
“வர வர நீ நடந்துக்கிறது ஒன்னும் சரியா தெரியலை. சீக்கிரம் ஒருத்தன் கைல உன்னைப் பிடிச்சுக் கொடுத்தா தான் எனக்கு நிம்மதி…” என்றார் சரோஜா.
“ஒருத்தன் கையில் பிடிச்சுக் கொடு. இப்ப யாரு வேணாம்னு சொன்னாங்க? ஆனா என் மனசுக்குப் பிடிச்சவன் கையா பார்த்துப் பிடிச்சுக் கொடு…” என்றாள் அல்லி.
“ஏய்! என்னடி சொல்ற? எவனையும் மனசுல நினைச்சுட்டு இருக்கியா?” சரோஜா வேகமாகப் படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து மகளிடம் கேட்டார்.
“ஆமா அப்படியே எவனையும் நான் மனசுல நினைச்சுட்டாலும்… பேசாம படுத்து தூங்குமா…” என்று அன்னையிடம் சிடுசிடுத்தாள் அல்லிராணி.
“இப்போ எதுக்குடி இப்படிக் கோபப்படுற?” என்று சரோஜா கேட்க,
“அம்மா, தாயே! நான் கோபமே படலை. சும்மா நொய் நொயிங்காம தூங்குமா. என்னைக் கொஞ்ச நேரம் காத்து வாங்க விடு…” கோபமில்லை என்று சொல்லிக் கொண்டே கோபப்பட்டாள்.
“உனக்கு ஏத்தம் அதிகமாகிருச்சுடி. காத்தைச் சீக்கிரமா வாங்கி மடில கட்டிக்கிட்டு வந்து படு…” என்று நக்கலாகச் சொல்லி விட்டு, மீண்டும் படுத்துக் கண்களை மூடிக் கொண்டார் சரோஜா.
‘நான் மட்டும் அவனை மனசுல நினைச்சுட்டா போதுமா? அவன் நினைக்க வேண்டாமா? கடங்கார பய! எங்க போய்த் தொலைஞ்சான்னு கூடத் தெரியலை…’ என்று அன்னைக்குக் கேட்காத வண்ணம் மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டாள்.
படுத்திருந்த சரோஜா பெரிதாகக் குறட்டை விட ஆரம்பித்து, பல கொட்டாவிகளை அல்லிராணி எடுத்து விட்ட பிறகு வந்து சேர்ந்தான் வெற்றி.
வழக்கமான தன் வேக நடையுடன் வந்தவன், கையில் வைத்திருந்த துணி மூட்டையைக் கீழே வைத்துவிட்டு, கால் சட்டைக்குள் வைத்திருந்த சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தான்.
மீண்டும் துணி மூட்டையைக் கையில் எடுக்கக் குனிந்த போது, அதன் அருகில் தெரிந்த கால்களைப் பார்த்து தலையை நிமிர்த்திப் பார்த்தான் வெற்றி.
அல்லிராணி அரவமே இல்லாமல் மெதுவாக அவனின் பின்னால் வந்து நின்றுக் கொண்டிருந்தாள்.
அவளை அந்த நேரத்தில் அவ்வளவு அருகில் எதிர்பாராத வெற்றியின் முகத்தில் லேசான திடுக்கிடல் வந்து போனது.
“இவ்வளவு நேரம் எங்க போன வெற்றி?” என்று அவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே கேட்டாள்.
அவளின் கேள்வியைப் பொருட்படுத்தாமல் வெற்றியின் கண்கள் வேகமாகச் சுற்றி முற்றிப் பார்த்தன.
“எல்லாரும் இந்நேரம் குறட்டை விட்டுத் தூங்கியிருப்பாங்க. அப்படியே முழிச்சிருந்து நம்மளைப் பார்த்தாலும் எனக்குக் கவலையில்லை. சொல்லு வெற்றி, எங்கே போன இவ்வளவு நேரம்?” என்று கேட்டாள்.
“நீ என்ன லூசாடி? நான் எங்க போனா உனக்கு என்ன? உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ. இப்படி வந்து என் வீட்டுக்கிட்ட நின்னு என் மானத்தை வாங்காதே…” என்று கடுமையாகச் சொன்னவன், சட்டென்று தன் குடிசைக்குள் நுழைந்து கதவை அடித்துச் சாற்றினான்.
மூடிய கதவையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அல்லிராணி.
“திமிர் பிடிச்சவன்! எப்படி மூஞ்சி மேலயே கதவைச் சாத்துறான். வர வர நீ ரொம்ப ஓவராத்தான் நடந்துகிற. ஒரு நாளைக்கு நீ தப்பிக்க முடியாத மாதிரி உன்னை லாக் போடுறேனா இல்லையான்னு பாரு…” கதவைப் பார்த்துச் சொன்னவள், தன் குடிசைக்குத் திரும்பிச் சென்றாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அவள் சொன்னது கதவுக்கு அந்தப் பக்கம் இருந்த வெற்றிக்கும் நன்றாகவே கேட்டது.
‘சரிதான் போடி! உன்னால ஆனதைப் பார்த்துக்க…’ என்று கடுப்புடன் நினைத்துக் கொண்டவன், உடையை மாற்றி விட்டுப் பாயை விரித்துப் படுக்கையில் விழுந்தான்.
மறுநாள் காலை ஒலிப்பெருக்கியின் வழியே காதுக்குள் வந்து பாடுவது போல் ஒலித்த அம்மன் பாட்டுச் சப்தத்தில் கண்விழித்தான் வெற்றி.
“ஷப்பா! என்ன சத்தம்டா சாமி…” என்று சலித்துக் கொண்டவன், எழுந்து வெளியே வந்து பார்த்தான்.
இரவு அவன் வந்த போது இருந்த அமைதி முற்றிலும் தொலைந்து அந்தத் தெருவே பரபரப்பாக இருந்தது.
தெருமுனையில் ஒலிப்பெருக்கி கட்டி அம்மன் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருக்க, பெண்கள் பெரும்பாலானோர் குளித்து மஞ்சள் நிற புடவை கட்டி, நெற்றி நிறையத் திருநீற்றைப் பூசி, குங்குமமிட்டு அங்கேயும் இங்கேயுமாக நடந்து கொண்டிருந்தனர்.
“இன்னைக்கு என்னடா விசேஷம்?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டே பற்களைத் தேய்த்துக் கொண்டிருந்தவன் பார்வை தன்போக்கில் எதிர் வீட்டை நோக்கி பாய்ந்தது.
எதிர்வீட்டுப் பைங்கிளியும் அப்போது நடு வீட்டிற்குள் நின்று அவனைத் தான் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளும் தலைக்குக் குளித்துத் தலையை உலர்த்தி நுனியில் மட்டும் ஒரு முடிச்சைப் போட்டு இருந்தாள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் குங்குமமிட்டு, அதற்கு மேலே திருநீற்றை லேசான கீற்றாக வைத்திருந்தாள்.
சிவப்பு நிறத்தில் பாவாடை, ரவிக்கை அணிந்து மஞ்சள் நிற தாவணி உடுத்தியிருந்தாள்.
அவளின் உடையின் நிறம் கண்ணைப் பறிக்க “அம்மாடியோவ்! என் கண்ணு அவிஞ்சு போயிருச்சு…” என்று சத்தமாகச் சொல்லி அவளை நக்கலாகப் பார்த்தான் வெற்றி.
‘அவியும்டா அவியும். இரு உன்னை ஒரு நாளைக்கு அவிச்சுத் திங்கிறேன்…’ முறைத்துக் கொண்டே மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
“வேகமா கோவிலுக்குப் போயிட்டு வந்துடு அல்லி. அப்பத்தான் சீக்கிரம் வேலைக்குக் கிளம்ப முடியும்…” என்று சொல்லிக் கொண்டே சரோஜா மகளின் அருகில் வர, “சரிமா…” என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள் அல்லிராணி.
“வெற்றி, நம்ம தெரு முக்குள்ள இருக்கிற அம்மன் கோவிலுல இன்னைக்குக் கூழு ஊத்துறோம். குளிச்சுட்டுக் கூழு குடிக்க அங்கே வந்திரு…” என்று இரண்டு வீடு தள்ளியிருந்த ஒருவர் வெற்றியிடம் தகவல் சொன்னார்.
“ஓ, சரி அண்ணே, வந்துடுறேன்…” என்றான்.
அப்போது அவனை முறைத்துக் கொண்டே கோவிலுக்குச் சென்ற அல்லிராணியைக் கண்டு கொள்ளாமல் குளிக்கச் சென்றான்.
அவன் கிளம்பி முடித்த போது முருகனும், காளியும் வர, “என்னடா துணி மூட்டையை எடுத்திட்டு வராம கையை வீசிட்டு வர்றீங்க?” என்று விசாரித்தான் வெற்றி.
“அம்மன் கோவிலில் கூழு ஊத்துறாங்களேடா. முதலில் அதைப் போய் வயித்துக்கு ஊத்திட்டு வருவோம். அப்புறமா வந்து மூட்டையை எடுத்துக்கிறோம்…” என்று முருகன் சொல்ல,
“சரியான தின்னிப் பண்டாரம்டா நீங்க…” என்றான்.
“ஆமாடா, நாங்க எல்லாம் தின்னிப் பண்டாரம். நீ மட்டும் தின்னாத பண்டாரம். என் வாயைப் புடுங்காம வாடா டேய்…” என்று வெற்றியையும் இழுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றனர்.
கோவிலுக்குச் சென்று கூழை வாங்கிக் குடித்துக் கொண்டே அங்கே ஓரமாக நின்று பேச ஆரம்பித்தனர்.
“என்ன வெற்றி, அந்தப் பொண்ணு உன்னைத் தேடிக்கிட்டு நேத்து பஜாருக்கே வந்துருச்சு…” என்று காளி பேச்சை ஆரம்பித்தான்.
“பொண்ணா? என்னைத் தேடியா? யார்டா?” என்று யோசனையுடன் கேட்டான் வெற்றி.
“வேற யாரு? உன்னோட எதுத்த வீட்டுல இருந்து உனக்கு அம்பு விடுமே… அந்த அல்லிராணி தான்…” என்றான்.
“அவளா? அவள் எதுக்கு என்னைத் தேடிட்டு அங்கே வந்தாள்?”
“எதுக்கு வந்தாள்னு முருகன்கிட்ட கேளு. அவன் தான் அந்தப் பொண்ணுகிட்ட பேசிட்டு இருந்தான். அய்யா உன்னைப் பத்தி ரொம்ப உயர்வா எல்லாம் அந்தப் பொண்ணுகிட்ட சொல்லி வச்சுருக்கார். அதை என்னன்னு கேளு…” என்று காளி முருகனைப் பார்த்து நமட்டுச் சிரிப்புடன் போட்டுக் கொடுத்தான்.
இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் காதில் வாங்கினாலும் கூழ் குடிப்பதே முக்கியம் என்பது போல் ஒவ்வொரு வாயாக ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த முருகனைக் கேள்வியுடன் பார்த்தான் வெற்றி.
“என்ன முருகா… என்ன விஷயம்? என்னைத் தேடியா அந்தப் பொண்ணு வந்தாள்?” என்று கேட்டான்.
“ஆமா…” என்றான் ஒற்றை வார்த்தையாக.
“ஓ! என்னவாம்?”
“உன் பழக்க வழக்கமெல்லாம் எப்படின்னு கேட்டுச்சு…”
“நீ என்ன சொன்ன?” என்று நண்பனைக் கூர்மையாகப் பார்த்துக் கேட்டான்.
“ஏன்? நான் என்ன சொல்வேன்னு உனக்குத் தெரியாதா?” என்று கேட்ட முருகன் நண்பனையே ஆழ்ந்து பார்த்தான்.
“என்னைப் பத்தி சொல்லியிருக்க மாட்ட. ஆனாலும் என்னமோ சொல்லியிருக்க. என்ன அது?” என்று நண்பனை அறிந்தவனாகக் கேட்டான்.
“வெற்றியை விட்டு விலகி இருப்பது தான் உனக்கு நல்லதுன்னு சொன்னேன்…” என்றான்.
முருகன் சொன்னதைக் கேட்டு அவனைத் தீர்க்கமாகப் பார்த்தான் வெற்றி.
அவனின் பார்வையைச் சலனமே இல்லாமல் எதிர் கொண்டான் முருகன்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அந்த வழியாக வந்த அல்லிராணியும் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவளின் புலன்கள் அடுத்து வெற்றி என்ன சொல்வான் என்று அறிந்து கொள்ளக் காத்திருந்தன.
‘முருகனைத் திட்டுவானோ? என்னைப் பத்தி எப்படி நீ அந்தப் பொண்ணுகிட்ட அப்படிச் சொல்லலாம் என்று சொல்வானோ? என்னை விட்டு விலகி இருக்க நான் என்ன அவ்வளவு மோசமானவனா என்று கேட்பானோ?’ என்று சில நொடிகளில் இத்தனை கேள்விகளைத் தனக்குள் கேட்டுக் கொண்டே வெற்றி சொல்ல போகும் பதிலுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்.
ஆனால் அவன் சொன்ன பதிலைக் கேட்டு அவளின் மனம் சுணங்கிப் போனது.
“உண்மையைத் தான் சொல்லியிருக்க…” என்று முருகனின் தோளில் தட்டிப் பாராட்டி அவளின் எதிர்பார்ப்பை பொசுக்கிக் கொண்டிருந்தான் வெற்றி.