மனம் கொய்த மாயவனே – 38
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 38
ஆனந்தும், ரத்னாவும் அங்கிருந்து சென்றதும் தன் முகம் பார்க்க மறுத்து, தன் வீட்டின் ஏதோ ஒரு மூலையை வெறித்துக் கொண்டிருந்த அல்லியைத் தீர்க்கமாகப் பார்த்தான் வெற்றிவேற்செழியன்.
“இன்னும் நீ என்னைப் பொம்பள பொறுக்கியாத்தான் நினைக்கிறயா அல்லி?” அவனின் முதல் கேள்வியே அதுவாகத்தான் இருந்தது.
அக்கேள்வி அவளையும் அவன் முகம் பார்க்க வைத்தது.
“தோழனையும், தோழியையும் தப்பா நினைக்கும் அளவுக்கு நான் கூறு கெட்டவ இல்ல…” என்றாள் பட்டென்று.
அதில் திருப்தியாகப் புன்னகைத்தான் வெற்றி.
“ஆனா நிறைய முறை தப்பா மட்டும் தான் என்னை நீ நினைச்சிருக்க…” என்றவன் குரலில் எந்தக் கோபமோ, ஆதங்கமோ இல்லை.
ஆனாலும் கோபமாகச் சொல்கிறானோ என்று நினைத்து அவனின் முகம் பார்த்தாள்.
அவனிடத்தில் புன்னகை தான் இருந்தது.
அவனின் அந்த மௌன சிரிப்பை மற்ற அனைத்தையும் மறந்து அந்த நேரம் ரசனையாகப் பார்த்தாள் அல்லிராணி.
அவள் தன் முகம் பார்த்ததும் கண்களைச் சிமிட்டி இன்னும் பெரிதாகச் சிரித்தான்.
அதில் சுதாரித்துக் கொண்டவள் மீண்டும் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“நான் வேணும்னே தப்பா நினைக்கலை…” என்றாள்.
“தெரியும். என் நடவடிக்கைகள் தான் என்னைத் தப்பானவனாக உன்னை நினைக்க வைச்சது. சோ, உன் மேல எந்தத் தப்பும் இல்லை…” என்றான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“நீங்க இவ்வளவு பெரிய ஆபிசரா இருப்பீங்கன்னு நான் எதிர்ப்பார்க்கலை…” என்றவள் குரல் அவளின் கலக்கத்தை வெளிப்படுத்தியது.
“தெரிஞ்சிருந்தா உங்களைத் தொந்தரவு பண்ணியிருக்க மாட்டேன்…” என்று தொடர்ந்து சொன்னவளிடம் இப்போது தன்னை நினைத்தே குன்றல் தெரிந்தது.
அதில் அவ்வளவு நேரம் அவனிடமிருந்த இலகுத்தன்மையும், புன்னகையும் தொலைந்து போக, முகம் இறுக அவளைப் பார்த்தான்.
“என் முகம் பார் அல்லி…”
அழைத்தும் அவள் திரும்பாமல் இருக்க,
“ஏய் ஆள்முழுங்கி, என் முகத்தைப் பாருடி…” என்றான் அதட்டலாக.
அந்த அதட்டலை விட, அழைத்த விதம் அவளை அவன் முகம் பார்க்க வைத்தது.
“இத்தனை நாள் நீ பார்த்த வெற்றியா இல்லாம, வெற்றிவேற்செழியனா இப்ப நீ என்னைப் பார்ப்பதால் தான் இப்படித் தொந்தரவு அது இதுன்னு உளறிட்டு இருக்க. என் பெயர் மாறியதாலோ, என் தொழில் மாறியதாலோ நீ பார்த்த, ரசித்த, விரும்பிய எல்லாம் மாறிட்டதாக அர்த்தம் இல்லை.
நான் உன் மேல் வச்ச காதல் மேலேயே உனக்கு டவுட் இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும். நியாயமா பார்த்தால் எப்படி நீ என் காதலை சந்தேகப்படலாம்னு இந்த நேரம் நான் உன் மேல் கோபம் தான் பட்டிருக்கணும். ஆனா நான் கோபப்படப் போறதில்லை. ஏன்னா உன் மனநிலை எனக்குப் புரியுது.
உனக்கு நான் நிறைய விளக்கங்கள் சொல்ல வேண்டியது இருக்கு. எல்லாத்தையும் பொறுமையா நீ கேட்டாலே நான் உன்னை உண்மையா லவ் பண்ணினேனா, இல்லை டைம் பாஸுக்கு லவ் பண்ணினேனான்னு உனக்கே புரியும்…” என்றான்.
அவனின் காதலை தான் சந்தேகித்ததைப் புரிந்தும் கூடக் கோபப்படாமல் தனக்கு விளக்கம் சொல்ல தயாரானவனை அதிசயத்துடன் பார்த்தாள் அல்லி.
குடிசையில் சட் சட்டென்று கோபப்படும் வெற்றியைத்தான் கண்டிருக்கிறாள். இங்கே இவன் பேசும் விதத்தில் அவ்வளவு பொறுமை இருந்தது.
அதில் கூட வித்தியாசத்தைக் கண்டாள் அல்லிராணி.
அவளின் பார்வையைக் கனிவுடன் எதிர்கொண்டான் வெற்றி.
அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வேறு பக்கம் பார்வையை அலைய விட்டாள்.
அவளின் பார்வை கிருதியின் புகைப்படத்தின் மீது பதிந்தது. அப்போது தான் அவனின் அன்னையைப் பற்றி அவளுக்கு ஞாபகம் வந்தது.
அவருக்குப் பக்கவாதம் வந்தது வரை தான் சொல்லியிருந்தான். அதன் பிறகு அவர் எப்படி இருக்கிறார் என்று அவன் சொல்லியிருக்கவில்லை.
எங்கே அவர்? உள்ளே அறைக்குள் இருப்பாரோ? என்று நினைத்தபடியே “உங்க அம்மா உள்ளே இருக்காங்களா?” என்று கேட்டாள்.
“உள்ளே இல்ல, மேல இருக்காங்க…” என்று அவன் சொன்னதும் மாடியை நிமிர்ந்து பார்த்தாள்.
“மாடியில் இல்லை. மேலோகத்தில்…” என்றான்.
“என்ன?” என்று அதிர்வுடன் அவன் புறம் திரும்பினாள்.
அவனின் முகம் வேதனையில் கசங்கியிருந்தது.
“எப்போ?” அவனின் அருகில் சென்று ஆறுதல் சொல்ல முடியாத தவிப்புடன் கேட்டாள்.
“கிருதி இறந்த பிறகு, அம்மாவுக்கும் ஸ்ட்ரோக் வந்து அவங்க படுத்த படுக்கையான சமயத்தில் தான், வெற்றிமாறன் கேஸ் கைக்கு வந்து, அடுத்து என்ன பண்ணலாம்னு பார்த்து மூவ் பண்ணிட்டு இருந்தோம்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அம்மாவுக்கு நர்ஸ் வேலைக்கு வச்சிருந்தும் சில நாட்கள் லீவ் போட்டுப் பகலில் ரத்னா அம்மாவை பார்த்துக்கிட்டாள். நைட் நான் வீட்டுக்கு வந்ததும் பார்த்துக்கிட்டேன். ஒரு நாள் காலையில் நான் எழுந்து அம்மாவைப் பார்த்தப்ப அம்மா கண் முழிக்கவே இல்லை. தூக்கத்திலேயே உயிர் போயிடுச்சு…” என்றான்.
“ஓ, ரொம்பக் கஷ்டமா இருக்கு…”
“எனக்குன்னு அம்மாவாவது இருக்காங்கன்னு கொஞ்சம் சந்தோசப்பட்டேன். ஆனா அவங்களும் இப்போ இல்லை…” என்றவன் குரல் கசந்து வழிந்தது.
அருகில் சென்று அவனை அணைத்து ஆறுதல் சொல்ல அல்லியின் மனம் துடித்தது. ஆனால் ஏதோ ஒன்று அவளைத் தடுக்கக் கையை இறுக மூடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அங்கே சிறிது நேரம் அமைதி ஆட்கொண்டது.
பின் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு அல்லியிடம் பேச ஆரம்பித்தான்.
“வெற்றிமாறன் கேஸில் அவனோட மூவ் தெரிஞ்சால் தான் அவனைப் பிடிக்க முடியும்னு அம்மா இறந்து சில நாட்களுக்குப் பிறகு வெற்றிமாறன் வீடு இருந்த ஏரியாவில் நானும் ஆனந்தும் அந்தக் குடிசை பகுதிக்கு குடிவந்தோம். அப்போத்தான் எதிர் வீட்டில் உன்னைப் பார்த்தேன்…” என்று அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
அவன் அங்கே குடிவந்த நாள் கூட அவளுக்கு நன்றாக நினைவில் இருந்தது.
“நான் அங்கே வந்த கொஞ்சநாளில் உன் பார்வை என்னையே தொடர்வதை உணர்ந்தேன். அப்போ என்னடா கேஸ் விஷயமா வந்த இடத்தில் இப்படி ஒரு தொல்லைன்னு தான் முதலில் தோனுச்சு…” என்று சொன்னதும் அல்லியின் முகம் சுருங்கியது.
“நல்லா கவனி, முதலில்னு தான் சொல்லியிருக்கேன்…” என்று அவளின் முகச் சுருக்கத்தைப் போக்க முயன்றான்.
“ஆனா அடுத்தடுத்து எனக்கும் உன் மேல கொஞ்சம் ஆர்வம் வர ஆரம்பிச்சது. உன்னோட துறுதுறுப்பு, தைரியமா பட்டுபட்டுன்னு ஏதாவது செய்து விடுவது எல்லாம் என் மனசை ஈர்க்க ஆரம்பிச்சது.
ஆனாலும் ஆரம்பத்தில் எனக்கு ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது. உன் மீதான என் ஈர்ப்பு காதலா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ண கூடிய மனநிலை எல்லாம் அப்ப எனக்கு இல்லை.
வெற்றிமாறனை வாட்ச் பண்ணனும், அவனை எப்படி வலை போட்டு சரியா பிடிக்கணும், அவன்கிட்ட வேலைக்குப் போற ஆனந்துக்கு எந்த ஆபத்தும் வந்திட கூடாதுன்னு… அந்த யோசனை தான் எனக்கு நிறைய இருக்கும்.
அந்த நேரத்தில் நீ பார்வையாலேயே என்னை டிஸ்டெப் பண்றன்னு கொஞ்சம் கோபம் கூட வந்தது…” என்று அவன் சொன்னதில் அல்லியின் முகம் இன்னும் சுருங்கியதே தவிரத் தெளியவில்லை.
“நான் சொன்னதைக் கேட்டு என் அல்லிராணி அதிரடிராணியா மாறி என் கழுத்தை பிடிப்பாள்னு பார்த்தால், அல்லிராணி அழுகிய மூஞ்சி ராணி மாதிரி முகத்தைச் சுருக்குறாள்…” என்று நக்கலுடன் சொன்னான்.
‘நீங்க என் வெற்றியா மட்டும் இருந்திருந்தா நான் அதைத்தான் செய்திருப்பேன். ஆனா இப்போ உங்க பக்கத்தில் வர கூட எனக்குத் தயக்கமா இருக்கு’ என்று உள்ளுக்குள் மட்டும் சொல்லிக் கொண்டாள் அல்லி.
“ம்ம்… உனக்கு என்னமோ ஆச்சு. சீக்கிரம் உன்னைச் சரி பண்றேன்…” என்றவன் மேலும் பேச ஆரம்பித்தான்.
“உன்கிட்ட உண்மையை மறைச்சு பொய் சொல்லி உன்னை ஏமாத்தணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்லை. அதனால் அந்த நேர என் மனநிலையைச் சொல்றேன்…”
“கேஸ் விஷயமா டிஸ்கஸ் பண்ணத்தான் ஒரு நாள் அடுத்தத் தெருவில் இருக்கும் அந்த வீட்டுக்குப் போனேன். என் டீம் ஆளுங்ககிட்ட பேசிட்டு அந்த வீட்டின் அடுத்த வாசல் வழியா வெளியே போய்ட்டேன்.
ஆனா அன்னைக்கு எனக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு அரக்க பறக்க பஜாருக்கு நீ வந்து நின்னப்பத்தான் நீ சும்மா என்னைச் சைட் மட்டும் அடிக்கலை… ரொம்ப விரும்புறன்னு புரிஞ்சது.
அன்னைக்கு நான் சொன்ன மாதிரி அந்த இடத்திலேயே உன்னைக் கட்டிப்பிடிச்சுக் கிஸ் அடிக்கணும்ன்னு தான் தோணுச்சு. அப்பத்தான் நீயும் என் மனசுல ஆழமா பதிஞ்சிருக்கன்னு எனக்கே புரிஞ்சது.
எனக்கு அடிப்பட்டப்ப உன்கிட்ட என் காதலை சொன்னது, உன்கிட்ட அன்னியோன்யமா நடந்துகிட்டது எதுவுமே டைம்பாஸுக்கு பண்ணியது இல்லை. என் மனசில் உள்ள காதலை உண்மையாத்தான் உன்கிட்ட வெளிப்படுத்திக்கிட்டேன்…” என்றான்.
அல்லியின் முகம் சிறிது மலர்ந்தது. அதோடு அவனின் காதல் பொய்த்துப் போகவில்லை என்ற நிம்மதியும் உண்டாகிற்று.
“ஆனா ரத்னா உங்க வீட்டுக்கு வந்ததை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டப்ப அப்படியெல்லாம் எதுவும் இல்லன்னு நீங்க ஏன் சொல்லலை? அதோட குடும்பப் பொண்ணுங்ககிட்ட மட்டும் தான் தப்பா நடந்துக்க மாட்டீங்கன்னு ஏதேதோ சொன்னீங்க?” என்று கேட்டாள்.
“நீ என்னைப் பத்தி தப்பா நினைச்சப்ப முதலில் வருத்தமாத்தான் இருந்தது. நான் நினைச்சிருந்தால் அப்பயே அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லியிருக்க முடியும்.
ஆனா ரத்னா வீட்டுக்கு வந்து போன காரணம் சொன்னால் என்னைப் பத்தி நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியது இருக்கும்.
அப்போ மட்டுமில்லை கேஸ் முடியுற வரை என்னைப் பத்தி உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். அது ஒரு சேப்டிக்குத் தான்.
அந்த ஏரியாவில் இருந்தப்ப நான் வெறும் துணி வியாபாரம் செய்யுற வெற்றி. அவ்வளவு தான். அதுக்கு மேல யாருக்கும் என்னைப் பத்தி தெரிய விடக்கூடாதுன்னு தான்…”
“நீங்க காதலிக்கிற பொண்ணுக்கிட்ட கூடச் சொல்லக் கூடாதா?”
“அப்பயே என்னைப் பத்தி தெரிஞ்சிருந்தால் என்ன செய்திருப்ப?” என்று அவன் கேட்க திருதிருவென்று முழித்தாள்.
“நானே சொல்லவா? தெரிஞ்சிருந்தால் இதோ இப்போ எனக்கு ஒரு ஆறுதல் சொல்வதைக் கூடச் செய்ய முடியாம தள்ளி நின்னியே அதே போல என்னை விட்டுத் தள்ளிப் போயிருப்ப. உன் விலகல் என்னை இப்ப காயப்படுத்திட்டு இருப்பது போல் அப்பயும் காயப்படுத்தியிருக்கும்.
சொந்த விஷயத்தில் டிஸ்டெப் ஆகி கேஸ்ல ஏதாவது சொதப்பியிருப்பேன். அப்படி மட்டும் சொதப்பியிருந்தால், என்னோட உயிர் மட்டுமில்ல… ஆனந்த், எங்களுக்குக் கேஸ்ல ஹெல்ப் செய்த காளின்னு எங்க மூணு பேர் உயிரும் அந்த வெற்றிமாறன் கையால் போயிருக்கும்…” என்றான்.
‘என்ன வார்த்தை சொல்லிவிட்டான்?’ என்பது போல் துடித்துப் போனாள் அல்லி. அவனுக்கு ஒன்று என்றால் தன்னாலும் உயிரோடு இருக்க முடியாது என்று அவளுக்கு அந்த நேரம் புரிந்தது.
மனவலியுடன் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
அதோடு தான் ஆறுதல் சொல்லாமல் தன்னை அடக்கிக் கொண்டதையும் கண்டுகொண்டிருக்கிறான் என்று அவஸ்தையாகவும் உணர்ந்தாள்.
“சும்மா உன்னைச் சீண்டிப் பார்க்கணும்னு தான் குடும்பப் பொண்ணுங்ககிட்ட வச்சுக்க மாட்டேன் அது இதுன்னு சொன்னேன். ஆனா ஒரு விஷயம் என்னை ரொம்ப மலைச்சுப் போக வச்சது.
பொண்ணுங்ககிட்ட எனக்குத் தப்பான பிகேவியர் இருக்குன்னு நீ தப்பா நினைச்சப்பயும் என் மேல கொஞ்சம் கூடக் குறையாத காதலை வச்சுருந்த. அதுக்கு நீ காரணம் சொன்னப் பார், உன் உள் மனசு அவன் எப்படி இருந்தாலும் நான் தான் உனக்குன்னு சொன்னதுன்னு. உன் காதலில் நான் மலைச்சுத்தான் போயிட்டேன்…” என்றான் மனம் நெகிழ.
அவனின் நெகிழ்வு அவளையும் நெகிழ வைத்தது தான். ஆனாலும் தன் உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் இருக்க முயன்றாள்.
“நீ பஸ் ஸ்டாண்டில் என்னைக் காரில் பார்த்து வந்தப்பயும் சரி, வீட்டில் நம்ம கல்யாணத்துக்குப் பேசுறேன்னு சொன்னதும் பொய் தான். என் அடையாளத்தை அந்த நேரம் உன்கிட்ட இருந்து மறைக்க எனக்கு வேற வழி தெரியலை. அந்த நேரம் வாய்க்கு வந்த பொய்யைச் சொல்லிட்டேன்…”
“அப்புறம் ரத்னா போதை மருந்து சாம்பிள் கொடுத்துட்டுப் போன மறுநாள் நீ வீட்டை திறந்து நோட்டம் விட்டப்பிறகு தான் இந்த ரத்னா ஏதோ சொல்லி குழப்பி விட்டுருக்காள்னு கெஸ் செய்தேன்.
அது மட்டுமில்லாம ஆனந்தை வெற்றிமாறன் ஆளுங்க கூடப் பார்த்து, அவங்க சொன்ன வெற்றி நான் தான்னு நினைச்சு நீ குழம்பி அந்தத் தொழிலை விட்டுருங்கன்னு நீ என்கிட்ட சொன்னப்ப நீ மறுபடியும் ஏதோ தப்பா நினைச்சுக்கிட்டன்னு புரிஞ்சது.
நான் வேற வெற்றின்னு சொன்னால் என்னைப் பத்தி விவரம் சொல்ல வேண்டியது இருக்கும். அது அப்போதைக்கு வெளியே தெரியாமல் இருப்பது தான் நல்லதுன்னு தோணுச்சு. அதுதான் அந்த வெற்றி செய்தது எல்லாம் நான் செய்த மாதிரி உன் மனதில் ஒரு பிம்பம் உருவானதை நான் மறுக்கலை.
அதோட வெற்றிமாறனை கைது செய்யும் வரை நீ கொஞ்ச நாள் என்னை விட்டுத் தள்ளி இருப்பதுதான் நல்லது. உன்னைத் தள்ளி நிறுத்த என்ன செய்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.
அந்த நேரம் நீ என்னைத் தவறாக எடுத்துக் கொண்டதை நான் சாதகமாக்கி உன்கிட்ட உண்மையைச் சொல்லாம உன்மேல் கோபமா இருக்குற மாதிரி நடிச்சேன்.
அந்த நேரம் அந்தக் கோபம் தேவைப்பட்டது. ஏன்னா வெற்றிமாறன் கேஸ்ல அவனைப் பிடிக்க நாங்க நெருங்கி இருந்தோம். சோ, அந்த நேரம் உன் செப்டியையும் பார்க்க வேண்டியது இருந்தது.
உன்னை நான் தள்ளி நிறுத்தினாலும் உன்னைத் தனியே விட முடியாது. நீ தப்பா புரிஞ்சிக்கிட்டதில் ஏதாவது ஏட்டிக்குப் போட்டியா செய்து வச்சிருவியோன்னு நினைச்சேன். அதனால் ரத்னாவை உன்னை ஃபாலோ பண்ண மட்டுமில்லாம உனக்குப் பாதுகாப்பாக இருக்கவும் அனுப்பினேன்.
“நான் தான் போதை மருந்து விக்கிறேன்னு நினைச்சு என்னை அந்தத் தொழிலை விட்டுருங்கன்னு நீ சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த நேரம் உன்னைக் கட்டிப்படிச்சு அப்படிச் சொன்ன உன் வாயை அப்படியே…” என்றவன் கண்களைச் சிமிட்டி உதட்டை குவித்துக் காட்டினான்.
‘யோவ், அப்படிச் செய்யாதே. என்னால் நான் எடுத்த முடிவை செயல்படுத்த முடியாம போயிட போகுது…’ என்று அல்லிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது.
“ஆனா, நீ போலீஸ் ஸ்டேஷன் போவன்னு நான் எதிர்பார்க்கலை. போலீஸ்ல கம்ளைன்ட் கொடுப்பேன்னு நீ சும்மாதான் சொல்றன்னு நினைச்சேன்.
அம்மாடியோ! இந்தப் பொண்ணு எனக்கு ஏத்த பக்கா பொண்ணுடான்னு எனக்கு அப்போ எப்படி இருந்தது தெரியுமா?” என்றான் காதலுடன்.
அல்லியோ சிலை போல அமர்ந்திருந்தாள்.
“என் காதலும் பொய்யில்லை. நான் உன்னைக் காதலிச்சதும் பொய்யில்லை ஆள்முழுங்கி. என்னோட நடை, உடை, வேலையைப் பார்த்து எதுவும் முடிவு பண்ணாதே.
என் மனசைப் பார்! அது உன்னை மட்டும் தான் மனசில் சுமந்துகிட்டு இருக்கு…” என்றவன் எழுந்து அல்லியின் அருகில் வந்தான்.
சோஃபாவில் அமர்ந்திருந்தவளின் கையை மென்மையாகப் பிடித்து எழுப்பி விட்டான்.
அதுவரை அவன் சொன்னதை எல்லாம் கேட்டு அதில் ஆழ்ந்திருந்தவள், அவனின் அருகாமையை உணர்ந்ததும் அவனின் கையை உதறி வேகமாகப் பின்னடைந்தாள்.
“இவ்வளவு சொன்ன பிறகும் என் மேல நம்பிக்கை வரலையா ஆள்முழுங்கி?” அவள் கையை உதறிய வேகத்தில் வருத்தத்துடன் கேட்டான்.
“உங்க காதல் உண்மைன்னு புரியுது. ஆனா அதை விட நீங்க காதலிக்கத் தகுதியான ஆள் நான் இல்லைன்னு தான் எனக்குத் தலையில் ஆணி அடிச்சது போலப் புரியுது…” என்று வேதனையுடன் சொன்னவள் அவனை விட்டு இன்னும் தள்ளி நின்றாள்.
“திரும்ப ஏதாவது உளறாதே ஆள்முழுங்கி. என் காதலியா, மனைவியா வர்ற எல்லாத் தகுதியும் உனக்கு மட்டும் தான் இருக்கு…”
“இல்லை… இல்லவே இல்ல. காதலிச்சால் மட்டும் அந்தத் தகுதி வந்திடாது. நீங்க இருக்குற உயரம் ரொம்பப் பெருசு. நான் வெறும் குடிசை. இதை நான் தங்குற இடத்தை வச்சு மட்டும் சொல்லலை. படிப்பு, வேலை, தோற்றம்னு எல்லாத்தையும் வச்சுத்தான் சொல்றேன்.
எல்லாத்திலேயும் நமக்கிடையே நிறைய வித்தியாசம் இருக்கு. அதனால் என்னை உங்க மனசில் இருந்து தூக்கிப் போட்டுட்டு, உங்களுக்கு ஏத்தப்போலப் பொண்ணு பார்த்துக் கட்டிக்கோங்க…” என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
“அடியேய்! அப்படியே விட்டேனா பாரு. என்ன பேசுறன்னு புரிஞ்சு தான் பேசுறயா? என்னை மறந்து உன்னால் வாழ முடியுமா?” என்று கேட்டுக் கொண்டே அவளின் அருகில் சென்றான்.
“நல்லா புரிஞ்சு தான் பேசுறேன். இப்ப வேணும்னா காதல் பெருசா தெரியலாம். ஆனா பின்னாடி ஏண்டா இவளைக் விரும்பினோம்னு ஒரு நிமிஷம் நீங்க நினைச்சாலும் நம்ம காதலும் செத்துப் போகும். நானும் செத்துப் போவேன்…” என்றாள்.
“ஏய், என்ன பேச்சுடி பேசுற? அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. எப்பயும் உன்னை நான் குறைவாக நினைக்க மாட்டேன் ஆள்முழுங்கி. அதனால் இப்படி எல்லாம் பேசாதே…” என்றவன் அவளை அணைத்துக் கொள்ள நினைத்தான்.
அவனை விட்டு வேகமாகப் பின்னடைந்தவள், “இல்லை நான் உங்களுக்கு வேண்டாம். நான் ஆள்முழுங்கி தானே? உங்க நினைப்பையும் எனக்குள்ள முழுங்கிக்கிறேன்…” என்றவள் கண்களிலிருந்து சரசரவெனக் கண்ணீர் இறங்க ஆரம்பித்தது.
“நீ இப்போ என்கிட்ட அடிதான் வாங்க போற. இங்கே வா. என் பக்கத்தில் வந்திட்டாலே உனக்கே என்னை விட்டுப் பிரிய முடியாதுன்னு உனக்குப் புரிஞ்சிடும்…” என்றவன் அவளின் கையைப் பற்றி இழுத்து அணைக்கப் போனான்.
“இல்லை… என்னைத் தொடாதீங்க…” என்று வேகமாக விலகியவள், “சரி வராது… உங்களுக்கும் எனக்கும் எதுவுமே சரிவராது…” என்று சொன்னவள் அடுத்த நிமிடம் அங்கிருந்து ஓடி கதவைத் திறந்து கொண்டு வெளியேறிவிட்டாள்.
“ஆள்முழுங்கி… நில்லுடி. நான் சொல்வதைக் கேளு…” என்று வெற்றியும் பின்னால் சென்றான்.
ஆனால் அவளோ கண்ணீர் வடிந்த கண்களைத் துடைத்துக் கொண்டே விரைந்து அங்கிருந்து சென்று விட்டாள்.
“இவளுக்கு இப்ப நான் என்ன சொல்லி புரிய வைப்பேன்?” என்று நினைத்துத் தலையில் கை வைத்த வண்ணம் சோஃபாவில் தளர்ந்து அமர்ந்தான்.
அடுத்தவர்களுக்கு ஆயிரம் அறிவுரை சொல்பவர்கள் கூடத் தனக்கு என்று வரும்பொழுது தடுமாறித்தான் போவார்கள். அந்த நிலையில் தான் இருந்தான் வெற்றி.
அந்த நேரம் வெளியே வந்த ரத்னாவும், ஆனந்தும் அவன் அமர்ந்திருந்த நிலையைக் கண்டு வேகமாக அவனின் அருகில் வந்தனர்.
“என்னாச்சு செழியா, ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க? அல்லி எங்கே?” என்று கேட்டான் ஆனந்த்.
“போயிட்டா…” என்றான் சோர்வாக.
“போயிட்டாளா? ஏன்? எல்லாம் பேசி சரியாகிட்டீங்க தானே?” என்று கேட்டாள் ரத்னா.
“எல்லாம் பேசிட்டேன். ஆனா அவள் சரியாகலை…”
“உன்னை நம்பலையா?”
“நம்புறா…”
“அப்புறம் என்ன பிரச்சனை?”
“எனக்குத் தகுதியானவள் அவள் இல்லையாம். அதனால் நான் வேற பொண்ணைப் பார்த்துக் கட்டிக்கணுமாம்…” என்றான் கடுப்பாக.
“அவள் என்ன லூஸா? இதை எல்லாம் நீ யோசிக்காமயா அவள்கிட்ட காதலை சொல்லியிருப்ப?” என்றாள் ரத்னா.
“அதை அவள் யோசிக்கவே இல்லை…”
“இப்ப என்ன பண்ண போற செழியா?” என்று ஆனந்த் கேட்க,
“ம்ம், கல்யாணம் பண்ணிட வேண்டியது தான்…” என்றவன் ஒரு முடிவுடன் அங்கிருந்து எழுந்து சென்றான்.