மனம் கொய்த மாயவனே – 33

அத்தியாயம் – 33

மருத்துவமனையில் அந்த அறையின் வாசலில் சோகமே உருவாக அமர்ந்திருந்தான் செழியன்.

“என்னாச்சு செழியா, அம்மா இப்போ எப்படி இருக்காங்க?” அப்போது தான் அங்கே பரபரப்பாக வந்து சேர்ந்த ஆனந்த் கேட்டான்.

“உள்ளே இருக்காங்க, போய்ப் பார்…” என்றான் சோர்வாக.

உள்ளே சென்று பார்த்துவிட்டு வருத்தமாக வெளியே வந்தான் ஆனந்த்.

“டாக்டர் என்ன சொன்னார் செழியா?”

“ஸ்ட்ரோக்னு சொல்றாங்க ஆனந்த். ஒரு கை, கால் செயலிழந்து போய்டுச்சாம். பேச்சும் குழறலாத்தான் வரும்னு சொல்லிட்டாங்க…” என்றவன் வேதனையுடன் கண்களை மூடிக் கொண்டான்.

அவனின் அருகில் அமர்ந்து தோளில் ஆறுதலாகக் கையை வைத்து அழுத்தினான் ஆனந்த்.

“நல்லாத்தானே இருந்தாங்கடா. திடீர்ன்னு என்ன ஆச்சு?”

“கிருதி போனதில் இருந்தே அம்மா ரொம்ப உடைஞ்சு போய்ட்டாங்கடா. அவளை நல்லா பார்த்துக்கலையோ, அவ சாக அவங்களும் ஒரு காரணமோன்னு உள்ளுக்குள் ஒரு வருத்தம் அவங்களுக்கு இருந்துட்டே இருந்தது.

நானும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தேன். ஆனா நான் பேசும் போது சரி சரின்னு சொன்னவங்க, அதுக்குப் பிறகும் அவங்க தெளியவே இல்லை. அவங்கப்பட்ட மனக்கவலை அவங்களை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுருச்சு…” என்றவன் கண்கள் சிவந்து அவனின் வேதனையை வெளிக்காட்டின.

நண்பனின் வேதனை புரிய, அவனின் தோளில் கைப்போட்டு ஆறுதல் அளிக்க முயன்றான்.

“எனக்குன்னு இப்போ இருக்குறது அம்மா மட்டும் தானேடா ஆனந்த். ஆனா அவங்களும் இப்போ இந்த நிலையில் இருக்காங்க என்கிற போது மனசெல்லாம் ரணமா வலிக்குதுடா…” என்றவன் கண்ணில் இருந்து சொட்டு சொட்டாகக் கண்ணீர் வெளியேறி கண்கள் முழுவதும் ததும்பி நின்றது.

“உனக்கு நாங்களும் இருக்கோம் செழியா. ஃபீல் பண்ணாதே! அம்மா சரியாகிடுவாங்க…” என்று அவனைத் தேற்ற முயன்றான்.

“அதானே, நல்லா சொல்லுடா இவனுக்கு…” என்று சற்று நேரத்திற்கு முன் வந்து பவானியைப் பார்த்து விட்டுச் செழியனிடம் பேசிய ரத்னா அவன் ஒன்றும் உண்ணவில்லை என்று தெரிந்ததும் அவனுக்காக உணவு வாங்க சென்றிருந்தவள் வாங்கி விட்டுத் திரும்பியிருந்தாள்.

“இப்போ எதுக்கு நீ இப்படிக் கண்கலங்கிட்டு இருக்க? நான் இருக்கேன். ஆனந்த் இருக்கான். உனக்கு நாங்க எப்பவும் இருப்போம். கலங்காதே! ஆன்ட்டி சரியாகிடுவாங்க. இந்தா, இதைச் சாப்பிடு. நீ தெம்பா இருந்தால் தானே ஆன்ட்டியைக் கவனிச்சுக்க முடியும்?” என்ற ரத்னா வாங்கி வந்த இட்லி பார்சலை பிரித்து அவனிடம் நீட்டினாள்.

“இல்லை ரத்னா, எனக்கு வேண்டாம் என்னால் சாப்பிட முடியாது…” என்று செழியன் மறுக்க,

“பிடிவாதம் பிடிக்காதே செழிப்பானவனே. உன் மன வருத்தம் எனக்குப் புரியுது. ஆனா நீ பட்டினி கிடந்தால் அதை நினைச்சு ஆன்ட்டி இன்னும் தான் ஃபீல் பண்ணி உடம்பை கெடுத்துக்குவாங்க. அவங்களுக்காகவாவது சாப்பிடு…” என்று அவள் சொல்ல, மறுப்பாகத் தலையை அசைத்தான். .

முதல் நாள் இரவு அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது வீட்டு வேலையாள் “அம்மாவுக்கு உடம்பு முடியலை தம்பி” என்று தொலைபேசியில் அழைத்துச் சொல்லவும் வீட்டிற்கு விரைந்து சென்று, பவானியை மருத்துவமனையில் சேர்த்தான்.

இரவு அவன் இருந்த பதட்டத்தில் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் விட்டிருக்க, காலையில் அவன் வேலைக்கு வராமல் இருந்த போது தான் அவன் மருத்துவமனையில் இருக்கும் தகவல் ரத்னாவிற்கும், ஆனந்திற்கும் தெரிய வந்தது.

தெரிந்ததும் முதல் ஆளாக ஓடி வந்திருந்தாள் ரத்னா. ஆனந்த் கிளம்பும் நேரம் சரியாக அவனுக்கு வேறு ஒரு வேலை வந்திருக்க, அதை முடித்து விட்டு இப்போது தான் வந்து சேர்ந்தான்.

“நேத்து நைட்டும் சாப்பிட்டிருக்க மாட்ட. இப்போ மதியம் நெருங்கிடுச்சு செழியா. கொஞ்சமா சாப்பிடு…” என்றான் ஆனந்த்.

செழியனுக்கு ஏனோ மனமே விட்டுப் போனது போல் இருந்தது. சமீபத்தில் தான் கிருதியை இழந்தான். அதில் மனதை தேற்ற முயன்று கொண்டிருக்கும் போதே அன்னை படுத்த படுக்கையானது மனதை ரணமாக்கியிருந்தது.

அதில் அவனுக்கு உணவை நினைத்துப் பார்க்க கூடப் பிடிக்கவில்லை. அதனால் அவன் மறுக்க, அவனின் மனநிலையைப் புரிந்து கொண்ட ரத்னா நிலைமையைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள்.

இட்லியைப் பிட்டுக் கையில் எடுத்தவள் அவனின் கையில் கொடுத்தாள். ஆனால் அதை வாங்க செழியன் மறுக்க, “இப்ப சாப்பிடலைனா ஹாஸ்பிட்டலில் இத்தனை பேரு பார்த்தாலும் பரவாயில்லைன்னு நானே ஊட்டி விட்டுருவேன்…” என்று சொல்ல, கையில் உணவை வாங்கி மெதுவாக உண்ண ஆரம்பித்தான்.

செழியன் சாப்பிட ஆரம்பிக்கவும் இருவரையும் தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான் ஆனந்த்.

அவன் உண்ண ஆரம்பித்ததும் ரத்னாவின் கண்ணில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

“உன்னை இவ்வளவு வேதனையோட பார்க்க ரொம்பக் கஷ்டமா இருக்கு செழியா…” என்று இப்போது அவள் கலங்கினாள்.

பாதி மட்டும் சாப்பிட்டு, “போதும்…” என்றவன், “நீயும், ஆனந்தும் கூட என்னை விட்டுப் போயிடுங்க ரத்னா. எனக்கு என்னமோ ரொம்பப் பயமா இருக்கு. என்னைச் சுத்தி இருக்கிறவங்களுக்கு எல்லாம் ஏதோ ஆகும் போது, எங்க உங்களுக்கும் ஏதாவது ஆகிடுமோன்னு உறுத்தலா இருக்கு…” என்றவனைப் பார்த்து,

“லூசாடா நீ?” என்று அதட்டினாள்.

“எப்போ இருந்து நீ இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்ச? அடுத்தவங்களுக்கே ஆயிரம் புத்திமதி சொல்றவன்டா நீ. நீ எப்படி இப்படி யோசிக்கிற?” என்று அவள் கேட்க, மௌனமாக இருந்தான்.

சுயமாகச் சிந்தித்து, வேலையில் கெட்டிக்காரனாக இருந்து, அடுத்தவர்களுக்கே எடுத்துச் சொல்பவனாக இருந்தாலும், வாழ்க்கையில் அடுத்தடுத்து அடிகள் விழும் போது மனம் பலவீனம் அடைந்துவிடும் போலும்.

செழியனும் அந்த நிலையில் தான் இருந்தான். காலையில் மயக்கம் தெளிந்து கண் விழித்த அன்னை பேச முடியாமல் வாய் கோணி திணறியதிலேயே அவனின் மனம் ஆட்டம் கண்டு போனது.

அதில் இடிந்து போனவன் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அவனின் அந்தப் பலவீனமான மனநிலை இப்போது ரத்னாவிடம் ஏதேதோ பேச வைத்துக் கொண்டிருந்தது.

“நீ நைட்டெல்லாம் தூங்காம இருக்கிறதால ஏதேதோ உளறிட்டு இருக்கன்னு நினைக்கிறேன். நீ வீட்டுக்குப் போய்க் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து குளிச்சிட்டு வா. நான் இங்கே பார்த்துக்கிறேன்…” என்று செல்ல மறுத்தவனை ஆனந்துடன் கிளப்பி வைத்தாள்.

தூங்கி எழுந்து வந்த பிறகு சற்றுத் தெளிந்திருந்தான் செழியன். அன்னையைப் பார்த்து அவருக்கு ஆறுதல் சொன்னவன் தன்னையும் தேற்றிக் கொள்ள முயன்றான்.

மேலும் மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்தார் பவானி.

பின் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அதுவரை விடுமுறை எடுத்திருந்தவன், மீண்டும் வேலைக்குச் செல்லும் நாள் வந்த போது என்ன செய்வது என்று விழி பிதுங்கிப் போனான்.

அன்னையை வேலைக்கு ஆள் வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் தான். ஆனாலும் வெற்றி கேஸ் கைக்கு வந்திருக்கும் நிலையில் அவனின் வேலை கூடுதலாக இருக்கும். அப்படியிருக்க, என்ன தான் வேலை ஆள் இருந்தாலும் தானும் அன்னைக்கு இந்த நேரத்தில் ஆறுதலாக இருக்க வேண்டுமே என்ற எண்ணம் அவனை வேலையில் ஒன்ற விடாமல் செய்து கொண்டிருந்தது.

ஆனால் அவனின் தவிப்பை புரிந்து கொண்ட ரத்னா, “நான் ஆன்ட்டியைக் கவனிச்சுக்கிறேன் செழியா. நீ வெற்றி கேஸை நல்லபடியா முடிக்கப் பார்…” என்று அவனுக்கு ஆதரவாகத் துணை நின்றாள்.

அவளை ஆதூரமாகப் பார்த்தவன், அவளின் கையை எடுத்து தன் கண்களில் அழுத்தி வைத்துக் கொண்டான்.

“டேய், உனக்கு நான் பண்ணாம வேற யார் பண்ணுவா? ஓவரா பண்ணாதே…” அவன் செய்கையில் மனம் நெகிழ்ந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போலப் பேசி அவனை இயல்பாக்க முயன்றாள்.

“என்னன்னு தெரியலை ரத்னா. இப்பவெல்லாம் மனசு பலவீனமா இருக்குற மாதிரி இருக்கு. நானா இப்படி இருக்கேன்னு எனக்கே வித்தியாசமாத்தான் படுது. ஆனாலும் அதிலிருந்து வெளியே வர முடியாம தவிப்பா இருக்கு…” என்றான்.

“அம்மாவுக்கு இப்படி ஆகவும் உனக்கு அப்படித் தோணுதுன்னு நினைக்கிறேன் செழியா. கேஸ் பக்கம் கவனத்தைத் திருப்பு. உன் மனசு உன் கட்டுப்பாட்டுக்குள் வந்திடும்…” என்றாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்தான் ஆனந்த்.

“இன்னைக்கு ஆபிஸ் வர்றதா சொன்னியே, போகலாமா செழியா?”

“ம்ம், போகலாம் ஆனந்த். இரு அம்மாவை பார்த்துச் சொல்லிட்டு வந்துடுறேன்…” என்ற செழியன் அன்னை இருந்த அறைக்குச் சென்றான்.

அங்கே கட்டிலில் படுத்திருந்தார் பவானி. அவரின் அருகில் சென்று நின்றவன், “அம்மா…” என்று மென்மையாக அழைத்தான்.

அதில் அவர் கண்களைத் திறந்து பார்க்க, “வேலைக்குக் கிளம்புறேன்மா. ரத்னா உங்களுக்குத் துணையா இருக்கேன்னு சொல்லியிருக்கா. நான் முடிஞ்ச வரை சீக்கிரம் வரப் பார்க்கிறேன்…” என்றான்.

“ஹா… போ..போயி…வா…” என்று அவர் குழறலாகப் பேச செழியனுக்குத் தொண்டை அடைத்துக் கொள்ளும் போல் இருந்தது.

தன்னைச் சமாளித்துக் கொண்டு வெளியே வந்தவன் வேலையைத் தொடர சென்றான்.

“நான் வராதப்ப கேஸில் ஏதாவது மூவ் செய்தியா ஆனந்த்?”

“சில இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணிருக்கேன் செழியா. ஆனா வெற்றி யாருன்னு கண்டுபிடிக்கிறது மட்டும் கஷ்டமா இருக்கு. அவன் எந்த ஏரியாவில் இருப்பான்னு மட்டும் ஒரு க்ளூ கிடைச்சிருக்கு. அதை வச்சுத்தான் நாம மேற்கொண்டு மூவ் பண்ணனும்னு நினைக்கிறேன்…” என்றான்.

“ஓகே ஆனந்த். அதுக்கு முன்னாடி நாம இந்தப் போதை மருந்து விற்பவர்கள் சிலரைப் பிடிக்கணும் ஆனந்த். எவனாவது ஒருத்தன் கண்டிப்பா வெற்றியைப் பார்த்திருப்பான்.

வெற்றி போதை மருந்து சிறிய அளவில் கை மாத்துறவனா மட்டும் இருந்தால் இப்படித் தன்னோட அடையாளமே தெரியாத அளவுக்கு வாழ வேண்டிய அவசியமில்லை.

அவன் இப்படித் தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு வாழ்றான்னா கண்டிப்பா போதை மருந்து வியாபாரம் பெரிய அளவில் பண்றான்னு தோணுது. அந்த எண்ணத்தில் தான் இந்தக் கேஸை கேட்டு வாங்கியிருக்கேன்.

வெற்றியை வெற்றிகரமா பிடிப்பதில் தான் நம்ம வெற்றியே அடங்கியிருக்கு…” என்றான்.

“இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணின வரை அப்படித்தான் தெரியுது செழியா. அவன் யாருன்னு அடையாளம் மட்டும் தெரிஞ்சுட்டா பிடிச்சுடலாம்…” என்றான்.

“அந்த வேலையை ஆரம்பிப்போம். நான் சொன்ன மாதிரி செய்…” என்று அவனிடம் சில திட்டங்களைச் சொன்னான் செழியன்.

அவர்கள் அந்த வழக்கில் முழு மூச்சாக இறங்கியதின் பலனாக வெற்றியைப் பற்றிச் சில தகவல்கள் கிடைத்தது. அதை வைத்து வழக்கில் இருவரும் மேலும் முன்னேறி சென்றார்கள்.


“வெற்றி… வெற்றி…” என்று பதறியபடி அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்த கிரியின் குரலை நிதானமாக எதிர்கொண்டான் வெற்றி.

“என்ன விஷயம் கிரி? எதுக்கு இவ்வளவு பதட்டம்?”

“அது வந்து வெற்றி…” அவன் தயங்க,

“ம்ம்…” என்று மேலே சொல்ல ஊக்கினான்.

வெற்றி எப்படி ரியாக்ட் செய்வானோ என்ற தயக்கம் கிரியை மேலே பேச விடாமல் செய்தது.

“இன்னைக்குச் சரக்கு நம்ம கைக்கு வந்தாகணும். அதுக்குப் பதிலா உன்னோட பதட்டமான போன் வருது. சரக்கு என்னாச்சு? இப்போ நீ எங்கே இருக்க? உன் கூடச் சரக்கு எடுக்க வந்த மத்தவங்க எங்கே? இனி ஒரு நிமிஷம் நீ தயங்கினாலும்…” என்று அழுத்தமாகச் சொன்னவன், ‘நான் என்ன செய்வேன் என்று உனக்கே தெரியும்’ என்பது போல் பேச்சை நிறுத்தினான்.

வெற்றியின் அந்த அழுத்தம் கிரியை வாயைத் திறக்க வைத்தது.

“சரக்கு இன்னும் நம்ம கைக்கு வரலை வெற்றி. எடுக்கப் போகும் போதே சிலர் எங்களைச் சுத்தி வளைச்சுட்டாங்க…”

“போலீஸா?”

“போலீஸ் ட்ரெஸ் போட்டு வரலை வெற்றி. ஆனா போலீஸ் போல வாட்ட சாட்டமா இருந்தாங்க…”

“ம்ம், மேலே சொல்…”

“தப்பித்து ஓட முயற்சி பண்ணும் போது துரையும், காளியும் மட்டுமில்லாம நம்ம பசங்க ரெண்டு பேர் வேற மாட்டிக்கிட்டாங்க…”

“முருகன் எங்கே?”

“அவனுக்குத் தலையில் அடிப்பட்டுருச்சு. என் கூடத்தான் இருக்கான். மயக்கம் வர்ற மாதிரி இருக்குன்னு சொல்றான்…”

“அவன் கிட்ட போனைக் கொடு…”

போன் கை மாறும் சப்தமும், முருகனின் முனங்கலும் மெலிதாகக் கேட்டது.

“வெற்றி…” என்று முருகன் தீனமாக அழைக்க,

“எப்படி விஷயம் வெளியே கசிந்தது முருகா?”

“தெரியலை வெற்றி. நாங்க எதிர்பாராத நேரத்தில் சட்டுன்னு சுத்தி வளைச்சுட்டாங்க. நானும், கிரியும் தப்பியதே அதிசயம்…” என்றான்.

“சில நாளா யாரோ என்னை நோட்டம் விடுற போல ஒரு எண்ணம் இருந்துகிட்டே இருந்தது. அது சரிதான்னு இன்னைக்குத் தெரிஞ்சிடுச்சு. நீயும், கிரியும் இங்கே வந்து சேருங்க…”

“ஆனா சரக்கு வெற்றி?”

“அதை நான் பார்த்துக்கிறேன்…”

“வெற்றி…?” என்று அழைத்த முருகனின் குரலில் ஆச்சரியம் இருந்தது.

இது போல் வேலைக்கு எல்லாம் அவன் செல்வது இல்லை. அப்படியும் அவன் ‘பார்த்துக்கிறேன்’ என்று சொல்கிறான் என்றால் அவனே களத்தில் இறங்க போகின்றான் என்று அர்த்தம்.

“ம்ம்… நான் தான்…” என்று உறுதிபடுத்தினான் வெற்றி.

“ஆனா நம்மை யாரோ நோட்டம் விடுறாங்கன்னு சொல்றீயே. அது போலீஸா இருந்தால் நீயும்?” என்றவன் அதற்கு மேல் சொல்லாமல் நிறுத்த,

“போலீஸோ, இல்லை என்னைப் பிடிக்கக் காத்திருக்கும் எவனோ? அவனா, நானான்னு நேருக்கு நேர் மோதி பார்த்திட வேண்டியது தான். என்னைப் பிடிக்கக் காத்திருக்கும் அந்தக் கொம்பன் யாருன்னு நானும் தெரிஞ்சுக்கணும்ல…” என்றான் வெற்றி.

செழியன் வெற்றியைப் பிடிக்கக் காத்திருக்க, தன்னைப் பிடிக்கக் காத்திருப்பவனைச் சந்திக்கத் தயாரானான் வெற்றி.