மனம் கொய்த மாயவனே – 30
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் - 30
“அம்மா…” என்று அழைத்துக் கொண்டே படிகளில் இறங்கி வந்தான் செழியன்.
அவனின் அழைப்பிற்கு எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் போக அன்னையைத் தேடினான்.
முதலில் சமையலறைக்குச் சென்று பார்த்தான். வீட்டு வேலை செய்யச் சுப்பு என்ற பெண்மணி வந்து சென்றாலும் சமையல் மட்டும் எப்போதும் பவானி தான் செய்வார்.
ஆனால் கிருதியின் மறைவிற்குப் பிறகு பவானி எதிலும் நாட்டமில்லாமல் ஒடுங்கிப் போனார்.
சமையலும் இப்போது சுப்புவே செய்து வைத்துவிட்டுச் சென்று விடுவார். ஆனாலும் அன்னை அங்கே இருக்கலாமோ என்று சென்று பார்க்க அவர் அங்கில்லாமல் போக, அவரின் அறைக்குச் சென்று பார்த்தான்.
அங்கும் அவர் இல்லை என்றதும், யோசனையுடன் புருவம் சுருக்கியவன் வாசலைப் பார்த்தான். வாசல் கதவு தாழ் நீக்கியிருக்க, வெறுமனே சாற்றி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தான்.
வீட்டின் பக்கவாட்டு மரத்தடியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த பவானியின் கண்கள் கிருதியின் ஸ்கூட்டியை வெறித்துக் கொண்டிருந்தன.
கண்களில் நீர் கோர்க்க, அழுகையை அடக்க உதடுகளை அழுந்த மூடியிருந்த அன்னையை வருத்தமாகப் பார்த்தான்.
தந்தை இறந்த பிறகு தனக்காகத் தன் துக்கத்தை அடக்கித் தன்னை வளர்த்து ஆளாக்கி, கிருதி பெற்றோர் இல்லாமல் தனியாக நின்ற போது ‘அத்தை நானிருக்கிறேன்’ என்று அவளையும் அரவணைத்துக் கொண்டு தங்கள் இருவருக்காகவே தன்னை மகிழ்ச்சியாக ஆக்கிக் கொண்டவர்.
இன்று கிருதியின் இழப்பை தாங்க முடியாமல் முடங்கிப் போன அன்னையைக் கண்ட நொடியெல்லாம் செழியனுக்கு வலித்தது.
“அம்மா…” அவரின் தோளில் கைவைத்து அழைத்தான்.
கண்கலங்க மகனை நிமிர்ந்து பார்த்தவர், “ஒரு பொண்ணை நல்லா பார்த்துக்கக் கூட எனக்குத் தகுதியில்லை தானே செழியா?” என்று கேட்டார்.
“அம்மா, அப்படியெல்லாம் இல்லம்மா…” என்றவன் இன்னொரு நாற்காலியை அன்னையின் அருகில் இழுத்துப் போட்டு அமர்ந்து அவரின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டான்.
“இல்லை செழியா. அவளை நல்லபடியா வளர்த்து, கல்யாணம் பண்ணிக் கொடுத்து, அவளைச் சிறப்பா வாழ வச்சுப் பார்க்கணும்னு இந்த வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தப்பயே ஆசைப்பட்டேன். ஆனா இன்னைக்கு இப்படி அல்பாய்சில் எமனுக்குத் தூக்கிக் கொடுத்துட்டேனே. அதுவும் என் கண்ணு முன்னாடியே இருந்தும் அவள் என்ன செய்றாள்னு பார்க்காம விட்டுட்டேனே…” என்றவர் கதறியழ ஆரம்பித்தார்.
அவரைத் தேற்றி ஆறுதலளிக்க முயன்றான். ஆனாலும் அவர் அழுகையைத் தொடர, “அம்மா…” என்று அழுத்தி அழைத்துத் தன் பேச்சைக் கவனிக்க வைத்தான்.
“நானும் கூட அவள் இப்படிச் சாகக் காரணம் ஆகிட்டேனே என்று ரொம்பக் குற்றவுணர்ச்சியில் இருந்தேன். ஆனா நான் விசாரிச்ச வரை கிருதி பத்தி நான் தெரிந்து கொண்டதில் தப்பு நம்ம பக்கம் மட்டுமில்லைன்னு புரிந்தது…” என்ற மகனை ஏறிட்டுப் பார்த்தார் பவானி.
“ஆமாம்மா…” என்றவன் சந்துரு மூலமாகத் தான் அறிந்து கொண்டதைச் சொன்னான்.
அதைக் கேட்டு இன்னும் தான் கதறியழுதார் பவானி.
“இவளுக்கு ஏன்டா புத்தி இப்படிப் போச்சு?” என்று கேட்டு அழுதார்.
“அழாதீங்கமா. எனக்கும் அதே கேள்வி தான். ஆனா நாம கேள்விக் கேட்க வேண்டியவ இப்ப உயிரோடு இல்லையே. அவள் நம்ம கையை மீறிப் போயிட்டாள்மா. நாம அவளுக்கு நல்லதுன்னு பார்த்துப் பார்த்துச் செய்ததை எல்லாம் ஒன்னுமில்லைன்னு ஆக்கிட்டாள்.
அவளை நாம தான் உறவா நினைச்சிருக்கோம். ஆனா அவள் நம்மை அப்படி நினைக்கலையோனு தோணுது. இவங்க என்ன சொல்றது நாம என்ன கேட்கிறதுன்னு தான் நமக்குத் தெரியாம நடந்துகிட்டாள்னு நினைக்கும் போது ரொம்பக் கஷ்டமா இருக்கு…” என்றான் வேதனையுடன்.
மகனும் வேதனையுடன் கண்கலங்க, இப்போது அவனின் கையை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டார் பவானி.
“பொண்ணுங்க சுதந்திரமா இருக்கணும். அவங்க நினைச்சதைச் செய்யணும். அவங்களை ரொம்பக் கட்டுப்படுத்தக் கூடாது என்று சொல்வதை நிறையக் கேள்விப்படுறோம். ஆனா அந்தச் சுதந்திரத்தை எத்தனை பேர் சரியாப் பயன்படுத்திக்கிறாங்க? இல்லை நினைச்சதைச் செய்ய நினைக்கிறவங்க எத்தனை பேர் சரியான விஷயத்தைச் செய்றாங்க?
பலர் அவங்களுக்குக் கொடுத்த சுதந்திரத்தை சரியாப் பயன்படுத்திக்கிட்டாலும், நம்ம கிருதி போல, மிருதுளா போலச் சிலர் அதைத் தவறாகப் பயன்படுத்தித் தங்கள் வாழ்க்கையையே கேள்விக் குறியா ஆக்கிக்கிறாங்க. அப்படி அவங்க செய்த தவறில் ஒருத்தி உயிர் போயிருச்சு. ஒருத்தி மானம் போயிருச்சே…” என்று வருத்தமாகச் சொன்னார் பவானி.
“ஆமாம்மா. பொண்ணோ, பையனோ தனக்குக் கொடுத்த சுதந்திரத்தை சரியாப் பயன்படுத்திக் கொண்டால் தான் அவங்க வாழ்க்கையில் முன்னேற முடியும். அதை விட்டு நான் நினைச்சதை நான் நினைச்சபடி தான் செய்வேன். நீ என்ன கேட்குறதுனு தவறான வழியில் போகும் போது அவங்க வாழ்க்கையே கேள்விக் குறியா மாறிப் போகும்னு புரியலை…” என்ற செழியன்,
“வாழ்க்கையில் தப்பு பண்ணிருக்கலாம்மா, ஆனா வாழ்க்கையையே தப்பாப் பண்ணிக்கக் கூடாது. நம்ம கிருதி இரண்டாவதை பண்ணிக்கிட்டாள்…” என்றான்.
“இனி என்ன பேசி என்ன ஆகப் போகுது? செத்துப் போனவ உயிரோடு வரப் போவது இல்லையே…” என்று அழுதார் பவானி.
அன்னைக்குச் சமாதானம் சொல்லித் தேற்றி, சாப்பிட வைத்து விட்டு அலுவலகத்திற்குக் கிளம்பினான் செழியன்.
அங்கே அலுவலகத்திற்குச் சென்றால் தலையில் கைவைத்துச் சோகமாக அமர்ந்திருந்தாள் ரத்னா.
அவளின் எதிரே அமர்ந்து மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்த ஆனந்த், நண்பனைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தினான்.
“என்னவாம்?” என்று செழியன் உதட்டை அசைத்துக் கேட்க, “கிருதி…” என்று அவனும் பதிலுக்கு உதட்டை அசைத்தான்.
“அப்புறம் என்ன ரத்னா, காலையில் என்ன சாப்பிட்ட? உனக்குப் பிடிச்ச பூரியா? இல்லை தோசையா?” என்று கேட்டுக் கொண்டே அவளின் அருகில் அமர்ந்தான் செழியன்.
“ம்ப்ச்…” என்று சலிப்புடன் உச்சுக் கொட்டியவள், “இப்ப சாப்பாடா முக்கியம்?” என்றாள் சலிப்பாக.
“எங்க ரத்னாவுக்குச் சாப்பாடு தானே முக்கியம். அது எப்பயிருந்து இல்லைன்னு ஆச்சு?” என்று கிண்டலாகக் கேட்டான்.
“விளையாடாதே செழிப்பானவனே…” என்றவள் கண்களிலிருந்து சரசரவென்று கண்ணீர்ப் பொங்கிக் கன்னம் தாண்டி ஓடியது.
“ஏய் ரத்னா, என்னதிது?” என்று அவளின் கையைப் பற்றினான்.
“என்னால முடியலை செழியா. ரொம்பக் குற்றவுணர்வா இருக்கு. நான் உன் வாழ்க்கையில் குறுக்க வராம இருந்திருந்தால் இப்போ கிருதி உயிரோட இருந்திருப்பாள். என்னால், என்னால் தான் அவள் செத்துட்டா…” என்று அழ ஆரம்பித்தாள்.
“இப்பத்தான் ஒரு வழியா அம்மாவை சமாதானம் பண்ணிட்டு வர்றேன். இப்போ நீ. அம்மாகிட்ட சொன்னதே தான் உன்கிட்டயும் சொல்றேன் ரத்னா. கிருதி நம்ம கையை மீறிப் போயிட்டாள். நம்மை மீறி சில விஷயங்கள் நடக்கும் போது அங்கே நாம பார்வையாளர்கள் ஆகிடுறோம்.
இப்போ கிருதி விஷயத்தில் என்னால் ஆனதை நான் முயன்றேன். கொஞ்ச நாள் கவுன்சிலிங் போயிருந்தால் எல்லாமே சரியாகியிருக்கும். ஆனா ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே கிருதி இப்படிப் பண்ணுவாள்னு யாரும் எதிர்பார்க்கலை. இதில் நம்ம தப்பு எதுவும் இல்லை ரத்னா…” என்றான் செழியன்.
“இல்ல செழியா… நான்…” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்க,
“உன்னை விடப் பலமடங்கு கிருதியின் இழப்பு எனக்கு வலியைத் தந்துட்டு இருக்கு ரத்னா. நான் யார்கிட்ட சொல்லி அழ சொல்லு? வீட்டுக்குள்ள ஒவ்வொரு இடமும் அவள் கூட நான் சண்டை போட்டது, ஓடி விளையாண்டது, பேசி சிரிச்சது, என்கிட்ட அவள் செய்த சேட்டைன்னு ஒவ்வொண்ணும் கண் முன்னாடி வந்து எனக்கு உயிர் வலி தருது.
அவ அவள் விருப்பம் தான் முக்கியம்னு நம்மைப் பத்திக் கொஞ்சமும் நினைக்காம போய்ச் சேர்ந்துட்டாள். ஆனா அவளோட இழப்பு நமக்கு எவ்வளவு வலி தரும்னு அவள் யோசிக்கவே இல்லை…” என்றான் கலக்கத்துடன்.
“ரத்னா, போதும்! இப்போ நீயும் அழுது, அவனையும் அழ வச்சுட்டு இருக்க. இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம். சில வலிகளை நம்ம வாழ்க்கையில் கடந்து தான் ஆகணும். போ, முகத்தைக் கழுவிட்டு வா…” என்றான் ஆனந்த்.
செழியன் கலங்கவும் தன்னைச் சமாளித்த ரத்னா, ஆனந்த் சொன்னது போல் எழுந்து முகம் கழுவ சென்றாள்.
“வெற்றி விஷயத்தில் என்ன செய்வதாக இருக்கச் செழியா?” என்று கேட்டு நண்பனின் மனதை மாற்ற முயன்றான் ஆனந்த்.
“அவனைப் பத்தி விசாரிக்கச் சொன்னதெல்லாம் செய்திட்டியா ஆனந்த்?” முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு கேட்டான் செழியன்.
“விசாரிச்சேன் செழியா. அந்த வெற்றிகிட்ட ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கு…”
“அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி?”
“அவன் தன்னோட அடையாளத்தை வெளியே காட்டிக் கொள்வதில்லை. சிலருக்கு மட்டுமே அவன் யாருன்னு தெரியுமாம். அது மட்டுமில்லை, போதை மருந்து சப்ளை பண்றது மூலமா நிறையச் சம்பாதித்தாலும், ஒரு சாதாரணத் தொழில் செய்பவனாகத் தான் வெளியே காட்டிக் கொள்வானாம். இது தான் அவன் ஸ்பெஷல்.
அவன் சாதாரணத் தொழில் செய்றவனா வெளியே காட்டிக்கிறதால அவன் தான் போதை மருந்து சப்ளை செய்யும் வெற்றின்னு யாருக்கும் தெரிவதில்லை. அது போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவ அவனுக்கு வசதியா இருக்கு…” என்றான் ஆனந்த்.
“ம்ம், அவன் போட்டோ எதுவும் கிடைச்சுதா?” என்று கேட்டான் செழியன்.
“இல்லை செழியா, கிடைக்கலை. அது அவ்வளவு சுலபம் இல்லைன்னு நினைக்கிறேன். நாம லாஸ்டா விசாரிச்சவன் கூடச் சொன்னானே. அவன் பேரு வெற்றின்னு தெரியும். ஆனா நான் கூட இதுவரை நேரில் பார்த்தது இல்லைன்னு. அது போலத் தான் நான் விசாரிச்ச வரை தகவல் கிடைச்சிருக்கு…” என்றான் ஆனந்த்.
“என்ன தான் அவன் தன்னை யாருன்னு அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவனுக்குன்னு ஏதாவது வீக் பாயிண்ட் இருக்கும் ஆனந்த். அது என்னன்னு விசாரிக்கணும்…” என்றான் செழியன்.
“அது என்ன வீக் பாயிண்ட்ன்னு இன்னும் தெரியலை செழியா. விசாரிக்கிறேன்…” என்றான்.
“விசாரி ஆனந்த். அதோட நமக்கு இன்னும் ஒரு வேலையும் இருக்கு…”
“என்ன செழியா?”
“நம்ம சுதாகர் சார்கிட்ட பெர்மிஷன் வாங்கணும். இதுவரை நம்ம கிருதிக்காக அன்அபிஷியலா தான் விசாரிச்சோம். ஆனா இனி அபிஷியலா அந்த வெற்றியைப் பிடிக்கப் பெர்மிஷன் வாங்கணும்…”
“நீ சொல்றதும் சரிதான் செழியா. பெர்மிஷன் வாங்கிட்டால் நம்ம விசாரணை இன்னும் சுலபமா இருக்கும்…”
“ம்ம்… ஆமா ஆனந்த். நாம கிருதிக்காக விசாரிச்சது மூலமா நிறைய விஷயங்கள் தெரிய வந்திருக்கு. இது எல்லாம் நாம ஏற்கனவே கேள்விப்பட்டது தான். ஆனா இது மாதிரி போதை மருந்து கேஸ் இதுவரை நம்ம கைக்கு வரலை. ஆனா இந்தக் கேஸ் நம்ம டிப்பார்ட்மெண்ட்க்கு வந்தாலும் நாம தான் அதை விசாரிக்கணும்னு எனக்கு வெறியே வந்திருக்கு.
போதை மருந்து காலேஜ் பசங்ககிட்ட மட்டுமில்ல. ஸ்கூல் பசங்ககிட்டயும் பரவலா இருக்கு. என்னால் கிருதியைத் தான் அந்தப் போதைப் பழக்கத்திலிருந்து காப்பாத்த முடியலை. ஆனா நிறைய மாணவர்கள், இளைஞர்களைக் காப்பாத்த முயற்சி செய்யலாம். அதுக்காகவே இந்தக் கேஸ் என் கைக்கு வரும் படியா சுதாகர் சார்கிட்ட பேசணும்…” என்று தீவிரத்துடன் சொன்னான் செழியன்.
“அப்படியே எனக்கும் சேர்த்து பெர்மிஷன் வாங்கு. இந்தக் கேஸ்ல நானும் உங்க கூடத் தான் வேலை பார்க்கப் போறேன். ஏதாவது சொல்லி என்னைக் கழட்டி விடலாம்னு நினைச்சீங்கனா, இரண்டு பேரையும் தொலைச்சுக் கட்டிடுவேன்…” என்று சொல்லிய படி அங்கே வந்தாள் ரத்னா.
“என்ன நீயுமா? என்ன விளையாடுறீயா? நீ எல்லாம் எங்க கூடச் சரிப்பட்டு வர மாட்ட…” என்று உடனே மறுத்தான் செழியன்.
“டேய் செழிப்பானவனே, நீ எடுக்குற கேஸ் ஒவ்வொன்னுலயும், இப்படிச் சொல்லித்தான் என்னைக் கழட்டி விடுற. அப்படி என்னடா நான் சரிப்பட்டு வர மாட்டேன்?” என்று கோபமாகக் கேட்டாள் ரத்னா.
“அதான் சொல்லிட்டேனே சரிப்பட்டு வர மாட்டன்னு. அது என்னன்னு டீடைல்ஸா வேற சொல்லணுமாக்கும்?” என்று நக்கலாகக் கேட்டான்.
“ஓய்! என்ன வடிவேல் காமெடி பண்றோம்னு நினைப்பா? வடிவேல் வேணும்னா எதுக்குச் சரிப்பட்டு வர மாட்டார்னு தெரிஞ்சுக்காம இருந்து இருக்கலாம். ஆனா இந்த ரத்னா தெரிஞ்சிக்காம விட மாட்டாள். சொல்லு, என்ன சரிப்பட்டு வர மாட்டேன்?”
“சொன்ன பிறகு அடேய் செழிப்பானவனேன்னு கத்தக் கூடாது…”
“கத்தலை, சொல்லு…”
“அதாவது…”
“டேய், இழுக்காம சொல்லுடா…” பொறுமையில்லாமல் கத்தினாள்.
“ஏய், இது ஆஃபீஸ்…” என்று அவளை அடக்கினான்.
“அப்ப சீக்கிரம் சொல்லு…”
“அதாவது ரத்னா, எங்க கூடவே நீ இருக்கும் போது உனக்கு என்ன ஞாபகம் வரும்?”
“என்னது?” என்று யோசனையுடன் கேட்டாள்.
“நல்லா யோசி, உனக்கே தெரியும்…”
“ம்ப்ச்… இப்ப யோசிக்கிற அளவுக்கு எனக்கு மூட் இல்லை. நீயே சொல்லு…”
“இது…” என்றவன் சாப்பிடுவது போல ஜாடைக் காட்டினான்.
“டேய்…” என்று அவள் முறைக்க,
“இவனுங்க எப்போ சாப்பாடு வாங்கித் தருவானுங்க, என்ன வாங்கித் தருவானுங்கன்னு நீ அதைப் பத்தியே தான் யோசிப்ப. சாப்பாட்டைப் பத்தியே யோசிச்சா உனக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுக்கிற வேலை கூட, மூக்கு முட்ட சாப்பிட்டுத் தூங்கும் உன் வேலையையும் சேர்த்து நாங்க தானே பார்க்கணும். அதனால் எங்க கூட நீ சரிப்பட்டு வர மாட்ட…” என்று செழியன் நக்கலாகச் சொல்லி முடித்தான்.
“அடேய் செழிப்பானவனே…” என்று பல்லைக் கடித்து அவனின் கழுத்தை நெறிக்க வந்தாள் ரத்னா.
“இப்படித்தான் கத்தக் கூடாதுன்னு சொன்னேன்…” என்று சொல்லிக் கொண்டே ரத்னாவின் கையைப் பிடித்தான்.
“ஒழுங்கா என்னையும் சேர்த்துக்கோ…” என்று அவள் மல்லுக்கட்ட,
“முடியாது…” என்று உறுதியாக மறுத்தான் செழியன்.
அவர்கள் இருவரும் உரிமையாகச் சண்டை போட்டுக் கொள்வதைக் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து தன் இருக்கையில் சென்று அமர்ந்தான் ஆனந்த்.
ரத்னாவைச் சமாளித்து விட்டு எழுந்த செழியன், சுதாகரை சந்தித்துப் பேசி விட்டு வந்தான்.
வெளியே வந்த நண்பனை ஆனந்த் கேள்வியாகப் பார்த்தான்.
“சார்கிட்ட பேசிச் சமாளிச்சு சம்மதிக்க வச்சுட்டேன் ஆனந்த். அவ்வளவு சீக்கிரம் அவர் சம்மதிக்கலை. நம்ம கையிலேயே நிறையக் கேஸ் பென்டிங்க்ல இருக்கும் போது நீயா ஏன் இந்தக் கேஸை எடுக்க நினைக்கிறன்னு சத்தம் போட்டார்.
ஆனாலும் போதை மருந்தால் படிக்கிற பிள்ளைங்க எப்படிப் பாதிப்பு அடையிறாங்க என்றும், கிருதி மூலமா நாம தெரிஞ்சிக்கிட்ட தகவல் எல்லாம் சொல்லிச் சம்மதம் வாங்கியிருக்கேன்.
கேஸ் புரசீசர் பார்க்கிறேன்னு சொல்லியிருக்கார். எல்லாம் கிளியராகிக் கேஸ் நம்ம கைக்கு வந்திடும்னு நம்பிக்கை இருக்கு. கேஸ் கைக்கு வந்ததும் வெற்றியைப் பிடிக்கத் தீவிரமா இறங்கிட வேண்டியது தான்…” என்றான் சிபிஐ அதிகாரியான செழியன்.